IMTP–EPI 2

அத்தியாயம் 2

“டீ அலமு! சீக்கிரம் வா. மாட்டு கொட்டாயிக்குப்(கொட்டகை) போகனும். இப்பவே மணியாச்சு”

எதிர்த்த வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் சுப்புலெட்சுமி.

“சுப்பு! பொட்டப்புள்ள இப்படிதான் காட்டுக் கத்து கத்துவியா? சீக்கிரம் போய் சாணிய அள்ளிட்டு பால் கறந்துட்டு வாடினா, கூட்டாளி சேர்த்துட்டு நிக்கறா!” தங்கள் வீட்டின் சமயலைறையிலிருந்து கத்தினார் தங்கம்.

அங்கே இரண்டு வீடுகள் ஒட்டி கொஞ்சம் இடைவெளிவிட்டு அடுத்த இரண்டு வீடுகள் என வரிசையாக கட்டப் பட்டிருக்கும். இப்படி பல வரிசைகள் இருக்கும். இவர்களின் எதிர்த்த வீட்டில் தான் சுப்புவின் ஆதர்ச தோழி அலமு இருந்தாள்.

“இவங்க மட்டும் நாலு வீடு கேக்கற மாதிரி கத்தலாம். நான் மட்டும் கத்தக் கூடாது. இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே நின்னா கட்டை வெளக்கமாறு பறந்து வரும்! “முனகியவாறே மாட்டு கொட்டகைக்கு பறந்தோடினாள்.

எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் விடிகாலையிலேயே வேலைக்கு சென்று மணி மூன்றுக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். தங்கம் சமையலை கவனித்து வீட்டைப் பார்க்க, அன்னம் தோட்டவேலையைப் பார்ப்பார். அவர்களுக்கு என்று சின்னதாக நிலம் ஒன்றும், இரண்டு மாடுகளும் இருந்தன. நிலத்தில் மரவள்ளி, சக்கரவள்ளி கிழங்கு வகைகளும், இன்னும் கொஞ்சமாக கீரை வகைகளும் வீட்டு உபயோகத்திற்காக பயிரிட்டிருந்தனர்.

மாடுகளை கவனித்துக் கொள்வது சுப்புலெட்சுமியின் வேலை. கொட்டகையை சுத்தம் செய்து, சாணியை அள்ளிப் போட்டு, பால் கறந்து எடுத்துக் கொண்டு வருவாள். வீட்டு உபயோகத்திற்குப் போக மீதி பாலை விற்பார்கள், இல்லை தயிராகவோ, நெய்யாகவோ மாற்றியும் விற்பார்கள். எந்த விஷயத்தில் சிக்கனம் பிடித்தாலும், பிள்ளைகளுக்கு பாலும் நெய்யும் ஊட்டித்தான் வளர்த்தார்கள் தங்கமும் அன்னமும்.

“வாங்க மச்சான் வாங்க

வந்த வழியைப் பாத்துப் போங்க

ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க”

 

பாடிக்கொண்டே பாலைக் கறந்து முடித்தாள் சுப்புலெட்சுமி. பழைய பாடல்களிலிருந்து இப்பொழுது வந்த பாடல்கள் வரை சுப்புவுக்கு அத்துப்படி. அவர்கள் வீட்டில் சின்னதாக ரெடியோ பெட்டி ஒன்று இருந்தது. அதில் சிங்கப்பூர் அலைவரிசை கூட கிடைக்கும். எல்லா விஷயத்திலும் கத்தும் தங்கம் கூட இவள், பாட்டு கேட்பதை கண்டும் காணாதது போல் இருந்து விடுவாள். பாட்டு என்றால் சுப்புலெட்சுமிக்கு உயிர். நன்றாகவும் பாடுவாள் அவள்.

“பே!!!!!!!!” திடீர் என கேட்ட சத்தத்தில் கத்தியபடியே அள்ளிக் கொண்டிருந்த சாணி மேல் மல்லாக்க விழுந்தாள் சுப்பு.

“ஏ புள்ள, பயந்துட்டியா? நான் தான்!” கை கொட்டி சிரித்தாள் அலமு. வெறும் தோழியாக இருந்தாள் உடனே தூக்கி விட்டிருப்பாள், உயிர் தோழி ஆயிற்றே கண்ணில் நீர் வர சிரித்தாள் அலமு.

“பாதகத்தி! உனக்கு விளையாட வேற நேரம் காலம் இல்லையாடி? இப்படி சாணில தள்ளிட்டியே! சின்னாத்தா என் முதுகுல பட்டாச கொளுத்தப் போகுது இன்னிக்கு” அழுகை முட்டியது.

“அடச்சீ நிறுத்துடி! சும்மா கண்ண கசக்கிட்டு. வாடி , நானே கழுவி விடறேன்” கையைப் பிடித்து அவளை எழுப்பினாள் அலமு. பக்கத்தில் இருந்த சிறிய குட்டையில் தண்ணீரை அள்ளி, சட்டையில் இருந்த சாணியைக் கழுவிவிட்டாள். சுப்புவும் தண்ணீரை அள்ளி அலமு மேல் அடித்து விளையாடினாள். இவள் ஊற்ற, அவள் ஊற்ற இருவரும் தொப்பலாக நனைந்திருந்தனர். கலகலவென நகைத்த இருவரும், பாவாடையையும் சட்டையையும் பிழிந்து விட்டனர்.

“இப்படியே போனா அடி விழும். காயற வரைக்கும் ரெண்டு பேரும் ஒத்தை ரெட்டை விளையாடலாமா?” கேட்டாள் அலமு.

“சரி விளையாடலாம்”

இருவரும் சின்ன வயதிலிருந்தே தோழிகள். அலமுவுக்கு அடுத்த மாதம் திருமணம். வயதுக்கு வந்த கையோடு தாய் மாமனுக்கு பரிசம் போட்டு விட்டனர்.

“அலமு, நீ கல்யாணம் கட்டி போயிட்டனா எனக்கு விளையாட யாருமில்லடி. நான் தனியாள போயிருவேன்” குரல் முழுக்க சோகம் சுப்புவுக்கு.

“என்னை என்னடி செய்ய சொல்லுற? எனக்கு மட்டும் ஆசையா என்ன! மாமன பார்க்கவே பயமா இருக்கு புள்ள. அந்த ஆளும் அதோட கடா மீசையும். எங்காத்தா கிட்ட அவர புடிக்கலனு சொன்னதுக்கு, கன்னம் கன்னமா ரெண்டு அறை குடுத்துச்சு. அவங்களுக்கு தெரியுமாம், எனக்கு எது நல்லது கெட்டதுன்னு. நான் வேற எஸ்டேட்டுக்கு கல்யாணம் கட்டிப் போயிட்டாலும் நல்ல நாளு பெருநாளுல உன்னை கண்டிப்பா பார்க்க வருவேண்டி” தளுதளுத்தாள் அலமு.

“ஆமா அப்படியே என்னைப் பார்த்துட்டுதான் மறு வேலை பார்ப்ப! அதையும் தான் நான் பார்க்கறேன் போடி” சிலிப்பிக் கொண்டாள் சுப்பு.

“அதெல்லாம் என் கிட்டயா இருக்கு? என்னைக் கட்டிகப்போற அந்த கடா மீசை மனசு வைக்கனும். உனக்கு என்னடி, உன் மாமன் கருப்பா இருந்தாலும் நல்லா களையா இருக்காரு. நீ குடுத்து வச்சவடி” குரலில் கொஞ்சமும் பொறாமை இல்லை.

“ஏன்டி நமக்கெல்லாம் வெள்ளையா மாப்பிள்ளை கிடைக்காதா?” ஏக்கமாக கேட்டாள் சுப்பு.

“உனக்காக சீமை தொரை(துரை) காத்துட்டு இருக்காறாம், குதிரையில வந்து சிறை எடுத்துட்டுப் போவாராம். போடி போக்கத்தவளே! ஆகாச கோட்டை கட்டாதடி. கிடைக்கற வாழ்க்கைய, முழு மனசோட ஏத்துக்கடி. மழைக்கு கூட பள்ளிகூடம் ஒதுங்கல இவ, மாப்பிள்ள மட்டும் மவராசன் வேணுமாம்!” கிண்டல் அடித்தாள் அலமு.

“நீ மட்டும் படிச்சு கிழிச்சிட்டியாக்கும். போடி போக்கத்தவளே!”

இருவருமே கோவிலில் சனிக்கிழமைகளில் நடக்கும் தமிழ் வகுப்புகளுக்குப் போவார்கள். படிப்பதற்கு வருவதை விட, வகுப்பு முடிந்து தரப்படும் பொங்கலுக்காகவே பாதி பிள்ளைகள் வருவார்கள். பொங்கலில் முழு கவனம் இருந்தாலும், கொட்டி கொட்டி சொல்லி கொடுக்கும் வாத்தியாரால் தமிழ் எழுத படிக்க ஓரளவு கற்றுக் கொண்டார்கள். சுப்புலெட்சுமியை சுப்புலொட்சுமி என எழுதும் அளவுக்கு தேர்ந்திருந்தாள் இவள்.

உடை காய்ந்ததும் மாட்டுக்கு தண்ணிர் காட்டி விட்டு கறந்த பாலுடன் வீட்டுக்கு கிளம்பினார்கள் இருவரும். வழியில் இருந்த கொய்யா மரத்தை அதகளம் செய்து, பழுக்காத கொய்யாக்காயை கடித்தவாறே வீடு வந்தனர்.

அங்கே சுப்புவின் வீட்டு வாசலில் நின்றிருந்தார் அலமுவின் அம்மா. இவர்கள் வருவதைப் பார்த்து பட்டென பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டனர் தங்கமும் அவரும்.

பின் வழக்கம் போல் வேலைகளை முடித்துவிட்டு, இரவு எட்டு மணிக்கெல்லாம் மின்சாரம் போவதற்குள், சாப்பிட்டு விட்டு கட்டையை நீட்டினார்கள் அந்த குடும்பத்தினர். அந்த எஸ்டேட்டில் காலை ஆறு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரைதான் மின்சாரம் இருக்கும். அதன் பிறகு இருட்டு, இருட்டு, இருட்டு மட்டுமே. அதனாலேயே பிள்ளைக் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகம் அந்தக் காலத்தில்.

பிள்ளைகள் நன்றாக உறங்கும் வரை காத்திருந்த தங்கம், தன் தமக்கையை எழுப்பினார்.

“அக்கா”

“என்னடி தங்கம்?”

“அலமு ஆத்தாக்காரி இன்னிக்கு என் கிட்ட பேசிட்டு இருந்தா”

“அந்த சிறுக்கி வாய் ஓயாம நெதம் தான் பேசுறா! என்னவாம் அவளுக்கு?”

“பக்கத்து எஸ்டேட் தொரை வீட்டுக்கு, மேல் வேலை செய்ய ஆளு வேணுமாம்”

“ஏன், நீ போக போறியா?”

“இந்த குசும்புதான் ஆவாது உனக்கு. என் வாயைப் புடுங்கி பார்க்கறியா? இப்படி பேசி பேசி தான் நம்ம புருஷன சீக்கிரமா மேல அனுப்பி வச்சிட்ட நீ.”

பட்டென எழுந்து அமர்ந்த அன்னம், சண்டைக்குத் தயாராவது போல தன் கூந்தலை அள்ளி கொண்டையாக முடிந்தார்.

“வாடி என் சீமை சித்ராங்கி! அந்த மகராசன நான் தான்  பேசி அனுப்பிட்டனாக்கும்? என்னை மட்டும் கட்டிக்கிட்டு இருந்த வரைக்கும் ராசா மாதிரி தான்டி இருந்தாரு. நீ ரெண்டாவதா வாக்கப்பட்டு வந்து வரிசையா பெத்து போட்ட வேகத்துக்குத்தான் அந்தாளு அல்பாயுசுல போயிட்டான். வந்துட்டா என்னை வம்பிழுக்க!”

“உன் முகரைய சகிச்சுக்க முடியாம தான் மாமன் வரிசையா எனக்கு புள்ளைய குடுத்துச்சு! அதுக்கு நீ ஏன் வெந்து சாகறவ?”

பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு இருவரும் சக்களத்தி சண்டையை ஆரம்பித்திருந்தனர். கைக்கலப்பு ஆவதற்குள், சுப்பு வேகமாக இருமவும் கப்சிப் என ஆகினர் இருவரும்.

மகள் இருமி மீண்டும் ஆழ்ந்து தூங்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தனர் இருவரும்.

“அடீ தங்கம்! பேச வந்தத விட்டுப்புட்டு இப்ப ஏன்டி ஏழரைய கூட்டுற? ஒழுங்க விஷயத்தை சட்டுபுட்டுன்னு சொல்லுடி. எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது”

“நீ எங்க பேச விட்ட!“ நொடித்த தங்கம் மீண்டும் கதையை ஆரம்பித்தார்.

“அங்க வேலை செய்ய சின்ன புள்ளைதான் வேணுமாம். கூடமாட மேல் வேலைக்கு ஒத்தாசைக்கு இருந்தா போதுமாம். அதான் நம்ம சுப்புவ அனுப்பறீங்களான்னு கேட்டா. அலமுவ தான் கூப்புட்டுச்சாம் அவங்க சின்னத்தை, அதான்கா நம்ம பாக்கியம். அலமுக்கு கல்யாணம் வச்சிட்டாங்கல்ல, அதான் அனுப்ப இவளுக்குப் பிடிக்கல. அதான் அலமுவுக்குப் பதிலா நம்ம சுப்புவ அனுப்பறதுக்கு கேட்டா. உன் கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்னு சொல்லி இருக்கேன் ”

“அந்த எஸ்டேட் இருக்கற இடம் ரொம்ப தூரமாச்சே புள்ள. ஆத்த தாண்டில போகனும். நினைச்ச நேரத்துக்கு எப்படி போய் பார்க்கறது? அதோட இன்னிக்கு நாளைக்குன்னு நிக்கறா! பயமா இருக்குடி தங்கம்”

“யக்கா, நல்ல சம்பளம் தராங்கலாம். அதோட போட்டுக்க துணி, அரிசி சாப்பாடு எல்லாம் குடுப்பாங்கலாம். பாக்கியம் அத்தை அங்க இருக்கறப்ப என்ன பயம்? அது நல்லா பாத்துக்கும்.”

“இருந்தாலும்!” இழுத்தார் அன்னம்.

“இங்கப்பாருக்கா, என்னதான் முத்து ஆசைப்பட்டு கேட்டாலும், அவன் ஆத்தா நகை நட்டு சீர் செனத்தி இல்லாம நம்ம பொண்ண கட்ட யோசிக்கும். இவ வேலைக்கும் போனா காசு சேர்த்து கரை ஏத்துலாம். அப்புறம் இதுங்க மூனும் சின்னதுங்க தானே! வளரதுக்குள்ள நாம சேர்த்துரலாம்கா. கடவுளா பார்த்து இந்த வேலைய காட்டியிருக்காரு. தயங்காதக்கா”

“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் புள்ள. அனுப்பி வைக்கலாம்”

“இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்கா. இப்போதைக்கு முத்துவுக்கு தெரிய வேணாம். அப்புறம் அவன் வேற வந்து ஏன் எதுக்குன்னு வம்பு பண்ணுவான். உங்க கல்யாணத்துக்குன்னா சொல்ல முடியும்? அவளே சம்பாரிச்சு அவளே கல்யாணம் பண்ணனுமான்னு கேட்டுட்டான்னா, நாம மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்கிறது?”

“ஆமா புள்ள. நீ சொல்லறதும் நியாயம்தான். நம்மள இப்படி தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரே உங்க மாமா. பொட்ட புள்ளைங்கள வச்சிக்கிட்டு நம்ம பொழப்பு நாய் பொழப்பா இருக்குதே” கண்ணைக் கசக்கினார் அன்னம்.

“இப்ப எதுக்கு கண்ண கசக்கற? உழைக்க உடம்புல தெம்பு இருக்கு, அப்புறம் ஏன் கண்ணீர்? அழாதக்கா” அக்காவைத் தேற்றினார் தங்கம்.

கண்ணை மூடி படுத்திருந்தாலும், இவர்கள் பேசுவதை கேட்டிருந்தாள் சுப்பு. அவளுக்கும் அழுகை முட்டியது.

‘என்னை தனியா எங்கயோ அனுப்ப போறாங்க போல இருக்கே! ஆத்தாவையும், தங்கச்சிகளையும் விட்டுட்டு எப்படி இருப்பேன்? எனக்கு சரியா வீட்டு வேலை செய்யத் தெரியாதே! என் முடிய கூட சிக்கெடுத்து சீவ தெரியாதே! தனியாவும் படுக்க பயமா இருக்குமே!’ கண்ணீர் வழிவதை யாரும் பார்க்காமல் இருக்க குப்புற படுத்துக் கொண்டாள். தங்கம் மகள் அருகே நெருங்கி தூங்குபவளின் தலையை கோதிக் கொடுத்தார். குப்புறப் படுத்திருந்ததால் மகள் அழுவது தெரியவில்லை அவருக்கு.

“ஆத்தா மகமாயி! என் மகள தனியா அனுப்ப போறேன். நீ தான்மா துணையா இருந்து அவள கண் கலங்காம பாத்துக்கனும்.” இவர் கண் கலங்கியவாறே மகளை அணைத்துப் படுத்துக் கொண்டார்.

‘அழாதீங்க ஆத்தா! நான் பத்திரமா இருந்துக்குவேன். நிறைய சம்பாரிச்சு உங்களுக்கு எல்லாம் குடுப்பேன். அதோட அரிசி சோறு குடுப்பாங்களாமே! இதோட கேப்பங்களியில இருந்து எனக்கு விடுதலை’ மனதிற்குள்ளே சமாதானம் ஆகிக் கொண்டாள். அரிசி சோற்றுக்கு தான் என்னவெல்லாம் இழக்க போகிறோம் என அந்தப் குழந்தை குமரிக்குத் தெரியவில்லை.