ISSAI,IYARKAI & IRUVAR 11.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 11


கிரிதரன் வீடு

வீட்டு வரவேற்பறை முழுவதும்… உறவினர்கள், இசைக் கலைஞர்களின் சோகங்கள் மற்றும் ஆறுதல் வார்த்தைகள்!

சிவா மற்றும் அவனது பெற்றோர்… கிருஷ்ணாம்மாவின் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு, ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

கிரி, அவர்கள் வந்திருப்பதைப் பார்த்தார். சிவா மீது கோபம் இருந்தாலும், பார்த்தவுடன் அதை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தார்.

அந்தக் கூட்டத்தினுள் சிவாவின் பார்வை, ‘எங்கே, எப்படி இருக்கிறாள்?’ என்று மனைவியைத் தேட ஆரம்பித்தன! நான்கு நாட்கள் ஆயிற்று… அவளிடம் பேசி, அவளைப் பார்த்து! அந்த ஏக்கத்துடனே… வரவேற்பறையைச் சுற்றி வந்தன, அவன் கண்கள்.

இல்லை! இங்கே அவள் இல்லை! ‘யாரிடம் கேட்க?’ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கிரி வந்து அவனருகில் நின்றார்.

“அங்கிள்…” எனத் தொடங்கும் போதே, “கொஞ்சம் வாங்க” என்று மூன்று பேரிடமும் சொல்லி, வீட்டின் வெளியே அழைத்து வந்தார்.

அந்தத் தளத்தின் நடைக் கூடத்தில்…

ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒழுங்கில்லாமல் காலணிகள் கழட்டிப் போடப்பட்டிருந்தன. மாலைகளிலிருந்த மலர்கள் அங்கங்கே உதிர்ந்து கிடந்தன.

சிவாவிற்கு எப்படியோ தெரியவில்லை? ஆனால்… மதியும் செண்பகமும், ‘ஏன் வெளியே கூட்டி வந்திருக்கிறார்?’ என்று தர்மசங்கடமாக உணர்ந்தனர்.

கிரியின் கண்கள் சிவந்து, முகம் வீங்கியிருந்தது. அதைக் கண்ட மதி, “தைரியமா இருங்க!” என்று ஆறுதல் சொல்லி, “திடிர்னு எப்படி?” என்று அவரது இழப்பைப் பற்றிக் கேட்டார்.

கிரி, லேசாகத் தலையசைத்தார். ஆனால்… பதிலேதும் சொல்லாமல், சிவாவைப் பார்த்துக் கொண்டே நின்றார்.

“அங்கிள் நான்…” என்று சிவா பேசத் தொடங்கும் போது, “உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருந்தேன்-ல… வீட்டுப் பக்கம் வந்திராதான்னு” என்றார், அவர்கள் மட்டும் கேட்கும்படி! ஆனால், கடுமையான குரலில்!!

“சொல்லியிருந்தீங்க! ஆனா…” என்று சிவா ஆரம்பிக்கும் போதே,

“என்ன ‘ஆனா?’… வீட்டுக்கு வந்தவங்களை, இப்படித்தான் மரியாதை இல்லாம நடத்துவீங்களா?” என்றார் கிரி கோபமாக!

“ஆனா, அவங்க என்ன பண்ணாங்கன்னு…” என்று செண்பகம் ஆரம்பிக்கும் போதே, “ம்மா நான் பேசிக்கிறேன்” என்றான் சிவா.

“நீ என்ன பேசப் போற? உன்னை உள்ளேயே விடக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, அப்படி நடந்துக்க முடியாத நிலையில இருக்கேன். உன்னை பார்த்தவுடனே, ‘ஏன்டா இப்படிப் பண்ண-ன்னு?’ கேட்கணும்னு நினைச்சேன். ஆனா, நான் இப்போ எதையும் கேட்கிற மனநிலையில இல்லை” என்று அமைதியாகக் கோபப்பட்டார்!

வரும் வழியில், கிரியுடன் அலைபேசியில் பேசியது குறித்து பெற்றோரிடம் சிவா சொல்லியிருந்தான். இருந்தும், அவர் நடந்து கொள்ளும் முறையை மதியால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. எனவே, அங்கே நிற்காமல் மின்தூக்கியை நோக்கிச் சென்றுவிட்டார்.

மதி சென்றதும், “அங்கிள் கோபப்படாம… ” என்று சிவா ஆரம்பிக்கும் போதே,

“எப்படிக் கோபப்படமா இருப்பேன்-ன்னு நினைக்கிற?! என் வீட்ல எல்லாருமே உன் மேல கோபமா இருக்காங்க!” என்று சொல்லும் போது, வந்திருப்பவர்களில் ஒருவர் ‘கிரி’ என்று அழைத்தார்.

“இருங்க வர்றேன்” என்று சொன்ன கிரி, “இன்னைக்கு, நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கு! உன்கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியாது. அதனால, நீ…” என்று சொல்லி, ‘கிளம்பு’ என்பது போல் திரும்பிச் செல்லும் வழியைக் காண்பித்தார்.

‘இங்கே நிற்காதே! போ’ என்பதை மறைமுகமாகச் சொல்லிவிட்ட திருப்தி, கிரியின் முகத்தில் தெரிந்தது! அவ்வளவுதான், கிரி சென்றுவிட்டார்!

கிரி சென்றதும்,

“என்ன-டா இப்படிப் பேசுறாரு? இப்போ என்ன பண்ண?” என்று கேட்டார் செண்பகம்!

“அதை விடுங்க” என்றவன், “இந்த மாதிரி சிச்சுவேஷன்ல, உள்ளே போய் பாவையைப் பத்திக் கேட்டா நல்லா இருக்காது” என்று சொல்லிக் கொண்டே, ‘என்ன செய்ய?’ என்று யோசித்தான்.

பின், “ம்மா! நான் எதுக்கும் பாவைக்குப் ஃபோன் பண்ணிப் பார்க்கிறேன்” என்று சொல்லி, பாவைக்கு அழைத்துப் பார்த்தான்.

இல்லை! இம்முறையும் சிவாவின் அழைப்பை ஏற்கவில்லை, பாவை!!

‘அழைப்பை ஏற்கவில்லையா?’ என்பது போல் செண்பகம் கண்களால் கேட்டார். ‘இல்லை’ என்பது போல் ஒரு பெரு மூச்சு, அவனிடம்!

“அவங்க பாட்டியைச் சொன்னதில, அவளுக்கும் கோபமா இருக்குமோ?” என்று புரியாமல் கேட்டார்.

“இருக்கலாம்-ம்மா” என்று மட்டும் சொன்னான்!

உரியவள்தான்! உறவுகளின் மறுப்பை உதாசீனப் படுத்திவிட்டு, உள்ளே சென்று அவளிடம் பேசலாம். ஆனால், ‘அவள் எப்படி எதிர்வினை புரிவாள்?’ எனத் தெரியவில்லை. ‘என்ன மனநிலையில் இருக்கிறாள்?’ என்றும் புரியவில்லை! 

தங்கள் இருவரின் பிரச்னையால், இந்த நேரத்தில்… இந்த வீட்டில்… எந்த ஒரு அசௌகரியமான சுழலும் உருவாகிவிடக் கூடாதென்று தெளிவாக இருந்தான். எனவே… அம்மாவை அழைத்துக் கொண்டு, கிளம்பினான்.

காரில் போகும் போதே,

மதி, மகனைப் பார்த்தார். நான்கைந்து நாளிலியே நைந்து போனது போல் இருந்தான். இப்படி அவன் இருந்து பார்த்ததில்லை என்பதால், “ஏன் சிவா, இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப் போடலாமே?” என்று கேட்டுப் பார்த்தார்.

“ஆமா கண்ணா! அப்பா சொல்றதும் சரிதான?? அவங்க வீட்ல ஒரு துக்கம் நடந்திருக்கு. நம்ம கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாமே?” என்றார் செண்பகம்.

“கொஞ்சம் நீ உன் வேலையையும் பாரேன். மதுரை-ல ஒரு லேண்ட் வந்திருக்குன்னு சொன்னேனே சிவா?!” -மதி.

“ஆமா! நடந்ததையே நினைச்சுகிட்டு இருக்காத! எல்லாம் சரியாகும்!!” என்றவர், “பாவை அவங்க பாட்டி வீட்லதான இருக்கா! அதனால, நீ உன் வேலையே பாரு. ஒரு பத்து நாள் கழிச்சி ‘என்ன செய்யலாம்னு?’ யோசிக்கலாம்” என்றார்.

தந்தையைப் பார்த்தான். பிள்ளைகளின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்தே பழகியதால், இதைக்கூட ஒரு கோரிக்கை போல்தான் கேட்டிருந்தார்.

தாயைப் பார்த்தான். பாவையின் செயல்களில் பேச்சுக்களில் உடன்பாடு இல்லை என்றாலும், ‘அவள்தான் தன் வாழ்க்கை’ என்று புரிந்து கொண்டதால், அதை ஒட்டியே அவரது பேச்சு இருந்தது.

தான் இப்படி இருப்பது, அவர்களுக்குக் கவலை அளிக்கிறது என்று புரிந்தது.

ஆதலால், “சரி-ப்பா! நான் போய் பார்க்கிறேன்” என்றான்.

கொஞ்ச நாட்கள் தன் வேலைகளைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தாலும், வேறு ஒன்றை யோசித்துக் கொண்டே இருந்தான், சிவா!

அது, கிரியைப் பற்றியது!

அன்றும் சரி! இன்றும் சரி!  பேசும் போதும் ‘தன் அம்மாவை மரியாதை இல்லாமல் நடத்தியதாக’ கூறுகிறாரே தவிர, பாவையைப் பற்றி ஏன் பேசவில்லை?!! பேசவில்லையா? இல்லை, பேச விருப்பம் இல்லையா? என்று யோசித்தான்.

மேலும்… துக்க காரியங்கள் முடிந்த பின்பு, நேரே பாவையின் பாட்டி வீட்டிற்கு வந்து பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்!!

கிரிதரன் வீடு!

அதன்பிறகு,

ஒரு ஐந்து நாட்களுக்கு, இழப்பின் துயரங்கள்! இழப்பை பற்றிய விசாரிப்புகள்! இழப்பின் வெறுமைகள்! இழப்பிலிருந்து மீளுதல்! இவை மட்டுமே கிரி வீட்டில்!!

கிருஷ்ணாம்மா இல்லாமல், வீடு ஏழு நாட்களைக் கடந்திருந்தது. மீனாட்சி, கௌசி, கிரி… வரவேற்பறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.

வேணிம்மா அறை

மெத்தையின் நடுவே… கால்களை மடித்துக் கொண்டு, முட்டியின் மீது தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் தேன்பாவை. வேணிம்மா இல்லாத வீடு வெறுமை, வேதனை, வேண்டாத பேச்சுக்கள் என்றுதான் இருந்தது, அவளுக்கு!

ஒரு இரண்டு நாளாக, எண்ணங்கள் முழுவதும் தனியாகப் பாடுவது பற்றியே இருந்தது! மேலும், அதை கிரியிடம் எப்படி, எப்பொழுது சொல்வது?… அதன்பின், வாய்ப்புகள் எப்படிக் கிடைக்கும்?… இதையெல்லாம் பற்றிய யோசனைதான்!

வருடக் கணக்கில் கிரியிடம் பேசியதில்லை. இந்த வீட்டில் மற்றவர்களுடன் பேச்சுக்கள் என்பதே கௌசி மூலமாகத்தான்! இப்போது திடீரென்று போய் நேருக்கு நேர் நின்று ‘எப்படிப் பேச்சைத் தொடங்க?’ என்று தயக்கம் பாவைக்கு நிறைய இருந்தது.

‘என்ன செய்ய?’ என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கதவைத் தட்டும் ஓசை! இறங்கிச் சென்று, கதவைத் திறந்தாள்!!

சங்கர் நின்று கொண்டிருந்தான்!!

அந்த நேரத்தில், அவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது முகமாற்றமே சொன்னது.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

“என்ன பேசணும்?” என்று கேட்டாள்.

“முக்கியமான விஷயம். உள்ளே வந்து சொல்லட்டுமா?” என்று கேட்டதும், கொஞ்சம் தயங்கினாள். பின், விலகி நின்றாள்.

அவன் உள்ளே வந்ததும், “சொல்லுங்க” என்றாள்.

அன்றைய இரவு கிரி, மீனாட்சி, கௌசி பேசிய விடயங்களைச் சொன்னான். மேலும், வேணிம்மா அதைக் கேட்டதையும் சொன்னான்.

பெரிய அதிர்ச்சி இல்லை என்றாலும், ‘இந்த அளவிற்கு நினைக்கிறார்களா?’ என்ற எண்ணம் வந்தது, பாவைக்கு! பின், இவர்கள் பேசினதை வேணிம்மா கேட்டதால்தான், தன்னிடம் தனியாகப் பாட வேண்டுமென சொல்லயிருக்கிறார் என்று பாவைக்குப் புரிந்தது.

“இப்போகூட உன்னைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்காங்க!” என்றான்.

“என்ன பேசறாங்க?” என்று பேச்சைத் தொடர்ந்தாள், அவன் உண்மை பேசுகின்றான் என்று தெரிந்ததால்!

“நீ அன்னைக்கு உன் இஷ்டப்படி பாடினேல?? இனிமேலும் இதே மாதிரி கச்சேரில இன்டெர்பியர் பண்ணுவியோன்னு யோசிக்கிறாங்க” என்றான்.

இதற்குமேல் தாமதிக்க வேண்டாமென தோன்றியது. ஆதலால், ‘கிரி மாமாவிடம் எப்படிப் பேச?’ என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.

“உன் கேரியர் பத்தி, நீ ஏதாவது முடிவெடுத்திருக்கியா?” என்று கேட்டான்.

வேணிம்மா சொன்னதைப் பற்றி யோசித்தாள். மேலும், தன் ஆசையும் அதுதானே என்பதால், “ம்ம்” என்றாள்.

“என்ன முடிவு?”

‘எல்லோரிடமும் சொல்லப் போகிறோம், இவனிடம் சொன்னாலென்ன?’ என நினைத்து, “நான் தனியா பாடணும்” என்றாள்.

‘தன் குடும்பத்தினர் பேசியதைக் கேட்டதால், பாட்டி எடுத்த முடிவாக இருக்குமோ?’ என்று சங்கர் யோசித்தான்.

“என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“ஒண்ணுமில்லை!” என்றவன், “உன் முடிவுல நீ தெளிவா இருக்கியா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்றவள், “இப்பவும் பேசிக்கிட்டு இருக்காங்களா?” என்று கேட்டாள்.

“ஆமா” என்றான்.

“நான் கிரி மாமாகிட்ட கொஞ்சம் பேசணும்! இப்போ போயி பேசவா?” என்று, அவனிடம் யோசனை கேட்டாள்.

“உன் முடிவுல உறுதியா இருந்தேன்னா, கண்டிப்பா போய் பேசு!” என்று நம்பிக்கை தந்தான்.

‘சரி’ என்று தலையாட்டினாலும், ஒரு தயக்கம் இருந்தது. ஆதலால், நின்று கொண்டே இருந்தாள்.

“தேனு” என்று அழைத்தான்.

அந்த அழைப்பைப் பற்றி எரிச்சல் படும் நிலையில் அவளில்லை என்பதால், நிமிர்ந்து பார்த்தாள்!

“நீ என்ன பேசணுமோ தைரியமா பேசு. ரொம்ப யோசிக்காத” என்றான்.

“ம்ம்ம்” என்று தலையசைத்ததும், இருவரும் அறையிலிருந்து வெளியேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!