IMTP–EPI 17

அத்தியாயம் 17

 

ஜீப்பில் வீட்டுக்கு வரும் வழியிலே தூங்கி வழிய ஆரம்பித்திருந்தாள் சுப்பு. கண் அயர்வதும், கரடு முரடான சாலையில் ஜீப் தூக்கிக் போடும்போது கண் விழிப்பதுமாக தள்ளாடினாள் அவள்.

“ப்ளேக்கி, கிட்ட நகர்ந்து என் கையை இறுக்கி பிடிச்சுட்டு தோளுல சாஞ்சிக்க.” பாதி கதவு தான் இருக்கும் அந்த ஜீப்பில். அவள் தூக்க கலக்கத்தில் விழுந்து விடுவாளோ என பயந்தான் எட்வர்ட்.

“பரவாயில்ல துரை. உங்களுக்கு ஜீப்பு ஓட்ட கஸ்டமா இருக்கும் ”

“காடு மலைலாம் சுத்தி வரனும், அதோட தனிக்கட்டைனால ஜீப் தான் வசதின்னு இருந்துட்டேன். இனி நமக்கு கார் வாங்கிரலாம் ப்ளேக்கி. இப்போ கிட்ட வா! தூக்க கலக்கத்துல எங்கயாச்சும் விழுந்து வச்சிறாத!”

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தப்படியே மறுகையால் அவளை தன் தோள் மேல் சாய்க்க முயற்சித்தான். அவளோ அவன் நெஞ்சளவு தான் வந்தாள். சிரிப்புடன் காரை ஓரம் கட்டியவன், அவள் காலை மடக்க சொல்லி தன் மடியில் சாய்த்துக் கொண்டான். மெதுவாகவே ஓட்டி வந்தவன், வீடு சேரும் போது இரவாகி இருந்தது.

கார் நின்றதும், அவளாகவே எழுந்துக் கொண்டாள் சுப்பு. கண்களைத் தேய்த்து விட்டவள்,

“அதுக்குள்ள துரை பங்களா வந்துருச்சா?” என கேட்டாள்.

அதற்கு அவனிடம் முறைப்பு தான் பதிலாக கிடைத்தது.

“ஏன் முறைக்கறீங்க துரை?”

“இனிமே இது துரை பங்களா இல்ல, நம்ம பங்களா. எங்க சொல்லு பார்ப்போம்!”

“ஹ்ம்ம்.. நம்ம பங்களா”

“கரேக்ட்! ஜீப்புல இருந்து இப்ப இறங்காத ப்ளேக்கி. நான் பொருளெல்லாம் வச்சிட்டு, உள்ள லைட் போட்டுட்டு வர வரைக்கும் இங்கயே உக்காந்திருக்கனும்” மிரட்டி விட்டுப் போனான்.

திரும்பி வந்தவன் அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.

“நான் முழுச்சி தானே இருகேன் துரை, எதுக்கு தூக்கறீங்க? விடுங்க நானே நடப்பேன்”

“எங்க ஊருல கல்யாணம் முடிஞ்சதும் புருஷன், பொண்டாட்டிய வீட்டுகுள்ள தூக்கிட்டு வரனும்னு சாங்கியம் இருக்கு. அத தான் நான் செய்யறேன்”

“எதுக்கு அந்த சாங்கியம்?” அவன் நெஞ்சில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு கதை கேட்டாள் சுப்பு.

“அது வந்து, வீட்டு வாசல்ல தீய சக்திங்க வாசம் செய்யுமாம். புதுசா கல்யாணம் ஆகி வர பொண்ணு மேல அந்த சக்தி படிஞ்சு அவளுக்குக் பிள்ளை பொறக்க விடாம செஞ்சிருமாம்.”

அந்த கதையைக் கேட்டு பயந்தவள் இன்னும் அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

“பயமா இருக்கு துரை. பொண்ண மட்டும் ஏன் புடிக்குது? மாப்பிள்ளைய புடிச்சிக்க வேண்டியது தானே. அதுங்களுக்கு கூட நாங்கன்ன இளப்பம் தான்.”

“நான் இருக்கறப்ப எந்த காத்து கருப்பு உன்னை பிடிக்கும்? பயப்படாத ப்ளேக்கி. அதோட அந்த காலத்துல பெத்தவங்க வீட்ட விட்டு போறதுக்கு பொண்ணுங்களுக்கு மனசு வராதாம். அதனால அவங்க கிட்ட இருந்து பிரிச்சு பொண்ண தூக்கிட்டு அவன் வீட்டுக்கு போயிருவானாம் புருஷன்காரன். அதையும் காரணமா சொல்லூறாங்க ப்ளேக்கி”

“அப்படினா நீங்களும் என்னை ஆத்தாகிட்ட இருந்து பிரிச்சு கல்யாணம் பண்ணி வீட்டுக்குள்ள தூக்கிட்டுப் போறீங்களா துரை?” அவள் சாதாரணமாகத் தான் தன் சந்தேகத்தைக் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே சில கணங்கள் நின்றான் எட்வர்ட். விநாடிக்குள் தன்னை சமாளித்தவன்,

“ப்ளேக்கி, என்னை கல்யாணம் பண்ணதும் நீ இன்னும் புத்திசாலியா ஆகிட்ட தெரியுமா?” என கன்னத்து குழி காட்டி சிரித்து அவளை திசை திருப்பினான்.

அவளது கவனம் அருகில் தெரிந்த அவன் கன்னத்துக்கு மாறியது.

“உங்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி குழி விழுகுதோ தெரியல. துரை ரொம்ப அழகு!”

அதற்குள் வீட்டின் உள்ளே வந்திருந்தார்கள். அவன் இன்னும் அவளை இறக்கி விடாமல் இருக்கவும்,

“துரை, இறக்கி விடுங்க. கை வலிக்க போகுது” என்றாள் சுப்பு.

“நம்ம ரூம்ல போய் தான் இறக்கி விடனும்” என சொல்லியவன் ரூமில் நுழைந்து கட்டிலின் மேல் அவளை மெதுவாக தூக்கிக் போட்டான்.

பொத்தென விழுந்தவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது. 

“இப்போ சாங்கியம் முடிஞ்சதா துரை?”

“இன்னும் ஒன்னே ஒன்னு, ரொம்ப முக்கியமான சாங்கியம் மிச்சம் இருக்கு ப்ளேக்கி!” அழகாக முறுவலித்தான்.

“இன்னிக்கு முழுக்க நீங்க ரொம்ப சிரிக்கறீங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. சுத்திப் போடனும்.”

கட்டிலில் இருந்து எழுந்து அவன் அருகில் வந்தவள் அவன் முகம் வழித்து நெட்டி முறிந்தாள்.

“நீயும் தான் சிரிச்ச முகமாவே இருக்க இன்னைக்கு.” என்றவன் அவள் செய்தது போலவே அவளுக்கு செய்தான்.

“இப்போ சொல்லுங்க துரை, இன்னும் என்ன சாங்கியம் இருக்கு? செஞ்சிட்டு நான் போய் தூங்கனும். கண்ணு சொக்குது.”

“முதல்ல நீ போய் குளிச்சிட்டு வருவியாம். அப்புறமா நாம அந்த சாங்கியத்த செய்வோமாம்”

“வேணா, குளிக்கலாம் மாட்டேன்! குளிச்சா தூக்கம் ஓடிப் போயிரும். அதனால குளிக்காம செஞ்சிரலாம்” அவன் தாடையைப் பற்றி கெஞ்சினாள் சுப்பு.

இடுப்பில் கை வைத்து முறைத்தான் எட்வர்ட்.

“இன்னும் புது வருஷம் முடியல, மொறைக்காதீங்க! நான் போறேன் குளிக்க!”

“இங்கயே குளி, நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவன் வெளியில் சென்றான் சுடு தண்ணீர் எடுத்து வர.

“அங்க வீட்டுல செய்யற மாதிரி தண்ணிய மட்டும் மொண்டு தரையில ஊத்திட்டு குளிச்சிட்டேனு சொல்லிரலாமா? இல்ல வேணாம். ஆத்தா மாதிரியே அர்ணாக்கயிறு நனையாம எப்படிடி குளிச்சன்னு துரையும் மொத்திட்டாருன்னா! அடச்சை! இந்த குளியல கண்டுபிடிச்சவன, ஜோனிய விட்டு கடிக்கவிடனும்.” முனகியபடியே மாற்று உடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குப் போனவள் எட்வர்ட் கொடுத்த சுடுதண்ணீரில் குளித்து விட்டு வந்தாள். இவள் வெளியே வந்ததும் எட்வர்ட் குளிக்கப் போனான்.

அவன் திரும்பி வந்து பார்க்கும் போது அறையில் சுப்பு இல்லை. அவளைத் தேடி அடுப்படிக்கு சென்றவன் அவள் எப்பொழுதும் போல் அவள் இடத்தில் முடங்கி இருப்பதைப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் அருகில் வந்து குனிந்தவன், அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான்.

“இன்னிக்கு என்னாச்சு துரைக்கு, என்னை பொசுக்கு பொசுக்குன்னு தூக்கறீங்க? உங்க ஜாதியில கல்யாணம் பண்ணா பொண்டாட்டிய தூக்கிட்டே சுத்துவாங்களா? அப்போ இனிமே என்னை நடக்க விடமாட்டீங்களா?” ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டாள்.

மீண்டும் அவளை கட்டிலில் விட்டவன்,

“இனிமே நீ இங்கதான், என் கூட தான் படுக்கனும்” என கண்டிப்பாக சொன்னான்.

“அதெல்லாம் முடியாது. அக்காவுக்கு தெரிஞ்சா கொட்டி கொட்டியே கொன்னுருவாங்க. உங்க கூட படுத்தா மேல கீழ கைப்படும். அப்புறம் என் கற்பு கட்டி கரைஞ்சி போயிரும். நான் என் எடத்துல தான் படுப்பேன்” என அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஏ ப்ளேக்கி! அழாத ப்ளிஸ். சொன்னா கேளு”

அவன் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. மிரட்டி பார்த்தான் அதற்கும் அசையவில்லை. கோபத்தில் கத்திக் கூட பார்த்தான், அதற்கும் மசியவில்லை. கடைசியில் அவன் தான் அடுப்படியில் அவள் பக்கத்தில் படுக்கும் படி ஆனது.

“நீங்க இப்ப ஏன் இங்க வந்து படுக்கறீங்க துரை? உங்க ரூம்புலயே படுக்க வேண்டி தானே.”

தன் பக்கத்தில் படுக்கை விரிப்பை விரித்துப் படுத்திருந்தவன், கைகளைப் பற்றியவாறு கேட்டாள் சுப்பு.

“இன்னிக்கு நம்மள கல்யாணம் பண்ணி வச்சாரே ஃபாதர், அவர் கிட்ட வாக்கு குடுத்துருக்கேன் ப்ளேக்கி”

“என்னன்னு துரை?”

“எப்பவும் உன்னை பிரிய மாட்டேன்னு. அப்போ நீ இங்க படுத்தா நானும் இங்கதானே படுக்கனும்!”

ஒருக்களித்துப் படுத்திருந்த சுப்பு, அவனின் இடது கையைத் தனக்குள் பொத்தி வைத்திருந்தாள். அவனோ கையை அவளிடம் கொடுத்து விட்டு மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்திருந்தான்.

“ஓ! அப்போ வெள்ளை சாமி(பாதிரியார்) என் கிட்ட என்னமோ கேட்டாரே அது இதுதானா?”

“ஆமா ப்ளேக்கி. அவர் கேட்டதுக்கு என்னை விட்டுப் பிரிய மாட்டேன்னு நீ வாக்கு குடுத்துருக்க. குடுத்த வாக்க காப்பாத்துவியா?”

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் சுப்பு. அவள் முகம் பார்த்தவாறு ஒருக்களித்துப் படுத்தவன்,

“என்ன ப்ளேக்கி ஒன்னும் சொல்ல மாட்டிக்கற?” என கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டான்.

“வாக்கு குடுத்தா காப்பாத்தனும்ன்னு அப்பாரு சொல்லிருக்காரு. வெள்ள சாமிக்கிட்ட சொன்ன மாதிரி நானா உங்கள விட்டுப் போவமாட்டேன் துரை”

“தேங்க் காட்! இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ப்ளேக்கி? ரொம்ப நாளா போட்டு அழுத்துன பாரம் விலகிப் போய் மனசு காகிதமா பறக்கற மாதிரி ஒரு ஃபீல். ஐ ஃபீல் சோ ப்ளேஸ்ட் ப்ளேக்கி” அழகாய் புன்னகைத்தான் எட்வர்ட். 

“அப்படினா துரை?”

“நான் ரொம்ப குடுத்து வச்சவன்னு அர்த்தம்”

“இல்ல, நான் தான் ரொம்ப குடுத்து வச்சிருகேன். வெள்ளையா இருக்கற துரை எனக்கு புருஷனா ஆயிட்டாறே, நான் தான் ப்ளெஸ்டு.”

எழுந்து அமர்ந்தவள், கைகள் இரண்டையும் வாயருகே கொண்டு வந்து ஊதுவது போல் வைத்து,

“அலமு டீ அலமு! என்னைப் பாத்து வெள்ளைக் கார துரை குதிரைல வருவான், வாய பொளந்து காத்திருன்னு கிண்டல் பண்ணல! இப்ப பாரு எங்க வெள்ளைக்கார துரை ஜீப்புல வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு” என உரக்கக் கத்தினாள்.

எட்வர்ட் படுத்தபடியே அவளைப் பார்த்து சிரித்தான்.

“இங்கிருந்து கத்துனா உன் கூட்டாளிக்கு கேக்குமா ப்ளேக்கி?”

“காத்தோட சேதி போயிரும் துரை. ஆத்தாவுக்கும் அப்படிதான் நான் சேதி அனுப்புவேன் “

“ஓ!”

“இன்னேரம் அலமு கல்யாணம் பண்ணி போயிருப்பா. அவளுக்கு மட்டும் நான் துரைய கல்யாணம் பண்ணிருக்கேன்னு தெரிஞ்சா மயக்கம் அடிச்சு விழுந்துருவா” கலகலவென சிரித்தாள் சுப்பு.

பின் சம்மணம் இட்டு வசதியாக அமர்ந்தவள், அவனையே வைத்தக் கண் வாங்காது பார்த்தாள்.

“இப்ப எதுக்கு இந்தப் பார்வை?” புன்னகையுடன் கேட்டான் எட்வர்ட்.

இன்னும் அவன் அருகில் நெருங்கியவள்,

“நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு என்னால இன்னும் நம்ப முடியல. கனவு மாதிரி இருக்கு” குரலில் இன்னும் ஆச்சரியம் இருந்தது.

அதற்கும் புன்னகை தான் அவன் பதிலாக இருந்தது.

“நான் உங்கள தொட்டுப் பார்க்கவா துரை? நடக்கறது எல்லாம் கனவா நினவான்னு தெரிஞ்சிக்க தான்”

“ஹ்ம்ம் சரி”

கை நீட்டி அவன் முடியைத் தொட்டுப் பார்த்தவள், கையை இறக்கி நெற்றி, காது, மூக்கு, கன்னம், கண்கள், உதடு, கழுத்து என தொட்டுப் பார்த்தாள். அவன் நெஞ்சில் கை வைக்க வந்தவளை தடுத்தவன்,

“ப்ளேக்கி! உனக்கு மட்டும் இல்ல எனக்கும் கற்பு கட்டி இருக்கும்மா. இங்கெல்லாம் கை வச்சா என்னோடதும் கரைஞ்சி போயிரும்” என சிரித்தான்.

“நெஜமாவா, ஆம்புளைங்களுக்கும் இருக்கா?”

“எல்லோருக்கும் இருக்கான்னு தெரியாது ப்ளேக்கி! ஆனா எனக்கு இருக்கு! உங்க அக்கா உன் கிட்ட பேசனத நானும் கேட்டேன் ப்ளேக்கி. அவங்க என்ன சொன்னாங்க? கட்டன புருஷன தவிர வேற யாரும் தொட கூடாதுன்னு தானே?”

“ஆமா, ஆமா அப்படிதான் சொன்னாங்க”

அவள் கையைப் பிடித்து அவள் மோதிரத்தை வருடியவன்,

“தாலி கட்டலைனாலும், எங்க முறைப்படி மோதிரம் போட்டு உன்னை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன் ப்ளேக்கி. அப்போ நான் யாரு உனக்கு?”

“என்னோட புருஷன்”

“நீ யாரு எனக்கு?”

“உங்க பொண்டாட்டி”

“அப்போ நான் உன்ன தொடலாமா?”

“தொடலாம்”

“நீ என்ன தொடலாமா?”

“தொடலாம்”

“இப்ப சொல்லு நான் தொட்டா உன்னோட கற்பு கட்டி கரைஞ்சிருமா?”

“இல்ல கரையாது”

“இனிமே ரூமுல என் பக்கத்துல படுக்க மாட்டேன்னு அழுது அடம் பண்ணுவியா?”

இல்லை என தலையாட்டினாள்.

“நீ ரொம்ப புத்திசாலி ப்ளேக்கி. சொல்லி குடுத்தா அழகா புரிஞ்சிக்கற.”

“சரி வாங்க துரை, நம்ம ரூமுக்குப் போலாம்”

அவளாகவே சம்மதிக்கும் வகையில் பேசி புரியவைத்தான் எட்வர்ட்.

“இன்னிக்கு இங்கயே படுத்துக்கலாம். நாளைக்கு நம்ம ரூமுக்கு போகலாம். சரியா?”

முதல் நாளே மாற்றத்தை ஏற்க கஸ்டப்படுவாள் என அவள் வழிக்கே வந்தான் எட்வர்ட். அவனின் முடிவு சரிதான் என்பது போல அழகிய புன்னகையில் மலர்ந்தது அவள் முகம்.

அவளாகவே அவன் புஜத்தில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

“துரை, குளிச்சதும் இன்னொரு சாங்கியம் செய்யனும்னு சொன்னீங்களே, என்னது அது?”

“அது இப்போ வேணா ப்ளேக்கி. கொஞ்ச நாள் கழிச்சு வச்சிக்கலாம்” விட்டத்தை வெறித்தவாறு சொன்னான்.

“நீங்க சொன்னா சரிதான் துரை. ஆனா சாங்கியம் பேரு மட்டும் சொல்லுங்க”

“அந்த சாங்கியம் பேரு ஃபர்ஸ்ட் நைட்”

“பர்ஸ்ட்டு நைட்டுன்னா?”

“முதல் இரவு”

“ஓ மொத ராத்திரியா?” சாதாரணமாக கேட்டாள் சுப்பு.

“அது பத்திலாம் உனக்கு தெரியுமா ப்ளேக்கி?” விட்டத்தில் இருந்து பார்வையை விலக்கி சுவாரசியமாக அவளைப் பார்த்தான் எட்வர்ட்.

மிதப்பாக அவனைப் பார்த்தவள்,

“நானும் அலமுவும் இதப் பத்தி நிறைய பேசிருக்கோம்” என்றாள்.

“ஓ நிறைய பேசி இருக்கீங்களோ! எனக்கும் கொஞ்சம் சொல்லிக் குடேன்”

“மொத ராத்திரி அப்போ பொண்ணு பால் சொம்பு எடுத்துட்டு மாப்பிள்ளை கிட்ட போவா.

“போவா, அப்புறம்?”

“அவர் பாதி பால பல்லு படாம குடிச்சுட்டு இவ கிட்ட குடுப்பாரு. “

“குடுத்ததும்?”

“இவளும் குடிச்சு வாய தொடச்சிட்டு அவரு காலுல விழுந்து கும்புடுவா”

“கும்பிட்டுட்டு?”

“அவரு தீர்க்காயுசா இருமான்னு தூக்கி விடுவாரு”

“அப்புறம்?”

“விடிய விடிய ரெண்டு பேரும்!”

“ரெண்டு பேரும்?”

“சொல்லி முடிக்கற வரைக்கும் நடுவுல பேசாதீங்க துரை! எனக்கு முக்கியமான கட்டம் மறந்து போயிரும்”

“சரி, பேசல! நீ சொல்லு ப்ளேக்கி”

“விடிய விடிய , சூரிய காந்தி பூ இருக்குல்ல, அத இவ ஒரு கையிலும், அவரு ஒரு கையிலும் வச்சிக்குவாங்க. அந்த ரெண்டு பூவையும் ஒட்டி வச்சி ஒட்டி வச்சி விளையாடுவாங்க. அதான் துரை பூவும் பூவும் முத்தா குடுக்கற மாதிரி ஒட்ட வைக்கனும். இப்படி” என சொல்லி இரு கைகளையும் குவித்து முத்தம் கொடுப்பது போல செய்து காட்டினாள்.

“அவ்வளவு தான், மொத ராத்திரி முடிஞ்சிரும் துரை”

எட்வர்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரித்தவனை கோபமாகப் பார்த்தாள் சுப்பு.

“ஏன் இப்ப சிரிக்கிறீங்க?”

“இத அலமுக்கு யாரு சொன்னதாம்?”

“ஏதோ படத்துல பாத்தாளாம். நாங்க ஒரு வாரமா அத பத்தி தான் பேசுனோம்”

கண்ணில் நீர் வர சிரித்தான் எட்வர்ட்.

“என்னத்த சொல்லிட்டேன்னு இன்னும் சிரிக்கறீங்க” சுதி ஏறியது அவள் குரலில்.

“இல்ல ப்ளேக்கி, நம்ம முதல் ராத்திரிக்கு சூரிய காந்திப் பூவுக்கு நான் எங்க போவேன்? நம்ம எஸ்டேட்டுல இல்லையே அது!” கவலைப் போல சொல்ல முயன்றவனுக்கு சிரிப்பு தான் பொங்கி வந்தது.

அவளுக்கு கோபம் எகிறியது.

“பத்து மாசம் கழிச்சு அவங்களுக்கு புள்ள பொறக்குமா இல்ல பூ பொறக்குமா ப்ளேக்கி?” சிரிப்பினூடே திக்கி திணறி கேட்டான் எட்வர்ட்.

“ஆங்! மண்ணாங்கட்டி பொறக்கும்! உங்களுக்குப் போய் சொல்லிக் குடுத்தேன் பாரு. என் புத்திய! போங்க துரை! நமக்கு மொத ராத்திரியும் வேணா, கடைசி ராத்திரியும் வேணா!”

அவனிடமிருந்து விலகி முதுகு காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள் சுப்பு.

“சரி கோவிச்சுக்காதே ப்ளேக்கி. அது என்ன முதல் ராத்திரின்னு கஞ்சத்தனம் பண்ணறது! நாம ரெண்டாவது ராத்திரி, மூனாவது ராத்திரி இப்படி ஆயிரம் ராத்திரி கொண்டாடலாம். ஆனா அதுக்கு நான் ஒரு சூரிய காந்தி தோட்டமே வாங்கனுமே” வாய் விட்டு சிரித்தால் எங்கே இன்னும் கோபித்துக் கொள்வாளோ என சத்தமில்லாமல் உடல் குலுங்க சிரித்தான் எட்வர்.

“ஒன்னும் வேணாம்”

“சரி வேணாம் விடு. என் பக்கம் திரும்பு ப்ளேக்கி. நான் பாவமில்லையா? உனக்காக தானே இங்க கொசுக்கடியில வந்துப் படுத்துருக்கேன்” கெஞ்சலாக கேட்டான் எட்வர்ட்.

அவன் புறம் திரும்பி படுத்தவள்,

“நான் சொன்னதுக்கு கெக்கேபெக்கேன்னு சிரிச்சீங்கல்ல, இப்ப நீங்க சொல்லுங்க மொத ராத்திரின்னா என்ன?” என சந்தேகம் கேட்டாள்.

அவள் கன்னத்தை வருடிக் கொடுத்த படியே,

“புருஷன் பொண்டாட்டி ஒருத்தர் மேல் ஒருத்தர் வச்சிருக்கற ஆசைய, பாசத்த, காதல தங்கள் செயலால காட்டிக்கறது தான் முதல் ராத்திரி. அதப்பத்தி தெரிஞ்சிக்க நமக்கு பல ராத்திரி இருக்கு ப்ளேக்கி.மெதுவா சொல்லி தரேன். இப்போ நீ தூங்கு. ரொம்ப களைப்பா தெரியற” என்றான்.

“சரி, நீங்களும் தூங்குங்க துரை” என்றவள் ஐந்து நிமிடங்களில் உறங்கி விட்டாள். அவள் ஆழ்ந்து உறங்கும் வரை காத்திருந்தவன், அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அவள் உச்சந்தலையில் ஆசையாக இதழ் பதித்தான் எட்வர்ட்.

“குட் நைட் மை ஸ்வீட் இன்னசன்ட் ஹனி”