IMTP–EPI 23

அத்தியாயம் 23

 

சாதாரணமாகவே எட்வர்ட் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பாள் சுப்பு. அவன் கதையைக் கேட்டதில் இருந்து அவனை விட்டே நகர்வதில்லை. என்ன புரிந்ததோ இல்லையோ, அவனுக்கு தன்னைத் தவிர பாசம் காட்ட ஆளில்லை என்பது மட்டும் நன்றாக புரிந்தது அவளுக்கு.

அவன் குளிக்கும் போது கூட கதவின் வெளியேயே நின்றிருப்பாள். அன்றும் அப்படிதான் குளித்து முடித்து கதவைத் திறக்கவும், அதில் சாய்ந்திருந்தவள் அவன் மீது மோதி நின்றாள்.

“இங்க என்ன பண்ணற ப்ளேக்கி? நான் என்ன வயசு பொண்ணா, குளிக்கறதுக்கு காவல் இருக்க?”

விழாமல் அவளை நிறுத்திப் பிடித்தவன் சிரிப்புடன் கேட்டான். அவனிடம் இருந்து விலகி இன்னொரு துண்டு எடுத்து வந்தவள், அவனைக் குனிய சொல்லி தலையைத் துவட்டினாள்.

“உங்க அப்பாரு வந்து போனதுல இருந்து மனசே சரியில்ல. நீங்க கொஞ்ச நேரம் காணம்னா கூட மனசு படபடன்னு இருக்கு துரை.”

“அப்படினா கதவு வெளிய நிக்கக் கூடாது ப்ளேக்கி. இனிமே நான் குளிக்கறப்ப, உள்ளயே வந்து நின்னுக்க” அவள் பயத்தைப் போக்க கிண்டலில் இறங்கினான்.

“வெள்ளை பன்னி குளிக்கறத பாத்தா கண்ணு அவிஞ்சு போயிருமாம்! அதனால நான் கதவு வெளியவே நிக்கறேன்” சிரிக்காமல் அவனுக்கு பதிலடி கொடுத்தாள் சுப்பு.

தலையை அவளிடம் கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருந்தவனுக்கு, அவள் சொன்னதின் அர்த்தம் மெதுவாக தான் புரிந்தது.

“ஏ ப்ளேக்கி! யார பாத்து வெள்ளை பன்னின்னு சொன்ன?”

“நீங்க என்ன ப்ளேக்கின்னு கூப்புடறப்ப நான் வெள்ளை பன்னின்னு கூப்புட கூடாதா துரை?”

“உனக்கு ப்ளேக்கின்னா என்னன்னு தெரிஞ்சிருச்சா? எப்போ தெரியும்?” ஆச்சரியமாக கேட்டான் எட்வர்ட்.

“உங்களுக்கு தேங்சூ சொன்னேனே அப்போவே தெரியும். சித்தப்பூ கிட்ட கேட்டுட்டேன்.”

“தெரிஞ்சுமா ப்ளேக்கின்னு கூப்பிட்டப்போ, நான் அவ்வளவு அழகான்னு கேட்டு திரும்ப திரும்ப கூப்பிட சொன்ன?”

“ஆமா துரை! நீங்க அப்படி கூப்புடறப்போ, குரலு குழைஞ்சி பாசமா வருதா, அதான் அப்படியே கூப்பிடட்டும்னு விட்டுட்டேன்.”  அவள் முகத்தை தன் வெற்று மார்பில் அழுத்திக் கொண்டான் எட்வர்ட்.

“என்னை மன்னிச்சிரு ப்ளேக்கி. சாரி, சாரி! சுபூ. இனிமே அப்படி கூப்பிட மாட்டேன். சரியா?”

“எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு. அப்படிதான் கூப்புடனும் துரை.”

“அர்த்தம் தெரியாதப்ப கூப்பிட்டது பரவாயில்ல. உனக்கு தெரிஞ்ச பிறகு அப்படி கூப்பிடறது சரியில்லையே!”

“ப்ளிஸ் துரைலிங்! ப்ளேக்கின்னே கூப்பிடுங்க. இல்லைனா என் கிட்ட பேச வேணாம்” அவன் பிடியில் இருந்து விலகியவள், முதுகு காட்டி நின்று கொண்டாள்.

“பிடிவாதம்! எல்லாத்துக்கும் பிடிவாதம். சரி, அப்படியே கூப்புடறேன் ப்ளேக்கி. எனக்குமே அதுதான் பிடிச்சிருக்கு. முதன் முதல்லா உனக்கு நான் வச்ச செல்ல பேரு! என் செல்ல ப்ளேக்கி” பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.

“இல்ல, நீங்கதான் என் செல்ல துரைலிங்”

“இல்ல, நீதான் என் செல்ல ப்ளேக்கி”

“துரைலிங்!”

“ப்ளேக்கி!”

“துரைலிங்!” அவன் பக்கம் திரும்பி, அண்ணாந்து அவன் முகத்தை ஆசையாகப் பார்த்தாள் சுப்பு.

“உன் பார்வையே சரியில்லையே ப்ளேக்கி! இப்படி பார்த்தா சூரியகாந்தி பூ கேப்பியே!”

ஆமென தலையாட்டினாள் சுப்பு.

“அடி வாங்குவ ப்ளேக்கி! நினைச்ச நேரத்துக்கெல்லாம் பூ கேட்க கூடாது. தோட்டம் வாடிப்போயிரும். தோட்டத்துக்கு நல்லா உரம் போட்டு செழிப்பா பாத்துக்கனும். அதனால முதல்ல போய் காலை சாப்பாடு சாப்பிடு. அப்புறம் நான் பூ குடுக்கறேன்.” என வலுக்கட்டாயமாக சாப்பிட அழைத்து சென்றான் எட்வர்ட். சாப்பிட்டு முடித்தவளுக்கு, அவள் கேட்ட பூவை அளிக்கவும் மறக்கவில்லை  எட்வர்ட்.

கை காயம் ஆறி அவன் வேலைக்கு செல்ல ஆயத்தமான போது, தொடங்கியது அவர்களுக்குள் சின்ன சண்டை.

“கை இன்னும் நல்லா போகல துரை. அதுக்குள்ள ஏன் வேலைக்குப் போகனும்?”

“நல்லா போயிருச்சி ப்ளேக்கி. பாரு காயம் ஆறி தழும்பு கூட காஞ்சி போயிருச்சு” கையை அவள் முகத்தின் அருகே ஆட்டினான்.

அவன் கையை இழுத்து கடித்து வைத்தாள் சுப்பு.

“ஏ ப்ளேக்கி! இதென்ன காலையிலே ஆரம்பிச்சிட்ட உன் சேட்டைய! நான் வேலைக்குப் போயிட்டு வந்தவுடனே, கை குடுப்பனாம். அப்போ கடிச்சு கடிச்சு விளையாடுவியாம்! இப்போ கிளம்பவா?”

“நானும் வரேன் துரை!”

“அங்கல்லாம் வர வேணாம் ப்ளேக்கி! பூச்சி இருக்கும், சில சமயம் புலி கூட இருக்கும்”

“ஐயே! என்னமோ நான் காட்டுக்கே போகாத மாதிரி பேசாதிங்க துரை. ஆத்தா வீட்டுல இருக்கறப்போ அவங்க ஒத்தாசைக்கு நான் தான் மங்கு தொடைக்க போவேன்(ரப்பர் மரத்தை சீவி, சின்ன மர பாத்திரம் மாதிரி சொருகி வைத்திருப்பார்கள், அதில் தான் பாலை சேகரிப்பார்கள். கட்டியான அந்த பாலை அந்தி வேளையில் மறுபடியும் போய் சேகரிப்பார்கள். அதுதான் மங்கு துடைப்பது என வழக்கில் இருந்தது.) எத்தனை அட்டை கடிச்சிருக்கு, எத்தனை பூச்சி கடிச்சிருக்கு! ஒரு தடவை காட்டு பன்னி கூட துரத்துனுச்சு. அதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் துரை” பெருமை அடித்தாள் அவள்.

“உங்க ஆத்தாவுக்கு மகளா உன்னை எது வேணும்னாலும் கடிச்சிருக்கலாம். என் பொண்டாட்டிய நான் மட்டும்தான் கடிக்கலாம். அதுவும் செல்லமா! வேற எதுவும் கடிக்கறதுல எனக்கு இஸ்டமில்ல. புரியுதா? இப்போ உள்ள போ ப்ளேக்கி. பர்சு வேற ஜீப்புல ரொம்ப நேரமா வேய்ட் பண்ணுறான்.”

“சித்தப்பூ!” வாசலில் இருந்து கத்தி அழைத்தாள்.

“சொல்லுங்க துரையம்மா”

“க்கும்! துரையம்மா, கண்ணுல புரையம்மா, வாயில நொறையம்மா! அப்படி கூப்புடுடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.” நொடித்துக் கொண்டாள்.

எட்வர்டுக்கு சிரிப்பு வந்தது. முகம் சிரிப்பது போல இருந்தால், வீட்டில் இருக்க சொல்லி மீண்டும் ஆரம்பிப்பாள் என்பதால் கோபமாகவே முகத்தை வைத்துக் கொண்டான்.

“துரை கைல இன்னும் வலி இருக்கு. அதையும் தூக்க விடாதீங்க. ரொம்ப நடக்காம பாத்துக்குங்க. பக்கத்துலயே இருங்க, பத்திரமா பாத்துக்குங்க. மதியம் சாப்புட கூட்டிட்டு வாங்க.” பேசியபடியே ஜீப்பை நெருங்கி இருந்தார்கள்.

“நடக்க விடாம தூக்கி இடுப்புல வச்சிக்கவா? இந்த புள்ள அழும்பு தாங்க முடியலைடா சாமி!” வாயிலேயே முனகினான் பரசு.

“என்ன சொன்னீங்க சித்தப்பூ? விளங்கல!” என கேட்டாள் சுப்பு.

“துரை நடக்காம பாத்துக்கறேன். அவருக்கு அழுப்பா இருந்தா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருறேன்னு சொன்னேன்”

“அப்போ சரி. பாத்து துரை” ஆயிரம் அறிவுரைகளை அள்ளிவிட்டாள் சுப்பு.

“ப்ளேக்கி!”

“ஹ்ம்ம், சொல்லுங்க துரை”

“நேத்து எழுதி பார்க்க சொன்னேனே ஏ,பீ,சீ, டீ, அத இன்னிக்கு எழுதி பாரு.”

முகம் வேப்பங்காயை கடித்து முழுங்கியது போல மாறியது அவளுக்கு. இவர்களின் விளையாட்டு, சீண்டல் நேரம் போக அவளுக்கு படித்துக் கொடுப்பதை வேலையாக வைத்திருந்தான் எட்வர்ட். டைனிங் டேபிளில் அவன் கணக்கைப் பார்த்துக் கொண்டே இவளுக்கு அல்பபெட் எழுத சொல்லிக் கொடுப்பான்.

எப்பொழுது எழுதி பழக சொன்னாலும் தூங்கி வழிவாள். சரி போகட்டும் என போய் படுக்க சொல்லி விடுவான் எட்வர்ட். அவன் வரும் வரை தூங்குவது போல நடிப்பவள், அவன் படுத்ததும் காலை தூக்கி அவன் மேல் போட்டுக் கொண்டு முத்தப் பாடம் சொல்லி தர சொல்லி படுத்தி எடுப்பாள். அதனால் தான் அவன் வேலைக்கு செல்லும் நேரத்தில் எழுதி பழக  சொன்னான் எட்வர்ட்.

“அ, ஆ, இ, ஈயே என் கையில இழுத்து இழுத்து நடக்குது! இந்த லட்சணத்துல எ,ஏ,பி,பீன்னு காகிதத்துல பரதம் ஆட வைக்கிறாரு இந்த துரை. ரொம்ப மோசம்“ முனகியவள்,

“கையில கத்தி வெட்டிருச்சு. இன்னிக்கு எழுத முடியாது துரை” என உள்ளே ஓடிப் போய்விட்டாள்.

சிரித்த முகத்துடன் ஒரு வாரமாக தள்ளி போயிருந்த வேலைகளைப் பார்க்க கிளம்பி போனான் எட்வர்ட்.

ஆபிசில் அமர்ந்து செம்பணை மற்றும் ரப்பர் ஏற்றுமதி கணக்கை சரி பார்த்தான். பின் மக்கள் எவ்வளவு முன்பணம் வாங்கி இருக்கிறார்களோ அதை கழித்து அந்த மாத சம்பள கணக்கையும் சரி பார்த்தான். அதை எல்லாம் செய்ய கிராணி(kerani–க்ளார்க்குக்கு மலாய் வார்த்தை) இருக்கிறார். இவன் சரிப்பார்த்தால் மட்டும் போதும். கணக்கில் மூழ்கி இருந்தவனை, கிராணி வந்து அழைத்தார்.

“துரை, பக்கத்து எஸ்டேட் முதலாளி உங்கள பார்க்க வந்துருக்காரு”

“வர சொல்லுங்க”

அந்த மாநிலத்தில் பல எஸ்டேட்டுக்கள் இருந்தன. பக்கத்து எஸ்டேட் என்று சொன்னாலும் அது போக வேண்டும் பல மைல் தொலைவுக்கு.

“ஹாய் ரிச்சர்ட்! வா, வா உட்காரு! எப்படி இருக்க?” சந்தோசத்துடன் வரவேற்றான் எட்வர்ட்.

“நான் நல்லாதான் இருக்கேன் ஏடி. நீ தான் சரியா இல்லைன்னு தகவல் வந்துருக்கு”

அவனின் குரலில் இருந்த கண்டனத்தில் எட்வர்டின் இலகு முகம் மாறி ஒரு கடினத்தன்மை வந்திருந்தது.

“ஓ! டாடி வந்திருந்தாரா?”

ரிச்சர்டின் கண்களை உற்று நோக்கிக் கேட்டான் எட்வர்ட். ரிச்சர்ட் அவனுடன் ஆர்மியில் இருந்தவன். மலாயாவில் எஸ்டேட் வாங்கி அங்கேயே குடியேற போவதை அவன் அறிவித்த போது, எட்வர்டும் அவனை பின்பற்றி இங்கே வந்திருந்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி கொண்டார்கள். ரிச்சர்ட் அவர்கள் இனத்திலேயே மணந்து இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையும் ஆகிவிட்டான். அவனுக்கு எட்வர்டின் கதை எல்லாம் தெரியும். அவன் வழியாக அவன் மனைவிக்கும். அவளுக்கு எட்வர்டை பார்த்தாலே ஆகாது. அப்பாவைப் போலத்தானே இவனும் இருப்பான் என்பது போல ஒரு அருவருப்பு. அதை மறைக்காமல் முகத்தில் காட்டுவாள். அதனாலேயே எட்வர்ட், ப்ளாண்டேஷன் விஷயங்களைத் தவிர வேறு எதற்கும் ரிச்சர்டை சந்திக்க விரும்பமாட்டான். கிறிஸ்ட்மசுக்கு சந்திப்பது மட்டும் வழக்கமாக இருந்தது.

“அவரும் வந்திருந்தாரு. அவர் பேச்ச நான் மதிக்கறது இல்லைன்னு உனக்கே தெரியும். அதோட உன் வீட்டுல வேலை செய்யறவங்க வழியா விஷயம் ஊரெல்லாம் கசிஞ்சிருச்சு. நம்ம ஆளுங்க, உன் கிட்ட பேச சொல்லி என்னை அனுப்புனாங்க. உனக்கு ஏன்டா புத்தி இப்படி போகுது? தனியா இருக்க கஸ்டமா இருந்ததுனா நம்ம இனத்துல பொண்ணுங்களா இல்லை கல்யாணம் செஞ்சிக்க? என் வைப் தங்கச்சி சாரா இருக்கா, பேசிப் பார்க்கட்டுமா?”

“சர்ச்ல கல்யாணம் செஞ்சு இப்போ நான் வீட்டுள்ள வச்சிருக்கற என் வைப்ப என்ன செய்யட்டும் ரிச்சி?” நக்கலாக கேட்டான் எட்வர்ட்.

“ஏடி, டோண்ட் பீ சில்லி. நம்ம ஆளுங்க, அதுங்கள அப்படியே தொட்டுட்டு விட்டுடறது சகஜம் தானே. வீடு பாத்து குடுத்து, வேற எவனையாச்சும் கட்டி வச்சு அனுப்பிரு. என் எஸ்டேட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கவா?”

நாற்காலியை வேகமாக தள்ளி எழுந்தவன், ரிச்சர்ட் கண் இமைக்கும் முன் அவனின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்தான்.

“நான் செத்ததும் சொல்லி அனுப்புவாங்க, அப்ப என் பொண்டாட்டிக்கு நீ வேற மாப்பிள்ளை பாரு” கழுத்து நரம்பு புடைக்க கத்தினான் எட்வர்ட். கைகளின் அழுத்தம் கூடிக் கொண்டே போனது.

“ஏ…….டி…….!” அவனிடம் இருந்து விடுபட போராடினான் ரிச்சர்ட். சத்தத்தில் ஓடி வந்த கிராணிதான் எட்வர்டிடம் இருந்து ரிச்சர்டை காப்பாற்றினார்.

எட்வர்டின் கை விடுபட்டதும், இருமி, கழுத்தை தடவி தன்னை சமன் செய்த ரிச்சர்ட் எட்வர்டை முறைத்துப் பார்த்தான். எட்வர்டும் அவனை முறைத்தப்படிதான் நின்றிருந்தான்.

கைகளைப் பிசைந்த படி அவர்கள் நடுவே நின்றிருந்தார் கிராணி.

“நீங்க போங்க” என கிராணியை அனுப்பியவன், ரிச்சர்டை கண்டு கொள்ளாமல் தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.

“எனக்கும் கழுத்தை நெரிக்கத் தெரியும் ஏடி. நானும் ஆர்மிக்காரன் தான். கூட பழகிய நட்பு தடுக்குது. ஆனா யாரோ ஒருத்திக்காக இந்த நண்பனையே நீ தூக்கிப் போட்டுட்ட இல்ல”

“ஃபோர் காட்ஸ் சேக் (for God’s sake)! அவ என்னோட வைப். உன்னால எப்படி இப்படி பேச முடிஞ்சது ரிச்சி? ஐ லவ் ஹேர். அவ இல்லாம என்னால வாழ முடியாது” இன்னும் கத்தினான். மேசையில் இருந்த பைலைத் தூக்கி ரிச்சர்டின் மேல் வீசினான்.

“கெட் லாஸ்ட் மேன்! இன்னும் நண்பனா நினைக்கவும் தான், உயிர எடுக்காம விடறேன். போயிரு”

பைலை கேட்ச் பிடித்து மீண்டும் மேசையில் வைத்த ரிச்சர்ட்,

“ஏடி, நீ செஞ்ச காரியம் உன்னை எவ்வளவு பாதிக்கும்னு உனக்கு புரியலையா? நம்ம ஆளுங்க கிட்ட இருந்து இனி உனக்கு எந்த உதவியும் கிடைக்காது. யாரும் நீ இருக்கற திசைக்கே வரமாட்டாங்க” என கோபத்தை விலக்கி வைத்து சாந்தமாக விளக்கினான்.

“எனக்கு யாரும் வேண்டாம்”

“டோண்ட் பீ ஸ்டபர்ன் ஏடி! அவங்கள பகைச்சிகிட்டு உன்னால எஸ்டேட்ட நடத்த முடியுமா?”

வாய்விட்டு சிரித்தான் எட்வர்ட்.

“சில்லி ரிச்சி! இன்னும் சில மாசத்துல மலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்கப் போகுது. அதுக்கப்புறம் இங்க எஸ்டேட் நடத்த நாமளே, ஆட்சி பொறுப்பு எடுக்கறவங்க கிட்ட கையேந்தி நிக்க வேண்டிய நிலை வரப்போகுது. இங்கயே இருக்கப் போறோமா, இல்லை எல்லாத்தையும் வித்துட்டு பிரிட்டனுக்கு போக போறோமான்னு நமக்கே ஒன்னும் புரியாத நிலை. இதுல என்னையும் என் பொண்டாட்டியையும் பத்தி நினைச்சுப் பார்க்கக் கூட உங்களுக்கு எல்லாம் டைம் இருக்கா?” எகத்தாளமாக கேட்டான்.

நாற்காலியில் வந்து அமர்ந்த ர்ச்சர்ட்,

“நீ என்ன முடிவு எடுத்துருக்க ஏடி?” என கேட்டான்.

“என்னிக்கு உங்க இனத்து பிரதிநிதியா இல்லாம என் நண்பனா வந்து கேக்கறியோ அப்ப என் முடிவ சொல்லுறேன். இப்போ நீ கிளம்பலாம்” முகத்தை திருப்பிக் கொண்டான் எட்வர்ட்.

தன் நண்பனின் பிடிவாத குணத்தை அறிந்து வைத்திருக்கும் ரிச்சர்ட், வேறு எதுவும் பேசாமல் கிளம்பி போனான்.

எட்வர்ட் வேலை நேரங்களில் ஜோனி இவளுக்கு நண்பனாகி போனது. முன்பு போல சுப்புவை கடிக்க முயல்வது இல்லை ஜோனி. அவள் வைக்கும் சாப்பாட்டை பிகு செய்யாமல் உண்டது. அவள் வீட்டை சுற்றி நடக்கும் போது அவள் காலை உராய்ந்தபடியே நடந்தது. பாசத்தை கொடுத்தால் பல மடங்கு திருப்பி கொடுப்பவளாயிற்றே சுப்பு, ஜோனியை மட்டும் விட்டுவிடுவாளா? அதுவாகவே வந்து இழையும் போது, இவளும் பயத்தை விட்டு அதனை அரவணைத்துக் கொண்டாள். உன்னை கட்டிப்பிடுக்கும் போது, ஜோனியைப் பிடிக்கற மாதிரியே வாசம் வருகிறது என எட்வர்ட் புலம்பும் அளவுக்கு இருவரும் நண்பர்களாகிப் போனார்கள்.

பகல் சாப்பாட்டுக்கு வந்தவனிடம்,

“துரை இன்னிக்கு கோயிலுக்குப் போலாமா?” என கேட்டாள் சுப்பு.

“என்ன திடீர்ன்னு ப்ளேக்கி? அதான் உனக்கு சாமி ரூம் சின்னதா செஞ்சி குடுத்துருக்கனே!” என கேட்டான் எட்வர்ட்.

“கோயிலுக்கு எதுக்குப் போவாங்க? கும்மியடிக்கவா? சாமி கும்புடத்தான். வீட்டுல கும்புட்டாலும், கோயில்ல குப்புடறப்ப இன்னும் திருப்தியா இருக்கும். மணி சத்தம், சாமி சிலை, அர்ச்சனை இதெல்லாம் அனுபவிக்கறப்போ மனசு நெறைஞ்சி போயிடும். கூப்டு போங்க துரைலிங்!”

“எதாச்சும் காரியம் ஆகனும்னா உடனே துரைலிங்னு கூப்பிட்டு என்னை கவுத்துரு. சரி, நான் வேலை முடிஞ்சு வந்ததும் போகலாம்” என சம்மதித்தான். கோயிலுக்கு போனால் நிம்மதி வரும் என்றவள், திரும்பி வரும் போது இருந்த நிம்மதியையும் தொலைத்து விட்டு வந்தாள்.

பட்டுவிடம் சேலை கட்ட சொல்லி, அழகாக கிளம்பினாள் சுப்பு. மஞ்சள் கோர்த்த கயிரு ஒன்றை மாங்கல்யமாக செய்து இடுப்பில் யாருக்கும் தெரியாமல் சொருகி இருந்தாள். இன்று கோயிலில் எட்வர்டின் கையால் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவள் திட்டம். அங்கே போய் அவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என ரகசியமாக வைத்திருந்தாள் விஷயத்தை.

சேலையில் அவளைப் பார்த்ததும்,

“வாவ் ப்ளேக்கி! ரொம்ப அழகா இருக்கம்மா!” என்றவன் அவளை சுற்றி சுற்றி பார்த்தான்.

“சீக்கிரம் போய், குளிச்சிட்டு வாங்க துரை” அவசரப்படுத்தினாள் சுப்பு.

கோயில் வாசலில் அவளை இறக்கி விட்டவன்,

“நீ போய் கும்பிடு ப்ளேக்கி! நான் பார்க் பண்ணிட்டு வரேன்” என நகர்ந்தான்.

இவள் உள்ளே நுழைந்ததும், கோயிலுக்கு வந்த பெண்கள் எல்லாரும் ஒதுங்கிக் கொண்டனர். குசுகுசுவென அவள் பின்னால் பேச ஆரம்பித்து விட்டனர். எட்வர்ட் கட்டி கொடுத்த கோயிலின் அர்ச்சகரோ, இவளைப் பார்த்து முகம் சுளித்தார்.

“கண்ட கழிசடைலாம் கோயிலுக்கு வந்து அதோட புனிதத்தை கெடுக்குதுங்க. பகவானே! நடைய சாத்திட்டு நல்லா கழுவி விடனும்.” அவள் கேட்க முணுமுணுத்தார்.

இவளைத்தான் சொல்கிறார் என்று கூட தெரியாமல் விநாயகரை முதலில் வணங்கி கொண்டிருந்தாள் சுப்பு. அவள் பின்னால் வந்து நின்ற பெண் ஒருத்தி,

“நல்ல மாட்டுத் தோலு இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு. ஐயரு சொல்லுறது கூட உறைக்கலியே!” என்றாள்.

இன்னொருத்தி,

“அதெப்படி உறைக்கும்? வீட்டு வேலைக்குன்னு வந்துட்டு, கட்டில்ல வேலை பார்க்கறவங்களுக்கெல்லாம் மானம் ரோசம் இருக்குமா? இருந்தா வேத்து இனத்தவனா இருந்தாலும், காசு வச்சிருக்கான்னு அவனுக்கு முந்திய விரிப்பாளா? பச்ச புள்ள மாதிரி மொகத்த வச்சிருக்கா, ஆனா சாகசக்காரிதான் போ!” சிரித்துக் கொண்டனர் இருவரும்.

வேலைக்காரி எனவும் தான், தன்னைப் பற்றி பேசுகிறார்கள் என சுருக்கென தைத்தது சுப்புவுக்கு. கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

“என்னமோ தாலி கட்டுன பொண்டாட்டி மாதிரி காலாட்டிட்டு பங்களால உட்கார்ந்திருந்தா பொண்டாட்டி ஆயிருவாளா? துரை பணபலம் எங்க, இவ பவுசு எங்க? ஆசை தீர்ந்தோனா கழட்டி விட தான் போறாரு! அப்போ என்ன பண்ணுவா?”

“மான ரோசம் இருந்துச்சுனா நாண்டுட்டு சாவா, இல்லாதவா வேற ஒருத்தன பிடிச்சிக்குவா! நமக்கு எதுக்கு பெரிய எடத்து பொல்லாப்பு? வாடி போலாம்” என நகர்ந்து விட்டார்கள் அவர்கள்.

சுப்புவின் கை தன்னிச்சையாக இடுப்பின் உள்ளே சொருகி இருந்த தாலியை அழுந்தப் பற்றியது. கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஊற்றியது.

‘என் உயிரே போனாலும், தாலி கட்டுன்னு மட்டும் துரைய கேட்க மாட்டேன். இவங்க சொன்ன மாதிரி அவரு எங்க, நான் எங்க! எங்க ரெண்டு பேருக்கும் எப்படி பார்த்தாலும் பொருந்தாதே! துரை என்னை போன்னு சொல்லுற வரைக்கும் நானா போக மாட்டேன். போக சொல்லிட்டாருன்னா உசிரோட இருக்க மாட்டேன். அவரு மேல நான் உயிரையே வச்சிருக்கேன். மத்தவங்க நினைக்கற மாதிரி இது கேவலமுன்னா, நான் கேவலமானவளா இருந்துட்டுப் போறேன்.’ முடிவெடுத்தவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

அவன் வருவதற்குள் அவசரமாக அம்மனையும் வேண்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். சந்தோசமாக போனவள், அரக்கப்பறக்க வரவும், யோசனையாக நோக்கினான் எட்வர்ட்.

“என்னாச்சு ப்ளேக்கி? சாமி கும்படல?”

“கும்பிட்டுட்டேன் துரை. தலை வலிக்குது. நாம கிளம்பலாமா?”

“சரி போகலாம். ஜோனி கூட வெயில்ல விளையாடுனியா? இனிமே வெயில் நேரத்துல வெளிய சுத்தக் கூடாது, சரியா?” தோளில் அவளை சாய்த்துக் கொண்டு மெதுவாக காரை செலுத்தினான். இருவருமே ஒருத்தர் மனக் கஷ்டத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஜாதி வேறுபாட்டுக்கே அடிதடி, வெட்டு, கொலை என காவு வாங்கும் பூமியில் இனம் தாண்டி பூத்திருக்கும் காதல் வேர் விடுமா, வெட்டி சாய்க்கப்படுமா?