IMTP–EPI 10

அத்தியாயம் 10

 

“துரை நான் சாக போறேன்!”

“யாரு நீயா? நீ நூறு வருஷம் வாழ்ந்து என்னை தான் சாகடிப்ப! இப்போ அழறத நிறுத்திட்டு என்ன ஆச்சுன்னு சொல்லு ப்ளேக்கி”

“அது வந்து, கிட்ட வாங்க துரை” அவனை அருகே இழுத்து தனக்கு என்ன ஆனது என அவன் காதுக்குள் சொன்னாள் சுப்பு.

“இப்போ சொல்லுங்க துரை, நான் சாக போறேன் தானே?” கண்கள் குளம் கட்டி கொண்டன.

அவள் கண்களை தாண்டி வழிந்த நீரை தன் விரல் கொண்டு துடைத்த எட்வர்ட்,

“ப்ளேக்கி! ஏய் இங்க பாரு! இதுக்கு அழ கூடாது. ஒவ்வொரு பொண்ணும் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது.  வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு நீ வந்துட்ட. உன் பாஷைல சொல்லனும்னா நீ வயசுக்கு வந்துட்ட ப்ளேக்கி” மலர்ந்த முகத்துடன் சொன்னான் எட்வர்ட்.

இன்னும் முகம் தெளிவாகாமல்,

“நெஜமாவா துரை? நான் வயசுக்கு வந்துட்டேனா? நான் கேட்டப்ப, ஆத்தா இப்படிலாம் இருக்கும்னு சொல்லலியே! இங்க, இங்கலாம் பெருசா ஆகிரும், அதுக்கு பேருதான் பெரிய மனுஷி ஆகறதுன்னு சொன்னாங்களே” என்றவள் தன்னுடைய இடுப்பையும், நெஞ்சையும் தொட்டுக் காட்டினாள்.

தொண்டையை செறுமிக் கொண்ட எட்வர்ட்,

“அதுவும் தான் நடக்கும். அதோட நீ இப்ப சொன்னதும் வரும். ஒவ்வொரு மாசமும் வரும்” என விளக்கினான்.

“ஓ அதனாலதான் ஒவ்வொரு மாசமும் மூனு நாளைக்கு மட்டும் அலமு வீட்ட விட்டு வெளிய வர மாட்டாளா? நான் அவகிட்ட கூட கேட்டேனே, வயசுக்கு வந்தா என்ன ஆகும்னு? அதெல்லாம் என் கிட்ட சொல்லக் கூடாது, சொன்னா நானும் சீக்கிரம் குத்தவச்சிருவேன்னு அவங்க ஆத்தா சொல்லிருக்காங்களாம். அதனால மூச்சே விடமாட்டா”

இயற்கையாய் பெண் உடம்பில் நடக்கப் போகும் மாற்றங்களைக் கூட கற்று தராமல் பத்தாம்பசலித்தனமான நம்பிக்கைகளை இந்த மக்கள் பின்பற்றுகிறார்களே என கோபமாக வந்தது எட்வர்டுக்கு.

“துரை இப்போ இத எப்படி நிப்பாட்டறது? எனக்கு ஒன்னும் தெரியலையே!” குரல் நடுங்கியது சுப்புவுக்கு.

இவளுக்கு எப்படி விளக்கி சொல்வது என எட்வர்டுக்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் ஊரில் நாப்கின்கள் அந்தக் காலகட்டத்திலேயே புழக்கத்தில் இருந்தன. ஆனால் இங்கே இவர்கள், இந்திய பெண்கள் எப்படி அந்த மூன்று நாட்களை கையாள்கிறார்கள் என அவனுக்கு என்ன தெரியும்! தங்களைப் போல் இல்லாமல் இதற்கும் கண்டிப்பாக ஏதாவது சம்பிரதாயங்கள், சாங்கியங்கள் வைத்திருப்பார்கள் என்று மட்டும் புரிந்து வைத்திருந்தான்.

“ப்ளேக்கி, இதெல்லாம் நான் சொல்லிக் கொடுக்கறதோட பர்சு வைப் சொல்லிக் கொடுக்கறதுதான் சரியா இருக்கும். எனக்கு உங்களோட பழக்க வழக்கம் தெரியாதில்லையா, அதனால அவங்கள கேட்டுக்கலாம்.” மென்மையாக சொன்னான்.

சரி என தலையாட்டினாள் சுப்பு.

“நான் சுடுதண்ணி பிடிச்சுட்டு வந்து தரேன். முதல்ல என்னோட ரூமுலயே குளி. அதுக்குள்ள நான் அவங்கள கூப்பிட்டு வரேன்”

தன் மேல் இருந்து அவளைப் பிரித்து எடுத்தவன், அவள் கலங்கிய முகத்தை ஒரு நிமிடம் ஆழ்ந்துப் பார்த்தான். கன்னத்தை தடவிக் கொடுத்தவன், அவள் நெற்றியில் இதழ் பதித்து,

“அழக் கூடாது ப்ளேக்கி! இதெல்லாம் போக போக பழகிரும். நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? அத மாதிரி நீயும் பயப்படாம, சந்தோஷமா இருக்கனும். கண்ணைத் துடைச்சிட்டு குளிக்கற ரூமுக்குப் போ! நான் இப்போ வரேன்” என வெளியே வந்தான்.

சுடுதண்ணீர் கொண்டு வந்து அவனே விளாவி விட்டான். அவள் விளாவும் லட்சணம்தான் அவனுக்குத் தெரியுமே.

“குளி ப்ளேக்கி! நான் சீக்கிரமா வந்துருவேன்” கைப்பிடித்து அவளை குளியலறையில் விட்டுவிட்டு வெளியேறினான் எட்வர்ட்.

அர்த்த ராத்திரியில் கதவு தட்டப்படும் ஓசையில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தார் பரசு. கதவைத் திறந்தவர் சத்தியமாக எட்வர்டை எதிர்ப்பார்க்கவில்லை.

“என்னாச்சு துரை?” பதட்டமாக கேட்டார் பரசு.

“பர்சு உன்னோட வைப்பை கூப்பிடு”

“ஏ புள்ள பட்டு! துரை வந்துருக்காரு புள்ள. விரசா ஓடி வா!” குரல் கொடுத்தார்.

வெளியே ஓடி வந்த பட்டு,

“வாங்க துரை!” என வரவேற்றார்.

பட்டுவின் முகத்தைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டவன், தாடையை தடவியவாறே,

“சுபூ வயசுக்கு வந்துட்டா. பயந்துப் போய் அழறா. நீங்க வாங்க” என அழைத்தான்.

‘அப்பாடா, மகராசி வயசுக்கு வந்துட்டாளா! ஆத்தா மகமாயி, என் வயித்துல பாலை வார்த்தம்மா. இனி அவ ஆத்தாக்காரிக்கு சொல்லிவிட்டு, மூட்டையைக் கட்டி அனுப்பிற வேண்டியதுதான்.’ முகத்தில் சந்தோஷ அலை பரவுவதை கஸ்டப்பட்டு மறைத்தவர்,

“கொஞ்சம் பொறுங்க துரை. வேண்டிய பொருளை எடுத்துட்டு வரேன்” என உள்ளே ஓடினார்.

ஓரக்கண்ணால் அவரின் முகமாற்றத்தை கவனித்தப்படிதான் இருந்தான் எட்வர்ட். அவனையும் அறியாமல் சிரிப்பு வந்து அமர்ந்தது அவன் உதட்டில்.

உள்ளே சென்று, புத்தம் புது வேட்டி ஒன்றை  கிழித்து எடுத்துக் கொண்டார் பட்டு. மூன்று வகையான எண்ணெய் பாட்டில்களையும், சமையல் கட்டில் இருந்த நாட்டுக் கோழி முட்டைகளையும் எடுத்துக் கொண்டார்.

பவுனுவை எழுப்பி விஷயத்தை சொல்லிவிட்டு, அவரும் பரசுவும் எட்வர்டுடன் கிளம்பினர். இவர்கள் வீட்டை அடையும் போது, குளித்து விட்டு அடுப்படியில் அமர்ந்திருந்தாள் சுப்பு. அந்த நேரத்தில் தலைக்கு ஊற்றி இருந்தாள். அவளைப் பார்த்ததும் நொங்கென தலையில் கொட்டினார் பட்டு.

“இத்தனை மணிக்கு தலைக்கு ஊத்திட்டு வந்து நிக்கறயே! ஜன்னி கின்னி வந்தா என்னடி பண்ணுறது?” கடிந்துக் கொண்டார்.

“அக்கா, கொட்டாதிங்கக்கா. தலை வலிக்குது. ஏற்கனவே வயிறு வேற ரொம்ப வலிக்குது.” கண் கலங்கியது.

பட்டுவின் பின்னாலேயே அடுப்படிக்கு வந்த எட்வர்டின் முகம் அவர் சுப்புவை கொட்டியதைப் பார்த்ததும் கடுமையாக மாறியது.

“சரி அழாத! இப்படி தண்ணி சொட்ட சொட்ட நிக்கவும் கோபம் வந்துருச்சு” சமாதானப் படுத்தினார். தன்னுடைய சேலை முந்தானையிலேயே தலையைத் துவட்டி விட்டார்.

“மெதுவாக்கா! போட்டு தேய்க்காதீங்க, வலிக்குது”

பட்டு அவள் தலையை விட்டதும் தான் எட்வர்ட் இன்னும் அங்கேயே நிற்பதைப் பார்த்தாள் சுப்பு.

“துரை, அதான் அக்கா வந்துட்டாங்களே, நீங்க போய் படுங்க. தூக்கம் கெட்டுப் போயிரும் உங்களுக்கு“ அக்கறையாக சொன்னாள்.

பரசு பெண்கள் சமாச்சாரம் என்பதால் வீட்டின் வெளியயே நின்றுக் கொண்டான். அதே போல் எட்வர்டும் ஒதுங்கி போயிருப்பான் என நினைத்தார் பட்டு. ஆனால் இவ்வளவு நேரமும் அவர்கள் பின்னால் தான் நின்றிருக்கிறான் எனவும் ஒரு மாதிரி இருந்தது அவருக்கு.

“துரை, கொஞ்சம் இந்தப் புள்ள கிட்ட தனியா பேசனும். நீங்க கூடவே இருந்தா சங்கடமா இருக்கு எனக்கு” என தன்மையாக கேட்டார் பட்டு.

“நான் பக்கத்துல இல்லைன்னு நினைச்சிக்கிட்டே பேசுங்க. நான் தொல்லை பண்ண மாட்டேன்” சட்டமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான் எட்வர்ட்.

‘அட கிரகமே! இவரு முன்னுக்கு எப்படி பச்சையா சொல்லிக் குடுக்கறது? என்னடா எனக்கு வந்த சோதனை? நாசுக்கா சொன்னா புரிஞ்சுக்கற முகரையா இது?’

சுப்புவின் முகத்தைப் பார்த்துதான் உள்ளுக்குள் திட்டிக் கொண்டிருந்தார் அவர். பட்டு நினைத்ததை பொய்யாக்காமல், அவர் கிழித்து வந்திருந்த வேட்டி துணியை எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்க கொடுக்க, அவளுக்கு ஆயிரம் சந்தேகங்கள் முளைத்தன. ஒரு கட்டத்தில் கட்டி வைத்திருந்த  பொறுமை காற்றில் பறக்க, கொட்ட கை ஓங்கியவரை,

“இது தானே அவளுக்கு முதல் தடவை! அதனால கொட்டாம சொல்லிக் குடுங்க. புரிஞ்சுக்குவா” குரல் பின்னால் இருந்து வந்தது. குரல் சாதாரணமாக இருந்தாலும் அதில் இருந்த கட்டளை புரியாமல் போகுமா பட்டுவுக்கு.

“சரிங்க துரை” பவ்யமாக சொன்னார்.

ஒரு வழியாக விளக்கி முடித்து, அவரே வீட்டின் பின்னால் இருந்த குளியலறைக்கு கூட்டிப் போனார். தன்னுடைய குளியல் அறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்ல வந்தவன், கடைசி நிமிடத்தில் வாயை மூடிக் கொண்டான்.

“ஏ புள்ள, முதன் முதலா வீட்டுக்கு தள்ளி இருக்கறப்போ ஆம்பளைங்க முகத்துல முழிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. தட்டு முட்டு சாமான் போட்டு வைக்கிற அறை இருக்குல்ல, மூனு நாளைக்கு அங்கன படுத்துக்க. காலைலயே குளிச்சுப்புட்டு அங்க போய் மறுபடியும் உட்கார்ந்துக்க. வெளிய வரக்கூடாது. ஒரு வேலையும் செய்யக் கூடாது. அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம். தாய் மாமன் இருந்தா குச்சி கட்டி முறை செய்யனும். இங்கன அதுக்கெல்லாம் எங்க போறது? உங்க ஆத்தா வூட்டுக்கு போன பிறகு தீட்டு கழிக்கறது, சாங்கியம் செய்யறது எல்லாம் வச்சிக்கட்டும்”

மறுபடியும் வீட்டுக்குள் நுழையும் போது, சுப்பு எட்வர்டை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நல்லெண்ணெயும், பச்சை முட்டையையும் உடைத்து அவள் வாயில் ஊற்றினார். உமட்ட போனவள் வாயில் கொஞ்சம் சர்க்கரையை அள்ளிப் போட்டார் பட்டு.

“வாந்தி எடுத்த, வகுந்துருவேன்!” எட்வர்டுக்கு பயந்து சன்னமான குரலில் மிரட்டினார்.

சொன்ன மாதிரியே ஸ்டோர் ரூமில் அவளை படுக்க வைத்தார் பட்டு. எட்வர்ட் அமைதியாகவே பார்த்திருந்தான்.

அவர்கள் கிளம்பும் போது வெளியே வந்த எட்வர்ட்,

“பர்சு! நாளைக்கு முதல் வேளையா இந்த விஷயத்தை சுபூ வீட்டுக்கு சொல்லி விடுங்க” பேச்சு பரசுவிடம் இருந்தாலும், பார்வை பட்டுவின் மேல் தான் இருந்தது. அவர் முகம் மலர்வதை நமுட்டு சிரிப்புடன் பார்த்தவன், உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“மாமோய்! துரை நல்லவரு தான் போல இருக்கு”

“ஏன் புள்ள திடீர்னு அந்தர் பல்டி அடிக்கற? நேத்து வரைக்கும் நாசமா போன எடுபட்ட எட்வர்ட்னு திட்டிட்டு இருந்த”

“சுப்பு வீட்டுக்கு தகவல் குடுக்க சொல்லிட்டாரே! நாம நினைச்ச மாதிரி தப்பு எண்ணம் இருந்தா மறைக்க தானே சொல்லுவாரு”

“ஆமா புள்ள. நம்மள அண்டி வாழற புள்ளையாச்சேன்னு ஒரு அக்கறை போல இந்த சுப்பு புள்ள மேல. அந்தப் புள்ள மொகத்த பார்த்தாலே தானா அக்கறை வந்துரும் பட்டு. நாம தான் கண்டதையும் நெனைச்சு பயந்துட்டோம்”

“உனக்கு ஏன் அக்கறை வராது? அக்கறையாமில்ல அக்கறை!” நொடித்துக் கொண்டார்.

“அட நீ வேற ஏன் புள்ள இப்படி எடக்கா பேசிக்கிட்டு. அது எப்ப சித்தப்பூன்னு கூப்பிட்டுச்சோ அப்பவே எனக்கு மவ முறையாகி போச்சு. இனிமே நாக்கு மேல பல்ல போட்டு பேசாதே புள்ள. சொல்லிப்புட்டேன்!”

“சரி மாமா அத விடு! இந்த துரைக்கு அக்கறை இருக்கட்டும் மாமா, வேணாம்னு சொல்லல. அதுக்குன்னு ஒன்ன ஆத்துல எறக்குவேன்னு மிரட்டறதா? எனக்கு குலை நடுங்கி போச்சுல்ல”

“அது சும்மா மிரட்டறதுக்கு சொன்னாரு புள்ள. இத்தனை வருஷமா கூட இருக்கேன், எனக்கு தெரியாதா அவர பத்தி. என்ன சொல்லு, பவுனுவ விட உனக்கு என் மேல பாசம் கூட தான் புள்ள” நடந்தவாறே மனைவியை இறுக்கிக் கொண்டார் பரசு.

“க்கும்! பாசம் இருந்து என்னத்த பண்ண? உன் கண்ணுக்கு பாசமா தெரிஞ்சது? தெரிஞ்சிருந்தா, செம்பணைக் காட்டுக்கு பழம் பொறுக்க வந்த புள்ள கைய புடிச்சு இழுத்துருப்பியா? எதோ நானா இருக்கவும், உன்ன வெட்ட வந்தவனுங்க காலுல விழுந்து அவள ரெண்டாந்தாரமா கட்டி வச்சேன்” சந்தடி சாக்கில் சொல்லிக்காட்டியவர், குமட்டிலேயே ஒரு இடி இடித்தார்.

“விடு புள்ள! அது நடந்து வருஷம் பல ஓடிப்போச்சு. இன்னும் சொல்லிக்காட்டிட்டு திரியற” சமாதான உடன்படிக்கை போட ஆரம்பித்தார் பரசு.

உள்ளே வந்த எட்வர்ட் சுப்புவைத் தேடி ஸ்டோர் ரூமுக்குள் சென்றான். அவன் ஏற்கனவே காய்ச்சல் சமயத்தில் கொடுத்திருந்த போர்வையை கீழே விரித்து ஒரு மூலையில் படுத்திருந்தாள் சுப்பு. அவன் உள்ளே வந்து அருகில் அமரவும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவள்.

“என்னாச்சு? ஏன் கண்ணை மூடிக்கற ப்ளேக்கி?”

“அக்கா சொன்னாங்க, இந்த நேரத்துல ஆம்பளைங்க முகத்தப் பார்க்க கூடாதாம்”

“ஓ! ஆனா நீ ஏற்கனவே என் முகத்த பார்த்துட்டியே! இப்ப என்ன செய்யறது?”

“ஆமால! என்ன செய்யறது துரை?” எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

“ஏற்கனவே என்னைப் பார்த்துட்டதனால மறுபடியும் பார்க்கலாம், தப்பில்ல. புதுசா வேற யார் முகத்தையும் பார்க்க வேணாம். சரியா ப்ளேக்கி?”

“ஹ்ம்ம் சரி துரை” கண்ணைத் திறந்து அவனைப் பார்த்து சிரித்தாள். பின் முகம் சுளித்தவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன ப்ளேக்கி? என்ன பண்ணுது?”

“வயிறு ரொம்ப வலிக்குது துரை”

“சரி, இரு வரேன்” அவனது ரூமுக்குள் விரைந்தான். திரும்பி வரும் போது கையில் தண்ணீர் கிளாசும், ஒரு மாத்திரையும் இருந்தது.

“இந்தா இத போட்டுக்க ப்ளேக்கி. வலி போயிரும்”

மருந்தை சாப்பிட்டவள், மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“துரை, நீங்க வைத்தியரா? எல்லா நோய்க்கும் ஊசியும் மருந்தும் வச்சிருக்கீங்களே” சம்மணம் இட்டு அமர்ந்திருந்தனைக் கேட்டாள்.

“ஆமா, வைத்தியர் தான். உனக்கு மட்டும் வைத்தியம் பார்க்கிற வைத்தியர்.” புன்னகைத்தான்.

அங்கே இருந்த கொஞ்ச நேரத்திலேயே வியர்ந்து ஊற்றியது இருவருக்கும். பொருட்கள் அடைந்துக் கிடக்க காற்றோட்டமே இல்லாமல் புழுக்கமாக இருந்தது அவ்வறை.

“நீங்க போங்க துரை. உங்களுக்கு வேர்த்து ஊத்துதே! உங்க ரூமுக்கு போய் காத்தாடி போட்டுக்குங்க” விரட்டினாள் அவனை.

“உனக்கும் தான் வேர்க்குது. எப்பொழுதும் படுக்கற இடத்துலயே படுத்துக்க ப்ளேக்கி. நாளைக்கு அவங்க வரதுக்கு முன்ன, இங்க வந்து உட்கார்ந்துக்க”

“அக்காவ ஏமாத்த சொல்லுறீங்க! அது தப்பில்லையா துரை? சாமி கண்ண குத்தும்”

“நான் சொன்னத நீ கேட்கலைன்னா, நானும் இங்க தான் இருப்பேன்” நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

அவன் அவஸ்த்தையைப் பார்த்தவள்  எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

“வர வர ரொம்ப பிடிவாதம்!” அவன் சொல்வதைப் போலவே சொல்லிக் காட்டினாள்.

எழுந்து நின்றவள், அவனையும் எழ சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

“என்னைத் தொடக்கூடாது ப்ளேக்கி”

அவனே எழுந்துக் கொண்டான். எப்பொழுதும் போல அவரவர் இடத்தில் படுத்துக் கொண்டனர்.

மறுநாள் வேலைக்கு வந்த பட்டு, இன்னும் அடுப்படியில் தூங்கி கொண்டிருந்த சுப்புவை எழுப்பி,

“ஏ புள்ள, என்னடி இங்க படுத்துருக்க? ராத்திரி ரூம்புக்குள்ள தானே படுக்க வச்சுட்டுப் போனேன்” என கேட்டார்.

“துரை தான் காங்கையா இருக்குன்னு இங்கயே படுத்துக்க சொன்னாரு” கண்களைத் தேய்த்தவாறே சொன்னாள்.

‘ராத்திரி தானே, இவரு ரொம்ப நல்லவருன்னு சொன்னோம். விடிஞ்சவுடனே வில்லனா தெரியறாரே! இவரு நல்லவரா கெட்டவரான்னு யோசிச்சே என் பிராணன் போக போகுது’

“சரி, சரி. யார் கண்ணுலயும் படாம குளிச்சுட்டு அந்த ரூமுக்கு ஓடு புள்ள. நேத்து சொல்லிக் குடுத்த மாதிரி வேட்டி துணிய கட்டிக்க. பழைய துணிய நல்லா அலசி, யார் கண்ணுக்கும் படாத இடமா பார்த்து காய போடு. புட்டு அவிச்சு தரேன், சாப்பிட்டு படுத்துக்க. முட்டையும், எண்ணெயும் அதுக்கப்புறம் தரேன்”

எட்வர்டுக்கு தேவைப்பட்டதை எல்லாம் பட்டுவே செய்தார். அவன் கண்ணுக்கு சுப்பு தென்படவே இல்லை.

வீட்டுக்குள் வந்த பரசுவிடம், பணத்தை நீட்டினான் எட்வர்ட்.

“பர்சு, சுபூவுக்கு இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட என்ன வாங்கி குடுக்கனுமோ, உன் வைப் கிட்ட கேட்டு வாங்கி குடு. அவங்க அம்மா கூட்டிப் போகிற வரைக்கும் நாமதானே எல்லாம் செய்யனும்.”

“சரிங்க துரை, அப்படியே செஞ்சிரலாம்”

“ஆள் அனுப்பிட்டயா அவங்க எஸ்டேட்டுக்கு?”

“இனிமே தான் துரை அனுப்பனும்”

“கரெக்டான ஆளா பார்த்து அனுப்பு பர்சு. போற வழியில குடிச்சுட்டு எங்கயாவது விழுந்து கிடக்க போறானுங்க”

“நம்ம முனியனை அனுப்பறேன் துரை. அவன் சொன்ன வேலைய சரியா செஞ்சு முடிச்சுருவான். இன்னிக்கு கிளம்புனா, தகவல் சொல்லிட்டு கையோட சுப்புவோட ஆத்தாவ நாளைக்கு கூட்டிட்டு வந்துருவான்”

“சரிதான் பர்சு. இன்னிக்கு எனக்கு கோலாலம்பூருக்கு(தலைநகரம்) போக வேண்டியது இருக்கு. நைட் வந்துருவேன். மேற்பார்வை எல்லாம் நீயே பார்த்துரு”  பரசுவின் பதிலுக்கு கூட காத்திராமல் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

அன்றிரவு நேரமாகி தான் வீடு திரும்பினான் எட்வர்ட். குளித்த உடனே, சுப்புவைத் தேடி வந்தான். அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவன் நேற்று சொன்னதை கேட்டு, ஸ்டோர் ரூமில் படுக்காமல் எப்பொழுதும் படுக்கும் இடத்தில் படுத்திருந்தாள்.

அவளை நெருங்கி அமர்ந்தவன், முகம் மறைத்திருந்த கற்றைக் குழலை ஒதுக்கி,

“ப்ளேக்கி” என மெதுவாக அழைத்து எழுப்பினான்.

அவன் ஒற்றை அழைப்பில் பட்டென எழுந்து அமர்ந்தாள் சுப்பு.

“இப்போதான் வந்தீங்களா துரை? டீ கலக்கவா?”

வேண்டாம் என தலையாட்டியவன்,

“வயிறு வலிக்குதா ப்ளேக்கி?” என கேட்டான்.

“இன்னைக்கு வலிக்கல துரை. ஆனாலும் எனக்கு இது பிடிக்கல. கஸ்டமா இருக்கு. நான் பெரிய மனுஷி ஆக வேணாம். மறுபடியும் சின்ன மனுஷி ஆகறதுக்கு ஏதாவது மருந்து உங்க கிட்ட இருக்கா துரை?” ஆவலாக அவன் முகத்தை நோக்கினாள்.

வந்த சிரிப்பை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன்,

“ஒரு தடவை வந்தா, வந்ததுதான்! மாத்த முடியாது ப்ளேக்கி” என சமாதானப் படுத்தினான்.

என்னவோ அப்படி மருந்து இல்லாதது அவனுடைய தப்பு என்பது போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் சுப்பு. அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

“கோபமா இருக்கியா ப்ளேக்கி?”

“ஆமா”

“சரி விடு. உனக்கு சிலது வாங்கிட்டு வந்தேன் கோலாலம்பூர்ல இருந்து. நீ தான் கோபமா இருக்கியே! அதனால நான் போய் படுக்கறேன்” எழுந்தவன் கையைப் பற்றிக் கொண்டாள் சுப்பு. அவன் முறைக்கவும் கைகளை விட்டவள்,

“என்ன வாங்கிட்டு வந்தீங்க துரை? காட்டுங்க. இப்ப கோபம் போயிருச்சு. பாருங்க!” என எல்லா பல்லையும் காட்டி சிரித்தாள்.

மீண்டும் அருகில் அமர்ந்தவன், பக்கத்தில் வைத்திருந்த ஒரு பெட்டியைத் திறந்தான். வட்ட வட்டமாக இனிப்பு இருந்தது.

“என்னதிது துரை?”

“உனக்கு தெரியாதா? இதுக்குப் பேரு லட்டுன்னு விக்கறவங்க சொன்னாங்க. உங்க இனத்துல சந்தோஷமான விஷயங்கள இது சாப்பிட்டு தான் கொண்டாடுவாங்களாம்”

“ஆமாவா?” அவர்கள் ஏழ்மை நிலையில் லட்டுவை எங்கே பார்த்திருக்கிறாள் அவள்.

“வாயைத் திற. நான் குடுக்கறேன்” லட்டு ஒன்றை எடுத்து ஊட்டி விட்டான்.

“ரொம்ப நல்லா இருக்கு துரை. நான் இதெல்லாம் சாப்பிட்டது இல்லை. இன்னொன்னு எடுத்துக்கவா?”

“எல்லாமே உனக்குதான். ஒரேடியா சாப்பிடாம, வச்சிருந்து சாப்பிடு ப்ளேக்கி”

“உங்களுக்கு துரை?”

நெய் வாசனை என்னவோ பண்ணியது அவனுக்கு.

“இல்ல வேணாம்”

“கொஞ்சம் சாப்பிடுங்க. இல்லைனா எனக்கு வயித்த வலிக்கும். ஆ காட்டுங்க!” அவன் வாயருகே கையை நீட்டியவாறே நின்றாள் சுப்பு. அவள் கைகளையே சிறிது நேரம் வெறித்தவன், மெல்ல வாயைத் திறந்தான். அவள் ஊட்டியதை பொக்கிஷமென மெதுவாக மென்று விழுங்கினான் எட்வர்ட்.

“நீ பெரிய மனுஷி ஆனதுக்கு என்னோட கிப்ட்” என இன்னொரு சிறிய பெட்டியை நீட்டினான் எட்வர்ட்.

“கிப்டுனா?”

“பரிசு”

வாங்கி திறந்துப் பார்த்தவள் விழிகள் சந்தோசத்தில் விரிந்தன.

“ஐ கொலுசு! நிறைய மணி வச்சிருக்கே. ரொம்ப அழகா இருக்கு துரை. எனக்கே எனக்கா?” கண்கள் பளபளக்க கேட்டாள்.

“ஆமா உனக்குதான். போட்டுக் காட்டு ப்ளேக்கி”

அவள் பாவாடையை மேல் உயர்த்தி கொலுசுகளைப் போடுவதை இமை தட்டாது பார்த்திருந்தான் அவன். எழுந்து பாவாடையை லேசாக தூக்கி அவனுக்கு நடந்து காட்டியவள்,

“நல்லாருக்கா துரை?” என கேட்டாள்.

“ரொம்ப நல்லா இருக்கு ப்ளேக்கி. இந்த சத்தத்தை வச்சு இனிமே நீ எங்கிருந்தாலும் நான் கண்டு பிடிச்சிருவேன்”

“நாளைக்குத்தான் நான் எங்க ஆத்தா வூட்டுக்கு போயிருவேனே, எப்படி கண்டு பிடிப்பீங்க? அங்கிருந்து இங்க வரை கேக்குமா இந்த கொலுசு சத்தம்?” பெரிய ஜோக் சொல்லிவிட்டது போல சிரித்தாள் சுப்பு.

எழுந்துக் கொண்டவன்,

“எனக்கு தூக்கம் வருது நான் படுக்கப் போறேன். நீ தூங்கு ப்ளேக்கி” என சொல்லியபடியே ரூமுக்கு நடந்தான்.

“துரை”

“ஹ்ம்ம்” திரும்பி பார்த்தான்.

“தேங்சூ”

தலை அசைப்பை மட்டும் கொடுத்து விட்டு, ரூமுக்குள் நுழைந்துக் கொண்டான்.

மறுநாள்,

“ஏ புள்ள சுப்பு. உன்ன பார்க்க ஆள் வந்துருக்கு” என ஓடி வந்தார் பவுனு.