ISSAI,IYARKAI & IRUVAR 1.1

PhotoGrid_Plus_1603258679672-d0061634

ISSAI,IYARKAI & IRUVAR 1.1

இசை… இயற்கை மற்றும் இருவர்!

 அத்தியாயம் – 1


ஒரு அரங்கம்! சிறிய அங்கம்தான்! அரங்கம் முழுதும் பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர்! கர்நாடக சங்கீ தத்தை ரசித்துக் கேட்டிடும் பார்வையாளர்கள்!!

அரங்கத்தின் மேடையில்,

மேடையின் ஒரு ஓரத்தில், ஆள் உயர குத்துவிளக்கு! ஆரஞ்சு வர்ண சாமந்திப் பூக்கள் சுற்றப்பட்டு, தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன! விளக்கின் திரி மற்றும் தீபத்திலிருந்து வரும் நறுமணம், அந்த மேடை முழுவதும் நடமாடிக் கொண்டிருந்தது!!

மேடையின் பின்புறம், அடர் நீல நிறத்தில் இருந்த திரைச்சீலை! அதில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற செவ்வந்திப் பூக்களின் தோரணங்கள்!!

மேடையின் மேற்புறம், ஏழு மஞ்சள் நிற விளக்குகள்! ஒரு மெல்லிய கம்பியிலிருந்து, சீரான இடைவெளியில் தொங்க விடப்பட்டிருந்தன!!

மேடையின் நடுவில்… ஒரு பெரிய சிவப்பு ஜமுக்காளம் விரித்து, அதில் இசைக் கச்சேரிக்கான ஆட்கள் அமர்ந்திருந்தனர். ஒருபுறம், மிருதங்கம் மற்றும் வயலின். மற்றொரு புறம், வீணை மற்றும் கடம்.

நடுவில் இரு பெண்கள்!! அரை அடி அகலத்தில் இருபுறமும் கரை வைத்தப் பட்டுப்புடவை! கழுத்தில் அட்டிகை!  காதினில் பெரிய குடை போன்ற ஜிமிக்கி! அழுந்தத் தலை வாரி, பின்னலிட்டிருந்தனர்! அதில் அதிகமாகவே மல்லிகைச்சரம்! கடைசி வரிசையில் உள்ளவர்களுக்கும் முகம் பளிச்சென்று தெரியும்படியான ஒப்பனைகள்!!

மற்றும் அவரவருக்குத் தேவையான உயரத்தில் மைக் அமைப்பாடுகள்!!

“செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த ராமானுஜ கிளிகன்னி” என்று ஒரு பெண் சொன்னதும், கச்சேரி ஆரம்பமானது!

இரு பெண்களும் சேர்ந்து பாட ஆரம்பித்தனர்.

“ஆதிசேஷன் அம்சம்மடி ஆண்டாளின் அண்ணனடி

ஆளவந்தாருக்கு அடிமையடி கிளியே

எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி” என்று வலது கை போடும் தாளத்திற்கு ஏற்ப, இடது கை காற்றில் அசைந்தாட பாடினார்கள்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த சிலர், அவர்கள் இருவரும் பாடுவதைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிலும் ஒரு வயதான பெண்மணியின் முகத்தில் பெருமை கூடுதலாகவே தெரிந்தது. அவர்களின் குருவல்லவா? ஆதலால், அந்தப் பெருமை!

கூடவே, அவர் முகத்தில் நிரம்ப மகிழ்ச்சியும் தெரிந்தது. அவர்கள் இருவரின் பாட்டி அல்லவா! அது தரும் ஆனந்தம்!!

“அரங்கனின் அடிமையடி வேங்கடத்து வேதியனடி

பெரும்புதூர் வள்ளலடி கிளியே

எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி” என்று பாடும் பொழுது, இருவரும் தத்தம் பக்கமிருந்த இசைக் கலைஞர்களைப் பார்த்துப் புன்னகைத்துப் பாடினார்கள்.

“தேவராஜ தாசனடி… ” என்று ஆரம்பித்து, “சுவாமி யதிராசனடி” என்று முடிக்கும் பொழுது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நாரணனை காட்டினான்டி” என்று கண்களை மூடி, உச்ச சாயலில்  தொடங்கி, “சுவாமி யதிராசனடி” என்று முடிக்கும் பொழுது, கண் திறந்தார்கள்.

“சென்னிய சூடுவாரை வைகுந்ததில் வாழவைக்கும்

உய்யும் வழி அதுவே கிளியே

எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி” என்று கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டே பாடிட, “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று இருவரும் இருகரம் கூப்பி, ஒரு சேரச் சொல்லி, சிரித்த முகத்துடன் பாடலை நிறைவு செய்தார்கள்.

அவர்கள் எழுந்து கொண்டதும், அதற்கடுத்து இசை நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஒரு ஒன்றரை மணி நேரத்திற்குப் பின், நிகழ்ச்சி முடிந்தது. பார்வையாளர்கள் ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.

அடுத்த கால் மணிநேரத்தில், அரங்கம் காலியானது. ஆனால், இசைக் கச்சேரி நடத்தியவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள்… முன் வரிசையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணியைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

அந்த பெண்மணி, கிருஷ்ணவேணி!

கர்நாடக சங்கீத இசை உலகில் முக்கியமானவர். சங்கீத கலாநிதி விருது பெற்றவர். அகவை எழுபத்தியெட்டு!

ஒரு பக்கம் மட்டும் ஜரிகை வைத்த காஞ்சிவரம் பட்டு. சுற்றியும் சிறிய கற்கள் வைத்து, நடுவில் பவளம் வைத்த காதணி. பெரிய பதக்கம் கொண்ட, மெல்லிய தங்க வடம் பூட்டிய அட்டிகை. நான்கைந்து மோதிரங்கள். மெல்லிய தங்க வளையல்கள்.

இப்படித்தான் இருந்தார், கிருஷ்ணவேணி! இசை உலகிற்கு, கிருஷ்ணாம்மா!!

வயதின் காரணமாக, இன்னும் அமர்ந்தே இருந்தார். இன்று கச்சேரி செய்தவர்களில், சிலர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். சிலர் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். 

இசையைப் பற்றிய பேச்சுக்கள்தான். ‘தாங்கள் பாடினதைப் பற்றி’, ‘அதில், ஏதேனும் மாற்றம் வேண்டுமா?’ – இப்படித்தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால், இன்று கச்சேரியில் பாடியவர்கள் அனைவரும் அதிக அனுபவம் இல்லாதவர்கள். முதல் முறை மேடை ஏறியவர்கள். ஆதலால், தங்களை மெருகேற்றிக் கொள்ளவே இத்தகைய கேள்விகள்.

பேசுபவர்கள்… பேசிக் கொண்டிருப்பவர்கள் என அனைவரிடத்தும் ஒரு மரியாதை இருந்தது.

காரணம், கிருஷ்ணாம்மாவின் சாதனை உயரம்! மேலும், கர்நாடக இசைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட விதம் அளப்பரியது!!

ஆனால், குரல்வளை நரம்புகளில் ஏற்பட்ட சிறு கோளாறுகளினால், கடந்த இரண்டு வருடங்களாகப் பாடுவதில்லை. இது சரியாகப் பிரத்தியேக பயிற்சிகள் எடுத்துக் கொண்டு வருகிறார். ஆதலால், பேச முடிகிறது.

இன்று வேண்டுமானால், அவர் பாடாமல் இருக்கலாம். ஆனால், இதுவரை அவர் பாடிய பாடல்கள்… மேடைக் கச்சேரிகள்… அவருக்குக்காக, அவரின் குரலைக் கேட்பதற்காக நிறைந்து வழிந்த அரங்கங்கள்… தென்னிந்திய அளவில் இசைக்காகக் வாங்கிய விருதுகள்… என்றும், என்றென்றும் அவர் புகழை நிலைத்திருக்கச் செய்யும்.

மேலும், அது அவரது வாரிசுகளுக்கும் மதிப்பைப் பெற்றுத் தரும்.

சற்று நேரத்தில், சுற்றி நின்ற இசைக் கலைஞர்கள் விடைபெற்றுக் கொண்டனர்.

இக்கணம் சாபாவின் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வந்து பேச ஆரம்பித்தனர். 

அவர்கள் அனைவரின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி! தாங்கள் ஏற்பாடு செய்த கச்சேரிக்கு, கிருஷ்ணாம்மா வந்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சியின் காரணம்!!

மேடையில் பாட்டு பாடிய இரண்டு பெண்களில்… ஒருத்தி வந்து, கிருஷ்ணம்மாவின் அருகில் உரிமையுடன் அமர்ந்து கொண்டாள்.

“கச்சேரி எப்படி இருந்தது பாட்டி?” என்றாள், இன்னும் உரிமையுடன்.

கிருஷ்ணாம்மா பதில் சொல்லும் முன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் முந்திக் கொண்டு… “ரொம்ப நல்லா பாடின- ம்மா” என்று சொன்னார்.

கூடி இருந்தவர்களில், இன்னும் இரண்டு மூன்று பேரும் அதையே சொன்னார்கள்.

சிரித்துக் கொண்டாள், அந்தப் பெண்!

அவள், கௌசல்யா கலையரசன்! சுருக்கமாக கௌசி!!

பாராட்டுக் கிடைத்ததும், அவள் கண்கள் கணவனைப் பார்த்தன.

அதுதான் கலையரசன்! முன் வரிசையில் அமர்ந்து கொண்டு, மனைவி பாடுவதை ரசித்துக் கொண்டிருந்தவன்.

அவள் பார்த்ததும், சிரித்தான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்தது. கௌசியின் அத்தை மகன்தான்!

அனைவரும், தன் மனைவி பாடினதைப் பாராட்டியதைக் கண்டு பெருமையுடன் தன் அம்மாவைப் பார்த்தான்.

அம்மா, பெயர் மீனாட்சி! கிருஷ்ணாம்மாவின் மூத்த மகள்! கௌசல்யாவின் மாமியார்!!

தன் மகன் மற்றும் மருமகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு, அருகில் நின்று கொண்டிருந்த தன் தம்பியையும், தம்பி மனைவியையும் பூரிப்புடன் பார்த்தார், மீனாட்சி.

தம்பி, கிரிதரன்! கிருஷ்ணாம்மாவின் இரண்டாவது பிள்ளை! கௌசல்யாவின் தந்தை!!

தனக்கோ, தன் அக்காவிற்கோ கிடைக்காத பாராட்டு… தன் மகளுக்கு கிடைக்கிறதே என்ற பெருமை அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதே முகத்தோடு, தன் அருகில் நின்று கொண்டிருந்த மகன் சங்கரைப் பார்த்தார்.

சட்டென, அவர் முகம் மாறியது! காரணம், தன் மகன் பார்வை சென்ற இடம்!!

சங்கர் பார்த்துக் கொண்டிருந்தது, கௌசியுடன் சேர்ந்து பாடினாலே ஒரு பெண்! அவளைத்தான்!!

அப்படிப் பார்ப்பதில், ‘எங்களுக்கு உடன்பாடில்லை’ என்பது போல், கிரியின் முகம் மாறியது.

எங்களுக்கு என்றால்? கிரி, கிரியின் மனைவி, மீனாட்சி, கலை, கௌசி… இதில் அடக்கம்.

இன்னும் சொல்லப்போனால், கிருஷ்ணாம்மாவும், அந்தப் பெண்ணும் கூட அதில் உண்டு!

ஆக! சங்கரின் காதல் ஒருதலைக் காதல்!

ஆனால், சங்கர் இதையெல்லாம் கண்டுகொள்வது போல் தெரியவில்லை. அந்தப் பெண்ணை விருப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண்? பாட்டுப் பாடிக்கொண்டிருந்த பெண்களில் இன்னொருத்தி! கிருஷ்ணம்மாவின் பேத்தி! பெயர் தேன்பாவை!!

ஆகா! தேன்பாவை!!

எல்லாருக்கும் கிருஷ்ணாம்மா என்றால், இவளுக்கு அவர் வேணிம்மா!

தேன்பாவை என்ற பெயருக்கு ஏற்றார் போலத்தான் குரலும்!

ஜரிகை வைத்தப் பட்டுப்புடவைதான் உடுத்தியிருந்தாள். கிட்டத்தட்ட கௌசி… ஏன் இன்று பாடிய அனைவருமே இது போன்ற உடையலங்காரம்தான்.

ஆனால், பாவையை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இரண்டு விடயங்கள்!

ஒன்று, கன்னத்தில் இருக்கும் உலர்ந்த மற்றும் புதிதாய் மலர்ந்திருக்கும் பருக்கள். அது ஒரு தனியழகு! தனித்துவமான அழகு!!

மற்றொன்று, வளையல் அணியாமல் வலது கையில் நிறைய சுற்றுகளுடன் கட்டியிருக்கும் சிவப்புக் கயிறு! இடது கையில் மட்டுமே வளையல் அணிவாள்.

தாளம் போடுகையில் இடையூறாக இருக்கும் என்பதால், வலது கையில் வளையல்கள் அணியமாட்டாள்! இதுவும் அழகு!!

இக்கணம், இவளது பார்வை மொத்தமும் கௌசி மீதே இருந்தது.

பேசிக் கொண்டிருக்கும் போதே, கொஞ்சம் உடல் ஒத்துழைக்க மறுத்ததும், கிருஷ்ணாம்மா திரும்பிக் கிரியைப் பார்த்தார்.

அவ்வளவுதான்!

சுற்றி இருந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அடுத்த நொடியே, “இதோ கிளம்பலா-ம்மா” என்று சொல்லிய கிரி, “சங்கர், போய் காரை எடுத்திட்டு வா” என்றார்.

சட்டென, பாவையின் மீதிருந்த பார்வையைத் திருப்பி, “சரிப்பா” என்றான் சங்கர்.

“சங்கர்… பாட்டி கார் சபா முன்னாடி நிக்கணும்” என்றார் மீனாட்சி.

“ம்ம்” என்று நடக்க ஆரம்பித்தான்.

“அண்ணா” என்று கௌசி அழைத்தும், நின்று… சங்கர் திரும்பிப் பார்த்தான்.

“நம்ம காரையும் எடுத்திட்டு வந்திடு. என்னால பார்க்கிங் வரைக்கும் நடக்க முடியாது” என்றாள் கௌசி.

“சரி கௌசி” என்று சொல்லிவிட்டு, சங்கர் ஓடிச் சென்றான்.

அதன் பின்னே கிரி, மீனாட்சி, கலை, கிரியின் மனைவி… மூன்று பேரும் கௌசியின் அருகில் வந்தனர்.

“எப்படிப் பாடினேன்?” என்று கேட்டாள், கௌசி.

“உனக்கென்ன சூப்பரா பாடின” என்றான், கௌசியின் கணவன் கலை!

“திருஷ்டி சுத்திப் போடணும்” என்றார் கௌசியின் அத்தை, மீனாட்சி! 

“இந்தப் புடவை… நகை… எல்லாம் உனக்கு அம்சமா இருக்கு” என்றார், கௌசியின் அம்மா!

இதையெல்லாம் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார், கௌசியின் அப்பா, கிரி!

அந்தநொடி, “கிரி” என்று கிருஷ்ணாம்மா அழைத்து, ” நான், பாவைகூட மெதுவா வர்றேன். நீங்க முன்னாடி போங்க” என்றதும், அனைவரும் கிளம்பினார்கள்.

அங்கே பாவை என்றொரு பெண் நிற்கிறாள் என்ற எண்ணம் யாருக்கு வரவில்லை.

‘வரவே வராது’ என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்.

போகின்றவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றாள், பாவை. அதிலும் முக்கியமாக கௌசியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“பாவை போகலாமா?” என்று வேணிம்மா கேட்டதும், ‘ம்ம்ம்’ என்று தலையை ஆட்டினாள்.

இருவரும் சேர்ந்து, சபாவின் நுழைவாயிலுக்குச் சென்றனர்.

அரங்கத்தின் வாயில்

முதலில், ஒரு கார் வந்து நின்றுகொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் இருக்கையில் சங்கர் இருந்தான். இப்பொழுதும் பாவையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

காரின் பின்னிருக்கையில் கலை, கௌசி!

இப்பொழுதும் பாவையின் பார்வை கௌசியின் மீதே!

இக்கணம், காரின் கடைசி வரிசை இருக்கைகளில் மீனாட்சி மற்றும் கிரியின் மனைவி ஏறிக் கொண்டனர்.

அதற்கடுத்து, முன்னிருக்கையில் கிரி ஏறியவுடன், பாவையைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரின் தலையில் தட்டி “கிளம்புடா” என்றதும் சங்கர் காரைக் கிளப்பினான்.

சிறிது இடைவெளியில் மற்றொரு கார் நின்றது.

“வா பாவை” என்று வேணிம்மா சொல்லவும், ‘ம்ம்’ எனச் சொல்லி, நடந்தாள்.

அவர்கள் இருவர் ஏறியதும், ஓட்டுநர் காரைக் கிளப்பினார். 

கார் செல்லும் போதே…

பாவையின் முகம் வாடித் தெரிந்தது.

வேணிம்மா, பாவை முகம் பார்த்தார். அவள் ‘என்ன நினைக்கிறாள்?’ என்று புரிந்தது. அது, அவருக்கு வருத்தம் தந்தது.

அவளது வலக்கரத்தினை காரின் இருக்கையில் மேல் வைத்திருந்தாள்.

மோதிரம் அணிந்த அவளது விரல்களைப் பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்தார், அவளது வேணிம்மா.

திரும்பிப் பார்த்தாள்.

“தேன்குரலாள்… இந்தத் தேன்பாவை” என்றார் வேணிம்மா.

பாவை சிரித்துக் கொண்டாள். அவளது வேணிம்மாவின் அந்த வார்த்தைகள் போதும், அவள் வாழ்ந்திட! அவள் பாடிட!

பாவையின் அந்தச் சிரிப்பு போதும், வேணிமாவிற்கு! அவர் வருத்தம் நீங்கிட!

கிருஷ்ணாம்மா வீடு

ஏறக்குறைய இரண்டு கார்களும் ஒரே நேரத்தில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே நுழைந்தன. போர்டிகோவில் அனைவரையும் இறக்கிவிட்டு… சங்கர் காரை ‘பார்க்’ செய்யச் சென்றான்.

வேணிம்மா பாவையின் உதவியுடன் இறங்கிக் கொண்டார்.

அவர்கள் இருவருக்காகவும், மற்றவர்களும் காத்துக் கொண்டிருந்தனர். இருவரும் வந்தவுடன், மின்தூக்கி உதவியுடன் வீடு இருக்கும் தளத்திற்குச் சென்றனர்.

அந்தத் தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள். அதில், ஒரே வரிசையில் உள்ள இரண்டு வீடுகளை வாங்கி, இடைப்பட்ட சுவர்களை எடுத்துவிட்டு, ஒரு பெரிய வீடாக மாற்றியிருந்தனர்.

வீட்டின் கதவு திறக்கப்பட்டதும், “கௌசி வெயிட் பண்ணு. திருஷ்டி கழிக்கனும்” என்று சொல்லி, கௌசியின் அம்மா உள்ளே சென்றார்.

அவர் பின்னேயே, கிரி, மீனாட்சி மற்றும் கலை உள்ளே சென்றுவிட்டனர்.

சற்று நேரத்தில், கையில் உப்பு எடுத்துக் கொண்டு வந்து, கௌசிக்கு திருஷ்டி கழித்தார். பின், “இப்போ போ” என்றதும், கௌசி உள்ளே சென்றாள்.

அவ்வளவுதான்! சென்றுவிட்டார். கௌசிக்கு பின்னேயே நின்று கொண்டிருந்த பாவையைக் கவனிக்கவே இல்லை.

அப்படி சொல்லக் கூடாது. அவர் கவனிக்க விரும்பவில்லை! அதுதான் சரியான வார்த்தை பிரயோகம்!!

“நீ இரும்மா. பாட்டி போய் எடுத்திட்டு வர்றேன்” என்று கிருஷ்ணவேணி சொல்லும் பொழுதே, “இருங்க பாட்டி. நான் போய் எடுத்திட்டு வர்றேன்” என்று காரை ‘பார்க்’ செய்துவிட்டு வந்த சங்கர் சொல்லி, உள்ளே சென்றான்.

‘ச்சே! இவன் வேறு’ என்று கிருஷ்ணாம்மா நினைக்கும் போதே, சங்கர் வந்து நின்றான்.

“இந்தாங்க” என்று சொல்லி, அவர் கைகளில் உப்பைக் கொடுத்தான்.

வாங்கி கொண்டார்.

“தேனு, உன் ஹேண்ட் பேக்கை கொடுத்திடு” என்று பாவையை நோக்கி கை நீட்டினான்.

ஓ! தேனு! எல்லோருக்கும் பாவை என்றால், இவனுக்கு மட்டும் தேனு!!

அந்த அழைப்பில் விருப்பம் இல்லை என்பது போல், பாவை முகத்தைச் சுழித்தாள்.

அதைக் கண்ட கிருஷ்ணாம்மா, “மரியாதையா உள்ளே போ” என்று சங்கரைப் பார்த்துச் சொன்னதும், அவன் உள்ளே சென்றுவிட்டான்.

பாவைக்குத் திருஷ்டி எடுத்துவிட்டு, “போ, போய் குளிச்சிட்டு பூஜைக்கு ரெடியாகு” என்று சொன்னதும், தலையாட்டிவிட்டு… அவளது அறைக்குச் சென்றாள்.

கிருஷ்ணவேணி வரவேற்பறையைக் கடந்து செல்லும் பொழுது… கிரி சங்கரை திட்டிக் கொண்டு இருந்தார். ‘ஏன்? எதற்கு?’ என்று தெரியும். ஆதலால், எதுவும் சொல்லாமல் கிருஷ்ணவேணி, தன் அறையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில்…

“பாட்டி” என்று வந்து கௌசி, அவரிடம் ஒட்டிக் கொண்டாள்.

“என்னம்மா?” என்றார் பாசமாக!

“எல்லோரும் சொன்னாங்க. நீங்க மாட்டும் சொல்லல”

“என்ன சொல்லல?”

“எப்படிப் பாடினேன்-னு?”

“உனக்கென்ன? நல்லா பாடின” என்றதும், அவரைக்கு கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“சரி! போ, போய் குளிச்சிட்டு வா! பூஜை பண்ணனும்” என்றார்.

“இதோ ஐஞ்சு நிமிசத்தில வந்திடுவேன்” என்று சொல்லி, தன் அறையை நோக்கி ஓடினாள்.

மற்றவர்களுக்கு எப்படியோ?! ஆனால், அவரை பொறுத்த வரையில் பாவை மற்றும் கௌசி இருவரும் ஒன்றே! பாட்டையும் பாசத்தையும் ஒரே அளவில் இருவருக்கும் தருவார்!!

அவள் ஓடினதும், கிருஷ்ணவேணி ஒரு அறைக்குள் நுழைந்தார். அது பாவைக்கும் அவருக்குமான அறை.

இவ்வவளவு நேரம் அரங்கத்தில் அமர்ந்திருந்தது, காரில் பயணம் செய்தது அலுப்பாக இருந்தது. அப்படியே அங்கிருந்த தீவானில் சாய்ந்து அமர்ந்தார்.

அவரின் நினைவலைகளில், பாவையைப் பற்றிய எண்ணங்கள்.

சுருக்கமாக, பாவை கிருஷ்ணம்மாவின் பேத்தி! விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், கிருஷ்ணவேணியின் தங்கை லட்சுமியின் மகள் வழிப் பேத்திதான், இந்தத் தேன்பாவை!

ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் பொழுது, பாவையின் வாழ்வில் ஓர் இழப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், தன் அப்பா அம்மா இருவரையும் ஒரே நாளில் இழந்தாள்!!

அன்று, அவள் லட்சுமி பாட்டியின் வீட்டில் இருந்ததால், பிழைத்திருந்தாள். அன்று மட்டுமல்ல, அதன் பிறகும் லட்சுமி பாட்டியின் வீட்டில், அவரது கவனிப்பில்தான் வளர்ந்தாள்.

‘தான் தனியாக இருக்கிறோம்’ என்ற உணர்வு லட்சுமிக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு லட்சுமிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கிருஷ்ணவேணி அடிக்கடி தன் தங்கையைப் பார்க்கத் திருச்சி வந்துவிடுவார்.

இத்தனைக்கும்… கிருஷ்ணவேணி, தன் கச்சேரிகளில் பரபரப்பாக இருந்த காலகட்டம் அது!

அப்படி வரும் பொழுதெல்லாம், பாவைக்கு ஒன்றிரண்டு வரிகள் பாடுவதற்குச் சொல்லிக் கொடுப்பார். அந்த வயதில் அவளின் இசை கிரகிக்கும் ஆற்றல்… குரல் வளம்… அவரை ஈர்த்தது. இது நடக்கும் பொழுது பாவையின் வயது நான்கு!

அடுத்த ஒரு வருடத்தில்… கிருஷ்னவேணிக்கு, பாவையின் மீதான ஈர்ப்பு பிடித்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவானது!!

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் பொழுது, பாவையின் வாழ்வில் மீண்டும் ஓர் இழப்பு!

தன்னை கவனித்து வந்த லட்சுமி பாட்டியையும் இழந்தாள்.

தன் ஒரே மகளை இளம் வயதிலே இழந்த துக்கம்! ஒரே நாளில் மகள் மற்றும் மருமகனை இருவரையும் இழந்த வேதனை! கணவர் இல்லாமல், வீட்டையும் கவனித்து… பாவையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு! ‘எப்படி இந்தப் பெண்ணை வளர்த்து, கரை சேர்ப்பேன்?’ என்ற எதிர்காலம் பற்றிய மலைப்பு!

அந்த வயதில், அவ்வளவு பாரம் தாங்கிக் கொள்ள முடியவில்லை போல! பாவையைத் தனியாக விட்டுவிட்டுச் சென்று விட்டார்.

விடயம் அறிந்து, திருச்சி வந்த கிருஷ்ணவேணிக்கு வருத்தம்தான்.

இருந்தும், தன் தங்கையின் இறுதிச் சடங்குகளை முன்னின்று முடித்துவிட்டு, பாவையின் பொறுப்பை… அவளது தந்தை வழிச் சொந்தங்களிடம் கொடுத்துவிட்டு, கிருஷ்ணவேணி சென்னைக்கு வந்துவிட்டார்.

அதன்பிறகும், அடிக்கடி கிருஷ்ணவேணி திருச்சி வந்துவிடுவார்.

ஒன்று, பாவையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், ஆசை!

இரண்டு, பாவையைப் பார்க்காமல் இருந்தால் வந்துவிடும் ஏக்கம்!!

அப்படி வரும் பொழுதெல்லாம், அவள் தந்தை வழிச் சொந்தங்கள், அவளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. இரண்டு மூன்று முறை ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டுப் பார்த்தார்.

எந்தக் கேள்விக்கும், அவர்களிடம் சரியான பதில் இல்லை என்று தெரிந்தது. அதைவிட, அவளைச் சரியாக கவனிக்க மனம் இல்லை என்று புரிந்தது.

கிருஷ்ணவேணி, உடனே ஒரு முடிவெடுத்தார். ‘பாவையை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளலாமா?’ என்று, அவளது தந்தை வழிச் சொந்தங்களிடம் கேட்டார். ‘உரிமைப் பட்டவர்களிடம், இப்படி கேட்கிறோமே, ஏற்றுக் கொள்வார்களா?’ என்ற ஒரு பயம் இருந்தது.

ஆனால், யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏன்? அதுதான் தங்கள் எதிர்பார்ப்பு என்பது போல் இருந்தனர். ‘இங்கே, அவளுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று கிருஷ்ணவேணிக்குப் புரிய வைத்தனர்.

அதன்பின் கிருஷ்ணவேணி தாமதிக்கவில்லை! கொஞ்சமும் யோசிக்கவில்லை! தன் வீட்டில் யாரிடமும் கேட்கவில்லை!!

ஆறு வயது குழந்தையாக இருக்கும் பொழுது… கிருஷ்ணவேணி, பாவையை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்!

‘அவளது அப்பா வழிச் சொந்தங்கள் இருக்கும் பொழுது, எதற்கு இங்கே கூட்டி வர வேண்டும்?’ என்று, கிருஷ்ணவேணி கணவர், கிரி மற்றும் அவர் மனைவி… மீனாட்சி கேட்டனர்.

‘என் தங்கையின் பேத்தி. எனக்கும் பேத்திதான். நான்தான் வளர்ப்பேன்’ என்று சொல்லி, கிருஷ்ணவேணி முடித்துவிட்டார்.

அதற்கு மேல், யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

திருச்சி செல்லும் பொழுதெல்லாம், இரண்டு வரிகள் பாடச் சொல்லிக் கொடுத்தவர்… சென்னை வந்த பின்பு, கௌசிக்கு கற்றுக் கொடுப்பது போல… கர்நாடக இசையை முறைப்படி பாவைக்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

அது, கிருஷ்ணாம்மாவின் வீட்டில் உள்ளோருக்கு உறுத்தலாக இருந்தது.

அக்கணத்தில், பாவை குளியலறைக் கதவைத் திறந்த சத்தத்தில்… நினைவலைகளிருந்து தன்னை மீட்டுக் கொண்டார், கிருஷ்ணாம்மா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!