ISAI, IYARKAI MATRUM IRUVAR 12.1
ISAI, IYARKAI MATRUM IRUVAR 12.1
இசை… இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 12
மனைவிக்கு??
அவள்தான் சொல்ல வேண்டும்! வெளிப்படையா எதையும் காட்டவில்லை!!
சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன், பேச்சைத் தொடங்கினான்.
“எப்படி இருக்க பாவை? ஏன் ஃபோன் அட்டன் பண்ணலை? அட்டன் பண்ணியிருக்கலாமே? என் மேல அவ்வளவு கோபமா?” என்று பாசம், உரிமை கலந்த கோபம், ஏக்கம், வருத்தம் என எல்லா உணர்வுகளின் கலவையாகக் கேள்விகளை அடுக்கினான்!
எத்தனை உணர்வுகளுடன் கேள்விகள் வெளிவந்தாலும், அவளிடமிருந்து வெளிப்பட்டது திடமான ஒரு மௌனம்தான்!!
சுற்றி இருந்த சுழலலைப் பார்த்தான். சூரியன் வெப்பத்தைப் பொழிந்து கொண்டிருந்த வேளை! சிறு சிறு கடைகள் இருந்தன! ஒன்றிரண்டு வாகனங்கள் போவதும் வருவதுமாய் இருந்தன! கொஞ்சம் ஜன நடமாட்டம் இருந்தது!!
அதனால், “இங்கே நின்னு பேச வேண்டாம்! வா, வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லி, அவள் பெட்டியை எடுத்து காரில் வைத்தான்.
மீண்டும் அவளருகில் வந்து நின்று கொண்டு, “வா போகலாம்” என்றான்.
“பேசணும்னு சொன்னேனே?” என்றே நின்றாள்.
“ஃபர்ஸ்ட் வீட்டுக்குப் போகலாமே பாவை??” என்று கேட்டுப் பார்த்தான்.
“இல்லை! முதல பேசணும்” என்று மறுத்துவிட்டாள்.
“இங்கே நின்னு எப்படிப் பேச?” என்று சட்டென்று கேட்டவன், “கார்ல போய்க்கிட்டே பேசலாமா?” என்று சமாதானக் குரலில் கேட்டான்.
‘சரி’ எனத் தலையசைத்து, காரில் ஏறிக் கொண்டாள்.
அந்தச் சாலையிலிருந்து மஹிந்திரா தார் கிளம்பியது.
அதன் பிறகு,
ஒரு அரைமணி நேரத்திற்கு, தலைநகரின் தார்ச்சாலை! தாரத்திடம் தளும்பும் மௌனம்! இவை இரண்டு மட்டுமே, சிவபாண்டியன் கவனத்தில்!!
அதன்பின்… ஒரு புறநகர்ப் பகுதியில், மரத்தின் நிழலில் வாகனத்தை நிறுத்தியிருந்தான். இருவரும் இருக்கையிலே இருந்தார்கள்! ஆனால், வார்த்தைகள் இல்லாமல் இருந்தார்கள்!!
“பாவை” என்று மௌனத்தை விரட்டும் முதல் வார்த்தையை உச்சரித்தான்!
இருக்கையில் இருந்தபடியே… மெதுவாகத் திரும்பி, அவன் விழிகளைப் பார்த்தாள்.
“எதுக்கு வீட்டுக்கு வெளியே வந்து நின்ன? வீட்லயே இருந்திருக்கலாமே? நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேனே?” என்று மீண்டும் கேள்விகள் கேட்டான்.
அவளிடமிருந்து பதில்கள் வரவில்லை. மேலும், பார்வையை வேறு திசைக்கும் மாற்றவில்லை.
“என்னாச்சு ஹனி? ஏன் இப்படி இருக்கிற? வீட்ல பிரச்சனையா?” என்று கேட்டான்.
அவன் கேள்வியை ஆமோதிப்பது போல் ஒரு சிறு தலையசைப்பு.
“நீ திரும்பி வீட்டுக்கு வந்ததுல ஏதாவது…” என்று, அவன் சொல்லி முடிக்கும் முன்னே, ‘அது இல்லை’ என்பது போல் மறுத்து தலையசைத்தாள்.
“வேறென்ன?”
“திருச்சியிலிருந்து வந்ததுல இருந்தே பிரச்சனை!” என்றாள் முதல் முறையாக வாய் திறந்து!
நெற்றி முடிச்சுகள் மட்டுமே, அவனிடம்!
“வேணிம்மா வீட்ல… வேணிம்மா தவிர யாருக்கும் என்னை பிடிக்காது” என என்றோ சொல்லியிருக்க வேண்டியதை, இன்று சொன்னாள்!
“பிடிக்காதா?” என்று அதிர்ந்தவன், “ஏன்?” என்றான் புரியாமல்!
“கௌசிக்கு போட்டியா, நான் வந்திருவேன்னு நினைச்சி…” என்று தொடங்கி, கிரி குடும்பத்தினரின் கடுமையான பேச்சுக்கள், அதற்கு வேணிம்மாவின் கண்டிப்புகள், அதனால் அவர்கள் ஒதுங்கிக் கொண்டது, தான் ஒதுக்கப்பட்டது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
அனைத்தையும் சொல்லி முடித்த பின்பு, ஓர் அடர் அமைதி இருவரிடமும்!
அமைதியின் முடிவில், அன்று அவளது பாட்டி, ‘நீயும் இப்படிச் சொல்றியே?’ என்று சொன்னது நியாபகத்தில் வந்து நின்றது. உடனே, “ஸோ, நான் உரிமையில்லைன்னு சொன்னது… உன்னையையும் உன் பாட்டியையும் பாதிக்க காரணம் இதுதான்! கரெக்ட்டா?” என்று கேட்டான்.
‘சரியா?’ என்று கேள்வி கேட்டவனுக்கு, ‘சரியென’ பதில் சொல்லுவது போன்ற ஓர் அமைதி, அவளிடம்!!
“முன்னாடியே சொல்லயிருக்கலாமே பாவை! கொஞ்சம் கேர்புல்லா சிச்சுவேஷன ஹேண்டில் பண்ணியிருப்பேனே?” என்றவனின் குரலில் இயலாமையும் இருந்தது! இன்னலும் தெரிந்தது!!
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் முகம், இறுக்கமாக மாறியது.
“நீ ஏன் சொல்லலை??” என்றான் கொஞ்சம் எரிச்சலாக!
‘என்ன பதில் சொல்ல?’ என்று தெரியாத ஓர் மௌனம், அவளிடம்!!
“எத்தனை தடவை பேசு… பேசுன்னு’ சொன்னேன். அப்பெல்லாம் சொல்லாம இருந்திட்டு, இப்ப வந்து…” என்று பாதியிலே நிறுத்தினான்.
“நான் வேணிம்மாகிட்ட கேட்டேன்! அவங்கதான் சொன்னாங்க! ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கோங்க! அதுக்கப்புறம்…” என்றவள் பதில் சொல்லி முடிக்கும் முன்னே, “பாவை” என்றவன் அழுத்திச் சொல்லியதில், அவள் அமைதியானாள்.
பின், “இதை சொல்லியிருந்தாலே போதும். உன்னை நான் புரிஞ்சிருப்பேன்” என்று சங்கடத்துடன் சொல்லி… சன்னல் மேல் கைவைத்து, சாலையைப் பார்த்தான்.
மேலும்… அவளைச் சந்தித்த நாளிலிருந்து, அவள் நடந்து கொண்ட விதங்கள் கண்முன் விரிந்தன்.
‘எனக்காகவா? என்னை கேர் பண்றீங்களா?’ என்று கேட்டது… ‘சண்டை போடக்கூடாது, கஷ்டப்படுத்தக் கூடாது’ என்று சொன்னது… “அக்கறை இல்லையா? அன்பில்லையா?’ என வாதம் செய்தது… அவள் குரலில், அவன் காதிற்குள் ஒலித்தது.
அவையெல்லாம் அன்று நடந்ததுக்கான சலசலப்பு என்று நினைத்தது தவறு எனத் தெரிந்தது! அதற்கு முன், அவள் வாழ்வில் நடந்த சங்கட நிகழ்வுகளின் வெளிப்பாடு என்பதே சரி எனப் புரிந்தது!!
அடுத்த நிமிடமே, அவள் ஏக்கத்தின் வீக்க அளவு புரிந்தது. அது, அவனைத் தரமாகத் தாக்கியது!
சாலையிலிருந்து கவனத்தை எடுத்து, சரிபாதி மேல் வைத்தான்.
பாவையின் காறை எலும்புகள் பாறையாக இறுகியிருந்தன! அது, அவள் கவலையைக் கடினப்பட்டு மறைகின்றாள் என்பதைக் காட்டிக் கொடுத்தன!!
‘அன்பின் ஆரம்பப் பாடத்தில் இருப்பவளுக்கு, அன்பின் அறிவியலைப் புரிய வைக்க நினைத்தது தவறோ?’ என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.
தவறுதான் எனப் பதில் வந்ததும்… சுருக்கென்று வலித்தது, சிவபாண்டியனுக்கு!!
‘அவளுக்கும் வலித்திருக்குமே!’ என்று எண்ணியவன்… தன் வாஞ்சையின் வெளிப்பாடாய், அவள் முகத்தின் முன்னே விழுந்திருந்த ஒன்றிரண்டு முடிகளை ஒதுக்கிவிட்டான்.
மேலும், “அவ்வளவுதான? எல்லாம் பேசியாச்சுல! வீட்டுக்குப் போகலாமா?” என்று சாந்தமாகக் கேட்டான்.
மறுத்து தலையசைத்தாள்.
“இன்னும் பேசணுமா?”
‘இல்லை’ என்பது போல் இருந்தாள்.
“பேச வேறேதும் இல்லைன்னா, வீட்டுக்குப் போகலாமே?”
“நான் வரலை”
“வரலையா?? ஏன்? என்றான் இதமாக!
“ம்ம் வரலை” என்றாள் இலகுவாக! பின், “எனக்குத் தனியா இருக்கணும்னு தோணுது” என்றாள் இடியை இறக்கும் விதமாக!
‘இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?’ என்ற அர்த்தம் செறிந்த மௌனம், அவனிடம்!!
அவள் முடிக்கற்றையிலிருந்து கரத்தை எடுத்துவிட்டு, “வீட்டுக்கு வர பிடிக்கலையா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்றாள் அழுத்தமாக!
“நான் அன்னைக்கு அப்படிப் பேசினதுக்காகவா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்றாள் ‘அதுதான் என்பது’ போல!!
“நீ ‘இங்கே இருக்க பிடிக்கலை-ன்னு’ சொன்னப்புறம்தான்…” என்று தன் பேச்சிற்குக் காரணம் சொல்ல நினைத்தவன், “ப்ச்… இது சரியான காரணம் இல்லை” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
பின், “தப்புதான்! சாரி! ரொம்ப சாரி!!” என்று மன்னிப்பு கேட்டான்.
“எல்லோருக்கும் முன்னாடியும் எப்படிச் சொன்னீங்க?” என்றவள் குரலில், அவன் உண்டாக்கிய காயத்தின் வலி தெரிந்தது.
“சரி! அப்போ எல்லோருக்கும் முன்னாடியும் சாரி கேட்கிறேன். அது உனக்கு ஓகேவா?” என்று, ‘என்ன செய்தால் அவள் வலி போகும் என்ற வழி தெரியாமல்’ கேட்டுப் பார்த்தான்!
“ம்கூம்!! அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.
‘வேறென்ன செய்தால், அவள் மனம் மாறும்’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
“நீங்க அப்படிச் சொல்லிட்டுப் போனதுக்கப்புறம், நான் பிரவீன் அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்டு நின்னேன்” என்றாள் அசௌகரியமாக!
“ம்ம்ம், தெரியும்!”
“அவங்க போனதுக்கப்புறம்… உங்களை பார்க்க வந்தேன். எல்லோரும் உங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஏதோ நான் தனியா இருக்கிற மாதிரி… ஒரு… ஒரு…” என்றவளுக்கு, வருத்தத்தை வரையறுக்க வார்த்தைகள் வரவில்லை!
“அப்படியெல்லம் யோசிக்காத ஹனி!” என்றவன், அவள் வலக்கையின் விரல்களை வலுவாகப் பிடித்து, வாஞ்சையாக வருடிக் கொடுத்தான்.
“அப்புறம் ரூம்க்கு போயிட்டேன்! ஆனா, என்னால திரும்பிப் போக முடியாதுன்னு சொல்ல நினைச்சேன். அதான் ஃபோன் பண்ணேன். நீங்க… நீங்க எடுக்கவே இல்லை!”
“கொஞ்சம் கோபம்! அதான்!!” என்றவனுக்கு, அன்று சரியெனத் தோன்றியது… இன்று தவறெனத் தாக்கியது.
“அப்புறம்கூட, நீங்க வருவீங்க! உங்ககிட்ட எல்லாம் சொல்லணும்-னு மெதுவா எடுத்து வைச்சேன்! ஆனா, நீங்க வரவே இல்லை” என்றாள்… இதயம் படும் பாட்டை மறைக்க, இடக்கை பெருவிரலால் நெற்றிப் பொட்டை அழுத்தியபடி!
“பாவை” என்றழைத்து… ஆறுதலாக, ஆதரவாக அவளது நெற்றியில் நீவிவிட்டான்.
“வீட்டுக்குப் போய்கூட, கொஞ்ச நேரம் நீங்க ஃபோன் பண்ணுவீங்கன்னு நினைச்சேன். ஆனா….” என்று பாதியிலே நிறுத்தினாள்.
மேலும், அவனது விரல்களிருந்து தன் விரல்களை பிரித்தெடுத்துக் கொண்டாள். ‘ஏன் பாவை?’ என்பது போல் ஏக்கமாகப் பார்த்தான்.
பின், ‘வேண்டாம்’ என்பது போல், நெற்றியை நீவிவிடும் அவனது கரத்தை தடுத்து நிறுத்தினாள்.
அவனது ஆறுதலா, ஆதரவோ… அறவே அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு, நகக்கண்ணில் நங்கூரம் இறக்குவது போன்ற ஓர் வலி!
அதே வலியுடன்,, “ரெண்டு நாளைக்கு அப்புறம்தான் யோசிக்கவே ஆரம்பிச்சேன். பால்கனியில, ராக்கிங் சேர்-ல நாம பேசினது… எல்லாம் நியாபகம் வந்தது. அதுக்கப்புறம் அது மட்டும்தான் மைண்ட்-ல! தெரியுமா?” என்று, அன்று தனித்திருந்த தன்னிலை பற்றிச் சொன்னான்.
தானும் வேணிம்மாவும் எதிலும் பற்றில்லாமல் இருந்த கணங்கள் நியாபகத்திற்கு வந்தன, பாவைக்கு!
“உனக்கு எத்தனை டைம் ஃபோன் பண்ணேன்? ஒரு தடவைக் கூட, நீ எடுக்கவே இல்லை!” என்று தன் மனக் குமுறலை, மனைவியின் செயலைக் குறைபட்டுக் கொண்டே சொன்னான்.
“கொஞ்ச நேரம் உங்ககிட்டருந்து ஃபோன் வரும்னு எதிர்பார்த்தேன். வரலைனதும், எதுலயும் பிடிப்பே இல்லாத மாதிரி இருந்தேன்” என்று, அன்றைய தன் மனநிலையைச் சொன்னாள்.
மேலும், ” இப்போ யார்மேலயும் நம்பிக்கையே இல்லை” என்று, இன்றைய தன் மனநிலையையும் சொன்னாள்.
‘நம்பிக்கை இல்லை’ என்ற அவளின் வார்த்தை, முதல் நாள் இருவரும் பேசிய நிமிடத்திற்கு அவனைக் கூட்டிச் சென்றது. ‘உங்க மேல நம்பிக்கை இருந்தால் மட்டுமே அழுவேன்’ என்று அவள் சொல்லியது, நியாபத்திற்கு வந்தது.
மனைவியைப் பார்த்தான். சாலையை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
கஷ்டப்படுகிறாள்… இருந்தும், கண்ணீர் விட மறுக்கிறாள் என்றால்… தன்னை நம்பவில்லை என்று விளங்கியது. ஆணிவேர் என்று நினைத்தவள், வேறாகிப் போகின்ற ஒதுக்கம் தெரிந்தது.
அவனால் பேச்சைத் தொடர முடியவில்லை. ஆனால், அவள் தொடர்ந்தாள்.