IMTP–EPI 3

அத்தியாயம் 3

 

“தொரை சொல்லறத கேட்டு நடக்கனும்! அங்க போயி உன் வாலை சுருட்டி வச்சிட்டு சொல்லற வேலைய ஒழுங்கா பார்க்கனும். பாக்கியம் பாட்டி ஏதாவது குறை சொன்னாங்க உன்னைப் பத்தி, முதுகு தோல உரிச்சிருவேன்.” மிரட்டிக் கொண்டிருந்தார் தங்கம்.

பக்கத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றார் அன்னம்.

“என் ஆத்தா சுப்பு, பாத்து பத்திரமா நடந்துக்க தாயி! எங்க மனசெல்லாம் உன் மேல தான் அடிச்சிக்கும். தொரை கிட்ட நல்ல பேரு எடுக்கனும்.” கண்ணைத் துடைத்துக் கொண்டார் அன்னம்.

ஆற்று ஓரத்தில் அவர்கள் குடும்பமும், அலமுவும் நின்றிருந்தார்கள். இங்கிருந்து சுப்பு செல்லப் போகும் எஸ்டேட்டுக்கு பரிசல் பயணம் தான். ஒரு மணி நேரம் பரிசலில் பயணித்து அக்கரை இறங்கி, அங்கிருந்து நடந்தோ அல்லது ட்ராக்டர் வழியோ பயணித்து இவள் வேலை செய்யப் போகும் பங்களாவை அடைய வேண்டும். அக்கரையில் போய் துரை வீட்டுக்கு போக வேண்டும் என்றால் யாராவது அழைத்துப் போவார்கள் என ஏற்கனவே சொல்லி இருந்தார் பாக்கியம். அவருக்கு அலமுவுக்கு பதில் சுப்பு வருவது தெரியாது. இப்பொழுது மாதிரி தகவல் பரிமாற்றங்கள் சுலபமில்லை அப்பொழுது.

“சுப்பு, என் கல்யாணத்துக்கு கூட ஒன்னால வர முடியாதே! இனிமே நாம எப்ப பார்ப்போம்னு தெரியலையேடி!”கண் கலங்கினாள் அலமு.

இவளுக்கும் அழுகை முட்டியது. தான் அழுதால் மற்றவர்கள் இன்னும் கவலைப்படுவார்கள் என அறிந்தவள் அழுகையைக் கட்டுப்படுத்தி புன்னகை முகமாகவே,

“நா வராம உன் கடா மீசை தாலிய கட்டிருமா? விட்டுருவனா? நீ கவலைப் படாதடீ. கண்டிப்பா வருவேன். டீ அலமு, என் தங்கச்சிங்கள கொஞ்சம் பார்த்துக்கடி. நான் இல்லாம வாடி போயிருவாளுக” அவள் காதருகே முனுமுனுத்தாள்.

“அவளுக எனக்கும் தங்கச்சிங்க மாதிரிதான். நான் கல்யாணம் ஆகி போற வரைக்கும் பத்திரமா பாத்துக்கறேன். நீ பத்திரம் புள்ள”

அழுதபடி நின்ற தங்கைகளை அணைத்துக் கொண்டவள், பாசமாக முத்தமிட்டாள்.

“ஏத்தா, பரிசல் கெளம்ப வேணாமா? எம்புட்டு நேரம் தான் கண்ணை கசக்கிட்டு நிப்பீங்க எல்லாரும்? சட்டுபுட்டுன்னு புள்ளய ஏத்திவிடுங்க” சத்தம் போட்டார் பரிசல் ஓட்டுபவர்.

“பரிசல் தானே ஓட்டுறீரு, என்னமோ ஆகாச கப்பல் ஓட்டற மாதிரி என்னத்துக்கு இந்த மிதப்பு?” நொடித்துக் கொண்டார் தங்கம்.

பின் கண்ணைத் துடைத்துக் கொண்டவர்கள், சுப்பு பரிசலில் ஏற உதவினர். தன் சொத்தாக கிழிந்த ஒரு கோணி பையைக் கையில் சுமந்தபடி உறவுகளுக்கு கையாட்டினாள் சுப்பு. புள்ளியாய் அவர்கள் உருவம் மறையும் வரையில் கை ஆட்டிக் கொண்டே இருந்தாள். அதன் பிறகே கண்கள் உடைப்பெடுத்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

——————————————————————————————

“இப்ப என்ன ப்ராப்ளம்?”

குரலில் அதிகாரம், கோபம், ஆற்றாமை சரிவிகிதத்தில் எட்டிப் பார்த்தது.

“அது வந்து துரை…” மென்று விழுங்கினார் பரசு, அவனின் வலது கை, அல்லக்கை, மேனேஜர், விசுவாசி.

“பேசு பர்சு!” வயதுக்கோ அனுபவத்துக்கோ இங்கே மரியாதை இல்லை. அவன் உயரம் அப்படி.

“எப்பொழுதும் மாதிரி ஜாதி சண்டைதான் துரை. போன தடவை கோயிலுக்குள்ள கீழ் ஜாதிக்காரன் நுழைஞ்சிட்டான்னு வெட்டிப்புட்டானுங்கல்ல அதோட தொடர்ச்சிதான் இது. வெட்டு வாங்கனவன் வீட்டுல இருந்து ஒரு பையன், மேல் ஜாதி வீட்டுப் பொண்ண கூட்டிட்டு ஓடிட்டானாம். இப்ப ஊரே கலவரமா கிடக்கு.”

“புல்ஷிட்! என்ன பர்சு இது? இப்படி அடிச்சுகிட்டு இவனுங்க வேலைக்கு வரலன்னா எங்களுக்கு எவ்வளவு நஷ்டம்னு புரியுதா? எங்களுக்கு வேலை நடக்கனும்னுதானே உங்க எல்லாரையும் இங்க கொண்டு வந்து சேர்த்துருக்கோம். சீனன், மலாய்காரன், இந்தியன்னு மூனு இனமும் இந்த நாட்டுல இருக்கீங்க. நீங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து சுதந்திரம் கேட்டுட கூடாதுனு தானே பிரிச்சி வச்சிருக்கோம். ஆனா பாரு வேடிக்கைய, ஒரே இனமான நீங்களே இப்படி அடிச்சிக்கிறீங்க! உங்கள எல்லாம் ஒன்னா ஒரு எஸ்டேட்டுல வாழ வச்சா உங்களுக்குள்ளயே ஜாதி பேர சொல்லி வெட்டிக்கிறீங்க.” குரலில் சுதி ஏறி இருந்தது.

“ஜாதி எங்க ரத்தத்தோட ஊறுனது துரை. எங்கப் போனாலும் எங்கள விட்டுப் போகாது”

இதெல்லாம் உனக்கு பெருமையா என்பது போல முறைத்துப் பார்த்தான் அவன்.

ஆறடி உயரத்துக்கும் மேல், ஆஜானுபாகுவாக இருந்த அவனின் முறைப்பில் தானாகவே இடுப்பில் கையைக் கட்டிக் குனிந்துக் கொண்டான் பரசு. தீட்சண்யமான அவன் விழிகளில் அனல் பறந்தது. நாசி கோபத்தில் சிவந்து நின்றது. சிரிப்பென்பதையே அறியாத அழுத்தமான உதடுகள் ஆத்திரத்தில் துடித்தன. அவன், ஊரில் எல்லோராலும் துரை என அழைக்கப்படும் பிரிட்டிஷ்காரன் எட்வர்ட் ஸ்மித் டியூக். இந்த புருக்லேன்ட்ஸ் மற்றும் இன்னும் பல எஸ்டேட்டுக்களின் உரிமையாளன். தமிழ் அவனுக்கு ஓரளவு சரளமாக வந்தது. இலக்கணம் இலக்கியம் தெரியாவிட்டாலும், தனக்கு கீழ் உள்ளவர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பேசத் தெரியும்.

“பர்சு, நம்ம ஆளுங்கள வச்சு கலவரம் பண்ணறவங்கள அடிச்சு ஆத்துல தூக்கிப் போட சொல்லு. எந்த ஜாதிக்காரனா இருந்தாலும் பரவாயில்ல. ஐ டோண்ட் கேர்! ஆத்துல மிதக்கற பொணத்தைப் பார்த்தாவது இவனுங்களுக்கு திரும்பவும் கலவரம் பண்ண கூடாதுன்னு பயம் வரனும். புரியுதா?”

“நல்லா புரியுது துரை”

“இப்போ நம்ம எஸ்டேட்டுல எத்தனை கள்ளு கடை இருக்கு?”

“ரெண்டு துரை”

“சரி, அத மூனா ஆக்க சொல்லு. நக்கறதுக்கு பிக்கல் ஃப்ரீயா குடுக்க சொல்லு”

“துரை சொன்னா சரிதான். செஞ்சிரலாம்”

“அதோட கோயிலுக்கு காசு குடுத்து இந்த மாசம் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரிசி சோறு போட சொல்லு. வர ஞாயிற்றுக் கிழமை திடல்ல திரை போட்டு சினிமா ஒன்னு போட ஏற்பாடு பண்ணு”

“ஆகட்டும் துரை”

“இந்த அடிமைங்க இதெல்லாம் குடுத்தாலே துரை தான் தெய்வம்னு காலுல விழுந்து கிடப்பானுங்க. வேலைக்கும் மட்டம் போடாம வருவானுங்க” வாய்க்குள்ளே முனகிக் கொண்டான்.

பரசுக்கு அவன் முனகியது நன்றாக கேட்டாலும், வாயைப் பொத்திக் கொண்டு நின்றான். மான அவமானம் பார்த்தால் அவன் வீட்டு அடுப்பு எரியுமா?

இருவரும் எஸ்டேட் ஆபிசில் இருந்தார்கள். கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு எஸ்டேட்டை சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள். பரசு ஜீப்பை ஓட்ட அவர் அருகில் கம்பீரமாக அமர்ந்து வந்தான் எட்வர்ட். வழி நெடுக பார்த்த மக்கள் எல்லாம், இடுப்பு வரை குனிந்து அவனுக்கு சலாம் வைத்தார்கள். அதை கண்டும் காணாமல் அமர்ந்து வந்தான் அவன். அவனைப் பொறுத்த வரை அடிமை இனத்துக்கு அவனின் தலையாட்டல் கூட தேவையற்றது.

ஜீப் செம்பனை எஸ்டேட்டில் வந்து நின்றது. ஸ்டைலாக இறங்கியவன், வெயில் தாக்காமல் இருக்க தொப்பியை அணிந்து கொண்டான். காலர் வைத்த போலோ டீசர்ட், காக்கி அரை பேண்ட், முதலை தோளால் செய்யப்பட்ட காலணி, இவைதான் அவனின் சீருடை. அதுதான் காடு மலையெல்லாம் சுற்றி வர வசதி. விறு விறு நடையில் அவ்விடத்தை சுற்றி வரலானான். அவன் நடைக்கு ஈடு கொடுக்க பரசு எப்பொழுதும் போல் திணறினார்.

‘வயசு முப்பதுக்கு மேல இருக்கும் துரைக்கு. இருந்தும் இள வட்ட பையன் மாதிரி என்ன சுறுசுறுப்பு. கால் கட்டு இல்லையே, இப்படிதான் இருப்பாங்க. நம்ம மாதிரி கும்முன்னு ஒரு சம்சாரமும், ஜம்முன்னு இன்னொரு சம்சாரமும், நொச்சு நொச்சுன்னு புடிங்கி எடுக்கற புள்ளைக் குட்டின்னும் இருந்தா இந்த சுறுசுறுப்பெல்லாம் எங்கயோ ஓடி ஒளிஞ்சிருக்கும்’ பெருமூச்சு கிளம்பியது அவரிடம்.

பரசுவுக்கு மட்டுமல்ல அங்குள்ள யாருக்குமே அவனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி தெரியாது. இங்கிலாந்தில் மனைவி இருக்கிறாளா, குழந்தை குட்டிகள் இருக்கிறார்களா எதுவும் தெரியாது. இங்கே மலாயாவில், இந்த எஸ்டேட்டில் இவன் தனி ஆள்தான். அடிக்கடி விருந்தாட மற்ற எஸ்டேட் பிரிட்டிஷ் நண்பர்கள் வந்து போவார்கள். இவனும் அவர்கள் இடத்துக்கு சென்று வருவான். மற்றபடி அந்தப் பெரிய பங்களாவில் வேலைக்காரர்களுடன் தனித்து தான் இருக்கிறான். பரசுவைத் தவிர மற்றவர்களிடம் அவன் வாயைத் திறந்து கூட பேசமாட்டான். அவனின் கண்ணசைவிலேயே வேலை நடக்கும்.

“பர்சு!”

“சொல்லுங்க துரை”

“இந்த நிறையில உள்ள செம்பனை மரத்தை எல்லாம் வெட்டி சாய்ச்சுட்டு புதுசா நட சொல்லுங்க. குலை தள்ளாம இந்த மரங்க எல்லாம் வேஸ்ட்டா நிக்கிது. அந்த நிறையில பாருங்க பழம் மரத்துக்கு கீழ கொட்டிக் கிடக்குது. செம்பனை பழம் பொருக்க ஆள் போடலியா பர்சு? இதெல்லாம் நானே கவனிக்கனுமா? எங்க அந்த மண்டோர்(சூப்பர்வைசர்)?” குரலில் கோபம் தெறித்தது.

வேலை செய்ய வந்த பெண்களிடம் வம்பு பேசி சிரித்துக் கொண்டிருந்த மண்டோர், துரை வந்திருப்பதை அறிந்து ஓடோடி வந்தார்.

“தொரை! வரனும், வரனும்” வாயெல்லாம் பல்லாக இளித்தார் அவர்.

எட்வர்ட் பரசுவைப் பார்த்து ஒரு முறை முறைத்தான். அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த பரசு,

“ஏன்யா மண்டோரு, இம்புட்டு வேலை கிடக்கு, நீ என்னன்னா பொட்டப் புள்ளைங்க கிட்ட வம்பளந்துகிட்டு இருக்க! ஒழுங்கா வேலைய பார்க்கறதுனா வேலைல இரு. இல்ல அடிச்சு தூக்கி ஆத்துல இறக்கிருவோம்” சத்தம் போட்டார்.

எட்வர்டைப் பார்த்து கை எடுத்து கும்பிட்ட மண்டோர்,

“மன்னிச்சிருங்க தொரை. கவனிக்காம விட்டுட்டேன். இனி இப்படி நடக்காது” என மன்றாடினார். விட்டால் அவனின் காலிலேயே விழுந்து விடுபவர் போல் நின்றிருந்தார் அவர்.

ஒன்றும் பேசாமல் நடந்துப் போய் ஜீப்பில் அமர்ந்து கொண்டான் எட்வர்ட்.

அவன் அகன்றதும்,

“யோ! பார்த்து நடந்துக்கய்யா. அந்த மகராசன் தான் நமக்கு படியளக்கறாரு. நோவாம, மேற்பார்வை பார்க்கறதுக்கு சம்பளம் கொட்டிக் குடுக்கறாரு. ஓசியில கள்ளு, நெல்லு எல்லாம் உன் வீட்டுக்கே வருது. ஒழுங்கா வேலையப் பார்த்து இருக்கற சலுகைய தக்க வச்சிக்க. வேலைக்கு வர பொண்ணுங்க கையப் புடிச்சு இழுக்கறீயாம்ல! அடங்கி இருய்யா. மேம்போக்கா இருந்த, தோரணம் கட்டி தொங்க விட்டுருவாரு. மோசமான மனுசன்யா நம்ம தொரை. அம்புட்டுதான் சொல்லுவேன். வரேன்!” பீதியை கிளப்பி விட்டுவிட்டு பரசுவும் ஜீப்பை நோக்கி நடந்தான்.

“துரை, இப்ப எங்க போகனும்?”

கையைத் திருப்பி மணியைப் பார்த்தான் எட்வர்ட். நான்கை நெருங்கி இருந்தது.

“வீட்டுக்குப் போ பர்சு”

பங்களாவை அடைந்ததும் ஜீப்பை பார்க் செய்துவிட்டு, சற்று தொலைவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினார் பரசு.

வீட்டுக்கு வந்தததும் எட்வர்டின் முதல் வேலை பின்னால் கட்டி வைத்திருக்கும் அவன் செல்லப் பிராணி ஜோனியை கொஞ்சுவது தான். ஆறறிவு மனிதர்களை தள்ளி வைத்தாலும், ஐந்தறிவு ஜோனி அவனுக்கு எப்பொழுதும் ஸ்பெசல் தான். வாட்டசாட்டமாக இருக்கும் ஜோனி, ரோட்வெய்லர் வகையை சார்ந்தது.

அதன் இடத்தை அடையும் முன்னே ஒருவகையான வித்தியாசத்தை உணர்ந்தான் எட்வர்ட். அவன் அருகில் வருவதற்குள் குரைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஜோனியின் சத்தமே கேட்கவில்லை. அருகில் நெருங்கியதும் தான் கவனித்தான் ஒரு பெண் ஜோனியை மறைத்து நின்றிருப்பதை.

‘யாரிது?’ குழப்பத்துடன் நெருங்கினான். அங்கே ஜோனியின் உருமல் சத்தம் மட்டும் தான் கேட்டது. அந்தப் பெண் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தாள்.

இன்னும் அருகில் நெருங்கியவனுக்கு, இருதயம் தொண்டையில் வந்து துடித்தது. அந்தப் பெண்ணின் நெஞ்சில் தன் இரு கால்களையும் வைத்திருந்த ஜோனி, உன்னைக் கடிக்கவா இல்லை குதறவா என நின்றிருந்தது. அந்தப் பெண் கண்ணில் கண்ணீர் குளம் கட்டி இப்போது விழவா என மிரட்டிக் கொண்டிருந்தது. அருகில் பார்க்கும் போதுதான் அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது எட்வர்டுக்கு.

“ஜோனி, டவுன்!” அவனையும் மீறி குரல் நடுங்கியது. எஜமானனின் கட்டளையில் பட்டென காலை அவள் நெஞ்சிலிருந்து இறக்கிய ஜோனி நல்லப் பிள்ளையாக அமர்ந்து கொண்டது. இவ்வளவு நேரம் பயத்தில் வெடவெடத்திருந்தவள், பக்கத்தில் நின்றிருந்த எட்வர்டை பாய்ந்து அணைத்துக் கொண்டாள். அவளது திடீர் தாக்குதலில் நிலை தடுமாறிய எட்வர்ட், அவளோடு சேர்ந்து புல் தரையில் சரிந்தான்.