IMTP–EPI 30(epilogue)

எபிலாக்

 

ஜீப்பில் இருந்து இறங்கிய எட்வர்ட், மனதிற்குள்ளாகவே ஒன்றிலிருந்து ஐந்து வரை எண்ணினான்.

‘ஓன், டூ, த்ரீ, ஃபோர், பைப்’ எண்ணி முடிப்பதற்குள்ளாகவே, கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள் சுப்பு. அவள் பின்னாலேயே அவர்களின் மூன்று வயது மகள் சூரியா ஸ்மீத். பாய்ந்து வந்த மனைவியைத் தாங்கிக் கொண்டவன், குடுகுடுவென ஓடி வந்த குட்டி சுப்புவை வாரி அணைத்துக் கொண்டான். இரு தோள்களையும் கட்டிக் கொண்டு தொங்கிய தன் மனைவியையும், பிள்ளையையும் ஆசைத் தீர மாறி மாறி முத்தமிட்டான் எட்வர்ட். இப்படிப்பட்ட  அன்புக்காக ஏங்கியவன் தானே அவன். அன்புக் கடலில் அவனின் மனைவியும் மகளும் அவனை மூழ்கடித்து மூச்சுக் கொடுத்தனர். அவர்கள் மூவரையும் சுற்றி வந்து சந்தோசமாக குரைத்தது ஜோனி. தினமும் வேலை முடிந்து வரும் போது கிடைக்கும் இந்த வரவேற்பே அவனின் களைப்பை விரட்டி விட்டுவிடும்.

கீழே குனிந்து ஜோனியின் காதை தடவிக் கொடுத்தவன், பின் தன் குடும்பம் புடைசூழ வீட்டினுள் நுழைந்தான். சுப்பு அடுப்படிக்கு சென்றுவிட, மகளைக் கையில் பிடித்துக் கொண்டே முகம், கை கால் கழுவி வந்தான்.

மகள் தோளில் அமர்ந்தவாறே சளசளத்தப்படி வர, நேராக சூரியகாந்தி தோட்டத்தின் நடுவே கட்டி இருந்த திறந்த வெளி குடிலுக்கு நடந்தான் எட்வர்ட். அங்கே மரத்தினால் ஆன மேசையும் நாற்காலியும் அழகுற போட்டு வைத்திருந்தார்கள்.

அவனுக்கு முன்பே அங்கு சுப்பு காத்திருந்தாள். அம்மாவைப் பார்த்ததும் அவளிடம் தாவினாள் ஜீனியர் சுப்பு.

ஆமாம், அவர்கள் மகள் அப்படியே சுப்புவின் மறுபதிப்பு. வெள்ளையாக குழந்தை வேண்டும் என கேட்டவளுக்கு, அவளைப் போன்றே மாநிறத்துக்கும் கருப்புக்கும் இடைப்பட்ட நிறத்தில் தான் குழந்தை பிறந்தது. பக்கத்தில் இருந்த பந்திங் எனும் சிறிய டவுன் மருத்துவமனையில் வைத்து தன் மனைவிக்கு பிரசவம் பார்த்தான் எட்வர்ட். அந்தக் காலத்திலேயே, மனைவியுடன் பிரசவ அறையில் டாக்டரோடு டாக்டராகவும், தன் ஆசை மனைவியின் கணவனாகவும் இருந்தான் எட்வர்ட்.

ஒரு காலத்தில் கருப்பின அடிமை மக்கள் என இந்தியர்களை வெறுத்து ஒதுக்கிய எட்வர்ட், தன் கருத்த மகளை தங்க தட்டில் வைத்து தாங்குகிறான். தாங்கள் பகிர்ந்து கொண்ட சூரியகாந்தி இரவுகளின் அடையாளமாக பிறந்தவளுக்கு, சூரியா ஸ்மித் என பெயர் சூட்டி மகிழ்ந்தான் அவன்.

“மை ஹனிபனி சூரியா டார்லிங்!” மகளை கொஞ்சிக் கொண்டே சுப்புவிடம் இருந்து தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் எட்வர்ட்.

“டாடி, பிக்கேட்(பிஸ்கட்)!” அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மகள்.

மகளுக்கு குவளையில் பாலும், எட்வர்டுக்கு டீயும் ஊற்றிக் கொடுத்தாள் சுப்பு. தனக்கும் ஒரு கையில் டீயை எடுத்துக் கொண்டு அவனை உரசியபடி அமர்ந்தாள். பாலில் பிஸ்கட்டை நனைத்து மகளுக்கு விளையாட்டு காட்டியவாறே ஊட்டினான் எட்வர்ட். டீயில் ரொட்டியை நனைத்து எட்வர்டுக்கு ஊட்டினாள் சுப்பு. மழை இல்லாத நாட்களில், பூத்துக் குழுங்கும் இந்த சூரியகாந்தி தோட்டத்தில் தான்  அவர்களின்  மாலை நேரம் கழியும். 

“இன்னிக்கு என்ன செஞ்சீங்க அம்மாவும் மகளும்?” என கேட்டான் எட்வர்ட்.

“பேபி ஏ,பீ,சீ,டீ எழுதுனேன். பட்டு பாட்டி பிகைண்ட்(behind) ஓடி ப்ளே பண்ணேன். பவுனு பாட்டி கிட்ட ஹட் அண்ட் சீக் ப்ளே பண்ணேன். அப்புறம் ஸ்தோபரி ஜாம் சாப்டேன்” தன் கதையை சொல்லியவள் அவன் மடியில் இருந்து இறங்கி ஜோனியிடம் ஓடிவிட்டாள் விளையாட.

அவள் இறங்கிய மறுநொடி சுப்பு ஏறி அவன் மடியில் அமர்ந்துக் கொண்டாள். மனைவிக்கும் பிஸ்கட் ஊட்டியவன்,

“நம்ம மக உன்னை மாதிரியே ஜாம் பாட்டில காலி பண்ணுறாளே! உங்க ரெண்டு பேருக்கும் ஜாம் வாங்கி குடுத்தே நான் எஸ்டேட்ட வித்துருவேன் போல இருக்கே” என கிண்டலடித்தான்.

“க்கும்! நான் பாட்டில எடுத்தாதான் உங்க மக ஓடி வந்துருறாளே! அதனாலயே இப்பலாம் சிவப்பு மிட்டாய் நான் சாப்பிடறது இல்ல துரை” என சொன்னவளின் கை ஜாம் பாட்டிலை வழித்துக் கொண்டிருந்தது.

சிரித்தவன்,

“என் பெரிய டார்லிங் இன்னிக்கு என்ன செஞ்சாங்க?” என கேட்டான்.

“அது வந்து , நானும் குட்டிக்கரணம் அடிச்சுதான் ஏ,பீ,சீ,டீ எழுதி பார்க்கறேன். ஆனா பாருங்க துரை, அன்னிக்கி பாத்தோமோ ட்விஸ்டூ(twist) டான்சு, அந்த மாதிரி எழுத உட்கார்ந்தாளே கை ட்வீஸ்டூ ஆடுது. நான் என்ன பண்ணட்டும்?” உதட்டைப் பிதுக்கினாள் சுப்பு. திரும்பி மகளைப் பார்த்தவன், அவள் ஜோனியுடன் மும்முரமாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டு அவளின் பிதுங்கிய உதட்டில் அழுந்த முத்தமிட்டான். பின் இருக அணைத்து அவள் மஞ்சள் வாசத்தை உள்ளிழுத்தான்.

“என்னை திசை திருப்பறது எப்படின்னு நல்லா கத்து வச்சிருக்க ப்ளேக்கி” மகள் அருகில் இல்லாத சமயம் மட்டும்தான் அவளை ப்ளேக்கி என ஆசையாக அழைப்பான். கருப்பி என தான் அழைப்பது மகளுக்கு தெரியக் கூடாது என மிக கவனமாக இருப்பான் எட்வர்ட். இவன் மரியாதை கொடுத்தால் தானே மகளிடமும் அது பிரதிபலிக்கும். அதே போல் அவளையும் மகள் இல்லாத போதுதான் துரை என அழைக்க விடுவான். மற்ற நேரங்களில் டார்லிங் என அழைக்க சொல்லி அவன் வற்புறுத்த இவளோ சூர்யாடி(சூரியா+டாடி) என் அழைத்து அவனைக் கடுப்பேற்றுவாள்.

மூன்று வயது சூரியா கூட இருபத்து ஆறு அல்பபெட்டையும் அருமையாக எழுதுவாள். ஆங்கிலம், தமிழ் என கலந்தடித்துப் பேசுவாள். நம் சுப்புவுக்கு இன்னும் டீ வரைக்கும் தான் எழுத வரும். இவனும் இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறான். பலன் தான் பூஜ்ஜியமாக இருந்தது. எழுத முடியாத கைக்கு வெஸ்டெர்ன் சமையல் அருமையாக வந்தது. அதுவும் கேக், பிஸ்கட் செய்வதில் அலாதி பிரியம் சுப்புவுக்கு.

கோலாலம்பூரில் இருந்து அவன் வாங்கி வந்த கேக்கை ஆசையாக சாப்பிட்டவள், அதை எப்படி செய்வது என அவனைப் பிய்த்து எடுத்து விட்டாள். அது சம்பந்தபட்ட புத்தகம், உபகரணம் எல்லாம் வாங்கிக் கொடுத்தவன், தானே படித்து அவளுக்கு கற்றுத் தந்தான். இப்பொழுதெல்லாம் புரூக்லேண்ட்ஸ் மக்கள் இவளிடம் தான் பிறந்த நாள் கேக் வாங்கி செல்கிறார்கள். துரையம்மா, கேக்கம்மாவாக அவதாரம் எடுத்திருந்தாள்.

“துரைலிங்”

“என்ன டார்லிங்”

“எனக்கு காபி, டீ குடிக்கவே பிடிக்கல”

“அப்போ சாக்லேட் தண்ணி வாங்கி வைக்கவா ப்ளேக்கி?” அவள் எங்கே செல்கிறாள் என தெரிந்தும், தெரியாதது போல நடித்தான் எட்வர்ட்.

“இல்ல துரைலிங். எனக்கு பால் தான் வேணும்”

“சரிம்மா! பாலே குடி”

“சும்மா எப்படி குடிக்கறது துரைலிங்? வயித்துக்குள்ள பாப்பா இருந்தா தானே பால் குடிக்க முடியும்?” சுற்றி வளைத்து அடிக்கடி அவள் கேட்கும் பிள்ளை விஷயத்தில் வந்து நின்றாள் சுப்பு.

எட்வர்டுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“பால் குடிக்கறதுக்காக, பிள்ளை வேணும்னு கேட்ட முதல் ஆளு நீயாதான் இருப்ப ப்ளேக்கி. மை ஸ்வீட் இன்னசெண்ட் ப்ளேக்கி. ஐ லப்பூ யூ மா” சிரிப்புடன் அவள் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“நீங்க என்னை திசை திருப்பாதீங்க. சரின்னு சொல்லுங்க துரை”

“சரி ப்ளேக்கி. நம்ம சூரியாவுக்கும் மூனு முடிய போகுதே! உன் இஷ்ட்டப்படி இன்னொரு குட்டி சுப்புவ பெத்துக்கலாம்”

“இல்ல, இல்ல! எனக்கு குட்டி துரைலிங் தான் வேணும். நம்ம பாப்பா என்னை மாதிரி கருப்பா போயிட்டாளேன்னு நானே கவலையா இருக்கேன்”

“பைத்தியம்! நம்ம மக கருப்பா இருந்தா என்ன? நிறத்தப் பார்த்து மனம் தளர்ந்து போறவளா நாம அவள வளர்க்கப் போறது இல்ல. நிறம், இனம், ஜாதி இதெல்லாம் கடந்து கல்வி அறிவு கொடுக்கும் தன்னம்பிக்கை உள்ளவளா வளர்க்கறோம். அவ ஆளுமைக்கும், அறிவு திறனுக்காகவே எல்லாரும் அவ பின்னால சுத்துவாங்க.” பெருமையாக சொன்னவன், தன் மகளை ஆசையாகப் பார்த்தான்.

சூரியா ஏதோ சொல்ல, அவள் கால்மட்டில் தலை ஆட்டியவாறே அமர்ந்திருந்தது ஜோனி.

“நம்ம மக ஆளப்பிறந்தவ ப்ளேக்கி!” பெருமிதம் அவன் குரலில்.

“ஆமா ஆமா! என் மகளாச்சே! என்னை மாதிரியே புத்திசாலியா தான் இருப்பா” என தன்னையே கிண்டலடித்துக் கொண்டாள் சுப்பு.

“துரை, சொல்ல மறந்துட்டேன். உங்க ஊருல இருந்து லெட்டர் வந்துருக்கு” என சொல்லியவள், கால் கொலுசு சப்திக்க உள்ளே ஓடி லெட்டருடன் வந்தாள். அதை வாங்கி படித்தவன், நீண்ட பெருமூச்சை வெளியிட்டான்.

அவர்களின் நலமறிய அவனின் அம்மாதான் கடிதத்தை எழுதி இருந்தார்.

திருமணம் முடிந்த கையோடு, சுப்புவையும் அழைத்து கொண்டு பிரிட்டன் சென்று வந்திருந்தான் எட்வர்ட். அவன் தந்தை இங்கே வந்து சண்டை இட்டு சென்றதே பணப்பற்றாக்குறையில் தான். தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் எப்படியோ போய் தொலையுங்கள் என விட்டிருப்பான். இப்பொழுது அப்படி விட்டால், அவர் மீண்டும் வந்து தங்கள் வாழ்க்கையில் கலகம் பிறப்பிக்க வாய்ப்பிருந்ததால் ஒரேடியாக தலை முழுகத்தான் அவளையும் அழைத்துக் கொண்டு போனான்.

விலங்கிட்டு தன்னுடனே வைத்துக் கொள்வேன் என்பதற்கிணங்க அவளை விட்டு வேலைக்குத் தவிர தனியே எங்குமே செல்வதில்லை அவன். பிரிட்டனில் அவன் குடும்பமே சிதைந்து போய் கிடந்தது. மேகிக்கு விஷயம் தெரியவும் மர்லினாவை வீட்டினுள்ளேயே கூட்டி வந்து குடும்பம் நடத்த ஆரம்பித்திருந்தார் வில்லியம். வெளியில் நடப்பதைப் பொறுத்துக் கொண்ட மேகி தன் கண் முன்னே நடக்கும் அக்கிரமத்தை தாங்க ரொம்பவே சிரமப்பட்டார். மனம் வெறுத்துப் போய் கடவுள் தொண்டாற்ற கிறிஸ்துவ ஆசிரமத்தில் போய் சேர்ந்து விட்டார்.

மர்லினாவுக்கு செலவு செய்ய முடியாமல், ரொம்பவே கஷ்டப்பட்டார் வில்லியம். ஆடிய ஆட்டமென்னெ என்பதற்கேற்ப, வயதாகவும் முன்பு போல அவரால் ஆடமுடியவில்லை. மர்லினாவையாவது தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடினார். தன்னைப் போலவே இரவில் கள்ளத்தனமாக வெளியேறும் அவளை ரோடு ரோடாக அலைந்து கண்டுபிடித்து வீட்டுக்குக் கூட்டி வருவது தான் அவரின் தலையாய கடமை. தான் செய்த கர்மவினையை இந்த ஜென்மத்திலேயே அறுவடை செய்து கொண்டிருந்தார் அவர்.

தாய் தனக்கு கடவுள் சேவை போதும், பணம் வேண்டாம் என சொல்லிவிடவும், தகப்பனுக்கு மட்டும் ஓரளவு வசதியாக வாழ பண ஏற்பாடு செய்தவன், மறுநாளே மலாயாவுக்கு ஓடி வந்துவிட்டான்.

மேகி அனுப்பிய கடிதத்தில் பின்குறிப்பாக வில்லியத்தின் விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பக்கவாதம் வந்து, நர்சிங் ஹோமில் சேர்த்திருப்பதாகவும், மர்லினா அவரை விட்டு வேறு ஒருத்தனுடன் போய் விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எட்வர்ட் கொடுத்திருந்த பணமே அவன் அப்பா வாழ்நாள் முழுக்க நர்சிங் ஹோமில் வாழ போதுமெனவும் கடிதத்தை முடித்திருந்தார். எட்வர்டுக்கு கவலையோ, வருத்தமோ ஏற்படவில்லை. பிரிட்டனில் இருந்து வரும் போதே பந்தபாசத்தை தலை முழுகி விட்டுத்தான் வந்திருந்தான்.

“துரை இந்த வாரம் நாம ஆத்தா எஸ்டேட்டுக்கு போயிட்டு வரலாமா?”

“போகலாம் ப்ளேக்கி”

இன்னும் அவர்களுக்குள் உறவு சீர்படவில்லை. ஆனால் தங்கைகளை மட்டும் காண ஆத்தாக்கள் இருவரும் தடை விதிப்பதில்லை. ஊர் கோயிலில் அமர்ந்து தன் தங்கைகளுடன் அளவளாவி விட்டு, தூரத்தில் நின்றிருக்கும் தன் ஆத்தாக்களை ஆசையாக பார்த்துவிட்டு வருவாள் சுப்பு.

அவளின் தங்கைகளை டவுனில் இருக்கும் பள்ளியில் சேர்த்திருந்தான் எட்வர்ட். படிப்பு செலவு எல்லாம் அவன் பார்த்துக் கொள்ள, தாங்கள் இவனிடம் சாப்பாட்டுக்கு மட்டும் கையேந்தக் கூடாது என இன்னும் உழைக்கிறார்கள் அன்னமும், தங்கமும். தங்கள் பேத்தி மீது உள்ளுக்குள் அன்பு பொங்கி வழிந்தாலும், தூரத்தில் நின்று பார்ப்பதோடு சரி. 

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, காலடி ஓசை கேட்கவும் எட்வர்டின் மடியில் இருந்து எழுந்து நின்றாள் சுப்பு.

வந்தவனை,

“பெரிப்பா!” என ஓடி வந்து கட்டிக் கொண்டாள் சூரியா.

ஆசையாக அவளை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்தான் முத்து.

“வா மாமா.” வரவேற்றவள் அவனுக்கும் டீயை ஊற்றிக் கொடுத்தாள். அவனைப் பார்த்து தலையை மட்டும் அசைத்துவிட்டு தோட்டத்துப் பக்கம் எழுந்து போய்விட்டான் எட்வர்ட்.

“உன் புருஷனுக்கு இன்னும் கோபம் போவலியாக்கும்? மூனு வருஷம் ஆச்சு இன்னும் சிலிர்த்துக்கிட்டா எப்படி?” கிண்டல் செய்தான் அவன்.

“அவரு பொண்டாட்டிய கடத்துனா கோபம் வராதாக்கும்?” நொடித்துக் கொண்டாள் சுப்பு.

சிரித்தவன்,

“உன் கிட்ட பத்திரிக்கை குடுத்துட்டு அப்படியே கல்யாணத்துக்கு நேருல அழைக்க வந்தேன் புள்ள.” என திருமண பத்திரிக்கையை இவளிடம் நீட்டினான்.

கல்யாணப் பெண் சாட்சாத் நம் சுப்புவின் ஆதர்ச தோழி அலமுதான். போன தடவை தங்கைகளைப் பார்க்க எஸ்டேட்டுக்கு போயிருந்தவளை பார்க்க வந்தாள் அலமு. கண்ணீர் பொங்க கட்டிக் கொண்டார்கள் இருவரும்.

எட்வர்டை அறிமுகப் படுத்தவும், மயக்கம் அடித்து விழுந்தவள், பத்து நிமிடம் கழித்துதான் எழுந்தாள். சிரித்தபடியே அவர்கள் பேசட்டும் என மகளை அழைத்துக் கொண்டு தள்ளி நின்று கொண்டான் எட்வர்ட்.

கல்யாணம் ஆகி அம்மா வீட்டுடன் தொடர்பில்லாமல் இருந்தவளுக்கு சுப்புவின் காதல் கதை தெரிந்திருக்கவில்லை.

“ஏ புள்ள, நெசமாலும் வெள்ளைக்கார துரைய கட்டிக்கிட்டியா? என்னால நம்ப முடியலடி. படபடன்னு வருது. என்னைப் பாத்து வேற சிரிச்சுப்புட்டாறே துரை! எனக்கு தலை சுத்துது புள்ள” சுப்புவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சுப்பு சொல்லிய காதல் கதையை கேட்டு தன் தோழியை சந்தோசமாக அணைத்துக் கொண்டாள் அலமு.

“நீ திரும்பவும் எப்ப புள்ள மாமியாரு வீட்டுக்கு திரும்பி போற?” கேட்டாள் சுப்பு.

“இனிமே இங்கதான். நேத்துதான் இங்க கொண்டு வந்து தள்ளி விட்டுட்டு போயிட்டாங்க, நிரந்தரமா!”

“என்ன புள்ள சொல்லுற?” அதிர்ச்சியானாள் சுப்பு.

“அடப்போடி! கல்யாணம் கட்டி இத்தனை வருஷத்துல வயித்துல ஒரு புழு பூச்சி இல்லையாம். தெரியாமத்தான் கேக்கறேன், ஒரு புள்ள பூச்சிய கட்டி வச்சா, எப்படிடி புழு பூச்சி வரும்! என் மாமன் எவள கட்டுனாலும் புழு பூச்சி என்ன வயித்துல பூண்டு கூட வராதுன்னு நான் யாருகிட்ட போய் சொல்ல?” விரக்தியில் சிரித்தாள் அலமு.

சுப்பு கண் கலங்கவும்,

“நீ ஏன் புள்ள அழுகற? என் தலை எழுத்து இப்படி இருக்கு. என்ன செய்ய? அங்கதான் பிச்சி புடுங்கனாங்கன்னா, இங்க என் ஆத்தா கூட வெளங்காதவன்னு திட்டுது புள்ள. அதுதான் தாங்க முடியல.” கண்ணீர் வழிந்தது.

“என் கூட வந்துருடி அலமு. நான் பாத்துக்கறேன் உன்னை” தோழியைக் கட்டிக் கொண்டாள் சுப்பு.

“அதெல்லாம் வேணா! இங்க வரப்போ மத்தவங்க மாதிரி என்னை ஒதுக்காம நாலு வார்த்தை பேசு போதும்.” கள்ளமில்லாமல் சிரித்தாள் அலமு.

“அதெல்லாம் பேசுவேன்! உனக்கு எப்பவுமே நான் இருக்கேன் புள்ள. நீ கவலைப்படாத”

“உன் முத்து மாமா நல்லா இருக்காறா புள்ள?” குரலில் மறைக்கப்பட்ட ஆர்வம். அவளின் திருமணத்திற்கு முன்பே, உன் மாமன் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறார் என சிலாகித்தவள் தானே. சுப்புவைத் திருமணம் செய்யாமல் மனம் உடைந்து போயிருப்பாறோ எனும் அக்கறையில் விசாரித்தாள்.

இப்பொழுது உள்ள சுப்பு கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலி ஆயிற்றே! அவளின் வாழ்வு மலர தன்னால் ஆன முயற்சி செய்து இதோ அடுத்த வாரம் கல்யாணம் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். 

சந்தோசமாக பத்திரிக்கையை வாங்கியவள்,

“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா. நான் உயிரா நினைக்கிற நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருறது மனசுக்கு நிறைவா இருக்கு. அலமுவ கண் கலங்காம பாத்துக்க மாமா!” என கண் கலங்கினாள்.

“அலமு இனிமே என் பொண்டாட்டி. அவள கண் கலங்காம மட்டும் இல்ல, நெஞ்சு நிறைய நேசத்தோடயும் பாத்துக்குவேன் புள்ள”

“உன் நல்ல மனசுக்கு நீ நூறு வருஷம் சந்தோசமா இருப்ப மாமா” என வாழ்த்தினாள் சுப்பு. எட்வர்டின் சிபாரிசில் ரிச்சியின் எஸ்டேட்டில் தான்  தற்பொழுது பணிபுரிகிறான் முத்து.

“ஆமா கேக்கனும்னு நினைச்சேன்! வீராண்டி பெரிப்பா கிடைச்சாறா மாமா?”

ஜாதி கலவரம் செய்ததால் ஜெயிலுக்கு சென்று வந்தவர், வந்த இரு நாட்களில் மாயமாகி இருந்தார். ஊர் முழுக்க தேடிப்பார்த்தவர்கள், தற்பொழுது முயற்சியைக் கைவிட்டிருந்தனர்.

“எந்த சிறுக்கிய இழுத்துக்கிட்டு ஓடிட்டானோ தெரியலையே” என புலம்பிய அவர் மனைவி, போனது சனி என பிள்ளைகளோடு சந்தோசமாக இருக்கிறார்.

“என்னை கேட்டா எனக்கு என்ன புள்ள தெரியும்” மர்ம சிரிப்புடன் எட்வர்டைப் பார்த்தான். அவர்கள் பேசியது கேட்காதது போல  மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான் அவன். அவன் முகத்திலும் அதே சிரிப்பு.

இவளின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு அவன் கிளம்பவும், பத்திரிக்கையுடன் வீட்டின் உள்ளே நுழைந்தாள் சுப்பு.

“பட்டுக்கா!”

“இருடி வரேன்”

பட்டுவும், பவுனுவும் அங்கேதான் இருந்தார்கள். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவள்,

“அக்கா, ஒரு விஷயத்துல நீங்க என்னை ஏமாத்திட்டீங்க தெரியுமா?” சலுகையாக குறைப்பட்டாள்.

“என்னடி?” கேட்டார் பட்டு.

“நீங்க எனக்கு இன்னும் பலாத்காரம் செஞ்சு குடுக்கவே இல்லை”

“அடி செறுப்பால!” என சொல்லிக் கொண்டே ஓட துவங்கியவளை துரத்தினார் பட்டு. அவள் வாசலுக்கு ஓடவும் எட்வர்ட் பிள்ளையுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“துரை அக்கா கொட்ட வராங்க” என மாட்டிவிட்டாள் சுப்பு. அவனின் முறைப்பில் நடுங்கிய பட்டு,

“அது வந்து துரை, புள்ள தலையெல்லாம் தூசியா இருந்துச்சா, தட்டி விட தான் வந்தேன். கொட்டறது எப்படின்னு மறந்து பலகாலம் ஆச்சு” உள்ளே போன குரலில் சொன்னார் பட்டு.

பிள்ளையை அவர் கையில் கொடுத்தவன்,

“கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுங்க” என்று விட்டு சுப்புவை இழுத்துக் கொண்டு தன் அறைக்குப் போய் படீரென கதவை சாத்தினான்.

பட்டுவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. போன தடவை இதே மாதிரி நடந்தப் பொழுது தான் கொடுத்த சாபமெல்லாம் ஞாபகம் வர,

“மாரியாத்தா! புள்ளைங்க ரெண்டும் தீர்க்காயுசா இருக்கனும். நான் குடுத்த சாபத்தை எல்லாம் திரும்ப வாங்கிக்கறேன். நல்லா வச்சிக்க ஆத்தா அவங்கள” என வேண்டிக் கொண்டே சூரியாவுடன் வெளியே நடந்தார்.

அறைக்குள் வந்தவன், தன் ப்ளேக்கியை இருக அணைத்து கொண்டான்.

“என் செல்ல ப்ளேக்கி! என் வெள்ளந்தி ப்ளேக்கி இன்னும் மாறவே இல்லை! இன்னும் அதே விளையாட்டுத்தனம் தான்” முகமெல்லாம் முத்தமிட்டான்.

“என்ன துரைலிங் பகலிலேயே இப்படி பண்ணுறீங்க” வெட்கப்பட்டாள் சுப்பு.

“பகலிலே சூரியகாந்திப் பூ குடுத்தா நீ ஆசைப்பட்ட மாதிரியே வெள்ளையா புள்ள பொறக்கும் ப்ளேக்கி” என சொல்லியபடியே முன்னேறினான் எட்வர்ட்.

“நெஜமாவா துரை?”

அவன் தலையாட்டவும்,

“எப்பவுமே நான் தான் பூ கேப்பேன்! இன்னிக்கு நீங்க கேக்கறீங்க! “ என அவனுக்கு பதில் முத்தா கொடுத்துக் கொண்டே கேட்டாள் சுப்பு.

“போன தடவை நீ கேட்டதால பொம்பள புள்ள பொறந்துச்சுல்ல, இந்த தடவை நான் கேக்கறேன். அப்பவாச்சும் உன் ஆசைப்படி ஆம்புள புள்ள பொறக்குதான்னு பாப்போம்” நகைத்தான் எட்வர்ட்.

“ஓஹோ, பகல்ல நீங்களாவே பூ குடுத்தா வெள்ளையா ஆம்பளை புள்ள பொறக்குமோ? இத்தனை நாளா இது தெரியாம போச்சே எனக்கு. இனிமே நமக்கு பூப்புள்ள வர வரைக்கும் நீங்க பகல்ல வேலைக்குப் போக வேணாம். பூ கேட்டுக்கிட்டே வீட்டுல இருங்க!” கண்டிப்புடன் கட்டளையிட்டாள் சுப்பு.

“அதெல்லாம் முடியாது” என வாய் திறந்தவன் உதட்டை அழுத்தமாக தன் உதட்டால் மூடினாள் சுப்பு. அவளின் முத்தா அவனை பித்தாக்க, அடுத்த குழந்தைக்கு அடிதளம் அமைக்கப்பட்டது அன்று.

‘ஓம் சூரியகாந்தி பூவாய நமஹ!!!’