இசை… இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 10
கடைசியில், ‘இவள் ஏன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளவில்லை?’ என்று பாவையின் மீது கோபம் வந்தது. உடனே, வேக வேகமாக நடந்து அறைக்குச் செல்லப் பார்த்தார்.
உடல் மிகவும் ஒத்துழைக்கவில்லை. பின், மெதுவாக நடந்து அறைக்குள் சென்று… ‘பாவை’ என்று அழைத்தார்.
“வேணிம்மா” என்று சொல்லி, பால்கனியிலிருந்து அறைக்குள் ஓடி வந்தாள்.
அதற்குள், வேணிம்மா வந்து மெத்தையில் அமர்ந்தார்.
அறையின் விளக்கைப் போட்டுவிட்டு, அவர் முன்னே வந்து அமர்ந்தாள். பின், “இன்னும் தூங்கலையா வேணிம்மா? சொல்லுங்க, ஏதும் வேணுமா?” என்று கேட்டாள்.
“நீ… ரெண்டு நாளா நீ ப்ராக்டிஸ் பண்ணலையா?” என்று கேட்கும் போதே, மூச்சு வாங்கியது.
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உங்களுக்கு என்னாச்சு? ஏன் வியர்க்குது? இருங்க, நான் கிரி மாமாவைக் கூப்பிடுறேன்” என்று எழப் போனவளை…
“உட்காரு” என்ற வேணிம்மாவின் அழுத்தமான குரல் தடுத்தது.
“வேணிம்மா” என்று அழும் குரலில் அழைத்து அமர்ந்தாள்.
“ப்ராக்டிஸ்…” என்று ஆரம்பிக்கும் போதே,
“பண்ணலை வேணிம்மா!” என்றாள், அவரின் நிலை கண்டு கலங்கிப் போய்!
“ஏன்?” என்றார்… கண்கள் கலங்க!
அமைதியாக இருந்தாள்.
அவருக்குப் புரிந்தது. ‘நடந்ததை நினைத்து… எதிர்காலத்தை நினைத்து’ இப்படி இருக்கிறாள் என்று புரிந்தது!
“பாவை” என்று அழைத்தார், குனிந்திருந்தவளைப் பார்த்து!
நிமிர்ந்து பார்த்தாள். இப்பொழுது அவருக்கு இன்னும் வியர்த்திருந்தது.
“கஷ்டமா இருக்கா?” என்றோர் கேள்வி கேட்டார்! இதுவரை கேட்டிடா கேள்வி!
அதற்குப் பதில் சொல்லாமல், “வேணிம்மா! நான் கிரி மாமாவைக் கூட்டிட்டு வர்றேன்” என்று மீண்டும் எழப் போனவளை,
“உன்கிட்ட பேசணும்! உட்காரு” என்றவர் குரலில், ஒரு குருவிற்கான தோரணை வந்திருந்தது.
“சீக்கிரம் சொல்லுங்க” என்றாள் பணிவுடன்! அதே சமயம் பதற்றத்துடன்!!
“உனக்கு கௌசியோட பாடறது பிடிக்குதா? அதனால உன்னோட தனித்துவம் குறையற மாதிரி நினைக்கிறியா?” என்று நேரடியாகக் கேட்டார்!
“அப்படியெல்லாம் இல்லை வேணிம்மா! யார் அப்படிச் சொன்னா?” என்று மழுப்பினாள்!
“உண்மையை சொல்லு! உன் வேணிம்மா-கிட்ட பொய் சொல்லாத” என்று கேட்டார், பேத்தியின் பாசமிகு பாட்டியாக மாறி!
எதுவம் சொல்லவில்லை. ஆனால், அதுவே சொல்லியது, அவளின் விருப்புகளை!
“பாவை! நீ இனிமே தனியா பாடு” என்றார்.
“வேணிம்மா” என்றாள் அதிர்ச்சியாக!
“ம்ம்ம் தனியா பாடு! கௌசியோட சேர்ந்து பாட வேண்டாம்” என்று முடிவெடுத்தவர், “இனிமே அவகூட சேர்ந்துப் பாடக் கூடாது! கூடவே கூடாது!!” என்று முணுமுணுத்தார்!
‘ஏன் தீடிரென்று இப்படி?’ என்று புரியவில்லையென்றாலும், “அதெப்படி முடியும்?” என்றாள் சந்தேகமாக!
“தெரியலை! நீதான் பார்த்துக்கணும். ஆனா, தனியா பாடணும்!! பாடுவியா?” என்று சொல்லும்போதே… நேராக அமர்ந்திருக்க முடியாமல், கட்டிலில் பின்னோக்கி சாய்ந்து கொண்டார்.
“கண்டிப்பா பாடுறேன்!? ஆனால், உங்களுக்கு என்ன செய்யுது?” என்று பயந்தவள், “இருங்க, நான் கிரி மாமா…” எழப் போனவளை, “பாவை” என்ற கெஞ்சும் குரல் தடுத்தது!
“சொல்லுங்க வேணிம்மா” என்றாள் கரகரத்த குரலில்!
“நான் இல்லைன்னா?” என்று மூச்சு வாங்கியவர், “சமாளிசிப்பியா?” என்று கேட்டார்.
“ஏன் இப்படிப் பேசறீங்க??” என்றவள், கண்கள் கலங்கிவிட்டது!
“நான் இல்லைனாலும், நீ தனியா பாடறதுக்கு முயற்சி பண்ணனும்”
“இப்படிப் பேசாதீங்களேன் ப்ளீஸ்!” என்று சொல்லிமுடித்ததும், அழ ஆரம்பித்துவிட்டாள்.
“தைரியமா இருக்கணும்! சரியா!??” என்று… அவள் கன்னங்கள் பிடித்து, கண்கள் பார்த்துக் கேட்டார்.
கண்ணீர்தான் பதில், அவளிடம்! வேறொன்றுமில்லை!!
“யார் கூட இருந்தாலும் இல்லைன்னாலும்… நீ பாடணும். உன் கவனம் பாடுறதுல இருக்கணும். சரியா?!”
அவர், ‘என்ன சொல்ல வருகிறார்?’ என்று புரிந்தது! ஆனால், அதற்கும் பதில் கண்ணீர்தான்!!
“சரியா?” என்று, அவள் புஜங்களைப் பிடித்து, அழுத்திக் கேட்டார்! அழுத்தமாகக் கேட்டார்!!
“சரி” என்று ஆமோதித்தவள், “இப்படி எல்லாரும் பாதியிலே விட்டுப்போனா, நானும் என்னதான் செய்வேன்?” என்று தாய் தந்தை… லட்சுமி பாட்டி… தனக்கானவன்… இவர்களைப் பிரிய நேர்ந்ததின் வருத்தத்தை ஒரே வரிக்குள் அடக்கினாள். பின், அடக்கமுடியாமல் ஏங்கி ஏங்கி அழுதாள்.
“இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியுமான்னு தெரியலை பாவை? முடிஞ்சா கண்டிப்பா செஞ்சிருப்பேன்” என்று அவரும் அழுதுவிட்டார்.
“இதுவே போதும் வேணிம்மா” என்றாள், ஒரு கையால் அவரது கண்ணீர் துடைத்துவிட்டு… மற்றொரு கையால், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!
“உன் அகௌண்ட்-ல பணம் கொஞ்சம் இருக்கும். ம்ம், எதுவும் தேவைன்னா, அதை யூஸ் பண்ணிக்கோ”
கண்ணீர்தான் பாவையிடம்!
“பாவை! போ போ கௌசியைக் கூட்டிட்டு வா. அவளோட ரெண்டு வார்த்தை… ” என்று பாதியிலே நிறுத்தினார். அதற்குமேல் முடியவில்லை.
“இதோ வேணிம்மா” என்று எழுந்தவள், ‘பாவை’ என்று அழைத்தவரைப் பார்த்தாள்.
‘அருகே வா’ என்பது போல் சைகை செய்தார். அவள் அவரை நோக்கி குனிந்ததும், இருகைகளாலும் அவளது கன்னங்களைப் பிடித்து, உச்சி நெற்றில் முத்தமிட்டார்.
“வேணிம்மா” என்று கடைசியாக அழைத்து, அவர் கன்னம் வழிந்தோடும் கண்ணீருக்குள் ஒரு முத்தம் வைத்தாள்.
அதன்பின், ‘கௌசி’ என்று சத்தமாக அழைத்துக் கொண்டு… அறைக்கு வெளியே சென்றாள்.
சற்று நேரத்தில்…
அதிகப்படியான வியர்வையால், உடல் நனைந்து குளிர்ந்திருந்தது, வேணிம்மாவிற்கு! உயிரைப் பிடித்து வைத்திருப்பது போன்று மூச்சுக்கள் வந்தும் போயும் இருந்தன!!
அவரை அப்படிப் பார்த்ததும், அனைவரும் பதறிவிட்டார்கள். ‘அம்மா’ ‘பாட்டி’ ‘அத்தை’ என்ற அழைப்புகளுடன், அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.
அதன்பிறகு…
கிரி மருத்துவமனை வரும்படி அழைத்தார். ஆனால், வேணிம்மா வர மறுத்துவிட்டார்.
கலை, மருத்துவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
சங்கர், ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த பாவையைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மற்றவர்கள் அனைவரும்… வேணிம்மாவின் கால் கைகளைத் தேய்த்துவிட்டபடியே, அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
வேணிம்மாவின் கண்கள், அடிக்கடி பாவையைப் பார்த்தன.
மீனாட்சியும் கௌசியும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்திருந்தனர்.
அக்கணம், “கிரி” என்று அழைத்தார், வேணிம்மா!
“என்னம்மா?”
“கௌசி… பாவை… ஒரு பாட்டு பாடச் சொல்லேன்” என்றவர் குரல் தேய்ந்து போயிருந்தது.
“இப்போ எதுக்கும்மா?” என்றவர், “நீங்க ஹாஸ்பிட்டல் வாங்களேன்” என்றவர் குரலில், கொஞ்சம் கண்டிப்பு! கொஞ்சம் கோபம்! நிறைய பாசம்!
“கிர்… என்னோட கடைசி ஆசை கிரி… பாவை… கௌசி… பாடுங்களேன்” என்று விட்டுவிட்டுப் பேசினார்.
“என்னால முடியாது பாட்டி” என்று கௌசி அழுதாள்.
ஆனால்… பாவை, ஒரு ஜமுக்காலத்தை எடுத்து விரித்தாள். வீணையை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். பாடுவதற்குத் தயரானாள். பின், கௌசியைப் பார்த்தாள்.
கௌசி, கிரியைப் பார்த்தாள். ‘போ’ என்பது போல் கிரி தலையசைத்தார்.
கௌசியும் வந்து ஜமுக்காலத்தில் அமர்ந்துகொண்டாள்.
அந்த நேரத்திலும் ‘இந்தப் பாட்டு பாடலாம்’ என்று தன் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுத்தாள், கௌசி!
வேணிம்மா பாவையைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பாவையும் பார்த்தாள். அவர் நிம்மதியில்லாமல் இருக்கிறார் என்று தெரிந்தது. அவரின் நிம்மதி எது என்று புரிந்தது! அவர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் புரிந்தது!
வீணையை மீட்டிக் கொண்டே, “கண்ணே என் கண்மணியே…” என்று பாவை பாடல் பாட ஆரம்பித்தாள்.
சட்டென அனைவரும் பாவையைப் பார்த்தனர்! அது கௌசி சொன்ன பாடல் அல்ல!!
வேணிம்மா நிம்மதி அடைந்தார்! உள்ளம் நிறைந்த நிம்மதி அடைந்தார்!! தான் எடுத்த முடிவால், பாவையின் தனித்தன்மை பாதிக்கப் படுகிறதோ என்று நினைத்து வருத்தப்பட்டவருக்கு… இன்று பாவையின் பாடல் பெரும் ஆறுதல்!!!
மற்றவர்கள் அனைவரும், உள்ளக் கொதிப்புடன் பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்” என்று மூன்று முறை பாடியவள், “மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய்” என்று உள்ளம் உணர்ந்து பாடினாள்.
கௌசி பாடவில்லை! கிரி ‘பாடு’ என்று கண்களால் சொல்லியும், கௌசி பாடவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள்.
அத்தனை கோபம், பாவைமீது!
இதையெல்லாம் பாவை கண்டுகொள்ளவே இல்லை. பாவை பாடிக் கொண்டே இருந்தாள். நிறுத்தவே இல்லை.
“குயிலிசை குழலோசை உன் கொஞ்சுமொழிக்கு இணையாமோ
கொண்ட மனசஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமோ…” என்று இரண்டு முறை பாடியவள், “தாலேலோ தாலேலோ” என்று குரலால் தாலாட்டினாள்.
“தேன்குரலாள் இந்தத் தேன்பாவை” என்று கடைசியாகச் சொன்னார், பாவையின் வேணிம்மா!!
அடுத்த நாள் காலை…
சிவாவின் வீடு…
நான்காவது நாளல்லவா? நாட்கணக்கில் வாழ்ந்தவள்தான், தன் நாடித்துடிப்பு என்று நினைக்குப்படி இருந்தான், பாவையின் பாண்டியன்!!
மேலும்… நேரே சென்று, பாவையின் பாட்டியிடம் பேச வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
சாப்பாட்டு மேசையில்…
மதியும் சிவாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். செண்பகம் காஃபி குடித்துக் கொண்டிருந்தார். அக்கணம், வேக வேகமாக வீட்டிற்குள் நளினியும், பிரவீனும் வந்தனர்.
“வாங்க மாப்பிள்ளை” என்று பெரியவர்கள் இருவரும் வரவேற்றனர்.
“டிவி பார்த்தீங்களா?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டான், பிரவீன்!
“என்னாச்சுடா?” என்று சிவா கேட்கும் போதே, பிரவீன் டீவியை ஆன் செய்தான்.
கர்நாடக இசை உலகில் பிரபலமானவரும்… சங்கீத கலாநிதி விருது வாங்கியவருமான… கிருஷ்ணாம்மா என்றழைக்கப்படும் கிருஷ்ணவேணி, இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார்.
இதுதான் செய்தி!
‘தீடீரன்று எப்படி இப்படி?’ என நினைத்து, அனைவரும் ஆடிப்போய்விட்டனர்.
சாப்பிடுவதை பாதியிலே நிறுத்திவிட்டு, “போகலாம்” என்று மட்டும் சொல்லி எழுந்தான், சிவா!
“ம்ம்ம்” என்றார் செண்பகம், அரைமனதுடன்! அவருக்குத் தெரியும், சிவா அலைபேசியில் அழைத்தும் பாவை பேசவில்லை என்று! ஆதலால், அரைமனதுடன்!!
‘தன் பாட்டி பற்றி… பாவை, ஏன் சிவாவிடம் சொல்லவில்லை?’ என்ற ஆதங்கம் வந்தது. மேலும், அன்று ‘அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ??’ என்று நினைத்தவருக்கு… இன்று அதிருப்தி வர ஆரம்பித்திருந்தது.
இருந்தும், செண்பகமும் மதியும் மகனிற்காகச் சம்மதித்தனர்.
சற்று நேரத்தில்…
நளினி வர மறுத்துவிட்டாள். ஆதலால், பிரவீனும் வரவில்லை. செண்பகம் மற்றும் மதி, மகனுடன் சேர்ந்து பாவை வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
போகும் போதே… பாவையின் மாமா சொல்லியது, நியாபகத்திற்கு வந்தது.
மேலும்… அவரை எதிர்த்து, ‘எப்படி வீட்டிற்குள் செல்ல? எப்படிப் பாவையைப் பார்க்க?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.
கிரிதரன் வீடு…
ஆம்! இனி கிரிதரன் வீடுதான்!!
வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருட்கள் எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்டு… அந்த இடத்தில், கிருஷ்ணாம்மாவின் உடல் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
நிறைய இசை உலக பிரமுகர்கள் வந்து… மலர் வளையங்கள், மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.
கலை மற்றும் சங்கர், கண்ணாடிப் பேழைக்கு இருபுறமும் நின்றுகொண்டிருந்தனர்.
கிரியும், மீனாட்சியின் கணவரும்… வரவேற்பறையில் ஒரு மூலையில் இருந்தனர். அஞ்சலி செலுத்த வந்த இசைத் துறையைச் சேர்ந்தவர்கள்… அவர்களுக்கு ஆறுதல் சொல்லிச் சென்றனர்.
குடும்பத்தின் பெண்கள் கிரியின் மனைவி, மீனாட்சி, ரதி மற்றும் கௌசி ஒரு அறையில் இருந்தனர். அறைமுழுவதும் அழுகுரல்கள்தான்!
பாவை, வேணிம்மா அறையில் இருந்தாள். ஆறுதல் கூறிட யாருமில்லை. ஆதரவாய் தேற்றிடவும் எவருமில்லை. தரையில் அமர்ந்து கொண்டு, மெத்தையில் தலைசாய்த்திருந்தாள். அழுது அழுது ஓய்ந்துபோயிருந்தாள்.
‘தனக்கென்று இருந்த ஒரே உறவும் இப்போது இல்லை’ என்ற கவலை, அவள் கண்களில் தெரிந்தது. இருந்தும், அந்தக் கவலையின் ஊடே… கிரி மாமாவை எதிர்த்து, வேணிம்மாவின் ஆசைப்படி… ‘எப்படித் தனியாகப் பாட?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.