IMTP–EPI 6

அத்தியாயம் 6

“ஏ புள்ள! எழுந்திரிடி. இன்னும் என்னத்த தூங்கறவ!”

“கொஞ்ச நேரம் ஆத்தா. தூக்கமா தள்ளுது”

“அது சரி! இன்னும் வீட்டு நினப்புல இருக்கறா போல இருக்கு.”

வேகமான உலுக்கலில் பதறி எழுந்து அமர்ந்தாள் சுப்பு.

தன் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருந்த புஷ்டியான உருவத்தைப் பார்த்தவள் கண்ணைக் கசக்கிக் கொண்டே,

“யாரு நீங்க?” என கேட்டாள்.

“நேத்து வந்தாளே பட்டு, அவள என்னன்னு கூப்பிட்ட?”

“அக்கான்னு”

“அப்போ நான் உனக்கு சின்னக்கா”

“ஓ, நீங்க தான் அந்த பீடையா?”

“என்னது பீடையா? யாருடி அப்படி சொன்னா? அந்த பட்டு, நசுங்கி போன தட்டு சொன்னாளா? என்னைப் பிடிச்ச ஜென்ம சனி அவ. என்ன தைரியம் இருந்தா என்னை பீடைன்னு சொல்லிருப்பா?” குரலில் செம்ம கடுப்பு.

“சின்னக்கா, வாய் தவறி சொல்லிட்டேன். அக்காட்ட சொல்லிருவீங்களா? என்னைக் கொட்டிருவாங்களே!” முகத்தில் பயம்.

“அவ பெரிய இவளா உன்னை கொட்டறதுக்கு? என்ன நினைச்சுட்டு இருக்கா மனசுல? அவளுக்கு மட்டும் தான் எல்லாத்துலயும் மொத உரிமையா? எனக்கு இல்லையா? இப்ப பாரு நானும் கொட்டுறேன்!”

சுப்புவின் மண்டையில் நங்கென கொட்டியவர்,

“எழுந்துரிடி தூங்குமூஞ்சு கழுதை. துரைக்கு குளிக்க தண்ணி கொண்டு போய் விளாவிட்டு வா. மணி அஞ்சு ஆச்சு, இன்னும் ஒய்யாரம். பல் பொடி எடுத்து வச்சிருக்கேன், போய் தேய்ச்சுக்கிட்டு, முகத்தையும் கழுவிட்டு வா!” என விரட்டினார். அவர் பரசுவின் இரண்டாவது சம்சாரம் பவுனம்மாள். பரசுவுக்கு மட்டும் பவுனு. (பட்டு, பவுனோட வளமா வாழுறான்யா மனுஷன்)

அறக்கப் பறக்க எழுந்த சுப்புவை மேலிருந்து கீழ் வரைப் பார்த்த பவுனு,

“ஏ புள்ள, உன் பேரு என்ன?” எனக் கேட்டார்.

“என் பேரு சுப்புலெட்சுமி சின்னக்கா.”

“உன்ன மாதிரியே உன் பேரும் அழகா தான் புள்ள இருக்கு. சரி, சுருக்கா ஓடு, வேலை தலைக்கு மேல இருக்கு”

வீட்டில் வேலை செய்பவர்களுக்காக வீட்டு வெளியே கொஞ்சம் தூரம் விட்டு சின்னதாக தகர தடுப்பு போல் குளியல் அறையும், கழிப்பறையும் அமைத்திருந்தார்கள். பட்டு ஏற்கனவே அதை இவளுக்கு காட்டிக் கொடுத்திருந்தார். இரவில் தனியாக போக பயந்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டாள் சுப்பு.

பல்பொடியையும் மாற்று உடையையும் எடுத்துக் கொண்டு அங்கே சென்று காலைக் கடன்களை முடித்தாள். பின் வேகமாக இரண்டு குவளை நீரை ஊற்றி குளியல் என பெயர் பண்ணிக் கொண்டாள். முடி வேறு கலைந்துக் கிடந்தது. சிக்கெடுத்து சீவ நேரமும் இல்லை. அவசரமாக கோணல் மாணலாய் இரட்டை சடைகளைப் போட்டுக் கொண்டவள், வெளியே வந்து சூரியனைக் கை எடுத்து கும்பிட்டுக் கொண்டாள்.   

விறகடுப்பில் தீ மூட்டி, தண்ணீரை கொதிக்க வைத்தவள், முன் தினம் போலவே தம் கட்டி வாளியைத் தூக்கிச் சென்றாள். எட்வர்டின் அறை கதவை இரு முறை தட்டியவள், பூனைப் போல உள்ளே நுழைந்தாள். அறை இன்னும் இருட்டாக தான் இருந்தது. இருட்டுக்கு கண்கள் பழகும் வரை பொறுத்தவள், மீண்டும் வாளியைத் தூக்கினாள்.

“அங்கயே வச்சிட்டுப் போ” அமைதியான அறையில் திடீரென கேட்ட குரலில் பயந்துப் போய் வாளியை பட்டென கீழே வைத்தாள் சுப்பு. சுற்றிலும் பார்த்தவள் கண்களுக்கு யாரும் தெரியவில்லை.

“இங்க, கட்டில்ல இருக்கேன்” என்றான் எட்வர்ட். அப்பொழுதுதான் கட்டிலில் படுத்திருக்கும் அவனைப் பார்த்தாள் சுப்பு.

நெஞ்சை நீவிக் கொண்டே

“திடீர்னு குரலு கேக்கவும் நான் பயந்துட்டேன் துரை” என்றாள்.

“ஹ்ம்ம்ம். தெரியுது!” குரலில் சிரிப்பிருந்ததோ!

இன்னும் கதவின் அருகில் தான் நின்றிருந்தாள் அவள்.

“இன்னிக்கு சொதப்பிடாம கணக்கா விளாவிருவேன் துரை”

“அங்கயே வச்சிட்டுப் போன்னு சொல்லுறேன்ல!”

“சரிங்க துரை”

திரும்பி வெளியே போகப் போனவளை,

“ப்ளேக்கி, இனிமே எப்பவுமே தண்ணி கொண்டு வந்து கதவு பக்கம் வச்சா போதும்” கட்டளையிட்டான்.

“சின்னக்கா தண்ணி வெளாவிட்டியான்னு கேட்டா என்ன சொல்லட்டும் துரை?”

“செஞ்சிட்டேன்னு சொல்லு” கண்களை மூடி சோம்பலாக படுத்த வாக்கிலேயே பேசிக் கொண்டிருந்தான்.

“ஐயோ, பொய்யி! நான் சொல்ல மாட்டேன்! சாமி கண்ண குத்திரும்”

“பொய் சொன்னா வாய தானே குத்தனும், உங்க சாமி ஏன் கண்ண குத்துது?”

“அட, ஆமால!”

“ஆமாவா, இல்லையா?”

“அது, தெரியலையே” குழம்பிப் போய் நின்றாள் சுப்பு.

“உங்க அம்மா, இங்க வரப்போ என்ன சொல்லி அனுப்புனாங்க ப்ளேக்கி?”

“அம்மா இல்ல, ஆத்தா!”

“சரி, ஆத்தா என்ன சொன்னாங்க?”

“துரை சொன்னப் பேச்ச கேட்டு நடக்கனும்னு”

“அப்போ நான் பொய் சொல்ல சொன்னா சொல்லனுமா, கூடாதா?”

“சொல்லனும் துரை”

“அப்போ, போய் நான் சொன்னத சொல்லு”

கதவைத் சாத்தி விட்டு ஓடிப் போனாள் சுப்பு.

சிரித்த முகத்துடன் எழுந்த எட்வர்ட், தானாகவே வாளியைக் குளியல் அறைக்குத் தூக்கி சென்று  குளித்து விட்டு வந்தான்.

பவுனு  இரண்டு முட்டைகளை நன்றாக அடித்து, அதில் வெங்காயம், மிளகு, உப்பு கலந்து ஆம்லேட் தயாரித்தார். மூன்று ரொட்டி துண்டுகளை வெண்ணெய் தடவி வாட்டியவர் ஒரு தக்காளியை பொடிசாக நறுக்கி ஆம்லேட் அருகே வைத்தார். அழகாக அனைத்தையும் பீங்கான் தட்டில் அடுக்கி டேபிளில் செட் செய்தார்.

அவர் செய்வதை எல்லாம் முட்டைக் கண்ணை திறந்து அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்பு.

“சின்னக்கா, இப்படிலாம் சாப்புடுவாங்களா?”

“துரைமாருலாம் இப்படி தான் சாப்புடுவாங்க. மதியத்துக்கு ஒரு நாளைக்கு கோழிய வாட்டி, உருளைக்கிழங்கு அவிச்சு வைச்சா, மறுநாளைக்கு மீன் செய்யனும். நம்ம மாதிரி சோறுலாம் ரொம்ப சாப்புட மாட்டாங்க. நம்ம துரை வாரத்துக்கு ஒரு நாளு மட்டும் கோழி கறி, சோறுன்னு சாப்புடுவாரு. அதுக்கே முகமெல்லாம் சிவந்து உப்பி போயிரும்”

எட்வர்டின் சிவந்து உப்பிய முகத்தை கற்பனை செய்து பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அவளை முறைத்த பவுனு,

“என்னடி கெக்கபிக்கன்னு சிரிப்பு? உனக்கு டீ ஆத்த சொல்லிக் குடுத்தாங்க தானே உங்கொக்கா. போய் டீ போடு போ” விரட்டினார்.

எட்வர்ட் சொல்லிக் கொடுத்த மாதிரியே, விரல்களை நீட்டி எண்ணியவள் இந்த முறை சரியாக டீ கலக்கியிருந்தாள்.

“நல்லாதான்டி போட்டுருக்க. நான் கூட உன்ன என்னமோன்னு நினைச்சேன். வேலை சுத்தம் தான். சரி வா. துரை சாப்பட வர நேரமாச்சு. பக்கத்துல யாரும் இருந்தா அவருக்குப் பிடிக்காது. எடுத்துப் போட்டு வச்சிருக்கற துணிய எல்லாம் சோப்பு போட்டு துவைச்சுப் போடு. நான் எங்க வீட்டுக்குப் போய் கோழிய புடிச்சுட்டு வரேன். மதிய சமையலுக்கு கழுத்தறுக்கனும். அதுக்கப்புறம் பசியாறலாம்”

“என்ன பசியாற இன்னிக்கி சின்னக்கா?”

“கேள்வரகு புட்டு.”

“இங்கயும் கேள்வரகா? ஐயே, எனக்குப் புடிக்காது!”

“அப்போ மகாராணிக்கு துரை சாப்புடற சாப்பாடு வேணுமா? அப்படியே குமட்டுலயே குத்திப் புடுவேன். வாழைப்பழம் வச்சிருக்கேன், மசிச்சு புட்டுல வச்சி சாப்புடு. உடம்புக்கும் நல்லது. இன்னும் நீ வயசுக்கு வரலன்னு பட்டு சொல்லுச்சு. இந்த சாப்பாடுலாம் இடுப்புக்கு பலம் புள்ள”

பட்டு மாதிரியே படபடவென பேசினாலும், பாசமாகவும்  நடந்துக் கொண்டார் பவுனு. 

துணியை ஊர வைத்த சுப்பு, பாவாடையை முட்டிவரை தூக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்தாள். துணி துவைப்பதற்கு என்றே கல் மேடை போல் வீட்டின் பின்னால் செய்து வைத்திருந்தனர். பக்கத்திலேயே மரக்கம்பங்கள் வைத்து துணி உலர்த்த கொடி கட்டி இருந்தனர்.

“அழகான பொண்ணு நான்

அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம்

தன்மானம் ஒன்னு தான்”

பாடியபடியே எட்வர்டின் சட்டையை சொப்பு போட்டு கும்மினாள். ப்ளேக்கி என அவன் அழைக்கும் சத்தம் கேட்டதும் சோப்புக் கையோடும், காலோடும்  அப்படியே உள்ளே ஓடினாள் சுப்பு. காலில் பட்டிருந்த சோப்பு நீர் வழுக்க, ப்ரேக் போட முடியாமல் அவனை இடித்தப் படி வந்து நின்றாள்.

“மன்னிச்சிருங்க துரை” சொல்லியவள் சமாளித்து தள்ளி நின்றுக் கொண்டாள்.

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

“பாவாடையை இழுத்து விட்டுட்டுப் போய் கை, கால் கழுவிட்டு வா”

நாக்கைக் கடித்துக் கொண்டவள், பட்டென பாவாடையை இறக்கி விட்டாள். ஓடிப் போய் கை, கால் கழுவி வந்தவள், மூச்சு வாங்க அவன் அருகில் வந்து நின்றாள்.

“உன் காலுல சக்கரம் கட்டி விட்டுருக்காங்களா? நடக்கவே மாட்டீயா ப்ளேக்கி?”

“எங்க ஆத்தாவும் அப்படிதான் சொல்லும். நான் நடக்கறத பார்த்தா எல்லாருக்கும் ஓடுற மாதிரி இருக்கு. நான் என்ன செய்யட்டும் துரை?”

“ஒன்னும் செய்ய வேணாம். இப்ப டீ ஊத்து”

கைகளைப் பாவாடையில் துடைத்துக் கொண்டவள், கப்பில் டீயை ஊற்றி அவன் அருகே நகர்த்தி வைத்தாள்.

அவன் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்த்தவாறே நின்றிருந்தவள்,

“துரை” என அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“தக்காளி சாப்புடவும் தான் நீங்க தக்காளி மாதிரியே பளபளன்னு அழகா இருக்கீங்களா?” என அதி முக்கியமான சந்தேகத்தை அந்நேரத்தில் கேட்டாள் சுப்பு.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்குப் புரை ஏறிவிட்டது.

“பார்த்து துரை!” இரும்பிக் கொண்டிருந்தவன் தலையை இரண்டு கையாலும் மாறி மாறி தட்டினாள்.

கிளாசில் இருந்த தண்ணீரைப் பருகி தன்னை சமன் படுத்த முயன்றான் எட்வர்ட்.

“இப்படியா சின்ன புள்ளை மாதிரி சாப்புடுவாங்க?” என கேட்டவளை முறைத்தவன்,

“இனிமே நான் சாப்பிடறப்ப, வாய மூடிக்கிட்டு பேசாம நிக்கனும். புரியுதா ப்ளேக்கி?” என மிரட்டினான்.

தலையைப் சரியென சோகமாக ஆட்டினாள் சுப்பு.

“அதான் இருமல் நின்னிருச்சுல்ல, என் தலையில இருந்து கைய எடு”

அசடு வழிந்தவாறே கையை எடுத்தவள்,

“மன்னிச்சிருங்க துரை. நீங்க அம்புட்டு சொல்லியும் நான் உங்கள தொட்டுட்டேன். இனிமே ரொம்ப கவனமா இருக்கேன்” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னாள் சுப்பு.

அதன் பிறகு அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாகவே அவன் அருகில் நின்றிருந்தாள்.

“போய் சாக்ஸ், ஷூ எடுத்துட்டு வா”

“அப்படினா துரை?”

“ஷூ, ஷூ!” காலை காட்டினான்.

“ஏன் துரை என்னை விரட்டறீங்க?” கண் கலங்கியது அவளுக்கு.

“ஏய் ப்ளேக்கி! இப்ப எதுக்கு டேம மறுபடியும் திறக்கற? காலுக்கு போடுவாங்களே ஷூ, அது என்ன ஹ்ம்ம்…சப்பாத்து யா அது தான். சப்பாத்தும் அதோட உறையும் எடுத்துட்டு வா.”

“ஓ சப்பாத்தா? நான் கூட என்னை விரட்டறீங்களோன்னு நினைச்சிட்டேன்.”

ஓடி போய் அவனது காலணியையும், காலுறையையும் எடுத்து வந்தாள். எட்வர்ட் வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

அவன் காலருகே கொண்டு போய் வைத்தவள்,

“துரை, உங்க சூ” என்றாள்.

“போட்டு விடு ப்ளேக்கி”

“தொடக்கூடாதுன்னு சொன்னீங்களே துரை, இப்ப எப்படி போட்டு விடுவேன்?” சந்தேகம் கேட்டாள் சுப்பு.

“தொடாம போடு”

மண்டியிட்டு அவன் முன்னே அமர்ந்தவள், காலுறையால் அவன் பாதத்தை தூசி தட்டுவது போல அடித்தாள். கீழுதட்டை உள் மடக்கி கடித்துக் கொண்டே காலுறையை பெரிதாக இழுத்து, விரித்து போட்டு விட முயன்றாள். அப்படியும் விரல் பட்டுவிட்டது.

நிமிர்ந்து எட்வர்டை பாவமாகப் பார்த்தவள்,

“துரை, கைப் பட்டுருச்சி. வேணும்னா ரெண்டு கொட்டு மெதுவா கொட்டிக்கிங்க” என்றாள்.

அவள் செய்த முயற்சிகளை எல்லாம் கண்ணில் சிரிப்புடனே பார்த்திருந்தான் எட்வர்ட்.

“சரி, ஷூ போடறப்ப பட்டா பரவாயில்ல. போட்டு விடு”

அவள் காலணியை போட்டுவிடவும், பரசு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“வாங்க சித்தப்பூ” எழுந்து நின்று வரவேற்றாள் சுப்பு.

“சித்தப்பூவா? இது எப்ப இருந்து புள்ள?”

“அக்கா தான் சித்தப்பூன்னு கூப்பிட சொல்லுச்சு.”

“உஷாருதான் உங்கக்கா! வேலைலாம் ஒழுங்கா செய்யறீயா? விளையாட்டுத்தனமா இருந்தா வீட்டுக்கு விரட்டி விட்டுருவேன்”

“அஸ்க்கு புஸ்க்கு! என்னை விரட்டிருவீங்களா நீங்க? துரை சொன்னா மட்டும்தான் இங்கிருந்து போவேன்.” சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

உள்ளே சென்றவளையே பார்த்திருந்த பரசுவை, எட்வர்டின் கணைப்பு சத்தம் கலைத்தது.

“போலாம் பர்சு”

அவர்கள் கிளம்பியதும், துணியைத் துவைத்துக் காயப்போட்டவள், சாப்பிட அமர்ந்தாள். சாப்பிட்டு முடித்தவுடன், காலையில் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும் போது வந்தார் பவுனு.

“ஏ புள்ள சுப்பு. கழுவிப் போட்டுட்டு நாய்க்கு சாப்பாடு போடு போ. ரொம்ப கிட்ட போகாத புள்ள.” எச்சரித்து அனுப்பினார்.

பிடித்து வந்திருந்த கோழி கழுத்தை அருவா முனையில் ஒரே சீவாக சீவியவர், ரத்தத்தை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு, கோழியை சுடு நீரில் முக்கினார். கோழி ரத்தத்தைப் குழம்பில் போட்டால், பரசு ஆசையாக சாப்பிடுவான். கோழியை சுத்தம் செய்ய ஆரம்பித்த நேரத்தில் தான், சின்னக்கா எனும் அலறல் சத்தம் கேட்டது. ரத்தக் கறையை அப்படியே சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார் பவுனு.

அங்கே கையை உதறிக் கொண்டு அழுதபடி நின்றிருந்தாள் சுப்பு.

“என்ன புள்ள ஆச்சு?” பதறிப்போய் கேட்டார் பவுனு.

“நாய் கடிச்சிருச்சுக்கா” இன்னும் அழுகை அதிகரித்தது.

அவள் கையைத் திருப்பி பார்த்தார். மணிக்கட்டில் பல் பதிந்திருந்தது.

ஜோனியோ,

‘லேசாதான் பாசமா கடிச்சேன். இவ ஓவரா படம் காட்டுறா’ என்பது போல பார்த்துவிட்டு தனது உணவை சாப்பிட ஆரம்பித்திருந்தது.

“சரி அழாம வா. சின்ன கடிதானே! கை வைத்தியம் பாக்குறேன்” என வீட்டின் முன்னே அழைத்து சென்றார். அங்கிருந்த எட்வர்டின் செறுப்பை எடுத்தவர், நாய் கடித்த இடத்தில் மூன்று முறை அடித்தார்.

“ஏன் கா செறுப்பால அடிக்கறீங்க?”

“நாய் கடிச்சா, அதோட முதலாளி செறுப்பால கடிச்ச எடத்துல அடிக்கனும் புள்ள. அப்பத்தான் விஷம் ஏறாது. இப்ப போய் ஒரு வாய் தண்ணி குடி. எல்லாம் சரியா போயிரும்” என சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.

இரவில் டீ குடிக்கும் போதுதான் சுப்புவை நன்கு கவனித்தான் எட்வர்ட். அமர்ந்தவாறே மணிக்கட்டை தேய்த்து விட்டவாறு இருந்தாள் அவள்.

“கைல என்ன ப்ளேக்கி?”

“உங்க நாய் கடிச்சிருச்சு துரை”

அவள் கையை இழுத்துப் பார்த்தவன்,

“உன்ன யார் ஜோனி கிட்ட போக சொன்னா?” கத்தினான்.

“சோறு வைக்கப் போனேன். தூரமா தான் நின்னேன். அப்பயும் சங்கிலியோட பாஞ்சி வந்து கடிச்சிருச்சு”

அவள் கையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றவன், அவன் ரூமில் கொண்டு போய் தான் நிறுத்தினான்.

“சட்டைய தூக்கு ப்ளேக்கி!”

“ஏன், எதுக்கு துரை?” நடுக்கமாக கேட்டாள் சுப்பு.

“இப்ப நீ தூக்கறயா, இல்ல நான் தூக்கவா?”