IMTP–EPI 16

அத்தியாயம் 16

 

“ஐடோ, ஐடோ, ஐடோ” வாயில் முனகிக் கொண்டே வந்தாள் சுப்பு.

அவள் அருகில் அமர்ந்து ஜீப்பை ஓட்டிய எட்வர்ட்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ப்ளேக்கி!”

“நடுவுல பேசாதீங்க துரை. நான் மறந்துருவேன்” அவனை முறைத்தாள்.

“சரி, சரி பேசல” என சிரித்தவன் கவனத்தை சாலையின் மீது வைத்தான்.

அவன் கேட்ட விஷயத்திற்கு அவள் மயங்கி எழுந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகி இருந்தன.

இதோ பிறந்து விட்டது புது வருடம்.1957லில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

மனனம் செய்வதை நிறுத்திவிட்டு,

“துரை, இன்னிக்கு வருஷ பொறப்பா?” என கேட்டாள் சுப்பு.

“ஆமா ப்ளேக்கி. உனக்கு என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருஷத்துல இருந்து உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்” சிரித்தான் எட்வர்ட்.

“உங்களுக்கும் என்னோட வருஷ பொறப்பு வாழ்த்துக்கள். இன்னிக்கு மட்டும் என் கிட்ட முறைச்சிக்க கூடாது, சரியா துரை?”

“ஏன் ப்ளேக்கி?”

“இன்னிக்கு மொறைச்சா, அப்புறம் வருஷம் முழுக்க மொறைப்பீங்க! தினமும் மொளகா பஜ்ஜி மாதிரி உப்பி போன உங்க மொகத்தை யாரு பார்ப்பா? அதான் சொல்லுறேன், இன்னிக்கு கோபமே படக்கூடாது”

“வேற யார் பார்ப்பா? இனிமே நீதான் பார்க்கனும்” உல்லாசமாக சிரித்தான் எட்வர்ட்.

எம்பி அவன் கன்னக் குழியைத் தொட்டவள்,

“இந்த வருஷம் முழுக்க உங்க கன்னத்த நான் தொடுவேனே” என சிரித்தாள்.

“கவலைப்படாதே ப்ளேக்கி, இன்னிக்கு முழுக்க நான் உன்னை ரொம்ப சந்தோசமா வச்சிக்குவேன். அதுக்குத்தான் கோலாலம்பூர் போறோம். இந்த நாள மட்டும் நீ மறக்கவே கூடாது” மர்மமாக சிரித்தான்.

அன்று காலைதான் பரசு குடும்பத்தை அழைத்துக் கொண்டு அவன் பெற்றோர் இருக்கும் எஸ்டேட் திருவிழாவுக்கு கிளம்பி இருந்தான். வர ஒரு வாரம் ஆகும். அவர்கள் அப்படி கிளம்பியவுடன், எட்வர்ட் இவளை அழைத்துக் கொண்டு கோலாலம்பூர் கிளம்பி விட்டான்.

போகும் முன் பட்டு இவளைத் தனியாக வந்துப் பார்த்தார்.

“ஏ புள்ள! நாங்க வர ஒரு வாரம், இல்ல பத்து நாள் கூட ஆகும். ஆத்தா மடியில படுத்துகிட்டு வர மாட்டேன்னு அட்டூழியம் பண்ணும் இந்தாளு. ரெண்டு பொண்டாட்டி கட்டியும், ஆத்தா வாக்குதான் வேத வாக்கு. நாங்க வர வரைக்கும், நீ பார்த்து சூதனமா இரு புள்ள. ஆத்திர அவசரத்துக்கு உதவி பண்ண நாங்க கூட பக்கத்துல இருக்க மாட்டோம்” கவலையுடன் பேசினார் பட்டு.

“துரை இருக்கறப்ப என்னக்கா பயம்? நீங்க சந்தோஷமா போய்ட்டு வாங்க”

‘அந்த துரை இருக்கறது தானே எனக்குப் பயமே! இப்பல்லாம் ஆளும் பார்வையும் கொஞ்சம் கூட சரியில்ல. வூட்டுல இருக்கறப்பல்லாம் இவ பின்னாடியேல கண்ணு ரெண்டும் போகுது. இவளாச்சும் ஒதுங்கி போறாளா! அதுவும் இல்ல. எவ்வளவு படிச்சு சொன்னாலும் துரை, காபி நொரைன்னு பின்னாலயே சுத்துறா.’ மனதில் இருவரையும் ஆட்டுக் கல்லில் போட்டு ஆட்டினார் பட்டு. 

“உன் கிட்ட ஒன்னு சொல்லனும் சுப்பு. ஆனா உனக்கு விளங்குமான்னு தெரியலையே”

“சொல்லுங்கக்கா எனக்கு நல்லா விளங்கும். பக்கத்துல தானே நிக்கறீங்க, சொல்லுறது எப்படி விளங்காம போகும்” சிரித்தாள் சுப்பு.

சுற்றி முற்றி பார்த்த பட்டு, எட்வர்ட் கண்ணுக்கு தெரியாதததால் நொங்கென சுப்புவின் மண்டையில் ஒன்று போட்டார்.

“தத்தி, தத்தி! காது விளங்குமானா கேட்டேன்? விஷயம் விளங்குமான்னு கேட்டேன்டி! நாங்க போயிட்டு வர வரைக்கும் உன் கற்ப நீதான் காப்பாத்திக்கனும். புரியுதா புள்ள?” கண்டிப்புடன் பேசினார்.

“சரிக்கா”

“என்னத்த சரியோ! மண்டைய மட்டும் நல்லா ஆட்டு. கற்புன்னா என்னான்னு சொல்லு பாப்போம்”

“அதெல்லாம் அலமு சொல்லிருக்கா. எங்களுக்கும் மண்டையில கொஞ்சூண்டு மூளை இருக்கு. கற்பு வந்து ஒரு கட்டி மாதிரி இருக்குமாம். அதான்கா ஒடம்பு சூடானா புடைச்சிகிட்டு கட்டி வருமே அந்த மாதிரி. அந்த கற்பு கட்டி பொண்ணுங்க வயித்துக்குள்ள இருக்குமாம். ஆம்பளைங்க நம்ம வயித்துல கைய வச்சா அது கரைஞ்சி போயிருமாம்.” எப்புடி என்பது போல மிதப்பாகப் பார்த்தாள் சுப்பு.

“அது கரைஞ்சி போகுதோ இல்லையோ, உன் கிட்ட மல்லுக்கட்டி என் உசுரு காத்தோட காத்தா கரைஞ்சி போகுதுடி என் அறிவு கொழுந்தே!”

“அப்போ அலமு சொன்னது சரி இல்லையாக்கா?”

“உன் கூட்டாளி உன்னை மாதிரி தானே இருப்பா! நம்மள கல்யாணம் பண்ணிக்காம, ஒரு ஆம்பள தொட்டுட்டா, அப்போதான் அந்த பொண்ணுக்கு கற்பு இல்லைன்னு சொல்லுவாங்க.” என விளக்க முடியாமல் விளக்கினார் பட்டு.

“ஐயோ, அக்கா! துரை என் கைலாம் புடிச்சிருக்காறே. அப்போ எனக்கு கற்பு போயிருச்சா? போச்சே என் கற்பு போச்சே! அது போனத நான் பாக்கவே இல்லையே. கற்பு கட்டி ஒன்னுதான் இருக்குமாக்கா? எனக்கு இன்னொன்னு வேணுமே” அழ ஆயத்தமானாள் சுப்பு.

“அடியே மடச்சி! கைலாம் தொட்டா போகாதுடி. இங்க, இங்க தொட்டா தான் போகும். அங்கல்லாம் புருஷன் தான் தொடனும்” எங்கே என்பதை சுட்டிக் காட்டினார்.

“ஓ அதான பார்த்தேன்! என் கற்பு போனத நான் பார்க்கவே இல்லையே! துரை அங்கலாம் தொட்டது இல்லக்கா. அதனால நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க.” சமாதானப் படுத்தினாள் சுப்பு.

“ஏ புள்ள பட்டு. விரசா வாப்புள்ள. ஆத்தா எஸ்டேட்டுக்கு போற ட்ராக்டர் கெளம்பிற போகுது. எப்ப பாரு அந்தப் புள்ள கிட்ட வள வளன்னு என்னத்த தான் பேசுவியோ” வெளியே இருந்து கத்தினார் பரசு. பவுனுவும் பிள்ளைகளும் அவருடன் நின்றிருந்தனர்.

“வரேன்யா! ஆத்தா முந்தானைய புடிச்சுட்டு சுத்தறதுக்கு எம்புட்டு அவசரம் பாரு! சரி புள்ள. நாங்க கெளம்புறோம். பத்திரம்” திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார் பட்டு.

“அக்கா அட்வைஸ் பண்ணி முடிச்சுட்டாங்களா ப்ளேக்கி?” பட்டு போன நொடி அவள் பின்னே ஆஜரானான் எட்வர்ட்.

“அட்டுவைஸ்னா?”

“ஹ்ம்ம், நல்லது சொல்லுறது”

“அவங்க நல்லா தான் சொல்லுறாங்க. எனக்குதான் புரிய மாட்டிக்கிது. விடுங்க துரை”

“சரி, சரி.இப்போ போய் உங்க ஆத்தா வாங்கி குடுத்த வெள்ளை கலர் பாவாடை, தாவணிய போட்டுட்டு வா. கிளம்பலாம். சீக்கிரம்”

ஜீப் நின்றது கூட தெரியாமல் யோசனையில் இருந்தவளை,

“ப்ளேக்கி, நாம கோலாலம்பூர் வந்துட்டோம்.” என மலை இறக்கினான் எட்வர்ட்.

அவள் அருகே வந்து ஜீப்பில் இருந்து அவளை இறக்கி விட்டான். பிறந்ததில் இருந்து எஸ்டேட்டை விட்டே வெளியில் வந்திருக்காத சுப்புவுக்கு வரிசையாக இருந்த கடை வீதிகளும், பல இன மக்களும் ஆச்சரியத்தைக் கொடுத்தனர். வாய் பிளந்து மக்கள் கூட்டத்தைக் கவனித்தவள், எட்வர்ட் அவன் கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டதைக் கூட உணரவில்லை.

“வா ப்ளேக்கி! இப்படியே அசந்து நின்னுட்டா எப்படி?” சிரிப்புடன் அவளை நடத்திச் சென்றான்.

“துரை, மொத மொத நான் எஸ்டேட்ட வுட்டு வெளிய வந்துருக்கேன், மங்களகரமா கோயிலுக்குப் போலாமா?” ஆசையாக கேட்டாள்.

சரி என தலையாட்டியவன், 1873லேயே பிள்ளை இனத்தவர்களால் கட்டப்பட்ட மாரியம்மன் கோயிலுக்கு அவளை அழைத்துச் சென்றான். கோலாலம்பூரின் இண்டு இடுக்குகள் கூட எட்வர்டுக்கு தெரியும். அடிக்கடி இங்கே வருபவனாயிற்றே. கோயில் வெளியேயே நின்றுக் கொண்டவன்,

“நீ போய்ட்டு வா ப்ளேக்கி. நான் இங்கயே நிக்கறேன்” என்றான்.

“எனக்கு தனியா போவ பயமா இருக்கு துரை. எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் உத்து உத்துப் பார்க்கற மாதிரி இருக்கு” அவன் கையை இருக்கிக் கொண்டாள் சுப்பு.

“பார்க்கத்தான் செய்வாங்க ப்ளேக்கி. நீ இந்தியன், நான் பிரிட்டீஷ்காரன். ரெண்டு பேரும் ஒன்னா கைப்பிடிச்சுட்டு வந்தா வித்தியாசமா தானே தெரியும்” புன்னகைத்தான்.

“அப்போ என் கைய விடுங்க துரை.” கையை விலக்க முயற்சித்தாள். அவன் பிடி இறும்பாய் இறுகியது.

“மத்தவங்க பார்க்கறாங்கன்றதால எல்லாம் பிடிச்ச கைய விடமாட்டான் இந்த எட்வர்ட்” குரலில் உறுதி தெறித்தது.

“சரி வா! நானும் உள்ள வரேன். ஆனா ஒரு ஓரமா தான் நிப்பேன். நீ போய் சாமிய பாத்துட்டு வா” கோயிலின் உள்ளே நுழைந்தவன், ஓரமாக அமர்ந்து கொண்டான். அவள் கும்பிட்டு வரும் வரை அவளை விட்டுப் பார்வையை நகர்த்தவில்லை எட்வர்ட்.

“சாமிட்ட என்ன வேண்டிக்கிட்ட ப்ளேக்கி?”

“நீங்க, நானு, என் குடும்பம், சித்தப்பூ குடும்பம், ஜோனி எல்லாம் நல்லா இருக்கனும்னு வேண்டிக்கிட்டேன். எனக்கு பசிக்குது துரை, மொதல்ல சாப்பாடு வாங்கி குடுங்க.” வயிற்றை தடவிக் காட்டினாள் சுப்பு.

“சீன சாப்பாடு சாப்படறியா ப்ளேக்கி?” வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான்.

“ஐயய்யோ வேணாம் துரை. அவங்க பன்னிதான் சாப்புடுவாங்களாம். அப்பாரு சொல்லிருக்காரு. எனக்கு வேணா” அலறினாள்.

“சரி வா!” என இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். மேசையை தேடி அவளை தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டான். அங்கேயும், எல்லோரும் இவர்களைதான் தான் அதிசயமாக பார்த்தார்கள். அவளிடம் கேட்டு இட்லியும், பூரியும் வாங்கிக் கொடுத்தான் எட்வர்ட். அவள் உணவு வந்ததும் தான் கவனித்தாள், அவனுக்கு ஒன்றும் அவன் ஆர்டர் செய்யாததை.

“நீங்க ஒன்னும் சாப்புடலையா துரை?”

“இல்ல ப்ளேக்கி. சோறு மட்டும் கொஞ்சமா சாப்பிட பழகிருக்கேன். இதெல்லாம் சாப்பிட தெரியாது”

“அதெப்படி சாப்புட தெரியாம போகும்? எல்லாத்தையும் மாதிரி இட்லியையும் வாயால தான் சாப்புடனும்” சொன்னவள், இட்லியைப் பிட்டு அவன் வாய் அருகே கொண்டு வந்தாள்.

“வாய தொறங்க துரை”

மனம் நெகிழ அவள் கண்களையேப் பார்த்தவாறு வாய் திறந்தவனுக்கு, ஊட்டி விட்டாள் சுப்பு.

“இப்படிதான் சாப்புடனும்” சொன்னவள்,

“இதுக்கு மேல இன்னொரு தட்டுல நீங்க வாங்கிக்கிங்க. இன்னும் ஊட்டுனா எனக்குப் பத்தாது” என சாப்பிட ஆரம்பித்தாள்.

சிரிப்புடனே இன்னொரு தட்டு இட்லி ஆர்டர் செய்து, அவள் சட்னியிலும், சாம்பாரிலும் தொட்டு சாப்பிடுவது போலவே சாப்பிட்டான் எட்வர்ட். கார சட்னியின் தயவால், மூன்று இட்லிக்கு, மூன்று கிளாஸ் தண்ணீர் அருந்தி இருந்தான். கடைசியாக காபி அருந்தி விட்டு கடையில் இருந்து வெளியேறினர்.

இப்பொழுது அவளே அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தாள். சாலையின் இரு புறமும் பல வகையான கடைகள். முக்கால் வாசி கடைகள் சீனர்களால் நடத்தப்பட்டது. அங்கு விற்கப்பட்ட உணவு பண்டங்களையும், துணி மணிகளையும் வேடிக்கைப் பார்த்தவாறே எட்வர்டை கேள்விகளால் துளைத்தெடுத்தாள் சுப்பு. பொறுமையாக அவளது கேள்விகளுக்கு பதிலளித்தவன், நடத்தியே கொலிசியம் தியேட்டர் வாயிலுக்கு அழைத்து வந்திருந்தான்.

“சினிமா கொட்டாய்(கொட்டகை) மாதிரி இருக்கு? நாம படம் பார்க்க போறோமா துரை?” ஆசையாக கண்கள் மின்ன கேட்டாள் சுப்பு.

“ஆமா, உனக்கு பிடிச்ச படம். அன்னிக்கு பாட்டு கேட்டோமே அந்த படம்”

“எம்.ஜி. ஆரு படமா? மதுரை வீரனா?” ஆமென தலையாட்டியவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள் சுப்பு.

“தேங்சூ துரை. இது தான் எனக்கு ரொம்ப புடிச்ச புது வருஷம்” சந்தோஷமாக சொன்னாள்.

பால்கனி டிக்கேட் எடுத்து அவளை உள்ளே அழைத்து சென்றான் எட்வர்ட். இவர்கள் அமர்ந்திருந்த வரிசை முழுக்க உள்ள டிக்கெட்டுகளையும் அவனே வாங்கி இருந்ததால் அவர்கள் அருகே யாரும் இல்லை. விளக்குகள் அணைத்து படம் ஆரம்பிக்கவும், அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான் எட்வர்ட்.

“ப்ளேக்கி”

“ஹ்ம்ம்ம் துரை”

“எனக்குதான் படம் புரியாதே, நான் வேணும்னா தூங்கவா?”

பட சுவாரசியத்தில் இருந்தவள்,

“ஹ்ம்ம் சரி” என்றாள்.

“உன் தோளுல தலை வச்சிக்கவா?”

திரையில் இருந்து கண்ணை அகற்றி அவனைத் திரும்பி பார்த்தவள்,

“உங்களுக்கு கழுத்து வலிக்காதா துரை?” என அக்கறையாக கேட்டாள்.

“அது என்னோட கஸ்டம். தலை வச்சிக்கவா வேணாமா?”

“சரி, வச்சிக்குங்க!” இன்னும் அவன் அருகே நகர்ந்து அமர்ந்தாள். அவள் தோளுக்கு தன் தலை வரும் அளவுக்கு சரிந்து அமர்ந்தவன், வாகாக தலையை அவள் தோளில் சாய்த்துக் கொண்டான். அவஸ்தையாக அப்படியும் இப்படியும் நெளிந்தாள் சுப்பு.

“ஆடாம உக்காரு ப்ளேக்கி. இப்படி அசைஞ்சா நான் எப்படி தூங்கறது?” என செல்லமாக மிரட்டினான் எட்வர்ட். அதன் பிறகு அசையாமல் படம் பார்ப்பது போல அமர்ந்திருந்தாள்.

அவன் உறங்கிவிட்டான் என தெரிந்த பத்தாவது நிமிடம், திரையிலிருந்து பார்வையை அகற்றி அவனை பார்க்க ஆரம்பித்தாள் சுப்பு.

இரண்டு நாட்களுக்கு முந்திய இரவில் அவன் கேட்டது ஞாபகம் வந்து நெஞ்சம் தடதடத்தது. அன்று,

“ப்ளேக்கி!” என ஆசையாக அழைத்தான் எட்வர்ட்.

“அதான் நீங்க பேசறதா இருந்தா என்ன சொன்னாலும் கேட்கறேன்னு சொல்லிட்டேன்ல, என்ன வேணும் சொல்லுங்க” இன்னும் குரலில் அழுகை மிச்சம் இருந்தது.

“எனக்கு நீ தான் வேணும் ப்ளேக்கி!”

“நான் இங்க தானே இருக்கேன் துரை”

“நீ தான்னா, இந்த ப்ளேக்கி எனக்கே எனக்கு சொந்தமா வேணும்னு அர்த்தம். வேற யார் கூடவும் பங்கு போட்டுக்காம எனக்கே வேணும்னு அர்த்தம்”

“அதெப்படி முடியும்? நான் எங்காத்தாவுக்கு தானே சொந்தம்! உங்களுக்கு எப்படி சொந்தமாக முடியும்?”

“முடியும் ப்ளேக்கி”

“எப்படி துரை?”

“அந்த முத்துவ விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ப்ளேக்கி! அப்படி பண்ணிக்கிட்டா நீ என்னோட சொந்தமாகிருவ. அதுக்கப்பறம் யார் கிட்டயும் உன்னை விட்டுக் குடுக்க மாட்டேன்” அவள் விரல்களை வருடியவாறே சொன்னான் எட்வர்ட்.

“க…கல்யாணமா? உங்களையா?” நாக்கு உலர்ந்து போனது அவளுக்கு. ஐந்து நாட்களாக அவன் பாராமுகத்தால் சரியாக உறங்காதது, சாப்பிடாதது எல்லாம் சேர்ந்து கொள்ள கண்ணை கட்டி மயக்கத்தில் தள்ளியது அவளை.

பயந்து போனான் எட்வர்ட்.

“ப்ளேக்கி! என்னாச்சு?” மயங்கி தன் மேல் சரிந்து கிடந்தவளை உலுக்கினான். கன்னத்தை வேகமாக தட்டினான். மயக்கம் தெளியவில்லை. அப்படியே அவளை கட்டிலில் படுக்க வைத்தவன், குளியலறைக்கு ஓடி சென்று நீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

மெல்ல அசைவு வந்தது அவளிடம்.

“ப்ளேக்கி” மீண்டும் கன்னத்தைத் தட்டினான் எட்வர்ட்.

“விடுங்க துரை! வலிக்குது”

மெல்ல எழுந்து அமர்ந்தவள்,

“இந்த மாதிரிலாம் கல்யாணம் அப்படி இப்படின்னு என் கிட்ட விளையாடாதீங்க துரை!” என்றாள்.

இடுப்பில் கை வைத்து அவளை முறைத்த எட்வர்ட்,

“இன்னிக்கு நைட் என்ன சாப்பிட்ட ப்ளேக்கி?” என கேட்டான்.

“ஒன்னும் சாப்புடல!”

“ஏன்?”

“நீங்க சாப்புடாம, நான் மட்டும் எப்படி சந்தோஷமா சாப்புடுவேன்?” கோபமாக கேட்டாள்.

கட்டிலில் இருந்து அவளை எழுப்பி நிறுத்தியவன், கைத்தாங்கலாக அடுப்படிக்கு அழைத்து சென்றான். நாற்காலியைக் காட்டியவன்,

“உட்காரு ப்ளேக்கி” என அதட்டினான்.

அலமாரியில் இருந்து அன்னாசி ஜாமால் செய்திருந்த பிஸ்கட்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தவன், சூடாக தேநீர் கலக்கி கப்பில் ஊற்றினான்.

“சாப்பிடு ப்ளேக்கி”

“துரையும் சாப்புடுங்க”

இருவரும் அமைதியாக பிஸ்கட்டை சாப்பிட்டு, டீ அருந்தினார்கள்.

“நான் மறுபடியும் அதே விஷயத்த கேக்க போறேன் ப்ளேக்கி! மயக்கம் போட மாட்டல்ல?”

இல்லை என தலையாட்டினாள்.

“என்னை கல்யாணம் பண்ணிக்க ப்ளேக்கி, ப்ளீஸ்”

“அப்போ முத்து மாமா?”

“முத்து மாமா உன் கிட்ட பேசலைனா, இப்படி முகம்லாம் வீங்கி போகற அளவுக்கு அழுவியா?”

“இல்லையே, அழமாட்டேனே!”

“முத்து மாமாவுக்கு அடி பட்டா உனக்கு பட்ட மாதிரி பதறுவியா?”

கொஞ்ச நேரம் யோசித்தவள்,

“பாவப்படுவேன். ஆனா பதற மாட்டேன்னு நினைக்கறேன் துரை”

“முத்து மாமா முத்தா குடுத்தா வாங்கிக்குவியா ப்ளேக்கி?”

“சீச்சீ! இதென்ன கர்மம். அதெல்லாம் வாங்கிக்க மாட்டேன்” முகத்தை சுளித்தாள்.

“அப்படினா நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்!”

மறுத்துப் பேச வந்தவளை,

“ஆத்தா என்ன சொல்லி உன்னை இங்க அனுப்பி வச்சாங்க?” என கேட்டான்.

“துரை சொன்ன பேச்சு கேட்டு நடக்கனும்னு சொன்னாங்க. துரைக்கிட்ட நல்ல பேரு எடுக்கனும்னு சொன்னாங்க”

“அப்போ நான் சொன்ன பேச்ச கேளு ப்ளேக்கி. என்னைக் கல்யாணம் பண்ணிக்க”

“உங்கள கல்யாணம் பண்ணிகறது தான் ஆத்தா சொன்ன நல்ல பேரு எடுக்கறதா துரை?”

சில நிமிடங்கள் அமைதியாய் தலையை கோதி நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான் எட்வர்ட். பின் அவளது தாடையைப் பற்றி நிமிர்த்தி அவள் கண்களுக்குள் உற்று பார்த்து,

“ஆமா ப்ளேக்கி!” என்றான்.

“அப்படினா சரி துரை. நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கறேன்” என ஒத்துக் கொண்டாள்.

“நாம கல்யாணம் செஞ்சிக்கற வரைக்கும், இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது. சரியா?”

“அக்காவுக்கு கூடவா?”

“முக்கியமா அக்காவுக்குத்தான் தெரிய கூடாது”

“ஹ்ம்ம் சரி துரை”

“இப்போ கல்யாண ஒப்பந்தம் போட்டுக்கலாமா ப்ளேக்கி?”

“எப்படி துரை”

நெருங்கி அமர்ந்தவன், இந்த தடவை அவள் விழித்திருக்கும் போதே கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“இப்படிதான்” சிரித்தான்.

“எச்சி வைக்காதீங்க துரை!” கன்னத்தை துடைத்துக் கொண்டாள் சுப்பு.

அவள் முகம் போன போக்கில் வாய் விட்டு சிரித்த எட்வர்ட்,

“மை ஸ்வீட் லிட்டல் ப்ளேக்கி” என கொஞ்சினான்.

“உனக்கு ஒன்னு தெரியுமா ப்ளேக்கி? என்னை கல்யாணம் செஞ்சிகிட்டா, இந்த அடிமைக்கு நான் அடிமை!” என்றவன் மனம் விட்டு சிரித்தான்.

அன்று நடந்ததை நினத்தவாறே அவனை விழி அகலாது பார்த்திருந்தாள் சுப்பு.

“நல்லா பாத்துட்டியா ப்ளேக்கி? கண்ணு, மூக்குலாம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கா?” கண்ணை திறக்காமல் கேட்டான் எட்வர்ட்.

“நான் உங்கள பாக்கல துரை. மூக்க மட்டும்தான் பாத்தேன்”

“அந்த மூக்கு என் முகத்துல இல்லாம, எதிர் சீட்டுக்காரன் முகத்துலயா இருக்கு? மூக்க பார்த்தாலும் என்ன பார்த்த மாதிரிதான்” கண்களைத் திறந்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“ஆம்மா, உங்க முகத்தை தான் பார்த்தேன்! உங்களுக்கு என்ன குறை, ஏன் என்னைக் கல்யாணம் கட்டிக்க கேக்கறீங்கன்னு பார்த்தேன். எப்படி முறைச்சு முறைச்சு பார்த்தாலும் எந்த குறையும் என் கண்ணுக்கு தெரியலையே” பாவமாக சொன்னாள்.

“குறை இருக்கறவன் தான் உன்னை கட்டிக்கனுமா? அப்படி பார்த்தா முத்துவுக்கு என்ன குறை?”

“முத்து மாமாவ நீங்க பாத்தது இல்லையே! அவர கட்டிக்கிட்டா நான் பொட்டு வைக்கவே தேவையில்ல. அவரு கன்னத்துல என் நெத்திய வச்சு தேய்ச்சா போதும், பொட்டு வந்துரும். அம்புட்டு கரேல்னு இருப்பாங்க.”

“யாரு கன்னத்துலயும் உன் நெத்திய வச்சு தேய்க்க வேணாம்” கோபமாக சொன்னான் எட்வர்ட்.

“இன்னிக்கு கோபபடக் கூடாது துரை. வருஷம் முழுக்க கோபம் வரும்”

“அப்போ அந்த முத்துவ பத்தி பேசாதே!”

“இது என்னடா கதையா இருக்கு! அக்கடானு இருந்தவ கிட்ட முத்து மாமா கதைய எடுத்தது நீங்க தானே துரை. இப்போ எதுக்கு கோபப் படறீங்க?” குரலே எழும்பவில்லை.

“சரி ப்ளேக்கி! இனிமே அவன பத்தி நானும் பேச மாட்டேன், நீயும் பேச கூடாது. சரியா? இப்போ என் முகத்த பார்க்காம படத்தைப் பாரு”

“ஹ்ம்ம் சரி” என முனகியவளை,

“நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே” என எம்ஜிஆர் அழைத்து தன்னுள் இழுத்துக் கொண்டார்.

படம் முடிந்தவுடன் மதிய உணவு வாங்கிக் கொடுத்தான் எட்வர்ட். அவள் விரும்பி சாப்பிட்ட லட்டுவை மறக்காமல் வாங்கிக் கொடுத்தான்.

ஜவுளி கடைக்கு அழைத்து சென்று அவள் அணிந்து கொள்ள நல்ல தரமான உடைகளை வாங்கிக் கொடுத்தான். இருவருக்கும் தேர்ந்தெடுக்க தெரியாததால் அவளுக்கு ஏற்ற வர்ணங்களை மட்டும் அவன் சொல்ல, கடையில் வேலை செய்யும் பெண்ணே அழகாக தேர்ந்தெடுத்து கொடுத்தார். வீட்டில் அணிந்து கொள்ள மெக்ஸி, ப்ளவுஸ் என வாங்கியதைப் பார்த்து,

“இதெல்லாம் நான் போட மாட்டேன்” என மறுத்தாள் சுப்பு.

“இனிமே போட்டு பழகிக்க சுபூ! இது போட்டா இடுப்பு தெரியாது, தாவணி மாதிரி விலகாது. உனக்கு கம்பர்டபளா, ஹ்ம்ம்ம் இதமா, வசதியா இருக்கும்” எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தான். அருகிலே இருந்த கடைப்பெண் எட்டாவது உலக அதிசயமாக இவர்கள் இருவரையும் பார்த்தாள்.

“வேற எதாச்சும் வேணுமா ப்ளேக்கி?” கடையை விட்டு வெளியே வந்தவுடன் கேட்டான் எட்வர்ட்.

“துரை” வெட்கத்துடன் குழைவாக வெளி வந்தது குரல்.

அதிசயமாக பார்த்தான் எட்வர்ட்.

“சொல்லு ப்ளேக்கி! என் கிட்ட என்ன வெட்கம்?”

“இன்னிக்கு படத்துல பத்மினி ஆடல் காணீரோ பாட்டுக்கு ஒரு ஜிமிக்கி போட்டுருந்தாங்கல, அது மாதிரி வாங்கி தறீங்களா? ரொம்ப விலையா இருந்தா வேணாம் துரை” அவள் காதில் வெறும் விளக்கமாற்று குச்சியைத் தான் போட்டிருந்தாள்.

“ஜிமிக்கினா?”

“காதுல போடறது துரை” கண்கள் மின்ன சொன்னாள்.

“நீ இவ்வளவு ஆசையா உரிமையா கேட்கறப்ப முடியாதுன்னு சொல்லுவேனா? ஆனா ஒரு சந்தேகம் ப்ளேக்கி”

“என்னது துரை?”

“அவங்க ஆடனத பார்காம அவங்க காதையா பார்த்துட்டு இருந்த?” சிரித்தான்.

“ஆங்! ஜிமிக்கி அப்படி டாலடிக்கவும் என் கண்ணு அவங்க காதுல மட்டும்தான் நின்னுச்சு” சிரித்தாள் சுப்பு.

செட்டியார் நகை கடைக்கு அழைத்து சென்றவன், அவள் கடைக்காரரை ஒரு வழியாக்கி தேர்ந்தெடுக்கும் வரை பொறுமையாகவே அமர்ந்திருந்தான். ஜிமிக்கி மட்டும் இல்லாது வளையல், சங்கிலி, நெக்லஸ் என கடைக்காரரின் உதவியுடன்  அவன் தேர்ந்தெடுத்து வாங்கவும், சங்கடமாக தடுத்தாள் சுப்பு.

“வேணா துரை, எதுக்கு இதெல்லாம்! ஜிமிக்கி மட்டும் போதும்”

“உனக்கு வாங்கல. என் பொண்டாட்டிக்கு வாங்கறேன். நீ பேசாம இரு” என சொல்லிவிட்டான்.

பொருட்களை வாங்கி முடித்ததும் அவள் முகத்தைப் பார்த்தவன்,

“ப்ளேக்கி! தயாராகிட்டியா? போகலாமா?”

முகத்தில் கலக்கத்துடன் தலையை ஆட்டினாள் அவள். ஜீப்பில் பொருட்களை ஏற்றி, அடுத்து சுப்புவை அவன் அழைத்து சென்ற இடம் சைண்ட் அண்ட்ரூ தேவாலயம்.

தேவாலயத்துக்கு உள் நுழையும் முன், ஏற்கனவெ அணிந்திருந்த வெள்ளை சட்டையின் மேல் கருப்பு கோட்டை அணிந்துக் கொண்டான் எட்வர்ட். சுப்புவை அருகே அழைத்தவன், வாங்கி வந்திருந்த வெள்ளை நிற வேய்லை (veil) அவளுக்கு அணிவித்துவிட்டான். அவளும் தான் ஏற்கனவே வெள்ளை நிற பாவாடை தாவணியில் இருந்தாளே.

தேவாலயத்தின் உள்ளே நுழையும் போதே, அவளுக்கு வெடவெடவென வந்தது. அவள் நிலை அறிந்து அவளின் கையை இருக பிடித்துக் கொண்டான் எட்வர்ட்.

“பயப்பட ஒன்னும் இல்லை ப்ளேக்கி. நான் தான் பக்கத்துலயே இருகேன்ல” தைரியமூட்டினான்.

அவர்கள் இருவரையும் எதிர்பார்த்து வெள்ளைக்கார பாதிரியார் ஒருவர் காத்திருந்தார். எட்வர்டைப் பார்த்து புன்னகைத்தவர்,

“எட், ஆர் யூ சுவர் யூ வாண்ட் டூ திஸ்?”( Ed, are you sure you want to do this?) என கேட்டார்.

“எஸ் சுவர் எஸ் சன் ரைசஸ்” (as sure as sun rises)என சொல்லி புன்னகைத்தான் எட்வர்ட்.

இவர்கள் இருவரும் பேசுவதை, ஒன்றும் புரியாமல் பார்த்திருந்தாள் சுப்பு.

இருவரையும் அருகருகே நிற்க வைத்தவர், பைபிளிலிருந்து சில வாசகங்களைப் படித்தார்.

பின்பு எட்வர்டை நோக்கி,

“Do you take  Subbulakshmi as your lawful wife, to have and to hold, from this day forward, for better or for worse, for richer or for poorer, in sickness and in health, to love and cherish until death do you part?” (நீ சுப்புலெட்சுமியை உனது சட்டப்பூர்வமான மனைவியாக ஏற்றுக் கொள்கிறாயா, அவளை ஏற்றுக்கொண்டு, மரணம் உன் உயிரை பிரிக்கும் வரை, இன்றிலிருந்து இனி வரும் நாள் வரை, நல்லதோ கெட்டதோ, வசதியிலோ ஏழ்மையிலோ, நோய் நொடியிலோ நல்ல உடல் நலத்திலோ, அவளை காதலித்து(அன்பு செய்து) பாதுகாப்பாயா?)

“ஐ டூ” என பதிலளித்தான் எட்வர்ட்.

அதே கேள்வியை சுப்புவைப் பார்த்துக் கேட்டார் அவர்.

அவள் அருகே குனிந்த எட்வர்ட்,

“நான் சொல்லிகுடுத்தேன்ல, அதை சொல்லு ப்ளேக்கி” என முணுமுணுத்தான்.

பாதிரியாரை நேராக நோக்கி குரல் நடுங்க,

“ஐடோ” என்றாள் சுப்பு.

வாங்கி வந்திருந்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்தவன், மற்றொரு மோதிரத்தை அவளிடம் நீட்டினான்.

“ஹ்ம்ம், போட்டு விடும்மா” என்றான் எட்வர்ட்.

கை நடுங்க அவன் விரல்களில் மோதிரத்தை அணிவித்தாள் சுப்பு.

“நவ் யூ மே கிஸ் யுவர் ஃப்ரைட்”(now you may kiss your bride)

அவள் முகம் மூடி இருந்த வெள்ளை துணியை மேலேற்றியவன், மெல்ல அவள் அருகே குனிந்து அவள் உதட்டில் தன் உதட்டை ஒற்றி எடுத்தான்.

அதிர்ந்து போய் விழித்த சுப்புவைப் பார்த்து அழகாக முறுவலித்தவன்,

“ஐ லவ் யூ, ஒன்லி யூ, மிசஸ் ஸ்மித்” என்றான்.