IMTP–EPI 13

அத்தியாயம் 13

 

கதவருகே அதிர்ந்துப் போய் நின்றார் பட்டு. இதயம் காதில் வந்து பட் பட்டென துடித்தது.

‘மாரியாத்தா இந்த புள்ளைக்கு மட்டும் ஒன்னும் ஆகலைனா, அடுத்த வருச திருவிழாவுல என் புருஷனுக்கு அழகு குத்தி தீமிதி இறக்கறேம்மா. கருணை காட்டு ஆத்தா’ மனதில் வேண்டுதல் வைத்தார்.

எவ்வளவு நேரம் கதவில் சாய்ந்து நின்றிருந்தாரோ தெரியாது, திடீரென கதவு திறந்தது. கீழே விழ போன பட்டு, சமாளித்து நேராக நின்றார்.

அவர் முன்னே இடுப்பில் கை வைத்து பட்டுவை எரித்து சாம்பலாக்கி விடும் முறைப்போடு நின்றிருந்தான் எட்வர்ட்.

“என்ன?” கோபமான குரலில் கேட்டான்.

“இல்ல துரை! அது வந்து, சாப்பாடு சுப்புவுக்கு. இன்னும் சாப்படல அவ” திக்கித் திணறினார் அவர்.

“மொதல்ல சுடுதண்ணி பிடிச்சுட்டு வந்து குடுங்க. அவ தலையோட குளிக்கனும். அப்புறம் சாப்பாடு குடுங்க”

‘குளிக்கனுமா? அதுவும் தலையோடவா? என்னடா பண்ண அவள? ஐயய்யோ குடி முழுகி போச்சா? கட்டையில போறவனே! இம்புட்டு விருந்தாளிகள வெளிய வச்சிக்கிட்டு, மனுஷ பய பாக்கற வேலையாடா இது? அடுக்குமாடா இது?’ முகம் அஷ்டக்கோணலாக மாற மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தவாறு மலைத்துப் போய் நின்றார் பட்டு.

“ஹ்கும்” குரலை கணைத்தான் எட்வர்ட்.

முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்த பட்டு திகைத்துப் போய் நின்றார்.

‘இப்ப துரை நம்ம பாத்து நக்கலா சிரிச்ச மாதிரி இருந்ததே?’ கண்ணைத் தேய்த்துவிட்டு மீண்டும் பார்த்தார் பட்டு. சாதாரணமாக தான் நின்றிருந்தான் எட்வர்ட்.

‘துரை நம்மலலாம் பார்த்து நக்கலாவும் சிரிக்க மாட்டாரு, விக்கலாவும் சிரிக்க மாட்டாரு. என் மண்டை மூளை கலங்கிப் போச்சு போல. அதான் இப்படிலாம் தோணுது!’

“பார்த்துக்கங்க அவள! நான் போய் வந்தவங்கள கவனிக்கறேன்.” போய் விட்டான்.

அவன் நகர்ந்ததும் ரூமுக்குள்ளே  ஓடினார் பட்டு. அங்கே சுப்பு உள் பாவாடையுடன் நின்றிருந்தாள். அவள் கண்களில் அருவியாக கண்ணீர்.

காலை நீட்டி தரையில் அமர்ந்த பட்டு, இரு கைகளையும் வீசி, எடுத்துவிட்டார் ஒப்பாரியை.

“ஏ புள்ள சுப்பு. இப்படி மோசம் போயிட்டியே தாயி!

பாராட்டி சீராட்டி

அன்னம் வளத்த கன்னுக்குட்டி ஓஓஓ (இந்த இடத்தில் மூக்கை உறிந்து சேலையில் தடவிக் கொண்டார் பட்டு)

மானம் போயி மருவாதை போயி

நாதியத்து போயிட்டியே ஓஓஓ

பச்ச மண்ணா நீ இருந்தும்

பட்டு போயி கிடக்கறியே ஓஓஓ

மூளையத்த பாதகத்தி இப்படி

மூலையில நிக்கறியே ஓஓஒ” நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தவர்,

“நாசமா போனவன் யானை மிதிச்சிப் போயிருவான். பாம்பு கொத்திப் போயிருவான். காட்டுப்பன்னி முட்டி போயிருவான். கழுதை ஒதைச்சிப் போயிருவான். காண்டாமிருகம் கடிச்சுப் போயிருவான்” என வித விதமாக சாபம் கொடுத்தார்.

“எங்கப் போயிருவான்?” கண்ணைத் துடைத்துக் கொண்டு தானும் கீழே அமர்ந்து கதை கேட்டாள் சுப்பு.

“கட்டையில போயிருவாண்டி! பொட்டப்புள்ள மானம் சந்தி சிரிச்சுப் போச்சு, கேக்கறா பாரு கேள்வி!” அவளிடமும் எரிந்து விழுந்தார்.

“ஆமாக்கா! துரை ரொம்ப மோசம்தான். அதுக்குன்னு கட்டையில எல்லாம் போக வேணாம்கா. பாவம்!”

“என்னடி பாவம்? உன்னை பலாத்காரம் பண்ணிருக்கான் அவனுக்குப் போயி பாவம் பாக்கற!” மண்டையில் நங்கென கொட்டினார்.

தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“பலாத்காரம்னா என்னாக்கா? பலகாரமா? ரொம்ப காரமா இருக்குமா? நாளைக்கு செஞ்சு குடுக்கறியா?” என கேட்டாள்.

கொலைவெறியான பட்டு அவளை கும்முவதற்கு எழுந்த போது பவுனு அவர்களைத் தேடி ஓடி வந்தார்.

“யக்கா கேட்டியா கதைய?” என ஆரம்பித்து வெளியே நடந்ததை சொன்னார்.

அதற்கப்புறம் தான் சுப்புவை நன்றாகப் பார்த்தார் பட்டு. பாவாடை மட்டும் தான் கிழிந்து கீழே கிடந்தது. மற்றபடி முழு உடையோடு தான் இருந்தாள். பலாத்காரம் நடந்த மாதிரி எதுவும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. எட்வர்ட் உள்ளே இழுத்து வந்ததற்கு பிறகு என்ன நடந்தது என விவரமாக கேட்டு தெரிந்துக் கொண்டார்கள் அவர்கள் இருவரும்.

“துரை பாவாடையை கழட்ட சொன்னாரு. நான் முடியாதுன்னு சொன்னேன். அவருக்கு கோபம் வந்துருச்சு. கத்தரிக்கோலு வச்சு டர்ருன்னு கிழிச்சுப்புட்டாரு. இனிமே இந்த பாவாடை சட்டையைப் போடக்கூடாதாம். அந்த கிரகம் புடிச்ச துரை என்ன பின்னால தொட்டது என் தப்பா? இல்ல என் பாவாடையோட தப்பா? எதுக்கு கிழிச்சாரு? என் கிட்ட இருந்த ரொம்ப அழகான உடுப்பு இதுதான். எல்லாம் போச்சு” விசும்பினாள்.

பட்டுவும் பவுனுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அது மட்டும் இல்லக்கா. தோ, என் பின்னால கைய வச்சு பரபரன்னு தேய்ச்சுப்புட்டாரு. அதுக்குத்தான் வெளிய வர வேணாம்னு சொன்னேன், கண்டவன் கண்ணுலாம் உன் மேல விழுகுதுன்னு சத்தம் போட்டாருக்கா. அவன் கை வச்சது கூட வலிக்கல. நம்ம துரை தேய்ச்சு விட்டது தான் வலிக்குதுக்கா. நான் என்ன பத்து பாத்திரமா, ஆளாளுக்கு தேய்க்கறதுக்கு?” மூக்கை சிந்தினாள் சுப்பு.

“சரி, சரி அழாதே புள்ள. துரை சொன்ன மாதிரி தண்ணி கொண்டு வரேன். குளிச்சுட்டு அடுப்படில போய் இரு” சொன்னார் பட்டு.

“இல்ல, இல்ல! குளிச்சுட்டு இந்த ரூமுக்குள்ளேயே இருக்க சொன்னாரு துரை. யார் கண்ணுலயும் படக்கூடாதாம்.”

“அதுவும் சரிதான். அந்த எடுபட்ட துரை உன்னைத் தேடிட்டு வீட்டு உள்ள வந்தற போறான். நம்ம துரை ரூமுன்னா யாரும் நுழைய மாட்டாங்க” ஒத்துக் கொண்டார் பவுனு.

“அக்கா!”

“என்னடி?” இருவரும் கோரசாக கேட்டனர்.

“நாளைக்கு பலாத்காரம் செஞ்சு குடுக்கா! ஆசையா இருக்கு சாப்புட”

இவ்வளவு நேரம் இருந்த மன உளைச்சல் ஒன்றும் இல்லை என ஆனதில் நெகிழ்ந்திருந்த பட்டு, சுப்பு பேசியதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தார்.

“கூறுகெட்ட கூவை” செல்லமாக திட்டிவிட்டு வேலையைப் பார்க்க சென்றார்கள் இருவரும்.

வெளியே எட்வர்டின் கண் ஜாடையில், அவனைப் பின் தொடர்ந்து வீட்டின் பின் பகுதிக்குப் போனான் பரசு.

“சொல்லுங்க துரை. அந்த துரைய ஆத்துல இறக்கனுமா?”

“வேணாம் பர்சு! பெரிய இடம். போலீஸ் கேஸ் ஆகிரும். வழிபறி மாதிரி செட் பண்ணி கையும், காலையும் முறிச்சுப் போட சொல்லு. சுபூவ தொட்ட சோத்துக் கையால இனிமே அவன் சாப்பிடவே கூடாது. புரிஞ்சதா?”

இருட்டாக இருந்ததால் எட்வர்டின் முகபாவத்தை பரசுவால் பார்க்க முடியவில்லை. ஆனால் அவன் குரலை கேட்கவே இவனுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது.

“ஆகட்டும் துரை”

“விஷயம் உன் ரெண்டு வைப்புக்கு கூட தெரிய கூடாது. காட் இட் பர்சு?”

“சரிங்க துரை”

எல்லோரும் கிளம்பி சென்று, எட்வர்ட் உள்ளே வர நள்ளிரவு தாண்டி இருந்தது. கதவைப் பூட்டி நேராக ரூமுக்குள் நுழைந்தவன், அவன் கட்டிலின் அருகே தரையில் ஒருக்களித்துப் படுத்திருந்த சுப்புவைக் கண்டான். தானாக முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. சத்தம் செய்யாமல், மெதுவாக நடந்து குளிக்கும் அறைக்கு சென்று முகம், கைகால் கழுவி வந்தான்.

ஆழ்ந்து உறங்கும் அவளை எழுப்ப மனமற்று, லைட்டை மூடி விட்டு மெதுவாக கட்டிலில் சரிந்தான்.

“துரை!”

படக்கென எழுந்து அமர்ந்தவன்,

“நீ இன்னும் தூங்கலியா ப்ளேக்கி?” என கேட்டான்.

“உங்களுக்காக காத்துக்கிட்டே முழிச்சி முழிச்சு தூங்கனேன் துரை”

“ஓ!”

“நீங்க என்னை ஏமாத்திட்டீங்க துரை!”

“நானா? எப்போ?” அவன் கட்டிலில் அமர்ந்தவாறும், இவள் கீழே படுத்தவாறும் பேசிக் கொண்டிருந்தனர். அறையில் கும்மிருட்டு.

“எல்லோரும் போனதும் பாட்டு பொட்டில பாட்டு போட்டுக் காட்டறேன்னு சொன்னீங்களே! இப்போ கமுக்கமா படுத்துக் கிட்டீங்க. நான் எவ்வளவு ஆசையா காத்திருந்தேன் தெரியுமா துரை?”

அவள் குரலின் ஏக்கம் இவனை என்னவோ செய்தது.

“என் மேல கோபம் இல்லையா ப்ளேக்கி?”

“எதுக்கு கோபம் துரை?”

“பாவாடைய கிழிச்சிட்டேன்னு மூஞ்ச தூக்கி வச்சிருந்த. நான் கூட நாலு நாளைக்கு என் கூட பேச மாட்டேன்னு நினைச்சேன்” கிண்டலாக கேட்டான் எட்வர்ட்.

“எனக்குப் புடிச்ச பாவாடை அது. என்ன பண்ண, அதுக்கு ஆயுசு அம்புட்டுதான். நீங்க தானே கிழிச்சீங்க. அதனால பரவாயில்ல துரை. நான் கோவிச்சுக்கல, விடுங்க!”

அவனை இவள் சமாதானப்படுத்தினாள். அன்னை அடித்தாலும், சற்று நேரத்தில் அவளையே தேடி வந்து மீண்டும் கட்டிக் கொள்ளும் சின்னக் குழந்தையாய் அவன் கண்ணுக்குத் தெரிந்தாள் சுப்பு.

“சரி வா! பாட்டு போடறேன்” என்றவன் கட்டிலில் இருந்து எழுந்து நின்றான். கட்டில் அருகிலே படுத்திருந்த அவளும் அதே நேரத்தில் எழுந்து நின்றாள். இருட்டில் தட்டு தடுமாறிய சுப்பு, எட்வர்டை மோதி நின்றாள். அவள் விழுந்து விடாமல் தாங்கியவன், அப்படியே அவன் கைவளைவிலேயே வைத்திருந்தான்.

“துரை”

“ஹ்ம்ம்”

“பாட்டு?”

“ஹ்ம்ம் போலாம். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இரு ப்ளேக்கி”

அவளைக் குழந்தையாக எட்வர்ட் எண்ணி ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் தான் குமரி என அவளை அறியாமலே அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் சுப்பு.

“துரை! விடுங்க என்னை. போக போக ஏன் இறுக்கிப் பிடிக்கறீங்க? எனக்கு மூச்சு முட்டுது” அவள் கோபமாக சொன்னது கூட அவனுக்கு சிணுங்கலாகவே கேட்டது. கஸ்டப்பட்டு அவளை விலக்கி நிறுத்தினான். அதற்குள் இருட்டு இருவர் கண்களுக்கும் பழகி இருந்தது.

அவன் விட்ட கணமே, கதவைத் திறந்து வெளியே ஓடிப்போனாள் சுப்பு. ஹாலில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த ரொகார்ட் ப்ளேயர் அருகில் வந்ததும் தான் நின்றாள்.

அவள் பின்னாலேயே வந்த எட்வர்ட், இசைத் தட்டுகளில் கீழே ஒளித்து வைத்திருந்த ஒன்றை வெளியே எடுத்தான்.

“ப்ளேக்கி, உனக்கு சர்ப்ரைஸ், ஹ்ம்ம் ஆச்சரியம் குடுக்கனும்னு நினைச்சேன். ரொம்ப நாள் முன்னுக்கே சொல்லி வச்சிருந்தேன் தமிழ் பாட்டு ரெக்கார்ட் வேணும்னு. உன் அதிர்ஷ்டம், கிடைச்சிருக்கு. பாட்டு கேக்கலாமா?”

அவன் கையில் இருந்த இசைத்தட்டை வாங்கி ஆசையாக பார்த்தாள் சுப்பு.

பின் எழுத்துக் கூட்டி மாதுரை விரன் (மதுரை வீரன்) என படித்தவள் குஷியாகி போனாள்.

“எம் ஜியாரு புது படம் துரை! பாட்டு இன்னும் ரேடியோ பொட்டில கூட வரல.” சந்தோசத்தில் குதி குதியென குதித்தாள்.

சிரித்தவாறே இசைத்தட்டை அவள் கையில் இருந்து வாங்கி ப்ளேயரில் பொருத்தினான் எட்வர்ட். சற்று நேரத்துக்கெல்லாம் பி.லீலா, டி.எம். சௌந்தரராஜன் இருவரின் குரல் அந்த ஹாலை நிறைத்தது.

அருகிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் சுப்பு. ஆனந்தம் அவள் முகத்தில் நர்த்தனமாடியது. கால்கள் தானாகவே தாளம் போட்டன. இசையோடு அவள் ஜல் ஜல் கொலுசு சத்தமும் எட்வர்டின் காதை நிறைத்தன.

சுகமாக மூங்கில் நாற்காலியில் சாய்ந்துக் கொண்டவன், கண்களை மூடி ஒலியை மட்டும் உள்வாங்கினான். அவன் அருகில் வந்து நின்ற சுப்பு,

“துரை!” என அழைத்தாள்.

கண்ணைத் திறக்காமலே,

“ஹ்ம்ம்” என்றான்.

“நான் ஆடவா?”

மெல்ல கண் திறந்தவன் கரகரப்பான குரலில்,

“ஆடு” என்றான். 

“வாங்க மச்சான் வாங்க

வந்த வழிய பாத்து போங்க”

பாடல் பிண்ணனியில் ஒலிக்க சந்தோஷமாக ஆடினாள் சுப்பு. பாதி பாடலில் எட்வர்ட் அருகே வந்தவள் அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

“என்ன ப்ளேக்கி?” கையை உருவிக் கொண்டே கேட்டான் எட்வர்ட்.

“நீங்களும் வாங்க என் கூட ஆட” என அழைத்தாள் சுப்பு.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,

“வரேன்! ஆனா இந்தப் பாட்டுக்கு இல்ல. முதல்ல நீ இந்த பாட்டெல்லாம் கேட்டு முடி. அப்புறம் நான் போடுற பாட்டுக்கு சேர்ந்து ஆடலாம் ப்ளேக்கி” என்றவன் முகத்தில் மர்ம புன்னகை.

அந்த இசைத்தட்டு முடியும் வரை, அவள் ஆடுவதையும் ஓடுவதையும் ரசித்தவாறு அமர்ந்திருந்தான் எட்வர்ட். பின் எழுந்தவன், வேறொரு இசைத் தட்டைப் பொருத்தினான்.

சுப்புவை கை நீட்டி அருகே அழைத்தவன்,

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு மட்டும் நீ என்னை தொட அனுமதிக்கறேன் ப்ளேக்கி” என சொன்னான். 

அவனை உற்று பார்த்த சுப்பு,

“அது என்ன துரை கொஞ்ச நேர கணக்கு? ஒன்னும் வேணா. நான் தொட்டா என் கருப்பு ஒட்டிக்கும்னு தானே என்னை தொட வேணா சொல்றீங்க? அப்படியே இருங்க, நான் ஒன்னும் உங்களை தொட வேணாம்” என முறுக்கிக் கொண்டவள் முதுகை காட்டி திரும்பி நின்றுக் கொண்டாள். 

சிறு பிள்ளைத்தனமான அவளின் முகத்திருப்பலில் கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது எட்வர்டுக்கு.

“சரி, நீ தொட வேணாம். நான் உன்னைத் தொட்டு ஆடறேன். நீ என்னோட சேர்ந்து அசைஞ்சா மட்டும் போதும்” என அவள் இடுப்பில் ஒரு கையும், முதுகில் ஒரு கையும் வைத்து தன்னருகே இழுத்துக் கொண்டான் எட்வர்ட்.

ரம்மியமான, காதல் ரசம் சொட்டும் ஒன்லி யூ(only you–The Platters) காதில் தேனாய் வந்து பாய்ந்தது.

பாடல் வரிகளை ரசித்து அதன் கூடவே பாடினான் எட்வர்ட்.

“Only you can make this change in me

(உன்னால் மட்டும்தான் இந்த மாற்றத்தை என்னிடத்தில் ஏற்படுத்த முடியும்)
For it’s true, you are my destiny

(நிஜம் சொல்கிறேன், நீயே என் எதிர்காலம்)
When you hold my hand I understand the magic that you do

(என் கையை நீ பற்றும் போது, எனக்குள் நடக்கும் மாயங்களை நான் உணர்கிறேன்)
You’re my dream come true, my one and only you”

(நிஜமாகிய என் கனவு நீ, எனக்கே எனக்கான நீ)

அவளைத் தன் நெஞ்சில் சாய்த்து மிக மெதுவாக ஆடினான். அவன் அசைவதற்கேற்ப அசைந்த சுப்புவும், எங்கே விழுந்து விடுவோமோ என பயத்தில் தொட மாட்டேன் என சொன்னதையும் மறந்து அவன் இடுப்பை இருக கட்டிக் கொண்டாள்.

அந்த நேரத்துக்கு தலைக்கு குளித்திருந்தவளின் நீள கூந்தல், எட்வர்டின் கரங்களை தொட்டு தொட்டு விளையாடியது. ஒவ்வொரு காதல் பாடல்களாய் மாற்றி மாற்றி வர, சுப்புவை இன்னும் தன்னுள் இருக்கிக் கொண்டான் எட்வர்ட். நேரம் ஆக ஆக, அவளின் உடல் தன் மேல் பாரமாய் அழுத்த, ஆடுவதை நிறுத்தியவன்,

“ப்ளேக்கி!” என மென்மையாக அழைத்தான்.

அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.

“சுபூ!”

அப்பொழுதும் சத்தம் இல்லை. அவளது முகத்தை நிமிர்த்திப் பார்த்தவனுக்கு சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. அவனது நெஞ்சத்தை மஞ்சமாக்கி உறங்கி இருந்தாள் சுப்பு. 

அப்படியே அவளை அள்ளிக் கொண்டவன், அவளது படுக்கும் இடத்தில் கொண்டு போய் படுக்க வைத்தான். போர்த்தி விட்டவன், போன தடவைப் போல் இல்லாமல் கொஞ்சம் முன்னேறி இம்முறை கன்னத்தில் இதழ் பதித்தான். அவள் முக வடிவை தன் விரல்களால் பட்டும் படாமல் அளந்தவன், அவளையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தான். பின் தன்னையே உலுக்கிக் கொண்டவன், தனதறைக்கு நகர்ந்தான். இரண்டு எட்டுதான் வைத்திருப்பான், வேகமாக மீண்டும் அவள் அருகில் வந்தமர்ந்தவன், தன் ஆட்காட்டி விரலை அவள் உதட்டின் மேல் வைத்து, அதை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்டான்.

“குட் நைட் ப்ளேக்கி டார்லிங்”

என மென்மையாக சொன்னவன், அதன் பிறகு விடு விடுவென தனதறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டான்.