Isai, Iyarkai Matrum Iruvar 3.1

Isai, Iyarkai Matrum Iruvar 3.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 3

அடுத்த நாள் காலை

காலை சாப்பாடு நடந்து முடிந்திருந்தது. கிரி, கிருஷ்ணாம்மா, மீனாட்சி மூவரும் வரவேற்பறையில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கேயே, தரையில் அமர்ந்து… பாவையும் கௌசியும் சிற்சில இசைப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அக்கணம்… கலையும், சங்கரும் கடைக்குக் கிளம்பித் தயராகி வந்து நின்றனர்.

“ம்மா நான் கிளம்புறேன்” என்று கலை சொன்னதும், “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் உட்காருங்க, பேசணும்” என்றார் கிருஷ்ணாம்மா.

“என்ன பாட்டி?” என்று கலை கேட்டாலும், இருவரும் அமர்ந்தனர்.

இருவரும் அமரும் போதே, “என்ன-ம்மா?” என்று கேட்டார் கிரி!

பாவை, கௌசி இருவரும் இவர்களது பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

“கிரி, நாளைக்குப் பாவையைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அப்படியே கல்யாணத் தேதியும் குறிக்கனும்” என்று கிருஷ்ணாம்மா ஆரம்பித்தார்.

“மீனா சொன்னா-ம்மா” என்றார். ஆனால், அதற்குமேல் எதுவும் பேசவில்லை. விருப்பமும் காட்டவில்லை.

“கிரி” என்று, கிருஷ்ணவேணி மீண்டும் அழைத்தார்.

“சொல்லுங்க-ம்மா”

“எனக்கு ஒரு உதவி வேணும்?”

“என்ன-ம்மா, இப்படிக் கேட்கிறீங்க? என்ன செய்யணும்-னு சொல்லுங்க செய்றேன்” என்றார்.

“நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்கள, அதுக்கு ஏதவாது கேட்பாங்க” என்றார் மீனாட்சி.

“அதெல்லாம் நானே பார்த்துப்பேன். நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்” என்றார் கிருஷ்ணாம்மா வெடுக்கென்று!

“நீ பேசாம இரு” என பட்டென்று, தன் அக்காவிடம் சொன்ன கிரி, “நீங்க சொல்லுங்கம்மா” என்றார் பாந்தமாக!

“இவன்” என்று, அங்கே அமர்ந்திருந்த சங்கரைக் கை காண்பித்து… “மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்றப்போ, இங்கே இருக்க கூடாது” என்றார் கிருஷ்ணாம்மா. சங்கர் இருந்தால், ஏதேனும் பிரச்சனை செய்வானோ என்ற பயம். ஆதலால், இப்படி ஒரு கோரிக்கை!

“அவன் வீட்ல அவன் இருக்கக் கூடாதா? நல்லா இருக்கு” என்று, மீனாட்சி கோபமாகச் சொல்லிவிட்டு, சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்யச் சென்றார். அங்கிருந்து கால்கள் சென்றாலும், அவருடைய காதுகள் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

“நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கதான் இருப்பேன்” என்று சொன்ன சங்கர், “ப்பா, நான் கடைக்குக் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லாதது போல் கலையும் கௌசியும் இருந்தனர்.

‘ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்ற ஆற்றாமை வந்தது, கிருஷ்ணாம்மாவிற்கு! ஒரு நல்ல நிகழ்வைப் பற்றிப் பேசும் இப்படிச் செய்வார்களா? என்ற ஆதங்கமும் வந்தது. ஆனால், அவரின் இப்போதைய தேவை பாவையின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும். ஒரு பெருமூச்சுடன் கிரியைப் பார்த்தார்.

“என்ன வேணும்னு சொல்லுங்க-ம்மா?” என்றார் கிரி சாந்தமாக!

ஆம், சாந்தமாகத்தான்! பாவையை, கிரி எப்படி நடத்துகிறார் என்பது வேறு விடயம்! ஆனால், அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்வார்!!

“கிரி! எவ்வளவு சீக்கிரமா கல்யாணம் நடத்த முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிச்சிருவேன். அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா…”  என்று நிறுத்தியவர், “அமைச்சிக் கொடுத்திட்டா… கொடுத்திட்டா போதும். எனக்கு நிம்மதி!” என்று உணர்ச்சி வசப்பட்டார்.

கிரி, தன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

“சங்கர் இருந்தா, ஏதாவது பிரச்சனை பண்ணுவானோனு பயமா இருக்கு. அதான்!” என்று உண்மையைச் சொன்னவர், “அவன் எவ்வளவு விருப்பபட்டுக் கேட்டாலும், பாவையை அவனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.

கிருஷ்ணாம்மா… இப்படிச் சொல்லக் காரணம், பாவையை சங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவளின் இசை வாழ்வில்… கிரி மற்றும் கௌசியின் தலையீடு இன்னும் அதிகமாகும். மேலும், சங்கர் பாவையை நன்றாகக் கவனித்துக் கொள்வான். ஆனால், மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள்?

அது கேள்விக்குறிதானே! ஆதலால், சங்கரின் விருப்பத்திற்கு வேணிம்மா மதிப்பு கொடுக்கவில்லை! இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது… பாவைக்கு, சங்கரின் மேல் எந்த ஒரு பிடித்தமும் இல்லை என்பதுதான்!!

“எங்களுக்கும், பாவையை இந்த வீட்டு மருமகளாக்க கொஞ்சமும் விருப்பம் கிடையாது” என்று தன் மகனைச் சொன்னதற்காக நறுக்கென்று பேசிய கிரி, “நாளைக்கு மாப்பிள்ளை வீட்லருந்து வர்றப்போ, சங்கர் இங்க இருக்க மாட்டான்” என்றார் நம்பிக்கையாகச் சொன்னார்.

கிரி… இப்படிச் சொல்லக் காரணம், சங்கரைப் பாவைக்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் இந்த வீட்டுப் பெண் ஆகிவிடுவாள். அதன்பின், இந்த வீட்டில் அவளுக்கென்று ஒரு உரிமை கிடைக்கும். அது, கௌசியின் இசை வாழ்வில் தலையீடு செய்யும் அளவிற்குப் பாவைக்குத் தைரியத்தைக் கொடுத்துவிட்டால்?! ஆதலால், சங்கரின் விருப்பத்திற்கு கிரி மதிப்பு கொடுக்கவில்லை!!

எல்லாவற்றையும், பாவை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

ஓர் அமைதி நிலவியது.

தன் அம்மாவின் முகத்தைப் பார்த்த கிரி, “எப்போ வர்றாங்க-ம்மா?” என்று கேட்டார்.

“நாளைக்கு பதினொன்றைக்கு மேல. அப்புறம் நாளைக்கே கல்யாணத் தேதி குறிச்சிடுவோம்” என்றார்.

“ம்ம்ம்” என்றவர், “கல்யாணம் நடத்திறதைப் பத்தி…” என்று கேட்டார்.

கிரி… சாப்பாட்டு மேசையின் அருகில் நின்ற மீனாட்சி… கலை மற்றும் கௌசி… பாவை என எல்லோரும் கிருஷ்ணம்மாவைப் பார்த்தனர்.

“என்னோட சேவிங்ஸ் வச்சி நடத்திருவேன். அப்புறம் எங்கிட்ட இருக்கிற நகையே…” என்று சொல்லி முடிக்கும் முன்பே,

“ம்மா! அப்போ கௌசிக்கு? ரதிக்கு?” என்று சுள்ளென்று கேள்வி கேட்டார், மீனாட்சி!!

“மீனா! பணமோ, நகையோ மூணு பேருக்கும் சமமா பிரிச்சிக் கொடுப்பேன்” என்றார் வேணிம்மா சட்டென!

மீண்டும் ஓர் அமைதி நிலவியது.

“ம்மா” என்றார் கிரி.

‘என்ன?’ என்பது போல் கிருஷ்ணாம்மா பார்த்தார்.

“கல்யாணம் சிம்பிளா பண்ணலாம்”

“நாம எப்படி அதை முடிவு பண்ண முடியும் கிரி? பையன் வீட்ல என்ன சொல்வாங்களோ?”

“ம்மா, நீங்க நாளைக்குப் பேசுங்க!” என்றவர், “கல்யாண வேலையெல்லாம் நானே பார்த்துகிறேன். நீங்க எதுக்காகவும் அலையக் கூடாது. ஆனா, கல்யாணம் சிம்பிளாதான் நடத்தணும்” என்று சொல்லிவிட்டு, எழுந்தார்.

மேலும், “நகை உங்க இஷ்டப்படி பிரிச்சுக் கொடுத்துகோங்க” என்று சொல்லிவிட்டுச் செல்லப் போகும் போகுது… கௌசி, தந்தையைப் பார்த்தாள். ‘என்ன?’ என்பது போல் கிரி கண்களால் கேட்டார்.

‘அப்புறமாகச் சொல்கிறேன்’ என்று, கௌசியும் கண்களால் பேசினாள்.

‘சரி’ என்பது போல் கிரி சென்றுவிட்டார். மீனாட்சியும், மதிய சமையலுக்கான வேலையைப் பார்க்கச் சென்றார்.

கிருஷ்ணாம்மாவிற்குக் கிரி சொல்ல வந்த விடயம் புரிந்தது. கௌசிக்கு நடந்தது போல், பாவைக்கும் திருமணம் நடத்திட மனமில்லை என்று!

இருந்தும், தனக்காக… தான் அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று திருமணப் பொறுப்பையெல்லாம் ஏற்றுக் கொண்ட மகனை நினைத்து கொஞ்சம் சந்தோசமே! கூடவே, இதை எப்படி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்ல? அவர்களை இதை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கவலையும் வந்தது.

மனம் ஒருமாதிரி சஞ்சலத்தில் இருந்ததால், “பாவை, கோயிலுக்குப் போகலாமா?” என்று வேணிம்மா கேட்டார்.

“ம்ம்” என்று தலையசைத்துப் பாவை எழுந்தாள்.

“கௌசி நீ வர்றியா?” என்று கேட்டதும், “இல்லை பாட்டி! நான், இவங்களோட சாயங்காலம் போயிக்கிறேன்” என்று கலையைக் காட்டினாள்.

“சரிம்மா” என்று சொல்லி, பாவையை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றார். கௌசி, சொன்னதைக் கேட்டுக் கொண்டே, அவளைப் பார்த்துக் கொண்டே… பாவை, வேணிம்மாவுடன் சென்றாள்.

அறைக்குள் வந்ததும்

“எல்லா நல்லபடியா நடக்கும். இனிமே நீ சந்தோஷமா இருப்ப” என்று பாவையின் கன்னத்தைப் பிடித்துச் சொன்னார்.

தலையாட்டிச் சிரித்தாள்!

“சரி, கோவிலுக்கு கிளம்பு” என்று சொல்லி, அவர் சென்றதும்,

பாண்டியன் நியாபகம் வந்தது. பின், ‘பாண்டியன்’ என்று சொல்லிக் கொண்டாள். உடனே, பாவையின் இதயத்தில் பாண்டியனை நினைத்து சாரல் அடித்தது. குனிந்து இதயத்தைப் பார்த்தாள்!

கைப்பிடி அளவு இதயத்திற்குள்… காதல் கால் முளைத்து ஓடிக் கொண்டிருந்தது. இனிமேல், அதைக் கட்டி வைக்க முடியாது என்பதால், கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

சுருக்கமாக, பாண்டியன் பாவையின் ஜீவஸ்வரமாகிப் போனான்!!

இதே நாளின் சாயங்கால நேரத்தில், சிவா வீட்டில்

சிவா வெளியே சென்றிருந்தான்.

மதியழகன், நளினி இருவரும் வீட்டில் இருந்தனர். கூடவே, பிரவீனும் இருந்தான். மாலை நேரத்தின் காஃபியைக் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். எல்லாம் திருமணப் பேச்சாகத்தான் இருந்தது.

“மாமா… அப்பா, அம்மாவையும் நாளைக்கு வரச் சொல்லலாமா?” என்று பிரவீன் கேட்டான்.

“ம்ம்ம்” என்று மதி சொல்லும் போதே, கொஞ்சம் சிற்றுண்டியுடன் செண்பகம் வந்தார்.

“அப்போ நான் வீட்ல சொல்லிடுறேன்” என்று பிரவீன் சொன்னதற்கு,

“சிவாப்பா” என்று அழைத்த செண்பகம்… “நாம ரெண்டு பேரும் போய் சம்பந்திகிட்ட சொல்லிக் கூப்பிடலாம். அதான் மரியாதை” என்றார்.

“சரி செண்பகம்” என்ற மதி, “அம்மா அப்பா வீட்ல இருக்காங்களா, மாப்பிள்ளை?” என்று பிரவீனிடம் கேட்டார்.

“இருக்காங்க மாமா” என்று பிரவீன் சொன்னதும், “எப்போ போய் சொல்லலாம்?” என்று செண்பகத்திடம் கேட்டார், மதியழகன்.

“சிவா வரட்டும்… அதுக்கு அப்புறமா போயிட்டு வந்திடலாம்” என்று காஃபியைக் குடித்தார், செண்பகம்.

“அண்ணா எங்கம்மா?” என்று நளினி கேட்டாள்.

“மத்தியானமே போனான். இன்னும் காணோம். எங்க போறேன்னும் சொல்லலை” என்றார் செண்பகம் வாசலைப் பார்த்துக் கொண்டே!

மேலும், “சிவா… மேரேஜ் சிம்பிளா இருந்தா போதும்னு சொன்னான்” என்றார் செண்பகம்!

‘அது தெரிஞ்சதுதான!’ என்பது போல்தான், மூவரும் இருந்தனர்.

“ஆனா, அவங்க பெரிய குடும்பம். இதுக்கு ஒத்துக்குவாங்களான்னு தெரியலை” என்று கொஞ்சம் சஞ்சலம் கொண்டார்.

“நாளைக்குப் பேசிக்கலாம் செண்பகம்” என்றார் மதியழகன்.

அவருக்குப் பையனின் விருப்பம்தான் முக்கியம். அவருக்கு மட்டுமல்ல, மற்ற மூவருக்குமே சிவாவின் விருப்பம்தான் முக்கியம்!

சிற்றுண்டி சாப்பிடும் போதே, சிவா வந்தான்.

உள்ளே நுழைந்ததும், “எங்க அண்ணா போயிருந்த?” என்று நளினி கேட்டாள்.

செண்பகமும் பிரவீனும் மதியும்… அவன் கையில் இருந்த போன்சாய் மரத்தைப் பார்த்தனர்.

“இது வாங்கப் போனேன்” என்று, கையிலிருந்த போன்சாய் மரத்தைக் காட்டிவிட்டு, வேகமாக அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

‘இன்றைக்கு, ஏன் இவன் இப்படி?’ என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  பின், ஒரு முடிவுக்கு வந்தது போல், நால்வரும் எழுந்து அவனது அறைக்குள் சென்றனர்.

சிவா அறை பால்கனியில்

கண்ணாடிக் கதவின் அருகே மதி நின்று கொண்டார்.

மாலை நேரத்தின் காற்று, அங்கிருந்த அனைத்து வகை போன்சாய் மரங்களின் மீது பட்டு… அனைவரையும் தழுவிச் சென்றது.

கையில் தொட்டியுடன் சிவா நின்றான். அவனைச் சுற்றி நளினி, பிரவீன் மற்றும் செண்பகம் நின்றனர்!

“இது என்ன கண்ணா?” என்று செண்பகம் கேட்டார்.

“இது போன்சாய்” என்றான்.

“அது தெரியாத எங்களுக்கு? என்ன வெரைட்டின்னு சொல்லு-டா” என்றான் பிரவீன்.

“அது… ” என்று தயங்கியவன், “இருங்க வச்சிட்டு சொல்றேன்” என்று சொல்லி, அவர்களிடமிருந்து விலகி… அதை வைப்பதற்குத் தகுந்த இடம் தேடினான்.

அண்ணனின் அருகில் சென்ற நளினி, அவன் கையிலிருந்த தொட்டியை வாங்கி… அதில் இருந்த மரத்தின் பேரை வாசித்தாள். “ஹனி லோக்ஸ்ட்” என்று எழுதியிருந்தது.

“ம்மா, இது பேரு ஹனி லோகஸ்ட்” என்றாள், செண்பகத்தை நோக்கி!

“நேத்து ஐபேட்-ல பார்த்தோமே! அதானா?” என்று செண்பகம் கேட்டார்.

“ஆமா-மா! அதேதான்” என்றான்!

“இப்போ எதுக்கு அதை வாங்கிட்டு வந்த?” என்று நளினி, கொக்கி போன்ற கேள்வி கேட்டாள்.

“ம்ம்ம், வளர்கிறதுக்குத்தான்” என்று கொக்கியில் மாட்டாமல் பதில் சொன்னான்.

அவள் நம்பவில்லை! ஏன், அங்கிருந்த யாரும் நம்பவில்லை!!

“ம்மா, இவன் வேற எதுக்கோ வாங்கிட்டு வந்திருக்கான்” என்று நளினி சந்தேகமாகச் சொன்னதும்… பிரவீனுக்கும், செண்பகத்திற்கும், மதிக்கும் புரிந்தது.

மனைவியாக வரப் போகிறவள் பெயரையும், மரத்தின் பெயரையும் சம்பந்தப் படுத்துகிறான் எனப் புரிந்ததால், மூவரும் லேசாகத் சிரித்தனர்.

“அண்ணா சொல்லு… சொல்லு.. எதுக்கு இப்போ இதை வாங்கிட்டு வந்த?” என்றாள் நளினி விடாமல்!

“ஆமா-டா! சொல்லியே ஆகணும்” என்று பிரவீனும் பிடித்துக் கொண்டான்.

மகள் மற்றும் மருமகனினைப் பார்த்து, “போதும் போங்க” என்று விளையாட்டாய் விரட்டினார், செண்பகம்.

இருந்தும் இருவரும் அங்கிருந்து நகரவில்லை.

செண்பகம் சிவாவின் அருகில் வந்தார்.

“கண்ணா” என்றார் கரிசனமாக!

“ம்ம்” என்றான் கவனமாக!

“ஒன்னு கேட்கணும்” என்றார் கருத்தாக!

“சொல்லுங்கம்மா” என்றான் கனிவாக!

அவன் கையில் வைத்திருந்த தொட்டியைக் காட்டி, “இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் கேர் எடுக்கணுமா? இல்லை, எல்லா மரமும் மாதிரிதானா?” என்று காலை வாரினார்!

பிரவீனும் நளினியும் சிரித்தனர். இதைக்கேட்டு, கண்ணாடிக் கதவின் அருகே நின்ற மதியும் சிரித்தார்.

“ம்மா! நீங்களுமா?” என்று சிவாவும் சிரித்துவிட்டான்.

அவன் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த செண்பகம், “இப்படியே சந்தோஷமா இரு கண்ணா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் அவனின் சந்தோஷம் மிகவும் முக்கியம்!

அவர்கள் அனைவரும் சென்றதும்,

தன் கையிலிருந்த ‘ஹனி லோகஸ்ட்’ போன்சாயை ஒரு பலகையின் மேல் வைத்துவிட்டு, அதன் முன் அமர்ந்தான்.

பாவையின் முகம் கண் முன்னே வந்து நின்றது. ‘நீ எப்படின்னு?’ கூட தெரியாது. ஆனா, ‘நான் இப்படி இருக்க காரணம், நீதான்’ என்று நினைத்தான். பின், ‘ஹனி’ என்று சொல்லிக் கொண்டான்.

உடனே, பாண்டியன் இதயம் பாவையை நினைத்து தாளம் போட்டது! குனிந்து இதயத்தைப் பார்த்தான்!!

கைப்பிடி அளவு இதயத்திற்குள்… காதல் அடைந்து கிடக்க முடியாமல், தலைதூக்கி வெளியே வரப் பார்த்தது. இனிமேல்… அதைத் தட்டி வைக்க முடியாது என்பதால், மெல்ல தன் கரங்களால் தட்டிக் கொடுத்துக் கொண்டான்.

சுருக்கமாக, பாவை பாண்டியனின் ஆணிவேராகிப் போனாள்!!

அடுத்த நாள் காலை

ஒரு பத்து மணி அளவில்… கலை, சங்கரை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான். ‘வரமாட்டேன்’ என்று சொன்னவனை, வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய்விட்டான்.

அவனின் மறுப்பைப் பார்த்த கிருஷ்ணம்மா, ‘இவன் இப்படி இருக்கிறானே?’ என்று கோபம் வந்தது. மேலும், ‘நல்லபடியாகப் பாவையின் திருமணம் முடிய வேண்டும்’ என்று இறைவனை மனதார வேண்டிக் கொண்டே இருந்தார்.

மற்றவர்களிடம் பேசும் நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் மந்திரங்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

பெண் பார்க்கும் படலத்திற்காக, வீடு கொஞ்சம் தயாரானது.

கிருஷ்ணம்மாவைப் பார்க்க இசைக்கலைஞர்கள் அடிக்கடி வந்து போகும் வண்ணம் இருப்பதால்… எப்பொழுதும், பிரமாண்டமாகக் காட்சி அளிக்கும் வரவேற்பறைதான். காலையிலே விளக்குகள் போடப்பட்டிருந்ததால், இன்று இன்னும் ஜொலி ஜொலித்தது!

நல்ல வேலைப்பாடுகளுடனும், வளைவு நெளிவுகளுடனும் கூடிய பளபளக்கும் பெரிய பெரிய திவான்கள். இவை அடர் பச்சை நிறத்தில் இருந்தன. உருளை வடிவ தலையணைகள் போடப்பட்டிருந்தன. இவை அடர் செம்மண் நிறத்தில் இருந்தன.

அதே நிறத்திலான வெல்வெட்டாலான தரை விரிப்புகள்!

சுவர்கள் முழுதும், கிருஷ்ணாம்மாவின் இளமை கால கச்சேரிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள், தங்க நிற சட்டமிடப்பட்டு, மெல்லிய விளக்கொளியின் கீழே மாட்டப்பட்டிருந்தன.

அறையின் மூலைகளிலெல்லாம், சாமந்தி மாலைகள் போடப்பட்ட இடுப்பளவு உயர கடவுளின் சிலைகள்!

கிருஷ்ணம்மா, கிரி, கிரியின் மனைவி… மூவரும் தயாராகி வரவேற்பரையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். மீனாட்சியும், கௌசியும் அவரவர் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

பாவை, தன் அறையில் இருந்தாள். உள்ளுக்குள் ஓர் படபடப்பு! பாண்டியனை நேரில் காணப் போகிறோமே என்றதால் வந்த படபடப்பு!!

சற்று நேரத்திற்குப் பின்…

சிவா வீட்டிலிருந்து வந்துவிட்டனர். கிரி மற்றும் கிரியின் மனைவி இருவரும் சேர்ந்து, அவர்கள் அனைவரையும் முறையாக வரவேற்றனர்.

உள்ளே வந்தவர்களை, கிருஷ்ணாம்மாவும் மீனாட்சியும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.

ஒரு ஐந்து நிமிடத்தில்…

மதியழகன், கிரி ஒரு பக்கம்… செண்பகம், சிவா, நளினி ஒரு புறம்… பிரவீனும், அவனது பெற்றோர்களும் மற்றொரு பக்கம் …. கிருஷ்ணம்மா, மீனாட்சி மற்றொரு புறம்…. இப்படித்தான் அமர்ந்து கொண்டார்கள்.

கௌசியும், அவளது அம்மாவும் வந்தவர்களை உபசரிக்க வேண்டுமென்று சமயலறைக்குள் புகுந்தனர்.

மதியழகன், தன் குடும்பத்து உறுப்பினர்களை கிருஷ்ணம்மாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

தன் வீட்டின் உறுப்பினர்களை அறிமுகப்படுத்திய கிருஷ்ணாம்மா, “மீனாட்சி பொண்ணு ரதி ஹாஸ்டல்-ல தங்கி படிக்கிறா. அப்புறம், அவ வீட்டுக்காரர் பக்கத்து ஊர்ல வேலை பார்க்கிறாரு. சனி ஞாயிறுன்னா வருவாரு” என்றார்.

“ஓ!” என்ற செண்பகம், “பசங்க எங்க இருக்காங்க?” என்று கலை மற்றும் சங்கர் பற்றிக் கேட்டார்.

“கடையிலே கொஞ்சம் வேலை. அதான் அனுப்பியிருக்கேன்” என்று கிரி சமாளித்தார்.

‘சரி’ என்பது போல் சிரித்துக் கொண்டார், செண்பகம்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

“கௌசி” என பின்னாடி நின்று கொண்டிருந்தவளின் கைப் பிடித்து, “போ… போய் பாவையைக் கூட்டிட்டு வா” என்றார், கிருஷ்ணாம்மா.

‘ம்ம்’ என்று தலையசைத்தவள், பாவையின் அறைக்குச் சென்று… “பாட்டி உன்னைக் கூப்பிடறாங்க. வா” என்று அழைத்தாள்.

கௌசியுடன் சேர்ந்து பாவை வரவேற்பறை வந்தாள்.

அடர் இளஞ்சிவப்பு வர்ண பட்டுப்புடவை. இருபுறமும் அரையடி அகலத்தில் அடர் மஞ்சள் நிறத்திலான கரை இருந்தது. அந்தக் கரை முழுவதும், தங்க நிற இழைகளால் அன்னப் பட்சியின் உருவம் நெய்யப்பட்டிருந்தது.

நேர்த்தியான மடிப்புகளுடன் புடவை உடுத்தியிருந்தாள்!!

உடைக்கு ஏற்றார் போல், ஆபரணங்கள்! தோடு, அட்டிகை, நெத்திச்சூடி, ஒட்டியாணம்… இரு கைகளிலும் வளையல் என்று கிட்டத்தட்ட மணப்பெண் போல் இருந்தாள்.

‘வாம்மா’ என்று வேணிம்மா அழைத்ததும்… அவர் அருகில் சென்று, பாவை அமரப் போனாள்.

அதற்குள், “இங்கே வா பாவை” என்று செண்பகம் அழைத்ததும், பாவை வேணிம்மாவைப் பார்த்தாள்.

“போ… கூப்பிடறாங்கள. போய் உட்காரு” என்று வேணிம்மா சொன்னதும், பாவை சென்று செண்பகம் அருகில் அமர்ந்தாள்.

அமரப் போகும் முன்பு, ஒருமுறை பாண்டியனைப் பார்த்தாள். அதே கணத்தில், பாண்டியனும் பாவையைப் பார்த்தான்.

அவரவர் விழிகளில் தெரிந்த காதலை, அடுத்தவர் உணர்ந்து கொண்டனர். அந்த நொடியில், படபடத்த இதயத்தில் இருவருக்கும் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன!!

ஒருபுறம் மகன்… மறுபுறம் மருமகள்… செண்பகம் சந்தோஷமாக இருந்தார்!

‘இது போதும்’ என்று இருந்தது, இதைப் பார்த்த வேணிம்மாவிற்கு!

செண்பகம் கேட்கும் கேள்விகளுக்கு, ‘ம்ம்’, ‘ம்கும்’ என்று மட்டும் பாவை பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளின் பதில்களைக் கேட்ட பாண்டியன், ‘அமைதியான பொண்ணு போல’ என நினைத்துக் கொண்டான்.

அக்கணம், “நீங்க ஏன் உங்க அப்பா பிசினஸ் பார்க்கலை??” என்று சிவாவிடம், கிரி கேட்டார்!

அந்த நேரத்தில், அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. இருந்தும், “இன்டெர்ஸ்ட் இல்லை” என்று மட்டும் சொன்னான், சிவா!

சற்று நேரத்தில்… வீட்டின் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, பாவை பாண்டியன் இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று நினைத்து, அவர்கள் இருவருக்கும் தனிமை தந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!