IMTVP8

IMTVP8

அத்தியாயம் 8

சுப்பு வேலைக்கு வந்து ஒரு மாதம் சில வாரங்கள் ஓடி இருந்தன. இப்பொழுதெல்லாம் இரவு நேர டீ இருவருக்கும் பொதுவாக ஆகிவிட்டது. அவளது கப்பில் டீ ஊற்றி குடித்தபடியே எட்வர்டின் காலடியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதும் தான்.

எட்வர்ட் கணக்கு வழக்குகளையோ, படிப்பதையோ செய்துக் கொண்டிருக்க இவள் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சார்லி சாப்ளின் படம் ஓடினால், எட்வர்டே அழைத்து அவளை அருகே அமர்த்திக் கொள்வான். கைத்தட்டி குதூகலித்து அவள் பார்ப்பதை, புன்னகையுடன் இவன் பார்த்திருப்பான்.

அன்றும் அப்படிதான் இருவரும் டீ கப்புகளுடன் அமர்ந்திருந்தனர். அவள் கையில் எப்பொழுதும் போல ஸ்ட்ராபேரி ஜாம். அந்த ஜாம் அவளுக்கே அவளுக்காக கிடைத்தது இன்னொரு கதை.

இவள் வந்த புதிதில் யாரும் இல்லாத வேளைகளில் எல்லாம் அந்த ஜாம் பாட்டிலுள் ஒரு விரல் விட்டு அள்ளி, நாக்கில் வைத்துக் கொள்வாள். மிட்டாய் சாப்பிடுவது போல, ஜாம் இருக்கும் விரலை சப்பிக் கொண்டிருப்பதில் அப்படி ஒரு குஷி அவளுக்கு. அவள் கை விட்ட ஜாம் தான் எட்வர்டுக்கும் ரொட்டியில் தடவிக் கொடுக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரு நாள் இரவு எட்வர்ட் தண்ணீர் எடுக்க அடுப்படிக்கு திடீரென வந்தப் போது, வாயில் ஆட்காட்டி விரலை விட்டுக் கொண்டு திரு திருவென முழித்தப்படி நின்றிருந்தாள் இவள். ஏன் இப்படி நிற்கிறாள் என அவன் கூர்ந்து நோக்கவும் கண்களில் தானாகவே அருவி இறங்க ஆரம்பித்திருந்தது.

“ப்ளேக்கி! இப்ப எதுக்கு அழுகற?”

வாயிலிருந்த விரலை எடுக்காமலே,

“இனிமே இப்படி செய்ய மாட்டேன் துரை” என அழ ஆரம்பித்தாள் சுப்பு.

“என்ன செய்ய மாட்டே?”

“சிவப்பு மிட்டாய திருடி சாப்பிட மாட்டேன்.” இன்னும் விரல் வாயில் தான் இருந்தது.

அப்பொழுதுதான் மேசையில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஜாம் பாட்டிலைப் பார்த்தான் அவன்.

திருட்டுத்தனம் செய்து விட்டு தாயிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் குழந்தைப் போலவே நின்றிருந்தாள் சுப்பு.

எட்வர்ட் அவளை நெருங்கி வரவும், எங்கே அடிக்கப் போகிறானோ என பயம் வர கண்ணீர் இன்னும் மடமடவென இறங்கியது. அருகில் வந்தவன், அவள் வாயில் இருந்த விரலை வெளியே எடுத்து விட்டான். உதட்டோரம் ஒட்டி இருந்த ஒரு துளி ஜாமை தன் விரலால் துடைத்து விட்டவன்,

“இதுக்கு தான் அழறியா? கண்ணை துடை ப்ளேக்கி” என்றான்.

அவனுக்கு கோபம் இல்லை என அறிந்துக் கொண்டவள், அவசரமாக கண்களைத் துடைத்தாள்.

“இத்தனை நாளா கைய வச்சி எச்சி வேற பண்ணிட்டு அதையே ப்ரேட்ல தடவி எனக்கு குடுத்துருக்க!” குழந்தையை மிரட்டுவது போல மிரட்டினான்.

பட்டென அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்,

“மன்னிச்சிக்குங்க துரை” என்றவள் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தாள்.

பத்து போடும் வரை அமைதியாக கைக்கட்டிப் பார்த்திருந்தவன்,

“போதும் ப்ளேக்கி” என்றான்.

“துரைக்கு கோவம் போயிருச்சா?”

“இன்னும் இல்ல”

மீண்டும் அழ தயாரானவளை,

“இப்ப மறுபடி அழுத, அடிப்பேன்” என சொன்னான்.

“பொம்பளைங்கள அடிக்க மாட்டேன்னு சொன்னீங்களே துரை” பாவமாக கேட்டாள்.

“பொம்பளைங்கள அடிக்க மாட்டேன். உன்னை மாதிரி ராங்கி செய்யற பாப்பாவ அடிக்கலாம்”

அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள் சுப்பு. (கோபித்துக் கொண்டாளாம்)

“ப்ளேக்கி!”

“ஹ்ம்ம்”

“முன்னுக்கு திரும்பு”

முடியாது என தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டினாள்.

“பேச மாட்டியா?”

ஆமென தலை அசைப்பை மட்டும் கொடுத்தாள் சுப்பு.

“அப்போ பரவாயில்ல. ஜாம் உனக்கே கொடுத்தரலாம்னு நினைச்சேன். விடு, நீதான் பேச மாட்டிக்கிறீயே”

வேகமாக முன்னே திரும்பியவள்,

“பேசுவேன், பேசுவேன்” என அவசரமாக சொன்னாள்.

சிரிப்பு எட்டிப் பார்த்தது எட்வர்டுக்கு. பாட்டிலைக் காட்டியவன்,

“இத நீயே எடுத்துக்க ப்ளேக்கி. எனக்கு புதுசு எடுத்து வை. அதுலயும் கையை வச்சா எனக்கு நிஜமா கோபம் வரும். புரியுதா?” என்றான்.

“சரி துரை” என சந்தோஷமாக தலையை ஆட்டினாள். அன்றிலிருந்து இரவு டீக்கு ஜாமை தொட்டு வாயில் அதக்கிக் கொள்வது பழக்கமானது சுப்புவுக்கு. எட்வர்டும் கண்டுக் கொள்ள மாட்டான்.

தொலைக்காட்சியில் ஒரு கண்ணும், எட்வர்டின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தவள்.

“துரை” என கெஞ்சலாக அழைத்தாள்.

நிமிர்ந்து பார்த்தவன்,

“என்ன ப்ளேக்கி?” என கேட்டான்.

“கோயில்ல காப்பு கட்டிடாங்களாம், அக்கா சொன்னாங்க. நான் திருவிழாவுக்கு போகவா?” சம்மதம் கேட்டாள். அவன் தான் எங்கு போவதென்றாலும் சம்மதம் கேட்க வேண்டும் என கண்டித்து சொல்லி இருக்கிறானே!

மற்ற எஸ்டேட்டுகளை விட இங்கே திருவிழா பிரமாதமாக இருக்கும். எட்வர்ட் பாதி செலவை ஏற்றுக் கொள்ள மீதியை மக்களிடமே வசூலித்துக் கொள்வார்கள். தீமிதி, தேர் உலா, பால் குடம் எடுப்பது என களை கட்டும். திருவிழா முடியும் நாள் அன்று, வழுக்கு மரம் ஏறும் போட்டி, கோலம் போடும் போட்டி, சின்ன பிள்ளைகளுக்கு சாக்கு ஓட்டம் இப்படி எஸ்டேட்டே அல்லோலகல்லோல படும். மாமன், மச்சான் மீது மஞ்சள் நீர் ஊற்றுகிறேன் என ஊர் குழந்தைகளில் இருந்து கிழடு கட்டைகள் வரை தெரு தெருவாக ஓடுவார்கள். இதையெல்லாம் பட்டுவும், பவுனுவும் வாய் ஓயாமல் இவளிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டனர். அதனாலேயே இவளுக்கும் ஆசையாக இருந்தது.

அவள் அப்பா இருந்த வரை அவர் தோள் மேல் அமர்ந்து அவர்கள் எஸ்டேட் தீமிதியைப் பார்த்தவள் தான் சுப்பு. நாக்கில் அழகு குத்தி, அருவாள் மேல் ஏறி நடக்கும் சாமி ஆடுபவர்களை அவர் நெஞ்சில் ஒளிந்துக் கொண்டே எட்டி எட்டிப் பார்ப்பாள் அவள். அவர் போனதில் இருந்து, ஆத்தாக்கள் இருவருமே, நல்ல நாள் பெருநாள்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள்.

தாடையைத் தடவி யோசித்த எட்வர்ட்,

“நீ போக வேணாம் ப்ளேக்கி” என்றான்.

முணுக்கென கண்ணீர் கண்களை நிறைத்தது சுப்புவுக்கு.

“ஆத்தாவும் என்னை போக விடாது. இப்ப துரையும் போக விட மாட்டிக்கிறீங்க. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” கண்ணீர் குரலில் கேட்டவள் எழுந்து போய் அவள் இடத்தில் சுருண்டு படுத்துக்  கொண்டாள்.

அவள் பின்னாலேயே எழுந்து வந்த எட்வர்ட், தேம்பி கொண்டிருக்கும் அவளையே பார்த்தபடி நின்றான்.

“ப்ளேக்கி!”

குப்புறப் படுத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது அவனுக்கு.

“சரி, போ!” சம்மதம் சொன்னான்.

படக்கென எழுந்து அமர்ந்தவள்,

“நெஜமாவா துரை?” கண்களில் எதிர்பார்ப்பை தாங்கி கேட்டாள்.

ஆமென அவன் தலை ஆட்டவும் எழுந்துக் கொண்டவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“எனக்கு இப்போத்தான் சந்தோசமா இருக்கு துரை” மகிழ்ச்சியில் அவன் கையைப் பிடித்துக் கொண்டே குதித்தாள்.

கையை உருவிக் கொண்டவன்,

“தொடாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா ப்ளேக்கி?” கடிந்துக் கொண்டான். அவன் திட்டியது கூட உறைக்கவில்லை. அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.

திருவிழா நாளும் அழகாக புலர்ந்தது. பட்டு அவரது பழைய சேலையை வெட்டி தன் கையாலேயே இவளுக்கு ஒரு பாவாடை சட்டை தைத்துக் கொடுத்திருந்தார் திருவிழாவுக்காக. சுத்த பத்தமாக குளித்து அந்த வெளிர் நீல நிற பாவாடை சட்டையை அணிந்துக் கொண்டு தனது அக்மார்க் அலங்காரங்களுடன் கிளம்பி எட்வர்ட் முன்னே வந்தாள். ஞாயிற்றுக் கிழமை ஆதலால் அவன் வீட்டில் தான் இருந்தான்.

“துரை நல்லா இருக்கேனா?” ஒரு சுற்று சுற்றிக் காட்டினாள்.

தலையை மட்டும் ஆட்டியவன்,

“பர்சு வீட்டு ஆளுங்க கூடவே பத்திரமா இருக்கனும் ப்ளேக்கி! தனியா எங்கயும் போக கூடாது. புரியுதா?”

அவள் திருவிழா செல்ல சம்மதம் சொன்னதிலிருந்து அடிக்கடி சொல்வதுதான். சலிக்காமல் மீண்டும் சொன்னான். பரசுவிடமும் பட்டும் படாமலும் அவளைப் பார்த்துக் கொள்ள சொல்லி இருந்தான். எட்வர்டுக்கு இந்த மாதிரி மக்கள் குவியும் இடம் கொஞ்சம் அலர்ஜி. கொஞ்சம் என்ன ரொம்பவே அலர்ஜி. உருமி சத்தம், நாதஸ்வர மேள தாளம், கூச்சல், வியர்வை வாடை, இந்திய(அடிமை) மக்கள் இவை எல்லாம் அவனுக்கு அறவே ஒத்துக் கொள்ளாத விஷயங்கள். முடிந்த அளவு இதில் எல்லாம் ஒதுங்கி இருந்துக்  கொள்வான்.

“ஐயே துரை! நான் என்ன பச்ச பாப்பாவா? பத்திரமா இருப்பேன்”

‘பச்ச பாப்பாவ இருந்தா தான் பரவாயில்லையே. உன் கிட்ட பேசனா மட்டும்தானே நீ இன்னும் பச்ச பாப்பான்னு மத்தவங்களுக்குப் புரியும்’ நினைத்துக் கொண்டவன் மீண்டும்,

“பத்திரம் ப்ளேக்கி” என்றான். ஜடை ஆட சரி என்றவள் கிளம்ப எத்தனித்தாள்.

“நில்லு!” என்றவன் பேண்ட் பாக்கேட்டில் இருந்து அவனது வாலட்டை எடுத்து அப்பொழுது வழக்கில் இருந்த ஐந்து வெள்ளியை அவள் கையில் திணித்தான்.

“எதாச்சும் வாங்கி சாப்பிட்டுக்க ப்ளேக்கி”

“ஐயே துரை! இது என்ன தாளு குடுக்கறீங்க? எனக்கு வட்டமா இருக்குமே அந்த காசு குடுங்க”

“அத விட இது இன்னும் மதிப்பு கூட ப்ளேக்கி”

“இல்ல இது வேணா! ஆத்தா பத்து காசு தான் குடுக்கும். அதுக்கு தான் குச்சி ஐஸ் தருவாங்க. அதயே குடுங்க துரை” விழி விரித்துக் கெஞ்சினாள்.

தன் தலையிலே அடித்துக் கொண்டவன், பாக்கேட்டில் தேடி இரு பத்து காசுக்களை எடுத்துக் கொடுத்தான்.

சந்தோஷமாக வாங்கிக் கொண்டவள் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு,

“தேங்சூ துரை” என்றாள்.

“ஏ ப்ளேக்கி, என்ன சொன்ன?”

“நன்றி சொன்னேன். தேங்சூ! சித்தப்பூ சொல்லிக் குடுத்தாரு”

சொல்லியபடியே பட்டுவையும், பவுனையும் தேடி அவர்கள் வீட்டுக்கு ஓடிப் போனாள்.

வாய் விட்டு சிரித்தவன், தூங்கலாம் என ரூமினுள்ளே நுழைந்துக் கொண்டான். சிரிக்க வைத்தவள் அந்த இரவே அழ வைக்கப் போகிறாள் என தெரியாமல் நிம்மதியாக உறங்கிப் போனான் எட்வர்ட்.

சுப்பு, பரசுவின் குடும்பத்துடன் சந்தோஷமாக திருவிழா பார்க்க கிளம்பினாள். எஸ்டேட்டுக்கு நடுநாயகமாக கட்டப்பட்டிருந்தது அந்த மாரியம்மன் கோயில். கோயிலை தள்ளி வீடுகளும், செம்பணை காடுகளும் இருந்தன. இவர்கள் போகும் போதே ஆற்றோரத்தில் இருந்த இன்னொரு கோயிலில் தீமிதி இறங்க போகிறவர்கள் மேல் மஞ்சள் கலந்த ஆற்று நீர் ஊற்றி நெற்றியில் திருநீறு வைத்து சாமி அழைத்து முடித்திருந்தார் பூசாரி.

தீக்குழியை சுற்றி கயிறு கட்டி மக்கள் யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு செய்திருந்தனர். ஓரமாக நின்றிருந்த இவர்கள், தீமிதி உற்சவம் ஆரம்பிக்க காத்திருந்தார்கள்.

தீக்குழியில் உப்பை அள்ளி வீசிக் கொண்டிருந்தார் பவுனு. அதிசயமாக பார்த்த சுப்பு,

“சின்னக்கா, ஏன்கா உப்பு போடறீங்க நெருப்புல?” என கேட்டாள்.

“கடைசி பையனுக்கு முதுகு, கழுத்தெல்லாம் மரு ரொம்ப வருது புள்ள. சாமி கிட்ட வேண்டிக்கிட்டு தீக்குழில உப்பு போட்டா மரு தன்னாலே விழுந்துரும்”

அதற்குள் வரிசையாக நேர்த்திக்கடன் வைத்திருந்தவர்கள் தீமிதிக்க ஆரம்பித்தார்கள். ஆத்தா, மகமாயி என ஒரே கூச்சல். சுப்புவும் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

தீமிதி முடித்து அம்மனுக்கு பூஜை புனஸ்காரங்கள் முடிந்து பந்தி ஆரம்பித்தது. மக்கள் அடித்துப் பிடித்து பக்கத்தில் இருந்த திடலில் வரிசைப் பிடித்து அமர்ந்தார்கள். ஏற்கனவே பரசுவின் பிள்ளைகள் இடம் பிடித்து வைத்திருக்க இவர்கள் அமர்ந்து கொண்டார்கள். வாழை இலை போட்டு, சோறு, சாம்பார், பயிற்றங்காய் கூட்டு, அப்பளம், வடை, பாயாசம் பரிமாறப்பட்டது. சுப்பு ஆசையாக சாப்பிட்டாள்.

“இந்தா வடை. வயசு புள்ள நல்லா சாப்புடு” என பட்டு தனக்கு கிடைத்ததை சுப்புவுக்கு கொடுத்தார்.

பரசுவும் இவர்கள் எதிரில் இருந்த ஆண்கள் பந்தியில் அமர்ந்திருந்தார். இவர்கள் குடும்பமாக சாப்பிட்டுவிட்டு திடலை சுற்றி போட்டிருந்த கடை வீதிகளை சுற்றி வர ஆரம்பித்தார்கள். வளையல் கடைகள், மிட்டாய் கடைகள், சாமி படங்கள் விற்கும் கடைகள், குச்சி ஐஸ் கடைகள் என திடலை நிறைத்திருந்தன.

மிட்டாய் கடையில் பத்து காசுக்கு கை நிறைய கிடைத்த மிட்டாய்களை பரசுவின் பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொண்டாள் சுப்பு. பட்டுவுக்கு இரண்டு, பவுனுக்கு இரண்டு என நான்கு பிள்ளைகள் பரசுவுக்கு. நீதி வழுவாத நியாயவான் பரசு. சரி சமமாக பிள்ளைகளைக் கொடுத்து தர்மத்தை நிலை நாட்டி இருந்தார்.

குச்சி ஐஸ் வாங்கி பிள்ளைகளுடன் காக்கா கடி கடித்து சாப்பிட்டவள், சந்தோஷமாக சுற்றித் திரிந்தாள்.

“ஏதுடி காசு?” கேட்டார் பவுனு.

“துரை குடுத்தாரு” வெள்ளையாக சொன்னாள் சுப்பு.

எதற்கு துரை இவளுக்கு காசு கொடுத்தார் என மனதில் உறுத்தியதை பட்டுவிடம் பகிர நினைத்த நேரத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

“எந்த கீழ் சாதி பயடா, என் தங்கச்சி நடந்து போறப்ப பின்னால தட்டனவன்? ஆம்புளையா இருந்தா இப்ப வாடா என் முன்னால. வகுந்து புடறேன் வகுந்து” கையில் அரிவாளுடனும், கண்ணில் கள் அடித்த போதையுடனும் நின்றிருந்தான் ஒருவன். அவன் பின்னால் அவன் ஜாதிக்காரர்கள் கையில் கம்புடன் நின்றிருந்தனர். திருவிழா கூட்டத்தில் சலசலப்பு.

“உன் தங்கச்சி முகரைக்கு எங்க ஜாதிக்காரனுங்க தான்டா கை வைக்க முடியும். வேற எவன்டா வருவான்?” என இன்னொருவன் சிலிர்த்துக் கொள்ள, கைக்கலப்பு ஆரம்பமாகியது. கடைகள் பிய்த்து எறிய பட்டன. பெண்கள், பிள்ளைகள் என பாராமல் எல்லாரும் தாக்கப் பட்டனர். திருவிழா கூட்டம் அங்கும் இங்கும் சிதறி ஓடியது.

பரசு பொண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து ஒரு வழியாக ஒதுக்குப்புறமாக கூட்டி வந்திருந்தார். மூச்சு வாங்க நின்றிருந்தவர்கள், ஆசுவாசப் பெருமூச்சு விட்டனர்.

“யப்பா, சுப்பக்கா எங்கப்பா?” கேட்டான் பரசுவின் மகன். அப்பொழுதுதான் கவனித்தார்கள் சுப்பு அவர்களோடு இல்லாததை. பரசு மீண்டும் கூட்டத்தில் புகுந்து தேடிப் பார்த்தார். ஆளையே கண்டு பிடிக்க முடியவில்லை. நேரம் வேறு அந்தி சாய்ந்திருந்தது. பட்டுவும், பவுனும் ஒப்பாரி வைக்க, பரசு ஆடிப்போய்விட்டார்.

“பர்சு, சுபூ பத்திரம்! அவளுக்கு இங்க இடமெல்லாம் தெரியாது. ஏதாவது ஒன்னுனா பாக்யம்கு நாம தான் பதில் சொல்லனும்” அழுத்தி சொன்ன எட்வர்டின் குரல் காதில் எதிரொலித்து பீதியைக் கிளப்பியது அவருக்கு.

“ஏ, புள்ள பட்டு, பவுனு! அழுவறத நிப்பாட்டிட்டு துரை பங்களாவுக்கு ஓடுங்க. விரசா அவர் கிட்ட விஷயத்த சொல்லுங்க. நான் மறுபடியும் தேடிப் பார்க்கறேன்” விரட்டி விட்டார்.

படபடவென கதவு தட்டப்பட்ட சத்தத்துக்கு வாசல் கதவைத் திறந்தான் எட்வர்ட். அழுத முகத்துடன் பரசுவின் குடும்பத்தைப் பார்த்தவன், அதில் சுப்பு இல்லாமல் பயந்துப் போனான்.

“சுபூ எங்க?” அடக்கப்பட்ட கோபம் அவன் குரலில்.

படபடவென ஒப்பித்தார் பட்டு.

“ஓ மை காட்” ஆத்திரமாக கத்தியவன், போட்டிருந்த சிங்ளேட், கால் சட்டையுடன் ரூமுக்கு ஓடி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு ஜீப்பை விரட்டிக் கொண்டு பறந்தான்.

கோயிலை அவன் அடைந்த நேரம் இன்னும் கலவர பூமியாக தான் இருந்தது. எட்வர்டின் ஜீப்பை பார்த்ததும் பரசு ஓடி வந்தான்.

“கிடைச்சாளா?”

“இல்லை துரை. கூட்டத்தோட கூட்டமா அலசிப் பார்த்துட்டேன். நம்ம ஆளுங்களும் தேடறாங்க”

“டேம்மிட் பர்சு!” இன்னும் வண்ண வண்ணமாக ஆங்கிலத்தில் திட்டினான். அவன் ஜீப்பைப் பார்த்தும் கூட குடிமகன்கள் அடங்கவில்லை. சண்டை விடாமல் நடந்தது.

துப்பாக்கியை வெளியே எடுத்த எட்வர்ட் வானத்தை நோக்கி சுட்டான். சட்டென அந்த இடமே மயான அமைதியானது.

“இப்ப எல்லாரும் இந்த இடத்த விட்டு கிளம்பல, நெஞ்சுல சுடுவேன்.” கத்தினான் எட்வர்ட். கூட்டம் அடித்துப் பிடித்து ஓடியது.

“நம்ம ஆளுங்கள வீட்டு பக்கம், காட்டுப் பக்கம் எல்லாம் அனுப்பு பர்சு. கமான் குவீக். சுபூக்கு மட்டும் எதாச்சும் ஆச்சு, அடுத்த குண்டு உன் நெஞ்சுக்கு தான்”

பரசு அடித்துப் பிடித்து ஓடினான். எட்வர்டும் சில பேரை அழைத்துக் கொண்டு தீப்பந்தங்களுடன் அருகில் இருந்த செம்பணை காட்டுக்குள் நுழைந்தான். மனம் தடதடக்க,

“ப்ளேக்கி!” என கத்தியபடியே தேடினான். மற்றவர்களிடம் சுபூ என சொன்னாலும், அவளை ப்ளேக்கி என தானே அழைக்கிறான்.

பாதி தூரம் காட்டில் அலைந்திருப்பார்கள்.

“துரை” என சன்னமாக குரலோசை கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான் எட்வர்ட். அங்கே மரத்தின் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் சுப்பு. கண்களில் கண்ணீர் கரை. செம்பணை முட்கள் குத்தி பாவாடை சட்டை எல்லாம் அங்கங்கே கிழிந்திருந்தது. முகத்தில், கையிலெல்லாம் லேசாக ரத்தக் கறை.

கூட வந்தவர்களை போக சொல்லி கையாட்டியவன், அவர்கள் தலை மறைந்ததும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“ப்ளேக்கி, ப்ளேக்கி, ப்ளேக்கி” சொல்லிக் கொண்டே தலை, முதுகு, கன்னம் என தடவி தடவிக் கொடுத்தான். அவன் நெஞ்சில் சாய்ந்து பயத்தில் அழுதுக் கொண்டே இருந்தாள் சுப்பு.

பின்னால் காலடி சத்தம் கேட்கவும், அவளை தள்ளி நிறுத்தியவன் கையை மட்டும் இறுக பற்றிக் கொண்டான். வந்தது பரசுதான்.

“துரை, புள்ள கிடைச்சிட்டதா சொன்னாங்க. இருட்டுது, வாங்க கிளம்பலாம்”

“பர்சு, ஜீப்ல என்னோட கோட் இருக்கும். எடுத்துட்டு வா” என அனுப்பினான்.

“சொல்லு ப்ளேக்கி என்ன ஆச்சு?”

“சண்டை நடந்துச்சா, நான் பயந்து போய் ஓட ஆரம்பிச்சேன். திரும்பிப் பார்த்தா அக்கா, சித்தப்பூ எல்லாரையும் காணோம். அங்கிருந்த அண்ணா கிட்ட இவங்கள பத்தி கேட்டனா. அவங்க என்னை ஒரு மாதிரியா பாத்தாங்க. அப்படியே தோளு மேல கை வச்சாங்க. நான் கைய தட்டி விட்டேன். மறுபடியும் வச்சாங்க. எனக்கு பயமா போச்சு. நான் ஓடுனேன். அவங்களும் தள்ளாடிட்டே என் பின்னால வந்தாங்க. பயந்துட்டு காட்டுக்குள்ள ஓடி வந்துட்டேன். வெளிய வர பயமா இருந்துச்சு. அதான் இங்கயே உக்காந்திருந்தேன்” தேம்பினாள். மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“அழாதே ப்ளேக்கி. அதான் நான் வந்துட்டேன்ல. உன்னை பத்திரமா பாத்துக்குவேன். இனிமே நான் இல்லாம இப்படி வெளிய போறேன்னு அடம் பண்ண கூடாது. சரியா?”

தலையை சரி என ஆட்டினாள். எட்வர்டுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது. பரசு வந்ததும் கோட்டை வாங்கி அவளுக்கு அணிவித்தவன், கைப்பற்றி அழைத்து சென்றான். ஜீப் பின்னால் சுப்பு அமர, முன்னே அமர்ந்து கொண்டான் எட்வர்ட். பரசு ஓட்ட ஜீப் பங்களாவுக்கு விரைந்தது. விஷயத்தை பரசுவிடம் பகிர்ந்தவன்,

“பர்சு, எவன்னு விசாரிச்சு கண்டுப்பிடிக்கற. அவன் உடம்பு நாளைக்கு இந்நேரத்துக்கு ஆத்துல மிதக்கனும். காட் இட்?” கட்டளையிட்டான்.

“சரிங்க துரை”

சுப்புவின் மேல் எட்வர்ட் காட்டிய இந்த அக்கறை பரசுக்கு பயத்தைக் கொடுத்தது. சம்பளம் கொடுப்பவனை எதிர்த்துக் கேள்வியும் கேட்க முடியாது. சுப்புவை சீக்கிரம் சேதாரம் இல்லாமல் எப்படி கிளப்புவது என மண்டையைக் குடைய ஆரம்பித்தான் பர்சு.

வீட்டை அடைந்ததும்,

“சுபூவ நான் பார்த்துக்கறேன்! உங்க வீட்டுல போய் இதெல்லாம் சொல்ல வேணாம் பர்சு” சொல்லி அனுப்பினான்.

உள்ளே நுழைந்தவுடன், கைப்பிடியிலே சுப்புவை தனது அறைக்கு அழைத்து சென்றான் எட்வர்ட். விளக்கு வெளிச்சத்தில் அவளை நன்றாக ஆராய்ந்தான். சிராய்ப்பு காயங்கள் மட்டுமே.

“குளிச்சுட்டு வா ப்ளேக்கி! காயத்துக்கு மருந்து போடறேன்”

“ஊசி போடுவீங்களா?” பயத்துடன், உதடு நடுங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

மாட்டேன் என தலை அசைத்தவன், வலது கை விரல்களை மட்டும் அவள் இன்னும் மடக்கியவாறு வைத்திருந்ததை கவனித்தான்.

“கைல அடிப்பட்டுருக்கா ப்ளேக்கி?”

“இல்ல, அது வந்து” தயங்கினாள்.

“சொல்லு”

“துரைக்கு மிட்டாய் வாங்குனேன். அதை கையிலயே இவ்வளவு நேரமா அழுத்திப் பிடிச்சு வச்சிருந்தேன். லேசா கரைஞ்சி போச்சி. இது வேணா. கையிலாம் வேர்துருச்சுல உப்புக்கரிக்கும்”

எட்வர்டுக்கு கண்கள் கலங்குவதைப் போல இருந்தது. கண்களை சிமிட்டி கட்டுப்படுத்தியவன்,

“இவ்வளவு நேரமும் எனக்காக பிடிச்சிருந்தியா கையில?”

ஆமென தலையாட்டினாள். அவள் கையைப் பிரித்து அந்தப் பிசுபிசுத்த மிட்டாயை பிரித்து வாயில் அடைத்துக் கொண்டான் எட்வர்ட். இனிப்பு, உப்பு, எல்லாம் கலந்து அவன் தொண்டையில் அன்பாய் இறங்கியது அந்த சுவை.

(தூண்டுவான்)   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!