IMTP–EPI 4

அத்தியாயம் 4

 

பூக்குவியலாய் தன் மேல் கிடந்தவளை தள்ளி விட சொல்லி மூளை முழக்கமிட்டது. கைகளோ தன்னையும் அறியாமல், நடுங்கி கொண்டிருந்தவளின் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தன் நெஞ்சில் அவளைத் தாங்கினானோ அவனுக்கே தெரியாது. 

பெரும் பாடுபட்டு மூளை சொன்னதை கேட்டவன், அவளைக் கீழே தள்ளி விட்டு பட்டென எழுந்து நின்றான். அவன் தள்ளிய வேகத்தில் புரண்டு புல் தரையில் விழுந்தவள், சாவகாசமாக எழுந்து அமர்ந்தாள்.

இடுப்பில் கை வைத்து நின்றவாறே அவளை முறைத்தவன்,

“யார் நீ?” என கோபமாக கேட்டான்.

பாவாடையில் இருந்த புல்லையும் மண்ணையும் தட்டியவாறே எழுந்து நின்றவள்,

“என்னைத் தெரியாதா? நான் தான் சுப்புலெட்சுமி” என தாம் தான் இங்கிலாந்து மகாராணி என்பது போல அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

கோபத்திலும், அவள் சொல்லிய விதத்தைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வரப் பார்த்தது. விறைப்பாகவே இருப்பவனுக்கு சிரிக்க மறந்து போயிருந்தது. சிரிப்பும் கோபமாகவே வெளிப்பட்டது அவனுக்கு.

“இங்க என்ன செய்யற?” ஆத்திரத்தில் வெடித்தான்.

“அப்படியே தோட்டத்தை சுத்தி வந்தேனா, நாய் குரைக்கற சத்தம் கேட்டுச்சு. வந்து பார்த்தா அழகா அம்சமா இருந்துச்சு இந்த நாய். எங்க எஸ்டேட்டுல இப்படி நல்ல ஜாதி நாய் இல்ல. நாலு சொறி நாய் தான் சுத்திட்டு இருக்கும். இந்த நாய் பார்க்க சாதுவா இருந்துச்சா,  சரி பாசமா தடவி குடுக்கலாம்னு கிட்ட வந்தேன். பாவி பையன், படக்குனு என் மேல பாஞ்சுட்டான்.”

உடல் சிலிர்க்க நெஞ்சை நீவிக் கொண்டாள். இன்னும் படபடப்பு மீதம் இருந்தது அவளுக்கு.

எட்வர்டுக்கு கோபம் கரையைக் கடக்க ஆரம்பித்தது. இங்கே, என் பங்களாவுக்குள் என்ன செய்கிறாய் என்பது தான் அவனின் கேள்வி. இவளோ கையை ஆட்டி ஆட்டி ஊர் கதை பேசவும் பொறுமை பறந்தது அவனுக்கு.

“பர்சு!!!!”

அவன் கத்திய கத்தலில், பாதி வழி நடந்துப் போயிருந்த பரசு மீண்டும் பதறியபடி இவர்கள் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தான்.

“என்னாச்சு துரை?” மூச்சு வாங்கக் கேட்டான்.

பார்வையால் சுப்புலெட்சுமியை சுட்டிக் காட்டினான் அவன். அப்பொழுது தான் அவளை கவனித்தான் பரசு.

“யாரு புள்ள நீ?”

“என்னை தெரியாதா? நான் தான் சுப்புலெட்சுமி” மீண்டும் ஒரு அறிமுகப்படலம்.

“புல்ஷிட்” எட்வர்ட் கத்தவும் பீதியானான் பரசு.

“ஏ புள்ள! தொரை கோபப் படற அளவுக்கு என்ன பண்ண? இங்க யார் கூட்டிட்டு வந்தாங்க?”

“ஓ இவர் தான் துரையா? வெள்ளை வெளேர்னு இருக்கறப்பவே நான் சந்தேகப் பட்டேன் இவர் தான் துரைன்னு. எப்படி இவர் மட்டும் இம்புட்டு வெள்ளையா இருக்காரு? ஆட்டுப்பால் ஊத்தி குளிப்பாரோ?” மோவாயில் கையை வைத்து வியந்தாள் அவள்.

இப்பொழுது மண்டைக் காய்வது பரசுவின் முறையானது.

‘நாம என்ன கேட்டோம் இந்தப் பொண்ணு என்ன பேசுது? சரியான அரைக்கிறுக்கா இருக்கும் போல இருக்கே’

திரும்பி எட்வர்டைப் பார்க்க, அவன் முகத்தில் கோப ரேகைகள்.

“இங்க பாரு புள்ள, தொரை பங்களாவுக்கு எதுக்கு வந்துருக்க?” பொறுமையாய் கேட்டான்.

“இப்படி பதமா கேளுங்க, பதில் சொல்லுறேன். மிரட்டுனா நான் எப்படி பேச? நாக்கு வாய்குள்ளாறயே பாய் போட்டு படுத்துக்குது. பாக்கியம் பாட்டி மேல் வேலை செய்ய ஆளு வேணும்னு கேட்டாங்களாமே, அதுக்குத்தான் வந்துருக்கேன்”

“அலமுன்னு அவங்க சொந்தக்கார பொண்ணு வரும்னு சொல்லுச்சே பாக்கியம்?”

“அலமு என் தோழிதான். அவ வயசுக்கு வந்துட்டா! அதனால கல்யாணம் வைக்கப் போறாங்க. நான் இன்னும் வரலயா, அதான் இங்க வேலைக்கு அனுப்பி விட்டாங்க” விளக்கி விவரமாக சொன்னாள் சுப்புலெட்சுமி.

‘இது அரை கிறுக்கு இல்ல போல இருக்கே. முழு கிறுக்கால இருக்கு! கொஞ்சம் விட்டா நம்மளயும் கிறுக்கு கூட்ட தலைவனா ஆக்கிரும் போல இருக்கே’

யாரிடம் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் கண்ணை உருட்டி வெகுளியாய் பேசும் இவளை எப்படி கட்டி மேய்ப்பது என லேசாக பயம் வந்தது பரசுவுக்கு.

“தோ பாரு புள்ள, பாக்கியம் அவங்க பேத்தி பிரசவத்துக்கு அவசரமா ஊருக்குப் போயிருக்கு. வர கொஞ்ச நாள் ஆகும். நீ வீட்டுக்குப் போக ஏற்பாடு பண்ணறேன். பாக்கியம் வந்த பொறவு நீ திரும்ப வா” அவளைக் கிளப்பப் பார்த்தான்.

“இருக்கட்டும் பர்சு!” கட்டளையாக வந்தது எட்வர்டின் குரல் .

‘துரை எதுக்கு இவள இருக்க சொல்லுறாரு? மூக்கும் முழியுமா லட்சணமா வேற இருக்காளே! இவள எதுக்கு இங்க அனுப்பி வச்சிருக்காங்க, என் உசுர வாங்கவா?’

அவனும் பெண் பிள்ளைகளைப் பெற்றவன் ஆயிற்றே, மனம் பதைக்கத்தான் செய்தது. லேசாக திரும்பி எட்வர்டின் முகத்தைப் பார்த்தான். அவனோ இவர்களைக் கண்டு கொள்ளாமல், கைக்கடிகார முள்ளை நோண்டிக் கொண்டிருந்தான்.

‘அது சரி! நாம தான் தேவையில்லாம பயப்படறோம். துரைக்கு நம்ம இனத்த கண்டாதான் ஆவாதே. வேலை பார்க்கத்தான் இருக்க சொல்லுறாரு, இருந்துட்டு போகட்டும்’

“துரை இருக்க சொல்லுறாரு. நான் இங்கத்தான் இருப்பேன். எங்காத்தா துரை சொன்ன பேச்சு கேட்டு நடக்கனும்னு படிச்சு படிச்சு சொல்லி அனுப்பிருக்கு”

கடிகாரத்திலிருந்து பார்வையை விலக்கி அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த எட்வர்ட், மீண்டும் வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

இந்த பெரிய பங்களாவில் எட்வர்ட்  தனியாக தான் வசிக்கிறான். பாக்கியம் மட்டும்தான் இரவில், சமையல் கட்டின் ஓரத்தில் படுத்துக் கொள்வார். மற்ற வேலை ஆட்கள், அவரவர் வீட்டுக்கு சென்று விடுவார்கள். பாக்கியம் இல்லாத நேரத்தில் பரசுவின் இரு மனைவிகளும் ஒரு நாள் ஒருவராக மாற்றி மாற்றி வந்து  வீட்டு வேலைகளை செய்து, சமைத்து வைத்து விட்டு செல்வார்கள். இரவில் எட்வர்ட் வெறும் பழங்களும், ரொட்டியும் மட்டும் தான் சாப்பிடுவான். அதனால் இரவு சமையல் வேலை இல்லை.

“நான் வீட்டுக்குப் போயிட்டு என் பொஞ்சாதிய அனுப்பறேன். அவ என்ன வேலை எப்படி செய்யனும்னு சொல்லுவா. நீ உள்ள போய் அடுப்படியில இரு” சொல்லிவிட்டு அவசரமாக மனைவியை அழைக்கப் போனான் பரசு.

அவர் நகர்ந்ததும் எட்வர்டின் அருகில் நெருங்கி வந்த சுப்பு, அவன் கையைப் பற்றி இழுத்தாள். திடீரென அவள் கையைப் பிடிக்கவும், அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் எட்வர்ட்.

தன் கையையும், அவன் கையையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்த்தவள்,

“துரை, நீங்க எம்புட்டு வெள்ளையா இருக்கீங்க! எப்படி உங்க மாதிரி ஆகறதுன்னு எனக்கும் சொல்லி குடுப்பீங்களா?” ஆசையாக கேட்டாள்.

இரு கைகளுக்கும் தெரிந்த நிற வித்தியாசத்தைப் பார்த்து,

“ப்ளேக்கி!” என சன்னமாக முனுமுனுத்தவன், கையை  வேகமாக உருவிக் கொண்டான். ஆண்களே அவனை நிமிர்ந்துப் பார்த்துப் பேச பயப்படுவார்கள். இந்தச் சின்னப் பெண்  கொஞ்சம் கூட பயம் இல்லாமல் தன் கையைப் பிடிக்கிறாளே என எண்ணியபடி அவளை ஆழ்ந்து பார்த்தவாறு நின்றிருந்தான்.

உயிர் பயத்தில் இருந்தவளை நாயிடம் இருந்து காப்பாற்றியதால் அவன் மேல் ஒரு நம்பிக்கை, மரியாதை, தோழமை, சிறிதளவு பாசம் இது தான் அவள் மனதில் தோன்றி இருந்தது. அதனால் தான் அவனிடம் பயமின்றி நடந்துக் கொண்டாள் சுப்பு.

“ப்ளேக்கினா என்ன துரை?”

“நீ ரொம்ப அழகா இருக்கல்ல அதான் அழகினு எங்க பாஷைல கூப்பிட்டேன்” நக்கலாக சொன்னவன்,

“வேலைக்கு இருக்க சொன்னேன்னு அடிக்கடி என் முன்ன வந்து நிக்காதே ப்ளேக்கி! கூப்பிட்டா மட்டும்தான் வரனும். அதோட உன் விரல் நகம் கூட என் மேல படக்கூடாது. எனக்குப் பிடிக்காது! புரியுதா?”

அவன் கோப குரலில் பயந்துப் போய் அவசரமாக சரி என தலையாட்டியவள்,  

“நான் உள்ள போறேன் துரை. மாமா அடுப்படியில நிக்க சொன்னாங்களே!” பரசுவை மாமாவாக்கி குதித்துக் கொண்டே ஓடிப்போனாள்.

அவள் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான் எட்வர்ட். அவள் மேல் வீசிய மஞ்சள் வாசம் தன் சட்டையில் தேங்கி நிற்பது போன்ற உணர்வில், சட்டென சட்டையை கழற்றி தூர வீசி விட்டு பங்களாவின் உள்ளே நுழைந்தான்.

பயத்தில் இருந்தவளை தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

“கெட் அ க்ரீப்(grip) எட்வர்ட். ஷீ இஸ் எ சைல்ட். என்(an) இண்டியன் சைல்ட்” என தன்னையே திட்டிக் கொண்டான். அடிமை இனத்தின் மேல் ஆளுமை வரலாம் அன்பு வரலாமா?

உள்ளே நுழைந்த சுப்பு, அந்த பங்களாவையே வாய் பிளந்து பார்த்திருந்தாள். உயரமான கூரை அந்த பங்களாவைப் மிக பெரிதாக காட்டியது. மார்பிள் தரை, மூங்கில் நாற்காலிகள், அதன் மேலே உட்கார பஞ்சு மெத்தைகள், டைனிங் டேபள்,அதை சுற்றி மர நாற்காலிகள், மின்விசிறி, குளிர் சாதன பெட்டி இப்படி வசதியாக வாழ தேவையானது எல்லாம் இருந்தது அங்கே. இவை எல்லாவற்றையும் சினிமாவில் கூட அவள் பார்த்ததில்லை.

ஓடி ஓடி ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்தாள், தடவிப் பார்த்தாள். முகம் முழுக்க சந்தோஷம் அவளுக்கு. கடைசியாக ஹால் மூலையில் இருந்த பியானோ அவளின் கவனத்தை சுண்டி இழுத்தது.

அவள் பின்னாலேயே வந்தவன், அவளின் உற்சாகத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பியானோவைத் தொட முயன்றபோது, வேண்டாம் என அவன் கத்துவதற்குள்,

“ஏ புள்ள, பியோனாவ(பியானோ) தொடாத!” என சத்தம் கேட்டது.

சத்தம் போட்டது பின் வாசல் வழி வந்த பரசுவின் முதல் சம்சாரம் பட்டம்மாள் தான். பரசுவுக்கு மட்டும் பட்டு.

இனி அவளைப் பட்டு பார்த்துக் கொள்வார் என தனது அறைக்குள் புகுந்து கொண்டான் எட்வர்ட்.

“இங்க பாரு புள்ள, இந்த ஊட்டுல எதை வேணும்னாலும் தொட்டு துடைக்கலாம். அந்த பியோனாவ  துரை மட்டும் தான் தொடுவாரு. அவங்க ஊருல இருந்து ரொம்ப காசு போட்டு எடுத்துட்டு வந்ததாம். ஒரு கீறல் பட்டா கூட, துரை நம்மள கிழிச்சி தொங்கவுட்டுருவாரு. புரியுதா?”

“சரிக்கா! நீங்க தான் பரசு மாமாவோட வீட்டம்மாவா?”

“மாமான்னு அந்த வெளங்காவெட்டி கூப்புட சொன்னுச்சா? ஏற்கனவே வூட்டுல ஒரு சக்களத்தி இருக்கா, அவளயே என்னால சமாளிக்க முடியல. அதுல நீ வேற வந்து சேர்ந்துறாதே புள்ள! என்னை அக்கான்னே கூப்புடு, அந்த ஆள மட்டும் சித்தப்புன்னு கூப்புடு. புரிஞ்சதா?”

“சரிக்கா.” முதல் நாளே ஆள் ஆளுக்கு மிரட்டவும் குரல் நடுங்கியது அவளுக்கு.

“என்ன பயந்துட்டியா? பட்டுன்னு பேரு இருக்கறதால வாய்ல பட்டுன்னு வார்த்தை வந்து விழுந்துரும். அம்புட்டுதான்! நான் கொடுமைலாம் பண்ண மாட்டேன். கொஞ்சம் கண்டிப்பா இருப்பேன். இல்லைனா தான் தலையில மிளகா அரைச்சிருதுங்களே. சரி வா, அடுப்படிக்கு போலாம்.”

திரு திருவென முழிப்பவளை பார்த்து பாவப்பட்டு, கையைப் பிடித்து அழைத்து சென்றார் அவர். அங்கே கரி அடுப்பு தான் புழக்கத்தில் இருந்தது. அதை எப்படி பற்ற வைக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். வீட்டு வெளியே விறகடுப்பும் இருந்தது. சுடுதண்ணீர் போடுவதற்கு மட்டும் அந்த அடுப்பைப் பயன்படுத்தினர்.

“புள்ள, உன் பேரு என்ன சொன்ன?”

“இன்னும் சொல்லல! அதுக்குள்ள தான் வஞ்சிப்புட்டீங்களே. என் பேரு சுப்புலெட்சுமி. எல்லாரும் சுப்புன்னு கூப்பிடுவாங்க” 

“நான் வஞ்சதுல உனக்கு எங்க சுளுக்கிக்கிச்சு? வா வேலைய பாரு. இப்ப துரை குளிக்கற நேரம். வெளிய அடுப்புல சுடுதண்ணி காயுது பாரு. அத ஊத்தி எடுத்துட்டுப் போயி அவரு ரூமுல குளிக்கற ரூமு இருக்கும், அங்கன தொட்டி இருக்கும், அதுல விளாவிட்டு வா”

“துரை, அவரு கூப்பிடாம கண்ணு முன்னுக்கு வர கூடாதுன்னு சொல்லிருக்காருக்கா. பயமா இருக்கு. அவரு கத்துறப்போ, மூக்கு குடை மிளகா கணக்கா சிவந்து போய் பார்க்கவே என் குலை நடுங்குது. நீங்க போங்கக்கா”

“அடி யாருடி இவ, கூறு கெட்ட குறத்தியா இருக்கா! கண்ணு முன்னாடி போவாம வேலை எப்படி செய்யுவ? அதெல்லாம் கோவத்துல சொல்லிருப்பாரு. இப்ப போய் சொன்ன வேலைய பாரு. நேரம் ஆனா அதுக்கு வேற மவராசன், முறைச்சே கொன்னுருவாரு. சட்டுபுட்டுனு வா! டீ எப்படி ஆத்தறதுன்னு சொல்லி தரேன். துரை நினச்சப்ப, ‘டீ’ அப்படின்னு கத்துவாரு. கேட்ட ரெண்டாவது நிமிஷம் டீ அவர் முன்ன இருக்கனும். இப்போ ஓடு” பயந்துப் போய் நின்றிருந்தவளை விரட்டி விட்டார்.

பெரிய தகர வாளியில் சுடுநீரை அள்ளி ஊற்றியவள், தூக்க முடியாமல் கீழே வைத்து வைத்து தூக்கிச் சென்றாள். வீட்டைக் காட்டும் போது, எட்வர்டின் அறையையும் காட்டி இருந்தார் பட்டு. எப்பொழுது நுழைந்தாலும், இரண்டு முறை மென்மையாக கதவைத் தட்டி விட்டு அப்புறம் தான் செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் அவர்.

சுடுநீர் வாளியை கதவின் முன்னே வைத்து விட்டு, கதவுக்கு வலிக்குமோ என்பதைப் போல இரு முறை தட்டியவள், பின் கதவைத் திறந்தாள். வாளியை தூக்கிக் கொண்டு அறையை சுற்றிப் பார்த்தாள். வலது மூலையில் ஒரு கதவு தென்பட்டது. அதுதான் குளியல் அறையாக இருக்கும் என அனுமானித்து சென்று கதவைத் திறந்தாள். அந்த கதவு வீட்டுக்கு வெளியே சென்றது. மீண்டும் கதவை அடைத்தவள், பார்வையை மீண்டும் சுழற்றினாள். இடது மூலையில் இன்னொரு கதவு இருந்தது. தம் கட்டி வாளியைத் தூக்கிக் கொண்டு அங்கே நடந்தாள். அவள் நல்ல வேளை, அதுதான் குளியல் அறையாக இருந்தது. புதையலைக் கண்டது போல சந்தோஷம் அவள் முகத்தில்.

அவள் அறைக்குள் வந்ததில் இருந்து, நவரசமும் நடனமாடும் அவள் முகத்தைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான் எட்வர்ட். நாற்காலியில் கால் மீது கால் போட்டு படிப்பதைப் போல அமர்ந்திருந்தாலும், அவன் கண்கள் அவளையே சுற்றி வந்தன.

குளியல் அறை தொட்டியில் நீரை ஊற்றி விளாவியவள், வெளியே வந்து அவன் அருகில் தலை குனிந்து நின்றாள்.

“துரை சுடு தண்ணி விளாவிட்டேன். குளிப்பீங்களாம்.”

“போ!” ஒற்றை வார்த்தை தான் பதிலாக கிடைத்தது. விழுந்தடித்து கொண்டு வெளியே ஓடினாள். பயமில்லாமல் அவன் கையை பிடித்தவள் தான், ஆனால் அவன் கோபத்தில் கத்தவும் தோழமை போய் பயம் வந்திருந்தது.

அவள் வெளியேறிய ஐந்து நிமிடத்தில்,

“ப்ளேக்கி!” என வீடே அதிர கத்தினான் எட்வர்ட்.

“யாரு அது ப்ளேக்கி?” விழித்தார் பட்டு.

“அது நாந்தான்! நான் ரொம்ப அழகா இருக்கேன்னாம். அதான் அப்படி கூப்புடுறாரு துரை”

“ஓஹோ! சரி ஓடு கூப்பிடறாரு பாரு”

“இல்ல, இல்ல! நான் போக மாட்டேன். எங்க சின்னாத்தாக்கு மேல கத்துறாரு. அடிச்சிட்டாருனா? எனக்கு பயமா இருக்கு” பட்டுவின் சேலை கொசுவத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் சுப்பு.  

“போடி, போய் என்னன்னு கேளு. உன்னைய கூப்புடறப்ப நான் எப்படி போறது? நான் வேணுன்னா ரூமு வெளிய நிக்கறேன். பயப்படாத சுப்பு.”

அதற்குள் இன்னொரு முறை ப்ளேக்கி என கத்தி இருந்தான்.

விழுந்து அடித்துக் கொண்டு அவன் அறைக்கு ஓடினாள் சுப்பு. அறையில் அவனைக் காணாது, திறந்திருந்த குளியல் அறைக்குள் போய் நின்றாள் அவள். இடுப்பில் வெள்ளை நிற துண்டுடன், அவளை உறுத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் எட்வர்ட்.