IMTP–EPI 22

அத்தியாயம் 22

 

“ப்ளேக்கி!”

விழிகளில் ஆச்சரியத்தைத் தாங்கி சுப்புவைப் பார்த்தான் எட்வர்ட்.

“ஹ்ம்ம்”

“எப்படி கண்டுபிடிச்ச?”

“ஏன்? கண்டுபிடிக்க மாட்டேனா? எனக்கு ஊரு உலகத்த தெரியாம இருக்கலாம். ஆனா என்னோட துரைய நல்லா தெரியுமே” அவனின் தாடையைப் பற்றிக் கொஞ்சினாள் சுப்பு.

அவள் மடியில் தலை வைத்து அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கினான் எட்வர்ட்.

“கதை ஆரம்பிக்கறப்பவே முகத்த இறுக்கமா வச்சிருந்தீங்க. அப்புறம் போக போக குரல் அடைச்சிக்கிச்சு. கண்ணுல எப்போதும் இருக்கற அந்த ஒளிய காணோம். அதோட உங்கப்பாரு வேற வந்துட்டு போனாருல, அத வச்சிதான் உங்க கதைன்னு கண்டுப்பிடிச்சேன் துரை.”

“பரவாயில்லயே, என் ப்ளேக்கி வளந்துட்டு வராளே!”

அவள் முதுகில் கைக்கொடுத்து கீழே இழுத்தவன், மெல்லிய முத்தம் ஒன்றை அவள் உதட்டில் பதித்தான்.

“ஹ்க்கும்! நான் வளந்துட்டே தான் வரேன்! என் கூடவே இருக்கறதுனால உங்களுக்குத் தான் தெரியல” நொடித்தாள் சுப்பு.

“அப்படியா? எனக்கு தெரியலையா? எப்படி வளந்துட்டேன்னு கொஞ்சம் சொல்லு கேப்போம்!” அவளை வம்பிழுத்து சிரித்தான் எட்வர்ட்.

“நீங்க வாய தொறந்து கேக்கற முன்னுக்கே, உங்களுக்கு தேவைப்பட்டத செஞ்சி வைக்கிறேனே, சாப்பாட்டுல இருந்து சாக்ஸ் வரைக்கும்! வளர்ச்சி இல்லையா துரை?”

ஆமென தலையாட்டினான்.

“அப்புறம், உங்க முகத்தப் பார்த்தே நீங்க கோபமா இருக்கீங்களா, சோகமா இருக்கீங்களா, சந்தோஷமா இருக்கீங்களான்னு கண்டு பிடிக்கறனே, அதுவும் வளர்ச்சிதான்! உங்க சோகம் எதனாலன்னு இன்னும் கண்டுப்பிடிக்கத் தெரியலைதான். ஆனா அப்படியே விடவும் மனசு வர மாட்டிக்கிதே! ஏதாச்சும் செஞ்சு உங்கள, சிரிக்க வைக்க சொல்லுதே என் மனசு, அதுவும் வளர்ச்சிதான். அன்னிக்கு மூஞ்சில தண்ணி ஊத்துன மாதிரி, இன்னிக்கு கிச்சு கிச்சு மூட்டுன மாதிரி. பட்டுக்கா சொன்ன மாதிரி, உங்க மனம் கோணாம நடந்துக்கறேன். அப்போ நான் வளந்துட்டேன் தானே துரை?” என அவனையே கேட்டாள்.

“என்னை புரிஞ்சுக்கறது, என்னைத் தெரிஞ்சிக்கறது மட்டும்தான் உன் வளர்ச்சியா ப்ளேக்கி?”

“என் உலகமே நீங்கதான். உங்கள தெரிஞ்சிக்கிட்டா, உலகத்த தெரிஞ்சிகிட்ட மாதிரி. அந்த வளர்ச்சி போதும் எனக்கு. அதுக்கு மேல என் மூளை வளந்தா நீங்க தாங்க மாட்டீங்க” மிரட்டினாள் சுப்பு.

கண்கள் லேசாக கலங்கியது எட்வர்டுக்கு.

“என்னை சுத்தி மட்டும் தான் உன்னோட உலகம் சுழலனும்னு நான் நினைக்கறேன். அது கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறிக்கிட்டே வருது. ஆனாலும் சந்தோசத்துக்கு பதிலா எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கே ப்ளேக்கி! நான் நல்லவனா?”

“என் துரை எப்பவும் நல்லவருதான். நல்லவரு, வல்லவரு, நாளும் தெரிஞ்சவரு. வாய்க்குள்ள கைய விட்டா கடிக்கத் தெரியாதவரு” என்றவள், தன் ஆட்காட்டி விரலை அவன் வாய்க்குள் நுழைத்தாள்.

வலிக்காமல் கடித்தவன்.

“பாத்தியா ப்ளேக்கி, நான் நல்லவன் இல்ல! உன்னோட நம்பிக்கைக்கு ஏற்றவன் இல்ல. நீ வேணும்னு நிறைய தப்பு பண்ணிருக்கேன். தவறுக்கு மன்னிப்பு இருக்கு, தப்புக்கு மன்னிப்பு இல்ல, தண்டனை மட்டும்தான். என் ப்ளேக்கி எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும், சந்தோசமா ஏத்துக்குவேன் நான்.” குரலடைக்க சொன்னான்.

“அச்சோ துரை! இன்னிக்கு ஏன் இப்படிலாம் பேசறீங்க? இப்படி கண்ணு கலங்குனா, நான் எழுந்து போயிருவேன். உங்க ஊரு ராஜா ராணி கதை நல்லாவே இல்ல, ஒரே அழுகாச்சி! அதுக்கு எங்க ஊரு ஆயா வடை சுட்ட கதை எவ்வளவோ தேவலாம். அதுலயாச்சும் வடைய கண்ணுல காட்டுனாங்க.” பேச்சை மாற்றினாள்.

“உனக்கு பிடிக்கும்கறதனால எங்க கதைல வடையைக் கொண்டு வரமுடியாது ப்ளேக்கி. காக்காவ வேணும்னா கொண்டு வரலாம். ஒரு காக்கா இல்ல ரெண்டு காக்கா. என்னைப் பிச்சி பிச்சி தின்ன ரெண்டு கிழட்டு காக்கா”

ஆறுதலுக்காக அவளை அணைத்துக் கொண்டவன் எண்ணமெல்லாம் ஒதுக்கி, பதுக்கி வைத்திருந்த அவன் பால்ய வாழ்க்கைக்கு பயணித்தது.

“மேகி டார்லிங்! இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் இந்த கண்ணாமூச்சி வாழ்க்கை? அவன் ஒளியறதும், நீ தேடுறதும் கொஞ்சம் கூட என்னால சகிச்சுக்க முடியலை. கிளி மாதிரி வளர்த்த புள்ளையை ஒரு திருட்டுப் பூனைக்கு பலியா குடுத்துட்டனே!” ஆக்ரோஷமாக கத்தினார் ஜோர்ஜ், எட்வர்டின் அம்மாவைப் பெற்றவர்.

“டாடி, கால்ம் டவுன். வில்லியம் என் மேல உயிரையே வச்சிருக்காரு. ஆனா அத இன்னும் அவர் புரிஞ்சுக்கல. சீக்கிரம் நான் புரிய வைப்பேன்” லேசாக கண் கலங்க தன் தந்தையைப் பாவமாக ஏறிட்டார் மேகி என அழைக்கப்படும் மார்கிரேட்.

“போதும் மேகி! நீ வாழ்ந்துகிட்டு இருக்கறது முட்டாளின் சொர்க்கம். உன்னோட ரூமுக்குள்ள மட்டும்தான் உன் புருஷன் உனக்கானவனா இருக்கான். உன் ரூம தாண்டிட்டா, அவன் ரோமியோவா அவதாரம் எடுத்துருறான். தெரிஞ்சும் அவன் போகற இடத்துகெல்லாம் ஸ்பை மாதிரி நீயே போய் உளவு பார்க்கிறது எவ்வளவு கேவலமா இருக்கு தெரியுமா? பெத்த புள்ள பாலுக்கு அழுதுட்டு இருக்கான், ஆனா நீ அவன கூட மறந்துட்டு உன்னோட வீணாப்போன கல்யாணத்த காப்பாத்திக்க ஓடிக்கிட்டு இருக்க” குரல் கோபமாக ஒலித்தது அவருக்கு. சீராட்டி வளர்த்த மகளை தம் வாயாலேயே வசை பாடுவார் என அவர் கனவிலும் நினைத்தது இல்லை. பேரனை நினைத்து, தாத்தனின் உள்ளம் கொந்தளித்தது.

“எனக்கு அவர் தான் டாடி முக்கியம். அப்புறம் தான் மத்தவங்க” என தன் பிடியில் நின்றார் மேகி.

மனது விட்டுப் போனது ஜோர்ஜிக்கு. கட்டிலில் கை காலை அசைத்து விளையாடிக் கொண்டிருக்கும் தன் ஐந்து மாத பேரன் எட்வர்டை கைகளில் அள்ளிக் கொண்டார்.  

“இந்தப் பிஞ்சு குழந்தைய ராத்திரி தனியா தவிக்க விட்டுட்டு போக எப்படிமா உனக்கு மனசு வந்தது? அந்தளவுக்கு காதல் உன் கண்ணை மறைக்கிதா? காதல்ன்னு சொன்னாலும், அந்த காதலுக்கு கிடைச்ச பரிசுதானே இவன்! இவனை எப்படிமா சாவின் விளிம்புக்கு உன்னால தள்ள முடிஞ்சது? நான் பெத்த மக அவ்வளவு கல்நெஞ்சுக்காரியா?” கசந்து வழிந்தது அவருக்கு.

“டாடி! அப்படிலாம் சொல்லாதீங்க டாடி! என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாதா? அவருக்கு அப்புறம் இவன் மேலதான் நான் உயிரையே வச்சிருக்கேன். என் கூட இருந்த வில்லி(வில்லியம்), நடு ஜாமத்துல சத்தம் போடாம எழுந்து போகவும் என்னால எதையும் சிந்திக்க முடியலை. இன்னொருத்திய அவர் நாடக்கூடாதுன்ற எண்ணம் மட்டும் தான் என் மண்டைய போட்டு ஆட்டுச்சு. அந்த நேரத்துல ஏடி பத்திலாம் எனக்கு நினைப்பே வரல டாடி” மடிந்து அமர்ந்து கதறினார் மேகி.

கட்டிலில் பக்கத்தில் படுத்திருந்த மகனைக் கூட பாதுக்கப்பாக படுக்க வைக்காமல், கணவரை மட்டுமே கருத்தில் கொண்டு அவர் பின்னாடியே வெளியேறி இருந்தார் மேகி. நடு இரவில் பசிக்கு அழுத குட்டி எட்வர்ட், பால் கிடைக்காததால் பெருங்குரலெடுத்து அழுதிருக்கிறான். முண்டி, நகர்ந்து உருண்ட குழந்தை , கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தான். வீச்சென அழுகைக் குரல் கேட்ட வேலைகாரி தான் விரைந்து வந்து அவனைத் தூக்கி சமாதானப் படுத்தினாள். புட்டிபால் கொடுத்து சமாதானம் செய்திருந்தாலும், பின் மண்டை புடைத்து ராத்திரி முழுக்க கத்தி கொண்டே இருந்தான் எட்வர்ட்.

கணவனை எல்லா இடத்திலும் தேடி தோல்வியுடன், விடிகாலை நேரம் வீட்டை அடைந்த மேகிக்கு கேட்டது எட்வர்டின் அழுகுரல் தான். அப்பொழுதான் மகனின் நினைவே அவருக்கு வந்தது. ஓடி சென்று மகனை அள்ளிக் கொண்டவர், கதறி தீர்த்தார். வேலையாள் மூலம் வந்து எட்வர்டை பரிசோதித்து சென்றிருந்தார் டாக்டர். அந்த டாக்டரின் வழியாக விஷயம் அவனின் அப்பா வழி தாத்தாவுக்கு, அம்மா வழி தாத்தாவுக்கும் கசிந்தது. அருகிலே இருந்ததால் ஐந்து மணி நேரத்திலேயே குதிரை வண்டியில் வந்துவிட்டார் ஜோர்ஜ்.

“இது சரிப்படாது மேகி! உன் கிட்ட விட்டா, புருஷன் பைத்தியத்துல என் பேரனை பலி கொடுத்திருவ! நான் இப்பவே இவனை என் கூட கூட்டிட்டுப் போறேன். அம்மா இல்லாம உன்னை எப்படி நானே வளத்தனோ, அதே மாதிரி இவனையும் நானே வளக்கறேன்” பேரனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் அவர்.

“யாரு பேரன யாரு சொந்தம் கொண்டாடறது?” முழங்கினார் கேப்ரியல், வில்லியமின் அப்பா. தூரமாக வசிக்கும் அவர் அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்தார்.

“கேடுகெட்ட பிள்ளைய பெத்து வச்சிருக்கற உனக்கெல்லாம் எதுக்குடா பேரன்? இனி இவன் என் பேரன். என் கூட தான் இருப்பான்” பதிலுக்கு சீறினார் ஜோர்ஜ்.

“சொந்தப் புருஷன கைக்குள்ள போட்டுக்க தெரியாத பொண்ண வளத்தவன் தானே நீ? என் பேரன் உன் கிட்ட இருந்தா அவனையும் உன்ன மாதிரி பொட்டப்பயலா தான் வளர்ப்ப. ஸ்கௌண்டரல்! என் பேரன் மேல உரிமை கொண்டாடுற உன் உயிரை எமனுக்கு பரிசா அனுப்பிருவேன். ஜாக்கிரதை” கர்ஜித்தார் கேப்ரியல்.

“யாருடா ஸ்கௌண்டரல்? நானா? மகனை ஒழுக்கமா வளக்கத் தெரியாம ஊர் மேய விட்டவன் பேசற பேச்சா இது? யூ பாஸ்டர்ட்!” என முழங்கியவர், பேரனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கேப்ரியல் மீது பாய்ந்தார்.

எட்வர்ட் நடுவில் சிக்கி இருக்க இரு தாத்தாக்களும் அவனுக்காக உரிமைப் போராட்டம் நடத்திக் கட்டிப் புரண்டனர். வேலைக்காரர்களும், மேகியும் எவ்வளவு தடுத்தும் அடிதடி ஓயவில்லை. நடுவில் சிக்கி இருந்த எட்வர்டின் அலறல் அழுகுரலே இருவரையும் நிதானத்துக்குக் கொண்டு வந்தது. மூச்சு வாங்க எழுந்தவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் முறைத்தவாறே நின்றிருந்தனர்.

“எனக்கு என் பேரன் வேணும்!” எட்வர்டை ஜோர்ஜின் கையில் இருந்து பறிக்க வந்தார் கேப்ரியல். இவர் கொடுக்க முடியாது என பின்வாங்க, இன்னொரு சண்டைக்கு விதை தூவப்பட்டது.

அதற்குள் வீடு திரும்பி இருந்த வில்லியம்,

“ஸ்டாப் இட்! இதென்ன வீடா இல்ல சந்தக்கடையா? மனுஷனே ராத்திரி எல்லாம் தூக்கம் இல்லாம வீட்டுக்கு வந்தா, இங்க டிராமா போட்டுட்டு இருக்கீங்க ரெண்டு பெரும். பிள்ளை வேணும்னா பெத்துக்க வேண்டியதுதானே? எதுக்கு என் வீட்டில வந்து சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” கிண்டலாக சிரித்தான் வில்லியம்.

“வில்லியம்!” இரண்டு கிழ சிங்கங்களும் கர்ஜித்தன.

“ஷ்ஷ்..சத்தத்த குறைங்க! ராத்திரி எல்லாம் அதீத உடல் உழைப்பு எனக்கு. சின்ன சத்தம் கேட்டாலும் தலை வலி தெறிக்குது” முனகினான் வில்லியம். அவன் பேசி முடிப்பதற்குள் சூடான இஞ்சி டீயுடன் அவன் முன் நின்றிருந்தாள் மேகி. அவள் கன்னத்தை ஆசையாக தட்டியவன்,

“தட்ஸ் மை கேர்ள்!” என பாராட்டினான்.

ஜோர்ஜை ஏளனமாக கேப்ரியல் பார்க்க, அவரை இவர் முறைத்துப் பார்த்தார்.

மனைவியை கண்ணால் பருகியபடி, டீயை உறிஞ்சினான் வில்லியம். கணவரின் காதல் பார்வையில் முகம் மலர்ந்த மேகிக்கு, மகன் தன் தந்தையின் கையில் கதறிக் கொண்டிருப்பது கூட கேட்கவில்லை.

நடந்து கொண்டிருந்த நாடகத்தைப் பார்த்த இரு தாத்தாக்களுக்கும், இவர்களை நம்பி பேரனை விட முடியாது என ஐயம் திரிபர தெரிந்துவிட்டது.

“கேப், வெளிய போய் பேசலாம்” என சமாதான உடன்படிக்கைக்கு அழைத்தார் ஜோர்ஜ். பிள்ளையைக் கேட்டு கை நீட்டிய கேப்ரியலிடம் பிள்ளையைக் கொடுத்துவிட்டு வாசலில் அவருக்கு காத்திருந்தார் அவர்.

கண் அசைவால் வேலைக்காரியிடம் இருந்து பால் புட்டியை கேட்டு வாங்கிய கேப்ரியல், பேரனைத் தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு நடந்தார். இங்கிருந்த இருக்கையில் அமர்ந்து பாலூட்டினார் எட்வர்டுக்கு. அவர் அருகில் வந்து அமர்ந்தார் ஜோர்ஜ். தோற்றத்தில் எட்வர்ட், கேப்ரியலை ஒத்திருந்தான். கண் மட்டும் ஜோர்ஜை கொண்டிருந்தது.

அவன் பால் குடித்து மடியிலேயே உறங்கும் வரை இருவரும் அமைதியாக இருந்தனர்.

“சொல்லு” ஆரம்பித்தார் கேப்ரியல்.

“இனிமே இவங்கள நம்பி புண்ணியம் இல்லை” நலிந்த குரலில் சொன்னார் ஜோர்ஜ்.

“என்ன செய்யலாம்?” கேட்டார் கேப்ரியல். அவருக்கு அடிதடியில் தான் பேச தெரியும். அதனால் தான் மூளைக்காரரான ஜோர்ஜிடம் ஆலோசனைக் கேட்டார்.

“நாமளே வளக்கலாம் இவன”

“எப்படி?”

“என்ன எப்படி? ஒத்த ஆளா எப்படி தப்பு தப்பா நம்ம பிள்ளைங்களை வளத்தோமோ, அதுக்கு நேர் எதிரா இவன வளப்போம்” சுள்ளென சொன்னார் ஜோர்ஜ்.

“நீ ஆறு மாசம், நான் ஆறு மாசமா? அப்படிலாம் என்னால முடியாது. உன்னோட ஆறு மாசத்துல இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவனைக் கெடுத்து வச்சிட்டேனா, நான் எப்படி சமாளிக்கறது?” அடிதடி மூளை அப்படிதான் யோசிக்க சொன்னது.

“நீயும் உன் சந்தேகமும்! தனியா வீடு வாங்கலாம். ரெண்டு பேரும் சேர்ந்தே வளக்கலாம். பேரனுக்காக உன் மூஞ்ச நான் சகிச்சிக்கிறேன்”

“என் பேரனுக்காக நானும் உன் மூஞ்ச சகிச்சிக்கிறேன்” ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள் இருவரும்.

“இந்தப் புள்ளைக்கு நாம இருக்கோம். இன்னும் புள்ள வந்தா என்ன செய்யறது?” பதைத்தார் ஜோர்ஜ்.

“வராது!” சிரித்தார் கேப்ரியல்.

“அதெப்படி சொல்லுற?”

“உன் பொண்ணுக்கு இனி புள்ள பொறக்காது.”

“என்னடா செஞ்ச அவளுக்கு?” பெத்தவருக்கு கொதித்தது.

“இந்த புள்ளைய இவ வளக்கற லட்சணம் தெரியலையா? பாசம் பொங்குது உனக்கு!” கிண்டலடித்தவர்,

“வேலைக்காரங்கள வச்சு சாப்பாட்டுல பிள்ளை பெத்துக்க முடியாத மாதிரி மாத்திரை கலந்து குடுத்துருக்கேன். ரெண்டு பேருக்குமே! இவன் ஊரே மேஞ்சாலும், எட்வர்ட் மட்டும் தான் நமக்கு பேரன். நம்ம சொத்தெல்லாம் அவனுக்கு மட்டும்தான். யாருன்னு நினைச்சே என்னை? கேப்ரியல் ஸ்மித் டூக்டா நானு!” பேரனை மென்மையாக பிடித்திருந்தாலும், குரல் இறும்பாக வெளி வந்தது. ஜோர்ஜிக்கே ஒரு நொடி உடல் நடுங்கிப் போனது.

பிள்ளையைக் கொடுக்காவிட்டால், நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் எனும் மிரட்டல் வேலை செய்ததால் மனசாட்சியே இல்லாமல் எட்வர்டை தூக்கிக் கொடுத்தான் வில்லியம். வில்லியமின் மேல் தான் வைத்த காதலைவிட, மகன் மேல் இருந்த பாசம் சின்னதாக தெரிய தலையாட்டி ஒத்துக் கொண்டார் மேகி. இப்படிதான் எட்வர்ட் தனது ஐந்தாவது மாதத்தில் இருந்து, பெண் வாசனை படாமல் இரு தாத்தாக்களின் அரவணைப்பில் வளர ஆரம்பித்தான்.

இவர்களைப் பார்த்து வளர்ந்ததாலே ஜோர்ஜின் அறிவும், கேப்ரியலின் ஆளுமையும் ஒருங்கே இவனிடம் வாசம் செய்ய ஆரம்பித்தன. எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிய இரு தாத்தாக்களும் அன்பை மட்டும் மனதின் உள்ளேயே பூட்டி வைத்தனர். பாசம் காட்டி பிள்ளைகளைத் தப்பாக வளர்த்த தவற்றை பேரனிடம் கண்டிப்பு காட்டி சரி செய்ய விழைந்தனர். அதிலும், இன வெறியிலும் மட்டும்தான் இவ்விருவரும் ஒத்தக் கருத்து வைத்திருந்தனர். மற்ற எல்லா விஷயத்திலும் போட்டா போட்டிதான்.

ஜோர்ஜ் பேரனை பியானோ கற்க அனுப்பினால், கேப்ரியல் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அனுப்பினார். ஜோர்ஜ் வீட்டிலேயே ஆள் வைத்து படிப்புக்கு ஏற்பாடு செய்தால், கேப்ரியல் தற்காப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் எந்தப் பாடு படுத்தினாலும், தன் முழுமனதுடன் ஈடுபாட்டோடு கற்றான் எட்வர்ட். அப்படியாவது இருவரில் யாராவது பாசப் பார்வை பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கம் அவன் பிஞ்சு மனதை வாட்டும். வீட்டிற்குள் பொத்தி வளர்க்கப் பட்ட எட்வர்டுக்கும் வெளி காற்றை சுவாசிக்க வாய்ப்பு வந்தது. அவனது பதினெட்டாவது வயதில், இருவருமே ஒருமுகமாக முடிவெடுத்து பட்டாளத்துக்கு அனுப்பினார்கள் எட்வர்டை. நாட்டுப்பற்று அவர்கள் இருவருக்குமே அதிகமாக இருந்தது.

வெளி உலகம் இப்படிதான் இருக்கும் என ஆர்மியில் தான் கற்றுக் கொண்டான் எட்வர்ட். மருத்துவமும் அவன் அங்கு பயின்றதுதான். அவன் ஆர்மியில் இருக்கும் போதே, மூப்பின் காரணமாக ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்தனர் ஜோர்ஜும், கேப்ரியலும்.

பேரனின் நன்மைக்காக அவர்கள் விட்டு சென்ற எண்ணிலடங்காத சொத்துக்கள் தான் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஆர்மியில் இருந்து பல வருடங்கள் கழித்து வந்தவனை ஆரத் தழுவி வரவேற்றது வேறு யாருமில்லை, சாட்சாத் வில்லியம்தான். அவர் அருகிலேயே சிரித்த முகத்துடன் மேகி. தூரத்தில் இருந்தே பார்த்து மகிழ்ந்திருந்த பெற்றவர்களை நேரில் கண்டதும் அவனுக்கும் கண் இரண்டும் கலங்கித்தான் போயின.

தாத்தாக்கள் இவர்கள் இருவரையும் பற்றி சொல்லித்தான் வைத்திருந்தார்கள். ஆனாலும் பெத்த மனம் கல்லு, பிள்ளை மனம் பித்தாக இருந்தது அவர்கள் ஊரில்.

“மாம், டாடி” கட்டிக் கொண்டான் அவர்களை.

“ஏடி மை சன். உன்னை எங்க கண்ணுலயே காட்டலியே உன் தாத்தா ரெண்டு பேரும். உன்னை பார்க்க வந்தா, உன்னையும் ஒன்னும் இல்லாம நடு ரோட்டுல விட்டுருவோம்னு எங்களை மிரட்டி, எங்க கிட்ட இருந்து உன்னைப் பிரிச்சிட்டாங்களே!” கண்ணீர் வடித்தார் வில்லியம். மேகிக்கு வளர்ந்து நிற்கும் மகனைப் பார்த்து நிஜமாலுமே ஆனந்தக் கண்ணீர் வந்தது. சில சமயங்களில், மனது கேட்காமல் மகனை தேடி வருபவரை விரட்டி விட்டுவிடுவார் கேப்ரியல். மகனின் முகம் வருடி கண் கலங்கியவர்,

“ஏடி! இனி எங்க கூடவே இருப்பா” என அழைத்தார். மறுக்க முடியாமல் அவர்களுடன் சென்றான் அன்புக்கு ஏங்கிய எட்வர்ட்.

சில நாட்கள் அவனை அன்பால் குளிப்பாட்டினார்கள் பெற்றவர்கள் இருவரும். அன்று முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்துவதாக சொல்லிய மேகி, எட்வர்டை வீட்டின் தோட்டத்தில் காத்திருக்க சொன்னார்.

அமர்ந்து புத்த்கம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தவன் நாசியை சுகந்தமான மணம் ஒன்று சுண்டி இழுத்தது. ஆழ்ந்து மூச்சிழுத்து அந்த லாவண்டர் வாசனையை அனுபவித்தவன், மெல்ல திரும்பி பார்த்தான்.

அங்கே நின்றிருந்த மெழுகு சிலையைப் பார்த்து இமைக்க மறந்தான் எட்வர்ட்.

“ஹாய் தேர்! ஐம் மர்லினா” கை நீட்டியவளின் கையைப் பற்றி குலுக்கினான் எட்வர்ட்.

மர்லினா என பெயர் கொண்ட அந்த அழகு தேவதை மர்லின் மன்றோவையே தோற்கடிக்கும் அழகில் ஆளை மயக்கியது.

“ஹாய்! ஐம், ஹ்ம்ம் எட்வர்ட்” வார்த்தைகள் தந்தி அடிக்க முதன் முதலாக பெண்மையின் மென்மையை அவள் கை வழியாக உணர்ந்தான் எட்வர்ட்.

ஒருவரை ஒருவர் பார்வையால் ஆராய, அவர்கள் முன் பிரசன்னமானார் மேகி.

“ஏடி, இவ பேர் மர்லினா ரூணி. என்னோட பேஸ்ட் பிரண்டோட மகள். நான் உனக்குப் பார்த்து வச்சிருக்கற பொண்ணு” அறிமுகப் படுத்தினார்.

எட்வர்டுக்கு அவளைப் பார்த்து தடுமாற்றமாக இருந்தது. அவளின் அழகு கண்ணை நிறைத்தது. எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். அது அம்மா பார்த்த பெண்ணாக இருந்தால் இன்னும் நலம் என எண்ணினாலும், பழகி பார்த்து முடிவு சொல்லலாம் என தீர்மானித்தான்.   

அவன் முகத்தில் தெரிந்த ஒரு நொடி பிரமிப்பில் கர்வம் கொண்டாலும், மறு நொடியே அது காணாமல் போனதில் மர்லினின் தன்மானம் அடி வாங்கியது.

‘நீ என்ன பெரிய இவனா?’ என மனதில் கருவிக் கொண்டாள். அவனை மயக்கி தன் பின்னால் சுற்ற விட வேண்டும் என்பதை உறுதியாகவே எடுத்துக் கொண்டாள்.

எட்வர்ட் கேட்டு கொண்ட மாதிரியே, பேசினார்கள், பழகினார்கள், சேர்ந்து உண்டார்கள். எட்வர்டின் கவனிப்பில், மரியாதையில், நடத்தையில் மயக்க நினைத்தவள், மயங்கி நின்றாள்.

எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. எட்வர்ட் மட்டும் இன்னும் தனது சம்மதத்தை சொல்லாமலே இருந்தான். பெண்களிடம் நெருங்கிய பழக்கம் இல்லாததால், அவள் குணத்தை கணிக்கவோ, பட்டென முடிவெடுக்கவோ தயங்கினான்.

அன்று அம்மாவும், மகனும் தூரத்தில் இருக்கும் ஜோர்ஜின் சொந்தத்தில் நடந்திருந்த ஒரு இறப்பிற்கு செல்ல வேண்டிய கட்டாயம். வில்லியம் வர மறுத்துவிட்டதால் இவர்கள் இருவர் மட்டும் சென்றார்கள். பாதி வழியில், குதிரைக்கு அடிப்பட்டுவிட்டதால், வண்டியைத் திருப்பிக் கொண்டு வீடு வந்துவிட்டார்கள்.

உள்ளே நுழையும் போதே, கசமுசவென சத்தம். எட்வர்டை பின் தொடர்ந்து சத்தம் வந்த ரூமுக்கு சென்றார் மேகி. அங்கே லேசாக மூடி இருந்த கதவின் மறுபுறம் இருவரும் கண்ட காட்சி, இதயத்தை உலுக்கிப் போட்டது. எட்வர்ட் பட்டென முகத்தைத் திருப்பிக் கொள்ள, மேகி வெடித்த அழுகையை வாய் பொத்தி அடக்கினார்.

தாங்கள் காட்சி பொருளாய் இருப்பது தெரியாமல் உள்ளே சரசமாடிக் கொண்டிருந்தனர் வில்லியமும், மர்லினும்.

“வில்லி, இனிமே நமக்குள்ள இந்த மாதிரி உறவு வேணாம்! ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யுவர் சன்” வில்லியமின் அணைப்பில் இருந்து கொண்டே சொன்னாள் மெர்லின்.

பளீரென அவளை அறைந்திருந்தார் வில்லியம்.

“அவன் சொத்த உன் மூலமா எழுதி வாங்கதான் இந்த கல்யாணம். லவ்வு, கிவ்வுன்னு பைத்தியம் மாதிரி உளறாதே லின்! ஐ ஹேட் தட் வோர்ட். ஏற்கனவே லவ்வுன்னு சொல்லி ஒருத்தி என் கழுத்த பாம்பு மாதிரி பிடிச்சுட்டு தொங்குறா. அந்த வோர்டைக் கேட்டாலே பத்திட்டு வருது” கோபத்தில் கத்தினான் வில்லியம்.

“உன் மகன் உன்ன மாதிரி இல்ல வில்லி. ஹீ இஸ் அ ஜெண்டில்மேன். அவன கல்யாணம் பண்ணிகிட்டா, சொத்துக்கு சொத்தும் ஆச்சு, நல்ல புருஷனுக்கு கேரண்டியும் ஆச்சு. இனி நீ எனக்கு தேவை இல்ல. என்னையே கை நீட்டிட்டே, இல்ல. கெட் லாஸ்ட் யூ ஓல்ட் மேன்” இவளும் கத்தினாள்.

“ஹேய், லின்.. ஆத்திரத்துல அடிச்சுட்டேன் டார்லிங். என் மகனே ஆனாலும், காதல் செய்யறதுல என்னை அடிச்சுக்க முடியாது. எப்படியும் என் கிட்ட நீ திரும்பி வருவ.” சிரித்தான் வில்லியம்.

“அது நடக்கறப்போ பாத்துக்கலாம். இப்ப நான் போகனும்.” எழுந்தாள் மர்லின்.

“லின், சொத்து எனக்கு வரனும். நீ அவன் கூட நிம்மதியா வாழனும்னா என்னோட உதவி தேவை. டோண்ட் ஆக்ட் ஸ்மார்ட்.” மிரட்டியவன், கதவைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றான். அவன் பார்வையைப் பின்பற்றி பார்த்த மர்லினும் உறைந்து போய் நின்றாள்.

அவர்கள் அருகில் வந்த எட்வர்டின் பார்வையில் நடுங்கிப் போய் நின்றாள் மர்லின்.

எத்தனை காதல் பார்வைகள், எத்தனை காதல் வார்த்தைகள், எத்தனை எதிர்கால திட்டங்கள். எப்படி அடுக்கடுக்காய் இவளால் நடிக்க முடிந்தது என ஆச்சரியம் வந்ததே தவிர, ஆத்திரம் வரவில்லை. அருவருப்பில் முகத்தை சுளித்தவன், கதவை நோக்கி கைக்காட்டினான்.

“அவுட்!” அவனின் கர்ஜனையில் துணியை அள்ளி முடிந்து கொண்டு ஓடிப்போனாள் மர்லின்.

நிதானமாக வில்லியத்தை நோக்கியவன்,

“இந்த ஜென்மத்துல இந்த சொத்து உங்க கைக்கு கிடைக்காது! உங்களால முடிஞ்சத பாருங்க!” கை நீட்டி எச்சரித்தவன் ரூமில் இருந்து வெளியேறினான். தாயின் அழுகையில் ஒரு நொடி தயங்கி நின்றவன்,

“என் கூட வாங்க! உங்கள ராணி மாதிரி பாத்துக்கறேன்” என அழைத்தான்.

முடியாது என ஒரு தலையாட்டல் மட்டும் தான் அவரிடம் இருந்து கிடைத்தது. வெறுத்துப் போனது எட்வர்டுக்கு.

திரும்பி இருவரையும் பார்த்தவன்,

“நீங்க ரெண்டு பேரும் எப்போழுதும் போல சுகமா வாழறதுக்கு நான் பொறுப்பு. அதுக்கு மேல ஒரு சல்லி காசு என் கிட்ட இருந்து பெயராது. குட் பாய்!”

அன்று அங்கிருந்து கிளம்பியவன்தான். மலாயா அவனை இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டது.