IMTP–EPI 21

அத்தியாயம் 21

 

“டாடி”

எட்வர்டின் கர்ஜனையில் பட்டு, பவுனு இருவரும் வெளியே ஓடி வந்தார்கள். பரசுவும் அங்கே ஆஜராகி இருந்தான்.

காலடியில் விழுந்து கிடந்தவளை தூக்கித் தன் அருகே நிறுத்தியவன், அவள் உதடு கிழிந்து வழிந்த ரத்தத்தைப் பார்த்து ரௌத்திரமாகிப் போனான். ரத்தத்தை துடைத்து அவளை இறுக அணைத்தவன், கார் அருகே நின்றிருந்த தன் தந்தையை நோக்கி ஆவேசமாக தன் கையை வீசினான்.

தன் கரம் அவர், முகத்தை நெருங்கும் நொடி கரத்தை விலக்கியவன், பின்னால் இருந்த கார் கண்ணாடியில் தன் ஆத்திரத்தைக் காட்டினான். அவன் அடித்த வேகத்துக்கு கார் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து கொட்டியது. கண்ணாடி சில்லுகள்  இடது கரத்தைப் பதம் பார்த்திருக்க, வழிந்த ரத்தத்தை விட சிவப்பாகி போயிருந்த கண்களால் அவன் தந்தையை உறுத்து விழித்தான் எட்வர்ட்.

எட்வர்டின் அப்பா, திகைத்துப் போய் நின்றார். அவன் கார் கண்ணாடியை அடித்த அடி தன் மேல் விழுந்திருந்தால், நிச்சயமாக அனைத்து பல்லும் கொட்டி இருக்கும். லேசாக நடுக்கம் ஓடியது அவர் உடம்பில்.

“ஏடி!” நடுக்கமாக அழைத்தார்.

“ட்டூ ஹெல் வித் யுவர் ஏடி.” (To hell with your Eddie)  உடல் ஆத்திரத்தில் நடுங்க கத்தினான்

(அப்பா, மகன் சம்பாஷனையை நாம் தமிழில் பார்ப்போம்)

“என் வைப் மேல கை வைக்கற உரிமைய உங்களுக்கு யார் கொடுத்தது? இதுக்குத்தான் என் மனைவிய பார்க்கனும்னு என் கூட வந்தீங்களா? உங்க கேடு கெட்ட குணம் தெரிஞ்சும் அழைச்சிட்டு வந்தது என் தப்பு. இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னாலும், அப்பானு கூட பார்க்காம என் கையாலயே அடிச்சுக் கொலை பண்ணிருவேன். கெட் லாஸ்ட்!”

தன் கையில் வழியும் ரத்தத்தைக் கூட பொருட்படுத்தாது, சுப்புவின் உதட்டின் ரத்தத்தை வழிய வழிய துடைத்தான் எட்வர்ட்.

“என்னை மன்னிச்சுரும்மா! ப்ளேக்கி, ப்ளீஸ் பொர்கிவ் மீ” மெல்லிய குரலில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே துடைத்தான்.  

இவ்வளவு நேரம் அதிர்ச்சியில் சிலையாய் இருந்த சுப்பு, அவனின் கை ரத்தம் தன் சட்டையை நனைக்கவும் தான் சுயநினைவு அடைந்தாள்.

“ஐயோ, துரை! ரத்தம், ரத்தம். கை எல்லாம் ரத்தம். ஏன் இப்படி செஞ்சீங்க? ஐயோ கைல கண்ணாடி குத்தி நிக்குதே!” கண்களில் கண்ணீர் கரை புரண்டோட கதறினாள்.

“ஷ்ஷ்! அழாதே ப்ளேக்கி. சின்ன காயம் தான். நீ உள்ள வா. உன் உதட்டுக்கு முதல்ல மருந்து போடலாம்” அவள் கைப்பற்றி உள்ளே இழுத்தான்.

“ஏடி!” அவனைத் தடுத்தார் அவன் அப்பா.

“பர்சு!” கத்தினான் எட்வர்ட்.

அவனருகே ஓடி வந்தான் பரசு.

“இவர கொண்டு போய் டவுனுல விட்டுட்டு வா! எதுக்காக என்னைத் தேடி பிரிட்டனுல இருந்து வந்தாரோ அத ஒரு மாசத்துல செஞ்சு குடுப்பேன்னு சொல்லு.”

திரும்பி கூட பார்க்காமல், சுப்புவை தன் கையணைப்பிலேயே வைத்துக் கொண்டு உள்ளே நடந்தவனை,

“டூக் பரம்பரைல வந்த நீ, காலங்காலமா நம்ம கால கழுவி சேவகம் செய்யப் பொறந்த அடிமை இனத்தோட சவகாசம் வச்சிருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல ஏடி” எனும் அவரின் குரல் அப்படியே நிறுத்தியது.

“குட்டி பாக்க நல்லாதான் இருக்கா! அவ மேல உள்ள மயக்கம் தெளிஞ்சதும், செருப்பு மாதிரி கழட்டிப் தூர வீசிட்டு நான் பார்த்து வச்சிருக்கற பொண்ண கல்யாணம் பண்ணிக்க. நம்ம பரம்பரை கட்டி காத்து வர கௌரவத்த காத்துல பறக்க விட்டுறாத ஏடி”

தன் மனைவியை அவர் குட்டி என்று சொன்னதில் கோபம் தலைக்கேற திரும்பி பார்த்தவன்,

“இப்போ எனக்கு பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னீங்களே, அந்த பொண்ணையாவது விட்டு வச்சிருக்கீங்களா? இல்லை அவளையும் உங்க கட்டிலுல அலங்கரிச்சிட்டீங்களா?” என எகத்தாளமாக கேட்டான்.

“ஏடி!” குரல் உயர்ந்தது அவருக்கு.

“லுக் மிஸ்டர் வில்லியம்! உங்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் அறுந்து பல வருஷம் ஓடிப்போச்சு. நம்மள கட்டி வச்சிருந்த கயிரு சுக்கு நூறா சிதஞ்சி போச்சு. இப்போ நான் யாருக்கும் கட்டுப்படாத ஒரு தனி மனிதன். உங்களோட ரத்தம் உடம்புல ஓடறதுனால தான், என் பொண்டாட்டி மேல கைவச்சும் கையாலாகாதவனா பார்த்துட்டு நிக்கறேன். இப்போ அந்த ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா என் உடம்புல இருந்து வெளியேறிட்டு இருக்கு.” ரத்தம் வழியும் தன் கையைக் காட்டினான்.

“அது வழிய, வழிய உங்க மேல உள்ள கொலைவெறி எனக்கு கூடிக்கிட்டே போகுது. என்னை கொலைகாரனா ஆக்கித்தான் பார்க்கனும்னா, பை ஆல் மீன்ஸ், பீ மை கெஸ்ட்” அவர் விழிகளை ஊடுருவிப் பார்த்து நெஞ்சை நிமிர்த்தி சொன்னான் எட்வர்ட்.

எப்பொழுதும் அடங்கி போகும் தன் மகனின் மறு பக்கத்தைப் பார்த்த வில்லியம் ரொம்பவே ஆடிப்போனார். அவனிடம் ஆக வேண்டிய காரியம் பல இருந்தது அவருக்கு. இப்பொழுது அடங்கி போவதுதான் உசிதம் என நினைத்தவர்,

“நான் போறேன் ஏடி! ஆனா குடுத்த வாக்க மறக்காம சீக்கிரம் இங்கிலாந்துக்கு வந்து எல்லாத்தையும் முடிச்சுக் குடு. ஒரு மாசம் தான் உனக்கு டைம். இல்லைனா, அதோட பின் விளைவுகள் ரொம்ப பயங்கரமா இருக்கும்” அவரின் பார்வை வன்மமாக, மகன் அணைத்திருக்கும் சுப்புவின் மேல் பாய்ந்து மீண்டது.

ஜீப் சாவியைத் தூக்கி பரசுவிடம் வீசியவன்,

“சீக்கிரம் குப்பையைக் கொண்டு வெளிய தள்ளு” என்றான்.

பட்டுவிடம் திரும்பி,

“சுடுதண்ணி எடுத்து வாங்க. அப்படியே அந்தாளு நின்ன இடத்த கழுவி விடுங்க” என சொன்னான்.

அவமானத்தில் வில்லியமின் சிவந்த முகம், இன்னும் சிவந்தது. எட்வர்ட் இங்கிலாந்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் இங்கே வந்ததில் இருந்து அவனை வலைப்போட்டு தேடுகிறார் அவர். இப்பொழுதுதான் கையில் சிக்கி இருந்தான். பாச நாடகம் போட்டு அவனோடு வந்தவருக்கு, என்னதான் அவன் இந்திய பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன் என சொல்லி இருந்தும் சுப்புவை நேரில் பார்த்ததும் ரத்தம் கொதித்து விட்டது.

மகனை அவள் அணைத்தது, நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல திகி திகுவென கோபக்கனலை ஏற்றி கை நீட்ட வைத்து விட்டது.    

அதன் பின் விடுவிடுவென சுப்புவை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்து விட்டான் எட்வர்ட். ஜீப் கிளம்பிய ஓசையில், ஆழ பெருமூச்சு விட்டு தன்னை சமன் படுத்திக் கொண்டான் அவன். அழுது கொண்டிருக்கும் சுப்புவை தன்னிடம் இருந்து பிரித்து ஹால் நாற்காலியில் அமர்த்தியவன், ரூமின் உள் சென்று மருந்து பெட்டியை எடுத்து வந்தான். ரத்தம் வழியாமல் இருக்க வெள்ளைத் துணி கொண்டு தன் கையை சுற்றிக் கொண்டவன், பட்டு கொடுத்த சுடுநீரில் சுப்புவின் உதட்டை கழுவி விட்டான். பின் ஐஸ் கட்டி கொண்டு உதட்டை மென்மையாக தேய்த்து விட்டான். ரத்தம் நிற்கும் வரை ஐஸ் கட்டியை உதட்டிலேயே வைத்திருந்தான். பின் பட்டர் பூசி, மென்மையாக இதழ் ஒற்றினான்.

“இனிமே ரத்தம் வராது ப்ளேக்கி. திரும்ப திரும்ப பட்டர் பூசுனா, சீக்கிரம் நல்லா போயிரும். நானும் அடிக்கடி முத்தா கொடுத்துட்டே இருப்பேன். இன்னும் சீக்கிரம் நல்லா போயிரும்” முட்டிப் போட்டு அமர்ந்து, நாற்காலியில் உட்கார்ந்திருந்தவளுக்கு சிகிச்சை அளித்தவன் வலது கையால் தோளோடு அவளை அணைத்துக் கொண்டான்.

அவனை விலக்கியவள்,

“எனக்கு நல்லா போச்சு. இப்போ உங்க கைக்கு வைத்தியம் செய்ங்க துரை. ரத்தம் ஊத்திட்டே இருக்கு” கண் கலங்க சொன்னாள்.

அதன் பிறகுதான் தன் கையில் சுற்றி இருந்த வெள்ளை துணியை அகற்றி கை காயத்தை ஆராய்ந்தான் எட்வர்ட். கூப்பிடு தொலைவிலேயே நின்று இவர்கள் இருவரையும் கவனித்தனர் பட்டுவும், பவுனுவும்.

கையில் குத்தி இருந்த கண்ணாடி சில்லுகளை அதன் உபகரணம் கொண்டு ஒவ்வொன்றாக வெளியே இழுத்தான் எட்வர்ட். சுப்புவுக்கு தான் ஒவ்வொரு முறை அவன் கண்ணாடியை வெளியெற்றும் போதும், கண்ணில் குபுக் குபுக்கென நீர் வெளியேறியது.

“இப்படி அழுகறதா இருந்தா ரூமுக்குள்ள போ ப்ளேக்கி.” சொல்லியவன் பட்டுவை அழைத்து  அவளை கூட்டிப் போக சென்னான்.

“இல்ல, இல்ல. உள்ள போக மாட்டேன். இங்கதான் இருப்பேன்” என இன்னும் அழுகையைக் கூட்டினாள் சுப்பு.

“வா புள்ள! துரைய வைத்தியம் செஞ்சிக்க விடு. இப்படி கண்ணீர் விட்டா, அவருக்கு கை நடுங்குதுல்ல” அழைத்தார் பட்டு.

“இனிமே அழல! நான் இங்கதான் இருப்பேன்” கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.

அவனோ, வாக்கு கொடுத்த மாதிரி அவளைக் காக்க முடியவில்லையே எனும் மன அழுத்தத்தில் வலியை தனக்குரிய தண்டனையாக கருதி வலிக்க வலிக்க தனக்கு முதலுதவி செய்து கொண்டான். காயங்களை சுடுநீரில் கழுவும் போதும், எரிய எரிய மருந்திடும் போதும், இன்பெக்‌ஷன் ஆகாமல் இருக்க தனக்கு தானே ஊசியைத் தொடையில் குத்திய போதும், அவன் வாய் மட்டும் ‘யூ டிசர்வ் திஸ் பேய்ன்’( you deserve this pain) என முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

சிகிச்சை முடித்து, கைக்காயத்தை வெள்ளை துணியில் கட்டியவன், மீண்டும் சுப்புவின் வீங்கிய உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான். பட்டுவும் பவுனுவும் அவர்களுக்கு தனிமைக் கொடுத்து அவர்கள் வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

“என்னை மன்னிச்சிரு ப்ளேக்கி. அந்தாளு அடிச்சத என்னால தடுக்க முடியாம போயிருச்சே!” குரல் அடைக்க மன்னிப்பு கேட்டான் எட்வர்ட்.

“பரவாயில்ல துரை! உங்கள பாத்த சந்தோசத்துல உங்க கூட ஆள் இருக்காங்கன்னு நான் கவனிக்காம போய்ட்டேன். என் மேல தான் தப்பு. நான் அப்படி ஓடி வந்து கட்டிக்கிட்டு இருக்க கூடாது” அழுதழுது குரல் கம்மியிருந்தது.

“என் மேல தான் தப்பு ப்ளேக்கி. அந்தாள பத்தி தெரிஞ்சும், பல வருஷம் கழிச்சு பாத்த பாசத்துல மயங்கிட்டேன். எவ்வளவு வெறுப்பு நெஞ்சு முழுக்க கசந்து வழிஞ்சாலும், மை சன்னு கூப்பிட்டப்போ தடுமாறி போயிட்டேன். நானும் எல்லாரையும் போல ரத்தமும் சதையும் உள்ள சாதாரண மனுஷன் தானே! பாசம் கண்ண கட்டிருச்சு. என்னை மன்னிச்சிரு ப்ளேக்கி”

அவள் கைகளை எடுத்து தன் முகத்தில் அழுத்திக் கொண்டான் எட்வர்ட்.

“துரை, அவரு உங்க அப்பாரா?”

“நான் இந்த உலகுக்கு வர காரணமா இருந்தவரு. அப்படினா அப்பாதானே?” குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“அவருக்கு என்னைப் பிடிக்கலையே! உங்க கிட்ட இருந்து என்ன பிரிச்சிருவாறா?”

“என் கிட்ட இருந்து உன்னைப் பிரிச்சா, அந்தாளு உயிர உடம்ப விட்டு பிரிச்சிருவேன்.” கோபம் கனன்றது அவன் குரலில்.

“அவருதான் போயிட்டாறே! விடுங்க துரை. உங்கள கோபமா பாக்க எனக்கு பயமா இருக்கு.”

அவள் அப்படி சொன்னதுன் கண்களை மூடி கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

“சாப்பிட்டியா ப்ளேக்கி பார்லிங்?”

“இப்போதான் சாப்பிட்டேன். நீங்க வாங்க துரை, சாப்புடுங்க. முகத்தப் பார்த்தாலே தெரியுது சாப்புடலனு”

அழைத்து சென்று அமர வைத்தவள், உணவைப் பரிமாறி ஊட்ட ஆரம்பித்தாள்.

“ரைட் ஹேண்ட் நல்லாதான் இருக்கு ப்ளேக்கி”

“பரவாயில்ல. நான் ஊட்டுறேன்”

“இரு ப்ளேக்கி!” அவளை அருகில் இழுத்து ரத்தம் கட்டி காய்ந்திருந்த உதட்டை முத்தமிட்டு ஈரப்படுத்தினான்.

“வலிக்குதா ப்ளேக்கி?”

இல்லையென தலையாட்டியவள், அவனுக்கு ஊட்டுவதில் மும்முரமானாள்.

ஊர் சுற்றுவதற்காக அவர்கள் ஒதுக்கிய கடைசி இரண்டு நாட்களை, கணக்கு வழக்கு நிறைய இருக்கிறது என பொய் சொல்லி கழண்டு கொண்டதை சொன்னான்.

“உன் ஞாபகமாகவே இருந்துச்சு ப்ளேக்கி. அங்க இருந்தப்பலாம் நீ அலமுக்கு செய்தி சொல்லுற மாதிரி காத்துல நானும் செய்தி சொல்லி அனுப்பிட்டே இருந்தேன் உனக்கு. கிடைச்சுதா?” முறுவலித்தான். எப்படி இருந்தவனை, இப்படி மாற்றி விட்டாளே என இன்னும் புன்னகை விரிந்தது.

“ஓ, சேதி கிடைச்சதே! தினமும் நானும் காத்துல உங்களுக்கு முத்தா குடுத்தேனே, கிடைச்சுதா துரை?” என கேட்டாள் சுப்பு.

“முத்தா கிடைக்கலியே! வேற யார் கிட்டயாச்சும் போயிருச்சோ? எவன்டா அவன் என் பொண்டாட்டி அனுப்பன முத்தாவ பாதி வழியில திசை திருப்பிவிட்டவன்?” கிண்டல் செய்தான் எட்வர்ட்.

“பரவாயில்ல விடுங்க. இப்ப தான் வந்துட்டீங்களே. நேருலயே தரேன்.” என சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் உதட்டில் முத்தமிட்டாள்.

“ஆவ்வ்வ்வ்வ்!”

“இரு, இரு! பட்டர் கொண்டு வரேன்.” எடுத்து வந்து தடவிவிட்டான் அவள் உதட்டில்.

“காயம் நல்லா போற வரை, முத்தா கித்தான்னு கிட்ட வர கூடாது. நான் மட்டும் தான் குடுப்பேன். அதுவும் ட்ரீட்மென்ட் கிஸ் தான். புரியுதா?” மென்மையாக கடிந்துக் கொண்டான்.

உணவு முடித்ததும்,

“கொஞ்ச நேரம் தூங்கலாமா ப்ளேக்கி? தூங்கி எழுந்தா வலி கொஞ்சம் குறையும்” என ரூமுக்கு அழைத்து சென்றான். அவன் உள்ளே நகர்ந்து படுக்க , அவனின் வலது கைவளைவில் படுத்துக் கொண்டாள் சுப்பு. தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தவளை,

“என்ன ப்ளேக்கி? தூக்கம் வரலியா?” என கேட்டான் எட்வர்ட்.

“பகல்ல தூங்கி பழகம்மில்லையே துரை. அதோட ரொம்ப நாள் கழிச்சி நீங்க பக்கத்துல இருக்கவும், சந்தோசத்துல தூக்கம் வரல”

வலது கையால் லேசாக வீக்கம் வற்றி இருந்த அவள் உதட்டை வருடியவன்,

“கதை சொல்லுறேன். கேட்டுக்கிட்டே தூங்கறியா?” என கேட்டான்.

“என்ன கதை துரை?”

“எங்க ஊரு ராஜா ராணி கதை”

“சொல்லுங்க, சொல்லுங்க! “ என எழுந்து அமர்ந்தவளை அமுக்கி திரும்பவும் படுக்க வைத்தான் எட்வர்ட்.

“படுத்துட்டே, கண்ணு மூடிக்கிட்டு கேக்கனும் ப்ளேக்கி”

“சரிங்க துரை”

“ஒரு ஊருல ஒரு அழகான ராணி இருந்தாங்கலாம்”

“ஒரு ஊருலயா? உங்க ஊருலயா?”

“எங்க ஊருலதான். பேசாம கேளு ப்ளேக்கி”

“ஹ்ம்ம் சரி, சொல்லுங்க துரை”

“எங்க ஊருல ஒரு அழகான ராணி இருந்தாங்களாம். அவங்க அழக வர்ணிக்க வார்த்தைகளே இல்லையாம். ரொம்ப மென்மையானவங்களாம். அதிர்ந்து பேசவே தெரியாதாம். அந்த ராணியோட அப்பா, அவங்கள கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துகிட்டாராம்.”

“ஹ்ம்ம்”

“ஒரு நாள் அந்த ராணி அவங்க தோழிகளோட ஓப்பேரா (Opera)பார்க்க போயிருந்தாங்களாம்.”

“அப்படின்னா?”

“அது குரலெடுத்து கத்தி பாடற பாட்டு.” பாடிக்காட்டினான் எட்வர்ட். இவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“வேணா, பாடாதீங்க. கண்ணாடி ஒடைய போகுது!” கிளுக்கி சிரித்தாள்.

“ப்ச்! இப்படி கண்ண தொறந்து சிரிச்சுட்டு கேட்டா, கதை சொல்ல மாட்டேன்” முறுக்கிக் கொண்டான் எட்வர்ட்.

“சரி சிரிக்கல துரை”

“அத பார்த்து முடிச்சுட்டு வரப்போ, வண்டி குதிரை ஒன்னு அவங்கள நோக்கி மதம் பிடுச்சு ஓடி வந்ததாம். அவங்க பயந்து கத்த, ஒரு ராஜா அவங்கள இழுத்து காப்பாத்திட்டாராம். இழுத்த வேகத்துக்கு ரெண்டு பேரும் கட்டிகிட்டு ரோட்டுல உருண்டாங்களாம்.”

“ஐயோ!”

“அந்த ராணிய காப்பாத்துன ராஜா அவர் கை அணைப்பிலேயே அவங்கள வச்சிருந்தாராம். பயம் விட்டு கண் திறந்து பார்த்த ராணி, ராஜாவ பார்த்து கண் இமைக்க மறந்துட்டாங்களாம்”

“அம்புட்டு அழகாவா இருந்தாரு ராஜா?”

“ஆமா, ரொம்ப அழகாம் அவரு. ராஜாவும் ராணிய கண்ணிமைக்காம பார்த்தாராம்.” 

“அடடா! அப்புறம்?”

“அப்புறம் என்ன, அந்த பாழா போன லவ்வு ராஜா மேல வந்துருச்சாம் அந்த ராணிக்கு”

“ஏன் அப்படி சொல்லுறீங்க துரை?”

“ராணிக்கு அவர் ஒருத்தர் மேல தானே லவ்வு வந்தது! ஆனா அந்த ராஜாவுக்கு பாக்கற பொண்ணு மேலலாம் லவ்வு வருமாம்”

“அடப்பாவி!’

“பாவிதான்!” குரல் அடைத்தது அவனுக்கு. தொண்டையை செறுமிக் கொண்டான்.  

“அப்புறம்?”

“அந்த ராணி பணக்காரின்னு தெரிஞ்சதும், அந்த ராணி பின்னாலேயே சுத்தி வலைய வீசுனானாம். இந்த ராஜாவுமே பணக்காரன் தான். ஆனாலும்,நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துகிட்டா தான் சொத்து தருவேன்னு ராஜாவோட அப்பா சொல்லிட்டாராம். அதனால இந்த ராணி அழகா இருக்காளே, நல்ல குடும்பம் வேற, பணம் குவிஞ்சிருக்கு, மென்மையா இருக்கா, நம்மள கேள்வி கேக்க மாட்டான்னு கணிச்சு காதல் வலைய வீசுனாறாம்”

“எடுப்பட்ட பாவி! கைகாலுலாம் குஸ்டம் வந்து சாக!” சாபமிட்டாள் சுப்பு.

“ராணியோட அப்பா எவ்வளவு எடுத்து சொல்லியும், இவங்க பிடிவாதம் பிடிச்சு அந்த ராஜாவ கட்டிக்கிட்டாங்களாம். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தாங்களாம். அப்போதான் ராணிக்கு வயித்துல புள்ள வந்துச்சாம்”

“நமக்கு எப்போ புள்ள வரும் துரை?”

“இப்போதானே தோட்டம் போட்டிருக்கேன். பூ வரப்போ, புள்ளையும் வரும் ப்ளேக்கி” சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

கோபமானவள், அவன் வயிற்றில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

“சிரிப்பியா துரைலிங்? சிரிப்பியா?” என அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டினாள். இன்னும் பொங்கி சிரித்தவன்,

“விடு ப்ளேக்கி, விடு!” என அவளைக் கீழே தள்ளி வலது கை மட்டும் வைத்து அவளுக்கு திருப்பி கிச்சு கிச்சு மூட்டினான்.

“கூசுது! கூசுது, விடுங்க துரை” என கத்தி, சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தாள் சுப்பு.

இருவரும் சிரித்து ஓய்ந்ததும் அவன் புறம் திரும்பியவள்,

“சொல்லுங்க துரை! அப்புறம் நீங்க அந்த ராணி வயித்துக்குள்ள வந்ததும் என்ன ஆச்சு?” என கேட்டாள்.

“ப்ளேக்கி!” ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் எட்வர்ட்.