ISSAI,IYARKAI & IRUVAR 13.1

ISSAI,IYARKAI & IRUVAR 13.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 13


அதிர்ச்சியாக நின்றவரைத் தொட்டு, “ம்மா” என்று அழைத்தான்.

“ப்ச்! என்ன சிவா இதெல்லாம்?” என்று அவர் கோபத்துடன் கேட்ட பின்,

சற்று நேரத்திற்கு, அமைதியாகப் பேசுதல்! அவருக்கு எடுத்துச் சொல்லுதல்! அன்னையை சாந்தப்படுத்துதல்! இவை மட்டுமே சிவாவிற்கு!!

அதன் பிறகு,

பால்கனியின் போன்சாய்களுக்கு இடையே இருவரும் மெல்ல நடந்துகொண்டிருந்தனர்.

“முதலயே நம்மகிட்ட சொல்லயிருக்கலாம் சிவா” என்று சலித்துக் கொண்டிருந்தார்.

“ம்ம்ம், இதேதான் நானும் சொன்னேன்” என்றான்.

“என்ன சொன்னா?”

“கொஞ்சம் அன்டர்ஸ்டேண்டிங் வந்தப்புறம், சொல்லணும்னு நினைச்சிருக்கா”

“இல்லை சிவா! சொல்லியிருக்கலாம்!” என்றவர், “ஆனா, கல்யாணம் முடிஞ்சும் கொஞ்ச நாள்தான ஆகுது” என்று… அவள் சொல்லாதது, சரியா? தவறா? என்று பிரித்தறிய முடியா நிலையில் இருந்தார்.

சற்றுநேரம் எதுவும் பேசாமல் நடந்தனர். ஆனால், நிறைய யோசித்துக் கொண்டே நடந்தனர்.

எப்பொழுதும், ‘வேணிம்மா வீடு… வேணிம்மா கார்’ என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன்! ஒருமுறை கூட, ‘எங்க வீடு’ என்று உரிமையுடன், அவள் சொல்லிக்கேட்டதில்லை! – இது சிவாவின் எண்ணக் குரல்!!

கல்யாணம் முடிந்து, சிவாவின் முதல் வெளியூர் பயணத்தின் போது, அவள் பாட்டி வீட்டுக்குப் போகச் சொன்னதும், ‘மறுத்தது’ இதற்காகத்தான்!இவர்களால்தான்! – இது செண்பகத்தின் புரிதல்!!

அவளை அழைத்துவர, அவள் பாட்டி வீட்டிற்குப் சென்றபொழுது… கிரி, நேரடியாகப் பாவையைக் கூப்பிடாமல்… கௌசியை அழைத்துக் கூப்பிடச் சொன்னது நியாபகத்தில் வந்தது! வீட்டின் பெரியவர்கள், அவளிடம் பேசுவதேயில்லை போல?! – இது சிவாவின் கவலை!!

கச்சேரி-க்கு புடவை வாங்கவென்று வந்த கௌசியும், அவள் கணவனும் கீழே வரை வந்துவிட்டு… வீட்டிற்கு வீட்டிற்கு வராதது நியாபகத்திற்கு வந்தது! – ‘எப்பொழுதும் இப்படித்தான், அவளிடம் ஒதுங்கி இருந்திருப்பார்களோ?’ என்று நினைத்து கவலைப்பட்டார்!

இப்படி… அவள் மற்றும் அந்த வீட்டினரின் செயல்களுக்கெல்லாம் காரணங்கள் கண்டுபிடித்தபடியே நடந்து கொண்டிருந்தனர்.

திடீரென, “சிவா” என்றழைத்து, “எனக்கு ஒன்னு மட்டும் புரியலை!” என்றார்.

“என்ன-ம்மா?”

“அந்த வீட்ல யாரும் அன்பா இருக்கலை… சரி!!” என்றவர், “ஆனா, நாமதான் அன்பா இருந்தோமே? அதை ஏன் புரிஞ்சிக்கலை?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரிஞ்சி ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணயிருப்பான்னு நினைக்கிறேன்! அதுக்குமேல அவதான் சொல்லணும்!!”

“நீ கேட்கலையா?”

“எதுக்கு நடந்ததைப் பேசணும்னு விட்டுட்டேன்!” என்றவன், “அதோட இன்னைக்கே எல்லாத்தையும் கேட்க வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.

அவன் சொன்னது ‘சரியென’ தோன்றியதால், சற்று நேரம் பேசாமல் நடந்து கொண்டிருந்தனர்.

“நீ அவளை இங்கே கூட்டிட்டு வந்திருக்கணும்!?” என்று மீண்டும் அவருக்கு உடன்பாடில்லா விடயத்திற்கு வந்தார்.

பின், “கூப்பிட்டேன்-மா!” என்றவன், “வரணும்-ல?!” என்றான் வருத்தமாக!

மகனின் முகத்தைப் பார்த்தவர், “இப்படிப் பண்ணா எப்படி?” என்று உறுத்தலாகச் சொன்னவர், “கடைசில நளினி சொன்ன மாதிரி அட்ஜஸ்ட் பண்ணவே மாட்டேங்கிறா-ங்கிற பேருதான் வரும்” என்றார்.

“ம்மா!” என்று உரத்தக் குரலில் கூப்பிட்டான்.

மீண்டும் அமைதி!

அதன்பின், “உனக்கு இது சரி வரும்னு தோணுதா?” என்று கேட்டார் நம்பிக்கையில்லாமல்!

“ம்ம்” என்றவன், “கொஞ்ச நாள் தனியா இருந்தா புரியும்னு நினைக்கிறேன்” என்றான் நம்பிக்கையாக!

“நான் அதைக் கேட்கலை சிவா” என்றதும், “வேறென்ன-ம்மா??” என்று கேட்டான்.

மிகவும் தயங்கி, “அவளோட சேர்ந்து வாழறது… ம்ம்ம்… ” என்றவர், “நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம, சந்தோஷமா வாழ முடியுமா?” என்று ஒரு தாயாக, மகனின் வாழ்க்கைப் பற்றிய பயத்தில் கேட்டார்.

“அவளும் இதே கேள்விதான் கேட்டா” என்றவன், “எனக்கு நம்பிக்கை இருக்கும்மா, நிச்சயம் சந்தோஷமா இருப்போம்-ன்னு!!” என்றான்.

“சரி! கண்ணா” என்றவர், “இதை வீட்ல எப்படிச் சொல்றது? சும்மாவே அப்பாவும் நளினியும் ‘அவ அட்ஜஸ்ட் பண்ணலை! சிவா-வைப் புரிஞ்சிக்கலை-ன்னு’ சொல்லிக்கிட்டு இருந்தாங்க! இப்போ என்ன சொல்வாங்களோ?” என்று புலம்பினார்

“அதான்-ம்மா! அவங்க ரெண்டு பேர்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் எளிதாக!

“என்னடா சொல்ற?” என்று பதறினார்.

“ஆமா-ம்மா! இப்போ சொன்னா, ‘எதுக்கு தனியா இருக்கனும்? இங்கே வர சொல்லு?’-ன்னு சொல்வாங்க”

“அது சரிதான?!”

“ம்மா!! ‘சேர்ந்து வாழலாம்-ன்னு’ பாவை சொல்லட்டும்! அதுக்கப்பறம்… அப்பா, நளினி, பிரவீன்… இவங்க மூணு பேர்கிட்டயும் சொல்லிக்கலாம்!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டான்.

சற்று நொடிகளுக்குப் பின், “வேற ஏதாவது சொன்னாளா?” என்று மெல்ல கேட்டார்.

“ம்ம், சான்ஸ் தேடறது, வேற ஏதோ கிளாஸ்… இதைப்பத்தி பேசினா!!”

“வேற எதுவும் சொல்லலை-யா?” என்று மீண்டும் அதையே கேட்டார்.

“ஏன் கேட்கிறீங்க?”

“இல்லை… அன்னைக்கு… கொஞ்சம் அவளைத் திட்டினேன்!” என்றார் தயக்கமாக!

“என்ன சொன்னீங்க?”

” ‘உனக்கு இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணு பார்த்திருக்கலாம்னு’ சொன்னேன்” என்றார் மெதுவாக!

நடப்பதை நிறுத்தினான். பின், அமைதியாக நின்றான்!!

அவன் அமைதியைக் கண்டவர், “அன்னைக்கு ரொம்பக் கோபம் சிவா! அதனால…” என்று விளக்கம் சொல்லும்போதே, “ம்மா! அன்னைக்கு யாரும் யாரையும் புரிஞ்சிகிட்டு பேசலை. ஸோ, அதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்” என்று விட்டுவிடச் சொன்னான்.

“சரி சரி கண்ணா” என்றவர், அதற்குமேல் அதைப்பற்றி அதிகம் நினைக்கவில்லை.

இருவருக்குமிடையே ஓர் அமைதி நிலவியது. சுழலும் இரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இருள் பரவுவது போல் இருந்ததால், பால்கனி விளக்கை ஒளிரவிட்டான். பின், செண்பகத்தின் அருகில் வந்து, “ம்மா” என்றழைத்து, “பாவை நல்ல பொண்ணுதான்!” என்றான் உள்ளத்திலிருந்து!

மகனையே பார்த்துக் கொன்டிருந்தார்.

“பர்ஸ்ட் நாள் பேசிறப்போ ‘வாழ்க்கையைத்தான் ஷேர் பண்ண வர்றேன்! வருமானத்தை இல்லைன்னு’ சொன்னா!! இன்னைக்கு வரைக்கும், என்னோட ஏர்னிங்ஸ் பத்தி எந்தக் கேள்வியும் கேட்டதே இல்லை! அவ என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணது அன்புதான்!” என்று உணர்ந்து சொன்னான்.

இது ‘சரி’ என்றே தோன்றியது செபாகத்திற்கு! காரணம்? இதுவரைக்கும்… தொழிலில் வரும் வருமானங்கள் பற்றி, பாவை கேள்வி கேட்டதே இல்லை என்பதால்! மேலும், அன்றும் சரி… இன்றும் சரி… மகனின் பிரியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று புரிந்தது.

அவர் அமைதியைப் பார்த்தவன், “ம்மா! ப்ளீஸ்-ம்மா!! இப்போதைக்கு இதை விட்டா வேற வழி தெரியலை! அவ அங்கேயே இருக்கட்டும்! கொஞ்சம் டைம் கொடுங்க. கண்டிப்பா எல்லாம் சரியாகிடும்! அதுக்கப்புறம், வீட்ல சொல்லலாம்! ப்ளீஸ்-ம்மா” என்று கெஞ்சினான்.

மகனின் மனதிற்காகப் பார்க்கவா? அவன் மகிழ்ச்சிக்காகப் பார்க்கவா? இல்லை, அவன் மனதில் இருபவளால் மகிழ்ச்சி கிடைக்குமா?? – இப்படித் தவிப்புடன் பல கேள்விகள், அவரிடம்!!

எனினும் ‘சரியென்று’ தலையாட்டினார் மகனிற்காக! இருந்தும் அரைமனதுடன் இருந்தார், கணவன் மற்றும் மகளிடமிருந்து மறைப்பதற்காக!!

தேன்பாவை வீடு!

தனிவீடுதான்!

மேல்தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளர் இருந்தார்.

வீட்டின் மேல்தளம்…

சிறிய வீடு என்று கூட சொல்ல முடியாது, குறுகிய இரண்டு அறைகள் மட்டும்தான்! அதில் ஒன்று, சிறிய குளியலறை வசதி கொண்ட படுக்கையறை! மற்றொன்று வரவேற்பறையோடு சேர்ந்திருந்த சமையலறை!!

மாடி வீடு என்பதால், வீட்டின் முன்பகுதி விசாலமாக இருந்தது. மேலும்,

தரை முழுவதும் செங்கல் பதிக்கப்பட்டிருந்தது!

வீட்டின் அறைகள்….

சீமென்ட் மொசைக் தரைகள்! கத்திரிப்பூ நிறத்தில் இருந்த சுவரின் வண்ணங்கள்! ஆறேழு கம்பிகள் வைத்த மர சன்னல்கள்! திறந்த பாணியில் இருந்த சமையலறை மற்றும் படுக்கையறை அலமாரிகள்!!

இவ்வளவுதான் வீடு!

படுக்கையறை அலமாரியில் உடுத்தும் உடைகளை அடுக்கி வைத்திருந்தாள்! சமயலறையில்… சிறு சிறு சமையல் பாத்திரங்கள் மற்றும் ஒரு மின்னடுப்பு!

அவ்வளவுதுதான் அவளது உடைமைகள்!!

ஒருவாரம் முடிந்திருந்தது!

இந்த ஒரு வாரத்தில், ஒரு ஏழு நாட்கள் பாவையைப் பார்க்க வந்திருந்தான், சிவபாண்டியன்! மாடி முற்றத்தில் நின்றுதான் பேசுவார்கள்!!

‘ஏதும் தேவை இருக்கா?’ என்று கேட்பான்.

‘இல்லை’ என்பாள்.

‘வேறேதும் தேவை இருந்தா சொல்லு’ என்று சொல்வான்.

‘ம்ம்ம்’ என்று தலையாட்டுவாள்.

இருவருக்கும் இடையே உரையாடல், இதுபோல்தான் முதல் நாள் இருந்தது.

ஏழு நாட்களுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? என்று, இன்று தெரிந்துவிடும். ஏனென்றால், இன்றும் வந்து நிற்கிறான்!

ஆம்! நீ விலகி இருந்தால் என் வாழ்க்கை என்னிடம் விளக்கம் கேட்கும் என்பது போல்தான், அவன் நடந்து கொள்கிறான்!!

கதவில் சத்தம் கேட்டதும், பாவை வந்து கதவைத் திறந்தாள். கொஞ்சம் வியர்வை… நிறைய களைப்பு என்று, அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.

“என்ன இந்த நேரத்தில வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.

“த்ரீ-க்கு வீட்லருந்து கிளம்பிப் போனேன். இப்போதான் ரிட்டன். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி. அதான் அப்படியே வந்திட்டேன்”

“ஓ!” என்றவள், அவனை ஆராய்ந்தாள். கண்களில் களைப்பு தெரிந்தது. அறையின் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் பன்னிரண்டு என்று காட்டியது.

என்ன நினைத்தாளோ, ” சாப்பிட்டீங்களா?” என்று, இதுவரை அவனிடம் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“இன்னும் இல்லை! வீட்டுக்குப் போய்தான்” என்றான், ஒற்றை விரலால் வியர்வையைத் துடைத்துக் கொண்டே!

“பசிக்கலையா?” என்றாள் பரிவாக!

“ரொம்பப் பசிக்குது”

களைப்பின் காரணமாகவா? கணவன் என்பதாலா? தெரியவில்லை! ஆனால், “சாப்பிடுறீங்களா?” என்று கேட்டாள்.

கேள்விக்கு பதில்தானே உண்டு? பசியாற்றும் குணமுமா உண்டு? ஆனால், அவள் கேள்வியில் அவன் பசியாறினான். இருந்தும், “ம்ம்ம்” என்றான், எதையும் காட்டிக்கொள்ளாமல்!

“வாங்க” என்று உள்ளே அழைத்ததும், காலணிகளை கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!