IMTP–EPI 5

அத்தியாயம் 5

 

அவன் முறைப்பதைப் பார்த்ததும் பயத்தில் வேர்த்து விறுவிறுத்துப் போனது சுப்புவுக்கு. கண்கள் மெல்ல கலங்கியது. தலையைக் குனிந்து கொண்டு அவன் சொல்லாமலே தோப்புக்கரணம் போட ஆரம்பித்தாள்.

திட்ட வாய் திறந்தவன் அவள் செய்கையைப் பார்த்து வாயை மூடிக் கொண்டான். அமைதியாகவே கைகட்டி சுப்பு தோப்புக்கரணம் போடுவதை பார்த்து நின்றான் எட்வர்ட்.

போதும் நிறுத்து என அவன் சொல்வதற்குள், கால் வழுக்க அவன் புறமாக சரிய ஆரம்பித்தாள் சுப்பு. அவன் பிடிப்பதற்குள் கீழே உட்கார்ந்த வாக்கில் விழுந்திருந்தவள், பிடிமானத்திற்காக அவனின் துண்டை இறுகப் பற்றி இருந்தாள். துண்டு அவிழ்ந்து விழுவதற்குள்,

“டவல், டவல்!” என கத்தியவாறே இருக்கி இழுத்து மீண்டும் கட்டிக் கொண்டான். முகம் சிவந்து போய், கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

அவளைத் திட்ட ஆரம்பிப்பதற்குள், கீழே உட்கார்ந்தவாறே கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் சுப்பு.

“அய்யோ துரை! நல்ல வேளை துண்டை கெட்டியா பிடிச்சிகிட்டீங்க. இல்லைனா இன்னேரம் அம்மணக்கட்டையா நின்னுருப்பீங்க!” சொல்லி சொல்லி சிரித்தாள்.

“ப்ளேக்கீ!”

அவன் கத்திய கத்தலில் சிரிப்பு கப்பென அடங்கியது அவளுக்கு. மெல்ல எழுந்து நின்று, விழுந்ததினால் வலிக்க ஆரம்பித்த பின் புறத்தை தேய்த்துக் கொண்டாள். அவள் அருகில் நின்றால் எங்கே மீண்டும் துண்டை உருவிவிடுவாளோ என்ற பயத்தில் தள்ளி நின்றான் அவன்.

“துரை ரொம்ப கோபமா இருக்கீங்களோ? எங்க சின்னாத்தா தோப்புக்கரணம் போட்டா அடியை கொஞ்சம் குறைச்சிக்கும். அதே மாதிரி நீங்களும் கொஞ்சமா அடிக்கறீங்களா?” தலை நிமிராமல் கேட்டாள்.

“பொம்பளைங்கள அடிக்க மாட்டேன் நான். தண்ணிய என்ன செஞ்சு வச்சிருக்க?” என கேட்டான்.

“என்ன, என்ன செஞ்சு வச்சிருக்க?” என பாவமாக கேட்டாள்.

நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன்,

“குளிக்கற தண்ணி ஏன் ஜில்லுன்னு இருக்கு?” என மிஈண்டும் கேட்டான்.

“அக்கா சொன்ன மாதிரி தானே விளாவி வச்சேன்!”

“என்ன சொன்னாங்க?”

“நான் கேட்டேன், தண்ணி எப்படிக்கா விளாவனும்னு? அவங்க சொன்னாங்க, நீ குளிக்க எப்படி விளாவுவியோ அப்படின்னு. நான் இப்படிதானே குளிப்பேன். அதான் சுடுதண்ணிய தொட்டில ஊத்திட்டு, ஜில்லுன்னு ஆகற வரைக்கும் பச்சை தண்ணிய ஊத்துனேன். ஆனா பாருங்க துரை, இப்படி குளிக்க எதுக்கு சுடுதண்ணி கொண்டு வந்து கலக்கனும்? அப்படியே பச்சை தண்ணிய மொண்டு ஊத்தி குளிக்க வேண்டியது தானே?” இலவசமாக அறிவுரை வேறு வழங்கினாள்.

மழையோ, வெயிலோ, உடம்பை ஊடுருவும் பச்சை தண்ணீரில் குளித்து வளர்ந்தவள் தானே, சுடுநீர் குளியலை இவள் எங்கே கண்டிருக்கிறாள்!

“புல்ஷிட், வெளிய போ!” கத்த மட்டும் தான் முடிந்தது அவனால்.

“துரை, திரும்பவும் வாளியில சுடுதண்ணி எடுத்துட்டு வரவா?” அவன் கத்தியதில் குரல் நடுங்க கேட்டாள்.

“ஒன்னும் வேணா! இன்னிக்கு இந்த தண்ணியிலேயே குளிக்கறேன். போ!”

‘புல்லுசிட்டுனு ஒரு சிட்டு இருக்கோ? நமக்கு தேன்சிட்டுதானே தெரியும்’

ஓடி வந்தவள், கதவின் வெளியே நின்றிருந்த பட்டுவின் மேல் மோதிக் கொண்டு நின்றாள்.

“என்னடி பண்ணி வச்ச? எதுக்கு கத்தறாரு துரை?”

செய்ததை சொன்னாள் சுப்பு. நொங்கு நொங்கு என நடு மண்டையிலேயே கொட்டிய பட்டு,

“என் கிரகம், எனக்குன்னு இப்படி வந்து மாட்டுதுங்களே! ஏன்டி இந்த சின்ன வேலைய கூட உங்க வூட்டுல சொல்லிக் குடுக்கலையா? அப்புறம் எப்படி வீட்டு வேலைக்கு அனுப்புனாங்க?” திட்டினார் அவளை.

தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“அக்கா! மண்டையில மட்டும் கொட்டாதக்கா! மூளை வளராம போயிரும்”

“ஆமாடி, இதுக்கு மேல அது வளந்துட்டாலும்” நொடித்துக் கொண்டார்.

“வீட்டுல ரெண்டு ஆத்தா இருக்காங்க. எல்லா வேலையும் அவங்க பாத்துக்குவாங்க. தங்கச்சிங்களையும், மாட்டையும் பாத்துக்கற வேலைதான் எனக்கு. பாக்கியம் பாட்டி எனக்கு வேலை சொல்லிக் குடுக்கும்னு அனுப்புனாங்க. பாட்டி ஊருக்குப் போயிருக்கும்னு அவங்க கண்டாங்களா, இல்லை நான் தான் கண்டேனா?” கண்ணைக் கசக்கினாள்.

“உடனே கொழாய திறக்காத! முத நாள்தானே, போக போக சரியா போயிரும். வேலையும் பழகிக்குவ. துரைக்கு சேவகம் செய்யறதுக்குன்னு ஒரு பையன் இருக்கான். பேரு கருவாயன். ஜீரம் வந்து படுத்துக் கிடக்கான். அவன் வர வரைக்கும் தான் உனக்கு இந்த வேலைலாம். அவன் வந்த பிறகு, கூட்டறது, தொடைக்கறது, காய் கறி வெட்டிக் குடுக்கறது, நாய்க்கு சோறு போடறதுன்னு செஞ்சா போதும். இப்ப வா டீ போட சொல்லிக் குடுக்கறேன்”

சுடுதண்ணீர் ஊற்றி வைக்கும் பிளாஸ்கை எப்படி கையாள்வது, டீ போட்டில் (tea pot) எப்படி தேநீரை ஊற்றுவது, எட்வர்ட் குடிக்கும் தேநீரை எப்படி தயாரிப்பது என எல்லாம் சொல்லிக் கொடுத்தார். மண்டையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டாள்.

“புரியுதா புள்ள? சொதப்பிட மாட்டல்ல?”

“அட போக்கா! இது என்ன கம்பசூத்திரமா? பத்து ஊருக்கு சொடக்கு போடறதுக்குள்ள டீ ஆத்திருவேன் நான்”

“பேச்செல்லாம் நல்லா பதமா தான் பேசுற! குரைக்கற நாயி வேட்டை ஆடாதாம்! அது கணக்கா தான் நீ செய்யற காரியமெல்லாம் இருக்கு”

டைனிங் டேபளில் இருந்த ரொட்டியை எடுத்தவர், ஸ்ட்ரோபரி ஜேம் தடவி பீங்கான் தட்டில் அடுக்கினார்.

“அக்கா, சிவப்பா இருக்கே இது என்னக்கா?”

“இது பேரு ஜாம்மு. இனிப்பா இருக்கும். துரைக்கு இதுன்னா ரொம்ப இஸ்டம். உனக்கு காபி போட்டு வச்சிருக்கேன். வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த வடை இருக்கு. துரைக்கு டீ குடுத்துட்டு நீ சாப்பிடு. இன்னிக்கு ராவுக்கு சாம்பார் சாதம் தான். அதுவும் தூக்கு சட்டியில வச்சிருக்கேன். சாப்புட்டு இங்க ஓரமா தரையில படுத்துக்க.”

“கிளம்பறீங்களாக்கா?”

“ஆமாடி! என்னைய பிடிச்ச பீடை இருக்காளே, அவ புள்ளைங்களுக்கு மட்டும்தான் சோறு போடுவா. என புள்ளைங்க பசியில நிக்கும்ங்க. நான் போய்தான் சாப்பாடு போடனும்.”

“சரிக்கா, போங்க”

அவர் கிளம்பவும், டீ என சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. ஏற்கனவே பட்டு ரெடி செய்திருந்த ட்ரேயை எடுத்துக் கொண்டு அன்ன நடையிட்டு வரவேற்பறைக்கு நுழைந்தாள் சுப்பு. அங்கே இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தான் எட்வர்ட். அவன் முன்னே இருந்த குட்டி மேசையில் தட்டை வைத்தவள், பட்டு சொன்னது போல ஒதுங்கி நின்று கொண்டாள்.

“அங்க போய் நின்னுகிட்டா, டீ யாரு ஊத்துவா?” எரிச்சலாக வந்தது குரல்.

‘அவரே ஊத்திக்குவாருன்னு அக்கா சொன்னாங்களே! நாம சரியா கேக்கலியோ’

பயத்துடன் மெல்ல நடந்து வந்தவள், கீழே அமர்ந்து கை நடுங்க ஜக்கைத் தூக்கி கப்பில் டீயை தளும்ப தளும்ப ஊற்றினாள்.

அவன் முறைக்கவும்,

“ஏன் துரை முறைக்கறீங்க? தப்பா ஏதாச்சும் செஞ்சிட்டனா?” என பாவமாக கேட்டாள்.

“இப்படி ஃபுல்லா ஊத்துனா எப்படி குடிக்கறது?”

“அட அம்புட்டுதானே, இப்ப பாருங்க!” என்றவள் கப்பை தூக்கி பாதி டீயைக் குடித்து விட்டு,

“இப்போ தளும்பல துரை” என எதையோ பெரிதாக சாதித்து விட்டது போல அவன் முகத்தைப் பார்த்தாள்.

“ப்ளேக்கீ!”

‘போச்சுடா, இப்ப என்ன தப்பா பண்ணேன்னு தெரியலையே’ அவசரமாக எழுந்தவள், தலையைக் குனிந்தவாறே நின்று கொண்டாள்.

அவன் பாட்டுக்கு ஆங்கிலத்தில் கத்தித் தீர்த்தான். இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘துரை இப்படியே புரியாத பாஷைலேயே திட்டுங்க. நான் சமாளிச்சிக்குவேன். தமிழ்ல திட்டுனாதான் எனக்கு அழுகை வரும்.’

திட்டி ஓய்ந்தவன்,

“உட்காரு” என்றான்.

படக்கென அமர்ந்து கொண்டு பயத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.

“குடிச்சு முடி” கப்பைக் காட்டினான்.

“நிஜமாவா துரை?” பயத்துடன் கேட்டாள்.

தலையை மட்டும் ஆமென ஆட்டினான்.

ஒரே மொடக்கில் வாயில் கவிழ்த்துக் கொண்டாள்.

“உள்ள போய் இன்னொரு கப் எடுத்துட்டு வா. இனிமே நீ குடிச்ச இந்த கப்பை எடுத்து தனியா வச்சுக்க. நீ வாய் வச்சது எனக்கு வர கூடாது, புரியுதா? ”

தலையை வேக வேகமாக ஆட்டியவள், இன்னொரு கப் எடுத்து வர உள்ளே சென்றாள்.

‘துரை ரொம்ப ஆச்சாரம் போல இருக்கே. அப்போ நாம கலக்கன டீய மட்டும் எப்படி குடிக்கறாரு, நாம செஞ்ச ரொட்டிய மட்டும் எப்படி சாப்புடறாரு? ஒன்னும் புரியலையே.’

கப் கொண்டு வந்தவள், இந்த முறை தளும்பாமல் ஊற்றிக் கொடுத்தாள். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை தலை குனிந்து அங்கேயே அமர்ந்திருந்தாள்.

ஏச்சு பேச்சு, அடி வாங்குவது எல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணம். கொஞ்ச நேரம் சோகமாக இருப்பாள், பின்பு தன்னையே தேற்றிக் கொண்டு சந்தோஷமாக வலம் வருவாள். அப்படி தான் எட்வர்ட் கத்தியதை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, பட்டு தந்திருக்கும் வடையை மொக்குவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதோடு அந்த ஸ்ட்ரோபேரி ஜாம் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தாள். யாரும் பார்க்காத போது அதை சுவைத்து விட வேண்டும் என திட்டம் வேறு மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

“எடுத்துட்டுப் போ”

விட்டால் போதும் என தட்டைத் தூக்கிக் கொண்டு சமயலறைக்குள் சென்று விட்டாள். அவளுடைய காபியையும், வடையையும் எடுத்துக் கொண்டவள் சமயலறையில் இருந்த கதவைத் திறந்து கொண்டு அதன் வாசலிலே அமர்ந்து கொண்டாள். வடையை ஒரு கடி தான் கடித்திருப்பாள், அதற்குள் தங்கைகள் ஞாபகம் வந்து விட்டது. அவர்கள் வீட்டில் தீபாவளிக்கும், அவள் தந்தையின் திவசத்துக்கு மட்டும்தான் வடை சுடுவார்கள். காந்தலெட்சுமி ஆசையாக சாப்பிடுவாள். நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என வேலைக்கு வந்தவளுக்கு உணவு உள்ளே இறங்க மறுத்தது. சாப்பாட்டை வீணாக்க கூடாது என கஸ்டப்பட்டு விழுங்கியவள், காபியைக் குடித்து உள்ளே தள்ளினாள்.

சற்று நேரம் அந்தி சாய்வதை வேடிக்கைப் பார்த்தவள், பட்டு சொல்லி இருந்ததை நினைவில் கொண்டு வந்து, வெளியில் காய்ந்த துணிகளை உள்ளே எடுத்து வந்து மடித்தாள். எட்வர்ட் ஹாலில் தான் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தான். அவன் வெளியே இருந்தாலும், அவன் அறைக் கதவை இரு முறை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். அங்கிருந்த மர அலமாரியில் அவன் துணிகளை அழகாக அடுக்கி வைத்தாள் அந்த வேலை எல்லாம் செய்த பழக்கம் இருந்தது அவளுக்கு. பட்டு சொன்ன மாதிரியே, குளியல் அறையில் இருந்த அவனது துணிகளை அள்ளிக் கொண்டவளுக்கு மீண்டும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

‘துரை முகரைய பார்க்கனுமே அப்போ, அப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே இருந்துச்சு. சேச்சே அவர குரங்குன்னு சொல்லக் கூடாது. எம்புட்டு வெள்ளையா அழகா இருக்காரு! என்ன, கோபம் தான் சட்டு சட்டுன்னு வருது. அப்போ மட்டும் மூக்கு மொளகா பஜ்ஜி மாதிரி சிவந்து போயிருது. இனிமே துரைய மனசுல திட்டறதுனா, மொளகா பஜ்ஜின்னு தான் திட்டனும். அதோட துரை கோபப் படாத மாதிரி நடந்துக்கனும். அவர் முன்னுக்கு அடிக்கடி போக கூடாது’ முடிவெடுத்தவள் அறைக் கதவை சாற்றி விட்டு அடுப்படியை தஞ்சம் அடைந்தாள்.

இரவு எட்வர்ட் தானாகவே, டைனிங் டேபிளுக்கு வந்து ஆப்பிள் பழங்களை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்று விட்டான். அங்கே இருந்த தொலைக்காட்சியை மூடியை திறந்து, அதை இயக்கிவிட்டு பார்க்க ஆரம்பித்தான்.

சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள் சுப்பு. கருப்பு வெள்ளையில் ஏதோ ஆங்கில படம். அவளுக்கும் பார்க்க ஆசையாக இருந்தது, ஆனால் அவன் முன்னே வரக்கூடாது என எடுத்த முடிவின் படி பின் கட்டிலேயே அமர்ந்து கொண்டாள்.

“ப்ளேக்கி”

சத்தம் கேட்டு ஓடி வந்து அவன் முன்னால் நின்றாள் சுப்பு.

“சவுண்ட் வை”

“அப்படினா என்ன துரை?”

தொலைக்காட்சியை சுட்டிக் காட்டியவன்,

“அங்கே திருகற மாதிரி ஒன்னு இருக்கே, அத சோத்து கை பக்கமா திருப்பு.”

அங்கே போய் நின்றவள், அவன் சொன்ன மாதிரியே செய்தாள். தொலைக்காட்சி பெட்டியை அவன் தொட விட்டதிலேயே அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. முகம் விகசிக்க அவனைத் திரும்பிப் பார்த்தாள் சுப்பு.

“என்ன?”

“இனிமே நானே தினமும், இப்ப துரை சொன்னீங்களே, அது என்ன? ஆஹ், சவுண்டு, அதை வைக்கவா?”

குதூகலமாக, கண்கள் பளபளக்க அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு சிரிப்பு வரப் பார்த்தது. அடக்கிக் கொண்டவன்,

“சவுண்ட் வைக்க விட்டா, எனக்கு என்ன குடுப்ப?” என கேட்டான்.

‘குடுக்க நம்ம கிட்ட என்ன இருக்கு? இத்து போன செறுப்பும், ஒட்டு போட்ட சட்டையும் தான் இருக்கு’

“என் கிட்ட ஒன்னும் இல்லையே துரை” பாவமாக முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டாள்.

“உன் கிட்ட நான் சிரிச்சுப் பேசுனா, வெளிய யார் கிட்டயும் சொல்லக் கூடாது! வாக்கு குடுப்பியா ப்ளேக்கி?”

“அட, அம்புட்டுதானே துரை! உங்க மேல சத்தியமா யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்” என அவன் அருகில் நெருங்கியவள், அமர்ந்திருந்த அவன் தலையில் பொட்டென ஒன்று வைத்தாள்.

“ப்ளேக்கி!” கத்தினான்.

“பலமா சத்தியம் பண்ணிட்டனா துரை? மன்னிச்சிருங்க” கண்கள் கலங்க தயாராகி இருந்தது.

“என்னைத் தொடாதேன்னு சொல்லி இருக்கேன்ல. இதுக்கு மேல இப்படி ஒரு தடவை நடந்தது, வீட்டுக்கு அனுப்பிருவேன். இப்போ டேமை மூடிட்டு, போய் எனக்கு டீ போட்டுட்டு வா”

“டேம்னா?”

“கண்ணைத் தொடைச்சிட்டுப் போன்னு சொன்னேன்” கோபமாக சொன்னான்.

வேக வேகமாக துடைத்தவள், சமயலறையில் புகுந்துக் கொண்டாள். திரும்பி வந்தவள், முன்பு செய்த மாதிரியே தேநீரை ஊற்றிக் கொடுத்தாள். அதைப் பார்த்தவுடனே, பயந்து விட்டான் எட்வர்ட்.

“என்னதிது?”

“டீயீ”

“உன்னை மாதிரியே கன்னங்கரேல்னு இருக்கு! இது டீன்னு நான் நம்பனுமா?” நக்கலாக கேட்டான்.

“அது வந்து துரை, அக்கா சொன்னாங்க, டீ பையை, சூடான பாலுல போட்டுட்டு பத்து வரைக்கும் எண்ணனும்னு. அப்புறம் எடுத்துடனும்னு”

“எண்ணனியா?”

தலையை சொரிந்தவள்,

“எனக்கு அஞ்சு வரைக்கும் தான் தெரியும். அதுக்கு மேல மறந்து போச்சு. ஞாபகம் பண்ணி பார்த்தாலும் வரல. அதான் டீ கொஞ்சம் கருப்பா போச்சு துரை”

சோகமாக சொன்னவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன்,

“சரி, எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என கிச்சனுக்குள் சென்றான். அவளை அருகில் நிறுத்தி வைத்து அவனே கற்றுக் கொடுத்தான்.

“எண்ண தெரியாட்டியும் பரவாயில்ல. இரண்டு கை விரலையும் மடக்கிக்க, அப்புறம் ஒன்னு ஒன்னா நீட்டு. பத்து விரலும் நீட்டிய உடனே, டீ பேக்கை வெளிய எடுத்துரு. புரியுதா ப்ளேக்கி?” தன்னை தொட வேண்டாம் என எரிந்து விழுந்தவன், அவள் கையை மடக்கி எப்படி எண்ண வேண்டும் என அவனே தொட்டு சொல்லிக் கொடுத்தான்.

“ஒன்னு, ரெண்டு தெரியலையே, நாளு கிழமையாச்சும் தெரியுமா?” கிண்டலாக கேட்டான்.

“அதெல்லாம் தெரியும். தமிழ் வாத்தியார் கொட்டி கொட்டி பாட்டாவே சொல்லிக் குடுத்துருக்காரு. பாடவா துரை?”

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவன்,

“சரி பாடு” என்றான்.

நேராக நின்றுக் கொண்டவள், கைகளை ஆட்டி ஆட்டி பாட ஆரம்பித்தாள்.

“ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்

திங்கள் கிழமை திருடன் கிடைத்தான்

செவ்வாய் கிழமை ஜெயிலுக்குப் போனான்

புதன் கிழமை புத்தி வந்தது

வியாழக் கிழமை விடுதலை ஆனான்

வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்

சனிக் கிழமை சாப்பிட்டு படுத்தான்

அப்புறம் அவன் கதை யாருக்கு தெரியும்”

என அபிநயம் பிடித்தவளை தன்னை மறந்து பார்த்திருந்தான் எட்வர்ட்.