இருள்மை – சிறுகதைத் தொகுப்பு [THRILLER]
அடுக்களை அமானுஷ்யம்
அழகான விடியல் ஆரம்பமானது!!
காற்றோட்டத்திற்காக சற்றே திறந்திருந்த சன்னல் வழியே வந்த சூரிய ஒளியினால் கண் கூசியபடியே பவித்ரா விழித்தாள். மெல்ல எழுந்தமர்ந்தவள் அருகில் உறங்கும் கணவன் செல்வத்தைப் பார்த்தாள். அவள் முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.
செல்வம், பவித்ரா இருவரது திருமணம் நடந்து இருபது நாட்கள் ஆகின்றது. இவர்களது கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதுதான். திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து மூன்று நாட்களுக்கு முன், இங்கே தனிக்குடித்தனம் வந்திருக்கிறார்கள்.
மொத்தமாக மூன்று தளங்கள் கொண்ட வீடு இது. முதல் தளத்தில் வீட்டின் உரிமையாளர் இருந்து கொண்டு, மற்ற இரண்டு தளங்களையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். இவர்கள் இருப்பது இரண்டாவது தளத்தில்.
மிகச்சிறிய ஒற்றை படுக்கையறை! பால்கனி வசதி அமைக்கப்படாத பழைய அறைகள்! அனைத்து அறையின் சுவர்களுமே அழுக்கேறிப் போய்தான் இருந்தன! சமையலறையில் ஒட்டப்பட்டிருந்த சுவர் வண்ணத்தாள்கள்கூட எண்ணெய் பிசுக்குடனே இருந்தது!
இருந்தாலும் இந்தப் பகுதியில் வீடு எடுத்தால்… பவியும் அவனும் வேலைக்குச் சென்று வர வசதி, பயண செலவும் குறைவு என்பதால் இங்கு வீடு பார்த்திருந்தான். முக்கியமாக இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க காரணம், வீட்டின் வாடகை அவனது நிதிநிலைக்கு ஏற்றதாக இருந்தது.
இங்கே வந்ததிலிருந்து மூன்று நாளாக வீட்டை ஒழுங்குபடுத்தி புது பாத்திரங்கள் மற்றும் தவணை முறையில் வாங்கிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தனர். முக்கால்வாசி வேலை செல்வம்தான் செய்திருந்தான்.
அந்த அலுப்பில் உறங்குபவனைப் பார்த்தபடி பவித்ரா எழுந்தாள்.
எழுந்து, பல்துலக்கியபடி சன்னலருகே வந்து நின்றாள். அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள், எதிரே ஒரு விளையாட்டு மைதானம் தெரியும். வீட்டை ஒட்டிச் சென்ற சாலையில் ஆட்டோக்கள், பைக்குகள் போவதும் வருவதுமாய் இருந்தன.
சற்றுநேரம் அந்த இரைச்சலைப் பார்த்தபடியே பல் விலக்கி முடித்து சமையலறை சென்று குடத்திலிருந்து சொம்பில் தண்ணீர் மொண்டு குடிக்கையில்… அவள் மேலே பொத்தென்று ஏதோ ஒன்று வந்து விழுந்து… குதித்து குதித்து நின்றது!
சொம்பை கீழே போட்டு, ‘ஐயோ’ என்று அலறி கண் மூடினாள்!!
“ஏய் பவி நாதான்” என்று சிரித்தபடி அவளருகில் வந்து நின்றான் செல்வம்.
மெல்ல கண்திறந்து, “என்ன வெளாட்டு இது? என்னவோனு நினச்சி பயந்துக்கினே” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள, “இதுல என்ன நீ பயந்துக்க இருக்கு?” என்றான் அவளை நெருங்கி நின்று.
அவள் இன்னும் முறைத்து நிற்கவும், “சரி… இனிமேட்டு இப்டி பண்ணல” என்று அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு, “வர்றியா கிரவுண்டாண்ட கொஞ்ச நேரம் வாக் போயிட்டு வர்லாம்?” என்றான் ஆசையாக.
“போ… நா ஒன்னும் வர்ல” என்று முறுக்கிக் கொண்டாள்.
“இப்டி மூஞ்ச தூக்கி வெச்சிக்காத பவி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “நா வேணா போய்ட்டு வர்வா?” என அவளை அணைப்பிலிருந்து விடுவித்து கேட்டான்.
அவன் முத்தம் தந்த முறுவலுடன், “ம் சரி, சீக்ரம் வந்திடு மாமா. இன்னிக்கு வேலைக்குப் போணும்” என்று ஞாபகப்படுத்தினாள்.
“ரெண்டே ரவுண்டுதான்… வந்துருவேன்” என்று கதவைத் திறந்து மாடி படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றான். கதவைப் பூட்டி வந்த பவித்ரா, சமையலறை சென்று கீழே விழுந்த சொம்பை எடுத்து வைத்தாள்.
பின், ‘மாமா எத தூக்கி எறிஞ்சது?’ என கீழே தேட, அது பச்சை நிறத்திலிருந்த ரப்பர் பல்லி என்று தெரியவும், அதை எடுத்து சமையல்கட்டு அலமாரியில் வைத்துவிட்டு, குளிர்சாதன பெட்டியைத் திறந்து வாங்கி வைத்திருந்த பொருட்களைப் பார்த்தாள்.
சற்று நேரத்திற்குப்பின் அழைப்புமணி அடிக்கப்பட, மெட்டல் சோஃபாவில் அமர்த்திருந்த பவித்ரா வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.
செல்வம்தான்!
அவளைப் பார்த்தபடி உள்ளே வந்தவன், “ஏ, நாதான ஓடிட்டு வர்றேன். உனக்கு ஏன் இப்டி வேர்த்திருக்கு?” என்று சிரிக்க, பதிலளிக்காமல் மீண்டும் மெட்டல் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பதற்றமாகவும், பயத்துடனும் இருந்த மனைவியை, ‘ஏன் இப்படி?’ என புரியாமல் பார்த்து, “என்னத்துக்கு இப்டி இருக்க?” என்று அவளருகில் வந்தமர்ந்தவன், அவள் வியர்வையைத் துடைத்து விட்டான்.
“நா இன்னுமே சமைக்கல மாமா” என்றாள் பயத்துடன்.
“ஐயே அவ்ளோதான?” என்று எழுந்து போக பார்த்தான்.
“என்னது அவ்ளோதான? ஏன் பண்ணலனு கேக்க மாட்டியா?”
“ஏய் வேலைக்கு போ வேணாமா? உட்காந்து கத பேசிக்கினு இருக்க சொல்றீயா?” என்று குரல் உயர்த்தியதுமே, அவளது முகம் மாறி இன்னும் வியர்க்க, “சரி, கேக்றேன் சொல்லு” என்று அமர்ந்தான்.
“நீ வெள்ள போனதுமே கதவ லாக் போட்டுட்டு… சமைக்க போனேன். ஆனா மாமா இந்த கிட்சனாண்ட எல்லாம் ஒரு மாறி இருக்து” என்றபோது பயத்தில் அவள் உதடுகள் வறண்டு போனது.
“ஒரு மாறினா என்னது? எதுனாலும் டீடயிலா சொல்லு பவி” என்று கேட்டதும், சற்று நேரம் முன் சமையலறையில் நடந்ததைக் கணவனுக்குக் கூற ஆரம்பித்தாள்.
கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன…
பொருட்களைப் பார்த்து முடித்தவள், ‘முதலில் காஃபி குடிக்கலாம்’ என்று நினைத்து, பால் பாக்கெட்டை எடுத்தாள். அதை வெட்டி பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றினாள்.
பாக்கெட்டில் இருந்த பால்… மலை மேலிருந்து பலத்த இரைச்சலுடன் நுரை பொங்கி வரும் அருவி கீழே விழும் சத்தத்துடன் பாத்திரத்தில் விழுந்தது. ‘என்ன இது?’ என்று பயந்தவளின் செவிப்பறை சவ்வுகளைக் கிழித்துவிடுவது போல் சத்தம் அதிகரித்து கொண்டே போனது!
‘எங்கிருந்து இந்தச் சத்தம் வருகிறது?’ என்று பவித்ரா பார்க்க நினைக்க… அதற்குள் அதிக இரைச்சலால் அவள் காதில் சுளீர் என்று ஓர் வலி!
அவ்வளவுதான்!!
பயத்திலும், வலியிலும் பால் பாக்கெட்டை சமையல் மேடையில் போட்டுவிட்டாள். அடுத்த நொடி மொத்தச் சத்தமும் அடங்கியிருந்தது. காதுகளைத் தேய்த்துவிட்டபடி, ‘என்ன இது? ஏன் இப்படி நடக்கிறது?’ என்று தெரியாமல் பதற்றத்துடன் நின்றாள்.
நடந்ததை நினைக்கையில் கைகள் நடுங்கியது. மூச்சளவுகள் சமநிலையில் இல்லாமல், ஏற்ற இறக்கமாக மாறியது. குப்பென்று நெற்றியெங்கும் வியர்வை அரும்பியது.
சற்று நேரத்திற்கு சிலைபோல் சமைந்து நின்றவள், மெது மெதுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டே வந்து, ‘எங்கிருந்து இந்தச் சத்தம் வந்திருக்கும்?’ என்று சமையலறையைச் சுற்றிப் பார்த்தாள்.
சின்ன சமையலறை! அதில் சிலபல பாத்திரங்கள், கிரைன்டர், குளிர்சாதனப்பெட்டி, சிறு சன்னல்… அவ்வளவே!
‘சன்னல் வழி இந்தச் சத்தம் வந்திருக்குமோ?’ என்ற சந்தேகத்தில் மெல்ல எக்கிக்கொண்டு பார்த்தாள். மக்கள் சாதாரணமாக அவர்களின் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.
‘அப்ப எனக்கு மட்டும்தான் இந்தச் சத்தம் கேட்டிருக்கா’ என பவி குழம்பி நின்ற நேரத்தில், எதையும் அவள் எதிர்பார்க்காத நிலையில்… சட்டென முகத்திற்கு முன் ஆவி பறக்க காஃபி கோப்பை ஒன்று நீட்டப்பட்டது.
உடனடியாக இருகைகளாலும் வாயைமூடி பின்னே நகர்ந்து போக, அந்தப் பக்கம் இருந்த சமையல் மேடையில் இடித்துக் கொண்டு நின்றாள்!
அச்சத்தில் இருந்தவளுக்கு, வாயைத் திறந்து ‘உதவி’ என்று சத்தமிடக்கூட முடியவில்லை!! சமையலறையிலிருந்து தப்பித்து வெளியே செல்லவும் யோசனை வரவில்லை!!
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க… விழிகளை விரித்து வைத்து, எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் காஃபி கோப்பையைப் பார்த்தபடி நின்றாள்.
‘எங்கிருந்து வந்திருக்கும்?’ என்ற கேள்வி வரவும் சமையலறையில் ஒட்டப்பட்டிருந்த சுவர் வண்ணத்தாள்களைப் பார்த்தாள். எண்ணெய் பிசுக்கேறி போயிருந்த தாளில் கத்திகள், முள்கரண்டிகள், காஃபி கோப்பைகள் அச்சிடப்பட்டிருந்தன!
அச்சிட்டிருந்த கோப்பையிலிருந்த காஃபியில் ஆவி பறந்து கொண்டிருந்தது!
அந்த காஃபி கோப்பை வடிவத்தையும் அந்தரத்தில் தொங்கும் கோப்பை வடிவத்தையும் பார்த்தாள். இரண்டும் ஒன்றுதான் என்று தெரிந்த அந்த நொடியில் காஃபி கோப்பை அவளை நோக்கி வேகமாக வந்தது.
கூடவே பச்சை நிறத்தில் பெரிய பல்லி ஒன்று சமையல் மேடையில் ஊர்ந்து செல்வதைப் பார்த்தாள்! சட்டென சமையல்கட்டு அலமாரியில் வைத்த ரப்பர் பல்லியைத் தேடினாள்!
அது அங்கில்லை!!
அவ்வளவுதான்!!!
அதன்பின் அங்கே நிற்கவில்லை. கால்கள் இரண்டும் நடுங்க வெளியே ஓடி வந்து மெட்டல் சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்!
கடிகாரத்தில் இந்த நிமிடம்…
நடந்ததை பவித்ரா பதற்றத்துடன் சொல்லி முடிக்கவும், “என்ன சொல்ற?” என்று அதிர்ந்து கேட்டு சமையலறையைப் பார்த்தான். அங்கே அமைதியாக இருந்தது. அவள் சொன்னது போல களேபரங்கள் நடந்த சுவடுகள் சற்றும் இல்லை. பால் பாக்கெட் மட்டும் சமையல் மேடையில் கிடந்தது.
அது அவனுக்கு ஒரு பயத்தைத் தந்தது!
அப்படியே மெல்ல திரும்பி அவளைப் பார்க்க, “பயமாருக்குது மாமா” என்றவள் உடல் கிடுகிடுவென நடுங்கியது. அவளை அரவணைத்துக் கொண்டான்.
அவன் தோளில் சாய்ந்தபடி, “ஏன் இப்டி நடந்திச்சு?” என்று பயத்தில் திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டு சற்று நேரம் இருந்தவள், திடீரென்று, “நீ எம்மேல தூக்கி போட்டியே ரப்பர் பல்லி… அது எப்டி மாமா வந்திச்சி?” என்று கேட்டாள்.
“தெர்ல, அங்க கெடந்திச்சி” என சன்னல் பக்கமிருந்த மூலையைக் காட்ட, ‘அது எப்படி அங்கே வந்திருக்கும்?’ என்ற ஓர் கேள்வி அப்போது செல்வத்திற்கு வந்திருந்தது.
இருவரும் சமையலறையை யோசனையுடனும், திகிலுடனும் பார்த்திருந்தனர்!
சட்டென உடல் தூக்கிப்போடும்படி நடுங்க, “மாமா… கி… கிட்சன் சொவத்தல ஒட்டிர்க்க பேப்பெர்லாம் யா… யார்ரு ஒட்னது?” என்று பதற்றமாக கேட்டாள்.
“இதுக்கு மின்ன ரென்ட்டுக்கு இருந்த ஆளுங்க ஒட்னதுனு ஓனர் சொன்னாரு” என்று யோசித்தபடியே சொன்னான்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “அவங்கள காலி பண்ண சொல்லிக்கினுதான நமக்கு ரென்ட்டுக்கு குடுத்தாருனு நீ சொன்ன… அவங்கள என்னத்துக்கு காலி பண்ண சொன்னாராம்?” என்றாள் சந்தேகமாக.
“ஏய்… சும்மா இப்டி கண்டதயும் கனெக்ட் பண்ணி என்னய டென்சன் பண்ணாத” என்றான் எரிச்சலுடன்! ஆனால் அந்தக் கேள்வி அவனுள்ளும் இருந்ததால் அதன்பின் பேசவில்லை!!
அமைதியாக இருந்தவனிடம், “சாரி மாமா… நா உன்னய டென்சன் பண்ண கேட்கல. பயத்லதான்…” என்று சொல்ல, அவன் யோசனையில் இருந்தான்.
“என்னா யோசிக்ற?” என்று கேட்கவும், அவன் நேரத்தைப் பார்த்துவிட்டு, “வேலைக்கு போணும். மொதல கெளம்பலாம் பவி. வேல முட்ஞ்சி வந்துக்கின்னு இத என்னென்னு பாக்கலாம்” என்று பொறுமையாக சொன்னான்.
அவள் அப்படியே இருந்தாள்!
“கல்யாணம், வீடு கிளீனிங்னு இத்தன நாளா லீவ் சொல்லிக்கினு இருந்தாச்சு. இனியும் சொல்ல முடியுமா? சம்பளம் கட்டாவும். எந்திரி” என்றாலும், ’இப்படி ஏன் நடந்திருக்கு?’ என்ற யோசனையோடு இருந்தான்.
“ம்ம்… ஆனா மாமா டிப்பன்?!” என்றாள்.
“போசொல்ல பாத்துக்கலாம். கெளம்பு”
யோசனையுடன் இருந்தவள், “கிச்சனாண்ட நீயும் வந்து நிக்றியா மாமா? ஒரு வாட்டி ட்ரை பண்ணிப் பாப்போம்” என்று ஒருவித பயத்துடனே கேட்டாள்.
“நீ சொல்றது கணக்கா பண்ணலாம் பவி. இப்ப வேணாம். சாய்ங்காலம் பாக்கலாம்” என தற்சமயமாக பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து எழுந்து கொண்டான்.
அவளும், “ம்ம்ம்” என்று எழுந்து கிளம்ப போனாள்.
********************
அடுத்தநாள்!
அமைதியாக இருந்த அதிகாலை பொழுதில் அலைபேசியின் விழிப்பு மணியோசை கேட்டு செல்வம் விழித்தான். நேற்று வேலை முடிந்து தாமதமாக வந்து… நடந்ததைப் பற்றியே நிறைய நேரம் பயந்து பயந்து பேசிக் கொண்டிருந்ததால் பவித்ரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவள் உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்தவன், சன்னலருகே சென்று நின்றான்.
முந்தைய நாள் பவித்ரா பார்த்த அதே காட்சிகள்தான்! வாகனங்கள் போகும் சாலை, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் மைதானம்… தூரத்தில் குடியிருப்புகள்! அந்தப் பெரிய பரப்புகளில் பரவியிருந்த இரைச்சல்… வீட்டிற்குள் வியாபித்திருந்த அமைதி, இரண்டையும் கேட்டான்.
வீட்டுச் சமையலறையின் வினோதத்தை நினைத்துப் பார்த்தவுடனே செல்வத்திற்கு முதுகெலும்பு சில்லிட்டது!
தெளிவில்லாத எண்ணங்களுடனே இருந்தவனுக்கு மனம் குழம்பி… தலை வலித்தது. சூடாக காஃபி குடிக்க நினைத்தான். மனதினில் ஒருவித பயத்துடன்… பதற்றத்துடன் சமையலறை சென்று பால் பாக்கெட் இருக்கிறதா என்று பார்த்தான்.
இன்று இல்லை!
பவி எழுந்து கொள்ளும் முன் வாங்கி வந்துவிடலாம் என்று நினைத்து கதவைத் திறந்து கிளம்பியவன், வெளிப்புறம் தாழிட்டு மாடிப் படிகளில் இறங்கினான்.
அவன் திரும்பி வந்து கதவைத் திறந்தபோது சோஃபாவில் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பவி. அவசரமாக வந்தவன், “ஏய்… என்னத்துக்கு இப்ப அழுவுற?” என்று கேட்டு, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
அழுகையின் ஊடே, “நீ எங்க போயிருந்த?” என்றாள் கோபமாக.
“நேத்து பால் பாக்கெட் வாங்கி வெக்கல. அதான் போய் வாங்கின்னு வர்றேன்”
“அதுக்கு இவ்ளோ நேரமா உனக்கு?” என்று சத்தமிட்டாள்.
“ஓனர்ட்ட பேசிக்கினு இருந்தேன்” என்றவன், “இதுக்கு மின்ன இங்க ரென்ட்டுக்கு இருந்த ஆளுங்களால ஏதோ பெர்ச்சனயாம்… அதான் காலி பண்ண சொன்னாராம்” என்றும் சொன்னான்.
“என்னா பெர்ச்சன?”
“அதெதுக்கு நமக்கு? நீ என்னத்துக்கு அழுவுறனு சொல்லு” என்றவன், “பவி… எதுனாச்சும் இன்னிக்கும் நடந்ததா என்ன?” என்று அதிர்ந்து கேட்க, “ம்ம்” என அழுதபடி தலையாட்டி, சமையலறையில் தனக்கு நேர்ந்ததைக் கூற ஆரம்பித்தாள்.
கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கிச் சுழன்றன…
செல்வம் போனதுமே பவித்ரா வைத்திருந்த விழிப்புமணி அடிக்க விழித்துவிட்டாள். மெதுவாக கட்டிலிலிருந்து எழுந்தவள் செல்வத்தைத் தேட, வீட்டில் நிலவிய அமைதி அவன் இங்கே இல்லை என்று சொல்லியது.
எளிதில் கணிக்க முடிந்த வெளியில் கேட்ட சத்தம், இரைச்சலைவிட எப்போது என்ன நடக்குமென்று கணிக்க முடியாத வீட்டிற்குள்ளே இருந்த அமைதி அவளுக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தது!
‘சமைக்க ஆரம்பிக்கவா? இல்லை செல்வம் வரும்வரை காத்திருக்கவா? என்று மனம் படபடப்புடன் பட்டிமன்றமே நடத்தியது.
‘இன்று என்னென்ன நடக்குமோ?’ என்ற பயம் இருந்தும் சமையலுக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைப்போமே என்று சமயலறைக்குள் சென்றாள்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சமையலுக்கான காய்கறிகளை எடுத்து திரும்பினதுமே, வாணலிகள் அனைத்தும் சமையல் மேடைமீது ஒன்றன் பின் ஒன்றாக வந்து அமர்ந்தன.
மூச்சே நின்றுவிடும் போல பக்கென்று இருந்தது!
ஆனாலும் பயத்தை, பதற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘அதுவா? நானா?’ என்று பார்த்துவிடும் ஆவேசத்துடன்… ஒரு வாணலியை எடுத்து அடுப்பின்மீது வைத்தாள்.
‘அடுத்து, எண்ணெய் என்னவாக போகிறதோ?’ என்ற பயத்துடன் பாதிகண்கள் மூடியபடி, கைகள் நடுங்க எண்ணெய் பாட்டிலை எடுத்து வாணலியில் ஊற்றினாள்.
நல்லவேளை எண்ணெய் எதுவாகவும் மாறவில்லை!
எண்ணெய் சூடாகும் நேரத்தில் முட்டைகோசை சிறுசிறு துண்டுகளாக வெட்டினாள். அது சூடானதும் அஞ்சறைப் பெட்டியிலிருந்து தாழிப்பிற்கு கடுகை எடுக்க போகையில், கடுகு சிறு கருமணிகளாக மாறித் தரையில் உருண்டோடின.
உடனே பயப்பந்து ஒன்று அவளது தொண்டைக் குழியில் உருண்டது! இதயம் தடதடத்தது! கண்கள் இரண்டும் தத்தளித்துக் கொண்டு வந்தது!
உள்ளுக்குள்தான் இப்படி! அவள் உடல் உறைந்து நின்றது!!
தாறுமாறாய் துடிக்கும் அவள் இதயத்தைத் தட்டிக் கொடுத்த போது, அஞ்சறை பெட்டியில் இருந்த பொருட்களும், எடுத்து வைத்த பொருட்களும் உருமாறிட தொடங்கின. பீதியில் இருவிழியிலிருந்தும் நீர் வடிய அதைப் பார்த்தபடி நின்றாள்.
நரம்பு போல் தேங்காய் நாரைத் திரித்துவிட்டு, அதில் பெரிய கருமணியாக மாறியிருந்த மிளகுகள், குமிழ்மணிகளாக மாறிய மல்லிவிதைகள், அரை பாசி மணியாக மாறிய வெந்தயங்களைக் கோர்த்து… மணிமாலையாக மாற்றி… அவள் முன் நீட்டப்பட்டது!
உள்ளுக்குள் உருவான பேரச்சம்… அவளைப் பிடித்து உலுக்கியது!!
‘யார் கோர்த்தார்கள்? யார் கொடுக்கிறார்கள்? ஏன் இப்படி நடக்கிறது?’ என்று எதுவுமே தெரியாமல் பவி ஏங்கி ஏங்கி அழுதாள்!
நீட்டப்பட்ட மணிமாலையை… அவள் கழுத்தில் யாரோ அதை மாட்டிவிட முயற்சிக்க… அதை முறியடிக்க அவளும் போராட… கடைசியில் அதைப் பிய்த்து எறிந்தாள்!!
அந்த நேரத்தில்… சமையல் மேடையில் ஒருபக்கம் தாயக்கட்டம் வரையப்பட்டு எடுத்து வைத்திருந்த வெள்ளைப்பூண்டுகள் எல்லாம் வெண்சோவிகளாக மாறி, உருட்டி உருட்டி போடப்பட்டுக் கொண்டிருந்தது!
‘யார் வரைந்தார்கள்? யார் விளையாடுகிறார்கள்?’ என புரியாத புதிரில் நின்றவளுக்கு, அந்தச் சமையலறையில் இருக்கின்ற ஏதோ ஒன்று அவளை இப்படிச் சங்கடப்படுத்தி, சந்தோஷம் அடைவது போலிருந்தது!!
சோவிகளைப் பார்த்திருந்தவள் கண்முன்… இஞ்சி மனித இதயமாக மாறி துடித்த நொடி, ‘யார் இதயம் இது? இன்னும் என்ன அபாயம் காத்திருக்கோ?!’ என்ற அச்சத்தில் அலறி அடித்து வெளியே வந்து மெட்டல் சோஃபாவில் அமர்ந்து ஓவென அழ ஆரம்பித்தாள்.
கடிகாரத்தில் இந்த நிமிடம்…
செல்வத்திடம் சொன்ன போதும்… சொல்லி முடித்த பின்னும் பவித்ரா அழுது கொண்டே இருந்தாள். “அழுவாத பவி” என்றவன் எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளைக் குடிக்க வைத்தான்.
‘ஏன் இப்படி நடக்கிறது? இந்த வீட்டு சமையலறையில் என்ன இருக்கிறது?’ என செல்வம் சமையலறையைப் பார்க்க, பவி எடுத்து வைத்திருந்த காய்கறிகள் சமையல் மேடையில் இருந்தன.
வேறு எதுவும் நடந்ததற்கு அறிகுறியே இல்லை!
ஆனாலும் அவனுக்குள் ஒரு பயம், பீதி வந்திருந்தது!!
அழுது அழுது முகம் வீங்கியிருந்த பவித்ராவைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்குப் பின், “ம்ம் இரு பவி” என்று அவளை விட்டுவிட்டு உள்ளே சென்று ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வந்தான்.
வந்தவனிடம், “யார்ட்ட பேசிக்கினு இருந்த மாமா?” என்று குரல் நடுங்க பவி கேட்க, “இங்க நடக்கிறத எங்கம்மாட்ட சொல்லிட்டேன்” என்றான்.
“என்னத்துக்கு இத்த போய் சொன்ன… பயந்துப்பாங்கள?” என்றாள் கோபமாக.
“பெரியவங்களுக்கு தெர்ய வேணாமா?”
“அத்த என்ன சொன்னாங்க?”
“பயந்தாங்க. பக்கத்து வீட்டாண்ட இந்த வீடு பத்தி கேக்க சொன்னாங்க”
“பேசாம அத்த கூட போய் இருந்துக்கலாமா?”
“என்ன பேசற… ரெண்டு பேரும் வேலைக்கு போக இதான ஈஸி”
“அப்டினா… அத்தய இங்க கூட்டி வர்லாமா?”
“அங்கனா அம்மாவ கவனிச்சிக்க அண்ணி இர்க்காங்க. பக்கத்தில அத்தினி சொந்தமும் இர்க்குது. அதலாம் வுட்டு எங்கம்மா வரமாட்டாங்க. அதோட அம்மாக்கு படிக்கட்லாம் ஏறிக்க முடியாது”
“போ… போ நீ இப்டியே பேசிக்கினு இரு” என்று கோபப்பட்டு, “இந்த கிச்சனாண்ட ஏதோ இருக்து. அதுக்குள்ளாற போவே பயமாருக்குது” என தேம்பி தேம்பி அழுதாள்.
அவள் பேச்சில் செல்வத்திற்கு அப்படி ஒரு பயம் வந்திருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை! உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டான். சொன்னால் அவள் இன்னுமே பயந்து விடுவாளென்று!!
அவளது கண்ணீரைத் துடைத்து, “நா சால்வ் பண்ண பாக்றேன். நீ வுட்டுரு இத” என்றவன், “வேலைக்குப் போ வேணாமா? கெளம்பு” என்ற பின்னுமே அப்படியே அமர்ந்திருந்தவளை அதட்டியும்… அன்பாய் சொல்லியும் கிளம்பச் செய்தான்.
ஆனால் தன்னிடம் அமைதியாய் இருக்கும் அடுக்களை, அவளிடம் மட்டும் ஆக்ரோஷம் காட்டுகிறது… ஏன்? என்ற கேள்வியில் மனைவிக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயம், பீதி அவனுக்குள் வந்திருந்தது!!
************************
ஒரு வாரம் கழித்து!
நேற்று சாயங்காலம்தான் திரும்ப இந்த வீட்டிற்கு பவித்ரா வந்திருந்தாள். அதுவரை அவள் அம்மா வீட்டில் அவளை இருக்க சொல்லியிருந்தான் செல்வம்.
‘சமையலறையில் ஏதோ இருக்கு’ என்று சொல்லி பவி பயந்ததாலும், செல்வம் நடந்ததைச் சொன்னதாலும், அவனது அம்மா கொடுத்த யோசனையின் பேரில், பேய் ஓட்டுபவர் வந்து ஏதேதோ செய்துவிட்டுப் போனார்.
அவர், ‘இனி பயமில்லை. சரியாகிடும்’ என சொல்லிவிட்டுப் போயிருக்க, செல்வம் சென்று பவியை நேற்று மாலையே இங்கே அழைத்து வந்திருந்தான்.
காலை நேரம் ஆறு மணி!
செல்வம் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில், ‘காப்பாத்துங்க’ என்று ஒரு அலறல் சத்தம்!
பதறி எழுந்து, ‘பவி இருக்கிறாளா?’ என்று அருகில் பார்க்க, அவள் இல்லை. அரக்க பறக்க வரவேற்பறை வர, மூச்சுவாங்க பவித்ரா நின்று கொண்டிருந்தாள்.
பதறியடித்து அவளருகே வந்து, “பவி என்னத்துக்கு இப்டி நிக்ற?” என்றான்.
“யாரோ என்னய கொல்ல பாக்கிறாங்க?”
உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், “உளறாத பவி!” என்றவன், “நீ உட்காரு மொதல” என்று அவளை அமரவைத்து தண்ணீர் எடுத்து வந்தான். அவள் குடித்ததும், “என்ன நட்ந்துச்சுனு சொல்லு?” என்று கேட்க, பேசமுடியாமல் அழுதாள்.
சற்றுநேரம் இருந்துவிட்டு, “என்னான்னு சொல்லு?” என்றான் மீண்டும்.
“அங்க ஒட்டிருக்க பேப்பெர்ல இருக்க கத்தி, கரண்டிலாம் பறந்து வர்து மாமா… வந்து என் கண்ணு பக்கத்ல… நெத்தி முன்ன நின்னுகின்னு குத்த பாக்குது. இதுல அந்த பல்லி வேற மேல மேல வந்து வுழுது… எப்டி பயந்து ஓடிக்கின்னு கத்திக்கின்னு இருந்தேன் தெர்யுமா? உனக்கு சவுண்ட் கேக்கலயா?
கடசில பெரிய கத்தி… இங்க” என தொண்டைக்குழியைக் காட்டி, “இங்க வந்து நின்னதும், வெள்ள ஓடி வந்துக்கினேன்” என்று கண்ணீரில் கரைந்தாள்.
அவன் அமைதியாக இருந்தான்!
“இந்த பெர்ச்சன முடியவே செய்யாதா” என அவன் மேல் சாய்ந்து அழுதவள், “என்ன பேச மாட்டிக்ற மாமா… எதுனா பேசு. எனக்கு பயமாருக்கிது” என்று படபடத்தாள்.
அப்போதும் அமைதியாகவே இருந்து கொண்டான்!!
********************
அன்று மாலை ஒரு நடைகூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி வரிசையில் பவியும், செல்வமும் அமர்ந்திருந்தனர்.
“இங்க என்னத்துக்கு வந்துருக்கோம்?” என்று பவி கேட்டாள்.
“கம்முன்னு இரு” என்றான்.
“அப்பருந்து இத்தே சொல்லிக்கினு இருக்றயே. இங்க எதுக்கு கூட்டி வந்தன்னு ஒழுங்கா சொல்லு” என்றபோது, ‘பவித்ரா’ என்று ஒருவர் வந்து அழைத்துவிட்டுப் போனார்.
“வா” என்று அவளை அழைத்து ஒரு அறைக்குள் போக, அங்கே மனநல மருத்துவர் என்ற பெயர் பலகை முன் இருந்தவர், “உட்காருங்க” என்றதும், அமர்ந்தனர்.
அவர், “என்ன பிரச்சனை?” என்று கேட்டதும், கடகடவென நடந்ததைச் சொன்னான். பவி குறுக்கிடாமல் அமைதியாக இருந்தாள்.
எல்லாம் கேட்டுவிட்டு, “நீங்க வெளிய இருங்க” என்றார் மருத்துவர் செல்வத்திடம்! அவன் போனதும், “சொல்லுங்க” என்றார் பவியைப் பார்த்து.
வெகு நேரத்திற்குப் பின் வெளியே வந்த பவித்ரா, “உன்ன கூப்பிடறாரு. போ மாமா” என்று கரகரத்த குரலில் சொல்லி அமர்ந்து கொள்ள, அவன் உள்ளே சென்றான்.
“டாக்டர் அவளுக்கு என்ன பெர்ச்சன?”
“இதுக்கு முன்னாடி இப்படி ப்ராப்ளம் வந்திருக்கா?”
“கல்யாணம் முட்ஞ்சி கொஞ்ச நாளுதான் ஆவுது. எங்கண்ண வீட்லருந்தப்ப இப்டி இல்ல. தனியா வந்தப்புறம் இப்டிதான் இருக்கா”
“நீங்க பார்க்கிறப்போ இப்படி நடந்திருக்கா?”
“நா பாக்கசொல்ல இல்ல. இப்டி நடக்குதுனு சொல்வா. அவ்ளோதான்!”
மருத்துவரிடம் ஓர் அமைதி!
“எதுனா பெர்ச்சனயா டாக்டர்? எதுனாலும் சொல்லுங்க”
“உங்க வொய்ஃப்க்கு இருக்கிறது மெஜைரோகோ போஃபியா [Mageirocophobia]”
“ம்ங்… அப்டினா?” என்றான் புரியாமல்.
“ம் அதாவது ஃபியர் ஆஃப் குக்கிங். இந்த போபியா இருக்கிறவங்க சமைக்கிறதுக்கே பயப்படுவாங்க” என்றார் சுருக்கமாக.
“ஏன் அப்டி டாக்டர்?”
“கத்தி மாதிரி கூர்மையான பொருள் கையை வெட்டிடுமோன்னு… ஸ்டவ், ஓவென் வெடிச்சிடுமோன்னு… சமைக்கிற சில செய்முறை மறந்திடும்னோ, இல்ல அவங்க பாலோவ் பண்ண கஷ்டமா இருந்திடுமோன்னு… சமைச்ச உணவோட ருசி ரொம்ப பெர்பஃக்டா எந்தவொரு தப்பும் இல்லாம வரணும்னு எதிர்பார்கிறதாலயோ… இந்த போபியா வரும்” என்றார் விளக்கமாக.
சிறு பயத்துடன், “இதுல எதுனால பவித்ராக்கு… இப்டி?” என்று கேட்டான்.
“உங்க வொஃய்ப்வோட பெரியம்மா பொண்ணு ஒருத்தங்க ஸ்டவ் வெடிச்சி இறந்து போயிருக்காங்க. அதோட தாக்கம்தான் இது. கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் எல்லாம் இவங்களோட அம்மா பார்த்துப்பாங்களாம்.
அப்படியே செய்ய வேண்டிய சிச்சுவேஷன் வந்தாலும்… இவங்க ஒதுங்கிகிட்டு இவங்க தங்கச்சிய பண்ண சொல்லிடுவாங்கலாம். அதனால அவங்க வீட்ல யாருக்குமே இது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
கல்யாணம் முடிஞ்சி உங்க வீட்டுக்கு வந்தப்புறமா… சமைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. ஆனா உங்க அம்மாவோ, அண்ணியோ அவங்க கூட இருந்திருக்காங்க. அதனால சமாளிக்க முடிஞ்சிருக்கு. ஆனா உள்ளுக்குள்ள பயம் அதிகரிச்சிக்கிட்டே வந்திருக்கு.
நீங்க தனியா வந்தப்புறம் வீடு கிளீன் பண்ற வேல இருக்குன்னு மூணு நாள் வெளிய சாப்பிட்டதால அவங்களுக்கு ப்ராப்ளம் முதல இல்ல. அதுக்கப்புறம் அவங்க மட்டும் தனியா நின்னு சமைக்கணும் அப்படிங்கிறப்ப… அவங்களால சமாளிக்க முடியலை. அதோட வெளிப்பாடுதான் இதெல்லாம்”
“அப்ப நடந்ததா அவ சொன்னதெலாம்…?”
“கிச்சன்குள்ள காலடி எடுத்து வைக்கவே ரொம்ப பயப்படுவாங்க… அப்போ அதை அவாய்ட் பண்றதுக்கு என்னெல்லாம் செய்யணுமோ அதைச் செய்வாங்க. அவங்க சமைக்காம இருக்கிறதுக்கு கண்டுபிடிச்ச வழிதான்… இப்படி நடந்ததா சொல்றது. ஒருவிதமா சமைக்கிறதலருந்து எஸ்கேப் ஆகிறது”
“இதலாம் அவ இப்ப உங்களாண்ட சொன்னாளா டாக்டர்?”
“ம்ம்ம்”
“என்னாண்ட ஏன் சொல்லல?”
“இப்பத்தான் மேரேஜ் முடிஞ்சதுனு சொன்னீங்க. எப்படிச் சொல்வாங்க? நீங்க என்ன நினைப்பீங்களோனு இன்னொரு பயமும் இருந்திருக்கு. உங்ககிட்ட உண்மையைச் சொல்லாம இருக்கிறதும் பயம்… பொய் சொல்லிக்கிட்டு இருக்கோமேனும் பயம்.
அப்புறம் இதுமாதிரி பயந்தா, அவங்களுக்கு ரொம்பவே வியர்க்கும், உதடு வறண்டு போகும், கோபம் வரும்” என்று இதன் அறிகுறிகளைச் சொன்னார்.
அவன் அமைதியாக இருக்க, “பயப்படாதீங்க. தெரபிஸ் கொடுத்து சரி பண்ணலாம். கொஞ்சம் கொஞ்சமா சமையலுக்கு பழக்கணும். அவங்க கிச்சன்ல இருக்கிறப்போ யாராவது கூட நிக்கணும்” என்றவர், பவியை அழைத்தார்.
சில அறிவுரைகள், வழிமுறைகளை விளக்கமாக சொல்லி, அவர்களை அனுப்பினார்.
**********************
வீடு வரும்வரை செல்வம் எதுவுமே அவளிடம் பேசவில்லை!
அவளோ, ‘எப்போ பேசுவான்’ என்று அவன் முகத்தைப் பார்த்தே வந்திருந்தாள்!!
வீட்டுக்கு வந்ததிலிருந்தே பவித்ரா ஒரே அழுகைதான். வார்த்தைக்கு வார்த்தைக்கு ‘சாரி மாமா, சாரி மாமா’ என மருத்துவரிடம் சொன்னதை அப்படியே செல்வத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போதும் அவன் எதுவும் பேசவில்லை!
அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு, “என்னா நீ சைலன்ட்டா இருக்ற? என்னய எங்க வீட்டுக்கு அனுப்பிடுவியா மாமா? இனிமேட்டு இங்க இருக்க வுடமாட்டியா ஆங்?” என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
அதற்கும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை!
அவனது நெஞ்சில் முகத்தை அழுத்தி, “தெர்ஞ்சிருச்சி… நீ என்னய வேணானு சொல்லப் போற. உன்னய எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னால வேணா நா இல்லாம இருந்துக்க முடியும். நீ இல்லாம என்னால முடியாது” என்றாள்.
உடனே அவளை விலக்கிவிட்டு, “உனக்கே இது அநியாயமா தெர்ல?” என்றான்.
“என்னது?” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.
“நாலு நாள்கூட உன்ன வுட்டு இருந்துக்க முடியாம நேத்து உங்க வீட்லருந்து உன்னய கூப்ட வந்தா, இன்னும் நாலு நா இருந்துக்கின்னு வரவான்னு கேட்டவ… பேசறத பாரு! நான் இவள வுட்டு இருந்துக்குவேனாம். இவ என்னய வுட்டு இருந்துக்க முடியாதாம்”
முப்பது நாள்தான் சேர்ந்து வாழ இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவன் பேச்சில் இருந்த மூச்சிருக்கும் வரை சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் புரிந்ததில்… அவளுக்கு ஒரு ஆசுவாசம் பிறக்க, “அப்பனா என்னய நீ அனுப்ப மாட்டியா?” என்று கேட்டாள்.
“இப்டி ஒரு பயம் இருக்துன்னு என்னாண்ட நேர சொன்னா… நானே சமச்சிருக்க போறேன். அதவுட்டு என்ன கதலாம் சொல்லிருக்க?” என்றவன், “மொதல நீ சொன்னதெலாம் நம்பி நா எவ்ளோ பயந்துக்கினே தெர்யுமா?” என்றான் இறுக்கமாக.
மீண்டும் கண்ணீர் வந்துவிட, “சாரி மாமா… உன்னய ஏமாத்த அப்டி நடந்துக்கல. எனக்குப் பயம்… சமையல்கட்டு, அடுப்பு, தீ பாத்தாலே ரொம்ப பயம். மன்னிச்சிடு. இப்டி எதுனா நா சொல்லிக்கினே இருந்தா, யார்னா பெரியவங்கள இங்க வர சொல்லுவனு நெனச்சேன்.
நானும் எப்படியாது சமச்சிடணும்னு ட்ரை பண்ணேன். ஆனா மாமா உள்ளாற போனாலே கை, கால், உடம்பெலாம் நடுங்கி… வேர்த்திட்டு வந்துரும். வுடனே பயந்துகினு வெள்ள ஓடி வந்துருவேன்.
பொய் சொன்னது… உன்னய கொழப்னது பெரிய தப்புதான். ஆனா அதுக்காக என்னய வுட்றாத மாமா. வீட்டுக்கு வந்தா… உனக்கு என்னால கஷ்டம் மாமா. அதான் எங்க வீட்ல இருந்துக்காவன்னு கேட்டேன்” என்று கேவலுடன் மறுபடி மறுபடி மன்னிப்பு கேட்டபடி இருந்தாள்.
அவளைப் பார்க்க பாவமாக இருக்க, “என்னத்துக்கு சாரி கேட்டுக்கினே இருக்க. போதும். இத வுடு. எனக்கு உம்மேல இப்ப கோவலாம் இல்ல பவி” என்றான் இதமாக.
அவனையே அவள் பார்க்க… அவன் அவள் கண்ணீரைத் துடைக்க… சிலபல வினாடிகள் அப்படியே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
புரிந்து கொள்கிறான் என்ற நிம்மதியுடன், “சமைக்க நீயும் கூட வந்து நிக்கிறயானு, நானு கேட்டேன். நீதான் கவனிக்கல மாமா” என்றுவிட்டு, “இன்னிக்கு எப்டி ஆஸ்பத்திரி கூட்டிப் போனும்னு தோணிச்சி?” என்று விலகிக்கொண்டு கேட்டாள்.
“ம்ம்… காலைல நீ சொன்னது பொய்னு தெர்ஞ்சது” என்று எழுந்துகொண்டான்.
“எப்டி கண்டுபுட்ச்ச?”
“கிச்சனாண்ட ஒட்டிருக்க பேப்பர்லாம் கிழிச்சி போட்ருந்தேன். அந்த பல்லி… மேல் வீட்டு குட்டிஸோடது. தெருவாண்டா நின்னு தூக்கிப் போட்டு வெளாடசொல்ல சன்னல் வழில இங்க வுழுந்திருச்சினு சொல்லி… வந்து வாங்கினு போயிருச்சுங்க.
அப்றமும் அத்தயே நீ சொன்னா எப்டி நம்புவேன்?” என்று அவள் கையில் டம்பளரைக் கொடுத்து, “காபி குடி” என்றான் இலகுவாக.
அவள் அவ்வளவு அழுந்திருந்தாள் அல்லவா? மிகச் சோர்வாகவும் இருந்தாள்! அதன் பொருட்டே… இந்த காஃபி! அவளுடன் பேசிக்கொண்டே காஃபி போட்டிருந்தான்!!
சற்று சரியானவள் காஃபி குடித்தபடி, “நா நெனச்சேன்… பேய் ஓட்டுறவரு வந்துக்கின்னு போனதால எப்டி அப்டிலாம் நடக்கும்னு டவுட் பண்ணியோனு” என்றாள்.
“ப்ச் அதுல்லாம் எனக்கு நம்பிக்க கெடயாது”
“அப்றம் என்னத்துக்கு அதலாம் பண்ண?”
“நீ ஏதோ இருக்குதுன்னு சொன்ன… எங்கம்மா அது பேய்தான்னு நினச்சி பேயோட்ட ஆள் அனுப்பினாங்க. சரி அப்டியாது உன் பயம் போகுமானு பாத்தேன்” என்றவன், “துட்டுதான் வேஸ்ட்டு” என்று அலுத்துக் கொண்டான்.
“அமௌன்ட் சொல்லு… நானே குடுத்துறேன்” என்று சிலுத்துக் கொண்டவள், “மாமா, நம்ம ஒரு டீல் போட்டுக்கலாமா?” என்றாள் கெஞ்சலாக.
“என்னத்துக்கு இப்ப டீல்?”
“இந்த பேயோட்ட ஆன செலவ நா குடுத்திடுவேனாம். அதுக்குப் பதிலா நீ… நம்ம வீட்டு கிட்சன் சரியாயிடுச்சினு உங்க வீட்ல சொல்வியாம்”
“என்னய பொய் சொல்ல சொல்றியா…?” என்றான் விளையாட்டாய்.
“நீ இத ஈஸியா எடுத்துக்கின மாமா… ஆனா பாரு உங்க பேமிலி வாட்ஸ்அப் குரூப்ப, அத்த இங்க இப்டினு மெசேஜ் தட்டிவிட்டதலருந்து இத்தயே பேசிக்கின்னு இருக்காங்க. சமயல் ரூம்ல பெர்ச்சனனாலே இவ்ளோ பேசறவங்க… எனக்குத்தான் பெர்ச்சனனா எவ்ளோ பேசுவாங்க… அதுவும் பயமாருக்குது மாமா”
அவள் சொன்ன விதத்தில் அவன் சிரிக்க, “நா பாவம்ல?” என்று அவள் செல்லமாக பார்க்க, “யார்ரு நீயா!?” என்று செல்வம் கேலி செய்ய, “மாமா…” என்று பவி அன்பாக அழைத்தாள், அடுக்களை அமானுஷ்யம் என்றதை அடுக்களை ரகசியமென மாற்றும் முயற்சியாய்!