IMTP–EPI 28

அத்தியாயம் 28

 

இடியுடன் கூடிய மழை விடாமல் பொழிந்து ஊரையே முடக்கி வைத்திருந்தது. வெளியே தட தடவென கதவு தட்டும் சத்தத்தில் பதறி எழுந்தான் எட்வர்ட். வீடு ஒரே இருட்டாக இருந்தது.

“ப்ளேக்கி!” சத்தமாக கூப்பிட்டான். பதில் இல்லை. ஆனால் கதவு இடிபடும் ஓசை மட்டும் நிற்கவில்லை. வேகமாக எழுந்து விளக்கைப் போட்டான். அது வேலை செய்யவில்லை.

“ஷிட்! கரண்ட் கட்டாயிருச்சு போலிருக்கே! ப்ளேக்கி!” கூப்பிட்டப்படியே இருட்டில் தட்டுத் தடுமாறி வந்து வாசல் கதவைத் திறந்தான் எட்வர்ட்.

அங்கே பதட்டத்துடன் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தான் பரசு.

“என்னாச்சு பர்சு?”

“துரை! ஊரெல்லாம் வெட்டு குத்துன்னு ஒரே கலவரமா இருக்குதாம். துப்பாக்கிய எடுத்துட்டு வாங்க. நீங்க வந்தாதான் அடங்குவானுங்க”

“இதே ஒரு பொழப்பா போச்சு இவனுங்களுக்கு. மழைக்குப் போத்திக்கிட்டு படுக்காம கத்தி குத்து ரத்தம்னு அலையறானுங்க. இரு துப்பாக்கி எடுத்துட்டு சுபூ கிட்ட சொல்லிட்டு வரேன்” பரசுவிடம் பேசியபடியே மீண்டும் சுப்புவை அழைத்தான். அப்பொழுதும் பதில் இல்லாததால் திக்கென இருந்தது அவனுக்கு. எப்பொழுதும் ஒற்றை அழைப்பிலேயே கால் கொலுசொலி சப்தமிட ஓடி வந்து அவன் முன் ஆஜராகி விடுவாள் அவள்.

டார்ச் லைட்டை தேடி எடுத்தவன், அவள் பெயரை கூப்பிட்டுக் கொண்டே வீடெல்லாம் தேடினான். வெளியே ஆள் காவலுக்கு இருப்பதால் வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை. வீட்டில் தான் எங்கேயோ ஒளிந்து விளையாடுகிறாள் எனும் நினைப்பில் மண் விழுந்தது.

“ப்ளேக்கி!” எனும் எட்வர்டின் ஓலம் பங்களாவையே கிடுகிடுக்க வைத்தது.

எட்வர்டின் சத்தத்தில் பாய்ந்து உள்ளே ஓடி வந்தான் பரசு.

“துரை என்னாச்சு?”

எப்பொழுதும் ஒரு கர்வத்துடனும், ஆளுமைத்தனத்துடனும் பார்ப்பவர்களை கலங்கடிக்கும் எட்வர்ட் மடிந்து தரையில் அமர்ந்திருந்தான். கண்கள் சிவந்து, மூக்கு விடைக்க உதடு துடிக்க,

“என் சுபூவ காணோம் பர்சு” என நடுக்கமான குரலில் சொன்னான் அவன்.

“ஐயோ! என்ன துரை சொல்லுறீங்க? எங்க வீட்டுக்கு கூட வரலியே! என் பொண்டாட்டி பவுனுவும் இங்க தானே இருந்தா! ஏ புள்ள பவுனு” பரசுவும் குரல் கொடுத்தார். அதற்கும் பதில் இல்லை.

எட்வர்ட் கலங்கி அமர்ந்திருந்தது சில நிமிடங்கள் தான். இரு கைகளையும் கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவன், புயலென எழுந்து நின்றான்.

“கிளம்பு பர்சு. சுபூ வெளிய இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஆபத்துதான். சீக்கிரம் எங்கிருக்கான்னு தேடி கூட்டிட்டு வரனும்.” குரலில் பழைய ஆளுமை திரும்பி இருந்தது.

இருவரும் குடை கூட எடுத்துக் கொள்ளாமல் வீட்டின் வெளியே ஓடினார்கள். காவலுக்கு இருந்த மற்றொருவனை அழைத்து விசாரித்தான் எட்வர்ட்.

“துரை, பர்சு பொண்டாட்டியும் துரையம்மாவும் கொட்டுற மழையில எங்கயோ கிளம்பி போனாங்க. கூடவே அந்த நாயும், துணைக்கு நம்ம மருதுவும் போனான். ஆனா எங்கன்னு தெரியலை துரை.” வீட்டுப் பின்னால் காவல் இருந்த அவன், மற்றவர்கள் செல்வதை கவனித்திருந்தான். மழையில், எங்கே என இவன் கத்தியது கூட கேட்காமல் சென்று விட்டார்கள் அவர்கள். காவலுக்கு மருது போயிருப்பதால் இவனுக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை.

பளீரென அவனுக்கு ஒர் அறை விழுந்தது.

“யூஸ்லெஸ் ஃபெல்லோவ்ஸ்!” கர்ஜித்தவன்,

“பர்சு, குயீக்! ஜீப்பை எடு” என ஆணையிட்டான்.

‘மை மீஸ்டேக். நான் தூங்கி இருக்கக் கூடாது’ தன்னையே கடிந்து கொண்டான்.

பரசு ஜீப்புடன் வருவதற்குள் அவர்கள் போய் எவ்வளவு நேரம் ஆனது, எந்த வழியாக போனார்கள் என விசாரித்திருந்தான் எட்வர்ட்.

எட்வர்ட் ஏறவும், ஜீப் மழையில் சேறும் சகதியுமாய் இருந்த சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடியது.

“ஊரு பக்கம் தான் போயிருக்காங்க பர்சு. போய் ஒரு மணி நேரம் ஆகி இருக்கு. வேகமா ஓட்டு.”

எட்வர்ட் முகத்தில் தெரிந்த கொலைவெறியிலும், உடல் மொழியில் தெரிந்த கோபத்திலும் ஜீப்பை அசுர வேகத்தில் ஓட்டினான் பரசு.

‘அவ கிட்ட புடிச்சதே அந்த வெள்ளந்தி குணமும், சின்னப்புள்ளைத்தனமும் தானேன்னு என்ன செஞ்சாலும் கோபப்படாம அரவணைச்சுப் போனது தப்போ? கொஞ்சம் கண்டிப்பையும் காட்டி இருக்கணுமோ? கவனமா இருக்க வேண்டிய இந்த நேரத்துல, என் கிட்ட கூட சொல்லாம இப்படி கிளம்பி போயிருக்காளே! ஐயோ ப்ளேக்கி! உன்னை சுத்தி ஆபத்து இருக்குன்னு சொல்லி இருக்கனுமோ? நீ பயந்து போயிருவியேன்னு தானே மறைச்சேன். உன்னை பாதுகாப்பா வச்சிக்க நான் இருக்கறப்போ எதுக்கு உன்னை சஞ்சலப்படுத்தனும்னு விட்டுட்டேனே! ஓ மை காட்! இங்க தான் எங்கயாவது இருப்பா! ஒன்னும் ஆகி இருக்காது! ஆகவும் கூடாது! ப்ளேக்கி பீ சேப்’ உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது அவனுக்கு. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.

“சீக்கிரம் பர்சு” ஆத்திரத்தில் கத்தினான்.

‘சீக்கிரம், சீக்கிரம்னா எங்கன்னு போய் தேடுறது! ஊருக்குள்ள வேற கலவரமா இருக்கே! எப்படி தேடி கண்டு பிடிக்கப் போறோம்? இந்தப் பவுனு மட்டும் என் கையில கெடைக்கட்டும், செவுலு அறை குடுக்கறேன். கொஞ்சம் கூட பொறுப்பில்லாம மழை நேரத்துல சின்ன புள்ளை கூட வெளிய போயிருக்காளே!’ மனதில் கருவினான் பரசு.

கோயிலைத் தாண்டி தான் ஊருக்குள் நுழைய வேண்டும். அவர்கள் ஜீப் கோயிலைத் தாண்டும் போது,

“நிறுத்து பர்சு! இங்க முதல்ல பார்க்கலாம்” என்றான் எட்வர்ட். சுப்புவை வீடு முழுக்க டார்ச் வெளிச்சத்தில் தேடும் போது மேசை மேல் எழுமிச்சை கனிகளை பார்த்த ஞாபகம் வந்திருந்தது அவனுக்கு. வீட்டில் பூஜை செய்யும் போது அதை அவள் பயன்படுத்தி பார்த்திருக்கிறான் எட்வர்ட். அதனால் தான் இங்கு வந்திருப்பாள், அதோடு கோயிலைத் தவிர ஊருக்குள் அவள் செல்ல வேறு எந்த காரணமும் இல்லை என்பதால் அங்கே நிறுத்த சொன்னான்.

நனைந்துக் கொண்டே கோயிலுக்கு ஓடினார்கள் எட்வர்டும் பரசுவும். கோயிலை சமீபிக்கும் போதே கட்டிப் போடப்பட்டிருக்கும் பவுனுவைப் பார்த்து ரத்த அழுத்தம் எகிறியது எட்வர்டுக்கு. அவளை நோக்கி பரசு விரைய, எட்வர்டோ முகத்தில் அறைந்த மழையை வழித்து விட்டுக் கொண்டே கண்களை சுழற்றி அங்கும் இங்கும் ஓடி சுப்புவைத் தேடினான்.

வெகு அருகில் கேட்ட தீனமான குரைப்பு சத்தத்தில் குரல் வந்த திசையை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினான் எட்வர்ட். அங்கே அவன் கண்ட காட்சியில் குலை நடுங்கி போனது அவனுக்கு.

“ஜோனி, மை பாய்!” ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோனியை பார்த்து கதறிவிட்டான் எட்வர்ட். அவனைக் கண்டதும் கண்களை சொறுகியது அது.

“நோ! நோ ஜோனி!” உலுக்கினான் அதை. மீண்டும் கண் விழித்து அவனைப் பார்த்தது ஜோனி. காட்டைப் பார்த்து தீனமாக குரைத்தது.

சட்டென உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்த எட்வர்ட், ஜோனியை கைகளுக்குள் அள்ளிக் கொண்டான். அதை தூக்கி கொண்டு போய் ஜீப்பில் கிடத்தியவன், தன் சட்டையைக் கழட்டி ரத்தம் வழிந்த இடத்தில் கட்டினான்.

“ஸ்டே ஸ்ட்ரோங் பாய்! ஐ நீட் யூ! எங்க பிள்ளைக்கு விளையாட்டு தோழனா நீ வேணும். டோன்ட் லீவ் அஸ் ப்ளிஸ்!” அங்கேயே ஜோனியைக் கிடத்தி விட்டு பரசுவிடம் ஓடினான்.

அதற்குள் பவுனுவிடம் விஷயத்தைக் கறந்திருந்தான் பரசு. அருகில் வந்து நின்ற எட்வர்டிடம்,

“நீங்க போக சொன்னதாதான் எங்கிட்ட சொன்னா துரை இல்லைன்னா கண்டிப்பா கூட்டிட்டு வந்துருக்க மாட்டேன். என்னை மன்னிச்சிருங்க துரை” அழுது கொண்டே பேசினாள் பவுனு.

கை முஷ்டிகள் இறுக அவள் சொன்ன கதையை கேட்ட எட்வர்ட், குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

“மாமான்னு சொன்னா துரை. அதான் பேசட்டும்னு தூரமா வந்து நின்னேன். என்ன பேசனாங்கன்னு கூட தெரியல. திடீர்னு பாத்தா நாலஞ்சி பேரு காட்டுல இருந்து வந்துட்டானுங்க. நம்ம புள்ளய அருவா எடுத்து வெட்ட வந்தான் ஒருத்தன். அதுக்குள்ள அந்த மாமன்காரன் தடுத்துட்டு, அவள அறைஞ்சி கீழ தள்ளிட்டான். புள்ள அசையாம கீழே விழுந்து கிடந்தா. அப்புறமா அவள தூக்கிட்டு அவன் மட்டும் காட்டுக்குள்ள போயிட்டான். மத்தவனுங்க எல்லாம் ஊர் பக்கம் தான் போனானுங்க.” தேம்பினார் பவுனு.

‘ப்ளேக்கி!!!’

நெஞ்சில் உதிரம் வழிந்தது அவனுக்கு. அவள் மயங்கும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள் எனும் விஷயத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. கைகால்கள் நடுங்கியது, உதடு துடித்தது. பார்த்திருந்த பரசுவுக்கும், பவுனுவுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஸ்கௌண்டரல்! ஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன். என் ப்ளேக்கிய கை நீட்டி அடிச்சிருக்கான் அவன். இந்த எட்வர்டோட பொண்டாட்டிய அடிச்சிருக்கான்! அவன் கை தனியா தொங்கனும்” கர்ஜித்தான் எட்வர்ட்.

மனம் உளைக்களமாக கொதித்தது. சுப்புவின் பாதுகாப்பை நினைத்து நா உலர்ந்தது. கைக்குள் பொத்தி வைத்திருந்த தன் மனைவி காட்டுக்குள் என்ன கஷ்டப்படுகிறாளோ என நினைத்து நடுங்கினான். மனதை அடக்கி, மூளையின் செயல்பாட்டை முன் நிறுத்துவதுதான் அவசியம் என உணர்ந்து கொண்டான் எட்வர்ட். தலையை அழுந்தக் கோதியவன், மடமடவென பரசுவைப் பார்த்து ஆணைகளைப் பிறப்பித்தான்.

“பர்சு, இங்கிருந்து வெளியாகனும்னா ஆத்த தாண்டிதான் போகனும். காட்டு வழியா சுத்தி ஆத்துக்கு தான் வருவான் அந்த மாமன்காரன். மயங்கி கிடக்கற சுபூவ தூக்கிட்டு அவனால ரொம்ப தூரம் நடந்துருக்க முடியாது. நீ ஜீப்புல கொஞ்ச ஆளுங்கள அள்ளிப் போட்டுகிட்டு ஆத்துப் பக்கம் போ. அங்க நின்னு கண்காணிச்சிட்டே இரு. பரிசல் ஏதும் வெளியாகாம பாத்துக்க. ஊருக்குள்ள அடிச்சிக்கிறவனுங்க எல்லாம் அப்படியே அடிச்சிகிட்டு சாகட்டும். அதைப்பத்தி எனக்கு கவலை இல்ல. எனக்கு என் சுபூ தான் முக்கியம். இந்த கலவரம் எல்லாம் நம்மள திசை திருப்பத்தான் நடக்குது. அதுக்கு நாம இடம் குடுக்க கூடாது”

“சரிங்க துரை.”

“நான் காட்டுக்குள்ள போறேன். இன்னும் கொஞ்ச ஆளுங்கள என் பின்னால அனுப்ப ஏற்பாடு செய். அவன காட்டுக்குள்ள இல்ல ஆத்து பக்கத்துல பிடிக்கறோம். நீங்க முதல்ல அவன பார்த்தா, உயிரோட பிடிச்சு வைங்க. எனக்கு அவன் உயிர் வேணும்” குரலில் கோபம் கொப்புளித்தது.

ஜீப்புக்கு சென்று டார்ச் எடுத்தவன், துப்பாக்கியை பேண்டில் சொருகிக் கொண்டான். சட்டை இல்லாமல் இருந்தவன், ஜீப்பில் இருந்த கோட்டை எடுத்து அணிந்துக் கொண்டான். அவன் கிளம்புவதைப் பார்த்ததும் ஜோனி எழ முயற்சி செய்தது.

“ஈசி பாய்! நம்ம ஆளு சுபூவ நான் கண்டிப்பா கூட்டிட்டு வருவேன். நீ இங்கயே இரு.” தலையைத் தடவினான்.

காட்டுக்குள் அவன் நுழைய எத்தனித்தப் போது,

“ஏடி” எனும் குரல் தடுத்து நிறுத்தியது.

“ரிச்சி!” ஆச்சரியமாகப் பார்த்தான் எட்வர்ட்.

“ஏடி, ஆத்துல தண்ணி அபாயகரமான நிலமைக்கு உயர்ந்துருக்கு. வெள்ளம் வர சான்ஸ் இருக்கு.(அந்த காலகட்டத்தில் புரூக்லேண்ட்ஸ் எஸ்டேட்டில் நிஜமாகவே வெள்ளம் வந்தது. வருடம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் சம்பவம் நிஜம்) நம்ம ரெண்டு பேர் எஸ்ட்டேட்டும் பாதிக்கற நிலமைல இருக்கு. அத சொல்லதான் உன் வீட்டுக்குப் போனேன். யாரயும் காணோம்னு ஊருக்குள்ள வந்தேன். உன் ஜீப் இங்க நிக்கவும் இங்க வந்தேன். என்ன ஆச்சு ஏடி? என்ன பிரச்சனை?”

இவர்களின் பங்களா மேட்டுப் பகுதியில் இருந்தது. வெள்ளம் வந்தாலும் இவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஊர் மக்களும், கால்நடைகளும் பாதிக்கப் படும் அபாயம் இருந்தது.

“மை வைப் இஸ் கிட்நேப்ட்” வைப் எனும் வார்த்தையை அழுத்தி சொன்னான் எட்வர்ட்.

“ஓ மை காட்! நம்ம மேலயே கை வைக்க இவனுங்களுக்கு தைரியம் வந்துருச்சா? அவ இந்தியனா இருந்தாலும் உன் கூட இருந்தவளாச்சே! அவள தூக்க யாருக்கு தைரியம் வந்துச்சு?” இவன் வைப் எனும் வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை. அடிமை மக்கள் தங்களிடமே வேலையைக் காட்ட இவர்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருக்க வேண்டும் என்பது தான் இவனின் ஆத்திரம்.

“ஊர் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன். கலவரத்தை அடக்கி, மக்கள மேட்டுப் பகுதிக்கு இடம் மாத்த வைக்கறேன். நீ போய் அவள தேடி கூட்டிட்டு வா. மழைக்கு தீப்பந்தம் எதுவும் பிடிக்க முடியாது. என் கிட்ட பெரிய டார்ச் லைட் இருக்கு. மெடிக்கல் கிட்டும் இருக்கு எடுத்துட்டுப் போ”

“தேங்க்ஸ் ரிச்சி” குரல் தளுதளுத்தது எட்வர்டுக்கு.

“எனக்கு புடிக்காதத செஞ்சாலும், நீ என் நண்பன். உனக்காக தான் இந்த உதவி, நீ கட்டி இருக்கற அந்த இந்தியனுக்காக இல்ல. கோ குவிக்”

திரும்பி நடக்க ஆரம்பித்த எட்வர்ட், மீண்டும் ரிச்சியிடம் வந்து,

“ஹே மேன்! ஜோனி ஜீப்ல இருக்கான். அவன காப்பாத்து” என்றவன் ஆழ்ந்து ரிச்சியைப் பார்த்து,

“அவ உயிரோட இருந்தா ரெண்டு பேரும் திரும்பி வருவோம். இல்லைன்னா, என் எஸ்டேட்ட கவனிச்சுக்க ரிச்சி” அணைத்து விடுவித்தான்.

“ஏ ஏடி! டோண்ட் பீ எ செண்டிமெண்டல் ஃபூல்”

அவனின் வசைமழையைக் கேட்க எட்வர்ட் அங்கிருக்கவில்லை.

அதற்குள் பரசுவும் ஆட்களை அழைத்து வந்திருந்தான். எட்வர்டும் இன்னும் ஒரு இருபது பேரும் செம்பணைக் காட்டுக்குள் நுழைந்தனர். நுழைந்த கொஞ்ச தூரத்திலேயே மருது ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்தனர் அவர்கள். அவனை சிகிச்சைக்கு தூக்கி செல்லப் பணித்து விட்டு நடையை எட்டிப் போட்டான் எட்வர்ட்.

இந்த காட்டின் இண்டு இடுக்கும் கூட எட்வர்டுக்கு அத்துப்புடி. காடாய் கிடந்த நிலங்களை அழித்து, செம்பணைக் கன்றுகளை நட்டு, உரமிட்டு, குலை தள்ளும் வரை கூடவே இருந்து கவனித்தவன் ஆயிற்றே! நான்கு திசைகளுக்கும் ஆட்களைப் பிரித்து விட்டவன், ஆற்றுக்கு இங்கிருந்து போகும் வழியை நோக்கி நடந்தான். முத்து எப்படியும் இந்த வழியாக தான் சென்றிருக்க வேண்டும் என்பது அவன் அனுமானம்.

அவனின் கணிப்பு சரிதான் என்பது பத்து நிமிட நடையிலேயே அவனுக்கு தெரிந்து விட்டது.

முத்துவுக்கு இந்த எஸ்டேட் புதிது என்பதால் வந்த வழிக்கு அடையாளம் வைத்திருந்தான். நடராசு இல்லாமல் திரும்பி போகும் போது தடுமாறக் கூடாது என செம்பணை மரங்களில் சிவப்பு சாயப்  பொட்டு வைத்திருந்தான். ஆள் கடந்து போன அடையாளம் இருக்கிறாதா என ஆராய்ந்தபடி வந்த எட்வர்டின் கண்கள் அதனைக் கண்டு கொண்டன. மழைக்கு கூட அந்தப் பொட்டு அழியாமல் இருப்பதை வைத்து, இவர்கள் பல நாட்களாக இந்த இடத்தை கண்காணித்து உள்ளுக்குள்ளேயே வேலை செய்திருக்கிறார்கள் என புரிந்துக் கொண்டான் எட்வர்ட்.

‘என் ப்ளேக்கிய எந்த தைரியத்துல என் கிட்ட இருந்து நீ தூக்குன? இந்த எட்வர்ட் பத்தி தெரியாம என் கிட்டயே விளையாடி பார்க்க நினைச்சிருக்க! விடமாட்டேன்டா. என் ப்ளேக்கிய என் கிட்ட இருந்து பிரிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. இருபத்து நாளு மணி நேரத்துல இதுக்கெல்லாம் முடிவு கட்டறேன். ப்ளேக்கி பயப்படாதம்மா! நான் வந்துகிட்டே இருக்கேன். தைரியமா இருக்கனும்.’

எட்வர்ட் அனுமானித்தது சரிதான். முத்துவால் நீண்ட நேரம் சுப்புவை சுமக்க முடியவில்லை. கைகள் இரண்டும் இற்று விடும் போல் வலித்தன. தன் காதலை மட்டும் மனதில் நிறுத்தி, மன வலிமையைத் துணை கொண்டு நிற்காமல் நடந்தான்.

முகத்தில் அடித்த மழை நீரினாலும், அவன் தூக்கியபடி நடந்து போகும் அசைவினாலும் சீக்கிரமாகவே கண் விழித்தாள் சுப்பு.

“மாமா!” முனகினாள்.

அவளை தோளில் இருந்து இறக்கியவன், மரத்தின் அடியில் கிடத்தினான்.

“முழிச்சிட்டியா புள்ள?” அவனின் அறையில் கன்றிப் போய் இருந்த கன்னத்தை தடவிக் கொடுத்தான். அவன் கைகளை விலக்கியவள், அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். எட்வர்ட் கண்களில் தெரியும் அதே பாசம். அவன் கண்களில் அன்போடு, மயக்கமும் தெரியும். இவன் கண்களில் பாசம் மட்டும் வழிந்தது.

“ஏன் மாமா என்னை அறைஞ்ச? வலிக்குது தெரியுமா!” கண் கலங்கினாள்.

“மன்னிச்சுடு புள்ள. எனக்கு வேற வழி தெரியல. நீ முரண்டு புடுச்சா அந்த ஆளு வெட்டிப் போட்டுருவான் உன்ன. அதான் கை நீட்ட வேண்டியதா போச்சு” சமாதானம் செய்தான் முத்து.

“அத விடு! இப்ப எங்க என்னை தூக்கிட்டுப் போற? நான் தான் வர மாட்டேன்னு சொன்னேன்ல!” ஆத்திரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“உன்னை கூட்டிட்டுப் போகாம அவன் கூடயே விட்டு வைக்க சொல்லுறீயா? கழுதை! நீ என் பொண்டாட்டிடி! சின்ன புள்ளையில உங்க அப்பாரு உன் கையப் புடிச்சு குடுத்தப்பவே, அத என்னிக்கும் கைவிடமாட்டேன்னு வாக்கு குடுத்துருக்கேன்”

“பொண்டாட்டின்னு சொல்லாத மாமா” காதைப் பொத்திக் கொண்டாள்.

“அப்படிதான் சொல்லுவேன். ஊரை விட்டுப் போனதும் நமக்கு கோயிலுல வச்சு கல்யாணம். யாரும் வேணாம் நமக்கு. நாம ரெண்டு பேர் மட்டும் போதும். எனக்கு நீ, உனக்கு நான்”

“இல்லையே மாமா!”

“என்ன இல்லை? அடிச்சு மொகரைய பேத்துருவேன் பாத்துக்க! உன் கிறுக்குத்தனத்துக்கு ஒரு அளவு இல்லையா?” வெளிறிய அவள் முகத்தில் என்னத்தைக் கண்டானோ கோபத்தைக் கட்டுப்படுத்தினான் முத்து.

“இங்க பாரு புள்ள, அந்த தொரை கிட்ட இருந்தத எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துரு. நடந்து போறப்ப காக்கா நம்ம மேல கழிஞ்சு விட்டுட்டுப் போயிறது இல்லையா! அத தொடச்சிப் போட்டுட்டு நாம வேற வேலையா பாக்கல? அது மாதிரி தான் இதுவும். அவன் உன்னை மிரட்டி, கொடுமைப் பண்ணி உன் கற்ப பறிச்சத காக்கா போட்ட எச்சம் மாதிரி துடைச்சிப் போட்டுடு புள்ள. மாமன் இனிமே உன்னைக் கண்ணுக்குள்ள வச்சிப் பாத்துக்குவேன்” குரல் கமற சொன்னான் முத்து.

“எல்லாத்தையும் தொடைச்சிப் போட்டுட்டு வான்னு சொல்லுறியே மாமா, அந்த துரை காதலோட குடுத்த பூ புள்ள என் வயித்துல வளருதே அத நான் என்ன பண்ண?” பிசிரற்ற குரலில் திடமாக அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்து கேட்டாள் சுப்பு.