IMTP–EPI 1

1956

புரூக்லேன்ட்ஸ் எஸ்டேட், மலாயா (மலேசியா)

“அடியே சுப்பு! விரசா எழுந்திரி புள்ள.”

பாயில் சுருண்டு கிடந்த மகளைத் தட்டி எழுப்பினார் அன்னம்மா.

“இன்னும் கொஞ்ச நேரம் ஆத்தா” மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தாள் சுப்புலெட்சுமி.

“உங்க சின்னாத்தா வந்து தொடையைப் புடிச்சு திருவுனா தான் நீ அடங்குவ.” மிரட்டிவிட்டு அடுப்படிக்கு சென்றார் அவர்.

சின்னாத்தா எனும் வார்த்தையைக் கேட்டதும் பட்டென எழுந்து அமர்ந்தவளுக்கு தூக்கம் ஓடிப் போயிருந்தது. கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டவள், அருகில் உறங்கும் தங்கைகளை பாசமாக ஒரு பார்வைப் பார்த்தாள். எப்பொழுதும் போல் கடைசி தங்கை காந்தலெட்சுமி பாவாடையை நனைத்திருந்தாள். சின்னாத்தா வந்து குமட்டிலேயே குத்துவதற்குள், அவர்களை எழுப்பி பாயை மடித்து வைத்தாள். தலையணை எல்லாம் இல்லை, தன் கையே தனக்குதவி என்பது போல கையை தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்வார்கள் அவர்கள்.

இருள் பிரியாத நேரத்தில், மூவரையும் கையில் பிடித்துக் கொண்டு, பெட்ரோமெக்ஸ் லைட்டையும் கையில் எடுத்துக் கொண்டு பொது கழிப்பறைக்கு அழைத்துச் சென்றாள்.

இந்த எஸ்டேட்டில், வேலை செய்பவர்களுக்கு எல்லாம் பலகை வீடு கட்டிக் கொடுத்திருந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். குளியல் அறை இருந்தது. ஆனால் கழிப்பறை பொதுதான். காலைக் கடனை வரிசை நின்று, அந்த நான்கு கழிப்பறைகளில் தான் முடிக்க வேண்டும். பிடிக்காதவர்கள், செம்பணைக் காட்டுக்கு சென்று ஒதுங்கி விடுவார்கள்.

தங்கைகளை வீட்டுக்கு கூட்டி வந்து, அவர்களைக் குளிக்க வைத்து உடை மாற்றி அமரவைத்தாள் சுப்புலெட்சுமி.

“ஆத்தா, இன்னிக்கு என்ன பசியாற போட்டீங்க?” கேட்டாள் அன்னையை.

“இன்னிக்கும் கேப்பங்களிதான். நெதம் இட்லி தோசை சாப்புடற மாதிரி இது என்ன கேள்வி? வந்தனா வாயி மேலயே அப்பிருவேன். மனுசனே விறகடுப்புல வெந்துகிட்டு கிடக்கறான், இவளுக்கு வித விதமா தீனி வேணுமாம்!”

இதற்கு மேல் வாயைத் திறந்தாள் அப்பு நிச்சயம் என வாயை மூடிக் கொண்டவள், அவசரமாக கருப்பட்டி போட்டு கருப்புப் காபி தயாரித்து ஆற வைத்தாள்.

தங்கைகளுக்கு ஊட்டி கொண்டிருக்கும் போது, உள்ளே நுழைந்தார் தங்கம்மா. பிரட்டுக்கு சென்று வந்திருந்தார் அவர். ஆங்கில மீட்டிங் தான் எஸ்டேட்டில் பிரட்டு என அழைக்கப்படும். விடிகாலை ஐந்து மணிக்கு சங்கு ஊதியதும் வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடுவார்கள். அங்கு தான் இன்று யார் எங்கு வேலைக்கு செல்ல வேண்டும் என பிரித்துக் கொடுக்கப்படும்.

“யக்கா, இன்னிக்கு எனக்கு செம்பணை காட்டுல வேலைப் போட்டுருக்காங்க. உனக்கு ரப்பர் மரம் சீவற வேலை. சட்டு புட்டுன்னு சாப்புட்டுட்டு, மத்தியானத்துக்கும் சாப்பாடு கட்டிக்க. அடியே சுப்பு, தங்கச்சிங்கள கொண்டு போய் ஆயா கொட்டாயில(கொட்டகை) விட்டுப்புட்டு, என் கூட ஒத்தாசைக்கு வா”

“சரி சின்னாத்தா”

அவசரமாக களியை அள்ளி விழுங்கியவள், கடைசி தங்கையைத் தூக்கிக் கொண்டு மற்ற இரு தங்கைகளையும் கையில் பிடித்தப் படி வீட்டிலிருந்து வெளியேறினாள்.

அவர்கள் போவதையே அக்கா, தங்கை இருவரும் பார்த்திருந்தனர்.

“இந்தப் புள்ளைங்களை எப்படி கரை சேர்க்கப் போறோமோ தெரியலையே தங்கம். பெரியவ வேற இப்பவோ அப்பவோன்னு நிக்கறா. அவ வயசுக்கு வந்தா எப்படி காபந்து பண்ணி கட்டிக் குடுக்கப் போறோமோ? இப்படி ரெண்டு பேரும் முண்டச்சியா நிக்கறோமே” கண் கலங்கினார் அன்னம்மா.

“அழுதா மட்டும் நம்மள விட்டுப் போன மகராசன் குழியில இருந்து எழுந்து வர போறானா என்ன? கண்ணை தொடைச்சுட்டு வேலைய பாருக்கா. நமக்குன்னு விதிச்சது தான் நடக்கும்” அக்காவைத் தேற்றினார்  தங்கம்.

அன்னம், தங்கம் இருவரின் பெற்றவர்களும் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து மலாயாவுக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள். இவர்களோடு கூட்டம் கூட்டமாக இன்னும் நிறைய சொந்தங்களும், பந்தங்களும் கூட இங்கேயே காலூன்றி விட்டனர்.  இங்கு வந்துதான் பிறந்தனர் பிள்ளைகள் இருவரும். அன்னம்மாவுக்கு தாய் மாமனான கண்ணப்பனையே கல்யாணம் செய்து வைத்தனர் அவளது பெற்றோர். அவர்களும் குடும்பம் நடத்தி சுப்புலெட்சுமியை ஈன்றெடுத்தனர்.

தூரத்து சொந்தத்தில் இரண்டாம் மகள் தங்கம்மாவைக் கட்டிக் கொடுத்தார்கள். நன்றாக தான் வாழ்ந்தார் அவரும். குடி போதையில் அவர் கணவர் ஆற்றில் மிதக்கும் வரை. பிள்ளை இல்லையென தற்கொலை செய்து கொண்டார் என ஒரு பக்கமும், தங்கத்துக்கு வேறு தொடர்பு இருக்கவும் தான் இப்படி ஆனது எனவும் பல கட்டுக் கதைகள். நம் தமிழர்கள் எங்கு சென்று வாழ்ந்தாலும் புரளி பேசும் கலாச்சாரம் மாறாதல்லவா!

தங்கையின் நிலை தாங்காத அன்னம், தன் கணவருக்கே அவரை மறுமணம் செய்து தன் வீட்டோடு வைத்துக் கொண்டார். குடுமி பிடி சண்டை நடந்தாலும், இருவரும் நன்றாக தான் வாழ்ந்தார்கள். தங்கத்துக்கும் கண்ணப்பனுக்கும் பிறந்தவர்கள் தான் மற்ற மூன்று பெண்களும். இப்பொழுது ஆறு, ஐந்து, நான்கு வயதில் இருந்தனர். கையில் லெட்சுமி தங்காவிட்டாலும் மகள்கள் பெயரிலாவது இருக்கட்டும் என ராஜலெட்சுமி, தனலெட்சுமி, காந்தலெட்சுமி என பெயரிட்டிருந்தனர். காந்தலெட்சுமி வயிற்றில் இருக்கும் போது, டைபாய்டு ஜீரம் வந்து இருவரையும் தவிக்க விட்டு சென்றுவிட்டார் கண்ணப்பன். அதன் பிறகு இரு பெண்களும் நாயாய் பேயாய் உழைத்து தங்கள் வண்டியை ஓட்டுகிறார்கள்.

“ராஜம், பாப்பா ரெண்டு பேரும் பத்திரம். ஆயா சரியா ஊட்டமாட்டாங்க. நீயே சாப்பாடு ஊட்டு. பக்கத்து வீட்டு பாண்டிம்மா கூட சேர்ந்து விளையாடாதீங்க. அவ தலை பேனெல்லாம் உங்க தலையில ஏறிக்கும், சொல்லிப்புட்டேன்! அக்கா மத்தியானம் வந்து கூட்டிக்கறேன்.” மூவருக்கும் முத்தம் வைத்தவள், குதித்துக் கொண்டே வீடு நோக்கி ஓடினாள்.

சுப்புலெட்சுமி, பதினான்கு முடிந்து பதினைந்துக்குள் அடி எடுத்து வைக்கும் விடலைப்பெண். களியும், கிழங்கும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு எனக்கு வயது பதினெட்டு என சொல்லும். மாநிறத்தில் இருந்தவள், காடு மேடெல்லாம் வேலை செய்வதால் இப்பொழுது கறுத்திருந்தாள். ஆனால் மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். கண்கள் சலங்கை இல்லாமலே நாட்டியம் ஆடும். துறு துறுவென, ஒரு இடத்தில் அடங்கி உட்காரமாட்டாள்.

அவள் சின்னாத்தா கொட்டி கொட்டி, தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிப்பதால், இடையைத் தாண்டி புரளும் கேசம். எப்பொழுதும் இரட்டை சடையில் தான் திரிவாள். முழு பாவாடை, சட்டைதான் அவளின் உடை. இருக்கும் நான்கு உடைகளையே மாற்றி அணிந்துக் கொள்வாள். அங்கங்கு ஒட்டு போட்டு பார்க்கவே வண்ணமயமாக இருக்கும். இருந்தாலும் முகத்தில் என்னேரமும் சிரிப்பு குடிகொண்டிருக்கும். வாழ்க்கையில் ஒரே பயம், சின்னாத்தா மட்டும் தான். தங்கம் அவளிடம் மட்டுமல்ல தன் சொந்தப் பிள்ளைகளிடமும் அப்படிதான் கண்டிப்பாக இருப்பார். அடி தூள் கிளப்புவதில் கில்லாடி அவர்.

“அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ

தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ”

பாடிக் கொண்டே வந்தவளின் எதிரே வந்து நின்றான் முத்துலிங்கம்.

“யாருகிட்ட தூது போகனும்? இந்த மாமன் கிட்டயா?” கேலியாக கேட்டான். முத்துலிங்கம் அன்னம்மாவுக்கு தம்பி முறை.

“ஐ மாமா! எப்போ வந்த ஊருல இருந்து?” மாமனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் சுப்புலெட்சுமி. அவன் வேறு ஒரு எஸ்டேட்டில் லாரி ஓட்டும் வேலை செய்கிறான். அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு இவர்களைப் பார்க்க வருவான். சுப்புலெட்சுமியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என நெஞ்சு நிறைய ஆசை அவனுக்கு.

அவள் கைகளை விடுவித்துக் கொண்டவன்,

“நேத்து தான் புள்ள வந்தேன். இந்தா போன தடவை நீ கேட்ட கடலை மிட்டாய்.” அவள் கைகளில் திணித்தான்.

“ஐ கடலை மிட்டாய். இங்கனவே இரு மாமா. கொஞ்சத்தை தங்கச்சிங்களுக்கு குடுத்துட்டு ஓடியாறேன்” என ஓடிப் போனாள்.

ஓடி செல்லும் அவளையே கண் இமைக்காமல் பரவசமாகப் பார்த்திருந்தான் அவன்.

மூச்சு வாங்க திரும்பி வந்தவள், அவன் முன்னாலேயே மீதி இருந்த மிட்டாய்களை வாயில் திணித்தாள். அவள் சாப்பிடுவதை ஆசையாகப் பார்த்திருந்தான் அவன்.

“நீ எப்போடி வயசுக்கு வருவ?” மனம் தாங்காமல் கேட்டும் விட்டான்.

“ஏன்?”

“சீக்கிரமா உன்னைக் கட்டிக்கிட்டு என் கூட கூட்டிட்டுப் போகதான்”

“அஸ்க்கு புஸ்க்கு. நான் உன்ன மாதிரி கருப்பனை எல்லாம் கட்டிக்கமாட்டேன். எனக்கு எம்.ஜி.ஆரு தான் புருஷன்”

“உன் முகரைக்கு நான் தான்டி கிடைப்பேன் என் கருத்த குட்டி! எம்.ஜி.ஆரு வேணுமாம்லே!”

“நெசமா மாமா! அன்னிக்கு கொட்டாயில தாய்க்குப் பின் தாரம் படம் போட்டாங்கல, அதுல இருந்து அவர தான் நான் கட்டிக்கறதுன்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன். எதிர்த்த வீட்டு அலமு சொன்னா, அவரு பார்க்க நல்லா கலரா இருப்பாராம்.”

விழுந்து விழுந்து சிரித்தான் முத்து.

“படிக்காத கேணை கிறுக்கி, அவரு நடிகருடி. அதுவும் இந்தியால இருக்காரு. கல்யாணம் வேற ஆயிருச்சு. இந்த ஜென்மத்துல உனக்கு நான்தான்டி” வம்பிழுத்தான் அவளை.

கண் கலங்க உதடு துடிக்க,

“ஒன்னும் வேணா போ! எனக்கு வெள்ளையா எம்.ஜி.ஆர் கணக்கா ஒருத்தன் கிடைப்பான். சின்னாத்தா அப்பவே சொன்னுச்சு, உன் கூட தனியா நின்னு பேசக் கூடாதுன்னு. நான் தான் மிட்டாய் குடுத்தியேன்னு நின்னு பேசனேன். உன் மிட்டாய் எனக்கு வேணா. இரு வாந்தி எடுத்துக் குடுக்கறேன்.” என வாய்க்குள் விரலை விட்டாள் அவள்.

“ஹே! நில்லுடி கிறுக்கி. வாந்தி, கீந்தி எடுத்து தொலைச்சிறாத. சின்ன புள்ளைன்றது சரியா தான் இருக்கு. உன் கிட்ட வம்ப வளர்த்தேன் பாரு, என் புத்திய!” தலையிலேயே அடித்துக் கொண்டான்.

அதற்குள் வீட்டுக்கு ஓடி இருந்தாள் சுப்புலெட்சுமி. அவள் பின்னாலேயே வந்தான் முத்து.

“வாப்பா முத்து! வீட்டுல எல்லாம் சுகமா?” வரவேற்றார் அன்னம்மா.

“அம்புட்டு பேரும் சுகம் அக்கா. ஒரு சோலியா இங்கன வந்தேன். அப்படியே உங்கள எல்லாம் பார்க்கலாம்னு வந்தேன்!” பேசிக்கொண்டே தங்கள் தோட்டத்தில் விளைந்திருந்த மாங்காய்களை நீட்டினான்.

“தோ பாரு முத்துலிங்கம்! நீ இங்கன அடிக்கடி வரது எதுக்குன்னு எங்களுக்கு விளங்காம இல்ல. புள்ள சமஞ்சதும் சொல்லி விடறோம். அப்ப வந்து உங்காத்தாவ பரிசம் போட சொல்லு. அதுக்கு முன்ன சும்மா சும்மா வந்து பச்ச புள்ள மனசுல சலனத்த கூட்டாதே! உனக்கு புரியும்னு நினைக்கறேன்.” ஒரே போடாக போட்டார் தங்கம்.

“சரி சின்னக்கா! அப்படியே செய்யறேன். எனக்குத்தான் சுப்புன்னு மாமா வாக்கு குடுத்துருக்காரு. அத மட்டும் மறந்திறாதீங்க. இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன்”

கிளம்பும் முன் சுப்புலெட்சுமியை ஆசையாக ஒரு பார்வைப் பார்த்தான். அவள் ஆத்தாவின் பின் ஒளிந்துக் கொண்டு நாக்கைத் துருத்திப் பழிப்புக் காட்டினாள். சிரித்த முகமாகவே வெளியேறினான் முத்து. அடுத்த முறை வரும் போது இதே சிரிப்பு அவன் முகத்தில் நிலைத்திருக்குமா?