IMTP–EPI 25

அத்தியாயம் 25

 

“ஏத்தா! வெளிய நாங்க, உள்ள யாருத்தா?” குரல் கொடுத்தான் முனியன்.

“வெளிய யாரா வேணா இருந்துட்டுப் போ. உள்ள மனசாளுங்கதான் இருக்கோம். “ பதில் குரல் கொடுத்தவாறே வெளியே வந்தார் தங்கம்.

அங்கே நின்றிருந்த எட்வர்டைப் பார்த்ததும் ஆடிப்போனார் அவர். துரைமார்கள் இப்படி அவர்கள் வீட்டுகெல்லாம் வருவது பேரதிசயம் ஆயிற்றே.

“யக்கோ, ஓடீயாக்கா! புதுசா யாரோ தொரை வந்துருக்காரு. “

உடம்பு தானாகவே வளைந்து கொள்ள,

“கும்புடறேங்க தொரை” என கும்பிட்டுக் கொண்டார்.

எட்வர்ட் தலையசைப்பை மட்டும் கொடுத்தான்.

அன்னம் வெளியே அடித்துப் பிடித்து ஓடி வர, அவரோடு மூன்று லெட்சுமிகளும் வெளியே வந்தனர். ஜாடையில் சுப்புவைப் போலவே இருந்த அந்த மூன்று சிறுமிகளையும் பார்த்த எட்வர்டுக்கு இறுக்கம் குறைந்து லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது.

தங்களை பார்த்து புன்னகைத்த துரையை கண்டு வெட்கத்துடன் தங்கள் தாயின் பின்னே மறைந்தனர் மூவரும்.

அன்னமும், தங்கமும் வாய் பிளந்து அவனைப் பார்த்தனர்.

“ஏண்டி தங்கம், இந்த தொரை என்னா நம்ம புள்ளைங்கள பாத்து பல்ல காட்டறாரு! எதுக்கு நம்ம வூட்டுக்கு வந்துருக்காருன்னு ஒன்னும் விளங்கலியே! நீதானே தெகிரியசாலி. என்னான்னு கேளு புள்ள” தங்கையை உசுப்பிவிட்டார்.

“ஏப்பா, என்ன ஜோலியா இங்க வந்தீங்க? “ எட்வர்டிடம் பேச பயந்த தங்கம் முனியனிடம் கேட்டார்.

“சுபூவ பத்தி பேசனும். உள்ள போலாமா?” எட்வர்டிடம் இருந்து பதில் வந்தது. அதற்குள் அக்கம் பக்கத்தினர் வீட்டு முன்பு குழுமிவிட்டதால் அப்படி கேட்டான் எட்வர்ட்.

“எம்மவ சுப்புவ பத்தியா? வாங்க வாங்க உள்ளுக்கு வாங்க தொரை” வரவேற்றார் அன்னம்.

தங்கம் அவசரமாக பாயை எடுத்துக் கீழே விரித்தார். கஷ்டப்பட்டு காலை மடக்கி பாயில் அமர்ந்தான் எட்வர்ட். முனியன் வாசலிலே நின்று கொண்டான். அக்கா தங்கை இருவரும் ஒரு மூலையில் நின்று கொண்டனர். அவர்கள் பின்னால் அவர்களின் பிள்ளைகளும்.

“தொரைதான் சுப்பு புள்ளைக்கு மொதலாளியா?” கேட்டார் அன்னம்.

“ஆமா, அவளுக்கு நான் தான் முதலாளி“

எவ்வளவு கட்டுப்படுத்தியும் இதழில் குறும்பு புன்னகை நெளிந்தது.

“என் புள்ள நல்லாருக்காளா தொரை?”

“ஹ்ம்ம். ரொம்ப நல்லா இருக்கா!”

“புள்ள தப்பு ஏதாச்சும் பண்ணிப்புட்டாளா தொரை? எதுக்கு மெனக்கெட்டு எங்க வூட்டு வரைக்கும் வந்துருக்கீங்க?” தங்கம் தான் கேட்டார்.

எட்வர்ட் பதிலளிக்கும் முன்னே,

“புள்ள தப்பு பண்ணிருந்தாலும் மன்னிச்சிக்குங்க தொரை. நாங்களே அங்கன வந்து அவள இட்டுகிட்டு வரனும்னு இருந்தோம். இந்த விஷ காய்ச்சல் வந்து எங்க பொழப்புல மண்ணப் போட்டுருச்சு” என்றார் அன்னம்.

“சுபூ தப்பு எதுவும் பண்ணல.”

“எங்க புள்ளைக்கு தப்பெல்லாம் பண்ண வராதுங்க தொரை. வெள்ளந்தி அவ. வயித்துப் பொழப்புக்கு வேலைக்கு அனுப்பிட்டோம். அவ போனதுல இருந்து மனசு கெடந்து அடிச்சிக்கிது. நீங்களே அவள எங்க கிட்ட அனுப்பி வைச்சிருங்க தொரை. முறைமாமன் வேற காத்துட்டு இருக்கான். சட்டுப்புட்டுன்னு கல்யாணத்த முடிச்சிட்டா எங்க கடமை முடிஞ்சிரும்” தங்கம் தான் பேசினார். அவருக்கு எட்வர்ட் தங்கள் வீட்டுக்கே வந்ததும், சுப்புவின் பெயரை சொல்லும் போது மலரும் அவன் முகமும் பல கதைகளை சொன்னது. அதனால் தான் நாசுக்காக தங்கள் நிலைமையை எடுத்து சொன்னார்.

சுப்புவுக்கு கல்யாணம் எனும் பேச்சு, இதுவரை தான் கட்டிகாத்து வந்த கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, சுப்புவின் மன அமைதிக்காக அவர்களை சமாதானப் படுத்த வந்த எட்வர்டுக்கு கோபத்தைக் கொடுத்தது. முகம் சிவக்க தங்கத்தை நன்றாக நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.

“என் பொண்டாட்டிக்கு நான் இருக்கறப்பவே இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?” என கோபத்தை அடக்கி சாதரணமான குரலிலே கேட்டான் எட்வர்ட்.

அவன் சொன்னதின் அர்த்தம் புரியவே பல நிமிடங்கள் ஆனது அவர்களுக்கு.

“என்ன சொன்னீங்க தொரை?” குரல் நடுங்க கேட்டார் அன்னம்.

“உங்க மக சுபூ, இப்ப என் பொண்டாட்டி. அவள நான் கல்யாணம் செஞ்சிகிட்டேன்.” சொன்ன விஷயத்தை கிரகிக்க அவர்களுக்கு நேரம் கொடுத்தவன்,

“பெத்தவங்க உங்களுக்கு சொல்லாம கல்யாணம் செஞ்சது தப்புதான். ஆனா எனக்கு வேற வழி தெரியல. என்னை மன்னிச்சிருங்க” இதுவரை யாரிடமும் மன்னிப்பை கேட்டிராதவன், தன் ப்ளேக்கிக்காக அவளை பெற்றவளிடம் மன்னிப்பை யாசித்தான்.

அக்கா, தங்கை இருவருக்கும் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.

“சுபூ உங்களை எல்லாம் ரொம்ப தேடறா! அடிக்கடி உங்கள பத்திதான் பேசுறா! நீங்க எல்லாரும், என் எஸ்டேட்டுக்கே வந்துருங்க. தனியா வீடு தரேன். அவ பக்கத்துலயே இருக்கலாம்.” என நயமாக அழைத்தான்.

அழுகை போய் கோபம் கொந்தளித்தது அன்னத்துக்கு. என்ன இருந்தாலும் பெத்த வயிறல்லவா, வசைமாரி அவராலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“அந்த கேடு கெட்ட சிறுக்கி எங்கள எல்லாம் தேடுறாளா? எதுக்கு தேடனும்கறேன்? கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லறத பாத்தா வயசுக்கு வந்துருப்பா போலிருக்கே. வந்த கையோட, ஆள் புடிச்சுட்டாளா? எங்க ஜாதி என்னா, குலம் கோத்திரம் என்னா, இப்படி வேத்து இனத்தவன் பின்னாடி போயிட்டாளே திமிரெடுத்தவ. அவ நல்லாவே இருக்க மாட்டா, நாசமாத்தான் போவா. ஐயோ! என் ஜாதி மக்கா மனுஷா இனி எங்கள எப்படி மதிப்பானுங்க? எப்படி இந்த மூனையும் கரை சேக்க போறோமோ தெரியலையே. ஆத்தா மகமாயி! பெத்த வயிறு பத்தி எரியுதே! உனக்கு நல்ல சாவு வராதுடி” நெஞ்சில் அடித்து அழுதவாறே சாபமிட்டார்.

“நிறுத்துங்க!” எட்வர்டின் கர்ஜனையில் கப்பென வாயை மூடிக்கொண்டார் அன்னம்.

“இத்தனை வருஷம் அவள வளத்தீங்களே, அவ குணம் தெரியாது உங்களுக்கு? எப்படி பெத்த மகளுக்கு இப்படிலாம் சாபம் குடுக்க மனசு வந்துச்சு உங்களுக்கு? என்னோட சுபூவின் அம்மான்றதால உயிரோட விடறேன். நீங்க சொன்ன வார்த்தைய வேற யாராச்சும் சொல்லிருந்தா இன்னேரம் உயிரு பறந்துருக்கும்” குரல் கோபத்தில் நடுங்கியது எட்வர்டுக்கு. தன் சுப்புவை அவர் ஏசிய வார்த்தைகளை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இன்னும் நன்றாக வாழக் கூட ஆரம்பிக்கவில்லை, அதற்குள் அவள் சாவுக்கு சாபம் கொடுக்கிறாரே என ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

படிக்காத பாமர மக்கள் அப்படிதான் இருப்பார்கள் என தன்னை சமாதானப்படுத்தியவன், கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

“சாபம் குடுக்காதீங்க, சுபூ பாவம்! நான் அவள கல்யாணம் செஞ்சது தப்புன்னா, அந்த தப்புக்கு முழு காரணமும் நான் தான். அதனால என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. அவள திட்டாதீங்க” அவளுக்காக பரிந்து வந்தான்.

தப்பே செய்திருந்தாலும் துரையைத் திட்டவோ, ஏசவோ தைரியம் வருமா! அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் பேசிக்கொண்டனர்.

“இப்படி பேசறேன்னு என்னை மன்னிக்கனும் தொரை. நாங்க ரெண்டு பேரும் புருஷன் இல்லாத பொம்பளைங்க. ஊரோட தான் ஒட்டி வாழனும். எங்களால ஜாதி விட்டு ஜாதி கட்டறதையே நினைச்சிப் பார்க்க முடியாது. நீங்க சொல்ற இனம் விட்டு பண்ணற கல்யாணம், கருமாதிலாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. தயவு பண்ணி எங்க புள்ளய எங்க கிட்ட குடுத்துருங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும். காலுல வேணும்னாலும் விழறேன்” என அவனின் பரிதாபத்தை சம்பாதிக்க அடுத்த அம்பை எய்தார் தங்கம்.

“இந்த ஜாதி, இனம், மதம் எதுவும் வேணாம். என் கூட வாங்க. உங்கள எல்லாரையும் நான் எந்த குறையும் வராம பார்த்துக்கறேன். பொண்ணுங்கள படிக்க வைக்கறேன். யார் தயவும் எதிர்பார்த்து நீங்க இருக்க வேணாம்.” அவர் எய்த அம்பை அழகாக பிடித்து, ஒடித்து தரைமட்டமாக்கினான் எட்வர்ட்.

ஊரையே தன் வாயால் கதறடிக்கும் தங்கத்துக்கே கிறுகிறுத்துப் போனது. லேசாக கண்ணைக் கசக்கியவர்,

“தொரைக்கு தெரியாதது புரியாதது இல்ல. நாங்க எங்க ஜாதி ஜனத்த பகைச்சிக்கிட்டா எங்கள வெட்டி பொலி போட்டுருவாங்க, காட்டுப் பசங்க! அதனால நீங்க என் பொண்ணோட நல்லா இருங்க. நாங்க இப்படியே இருந்துக்கறோம்” என கை எடுத்து கும்பிட்டார்.

“அடியே! உனக்கு கூறு கீறு கெட்டுப்போச்சா?” என எகிறிய அன்னத்துக்கு கண் ஜாடை காட்டினார் தங்கம்.

“நீங்க கிளம்புங்க தொரை. இங்க ரொம்ப நேரம் இருந்தா தூண்டி துருவுவாங்க. சம்பள பணம் குடுக்க வந்தீங்கன்னு நாங்க சமாளிச்சிக்கிறோம்” என கிளப்ப பார்த்தார் எட்வர்டை.

“நான் சொன்னத நீங்க கண்டிப்பா யோசிச்சு பார்க்கனும். எப்ப வந்தாலும் சரி, என் சுப்புவோட குடும்பத்த நான் கண்டிப்பா பாத்துக்குவேன். இப்போ போய்ட்டு வரேன்.” என எழுந்தான்.

“முன்யா!” என குரல் கொடுக்க, கையில் வைத்திருந்த பெட்டியுடன் அருகே வந்தான் முனியன்.

பெட்டியை வாங்கி, சுப்புவின் தங்கைகளை அருகே அழைத்தான் எட்வர்ட். சிறுசுகள் இரண்டும் ஒளிய, பெரியவள் மட்டும் அவன் அருகே வந்தாள். பெரியவர்கள் பேசியதை கேட்டிருந்தவள், எட்வர்டிடம்,

“அக்கா நல்லா இருக்கா? எனக்கு அவளைப் பார்க்கனும். அவ இல்லாம யாருமே என்னைப் பாசமா பார்க்கறது இல்ல. எனக்கு எங்க அக்கா வேணும்.” என கண் கலங்க கேட்டாள்.

“உங்க ஆத்தா சரி சொன்னதும், கண்டிப்பா அக்காவ பாக்கலாம். அவ கூடவே இருக்கலாம். இப்ப அழ கூடாது!” அவள் கண்ணைத் துடைத்துவிட்டவன், தான் கொண்டு வந்திருந்த தின்பண்டங்கள் அடங்கிய பெட்டியை அவளிடம் நீட்டினான். பாசத்துடன் கன்னம் துடைத்தவனை, வெள்ளையனாக இருந்தாலும் அவளுக்குப் பிடித்து விட்டது. தயங்காமல் வாங்கிக் கொண்டாள்.

“நான் உங்கள என்ன சொல்லிக் கூப்புடனும்?”

“ராஜம்!” கண்டிப்புடன் அழைத்தார் தங்கம்.

ஆத்தாவைத் திரும்பிப் பார்த்தவள், அசையாமல் எட்வர்ட் அருகிலேயே நின்றாள். தங்கம் அவன் அருகில் போனதுக்கு எப்படியும் முதுகில் பட்டாசைக் கொளுத்துவார் என அவளுக்கு தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் நின்றாலும் அதே பட்டாசு தானே என மனதில் நினைத்துக் கொண்டாள் அவள்.

“சொல்லுங்க, எப்படி கூப்படனும்?” என மீண்டும் கேட்டாள். உறவு முறை எப்படி தெரியும் நம் எட்வர்டுக்கு. முனியனின் முகத்தைப் பார்த்தான்.

“உங்கக்கா வூட்டுக்காரு புள்ள. மாமான்னு வாய் நெறைய கூப்புடு” என்றான் அவன்.

அவன் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டவள்,

“நன்றி மாமா” என வெள்ளையாக சொன்னாள்.

“நல்லாயிரும்மா!” தலையைத் தடவிக் கொடுத்தவன், மற்றவர்களைப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். அவன் வீதியில் நான்கு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான், ராஜலெட்சுமியின் அடிக்காதீங்க ஆத்தா எனும் கூச்சல் அவன் செவிகளை வந்து மோதியது. திரும்பி அங்கே போகத் துடித்த கால்களை கஷ்ட்டப்பட்டு எட்டிப் போட்டு நடந்தான்.

மறுபடியும் உள்ளே போனால், வீதியில் நின்று அவனைப் கண்கொட்டாமல் பார்த்திருக்கும் மக்கள் இன்னும் ஏதாவது கதை கட்டி விடுவார்களோ என பயந்தான்.

“முன்யா, இவங்கள கண்காணிக்க ஆள் போடு. சந்தேகப் படற மாதிரி ஏதாச்சும் நடந்தாவோ, வீட்டுக்கு புதுசா யாரச்சும் வந்தாவோ எனக்கு உடனடியா தெரியனும்” என சொல்லி வைத்தான். சுப்புவின் ஆத்தாக்கள் இருவரும், பாயத்தான் பதுங்குகிறார்கள் என அவனால் துல்லியமாக கணிக்க முடிந்தது. விதியை(ஆத்தாக்கள்) மதி(எட்வர்ட்) வெல்லுமா?

அழுது கொண்டிருந்த அக்காவை சமாதானப்படுத்திய தங்கம், அமைதியாகவே படுத்துக் கொண்டார். அவரால் எந்த அடியையும் சுப்புவை நோக்கி எடுத்து வைக்க முடியவில்லை. எப்பொழுதும் தங்களை யாரோ பின் தொடர்வது போன்றே அவருக்கு தோன்றியது. அவ்வப்பொழுது எட்வர்டோடு வந்த முனியனின் தலையும் அங்கிங்கே கண்ணில் பட செய்தது. அதனாலேயே அடக்கி வாசித்தார். ஆள் அனுப்பியும் இன்னும் முத்து வந்து சேர்ந்திருக்கவில்லை. செய்தி அனுப்பி, காது தோடு பறிபோனதுதான் மிச்சம்.

‘இந்த சுப்பு புள்ளைய எப்படியாவது கொண்டு வந்து, முத்துக்கு கட்டி வைச்சு கண்காணாத எடத்துக்கு அனுப்பி வச்சிரனும். அது நடக்காத பட்சத்துல அவ கழுத்த திருகி ஆத்துல கடாசிறனும். அக்கா மவளா இருந்தாலும் எப்படிலாம் வளத்துருப்பேன். இப்படி மானத்த வாங்கிப்புட்டாளே இந்தப் புள்ள. என் மேலயும் தப்புத்தான். அவள அங்க அனுப்பிருக்கவே கூடாது. புள்ள மனச அந்தப் பாவி என்ன சொல்லி கெடுத்து வச்சானோ தெரியலையே. என் மக எங்க ஜாதி பையன் முத்துவ கட்டிக்கிட்டு நல்லா இருக்கனும் ஆத்தா மகமாயி. எங்கள புள்ளயையே கொல்லுற அளவுக்கு ஆளாக்கிறாதே!’ கண்ணீர் வழிய வேண்டிக் கொண்டார் தங்கம். 

அங்கே எட்வர்டின் அறையில் இரண்டு காதல் கிளிகளும் இன்னும் கொஞ்சிக் கொண்டு இருந்தனர்.

“இப்படி சிரிச்சு சிரிச்சே என்னை ஏமாத்துங்க துரை! ஆம்புள சிரிச்சா போச்சு அக்குள சொரிஞ்சா போச்சு” நொடித்துக் கொண்டாள்.

“எனக்கு புரியலன்னு நீ புதுசு புதுசா என்னமோ சொல்லுற ப்ளேக்கி!”

“அத விடுங்க துரை. நீங்க மீதி கதைய சொல்லுங்க”

“காலை மணி நாலாச்சு ப்ளேக்கி. எனக்கு தூக்கம் சொக்குதும்மா! நாளைக்கு பேசிக்கலாமா மீதி கதைய?”

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் மடியின் மேல் எகிறி அமர்ந்தவள், அவன் தலை முடியை இரு கைகளாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

“என் கண்ணையே இமைக்காம உத்துப் பாருங்க துரை. தூக்கம் ஓடிப்போயிரும்”

தன் முட்டைக்கண்ணை உருட்டி இமைக்காமல் அவன் கண்களையே உற்றுப் பார்த்தாள் சுப்பு. அவனும் தன் சின்னக் கண்களை உருட்டி இமைக்காமல் அவள் கண்களைப் பார்க்க முயற்சித்தான். ஒரு விஷயத்தை கவனமாக செய்யும் போது, கீழுதட்டை உள் மடக்கி கடித்து கொள்ளுபவள், இப்பொழுதும் அப்படி தான் உட்கார்ந்திருந்தாள்.

“மை கியூட்டி ப்பை” என கொஞ்சியவன், அவள் கீழுதட்டை தன் விரலால் விடுவித்து, தன் உதட்டால் அழுந்த முத்தமிட்டான்.

“இப்படிதான் தூக்கத்த விரட்டனும் ப்ளேக்கி.” என சொல்லி சிரித்தான்.

“அப்படியா துரை? இப்போ எனக்கு தூக்கம் வருது. சீக்கிரம் விரட்டி விடுங்க” என அடுத்த முத்தத்துக்கு அடி போட்டாள் சுப்பு. வாய் விட்டு சிரித்தவன், தன் மன இறுக்கத்தை குறைத்தவளுக்கு இன்னும், இன்னும் முத்தத்தை வாரி வழங்கினான்.

பின் அவளை அணைத்தப்படியே தன் காதல் பூத்த கதையை மீண்டும் ஆரம்பித்தான்.

“நீ திருவிழால தொலஞ்சி போனதுதான் என்னோட ப்ரெக்கிங் போய்ண்ட். ஹ்ம்ம் என்னை நானே உணர்ந்த நேரம்னு சொல்லலாம். உன்னை அனுப்பவே முதல்ல யோசிச்சேன். அந்த மாதிரி டைம்ல மக்கள் எப்படி நடந்துக்குவாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா நீ போகனும்னு அழுதுட்டே இருந்த. மனசு கேக்கல. பர்சு கிட்ட உன் பாதுகாப்ப பத்தி படிச்சு படிச்சு சொன்னேன். அதோட என்னோட ஆளுங்க ரெண்டு பேரையும் உன் பின்னால காவலுக்கு ஏற்பாடு செஞ்சேன். அப்படியும் இந்த அசம்பாவிதம் நடந்துருச்சு. நீ காணோம்னு தெரிஞ்சதும், அப்படி ஒரு கோபம். கோபத்துக்கு மேல பயம். என் ஹார்ட் துடிச்ச துடிப்புல, எங்க அது வெடிச்சிருமோன்னு நினைச்சேன்.” அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“உன்னை கண்ணுல பார்த்ததும் தான் எனக்கு நோர்மலா சுவாசிக்க முடிஞ்சது ப்ளேக்கி. அப்போ புரிஞ்சிகிட்டேன் உன்னை நான் எவ்வளவு விரும்புறேன்னு. ஆனா முட்டாய கையில எனக்காக பிடிச்சிருந்த பார்த்தியா, அங்க தான் பிடித்தம் என்பது மாறி ,என் காதல் மொட்டு விட ஆரம்பிச்சது.”

“அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா…
உண்மைக் காதல் மாறிப் போகுமா”  என உணர்சி மிகுதியில் எட்வர்டைக் கட்டிக் கொண்டு பாடினாள் சுப்பு.

“ஏ ப்ளேக்கி! என்ன பாட்டு பாடிட்ட அதுக்குள்ள. என் காதல் கதை இன்னும் முடியலம்மா”

“இன்னும் முடியலையா துரை? எனக்கும் முடியலையே, தூக்கம் கண்ண கட்டுதே!” பாவமாகப் பார்த்தாலும், கண்ணில் குறும்பு வழிந்தது.

“முத்தா வேணுன்னா கேட்டு வாங்கிக்கோ ப்ளேக்கி. இப்படி என்னை ஏமாத்தி வாங்காத!” கன்னத்தைப் பிடித்து செல்லமாக கிள்ளினான் எட்வர்ட்.

“காதல் மொட்டு விட்டுச்சு, அப்புறம் எப்போ பூ பூத்துச்சு துரை?”

“இந்த பூவையும் நம்ம வாழ்க்கையையும் பிரிக்க முடியாது போல இருக்கே ப்ளேக்கி. எங்க சுத்துனாலும் நம்ம பேச்சுல பூ வந்துருதே!” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான் எட்வர்ட்.

“அதுக்கப்புறம் தான் எனக்குப் பிரச்சனையே அரம்பிச்சுச்சு. முதல்ல நீ தொட்டப்போ இனம் முன்னுக்கு வந்துச்சு, அதுக்கப்புறம் நீ தொடறப்பலாம் ஐயோ இவ இன்னும் வயசுக்கு கூட வரலியேன்னு பீதி தான் வந்துச்சு. மறுபடியும் தொடாதேன்னு ஆரம்பிக்க வேண்டியதா போச்சு” சிரித்தான்.

“அப்புறம் தான் நீ வயசுக்கு வந்த. முதன் முதலா என் கிட்ட சொன்னதுல நான் எவ்வளவு சந்தோச பட்டேன் தெரியுமா? உன்னைய அப்படியே பரிசு மழைல நனைச்சிரனும்னு அப்படி ஒரு ஆசை. காசு குடுத்தாலே, இது வேணாம் சில்லரை குடுங்கன்னு கேக்கற ஆளாச்சே நீ. அதனால தான் முக்கியமானத மட்டும் வாங்கிட்டு வந்தேன். கொலுசு குடுத்து ஆசையா பேசுனா, நீ ஆத்தா வீட்டுக்கு போறத பத்தி பேசற. முறை மாமன் காத்திருக்கான்னு சொல்லுற! நான் ரொம்ப மனசு உடைஞ்சி போயிட்டேன். நாம பாத்து பாத்து இவ்வளவு செய்யறோமே, இவளுக்கு நம்ம மேல அன்பே இல்லையான்னு மனசு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. இல்ல முடியாது, உன் அன்பு முழுக்க எனக்கு மட்டும்தான்னு மனசு வேற பேயாட்டம் போடுது. தவிச்சுப் போயிட்டேன்”

“என்னை மன்னிச்சுருங்க துரை. ஆத்தா கிட்ட போறேன்னு சொன்னேன் தான். அதுக்குன்னு உங்க மேல பாசம் இல்லைன்னு அர்த்தம் இல்ல. எப்படியும் அது தானே நம்ம வீடு, இங்க வேலை செய்ய தானே வந்திருக்கோம்னு ஒரு நினைப்பு. அவ்வளவுதான்.” 

“புரியுது ப்ளேக்கி. ஆனா எனக்கு நீ மட்டும் தானே இருக்க. உனக்கு எல்லாமே இருக்காங்க. அவங்களால என்னை விட்டு போயிருவியோன்னு பயந்துதான் ஒரு காரியம் செஞ்சிட்டேன். அது வந்து..” தயங்கினான் சொல்வதற்கு.

“நீ வயசுக்கு வந்தத உங்க ஆத்தா கிட்ட சொல்லல” பட்டென விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

“என்னது சொல்லலியா?” வாயைப் பிளந்தாள் சுப்பு.

“ஆமா சொல்லல. உங்க மாமா மாயனைப் பிடிச்சு நானே வாங்கி குடுத்த சீர கொண்டு வந்து குடுக்க வச்சேன்.” வார்த்தைகளில் தயக்கம் இருந்தாலும் அவள் கண்களை தயங்காமல் ஏறிட்டான்.

“அந்தாளுக்கு எத்தனை பயிண்டு(கொள்ளவு முறை, அப்பொழுது புழக்கத்தில் இருந்தது) கள்ளு ஊத்திக் குடுத்தீங்க?”

“அது எனக்குத் தெரியாது. முனியன் தான் அதெல்லாம் பாத்துக்கிட்டான்.” உண்மையை சொன்னான் எட்வர்ட்.

“எங்க ஆத்தா அப்பவே சொல்லும், ஒரு பயிண்டு கள்ளுக்கு அந்தாளு பாடையில கூட படுத்துக்குவான்னு. இனிமே அந்தாளு கிட்ட சகவாசம் வச்சிக்காதீங்க துரை”

இப்பொழுது இவனுக்கு மண்டை காய்ந்தது.

‘மாமன் கூட கூட்டு வச்சது தான் கோபமா? ஆத்தா கிட்ட சொல்லாதது கோபம் இல்லையா? என் செல்லத்த இன்னும் புரிஞ்சிக்கவே முடியலையே.’

சில சமயங்களில் பெரியதாக வெடிக்கப் போகிறதென்று நாம் பயப்படும் விஷயங்கள் புஸ்சென ஆகிவிடும். அதே சின்னதாக நாம் நினைக்கும் விஷயங்கள் வெடித்து சிதறி நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். இங்கும் அப்படிதான் நடந்தது. 

“நான் எங்க வீட்டுக்குப் போயிருவேன்னு பயந்துட்டு ஆத்தாக்கு சொல்லலை! சரி விடுங்க. வயசுக்கு வந்தனோ இல்லையோ, என் மேல பாசம் இருந்திருந்தா அவங்களே வந்து பார்த்திருப்பாங்க தானே. ஆனா வரலயே”  கண்கள் கலங்கியது.

“அது வந்து ப்ளேக்கி”

“சொல்லுங்க துரை! ஏன் வரல? நீங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டீங்களா?” என கேட்டாள்.

“ஊருல விஷ காய்ச்சல் பரவிருக்கு. இங்க யாரும் வரக்கூடாதுன்னு சொல்லி வச்சேன். பரிசல்காரன் கிட்ட உங்க குடும்பத்துல யாரயும் இங்க அழைச்சிட்டு வரக்கூடாதுன்னு சொல்லி வைக்க சொன்னேன். கோபப்படாத ப்ளேக்கி, ப்ளிஸ்! எல்லாமே நம்ம நல்லதுக்குத்தான் செஞ்சேன்.”

அவன் மடியில் இருந்து இறங்கிக் கொண்டாள் சுப்பு. ஒன்றும் பேசாமல் அவள் இடத்தில் போய் படுத்துக் கொண்டாள்.

“ப்ளேக்கி!” அவளை தன் பக்கம் திருப்ப முயன்றான் எட்வர்ட். பிடிவாதமாக திரும்ப மறுத்தாள் அவள்.

“பாத்தியா! எனக்கு தெரியும் நான் எல்லாத்தையும் சொன்னா என்னை நீ வெறுத்துருவன்னு. அதே மாதிரி நடந்துருச்சு”

“இல்ல, இல்ல, வெறுக்கல! கோபமா மட்டும்தான் இருக்கேன்” இன்னும் திரும்பி பார்க்காமல் குரல் மட்டும்தான் கொடுத்தாள் சுப்பு.

“கோபமா இருந்தா ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சிரு ப்ளேக்கி. இப்படி முதுக காட்டாத ப்ளிஸ்” கெஞ்சினான் எட்வர்ட்.

“நீங்க எப்படி எங்க ஆத்தாவ இங்க வர விடாம பண்ணலாம்? அவங்க பாவமில்லையா? நீங்க என் மேல பாசம் வச்சிருக்கற மாதிரி தானே அவங்களும் வச்சிருக்காங்க. என்னைப் பார்க்காம அவங்களுக்கு சோகமா இருக்காதா?” முகம் காட்டாமல் குரல் மட்டும் கொடுத்தாள். குரலில் அழுகை இல்லை, வருத்தம் மட்டும் நிரம்பி இருந்தது.

இங்குதான் ஒரு தப்பு செய்தான் எட்வர்ட். அவர்களைப் போய் பார்த்ததையும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் அவளிடம் மறைத்துவிட்டான். அது தெரிந்தால் தாங்க மாட்டாள் என எண்ணினான் எட்வர்ட்.

“தப்புதான் ப்ளேக்கி. சீக்கிரம் எல்லாத்தையும் சரி செஞ்சிருறேன். நீ வருத்தப்படாதம்மா. நீ வருத்தப்பட்டா எனக்கும்  கவலையா இருக்கில்ல.”

அதற்கு பதிலில்லை அவளிடம். அமைதி மட்டுமே பரிசாக கிடைத்தது எட்வர்டுக்கு.

“ப்ளேக்கி தூங்கிட்டியா?” லேசாக உலுக்கினான் அவளை.

“நீங்க சொன்ன விஷயமெல்லாம் யோசிச்சுப் பார்த்துட்டு இருக்கேன். நான் வேணும் சொல்லி நெறைய தப்பு பண்ணிருக்கீங்க. அதுக்கு கோவிச்சிக்கிறதா இல்லை நான் வேணும்னு சொல்லி இன்னும் நெறைய நல்லது செஞ்சிருக்கீங்க அதுக்கு சந்தோஷப்படறதான்னு மனசுக்குள்ள கணக்கு போட்டுட்டு இருக்கேன்.”

“அந்த கணக்க என் கிட்ட திரும்பி, என் முகத்த பார்த்து போடேன் ப்ளேக்கி” பாவமாக கெஞ்சினான் எட்வர்ட்.

அவன் புறம் திரும்பி அமர்ந்தவள், தன் கைகள் இரண்டையும் தூக்கி விரல்களை விரித்தாள், அவன் தேநீர் கலக்க சொல்லிக் கொடுத்த மாதிரி. ஒவ்வொரு விரலாய் மடக்கி மடக்கி கணக்கு போட்டாள்.

“கேட்டது என்னன்னா, ஒன்னு- ஆத்தாவ என் கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க. ரெண்டு- ஹ்ம்ம். சொல்லுங்க துரை. ரெண்டு மூனுலாம் என்ன?” அவனையே திருப்பிக் கேட்டாள்.

“சரி போகட்டும். நல்லது என்னன்னா, ஒன்னு- எனக்கு டீ கலக்க சொல்லி குடுத்தீங்க. ரெண்டு-சுடுதண்ணி வாளிய நீங்களே தூக்குனீங்க. மூனு- பட்டுக்கா கொட்டுல இருந்து காப்பாத்துனீங்க. நாலு- கொலுசு வாங்கி குடுத்தீங்க. அஞ்சு- குச்சி ஐஸ் வாங்க காசு குடுத்தீங்க. ஆறு- காயத்துக்கு மருந்து போட்டீங்க. ஏழு-வயசுக்கு வந்தப்போ என்னை அணுசரனையா பாத்துகிட்டீங்க. எட்டு-கடலுக்கு கூட்டி போனீங்க. ஒம்போது- படம் பாக்கற பொட்டில சவுண்டு வைக்க விட்டீங்க. பத்து- ஜாம் பாட்டில எனக்கே குடுத்தீங்க. ஐயோ விரலு பத்தல துரை. உங்க விரல கடன் குடுக்கறீங்களா?” என அவன் விரலையும் பிடித்துக் கொண்டாள் சுப்பு. இருவரின் கை விரல்கள் தாண்டி அவர்களின் கால் விரல்களும் பற்றவில்லை அவன் அவளுக்கு செய்த நல்ல விஷயங்கள் முடிய.

கணக்கு செய்து களைத்துப் போனவள், அவனைக் கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள். தூங்கும் முன்,

“இவ்ளோ எனக்கு செஞ்சிருக்கீங்க, நான் வேணும்னு எங்க ஆத்தாவ கூட என் கிட்ட இருந்து பிரிச்சிருக்கீங்க, கண்டிப்பா என்னை விட்டுட்டுப் போயிற மாட்டீங்க. எனக்கு நல்லா தெரியுது துரை. ஆசை முடிஞ்சா என்னை தூக்கிப் போட்டுற மாட்டீங்க, கூடவே வச்சிக்குவீங்க. அது போதும் எனக்கு. உங்கள முழுசா நம்பறேன். ஆத்தாவ கூட்டி வரேன்னு சொன்னீங்க. கண்டிப்பா செய்வீங்க. இப்போ எனக்கு தூக்கம் வருது. அடிக்கடி தூங்கறப்போ எனக்கு சொல்லுவீங்களே அது என்ன துரை?”

“ஐ லவ் யூவா?”

“ஆமா, அதான். ஐ லப்பூ யூ” அது தான் தூங்கும் முன் அவள் பேசிய கடைசி வார்த்தை.

நெஞ்சில் அவளைப் போட்டுக் கொண்டவனின் கண்கள் விடாமல் கண்ணீரை ஊற்றியது.

‘எப்படி ப்ளேக்கி? எப்படி உன்னால மட்டும் இப்படி நடந்துக்க முடியுது? என்னை மன்னிச்சிட்டேன்னும் சொல்லாம, வெறுத்துட்டேன்னும் சொல்லாம நடந்தத அப்படியே ஏத்துக்கிட்டியே! ஆர்ப்பாட்டம் செஞ்சி, அழுது கரையாம நானே அசந்து போற அளவுக்கு கணக்குப் போட்டு என் காதல ஒத்துக்கிட்டியே! உன்னைப் போய் எல்லாரும் எப்படிலாம் ஏசறாங்க, பேசறாங்க! யூ ஆர் அ ப்யூர் ஏஞ்சல்ம்மா. எனக்காகவே பூமிக்கு வந்த ஏஞ்சல். நான் என்ன புண்ணியம் செஞ்சேன்னு தெரியல உன்னை அடைய’ கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

தூக்கத்திலேயே அவள்,

“பாக்கியம் பாட்டிய என்ன செஞ்சீங்க துரை?” என கேட்டாள்.

கண்ணீர் மாறி புன்னகை வந்தது அவன் முகத்தில்.

“ஒன்னும் செய்யலம்மா! காசு குடுத்து இந்தியாவுக்கு அனுப்பி வச்சேன். அவ்வளவுதான். நீ தூங்கும்மா. ஐ லப்பூ யூ”