ISAI, IYARKAI MATRUM IRUVAR 12.2

ISAI, IYARKAI MATRUM IRUVAR 12.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் 12


“இப்போதான் கொஞ்சம் மனசு மாறியிருக்கு! வேணிம்மா ஆசைப்படி, என்னோட விருப்பப்படி தனியா பாடணும். அதுக்கு என்னென்ன செய்யணுமோ அதைமட்டும் யோசிக்கிறேன். வேறெதையும் யோசிக்க முடியலை” என்று உள்ளத்தில் உள்ளதை அப்படியே உரைத்தாள்.

“தனியா பாடப் போறியா?” என்று கேட்டு, பேச்சின் பாதையை மாற்றப் பார்த்தான்.

“ம்ம்ம்” என்றவள், “என்னோட தனித்தன்மை வெளிப்படணும்-னு வேணிம்மா நினைச்சாங்க. அதனால!” என்று விளக்கமும் சொன்னாள்.

“ஓ!”

“அதைச் சொல்லப் போய்தான், கிரி மாமாக்கு என்மேல பயங்கிற கோபம்”

“கோபமா? அவர் எதுக்கு கோபப்படணும்? நீ பாடறது உன் இஷ்டம்தான?”

“நீங்க சொல்றது சரிதான்! ஆனா, கிரி மாமாக்கு ரொம்ப கோபம்! உன்னால தனியா பாட முடியுமா? என்ன தெரியும் உனக்கு? அப்படி இப்படின்னு நிறைய பேசி, இங்கிருந்து கிளம்புன்னு சொல்லிட்டாங்க”

“இது நடந்தது இன்னைக்கா?” என்று கேட்டவனுக்கு, “ம்ம்ம்! காலையில” என்றவள் சொன்னதும்… முதலில் அவன் கேட்ட, ‘ஏன் வெளியே வந்து நிக்கிற?’ என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.

சட்டென, “போதும் பாவை! நீ வீட்டுக்கு வா, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்” என்று பொறுப்பைக் கையில் எடுக்கப் பார்த்தான்!

“வேண்டாம்” என்றாள் வெறுமையாக!

“ஏன்?”

“வந்தா, திரும்பவும் நான் உங்ககிட்ட ஏதாவது எதிர்பார்ப்பேன்! அதைவச்சி நமக்குள்ள சண்டை வரும். அப்புறம் உங்களுக்கு கோபம் வரும். அப்புறம் திரும்பவும்… நீங்க…” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

” ‘வெளியே போ-ன்னு’ சொல்லுவேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டு முடித்தான்.

“ஆமா” என்றவள், “அப்போ சொல்லும் போதே, ஒரு மாதிரி நம்பிக்கை இல்லாம இருந்தேன்” என்றாள் சங்கடமாக!

“ப்ச் அப்படியெல்லாம் இருக்க கூடாது”

“இல்லை, இப்போ நான் சரியாயிட்டேன்!” என்றாள் சாதாரணமாக!

“சரியாயிட்டேல!? அப்புறம் என்ன? வீட்டுக்கு வரலாமே?”

“திரும்பவும் நீங்க ஏதாவது சொன்னா??” என்று கேள்வி கேட்டவள், “வேணிம்மாவும் இல்லை! கிரி மாமா வீட்டுக்கும் போக முடியாது!! நான் என்ன செய்யவேன்? எங்கே போவேன்?” என்றவள் குரலில், தனக்கெனப் பார்க்க யாருமில்லை என்ற பயம் மண்டிக்கிடந்தது.

‘நானிருக்கிறேன’ என்று சொன்னாலும், தான் நடந்து கொண்ட விதத்தால்… தன்னை நம்பாமல் இருப்பவளிடம் ‘என்ன சொல்லவென்று?’ தெரியாமல் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“யாருக்கு கோபம் வந்தாலும்… எதிர்த்து நான் ஏதாவது பேசினாலும்… உடனே, ‘இங்கிருந்து கிளம்புன்னு’ சொல்றீங்க!” என்று, தன் மீது அன்பில்லாதவர்கள் பட்டியலில் அவனையும் சேர்த்தாள்.

“சொன்னது தப்புதான் பாவை! ஆனா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” என்றான் விருப்பமாக!

“எனக்கும்தான்! உங்களை ரொம்பப் பிடிக்கும்!!”

“அப்புறம் என்ன?” என்றான் வினாவாக!

“நான் சொன்னதை உங்களால நம்ப முடியுதா?”

“ம்ம்” என்றான் விடையாக!

“ஆனா, நீங்க சொன்னதை என்னால நம்ப முடியலை” என்றாள் விரக்தியாக!

“ஏன்?”

“என்னை வெளியே போன்னு சொன்ன யாருக்குமே என்னை பிடிக்காது. திருச்சியில அப்பா சொந்தக்காரங்க… வேணிம்மா வீட்ல கிரி மாமா, மீனாம்மா… இப்படி…” என்று இடையிலே நிறுத்தியவள், ‘இந்த வரிசையில்தான் நீயும் வருகிறாய்’ என்பது போன்ற பார்வை பார்த்தாள்.

“அவங்க என்ன சிச்சுவேஷன்-ல சொன்னாங்க? நான் என்ன சிச்சுவேஷன்-ல சொன்னேன்?? கொஞ்சம் புரிஞ்சிக்கோ பாவை!” என்று மன்றாடினான்.

“எப்பவுமே, புரிய வைக்கிறேன்! புரிஞ்சிக்கோ!! இப்படியே சொல்றீங்க?” என்றவள், “ஏன் ஒரு தடவைகூட என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க?” என்றாள் மனம் நொந்து போய்!

மௌனம் அவனிடம்!!

“இப்போ யார் வீட்லயும் இருக்க பிடிக்கலை. எனக்கே எனக்குன்னு ஒரு வீடு வேணும்னு தோணுது” என்றாள் ஆசையாக! அவசியமாக!!

“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ??” என்றான் உடைந்துபோய்!

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!’ என்பது போல் காட்டுவதற்கு, அவள் மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

அதைக் கண்டவன், “தெரியுது! ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்றான் உருக்குலைந்து போய்!

“இது என்னோட முடிவு! ஆனா, இது சரியா வராதுன்னு நினைச்சீங்கனா, நீங்க யோசிச்சு முடிவெடுங்க” என்றவள், “நான் கொஞ்ச நேரம் வெளியே நிக்கிறேன்” என்று காரிலிருந்து இறங்கி நின்றுகொண்டாள்.

அவன் எதுவம் சொல்லவில்லை. சொல்லும் நிலையிலும் இல்லை. இமை இரண்டையும் மூடி யோசித்தான்.

ஏற்கனவே ‘உரிமையில்லை’ என்ற பேச்சுக்களால் தாக்கப்பட்டிருந்த மனதை… தான் பேசிய பேச்சு மேலும் தாக்கியிருக்கிறது எனப் புரிந்ததும், மனம் வெதும்பினான்.

அவள், அவளைச் சரிசெய்து கொள்ள… அவளை, தான் சமாதானம் செய்ய… கொஞ்சம் அவகாசம் வேண்டுமென நினைத்தான்.

அந்த அவகாசத்தில், தன் அன்பை அவள் புரிந்து கொள்ளும் விதமாக நடக்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.

அதே அவகாசத்தில், அவள் அவளது கனவை நோக்கி முன்னேறிச் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டான்.

ஆனால்… அவளைத் தனியாக விட்டுவிட்டு, தான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? என்ற கேள்வி வந்ததும், ‘கஷ்டம்தான்’ என்பது போல் பெருமூச்சு விட்டான்.

‘அவளை வீட்டிற்கு வரவைக்க, வேறு வழியே இல்லையா?’ என்று மனம் துடித்துக் கேட்டது. ‘வழியிருந்தாலும், அதை அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே?’ என மூளை அடித்துச் சொல்லியது.

அதன்பிறகு,

சற்று நேரத்திற்கு, எப்படி இதைச் செயல்படுத்த?! எப்படித் தங்கள் வாழ்வைச் சரிசெய்ய?! குடும்பத்தினரை எப்படிச் சமாளிக்க? இப்படியான யோசனைகள் மட்டுமே!!

அதன்பின்… காரிலிருந்து இறங்கி, அவளின் எதிரே வந்து நின்றான்.

“முடிவு எடுத்திட்டிங்களா?” என்று கேட்டாள்.

‘ம்ம்’ என்று தலையாட்டினான்.

‘என்ன முடிவு?’ என்பது போன்ற ஒரு பார்வை பார்த்தாள்.

“நீ தனியா இருந்துக்கோ! கச்சேரி பண்ணறதுக்கு ட்ரை பண்ணு” என்றான், தங்களது கல்யாண வாழ்வில் இருக்கும் சிக்கலுக்குள், அவள் கனவு சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில்!

“தேங்க்ஸ்…” என்று சொல்லும் போதே, “பொறு! நான் இன்னும் முடிக்கலை” என்றவன், “எனக்கு சில கண்டிஷன் இருக்கு!” என்றான்.

“கண்டிஷனா?” என்று விழி விரித்தாள்!!

“யெஸ்” என்று சுலபமாகச் சொன்னவன், “ ‘உன்னைத்தான் பிடிக்கும்ன்னு’ சொல்ற பொண்ண, அப்படியே விட்டுட்டுப் போக முடியாது!” என்றான் பலமாக!

“அதுக்கு?!”

“நான் ஃபோன் பண்ணா, அட்டன் பண்ணனும். உன்னைப் பார்க்க வீட்டுக்கு வருவேன். முடியாதுன்னு சொல்லக்கூடாது. ஏதாவது ஹெல்ப் வேணும்னா, உடனே என்கிட்ட கேட்கனும்” என்றான் உரிமையுடன்!

ஏதோ சொல்லவந்தவளை, “இரு! நான் இன்னும் முடிக்கலை” என்றான்.

“சரி சொல்லுங்க”

“எனக்கு உன்மேல அன்பு, அக்கறை இல்லைன்னுதான… சேர்ந்து வாழ முடியாதுன்னு சொல்ற! சப்போஸ், இனி நாம பேசுற நாள்-ல… நான் உன்மேல வச்சிருக்கிற அன்பு- அக்கறையை உணர முடிஞ்சா, அடுத்த செகண்டே சேர்ந்து வாழ ஒத்துக்கணும்” என்றான் அவளின் மீதான அதீத அன்பில்!

“ஏன் இப்படி?” என்று அலுத்துக் கொண்டவள், “அன்னைக்கே வேணிம்மாவும், உங்க அம்மாவும் சொன்னாங்க… நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லைன்னு” என்றாள்.

“அதுக்கு??”

“எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை! நாம ரெண்டு பேரும், ஒரு விஷயத்தை முழுசா பேசிப் புரிஞ்சிக்க முடியுமான்னு?? சிரிச்சி பேசிக்க முடியுமான்னு?! சந்தோஷமா சேர்ந்து வாழ முடியுமான்னு?” என்று கல்யாண வாழ்வில் கடந்து போன கசப்பான நாட்களை வைத்துக் கேள்வி கேட்டாள்.

“பட், எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான், கடந்த காலத்தையே கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தை எப்படிக் கைதட்டி வரவேற்க முடியும் என்பது போல!!

யோசித்தபடியே நின்றாள்.

“உனக்குத்தான் என்னைப் பிடிக்கும்-ல? எனக்கும், உன்னைப் பிடிக்குதுன்னு தெரிஞ்சா, சந்தோஷமா சேர்ந்து வாழ வேண்டியதுதானே? எதுக்கு இவ்வளவு யோசிக்கிற?” என்று கேட்டான்.

அவன் என்ன சொன்னாலும், ‘வெளியே போ’ என்ற அவனது வார்த்தைகள், அவள் இதயத்தை விட்டுப் போக மறுத்தன. இருந்தும், “ம்ம்ம்” என்றாள், முற்றிலும் நம்பிக்கையில்லாமல்!

மேலும், “வீடு பார்த்திருக்கேன்” என்றாள் சிறிதாய் தயக்கத்துடன்!

“ஓ!” என்றான் பெரிதாய் வருத்தத்துடன்!

“உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற டைம்-ல ஃபோன்ல பார்த்து வச்சேன்” என்றாள் சிறிய விளக்கமாய்!

“ஓகோ” என்றான் பெரிய இயலாமையுடன்!

அதன்பிறகு அவளிடம் பேச்சில்லை. தன் ஒற்றை வார்த்தைப் பதில்களில்… அவள் ஒருமாதிரி வாடுவதை கண்டதும், “எந்த ஏரியா?” என்று கேட்டான்.

பதில் சொன்னவள், “கடைசியா பாடின கச்சேரில, அபங் பாடுவியா? பியூசிஷன் ட்ரை பண்ணுவியான்னு? ஒருத்தங்க கேட்டாங்க! இதெல்லாம் சொல்லிக் கொடுக்க, அந்த ஏரியா-ல ட்யூட்டர் இருக்காங்க. அதான், அங்கே வீடு பார்த்தேன்.

அதோட, பெரிசா கச்சேரி எதுவும் இல்லாதப்பவே இதெல்லாம் கத்துக்கிறது நல்லதுதான? அப்புறம் கச்சேரில பிஸியாயிட்ட, கத்துக்க முடியாம போயிடம். அப்புறம் வேற பிளான்ஸும் இருக்குது. அதை சிலர்கிட்ட கேட்டுட்டுதான் சொல்ல முடியும்” என்றாள்.

அவள் பேசியதை வைத்துப் பார்க்கையில், அவளது கனவுப் பாதையில் தெளிவாக இருப்பது தெரிந்தது. யாருடைய உதவியும் இல்லாமல்… தான் உறுதுணையாக இல்லாவிட்டாலும், அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும் திடம் இருக்கிறது என்று புரிந்தது.

அந்த, ‘கச்சேரியில பிஸியாயிட்டா’ என்ற வார்த்தையை நினைத்தவனுக்கு,  நூறு சதவீதம் தன்னம்பிக்கை  இருந்தால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் என்று எண்ணத் தோன்றியது.

“என்ன யோசிக்கிறீங்க?” என்று அவள் கேட்டதும், “ஒண்ணுமில்லை! வா போகலாம்” என்றான். இருவரும் காரில் ஏறினர். மஹிந்திரா தார் நகர்ப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

அதன் பின்,

மூன்று மணிநேரத்திற்கு, வீட்டின் வசதி, பாதுகாப்பைப் பார்த்தல்! வாடகை வீட்டிற்கான நடைமுறைகள்! வீட்டிற்கான அத்தியாவிசியப் பொருட்கள் வாங்குதல்! இவை மட்டுமே இருவருக்கும்!!

கடைசியில்… அறவே மனமில்லை, அவளை அங்கே விட்டுவிட்டுப் போக! இருந்தும், அவள் மனம் மாறும் என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினான்!!

போகும் முன், ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நாம ரெண்டு பேரும் ஒரு விஷயத்தைப் பேசிப் புரிஞ்சிக்க முடியாதுன்னு சொன்ன! பட், பர்ஸ்ட் டைம் நாம பேசி… புரிஞ்சி, ஒரு முடிவெடுத்திருக்கோம்!

தப்பா? சரியா?-ங்கிறதெல்லாம் அப்புறம்!! ஆனா, முழுசா பேசிருக்கோம்’ என்று… அவள் முடியவே முடியாது என்று சொன்ன ஒன்று முடிந்திருப்பதை, கோடிட்டுக் காட்டிவிட்டே சென்றான், பாவையின் பாண்டியன்!!

சிவபாண்டியன் வீடு

“ம்மா” என்றழைத்துக் கொண்டே, உள்ளே நுழைந்தான்.

“கிட்சன்-ல இருக்கேன் கண்ணா” என்றதும், அவசர அவசரமாக வந்தான்.

“என்ன லேட்? அப்பவே வருவேன்னு சொல்லியிருந்த…” என்று கேட்கும் போதே, “அதைவிடுங்க-ம்மா! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷம் சொல்லணும்” என்றான்.

“சொல்லு” என்றார் சமையலில் கவனம் வைத்துக் கொண்டே!

அவரின் கவனம் தன் பேச்சில் இல்லை என்று தெரிந்ததும், “நீங்க பால்கனிக்கு வாங்க பேசலாம்” என்றான்.

“சமைக்கணும் சிவா! அப்பா வந்திருவாங்க” என்று சொன்னார்.

“அதெல்லாம் அப்புறம்” என்று அடுப்பை ஆஃப் செய்து, செண்பகத்தை இழுத்துக் கொண்டு தன் அறையின் பால்கனிக்குச் சென்றான்.

“என்ன சொல்லு?” என்றதும், எல்லாம் சொன்னான்.

‘என்ன இது?’ என்பது போல் அதிர்ச்சி… அதிருப்தி, அவரிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!