IMTP–EPI 19

அத்தியாயம் 19

 

பட்டுவைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு கூடவே பயமும் வந்தது சுப்புவுக்கு.

“அக்கா!” என சொல்லி வாய் மூடுவதற்குள் பளீரென அறைந்திருந்தார் பட்டு. அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பயந்துப் போய் பார்த்தாள் சுப்பு.

அவளின் குரல் கேட்டு துயில் கலைந்து வெளியே வந்த எட்வர்ட், அடுத்த அறை விழுவதற்குள் சுப்புவைப் பிடித்து தன் பின்னால் நிறுத்தி இருந்தான்.

தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன்,

“ஹவ் டேர் யூ!” என பட்டுவைப் பார்த்து கர்ஜித்தான்.

முகம் சிவக்க, உறுத்து விழித்தவனின் கோபத்தில் சர்வாங்கமும் நடுங்கியது பட்டுவுக்கு. தன் முதுகில் ஒண்டி தேம்பிக் கொண்டிருக்கும் சுப்புவின் அழுகை வேறு அவன் கோபத்துக்கு மேலும் தூபம் போட்டது.

“என் பொண்டாட்டி மேல கை வைக்க நீ யாரு?” பட்டுவை மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மரியாதையாய் நடத்தும் எட்வர்ட், கோபத்தில் அதை எல்லாம் காற்றில் பறக்க விட்டிருந்தான்.

கை நீட்டும் அளவுக்கு வந்த ஆத்திரத்தைக் கஸ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவன் உடல் மொழி காட்டிக் கொடுத்தது.

சுப்புவைப் அப்படி ஒரு கோலத்தில் பார்த்த அதிர்ச்சியில் தான் கை ஓங்கி இருந்தார் பட்டு. அவளைக் கொட்டுவதையே பொறுத்துக் கொள்ள முடியாமல் அடைக்காக்கும் அவன் குணம் தெரிந்தும், இப்படி உணர்ச்சிவசப்பட்டு கை நீட்டி இருந்ததை நினைத்து அவரே ஆடிப்போயிருந்தார்.

அவனின் கத்தலில் பயம் பக்கென பற்றிக்கொள்ள, தன்னிச்சையாக சில அடிகள் பின்னால் எடுத்து வைத்தார் பட்டு. காதில் நுழைந்த எட்வர்டின்  வார்த்தைகள் மூளையை எட்ட சில நிமிடங்கள் பிடித்தது அவருக்கு. அந்த வார்த்தை புரிந்த வேளை, அவர் முகம் பயம் கலந்த அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

“பொண்டாட்டியா?” குரல் நடுக்கத்துடன் வெளி வந்தது பட்டுவுக்கு.

“ஆமா, பொண்டாட்டிதான். என் பொண்டாட்டி! இனிமே அவதான் உன்னோட துரையம்மா. இந்த புரூக்லேண்ட்ஸ் எஸ்டேட்டுகே துரையம்மா!”

தன் முதுகில் நடுங்கியவாறு ஒண்டிக் கொண்டிருந்தவளை, முன்னே இழுத்து அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“அழாதே ப்ளேக்கி. இனிமே யாரும் உன் மேல கை வைக்க மாட்டாங்க. அப்படி வச்சவங்க கண் காணாம போயிருவாங்க” கண்ணீரைத் துடைத்து தேற்றினான்.

பார்வை மட்டும், சொன்னது புரிந்ததா என்பது போல பட்டுவை எரித்தது.

“அக்கா இருக்காங்க, என்னை விடுங்க துரை!” பட்டுவின் முன் அவன் அணைத்திருந்தது கூச்சத்தைக் கொடுக்க நெளிந்தாள் சுப்பு.

அவள் கூச்சத்தை மதித்து அவளைத் தள்ளி நிறுத்தினாலும், கையை இறுக்கமாக பிடித்திருந்தான் எட்வர்ட்.

அவன் விலக்கியதும், பட்டுவின் பார்வை சுப்புவின் கழுத்தை ஆராய்ந்தது. அவர் தேடியது அங்கில்லாமல் முகம் மாறியது அவருக்கு.

அவரின் பார்வையைக் கண்டு கொண்ட எட்வர்ட், சுப்புவின் கையைத் தூக்கிக் காட்டினான்.

“சர்ச்சுல வச்சு மோதிரம் போட்டுருக்கேன். கையெழுத்துப் போட்டு கல்யாணத்தை பதிஞ்சிருக்கேன். நம்புறீங்களா இல்ல ஆத்து வழியா சர்ச்சுக்கு கூட்டிட்டு போகனுமா?” கிண்டலாக கேட்டான்.

‘கல்யாணமே பண்ணிக்கிட்டாங்களா? தாலி இல்லாம என்னாத்த கல்யாணமோ! திக்கு திக்குன்னு இருக்கே. இவ ஜாதிக்காரங்களுக்கு தெரிஞ்சா இத கல்யாணம்னு ஒத்துக்குவாங்களா? நாங்க தான் கூட்டி குடுத்துட்டோம்னு நம்மள உரிச்சு ஊறுகாய் போட்டுருவாங்களே! மனுஷ ஊறுகா நல்லா இருக்காதுன்னு அந்த காட்டுப் பயலுகளுக்கு யாரு விளக்கறது!’ பயப்பந்து உருண்டது அவருக்குள்.

“மத்தவங்க மாதிரி இல்லாம, உங்க இனத்துல நீங்க கொஞ்சம் புத்திசாலின்னு நினைச்சேன். அது தப்புன்னு நிரூபிச்சிட்டீங்க. இத்தனை வருசமா இங்கிருக்கேனே வேற பொம்பளைங்க யாரயாச்சும் கூட்டிட்டு வந்துருக்கேனா? அப்படிப்பட்டவன் இவ பின்னாலயே சுத்தி வரத உத்து உத்து பார்த்தீங்களே, அப்ப கூட என் மனசு புரியலயா? கெட்ட எண்ணம் இருந்தா இவ்வளவு நாள் என் கூட தனியா தானே இருந்தா, விட்டு வச்சிருப்பனா? யோசிக்க வேணாம்? உங்க முகத்த பாக்கவே கோபமா வருது. இனிமே நீங்க யாரும் இங்க வேலைக்கு வர வேணாம். எஸ்டேட்ட விட்டு வெளிய போங்க! அவுட்!” கையை வாசலை நோக்கிக் காட்டினான்.

வாயடைத்துப் போனார் பட்டு.

‘இத்தனை வருஷமா பொம்பள சகவாசம் இல்லாம இருந்துட்டு திடீர்னு இந்தப் புள்ள மேல கண்ண வச்சா அது காதலா இல்ல கர்மமான்னு மைப்போட்டா கண்டுபுடிப்பேன்? இதுவாதான் இருக்கும்னு லேசா சந்தேகம் இருந்துச்சு தான். நான் கட்டன வடிகட்டன முட்டாளுதான் துரைக்கு நம்ம இனத்தலாம் புடிக்குமான்னு சொல்லி சொல்லியே என் வாய அடைச்சிட்டான்.’ மனதுக்குள் பரசுவுக்கு பால் ஊற்றி அர்ச்சனை செய்தார் பட்டு.

“இல்ல துரை, வேணாம்! அக்காவ போக சொல்லாதீங்க. தெரியாம அடிச்சிட்டாங்க. எனக்கு வலிக்கவே இல்ல! எறும்பு கடிச்ச மாதிரி தான் இருந்துச்சு” கெஞ்சினாள் சுப்பு.

“எறும்பு கடிச்சா இப்படிதான் தேம்பி தேம்பி அழுவியா? முடியாது ப்ளேக்கி. நீ எது சொன்னாலும் கேப்பேன். இது முடியாது”

“அப்போ நானும் அக்கா கூட போயிருவேன்” கையை நீட்டி மிரட்டினாள் அவள்.

சுப்புவை நேராக நோக்கியவன்,

“என்னை மீறி உங்கக்கா உன்னை கூட்டிட்டுப் போயிருவாங்களா?” என இவளிடம் சிரித்தாலும், பட்டுவை சவாலாகப் பார்த்தான்.

‘சர்ச்சுக்கே ஆத்து வழியா கூட்டிப் போறேன்னு சொன்ன ஆளு, உன்னை இங்கருந்து நகர்த்துனா எங்குடும்பத்துக்கே ஆத்துல சமாதி கட்டிருவாரு புள்ள. சும்மா இருக்கற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி கணக்கா, நீ வேற உசுப்பேத்தி விட்டுறாத!’ சுப்புவைப் பாவமாகப் பார்த்தார் பட்டு.

“பாருங்க துரை! அக்கா எவ்வளவு பாவமா பார்க்கறாங்க. நான் அவங்க கூடவே போறேன்!’

‘அடி ஆத்தி! சமாதிய சங்கூதி அழைக்கிறாளே இவ’

பார்வையை சுப்புவிடம் திருப்பியவன்,

“விட்டுப் போக மாட்டேன்னு வாக்கு குடுத்துருக்க. மறந்துட்டியா ப்ளேக்கி?” என்றான்.

“நீங்க அக்காவ இருக்க சொன்னா நான் ஏன் போவ போறேன்?  நீங்கதான் என்னை வாக்கு தவற வைக்கறீங்க. நீங்க செய்யறதுதான் தப்பு. நேத்தும் அப்படிதான் மொத ராத்திரிய தப்பு தப்பா பண்ணீங்க!” இன்னும் பேச வந்தவள் வாயை கப்பென மூடினான் எட்வர்ட்.

கோப முகம் மாறி புன்னகை எட்டிப் பார்த்தது அவன் முகத்தில்.

“சரி கோபப்படாத! உங்கக்கா இங்கயே இருக்கட்டும். இப்போ போய் நீ குளிச்சுட்டு சாப்பிடு”

சுப்புவின் பயமறியா பேச்சையும், எட்வர்டின் விட்டுக் கொடுத்தலையும் அதிசயமாக பார்த்திருந்தார் பட்டு.

அவரை நோக்கி திரும்பியவன்,

“உங்க துரையம்மாவுக்கு சாப்பாடு செஞ்சு குடுங்க. வீட்டு வேலைக்கு எல்லாம் வேற ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கேன். நாளையில இருந்து வருவாங்க. இனிமே என் பொண்டாட்டிய நல்லா பார்த்துக்கறது மட்டும் தான் உங்க வேலை.” நல்லா எனும் வார்த்தையை அழுத்தி சொன்னான்.

லேசாக விரல் தடம் பதிந்திருந்த சுப்புவின் கன்னத்தை வருடிக் கொடுத்தவன், மீண்டும் பட்டுவை முறைத்து விட்டு ரூமுக்குள் நுழைந்துக் கொண்டான்.

“அக்கா!”

பிரமைப் பிடித்தது போல நின்றிருந்தார் பட்டு.

“அக்கா!!!!”

“என்னடி சுப்பு? இல்ல, இல்ல துரையம்மா”

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டது சுப்புவுக்கு. 

“துரை சொன்னாருன்னு அப்படிலாம் கூப்டாதீங்க! எனக்கு புடிக்கல. நான் எப்பவும் சுப்புதான் “

பட்டுவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சுப்பு. பட்டுவின் கைகள் தன்னாலேயே மேல் எழும்பி அவள் முதுகைத் தடவிக் கொடுத்தது.

“என் மேல கோபமாக்கா?”

“உன் மேல கோபப்பட்டு என்ன செய்ய? விதிச்சது தானே நடக்கும்னு என் மரமண்டைக்கு விளங்காம போச்சு. புத்தி கெட்டு போய் அடிச்சுப்புட்டேன். மன்னிச்சுடு புள்ள. இனி என்ன நடக்கப் போகுதோ, ஏது நடக்கப் போகுதோ! மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு போக வேண்டிதான். நீ வந்து குளி புள்ள”

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு வேலையைக் கவனிக்கப் போனார் பட்டு.

அதற்கு பிறகு மற்றவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் சுப்புவின் நிலை தலைகீழாக மாறியது.

சுற்றி சுழன்று வேலை செய்பவளுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. அவளை எந்த வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை எட்வர்ட். கெஞ்சி, மிரட்டி, அழுது, அடம் பிடித்து சமையல் வேலையை மட்டும் தக்க வைத்துக் கொண்டாள் அவள்.

வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் இவளை அதிசயமாகவும், பொறாமையாகவும் பார்த்து செல்வார்கள். பட்டுவும், பவுனுவையும் தவிர மற்றவர்கள் அவளைப் பார்க்கும் பார்வையில் ஒரு மரியாதை வந்திருந்தது.

எட்வர்டும் முதல் ராத்திரி அன்று நடந்தது போல் மறுபடியும் நடந்து கொள்ளாதது அவளுக்கு அவன் மீது இருந்த சிறு பயத்தை தெளிவித்திருந்தது. அவனை ஒதுக்கி வைக்காமல் முன்பு இருந்தது போலவே பழக ஆரம்பித்தாள் அவள்.

இரவில் இருவரும் ஒரே அறையில் இருந்தாலும், கொடுத்த சத்தியத்தை கஸ்டப்பட்டு காப்பற்றி கொண்டிருந்தான் எட்வர்ட். பரிசோதனை எலியாக அவனைப் பயன்படுத்தி, முத்த ஆராய்ச்சி நடத்தும் சுப்புதான் அவனின் கஸ்டத்துக்கு காரணம். முத்தா, முத்தா என இவனைப் பித்தாக்கிக் கொண்டிருந்தாள் சுப்பு.

மத்தியான வேளையில் ,வாசலில் ஹாரன் சத்தம் கேட்க வெளியே ஓடி வந்தாள் சுப்பு. அழகிய வெள்ளை நிற கார் ஒன்று அங்கே நின்றிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கிய எட்வர்ட், இங்கே வா என கையாட்டினான்.

ஓடி வந்து அவன் அருகில் மூச்சு வாங்க நின்றவள்,

“துரை, காடி புதுசா இருக்கு! “ என கேட்டு சுற்றி சுற்றி பார்த்தாள்.

“நம்ம கார் தான் ப்ளேக்கி. உனக்கு பிடிக்கும்னு வெள்ளைக் கலர்ல வாங்கினேன். பிடிச்சிருக்கா?”

“ரொம்ப அழகா இருக்கு உங்கள மாதிரியே!”

“எத பார்த்தாலும் என் அழகுல தான் வந்து நிப்பியா?” சிரித்தான்.

“இது மோரிஸ் மைனர் கார். இந்த மாடல் இங்க கிடைக்க கொஞ்ச நாள் ஆகிருச்சு.”

“மோரிசுன்னு ஒரு மைனரா? எங்க எஸ்டேட்டு மைனருக்கு எம்புட்டு அழகா மாயாண்டின்னு பேரு வச்சிருக்காங்க தெரியுமா! உங்க ஊருல பேரு வைக்கிறதே சரியில்ல துரை. மோரிசு, கோரிசுன்னு!”

“ஆமா ப்ளேக்கி. எங்க ஊரு பேருங்களே சரியில்ல தான். இனிமே உன்ன கேட்டே பேரு வைக்க சொல்லலாம். புது கார்ல இன்னிக்கு ஒரு ரைட் போலாமா பீச்சுக்கு?”

“பீச்சுனா?”

“கடல். மோரிப்(எஸ்டேட் தாண்டி அரை மணி நேர பயணத்தில் உள்ளது இந்த கடல்) கடலுக்கு போவோம். போய் கிளம்பு ப்ளேக்கி.”

“நெஜமா கடலுக்குப் போறமா? நான் கடல பாத்ததே இல்ல துரை” உற்சாகமாக உள்ளே ஓடியவள், மீண்டும் திரும்ப அவனிடம் ஓடி வந்தாள்.

“என்ன ப்ளேக்கி?”

“சித்தப்பூ புள்ளைங்கள கூட கூட்டிக்கலாமா துரை?”

“நோ!”

“ஏன் நோ? மூனு முத்தாவுக்கு மேல கேட்டாலும் இப்படிதான் நோ சொல்லுறீங்க! எப்ப பாரு நோ சொல்லுறவங்க கண்ணு நொள்ளையா போயிருமாம்!” முகவாய் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள்.

“ஏ ப்ளேக்கி! எனக்கு சாபம் குடுக்கறியா?” சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு.

“சாபம்லாம் இல்ல. சும்மா சொன்னேன்! கூட்டிக்கலாம் துரை. ப்ளீசு துரை!” கண்களை சுருக்கி கெஞ்சினாள்.

“ப்ளேக்கி! உன் கூட தனியா ஜாலியா போகனும்னு ஆசைப்படறேன். அவங்கலாம் எதுக்கு? எனக்கு பிடிக்காது” முகத்தை சுளித்தான் எட்வர்ட்.

“நானும் அவங்க மாதிரி தானே இருக்கேன்! என்னை மட்டும் ஏன் பிடிக்குது?” முறைத்தவாறே கேட்டாள்.

“அதானே, உன்னை மட்டும் ஏன் பிடிக்குது? அதுக்குப் பதில தான் இன்னும் தேடிட்டு இருக்கேன் ப்ளேக்கி” அவளின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.

“வரட்டும் துரை. பாவம்ல அவங்க. என்ன மாதிரியே கடல பார்த்துருக்க மாட்டாங்க”

தலையை மறுப்பாய் ஆட்டினான்.

“முத்தா குடுத்தா, அவங்கள கூட்டிட்டு போக சரி சொல்லுவீங்களா துரை?”

சிரிப்பை அடக்கியவன்,

“என்னோட வீக்னஸ கண்டு வச்சிருக்க ப்ளேக்கி. இந்த தடவை அவங்களும் கூட வரட்டும். இனிமே நான் முடியாதுன்னு சொன்னா கேட்கனும். முத்த லஞ்சம் குடுக்கற வேலைலாம் வச்சிக்க கூடாது. இப்போ போய் கிளம்பி வா. இருட்டறதுக்குள்ள திரும்பி வந்துரலாம்” என்றான்.

இன்னும் உள்ளே போகாமல், தயங்கி நின்றாள் சுப்பு.

“இன்னும் என்ன ப்ளேக்கி?”

“இல்ல, சரின்னு சொன்னா முத்தா குடுக்கறேன்னு சொன்னனே! இப்போ தரவா துரை?”

“ஒன்னும் வேணா! உள்ள போ” சிரிப்புடன் துரத்திவிட்டான் எட்வர்ட்.  

பரசுவின் நான்கு வாண்டுகளும், அக்காவென இவள் பாவாடையைப் பிடித்தபடி வந்தன. அதில் கடைசி பையன் மூக்கை ஒழுக விட்டுக் கொண்டு வந்தான். எட்வர்டுக்கு கண் கொண்டு அவர்களைப் பார்க்கவே முடியவில்லை.

அவர்கள் பின்னோடு வந்த பட்டு,

“வேணான்னு சொன்னேன் துரை, உங்க பொண்டாட்டி தான் கேக்கல. பிடிவாதம் பிடிக்கறா!” மென்று முழுங்கினார்.

“ஹ்ம்ம்ம், பரவாயில்ல”

முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு பதிலளித்தான். பெரிய பிள்ளைகள் மூவரும் பின்னால் அமர, நான்கு வயதான சின்னவனை தன் மடியில் இருத்திக் கொண்டு முன்னால் அமர்ந்தாள் சுப்பு.

“துரை போலாம்! ஓட்டுங்க” முகம் கொள்ளா சிரிப்புடன் அவன் முகம் நோக்கினாள்.

காரைக் கிளப்பினான் எட்வர்ட். காரில் பிள்ளைகளுடன் சலசலத்தவாறே வந்தாள் அவள். போகும் வழியில் இருந்த குட்டி டவுன் பந்திங்கில் (இடத்தின் பெயர்) சுப்புவுக்கு மட்டுமல்லாது, பிள்ளைகளுக்கும் குச்சி ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தான் எட்வர்ட்.

“ஐஸ் சாப்டதும் இன்னும் ரொம்ப ஒழுகுதுடா உனக்கு” என்றவாறே பாவாடையைத் தூக்கி சின்னவனின் மூக்கைத் துடைத்துவிட்டாள் சுப்பு.

“ஏ ப்ளேக்கி! என்ன பண்ணுற?”

“பாத்தா தெரியலயா துரை? இது பாவாடை, இது மூக்கு, இது மூக்கு சளி. பாவாடையை இப்படி தூக்கி இப்படி துடைச்சேன்” மீண்டும் செயல் முறை விளக்கம் கொடுத்தாள்.

“மை காட்! இந்தா ஹென்கர்சீப். பாவாடைல துடைக்காதே. அருவருப்பா இருக்கு”

“அருவருப்புன்னு சொல்லக் கூடாது சாமி கண்ண குத்தும். இப்படி சொன்னா நாளைக்கு நம்ம புள்ளைக்கு இன்னும் ரொம்ப ஒழுகும்! சாமி என் துரைய மன்னிச்சிரு, என் புள்ளைக்கு மூக்கு ஒழுக வச்சிராத!” கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

“நம்ம புள்ள இப்படியா ப்ளேக்கி வளரும்? நான் ராஜா மாதிரி பார்த்துப்பேன் நம்ம பிள்ளைகள” ஆசையாக சொன்னான்.

“துரை! நான் கருப்பா இருக்கேன், நீங்க வெள்ளையா இருக்கீங்க. நம்ம புள்ள என்ன கலருல இருக்கும்?”

“கருப்பு டீல, பால் ஊத்துனா என்ன கலரா மாறும் ப்ளேக்கி?”

“அந்தக் கலரு பேரு எனக்கு தெரியலையே!”

“ப்ரவுன். ஹ்ம்ம் பழுப்பு நிறம். நம்ம புள்ள அந்தக் கலருல தான் இருக்கும்” முறுவலித்தான்,

“அந்தக் கலருல வேணாம். பால் ரொம்ப போடுங்க துரை. எனக்கு உங்கள மாதிரியே வெள்ளையா தான் புள்ள வேணும்.”

“என்ன கலரா இருந்தாலும் அது நம்ம பிள்ளை ப்ளேக்கி. ராஜாவா, ராஜாத்தியா வளர்ப்பேன்”

“நமக்கு ஏன் இன்னும் புள்ள வரல? தெனமும் தான விடாம நான் முத்தா குடுக்கறேன். அப்புறம் ஏன் பிள்ள வரல?”

‘ஓ! இதுக்குத்தான் தினமும் என்னை முத்தம் குடுத்து கொல்லுறியா?’

“முத்தம் குடுத்தா புள்ள பொறக்கும்னு யாரு சொன்னது ப்ளேக்கி? அலமுவா?”

“அலமுக்கு முத்தாலாம் தெரியாது. நானே உங்க கிட்ட தான் கத்துக்கிட்டேன்.”

“அப்போ யாரு சொன்னா?”

“எனக்குதான் கல்யாணம் ஆச்சே, எப்போ புள்ள பொறக்கும்னு பவுனு அக்காட்ட கேட்டேன். மொதல்ல ரொம்ப வெக்கப்பட்டாங்க. அப்புறம் தான் முத்தா குடுத்தா உடனே பொறக்கும்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாங்க”

பிள்ளைகள் பின்னால் விளையாடிக் கொண்டிருக்க, மெல்லிய குரலில் குழந்தை எப்படி உருவாகும் , குழந்தைப் பிறப்பு எல்லாவற்றையும் அவளுக்குப் புரியும் விதத்தில் விளக்கினான். பல கேள்விகள் கேட்டு அவனைக் குழப்பி அடித்தாள் சுப்பு. பொறுமையாக மீண்டும் மீண்டும் விளக்கினான்.

“அப்போ நான் சூரியகாந்திக்கு ஆமா சொன்னாதான் புள்ள பொறக்குமா?”

ஆமென தலையாட்டியவனை யோசனையாகப் பார்த்தாள்.

“அப்படினா எனக்கு சம்மதம்”

அதிசயமாக அவளைப் பார்த்தான் எட்வர்ட்.

“குழந்தை வேணும்னு அவ்வளவு ஆசையா ப்ளேக்கி?”

“கல்யாணம் ஆகி, குழந்தைப் பொறக்காட்டி தள்ளி வச்சிருவாங்க துரை. நீங்க என்னை தள்ளி வச்சிட்டா, நான் எப்படி இருப்பேன்? ரொம்ப அழுவேன். அழுது, அழுது செத்துப் போயிருவேன்”

“சாவறதப் பத்தி பேசுனா அடிச்சிருவேன் ப்ளேக்கி. என்னிக்குமே தைரியமா, எந்தக் கஸ்டத்தையும் எதிர்த்து வாழனும். சாவனும்னு நினைக்கக் கூடாது. என்ன ஆனாலும் நான் உன்னை விட்டுக் குடுக்கமாட்டேன். அப்புறம் எப்படி தள்ளி வைப்பேன்! இந்த மாதிரி இனிமே பேசக்கூடாது, சரியா?”

கல்யாணம்,கணவன், குழந்தை இப்படி குறுகிய வட்டத்துக்குள்ளேயே இந்திய பெண்களின் வாழ்க்கை அடங்கி விடுவதை நினைத்தப்படியே காரை செலுத்தினான் எட்வர்ட்.

கடற்கரையை நெருங்கி இருந்தார்கள். காரை ஒரு இடத்தில் நிறுத்திப் பூட்டியவன், அவர்களை அழைத்துக் கொண்டு கடலை நோக்கி நடந்தான். அங்கும் இங்குமாக ஆட்கள் நிறைய இருந்தனர். தண்ணீருக்குப் போக வேண்டும் என பிள்ளைகள் சுப்புவை இழுக்க, இவனும் அவர்களுடன் சென்றான்.

அலைகள் கால் தொடும் அருகில் அமர்ந்தவன், பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டும் சுப்புவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். மனதில் பல சிந்தனைகள். மற்ற மூன்று பிள்ளைகளும் அருகிலேயே விளையாட, கடைசி பையனைத் தூக்கிக் கொண்டு அவன் அருகே வந்து அமர்ந்தாள் சுப்பு.

எட்வர்ட் ஏற்கனவே கொடுத்த கைக்குட்டையால், சின்னவனின் முகத்தைத் துடைத்தவள் தன் மார்பில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். அவனும் கடல் காற்றுக்கு சுகமாக தூங்கிப் போனான். இயற்கையாக அவளுக்கு இருந்த தாய்மை உணர்வை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் எட்வர்ட்.

“என்ன துரை பார்க்கறீங்க?” மற்ற மூவர் மேலும் ஒரு கண்ணை வைத்தவாறே கேட்டாள் சுப்பு.

“எப்படி எல்லார் மேலயும் உன்னால பாசமா இருக்க முடியுது ப்ளேக்கி?”

“தெரியலையே துரை. அதுவா வருது!”

“தேவதைய பார்த்துருக்கியா ப்ளேக்கி?”

“இல்லையே! அது எப்படி இருக்கும்?”

“உன்னை மாதிரியேதான் இருக்கும். எனக்காக படைக்கப்பட்ட தேவதை நீ” அருகில் நெருங்கி தோளோடு அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“அப்படினா, எனக்காக படைக்கப்பட்ட தேவதன் நீங்க துரை”

அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“பொம்பளைங்கள மட்டும்தான் அப்படி சொல்லுவாங்க. ஆம்பளைங்களுக்கு அது பொருந்தாது ப்ளேக்கி”

“அதெல்லாம் எனக்கு தெரியாது! எனக்கு நீங்கதான் தேவதன்” நகர்ந்து வந்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“ப்ளேக்கி, என்ன பண்ணுற? பிள்ளைங்க இருக்காங்க!” சிரிப்புடன் கேட்டான்.

“பசங்களா, துரைக்கு கன்னத்துல தூசி. துடைச்சி விட்டேன், அவ்வளவுதான். ஆத்தாகிட்ட சொல்லக்கூடாது” விளையாடி கொண்டிருந்தவர்களை கூப்பிட்டு வைத்து விளக்கம் கொடுத்தாள் சுப்பு.

“சரிக்கா! துரைக்கு நீங்க முத்தா குடுத்தத நான் ஆத்தா கிட்ட சொல்லமாட்டேன்” சொல்லிவிட்டு விளையாட ஓடிப்போனான் பெரியவன்.

திருதிருவென விழித்த சுப்புவை அணைத்துக் கொண்டு வாய்விட்டு சிரித்தான் எட்வர்ட்.

வீட்டுக்குக் கிளம்பும் போது, மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னவனோடு எழ கஸ்டப்பட்டாள் சுப்பு. கீழே குனிந்து சின்னவனைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டவன், அவள் எழ கைக் கொடுத்தான்.

அதிசயமாக அவனைப் பார்த்த சுப்பு,

“புள்ளைங்கள அப்படி கரிச்சுக் கொட்டுனீங்க! இப்ப தூக்கிக்கிட்டீங்களே துரை” என கேட்டாள்.

“உன் அணைப்புல இருந்ததால இவனையும் எனக்குப் பிடிச்சிருச்சு ப்ளேக்கி” புன்னகைத்தவன் பிள்ளைகள் புடைசூழ அவளை அணைத்தவாறு நடந்தான்.

சுப்புவின் வீட்டில்,

“தங்கம், முத்து வீட்டுக்கு ஆள் அனுப்பனியே, அந்தப் பையன் சேதி ஏதாச்சும் கொண்டு வந்தானா?” என கேட்டார் அன்னம்.

“முத்து தொலைவா எங்கயோ எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போயிருக்கானாம். நான் போய் அங்கேயே சேதி சொல்லுறேன் கொஞ்சம் பணம் குடுங்கன்னு கேட்டான். காதுல கிடந்த தோட்டை கழட்டிக் குடுத்துட்டேன். நம்ம புள்ளய வேலைக்கு அனுப்பன சமாச்சாரத்தையும், கண்ணால கூட பார்க்க முடியலைங்கறதையும் சொல்லி விட்டிருக்கேன். அடுத்த மாசம் எப்படியும் வந்துருவான். நீ விசனப்படாம இருக்கா. “

“ஆத்தா மகமாயிதான் நம்ம புள்ளய நம்ம கிட்ட நல்லபடியா கொண்டு வந்து சேர்க்கனும்”

ஆத்தா யாருக்கு செவி சாய்ப்பார்?