IMTP–EPI 29

அத்தியாயம் 29

 

கால்கள் அதன் போக்கில் நடந்து போனாலும், மனம் மட்டும் சுப்புவின் நினைவினிலே உழன்றது எட்வர்டுக்கு. மழை தந்த குளிரோ, அங்கங்கே ஏறி ரத்தத்தை உறிஞ்சிய அட்டையோ, காதில் வந்து ரீங்காரமிட்ட கொசுக்களோ எதுவும் அவன் மனதில் அசைந்தாடும் தன்னவளின் நினைவுகளை கலைக்கவில்லை.

நடக்கும் போதே, சுப்புவின் வயிற்றில் தங்களின் பூக்குழந்தை பூத்திருக்கும் விஷயத்தை அவளிடம் பகிர்ந்து கொண்ட காட்சிகள் கண் முன்னே விரிந்தன அவனுக்கு.

அன்று சூரியகாந்தி தோட்டத்தில் நின்று தானே நீர்பாய்ச்சியவன், இன்னும் மொட்டு விடாத செடிகளை பாசமாக தடவிக் கொடுத்தான். சற்று நேரத்திற்கெல்லாம் கொலுசு சத்தம் நெருக்கத்தில் கேட்கவும் புன்னகை முகமாகினான் எட்வர்ட்.

“துரைலிங்” பின்னோடு அவனை அணைத்துக் கொண்டாள் சுப்பு.

“என்ன டார்லிங், கொஞ்சல் அதிகமா இருக்கு! என்ன வேணும் என் ப்ளேக்கிக்கு? என் மேல எல்லாம் வேர்வையா இருக்கு ப்ளேக்கி. தள்ளி நின்னு பேசும்மா”

“அதெல்லாம் முடியாது! காலையில எழுந்ததும் வேலைக்குப் போயிட்டீங்க. அப்புறம் வந்ததும் டீ குடிச்சிட்டு இங்க வந்துட்டீங்க. என்னைக் கண்டுக்கவே இல்லை” சிணுங்கினாள்.

“அநியாயமா பொய் சொல்லக் கூடாது ப்ளேக்கி. டீ குடிச்சிட்டு நான் ரூமுக்கு போன சமயத்துல பின்னாலயே வந்து முத்தா வாங்கிகிட்ட தானே!” சீண்டினான் அவளை.

“போங்க துரை!” வெட்கப்பட்டாள் சுப்பு.

அவர்கள் பேசிக் கொண்டிருப்பது பொறுக்காமல் சுப்புவின் காலை சுரண்டியபடி வந்து நின்றது ஜோனி.

“தோ வந்துட்டான் பாரு மூக்கு வேர்த்துகிட்டு!” ஜோனியை முறைத்தான் எட்வர்ட்.

“ஜோனிய திட்டாதீங்க துரை” குனிந்து அதன் காதை தடவிக் கொடுத்தாள் சுப்பு. உடம்பை நெளித்து சுகமாக அமர்ந்துக் கொண்டது ஜோனி.

எட்வர்ட் இன்னும் முறைக்கவும், சுப்புவின் கன்னத்தை நக்கிக் கொடுத்து விட்டு அவனைப் பார்த்து குரைத்தது.

“நீ வந்ததுல இருந்து என்னை மறந்துட்டான் இவன். என் கூட உரிமைப் போராட்டம் வேற!” சிரித்த எட்வர்ட் அவளையும் இழுத்துக் கொண்டு மண் தரையில் அமர்ந்தான். தன் சட்டையை தூக்கி அவள் கன்னத்தை துடைத்தவன், ஜோனியைப் பார்த்து,

“ஷீ இஸ் மைன் படி(she is mine buddy)” என சொல்லி அவளின் மறு கன்னத்தில் முத்தமிட்டான். இவர்கள் இருவரின் சண்டையை கண்டு வாய் விட்டு சிரித்தாள் சுப்பு.

ஜோனி, போங்கடா நீங்களும் உங்க காதலும் என நகர்ந்து மண்ணை நோண்டி விளையாட போய்விட, தன் மடியில் சுப்புவை சாய்த்துக் கொண்டான் எட்வர்ட்.

“துரை!”

“என்னம்மா?”

“இப்போலாம் ஏன் என்னை டீ, காபி குடிக்க விட மாட்டிக்கிறீங்க? பால் குடிக்க நான் என்ன பச்ச பாப்பாவா? கஸ்டமா இருக்கு!” சிணுங்கினாள் சுப்பு.

“உன் நல்லதுக்குதான் ப்ளேக்கி”

“அது என்ன என் நல்லதுக்கு? எனக்குப் பிடிக்கல. நீங்க மட்டும் டீ குடிக்கிறீங்க! ஆனா நான் மட்டும் பால் குடிக்கனும்!”

“சரி, இனிமே நானும் பாலே குடிக்கறேன் ப்ளேக்கி”

“நெஜமாவா? உங்களுக்கு டீ இல்லாம இருக்க முடியாதே துரை” சந்தேகமாக கேட்டாள் சுப்பு.

“நீ குடிக்காம இருக்கறப்ப நான் இருக்க மாட்டேனா?” தன் மடியில் சாய்ந்திருந்தவள் வயிற்றை மென்மையாக தடவிக் கொடுத்தான் எட்வர்ட்.

“விடுங்க துரை கூசுது!”

“உன்னை தடவல ப்ளேக்கி! உள்ள இருக்கற நம்ம பாப்பாவ தடவிக் குடுத்தேன்”

“என்ன சொல்லுறீங்க துரை? நெஜமாவா? பாப்பா இருக்கா வயத்துல?” பட்டென எழுந்து அமர்ந்தவள், அவன் முகத்தை ஆவல் பொங்கப் பார்த்து கேட்டாள்

“ஆமாம் ப்ளேக்கி! பாப்பாவுக்கு ஒன்னரை மாசம் ஆகப் போகுது. இன்னும் ஒரு மாசம் போனதும் உன் கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். நான் இப்பவே சொல்லிட்டு, அப்புறம் எசகுபிசகா ஏதாச்சும் ஆச்சுன்னா, நீ கவலைப் படுவியேன்னு யோசிச்சேன். ஆனா நீ பண்ணற அட்டகாசத்துக்கு சொல்ல வேண்டியதாப் போச்சு”

முதல் மாதம் மாதவிலக்கு வராமல் போன போதே அவனுக்கு சந்தேகம் தான். ஆனாலும். இன்னும் ஒரு மாதம் போகட்டுமென இருந்தான். முன்னெச்சரிக்கையாக அவளுக்கு காபி, டீயை நிறுத்தி இருந்தான். அதோடு அவளது உணவு விஷயத்திலும் மேலும் அக்கறை எடுத்திருந்தான். ஓட்டமாக ஓடுபவளை, மென்மையாக கடிந்து நடக்கப் பழக்கி இருந்தான். இதை எல்லாம் அவன் முன்னே மட்டும் செய்தவள், அவன் இல்லாத போது திருட்டுத்தனமாக காபி அருந்தினாள், அவனின் கண்டிப்பைக் காற்றில் பறக்க விட்டாள். அதனால்தான் குழந்தை விஷயத்தை சொல்லி விட்டாள் கவனமாக இருப்பாள் என முடிவெடுத்திருந்தான் எட்வர்ட்.

“இப்போ யாருக்கும் சொல்ல வேணாம் சரியா? அடுத்த மாசம் சொல்லிக்கலாம்.”

“சொல்ல வேணாவா? பட்டுக்கா முகத்த பார்த்தாலே, என் மண்டையில உள்ளதெல்லாம் உருகி வாய் வழியா வந்துருதே! நான் என்ன செய்யட்டும் துரை?” பாவமாக விழி விரித்தாள்.

“அதுக்கு ஒன்னும் செய்ய முடியாதுதான். கோணி தைக்கிற ஊசி எடுத்து உன் வாய தைச்சிறலாமா?”

“அப்புறம் நான் எப்படி சாப்புடுவேன் துரை? வேணும்னா பாதி வாய் மட்டும் தச்சிக்கலாம்”  என சிரித்தாள்.

சிரிப்பு வந்து விட்டது அவனுக்கும். அவன் கன்னக்குழியை தொட்டு முத்தமிட்டவள்,

“துரை, வாயும் வயிறுமா இருந்தா குமட்டி குமட்டி வாந்தி வருமாமே! எனக்கு ஒன்னும் காணோமே? உண்மையா உள்ள பாப்பா தான் இருக்கா இல்ல பூ இருக்கான்னு சந்தேகமா இருக்கே!” கேலியாக கேட்டாலும் அவள் முகத்தில் கவலைக் குறியைப் பார்த்தான் எட்வர்ட்.

“எல்லோருக்கும் வாந்தி வராது ப்ளேக்கி! அவங்க அவங்க உடம்ப பொறுத்து அவங்க ப்ரேக்னசி, ஹ்ம்ம் பிள்ளை சுமக்கறது மாறுபடும். இப்போ பாப்பா உனக்குள்ள இருக்கவும் தான் ஒவ்வொரு மாசமும் வர வேண்டியது உனக்கு தள்ளி போயிருக்கு. அதோட உனக்கு ரொம்ப கோபம் வருது. சின்னதா நான் ஏதாச்சும் சொல்லிட்டா கூட அழுகை பொங்கிகிட்டு வருது. ராத்திரியில சூரியகாந்தி பூ கேட்க கூட தெம்பில்லாம படுத்ததும் தூக்கம் வருது. காலையில எழுந்துக்க முடியாம மயக்கம் வருது. இதெல்லாம் உன் வயித்துல நம்ம பூ பாப்பா இருக்கற அறிகுறி ப்ளேக்கி” என கற்றுத் தந்தான்.

மனைவிதான் இந்த விஷயத்தை கணவனிடம் பகிர்ந்துக் கொள்வாள். இங்கே அவன் மருத்துவனாய், கணவனாய் எல்லாம் சொல்லிக் கொடுத்தான்.

தன் மேல் சட்டையைத் தூக்கி வயிற்றை உற்றுப் பார்த்தாள் சுப்பு. அவள் செய்வதை புன் சிரிப்புடன் பார்த்திருந்தான் எட்வர்ட். தன் வயிற்றை ஆசையாக தடவியவள்,

“துரை, பாப்பா வந்துருச்சு நமக்கு! எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? இனிமே என் துரை என்னை விட்டுப் போகமாட்டாரு. என் கூடவே இருப்பாரு” என கண்ணீர் வழிய சிரித்தாள்.

“ஏ ப்ளேக்கி, பைத்தியம்! பூ பாப்பா வந்தது நம்ம அன்புக்கு அடையாளமாத்தான். நம்ம அன்பை நிரூபிக்கறதுக்காக இல்லை. பிள்ளை இருந்தாலும் இல்லைனாலும் நீ என் செல்ல பொண்டாட்டிதான். உன்னை தள்ளி வைக்கிற மடத்தனத்த எல்லாம் நான் செய்ய மாட்டேன். ஏன்னா ஐ லப்பூ யூ” முறுவலித்தான்.

உட்கார்ந்த வாக்கில் அவன் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவள், சடாரென அவன் மேல் பாய்ந்தாள்.

“ஏ ப்ளேக்கி! மெதுவா” முதல் சந்திப்பைப் போல அவன் மேல் விழுந்து கிடந்தாள் சுப்பு. அவன் கழுத்தை தன் இரு கரங்களால் வளைத்தவள்,

“ஐ லப்பூ யூ துரை” என சொல்லி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். தன் இரு கரங்களாலும் அவளை அணைத்துக் கொண்டவன், சுகமாக சாய்ந்துக் கொண்டு அவள் கொடுத்த முத்தங்களை ஆசையாகப் பெற்று கொண்டான்.

அவர்கள் அருகே வந்த ஜோனி, குரலெடுத்துக் குரைத்தது. அப்பொழுதும் அவர்கள் விலகாமல் இருக்கவும், ஒட்டி இருந்த இருவர் கன்னங்களையும் சேர்த்து நக்கி வைத்தது.

“டேய் ஜோனி! எச்சிப் பண்ணாதன்னா கேக்கறியா?” எழுந்து நின்றவள், ஜோனியைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

“ஏ ப்ளேக்கி! ஓடாதே! வயித்துல பாப்பா இருக்கு!” திரும்பி எட்வர்டைப் பார்த்து நாக்கை துருத்திக் காட்டிவிட்டு ஓடினாள் சுப்பு.

“சொன்ன பேச்ச கேட்கவே மாட்டா! மை ஸ்வீட் அடங்காப்பிடாரி” கொஞ்சிக் கொண்டான் தன் ப்ளேக்கியை. அந்த நாள் நினைவுகள் ஆந்தையின் பயங்கர சத்தத்தில் கலைந்து போயின.

பலத்த மழை அவர்களின் துரித பயணத்துக்கு தடையாக இருந்தது. அவள் எப்படி இருக்கிறாளோ, இந்த நேரத்தில் அலைச்சலும் மன உளைச்சலும் அவளை என்ன பாடுபடுத்துகிறதோ என மனம் நொந்தவாறே நடந்துக் கொண்டிருந்தான் எட்வர்ட். அவன் பின்னால் மற்றவர்களும் வந்தனர். 

கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான் இரவு மணி 11.58 என காட்டியது. இங்கே இவன் அலைந்து கொண்டிருக்க, அங்கே மலாயாவின் தலைநகரமான கோலாலம்பூரில் இரண்டு நிமிட விளக்கடைப்பு நடந்துக் கொண்டிருந்தது. அன்று ஆகஸ்டு முப்பதாம் திகதி. இரண்டு நிமிட இடைவெளியில் யூனியன் கொடி கீழிறக்கப்பட்டு மலாயாவின் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஆகஸ்டு முப்பத்து ஒன்றாம் திகதி, மலாயா பிரிட்டிஷாரின் ஆளுமையில் இருந்து விடுதலையாகி சுதந்திர நாடென பிரகடணப் படுத்தப்பட்டது.

இடியுடன் கூடிய மழை மேலும் வலுக்க, இவர்களால் முன்னேறவே முடியவில்லை.

“துரை, நாம இப்போ நின்னுதான் ஆகனும். இதுக்கு மேல இருக்கற நடையெல்லாம்(செம்பணை மர வரிசை) ஒழுங்கில்லாம தாறுமாறா இருக்கும். வெளிச்சத்துல வந்தாலே தடுமாறி பாதைய விட்டுருவோம். அடிக்கற மழைக்கு கண்ணே தெரியல. அடையாளம் போட்ட மரத்தைக் கூட கண்டுபிடிக்கறது கஷ்டம்” தயங்கி தயங்கி சொன்னான் கூட வந்தவன் ஒருவன்.

அவர்கள் கூற்று உண்மைதான். இருட்டில் இன்னும் முன்னேறுவது முட்டாள்தனம் என புரிந்தது அவனுக்கு. ஆனால் கடத்தப் பட்டிருப்பது அவன் ப்ளேக்கியல்லவா! அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கும் அவர்கள் குழந்தைக்கும் ஆபத்தல்லவா!

“நான் போய் தான் ஆகனும். நீங்க இதோட நின்னுக்குங்க. மழை கொஞ்சம் விட்டதும் வாங்க.” சொன்னவன் திரும்பி பாராமல் நடந்துவிட்டான். ஆனால் அவர்கள் அப்படியே விட்டுவிடுபவர்களா, துரையின் விசுவாசிகள் ஆயிற்றே. அவன் பின்னாலேயே நிழல் போல் தொடர்ந்தார்கள். 

சுப்பு கருவுற்றிருக்கிறாள் எனும் செய்தி முத்துவுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.

“என்ன புள்ள சொல்லுற?” மீண்டும் மீண்டும் கேட்டான்.

“இப்போ நான் பிள்ளைத்தாச்சி மாமா. ரெண்டு மாசம் ஆகப்போகுது” கண்கள் மடை திறந்தன.

முதல் கட்ட அதிர்ச்சி ஓய்ந்ததும், அவளைப் பார்த்தவன்,

“சரி விடு புள்ள. ஆனது ஆயிப்போச்சு! புள்ள உன்ன மாதிரி பொறந்தா நாமளே வளப்போம். அந்த நாசமா போனவன் மாதிரி இருந்தா கழுத்த திருகி ஆத்துல வீசிறலாம்.” என்றான்.

ஆவேசமாக எழுந்தவள், முத்துவை நோக்கிப் பாய்ந்தாள்.

“யாரு புள்ளய கழுத்த நெரிச்சுப்புடுவேன்னு சொன்ன? எங்க புள்ளயா அது! ஆசையா என் துரை எனக்கு குடுத்த புள்ள! நேசத்தோட நான் வாங்கி கிட்ட புள்ள! எங்க புள்ளய கொல்லுவேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்? சொல்லுவியா? சொல்லிவியா?” ஆங்காரமாக அவனைப் சகட்டு மேனிக்குப் போட்டு அடித்தாள் சுப்பு. கை கால்கள் துவளும் வரை அவனை அடித்துக் கொண்டே இருந்தாள். அவள் அத்தனை அடிகளையும் கல் போல் தாங்கிக் கொண்டு அப்படியே நின்றான் முத்து. அவன் கண்களிலும் கண்ணீர்.

களைத்துப் போய் தரையில் மடிந்து அமர்ந்தவள்,

“என்னை விட்டுரு மாமா! நான் துரை கிட்ட போகனும். நான் இல்லாம, என்னைக் காணாம அவரு துடிச்சுப் போயிருப்பாரு. அவரு இல்லாம என்னாலயும் இருக்க முடியாது மாமா. நான் செத்துப் போயிருவேன்” சொன்னவள் கீழே கிடந்த கூரான கல்லை எடுத்து தன் மணிக்கட்டை கிழிக்கப் போனாள். முத்து பாய்ந்து வந்து பிடுங்குவதற்குள், தானாகவே அதை தூக்கி எறிந்தாள்.

“நான் சாக மாட்டேன். சாக கூடாது!”

கண்ணீரை துடைத்து ஓய்ந்து போய் அமர்ந்தவள்,

“துரை எந்த நெலமையிலும் துணிஞ்சி வாழ்க்கைய எதிர் கொள்ளனும்னு சொல்லியிருக்காரு. நான் சாக மாட்டேன். சத்தியமா மாட்டேன்” திரும்ப திரும்ப சொன்னாள்.

“ஏ புள்ள சுப்பு, நீ பொறந்ததுல இருந்து உன் மேல பாசத்த வச்ச என்னவிட, நேத்து வந்த அந்த எடுப்பட்டவன் பெருசா போயிட்டானா? அவன் நெறத்துல மயங்கிப் போயிட்டியா புள்ள?”

சிறிது நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் சுப்பு.

“மாமா! துரையா பார்க்காம இருந்து, உன்னை கட்டி இருந்தா நான் உன் மேல வச்சிருந்த மாமான்ற பாசம் மாறி புருஷன்னு நேசம் வந்துருக்கலாம். ஆனா நான் என் துரைய பாத்துட்டனே! அவரோட பாசத்த அனுபவிச்சிட்டேனே! எனக்காக செய்யக் கூடாதது எல்லாம் செஞ்சு, என்னை கவர்ந்துப்புட்டாறே! பாசம், பரிவு, நேசம், அக்கறை, அன்பு, மரியாதை, மயக்கம், வெட்கம் இதெல்லாம் கத்துக் கொடுத்து என்னை மயக்கி வைச்சிருக்காறே மாமா. பழக பழக இதெல்லாம் தான் எனக்கு பெருசா தெரிஞ்சது. அவரோட நிறம் இல்ல மாமா. அவர மறந்து உன்னை நான் எப்படி மாமா கட்டிக்குவேன்? அப்படி என்னை கட்டாயப்படுத்தி நீ கட்டிக்கிட்டாலும், துரை சொன்னதால உசுர விடமாட்டேன், ஆனா மனசால பொணமா தான் உன் கூட வாழுவேன். என்னை விட்டுரு மாமா” முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் சுப்பு.

அவள் சொன்ன வார்த்தை இதயத்தை அறுத்துப் போட்டது போல வலித்தது அவனுக்கு.

“எங்கக்கா மவ வளந்துட்டாளே! பேச்செல்லாம் விவரமா இருக்கு” விரக்தியாக சொன்னான் முத்து.

“அவன பத்தி மட்டும் பேசறியே சுப்பு! நானும் உன்னை காதலிச்சேனே, நான் பாவமில்லையா புள்ள?” காதலித்தேனே என இறந்த காலத்தில் சொன்னதை அவனே உணரவில்லை.

“பாவம்தான்! நீ ரொம்ப பாவம்தான் மாமா. ஆனா என்னிக்குமே நீதான் என் புருஷன்ற மாதிரி நான் நடந்துக்கவே இல்லையே மாமா. அப்படி நடந்துக்கவும் எனக்கு தெரியாதே! இப்போ கூட துரைதானே என்னை நல்லா பாத்துக்குறாரு. அவர ஒரு பொண்டாட்டியா நான் நல்லா பாத்துக்கறானான்னு கூட எனக்கு தெரியலையே! என்னை விட்டுரு மாமா! நான் துரை கிட்ட போறேன்” தாயைக் காண துடிக்கும் குழந்தையாய் தேம்பி தேம்பி அழுதாள்.

அவனுக்குப் புரிந்துவிட்டது, தன் அக்கா மகள் இனி தனக்கு இல்லையென. கொண்டு போய் கட்டாய கல்யாணம் செய்தால், தற்கொலை செய்துக் கொள்ளாவிட்டாலும் சோகத்தில் கரைந்தே செத்துவிடுவாள் என தெள்ள தெளிவாக தெரிந்தது அவனுக்கு.

“அவன் கூடவே இருந்தேனா, உன் சொந்தங்கள நீ மறந்துற வேண்டியது தான் சுப்பு. உன் ஆத்தாங்க உன்னை தலை முழுகிருவாங்க! அது உனக்கு பரவாயில்லையா?” அவளின் நேசத்தின் ஆழத்தை அறிந்துக் கொள்ள கேட்டான்.

அவன் முகத்தை வெறித்துப் பார்த்தாள் அவள்.

“அவங்க மேலலாம் நான் உயிரையே வச்சிருக்கேன் மாமா. துரை சொன்ன பேச்ச கேக்கனும், அவரு கிட்ட நல்ல பேரு எடுக்கனும்னு படிச்சு படிச்சு சொல்லி அனுப்பனாங்க. அவங்க சொன்னத தான் நான் செஞ்சேன். அது தப்புன்னு அவங்களுக்கு பட்டுச்சுனா, நான் என்ன மாமா செய்யட்டும்? அவங்க மேல உள்ள பாசத்துல துரை சொன்னதெல்லாம் கேட்டேன். அவரு நல்லவரா இல்லாம, எனக்கு சூரிய காந்தி மட்டும் குடுத்துட்டு என்னைக் கட்டிக்காம துரத்தி இருந்தா என் கதி என்ன மாமா? நான் வச்சிருக்கற மாதிரி, என் மேல அவங்க பாசம் வச்சிருந்தா இப்படியே என்னையும் என் துரையையும் ஏத்துக்கிட்டு தான் ஆவனும் மாமா! ஏன்னா இனி துரை இல்லாம இந்த சுப்பு இல்ல.” அவள் புத்திக்கு எட்டிய அளவில் தன் முடிவை முத்துவுக்கு விளக்கினாள் சுப்பு.

அவள் சொன்னதில் சூரியகாந்தி புரியாவிட்டாலும், பெருமூச்சு ஒன்று வெளியானது முத்துவிடம்.

“சரி, எழுந்து நட புள்ள. ஆத்துக்கு போயிரலாம். மறுபடியும் திரும்பி காட்டு வழியா போனா ரொம்ப தொலைவு. ஆத்துக்குப் போயிட்டா பரிசல் புடிச்சு மறுபடியும் ஊருக்குப் போயிரலாம்.”

அவள் திகைத்து நோக்கவும்,

“உன் துரை ஊருக்குத்தான்” என சோகத்தை மறைத்துப் புன்னகைத்தான்.

அவள் எழுந்து ஓடி வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். முகத்தில் பளிச்சென புன்னகை.  

“மொள்ளமா புள்ள. புள்ளைத்தாச்சி இப்படி ஓட கூடாது. பார்த்து பதமா நடந்துக்கனும்” அறிவுறுத்தியவன் கணவன் எனும் பதவியை மனதில் இருந்து உதறிவிட்டு மாமன் எனும் பதவியுடன் கைப்பற்றி அழைத்துப் போனான். அவள் மெல்ல நடக்க, அவளது நடைக்கு ஈடு கொடுத்து நடந்து வந்தான் முத்து.

இன்னும் ஒரு மணி நேரம் அவர்கள் நடந்திருப்பார்கள். இலைகள் மிதிபடும் சத்தத்தில் காதுகளை கூர்மையாக்கினான் முத்து. ஏதாவது காட்டு விலங்குகள் மனித வாடைக்கு வருகிறதோ என பயந்தவன், இடுப்பில் சொருகி இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கவனமாக நின்றான்.

அவன் நிதானிப்பதற்குள் நாலாபக்கமும் பாய்ந்து வந்து அவனை பிடித்துக் கொண்டார்கள் எட்வர்டின் ஆட்கள். புதியவர்களைப் பார்த்து பயந்து நின்றிருந்த சுப்பு,

“ப்ளேக்கி!” எனும் குரல் கேட்டு அது வந்த திசைக்கு பாய்ந்தோடினாள். ஓடி வந்தவளை வாரி அணைத்துக் கொண்டான் எட்வர்ட். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறியவள் விடாமல் துரை, துரை என ஜபம் செய்தாள். அவளைத் தள்ளி நிறுத்தி காயம் ஏதாவது பட்டிருக்கிறதா என் ஆராய்ந்தவன், மீண்டும் தன்னோடு இறுக்கிக் கொண்டான். முதல் கட்ட அதிர்ச்சி, அவனைப் பார்த்த சந்தோசம் நீங்கியதும் அவனை விட்டு விலகி முதுகைக் காட்டி நின்று கொண்டாள் சுப்பு.

“ப்ளேக்கி!” தன் புறம் அவளைத் திருப்பினான் எட்வர்ட்.

“ஒன்னும் வேணா”

“ஒரே நாளுல என்னை நரகத்துக்கு அனுப்பி வச்சுட்டு, கோபம் வேற வருதா உனக்கு?” கலங்கிய குரலில் கேட்டான்.

“ஏன் என்னைப் கூப்பிட வர இவ்வளவு நேரம்? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” முறுக்கிக் கொண்டாள் அவள். பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன் கண்களில் கண்ணீர்.

“உன்னை உயிரோட பார்க்கற வரைக்கும் என் உயிர் என் கிட்ட இல்ல ப்ளேக்கி. இனிமே இப்படி ஒரு தடவை நடந்தது, எங்க போனாலும் என் கூடவே வர மாதிரி என் கைக்கும் உன் கைக்கும் ஹேண்ட்கப், ஹ்ம்ம் விலங்கு பூட்டிருவேன்” நிஜமாகவே மிரட்டினான். திரும்பி நின்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள்,

“போகமாட்டேன் துரை! போகவே மாட்டேன்” தேம்பினாள்.

அவர்களின் உணர்ச்சிகரமான சந்திப்பை, முத்துவும் அவனைப் பிடித்து வைத்திருப்பவர்களும் பார்த்தப்படி நின்றனர். சுற்றுப்புறம் உறைக்க அவனிடம் இருந்து விலகினாள் சுப்பு. அவள் விலகவும், அவனின் தவிப்பு போய் ரௌத்திரம் வந்தமர்ந்தது. கீழே அவளை அமர வைத்தவன், கோப எட்டுக்களுடன் முத்துவை நெருங்கினான்.

“விடுங்க அவனை! என் பொண்டாட்டிய தூக்குனவன் கிட்ட நான் நேருக்கு நேர் மோதிக்கறேன்” என்றான்.

பிடியை அவர்கள் விடவும், முத்துவின் மேல் பாய்ந்தான் எட்வர்ட். இடி மின்னலில் இருவரும் ஒத்தைக்கு ஒத்தை மோதிக் கொண்டார்கள். மண்ணில் உருண்டு பிரண்டார்கள். எட்வர்ட் தன் மனைவியை அபகரிக்கப் பார்த்தானே என முழு பலத்துடன் சண்டையிட, முத்துவோ தன் மனைவியாக வேண்டியவளை அபகரித்தானே என கட்டிப் புரண்டான்.

அவர்கள் சண்டை ஆரம்பிக்கும் போதே அருகில் ஓடி வந்திருந்த சுப்பு,

“துரை விடுங்க! மாமா விடு மாமா” என கத்திக் கொண்டிருந்தாள். அவள் கத்தலை இருவருமே பொருட்படுத்தாமல் அடித்துக் கொண்டனர். இந்தியர்கள் அருகில் போகவே யோசிக்கும் எட்வர்ட், தன் ப்ளேக்கிக்காக மண்ணில் புரண்டு ரத்தம் சிந்த முத்துவிடம் சண்டையிட்டான்.

“யூ ப்ளேடி! என் பொண்டாட்டிய தொட்டு தூக்கிட்டு வந்த அந்த கையை வெட்டி எறியறேன் பாருடா”

“எவடா உன் பொண்டாட்டி? கழுத்துல தாலி இல்ல, நெத்தியில குங்குமம் இல்ல! யாருகிட்ட கதைவுடுற? வைப்பாட்டின்னு சொல்லு, ஊரே நம்பும்” வேண்டும் என்றே எட்வர்டை உசுப்பேத்தினான் முத்து.

“டேய்!” கர்ஜித்த எட்வர்ட் இன்னும் ஆக்ரோஷமாக தாக்கினான். முத்துவைக் கீழே தள்ளி, அவன் மேல் ஏறி அமர்ந்து கன்னம் கன்னமாக அறைந்தான்.

கத்தி ஓய்ந்த சுப்பு கடைசி ஆயுதமாக,

“துரைலிங்” என பரிதவிப்புடன் அழைத்தாள். அந்த ஆக்ரோஷத்திலும் கை அப்படியே அந்தரத்தில் நின்றது எட்வர்டுக்கு. மெல்ல அவளைத் திரும்பி பார்த்தான்.

“விட்டுறுங்க துரைலிங்! மாமா பாவம். நம்மள அவர் புரிஞ்சிகிட்டாரு. அடிக்காதீங்க ப்ளீஸ்!” கண்ணில் நீர் வழிய கையேந்தி கெஞ்சினாள் சுப்பு.

முத்துவின் மேல் இருந்து இறங்கியவன், அவளை இழுத்து கன்னத்தை துடைத்துவிட்டான். மெல்ல அணைத்துக் கொண்டே முத்துவை தீப்பார்வைப் பார்த்தான்.

“இவ என் பொண்டாட்டிடா! உனக்கு மட்டும் இல்ல இந்த ஊருக்கே நாளைக்கு நிரூபிக்கறேன். இப்போ என் கண்ணுல படாம போய் தொலைஞ்சிரு” கர்ஜித்தவன், சுப்புவை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

“நம்ம பங்களாவுக்குப் போகலாம் ப்ளேக்கி. ரொம்ப களைச்சிப் போய் இருக்க. இனி நீ நடக்க வேணாம்”

அவன் கைகளில் இருந்துக் கொண்டே தன் மாமனைப் பார்த்து, போய் வருவதாக தலை அசைத்தாள் சுப்பு. கண் கலங்க, இதழ் சிரிக்க பதில் தலை அசைப்பைக் கொடுத்தான் முத்து.

மழை நின்று, சூரியன் தனது வருடாந்திர ஓய்வு நாட்களை முடித்து கொண்டு சோம்பலாக வேலைக்கு வந்திருந்தார். மழை நிற்கவும் வெள்ள பயம் இன்றி மக்கள் மேட்டுப் பகுதிகளிலிருந்து ஊருக்குள் திரும்பி இருந்தார்கள்.

புருக்லேண்ட்ஸ் எஸ்டேட் கோயிலில் பந்தல் போடபட்டு மேள தாளங்கள் முழக்கமிட்டன. மக்கள் கூட்டம் நிரம்பி வழிய, கோயிலின் பின்புறத்தில் அண்டா அண்டாவாக சமையல் நடந்துக் கொண்டிருந்தது. போலீஸ்காரர்கள் ஒரு பக்கம் வரிசைக் கட்டி நிற்க, எட்வர்டின் ஆட்கள் ஒரு பக்கம் காவலுக்கு நின்றிருந்தார்கள். வீட்டுக்கு திரும்பிய அன்றே எட்வர்ட் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

சரக்கென ப்ரேக் போட்டு வந்து நின்ற காரிலிருந்து எட்வர்டும், அழகாக சேலை உடுத்தி, தலை பின்னி பூ வைத்து, தங்க நகைகள் ஜொலிக்க சுப்புவும் இறங்கினார்கள். அன்று கோயிலுக்கு அவள் வந்த போது இகழ்ந்த பெண்கள், வாய் பிளந்து நிற்க, அதே ஐயர் திருமண சடங்கை நடத்துவதற்காக ஓமகுண்டம் அருகே அமர்ந்திருந்தார்.

சுப்புவின் குடும்பமும் அங்கே நின்றிருந்தது. எட்வர்ட் தான் விடிகாலையிலேயே ஆள் வைத்து அவர்களை அழைத்து வந்திருந்தான். ஆசையாக சுப்பு அவர்களை நெருங்கும் போது, முகத்தை சுளித்து ஒதுங்கினார்கள் அவளின் ஆத்தா இருவருமே. கண் கலங்கி நின்றவள் கையை ஆதரவாக அழுத்தினான் எட்வர்ட். ஓமகுண்டலம் அருகே அமர்ந்து ஊரே பார்த்திருக்க தன் ப்ளேக்கியின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களையும் போட்டு இந்திய முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான் அவன். பட்டுவும், பவுனுவும் கண் கலங்க அவர்கள் அருகே நின்றிருந்தனர்.     

இங்கே திருமணம் எனும் பந்தத்தில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த எட்வர்ட் தன் ப்ளேக்கியின் அன்புக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க, கோலாலம்பூரில் அதே நேரம் காலை ஒன்பதுக்கு மலேசிய சுதந்திர தந்தை துங்கு அப்துல் ரகுமான் “மெர்டேக்கா(சுதந்திரம்)” என ஏழு முறை முழங்கி மலாயாவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார்.

வந்திருந்த மக்களைப் பார்த்து,

“இந்த எஸ்டேட்டை நான் விற்கல. நானும் என் மனைவியும் இங்கதான் இருப்போம். இனி சுபூதான் உங்க துரையம்மா. இந்த நாட்டு குடியுரிமைக்கு எழுதிப் போட்டுருக்கேன். இனி நானும் இந்த நாட்டுக்காரன் தான். இனிமே ஜாதி, இனப்பிரச்சனை எதுவும் என் காதுக்கு வரக்கூடாது. அப்படி ஏதாச்சும் நடந்தா போலீஸ் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க. ஒழுங்கா கொடுத்த சம்பளத்துக்கு உழைப்பை குடுங்க. தேவையில்லாம உயிர குடுத்துறாதீங்க.” மறைமுகமாக மிரட்டியவன்.

“எங்க கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி. வயிரு முட்ட சாப்பிட்டுட்டு போங்க” என முடித்தான். 

முதல் நாள் கலகம் செய்தவர்களை ரிச்சி போலீசில் பிடித்துக் கொடுக்க, பயந்துப் போன மக்கள் வாய் பொத்தி எட்வர்ட் நடத்திய கலப்பு திருமணத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டு விட்டு போனார்கள்.

எல்லோரும் போனதும், ஆத்தாவின் அருகே போன சுப்புவை கிட்டே வராதே என்பது போல சைகை காட்டினார் அன்னம்.

“ஆத்தா” தளுதளுத்தாள் சுப்பு. அவர்களின் சம்பாஷனையில் தலையிடாமல் பார்த்தவாறே நின்றான் எட்வர்ட். அவர்கள் அருகில் முத்துவும் நின்றிருந்தான்.

“யாருக்கு யாருடி ஆத்தா? ஊரறிய கல்யாணம் செஞ்சிகிட்டாலும், எங்களுக்கு இது ஏத்துக்க முடியாத கல்யாணம் தான். உன்னால எங்களுக்கு தலைக்குனிவுதான். ஜாதிய மதிக்காம இப்படி மானமத்துப் போயி கல்யாணம் செஞ்சிருக்க. இத மன்னிக்கவே முடியாதுடி எங்களால. பெத்த வயிறு எரியுதுடி. வாயும் வயிறுமா இருக்கிறதா கேள்விப்பட்டதால சாபம் குடுக்காம போறேன். நல்லா இரு” சொன்ன அன்னம், திரும்பி பாராமல் நடந்தார். அவருடன் தங்கமும் பிள்ளைகளும். சற்று தூரம் நடந்திருப்பார்கள், அவர்கள் கையை உதறிக் கொண்டு ஓடி வந்தாள் ராஜம்.

“அக்கா” என சுப்புவைக் கட்டிக் கொண்டாள் அவள்.

“டீ ராஜம்” தங்கையைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள் சுப்பு.

“அழாதக்கா! ஆத்தாங்கள பத்திதான் தெரியாதா? விட்டுத்தள்ளு. நீ சந்தோசமா இருக்கா” தமக்கையைக் கட்டிக் கொண்டு கேவினாள். வெட்கத்துடன்  எட்வர்டை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“மாமா, எங்க அக்காவ நல்லா பாத்துக்குங்க!” என சொன்னாள்.

“கண்டிப்பா பாத்துக்குவேன்மா. சீக்கிரமா எல்லாம் சரியா போயிரும். நீயும் உங்க அக்கா கூடவே வந்து இருக்கலாம்.” என சின்னவளின் கண்ணீர் கறையைத் துடைத்தான் எட்வர்ட்.

“வரேன்கா, வரேன் மாமா” என்றவள் சிட்டாய் பறந்துப் போனாள். பழைய தலைமுறைகள் ஜாதி வெறியில் ஊறி கிடந்தாலும், புதிய தலைமுறைகள் அதைவிட்டு வெளியே வரும் நாட்கள் தூரமில்லை.

“அழாம இனிமே ஊரு மெச்ச வாழ்ந்து காட்டு சுப்பூ. புள்ள பொறந்ததும் பெரியப்பன் சீரோட நான் வந்துப் பார்க்கறேன்” என ஆசீர்வதித்து விடைப்பெற்றான் முத்து.

வீட்டிற்கு வந்து, தனிமையில் தன் ப்ளேக்கியின் கைப்பிடித்து அமர்ந்திருந்த எட்வர்ட்,

“ப்ளேக்கி, என்னால தானே உன்னைப் பெத்தவங்க உன்னை ஒதுக்கிட்டாங்க! என்னை மன்னிச்சிரும்மா. அவங்க கைல காலுல விழுந்தாவது உன் கிட்ட சேர்த்து வைக்கிறேன்” என குரல் உடைய சொன்னான்.

சொல்லி முடிக்கவும், சரமாரியாக அடி விழுந்தது அவனுக்கு.

“என் துரை யாரு காலுலயும் விழக்கூடாது. அது என் ஆத்தாவா இருந்தாலும் சரிதான். இனிமே இப்படி பேசுவீங்களா?” என கேட்டவள் அவன் உதட்டைக் கடித்து வைத்தாள்.

“ஏ, ப்ளேக்கி! வலிக்குது” கத்தினான் எட்வர்ட்.

“வலிக்கட்டும். இனிமே இப்படி பேசறப்ப இந்த வலி ஞாபகம் வரட்டும்” முறைத்தாள் அவனை.

“அவங்கலாம் அப்படிதான் துரை. ஜாதி வெறி ஊறி போயி கிடக்குது. ஜாதி வேணா, பெத்த மக தான் வேணும்னு நினைக்கறப்போ அவங்களே வரட்டும். இப்ப எனக்கு காலு வலிக்குது, புடிச்சு விடுங்க” என சிணுங்கினாள்.

“அடிப்பாவி! யாரு காலுலயும் விழக்கூடாதுன்னு நீ சொன்னப்பவே நான் யோசிச்சிருக்கனும். உன் காலுல மட்டும் தான் விழனுங்கறது தானே உன்னோட மாஸ்டர் பிளான்?” என சொல்லி சிரித்தான் எட்வர்ட். அவள் காலை தன் தொடைகளில் வைத்துக் கொண்டு பிடித்து விட்டான் அவன்.

அவன் கால் அமுக்கும் சுகத்தில் அப்படியே நாற்காலியிலேயே கண் அயர்ந்தாள் அவள். அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், ரூமை நோக்கி நடந்தான். தூக்கக் கலக்கத்திலேயே,

“துரைலிங்” என அழைத்தாள் சுப்பு.

“என்ன டார்லிங்?”

“சூரியகாந்தி பூ?”

“மூச்! ஒழுங்கா தூங்கனும். ரொம்ப களைச்சிப் போயிருக்க”

“வேணும், வேணும்! ஒன்னே ஒன்னு துரைலிங்”

மஞ்சள் தாலி மினுமினுக்க தன் கையில் கண் மூடி சாய்ந்திருந்தவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டான் எட்வர்ட்.

“நோ ப்ளேக்கி!”

“துரைலிங்” சிணுங்கலாக அவள் அழைக்க, முத்தமிட்டப்படியே அறையின் உள் நுழைந்து கதவை மூடினான் எட்வர்ட்.