IMTP–EPI 7

அத்தியாயம் 7

 

எட்வர்டின் கோபத்தில் பயந்தவள், சட்டையை மேல் நோக்கித் தூக்கப் போனாள்.

“ஏ ப்ளேக்கி! நில்லு, நில்லு. ஏன் அப்படி தூக்கற?”

“நீங்கதான் சட்டையைத் தூக்க சொன்னீங்க!” கண்களில் நீர் நிறைந்திருந்தது.

“கண்ணைத் துடை இப்போ!” அதற்கும் சத்தம் போட்டான்.

வேகமாக துடைத்துக் கொண்டவள், அவன் முகத்தை கேள்வியாக நோக்கினாள். ஒரு கை இன்னும் சட்டையைப் பாதி தூக்கியபடி இருந்தது. அவனே சுப்புவின் சட்டையை கீழிறக்கி விட்டான்.

“சோத்து பக்க இடுப்புகிட்ட லேசா தூக்கனா போதும்”

அவனாகவே சட்டையை லேசாக தூக்கி, பாவாடையை கொஞ்சமாக இறக்கினான்.

“துரை சட்டைய தூக்குன்னு சொல்லவும் நான் பயந்துட்டேன் தெரியுமா?” சலுகையாக கோபித்துக் கொண்டாள் சுப்பு.

“எனக்கு தெரிஞ்ச தமிழ் இவ்வளவுதான் ப்ளேக்கி. நீ தான் புரிஞ்சிக்கனும். சட்டையை இப்படியே புடிச்சுகிட்டு கட்டில்ல உட்காரு”

மர அலமாரியைத் திறந்து அவனது மருந்துப் பெட்டியைத் தூக்கி வந்தான். அதைத் திறந்து ஒரு குப்பியை வெளியே எடுத்தவன், ஊசியில் அந்த மருந்தை ஏற்றினான்.

“நாய் கடிக்கு உள்ள மருந்து என் கிட்ட இல்ல ப்ளேக்கி. இது இன்பெக்சன் ஆகாம இருக்கறதுக்கு உள்ள ஊசி. நம்ம ஜோனிக்கு எந்த சீக்கும் இல்ல. இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்கு ஊசி போட்டுக்கலாம்”

ஊசியும் கையுமாக அவனைப் பார்த்ததும், சுப்புவின் கண்கள் பயத்தில் பெரிதாக விரிந்தன. தோளில் இருந்த அவன் கையைத் தட்டி விட்டவள் அவன் சுதாகரிப்பதற்குள் பாய்ந்து ஓடி கட்டிலின் மறுபுறம் நின்றுக் கொண்டாள்.

“ஏ ப்ளேக்கி! இங்க வா”

“நான் வர மாட்டேன் துரை. பயமா இருக்கு. இவ்ளோ பெரிய ஊசியா? அதுவும் என் இடுப்புக் கீழ குத்தப் போறீங்களா? வேணா துரை. வலிக்கும்!” பாவமாக மன்றாடினாள்.

“ஒழுங்கா இங்க வந்து ஊசிய போட்டுட்டுப் போ”

“நான் மாட்டேன்”

“நான் புடிச்சுட்டு வந்தேன், ரெண்டு ஊசியா போடுவேன்”

“இல்ல, இல்ல, வேணா! ஊசி வேணா துரை”

“வான்னு சொல்றேன்ல”

தலையை இடம் வலமாக ஆட்டினாள் சுப்பு. ஊசியை கட்டிலிலே வைத்தவன், அவளை நோக்கி எட்டு எடுத்து வைத்தான். அவன் வருவதைப் பார்த்தவள், கட்டிலைச் சுற்றி ஓட ஆரம்பித்தாள். இவனும் துரத்த ஆரம்பித்தான். நான்கு சுற்று சுற்றி இருப்பார்கள். மூச்சு வாங்க சுப்பு சற்று நிதானிக்கும் வேளையில், கட்டிலின் மேல் ஏறி சடாரென இந்தப் பக்கம் வந்தவன், அவளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“என் கிட்டயே ஓட்டம் காட்டறியா?”

கோழி அமுக்குவது போல அமுக்கியவன், கட்டிலில் அழுத்தி உட்கார வைத்தான்.

“ஐயோ விடுங்க, விடுங்க துரை!” ஓலமிட்டாள் சுப்பு.

“சத்தம் போடாதே ப்ளேக்கி! காது வலிக்குது எனக்கு. பேசாம இருந்தா சீக்கிரம் போட்டுருவேன். ஆட்டுனா வேற எங்கயாச்சும் குத்தி ரத்தம் ரொம்ப வரும்” குரலை உயர்த்தி மிரட்டினான்.

கத்தல், கூச்சல் எதுவும் செல்லாது என புரிந்துக் கொண்ட சுப்பு அழ ஆரம்பித்தாள். சிறிது நேரம் அவள் அழுவதையே பார்த்தவன், அவள் முகத்தை இடது புறம் திருப்பி அப்படியே நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“ஊசி போடல! சரியா? இனிமே அழாம இருப்பியா?”

சரி என தலையாட்டினாள். அவள் முகத்தை இடப்புறம் திருப்பி நெஞ்சில் அணைத்தவாறு வைத்திருந்தவன், அவள் உணரும் முன் கொஞ்சமாக குனிந்து வலப்பக்க இடுப்பின் கீழ் உள்ள சதைப் பகுதியில் ஊசியை போட்டிருந்தான். சிறிது நேரம் என்ன நடந்தது என புரியாமல் இருந்தவள், வலி எடுக்கவும் தான் அவன் ஊசி போட்டுவிட்டான் என புரிந்துக் கொண்டாள். சத்தம் போடாதே என அவன் சொல்லி இருந்ததால், உடல் மட்டும் குலுங்க கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.   

நெஞ்சில் இருந்து அவளை நிமிர்த்தி நகர்த்தியவன், காரியத்தில் கண்ணாக, ஊசிப் போட்ட இடத்தைத் துடைத்து விட்டான். பெட்டியில் இருந்து ஒரு க்ரீமை எடுத்து மணிக்கட்டிலும் பூசிவிட்டான்.

“அவ்வளவுதான் முடிஞ்சது. போ!”

“வலிக்குது துரை!”

“வலிக்குதா? நல்லா வலிக்கட்டும்! இனிமே ஜோனி பக்கம் போவியா?”

இல்லை என தலையாட்டினாள்.

“குட்! பர்சுவோட வைப்ஸ் ரெண்டு பேரும் சாப்பாடு வைக்கட்டும். நான் பர்சு கிட்ட சொல்லுறேன்.”

“அவங்க சாப்பாடு மட்டும் வச்சா, தண்ணி யாரு வைப்பா துரை?”

“ஏன், நீ போய் வை! அடுத்த முறை சதைய கடிச்சு இழுக்கட்டும். கேட்கற கேள்விய பாரு, ஸ்டுப்பிட்!”

“நான் வெளிய போறேன்!” கோபித்துக் கொண்டாள்.

அவன் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல் வெளியே வந்துவிட்டாள். சோகமாக அடுப்படிக்கு வந்தவள், அவளது உணவை சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகவே படுத்துவிட்டாள். அவ்வளவு நேரமும் கண்ணில் நீர் வழிந்து கொண்டுதான் இருந்தது. வலி கூட அடங்கியிருந்தது, ஆனாலும் ஊசியைப் பார்த்த பயம் இன்னும் போகவில்லை.

அறையில் இருந்து வெளியே வந்த எட்வர்ட், அவளைக் காணாது சமையல் அறைக்கு வந்தான். கண்ணில் நீர் வழிய, கையை தலைக்கு முட்டுக் கொடுத்து வெறும் தரையில் படுத்திருந்தவளைப் பார்த்தவன் சத்தம் செய்யாமல் திரும்பி சென்று விட்டான்.

“ப்ளேக்கி!”

அவனின் அழைப்பில் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து ஓடினாள் சுப்பு. ஒன்றும் பேசாமல் அவன் அருகில் போய் நின்றாள்.

“பேசமாட்டியா?”

மாட்டேன் என்பது போல தலையை இடம் வலமாக ஆட்டினாள். அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் எட்வர்டுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்.

“அப்போ சரி, நானே சவுண்ட் வச்சிக்கிறேன்”

“இல்ல, இல்ல! நானே வைக்கிறேன் துரை”

கோபம் காணாமல் போயிருந்தது, முகத்தில் சந்தோஷம் மீண்டிருந்தது.  

தொலைக்காட்சியின் ஒலியைக் கூட்டியவள், மீண்டும் உள்ளே செல்ல எத்தனித்தாள்.

“எங்க போற ப்ளேக்கி? இன்னிக்கு என் கூட உட்கார்ந்து நீயும் பாரு”

“நெஜமாவா துரை? நான் இந்தப் பொட்டியைப் பார்க்கலாமா?”

ஆமென தலையாட்டியவன், அவளை அமர சொன்னான். படக்கென அவன் காலடியில் சம்மணம் இட்டு அமர்ந்துக் கொண்டாள் சுப்பு. ஏதோ ஆங்கில படம். இவளுக்குப் புரியாவிட்டாலும், அவர்களின் நடை, உடை, பாவனைகளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

காதை மட்டும் தொலைக்காட்சியில் வைத்திருந்த எட்வர்ட், கையிலிருந்த புத்தகத்தில் கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டிருந்தான். படம் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். விலுக்கென நிமிர்ந்தவன்,

“போதும் ப்ளேக்கி, போய் படு” என்றான் அவசரமாக.

“இருங்க துரை, அந்த அண்ணன், அக்காகிட்ட என்னமோ சொல்லுறாரு. இத மட்டும் பார்த்துட்டுப் போறேன்”

“இத மட்டும் தான் நீ பார்க்கக் கூடாது! சீக்கிரம் போ” விரட்டினான்.

எழுந்துக் கொண்டவள், அவளது ராஜாங்கமான அடுப்படிக்கு நடையைக் கட்டினாள்.

‘அப்படி என்னதான் இருக்கு, நம்மள பார்க்க வேணாம்னு விரட்டறாரு துரை?’

ஆர்வம் மேலிட திரும்பிப் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதானது. அதில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதட்டை ஒட்டி வைத்துக் கொண்டிருந்தனர்.

பாதி வழியில் அப்படியே நின்றவள்,

‘இந்த அண்ணன் ஏன் அக்கா உதட்டுக்கு ஒத்தடம் குடுத்துட்டு இருக்காரு?’ என ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.

முக்கியமான அந்த ஆராய்ச்சிக்கு எந்த பதிலும் கிடைக்காததால் கண்ணைத் தொலைக்காட்சியில் இருந்து திருப்பியவள், அப்பொழுதுதான் தன்னை கோபத்துடன் முறைத்தவாறு அமர்ந்திருந்த எட்வர்டை கவனித்தாள்.

“போய்ட்டேன்” என கத்தியபடியே ஓடி மறைந்தாள் சுப்பு.

“எத செய்ய வேணாம்னு சொல்றோமோ அத தான் செய்வாங்க. டேம்ன் க்ரியோசிட்டி(damn curiosity)” முனகியவன், தொலைக்காட்சியை அணைத்துவிட்டுப் போய் படுத்தான்.

வேறு எந்த அசம்பாவிதமும் இல்லாமல், வேலைகளைக் கற்று தேறிக் கொண்டிருந்தாள் சுப்பு. தனியாகவே காலை உணவை தயாரிக்கும் அளவு முன்னேறியிருந்தாள். மதிய உணவை இன்னும் பட்டு, அல்லது பவுனு வந்து சமைத்துக் கொடுப்பார்கள். ஏதோ ஒரு முறைதான் எட்வர்ட் வீட்டுக்கு வந்து மதிய உணவு உண்ணுவான். மற்ற நேரங்களில் பரசு வந்து வாங்கி செல்வார்.

“அடியே சுப்பு!” சமைத்துக் கொண்டே காய் நறுக்கிக் கொண்டிருக்கும் சுப்புவை அழைத்தார் பட்டு.

“சொல்லுங்கக்கா”

“நாளைக்கு திடல்ல படம் போடுறாங்க புள்ள. எங்க கூட வரீயா?”

“ஐ, படமா! வரேன்கா, வரேன். என்ன படம் கா? எம்ஜியாரு படமா?”

“இல்ல புள்ள. சிவாஜி படமாம். பராசக்தி”

“சாமி படமா?”

“அட யாருடி இவ ஒருத்தி! என்னைய கேட்டா எனக்கு என்ன தெரியும்? நானும் நாளைக்குத் தான் அந்தப் படத்தையே பார்க்கப் போறேன். படம் ஏழு மணிக்குப் போட்டுருவாங்க. நான் புள்ளைங்கள விட்டு திடல்ல பாய் போட்டு இடம் புடிக்க சொல்லுறேன். உங்க சின்னக்கா கொண்டக்கடலை அவிச்சு எடுத்துட்டு வருவா. நீ தண்ணி மட்டும் எடுத்துட்டு வா போதும்”

“அக்கா, எனக்கு பரபரன்னு இருக்கு. எப்பக்கா விடியும்? நான் வேணும்னா இப்ப போய் தூங்கிறவா? சீக்கிரம் விடிஞ்சிரும்!”

நங்கென ஒரு கொட்டு வைத்த பட்டு,

“உனக்கு மூளைக்கு பதிலா, களிமண்ண போட்டு அனுப்பிருக்காருடி கடவுள். நீலாம் எப்படி கல்யாணம் காட்சி பண்ணி, புள்ள குட்டிய பெத்து வளக்கப் போறியோ போ” திட்டித் தீர்த்தார்.

தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“ஏன்கா நீ, சின்னக்கா, சித்தப்பூ, துரை எல்லாரும் என்னைய திட்டிட்டே இருக்கீங்களே, நான் எதுக்கும் லாயக்கு இல்லையா?” குரல் கம்ம, கண்கள் கலங்க கேட்டாள் சுப்பு.

செய்யும் வேலையை விட்டுவிட்டு அவளை அணைத்துக் கொண்டார் பட்டு.

“என் வீட்டுப் புள்ளைங்கள திட்டற மாதிரி திட்டிப்புட்டேன். இதுக்கு கண்ண கசக்குவியா நீ? மண்டு, மண்டு! உன்னை மாதிரி வெள்ள மனசு யாருக்குப் புள்ள இருக்கு! சொக்கத் தங்கம்டி நீ!” சுப்புவின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தார் பட்டு.

“அட பாரேன்! படக்குன்னு நெட்டி முறியுது. நான் சொன்னது அம்புட்டும் நெஜம்டி”

வாடி இருந்த முகம், பளிச்சென மலர்ந்தது சுப்புவுக்கு.

ஞாயிற்றுக் கிழமை வேகவேகமாக வேலைகளை முடித்தவள், தலையை சிக்கெடுத்து சீவி அழகாக பின்னிக் கொண்டாள். அவளிடம் இருந்த சிகப்பு வர்ண ரிப்பனை இரண்டு ஜடைகளுக்கும் கட்டிக் கொண்டாள். கொட்டாங்குச்சியில் அவள் ஆத்தா செய்து தந்திருக்கும் கருப்பு பொட்டை நெற்றிக்கு இட்டுக் கொண்டாள். கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டவள், எட்வர்டின் முன் வந்து நின்றாள்.

“துரை” சம்பள கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்துப் பார்த்தான்.

“நல்லா இருக்கேனா?”

பளிச்சென தன் முன் நின்றிருந்தவளை ஆழ்ந்து நோக்கியவன்,

“நல்லா தான் இருக்க! எங்க கிளம்பிட்ட ப்ளேக்கி?” என கேட்டான்.

“உங்களுக்குத் தெரியாதா? இன்னிக்கு படம் போடுறாங்க. நான் அக்கா கூட போறேன்”

“என் கிட்ட சொல்லிட்டுப் போறியா? இல்ல போகட்டுமான்னு சம்மதம் கேக்கறியா?”

இது என்ன கேள்வி என்பது போல முழித்தாள் சுப்பு.

“நீ என் வீட்டுல இருக்க ப்ளேக்கி! உன்னோட பாதுகாப்புக்கு நான் தான் பொறுப்பு. இனிமே எப்ப இந்த வீட்ட விட்டு வெளிய காலடி வைக்கனும்னாலும் என் கிட்ட சம்மதம் கேட்கனும். புரியுதா?” குரலில் கண்டிப்பு இருந்தது.

அந்தக் குரலில் மிரண்டவள், சரியென வேகவேகமாக தலை ஆட்டினாள். அவளது ரிப்பன் கட்டிய சடையும் சேர்ந்து ஆடியது. அதற்கு மேல் எட்வர்டுக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை.

“சரி, போ!”

விட்டால் போதும் என ஓடிவிட்டாள் சுப்பு. பட்டு, பவுனு குடும்பத்துடன் ஒரு மணி நேரம் நடந்தே திடலுக்குப் போனாள். ஏற்கனவே அவர்களின் பிள்ளைகள் இடம் பிடித்து வைத்திருந்ததால், நேராக அங்கே சென்று அமர்ந்துக் கொண்டார்கள். எஸ்டேட்டே திரண்டு வந்திருந்தது. அங்கங்கே குடிமகன்களால் சண்டை சச்சரவு வேறு. பெரிய வெள்ளை திரை விரித்து அந்தக் காலத்து ப்ரொஜெக்டரால் படம் திரையிடப்பட்டது. ஆரம்பித்தவுடன், ஒரே கூச்சல், கும்மாளம். அங்கிருந்த பெரியவர் ஒருவர்,

“சத்தம் போடாம பாருங்கப்பா. ஒன்னும் விளங்கல” என சத்தம் போடவும் தான் கூச்சல் அடங்கியது.

சுப்புவுக்கு அவ்வளவு பரவசம். இது தான் அவள் பார்க்கும் சிவாஜியின் முதல் படமும் கூட. சொக்கிப் போய் அமர்ந்திருந்தாள். படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் மீண்டும் சலசலப்பு.

“டீ பவுனு! துரை வந்துருக்காரு புள்ள படம் பார்க்க. இதென்ன அதிசயமா இருக்குது!” வியந்தார் பட்டு.

அவர்கள் பேச்சில் சுப்புவும் திருப்பிப் பார்த்தாள். பரசு எட்வர்டுக்கு நாற்காலியைப் போட்டு அமர வசதி செய்து கொடுப்பதுதான் கண்ணில் பட்டது. அதற்குள் ஓ ரசிக்கும் சீமானே என பாடல் வரவும் அவள் கவனம் முழுவதும் திரையில் பதிந்தது. மெய் மறந்து வாய் பிளந்து ஆட்டத்தை கவனித்தாள் சுப்பு. நடிப்பவர்கள், சிரிக்கும் போது சிரித்து, அழும் போது அழுது அப்படியே படத்தோடு ஒன்றிப் போனாள் அவள். படம் முடிந்து கூட அதன் தாக்கம் அவளை விட்டுப் போகவில்லை.  

எல்லோரும் எழுந்து கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்கள் அருகே வந்த பரசு,

“ஏ புள்ள சுப்பு, நீ துரை கூட பங்களாவுக்குப் போயிரு. நாங்க இப்படியே கெளம்புறோம்” என அவளை அழைத்துச் சென்று ஜீப்பின் பின்புறம் அமர்த்தினான். அவள் அமர்ந்ததும் எட்வர்ட் ஜீப்பைக் கிளப்பினான்.

“யோ! ஏன்யா அந்தப் புள்ளய துரை கூட அனுப்பி வச்ச? கூப்டு வந்த நமக்கு கூப்டு போக தெரியாதா?” கடிந்துக் கொண்டார் பட்டு.

“அதானே! நல்லா கேளு பட்டு” பின் பாட்டு பாடினார் பவுனு. என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும், பரசுவை தாளிக்கும் போது மட்டும் இருவரும் இணைந்துக் கொள்வார்கள்.

“அவரு வீட்டுக்குப் போய் படுக்கறது இல்லையா? இந்தப் புள்ள ஆடி அசைஞ்சி ஒரு மணி நேரம் கழிச்சி வர வரைக்கும் அவரு டீக்கு காத்துக் கிடப்பாரா? புரியாம பேசிக்கிட்டு” குரலை உயர்த்தினார் பரசு.

“மாமோய்! அந்தப் புள்ளய தனியா அங்க விட்டு வைக்க பயமா இருக்குயா. பாக்கியம் வேற எப்ப வரும்னு தெரியல. நம்ம வீட்டுக்கு ராத்திரி கூப்டு போயிரலாம்னாலும் உன்னை நம்ப முடியல” நொடித்துக் கொண்டார் பட்டு.

“நல்லா சொல்லு, நல்லா சொல்லு! ரப்பர் மரத்துக்கு சேலைய சுத்துனா கூட மூனு மணி நேரம் விடாம பாக்கும் இந்த ஆளு” மோவாய்கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டார் பவுனு.

“அட போங்கடி! உங்க உங்க ரெண்டு பேர வச்சிக்கிட்டே மாரடிக்க முடியல. இதுல இன்னொன்னு வேறயா! எதுக்குடி பட்டு பயம்? துரை நம்ம இனத்தல்லாம் பார்வையால கூட தீண்டமாட்டாரு. தேவை இல்லாம பயந்துக்கிட்டு. விரசா நடங்க. ஆமா, இன்னிக்கு யாரோட முறை?”

“நான் தான்” சொன்னார் பவுனு.

“ஏ, என்னடி ஆட்டம் காட்டுறயா? நேத்து எனக்கு மேலுக்கு முடியலைன்னு நீ தானே புள்ள போன?” எகிறினார் பட்டு.

“உனக்கு மேலுக்கு முடியாம போயிட்டா அதுக்கு நான் என்ன செய்ய? அது உன் தலை எழுத்து! இன்னிக்கு என்னோட முறை, சொல்லிப்புட்டேன்” சிலிர்த்துக் கொண்டார் பவுனு.

குடுமிப்புடி சண்டையாவதற்குள் இருவர் தோளிலும் கைப் போட்டு சமாதானப்படுத்தி அணைத்தவாறு நடத்தி சென்றார் பரசு.

வீட்டிற்குள் நுழைந்ததும் சுப்பு, நேராக அடுப்படிக்கு சென்று டீ போட்டுக் கொண்டு வந்தாள். எட்வர்டுக்கு டீ ஊற்றிக் கொடுத்தவள், கனவில் இருப்பதைப் போலவே எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.

“ப்ளேக்கீ!”

“ஹ்ம்ம்… என்ன துரை?”

“என்ன ஒரு மாதிரியா இருக்க?”

“இன்னிக்கு படம் பாத்தீங்கல்ல துரை, அதுல வந்துச்சே புது பெண்ணின் மனச தொட்டுப் பாட்டு, நல்ல இருந்துச்சுல்ல?”

அவனுக்குப் படமே புரியவில்லை இதில் பாட்டு எங்கே விளங்கி இருக்கப் போகிறது.

“எனக்குத் தெரியலையே ப்ளேக்கி. எல்லா பாட்டும் எனக்கு ஒன்னா தான் தெரிஞ்சது”

“போங்க துரை! அவ்ளோ நல்ல பாட்டு அது, இப்படி சொல்லறீங்க. அந்தப் பாட்டு எனக்கு அப்படியே மனப்பாடம் ஆயிருச்சு தெரியுமா!”

“ஆமாவா? சரி பாடு கேப்போம்”

“பாடிக்கிட்டே ஆடவா? படத்துல கதாநாயகி நின்னுக்கிட்டே ஆடனாங்க. நான் சுத்தி சுத்தி ஆடறேன் பார்க்கறீங்களா? எங்க சின்னாத்தா என்னை ஆடவே விட மாட்டாங்க. அதென்னா பொட்டக் கழுதைக்கு கும்மாளம்னு தொடையைப் புடிச்சு திருவிருவாங்க” எப்பவோ கிள்ளியது இப்பொழுது வலிப்பது போல முகத்தை சுளித்தாள் சுப்பு.

அவள் முகபாவனையில் புன்னகை எட்டிப் பார்த்தது எட்வர்டுக்கு.

“சரி ஆடு ப்ளேக்கி, நான் கிள்ள மாட்டேன்”

சந்தோஷமாக எழுந்து நின்றவள், பாடிக் கொண்டே சுழன்று ஆட ஆரம்பித்தாள்.

“என்னை சுத்தி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயிரிடுவாய்
அறுக்க யாராலும் ஆகதையா
அன்பு கயிரிடுவாய்
அறுக்க யாராலும் ஆகதையா

புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க”

ஆடிவிட்டு மூச்சு வாங்க அவன் அருகில் அமர்ந்தவள்,

“நல்லா ஆடுனனா துரை?” என ஆசையாக கேட்டாள்.

அவனிடமிருந்து பதிலே இல்லை.

“சொல்லுங்க துரை!”

கை நீட்டி அவள் கன்னத்தை வருடியவன்,

“ரொம்ப நல்லா ஆடுன ப்ளேக்கி. இனிமே எனக்கு மட்டும் தான் ஆடிக் காட்டனும். புரியுதா?” என கேட்டவன் டீயைக் கூட குடிக்காமல் ரூமுக்குள் புகுந்து கொண்டான்.