ISSAI,IYARKAI & IRUVAR 14.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 14


தேன்பாவை வீடு

கேமரா வாங்கி வந்து, பாவை வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டு நின்றான், சிவபாண்டியன்.

பாவை கதவைத் திறந்ததும்… “ஹாய்” என்று சொல்லி உள்ளே நுழைந்தவன், கேமராவைக் காட்டினான்.

“ஓ! வாங்கியாச்சா!” என்று சந்தோஷப்பட்டவள்… கதவைத் தாழிட்டுவிட்டு, “ஒரு விஷயம் சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டே, அவன் பின்னேயே உள்ளே வந்தாள்.

“சொல்லு” என்றான், அவளைப் பார்த்து திரும்பி நின்று!

“ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு” என்று சொன்னதுமே, “ஹே ஹனி! கங்கிராட்ஸ்!!” என்று வாழ்த்துச் சொல்லி, அவளை லேசாகக் கட்டியணைத்தான்.

பின், விலகி நின்று கொண்டான்.

“நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை” என்றாள், அவனது எதிர்பாராத அணைப்பிலிருந்து மீண்டு வந்து!

“சரி சொல்லு” என்றான் அமர்த்தலான குரலில்!

“இது ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் இல்லை. டிவி-ல பெஸ்டிவல் ஸ்பெஷல் ப்ரோக்ராம்-க்காக கேட்டாங்க. சும்மாவே இருக்கிறதுக்கு, ட்ரை பண்ணலாமேன்னு நினைச்சேன். அதான், ஒத்துக்கிட்டேன்!”

“குட் டெசிஷன்” என்றவன், “ஒன்ஸ் அகைன் கங்கிராட்ஸ்” என்று சொல்லி, மீண்டும் ஒருமுறை கட்டியணைத்தான்.

அவனது அணைப்பை அகத்தில் ஆனந்தமாக உணர்ந்தாலும்… புறத்தில் அதை வெளிக்காட்டாமல், “ஆங்! வீணை வாங்கியிருக்கேன். அதை போட்டோ எடுத்து தர்றீங்களா? தேவைப்படுது!” என்று கேட்டாள்.

“அஃப்கோர்ஸ்” என்று சொல்லி, புகைப்படம் எடுக்கத் தயாரானான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு…

இரண்டு மூன்று புகைப்படம் எடுக்கும் பொழுது, ‘தனக்காக இவ்வளவு மெனக்கெடுகிறானே?’ என்று முகம் மலர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதன்பின், அவன் வீணையைக் கையாளும் விதத்தைப் பார்த்தவளுக்கு, முகம் அசௌகரியமாக மாற ஆரம்பித்தது.

அவன் இஷ்டத்திற்கு… வீணையை அங்கே இங்கே என வைத்துப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும், முகம் முற்றிலும் அதிருப்தியைக் காட்டியது.

ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், “போதும் நிறுத்துங்க” என்றாள் கடுமையாக!

“ஏன்? திடிர்னு என்னாச்சு?” என்றான் ஒன்றும் புரியாமல்!

“நீங்க என்ன பண்றீங்க?” என்றாள் கோபமுடன்!

“போட்டோதான எடுக்கிறேன்” என்றான், இன்னும் புரியாமல்!

“அதுக்காக! இப்படியா?” என்றாள், கழுத்து நரம்புகள் புடைத்தெழும் கோபத்துடன்!

‘இப்படிக் கோபப்படுகின்ற அளவிற்கு, அப்படி என்ன செய்துவிட்டேன்?’ என்பது போல் நின்று கொண்டிருந்தான்.

அவனுக்குப் புரியவில்லை எனத் தெரிந்ததும், “இது என்ன?” என்று வீணையைக் காட்டிக் கேட்டாள்.

“மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட்” என்றான்.

“அதுக்கு உண்டான மரியாதை தர வேண்டாமா?” என்றாள், பேசிய வார்த்தைகளுக்கே வலிக்கும் வண்ணம் அழுத்தமாக!

அமைதியாக நின்றான்.

“உங்க இஷ்டத்துக்கு அங்கே இங்கேன்னு தூக்கி வைக்கிறீங்க. எந்த இடத்தில வைக்கிறோம்னு பார்க்க மாட்டிங்களா?” என்று திட்டினாள்.

“சப்ஜெக்ட் எந்த இடத்தில இருந்தா, நல்லா கிளாரிட்டி கிடைக்கும்னு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சப்ஜெக்ட்டா? அது சங்கீதம்! சரஸ்வதி!” என்று அதிருப்தியில் அலறினாள்.

“இல்லை பாவை போட்டோ எடுக்கும் போது சப்ஜெக்ட்-ன்னு…” என்று விளக்கம் சொல்லும்போதே, “திரும்பத் திரும்பச் சொல்லாதீங்க!” என்று எச்சரித்தாள்.

“ஜஸ்ட் போட்டோ எடுக்கிறதனால என்னாகிடப் போகுது!?”

“வேண்டாம்!” என்றாள் கோபமாக!

“ஏன்?”

“நான் சரஸ்வதி, சங்கீதம்-னு மதிக்கிற ஒரு விஷயத்தை…. நீங்க சப்ஜெக்ட்-ன்னு சொல்லி ஹேண்டில் பண்ற விதம், எனக்குப் பிடிக்கலை! அதனால வேண்டாம்!!” என்றாள் கடுங்கோபத்துடன்!

சட்டென ஒரு பொறி தட்டியது பாண்டியனுக்கு!

உடனே, “எவ்வளவு ஆசையா போட்டோ எடுத்துக் கொடுக்கலாம்னு நினைச்சேன்! இப்படி முடியாதுன்னு சொல்ற?” என்றான்.

“அப்படித்தான் முடியாதுன்னு சொல்லுவேன்!”

“ஒரு நாள்தான பாவை! அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா?”

“முடியாது”

“ஏன்?”

“ஏன்னா, அது என்னோட நம்பிக்கை! ஒரு நாளுக்காக மாத்த முடியாது!!” என்றாள் பிடிவாதமாக!

“இதேதான பாவை, நானும் சொன்னேன்!” என்று பிடித்துக் கொண்டான்!!

‘எதைச் சொல்கிறான்?’ என்று புரிந்து கொள்ள முடியமால் நின்றாள்.

“அன்னைக்கு, ‘எனக்காகக் கோயிலுக்குள்ளே வாங்க-ன்னு’ கூப்பிட்டேயே, அதைச் சொல்றேன்!” என்றான், அவள் புரிந்து கொள்ளும்படி!

‘ஏன் இந்த இரண்டையும் சம்மந்தப் படுத்துகிறான்!?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தைப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்! ஆனா, நீ ஒத்துக்கவேயில்லை!”

‘ஓ! இதைச் சொல்லத்தான், இந்த ஒப்புமையா?’ என்ற அளவிற்குப் புரிந்தது.

“உன் நம்பிக்கையை என் மேல திணிக்கப் பார்த்த! நானும் என் நம்பிக்கையை உன் மேல திணிக்கப் பார்த்தா, எப்படி இருக்கும்? யோசிச்சுப் பாரு!?”

யோசித்தாள். ‘நான் வரமாட்டேன்’ என்று சொன்னானே தவிர, ஒரு முறை கூட, ‘நீ போகக் கூடாது’ என்று சொல்லவேயில்லை… என்ற அளவிற்குப் புரிந்தது.

“நமக்கு நம்பிக்கை இல்லாத… பிடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ண சொன்னா, ஒரு டிஸ்கம்ஃபர்டபிள் பீல் வரும்”

இன்று தனக்கு வந்ததே!? முதலில், ஒரு அசௌகரியமான உணர்வு! பின், அதுவே அதிகமாகி கோபமாக வெளிப்பட்டது!!

“அப்படி ஒரு பீல் வரும்போது, முடியாதுன்னு சொல்றது-ல தப்பில்லை பாவை. அதான், நான் அன்னைக்கு முடியாதுன்னு சொன்னேன்” என்று, அன்றைய தன் நிலையை புரிய வைத்தான்.

சற்று நேரத்திற்கு முன், ‘முடியாது’ என்று அவனிடம் சொல்லியது, காதிற்குள் வந்து ஒலித்துவிட்டுச் சென்றது.

“அப்படி முடியாதுன்னு சொல்றதுனால, அன்பு இல்லைன்னு அர்த்தம் இல்லை” என்று, தன் அன்பைப் புரிய வைத்தான்.

புரிந்தது. மேலும், புரிந்தது… சரியென்றும் தோன்றியது.

“இன்னைக்கு நீயும் முடியாதுன்னு சொன்ன, அப்போ உனக்கு என்மேல அன்பு இல்லைன்னு அர்த்தமா?” என்று ஒரு கேள்வி கேட்டுப் பார்த்தான்.

“அதெப்படி? இதுக்காக எல்லாம், எப்படி அன்பில்லாம போகும்?” என்று பதில் கேள்வி கேட்க முடிந்ததே தவிர, பதில் சொல்ல இயலவில்லை!

“அதை நீதான் சொல்லணும்! ஏன்னா, நீதான் அப்படிச் சொன்ன!” என்று சொல்லிவிட்டு, அவள் யோசிக்கட்டும் என்று அமைதியாகிவிட்டான்.

அவளும் யோசித்தாள்.

இவனை புரிந்து கொள்ளவில்லையா? இவனிடம் எதிர்பார்த்தது தவறா? இன்று புரிந்தது, அன்று ஏன் புரியவில்லை? தன் முடிவு தவறான முடிவா? – என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் குழம்பிக் கொண்டிருந்தாள்.

அவளின் குழப்பதைக் கண்டவன், அவளருகில் வந்து நின்றான். கண்களில் கலக்கத்துடன், நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹே ஹனி!” என்று சொல்லி, தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான் அக்கறையாக! பின், “நடந்ததையெல்லாம் யோசிக்கக் கூடாது” என்றான் அறிவுறையாக!!

‘சரி’ என்பது போல் தலையாட்டினாள்.

“ஆனா, இதைமட்டும் புரிஞ்சிக்கோ!” என்றதும், ‘எதை?’ என்பது போல் இமை உயர்த்தி, கணவனைப் பார்த்தாள்.

“ரிலேஷன்ஷிப்-ல டிஸ்கம்ஃபர்டபிளா பீல் பண்ற இடத்தில ‘நோ’ சொல்லலாம். தப்பில்லை! அப்படிச் சொல்றதுனால அன்பு இல்லைன்னு அர்த்தம் இல்லை!!” என்று, தன் அன்பின் அறிவியலை விளக்கினான்.

மேலும், “புரியுதா ஹனி?!” என்று கேட்டான்.

“ம்ம்ம், புரியுது! இனிமே பாலோவ் பண்றேன்” என்றாள் இறுக்கமான மனநிலையுடன்!

சிரித்துக் கொண்டே, “நீ ஏற்கனவே பலோவ் பண்ணியிருக்க” என்றான், அவளை இலகுவாக்கும் முயற்சியில்!

“எப்போ?” என்றாள், கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறி!

“அன்னைக்கு கச்சேரி முடிச்சிட்டு வர்றப்போ, கார்-ல உன்னை நான் கிஸ் பண்ண வந்தேன். அப்போ நீ ‘நோ’ சொன்ன!”

யோசித்தாள். ‘ப்ச்’ என்று சொல்லி எரிச்சலடைந்து, அவனது முதல் முத்தத்திற்கு மறுத்தது… அதற்காக அவன் மன்னிப்பு கேட்டது… நியாபகத்திற்கு வந்தது.

அவன் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் பொழுது, தன்னைப் போல் ‘அன்பு இல்லை’ என்று வாதம் செய்து கொண்டிருக்கவில்லை எனத் தெரிந்தது. 

மாறாக, தன்னை… தன் நிலையைப் புரிந்து கொள்கிறான் என்று புரிந்தது.

மேலும்… அவன் கோவிலுக்குள் வர மறுத்ததும், தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வருந்தினாள்.

கடைசியாக, ‘தான்மட்டும் ஏன் அப்படி?’ என்று சுய அலசலில் இறங்கினாள்!

சுருக்கமாக, எதனால் ஏமாற்றம் அதிகமாகி அவளுள் வெறுமை பரவியதோ, அதை வைத்தே அவளது மாற்றத்திற்கான விதையை விதைத்தான், சிவபாண்டியன்!!

அவள் யோசித்தது போதும் என்று நினைத்தவன், “ஹனி” என்று அழைத்தான்.

அவனிடமிருந்து விலகி நின்று, “நீங்க எப்படி போட்டோ எடுக்கிறதுன்னு சொல்லித் தந்திடுங்க. நானே எடுத்துகிறேன்” என்றாள்.

“அது சரி” என்று சிரித்துக் கொண்டான்.

பின், “வா” என்று சொல்லி, கேமராவிற்கு முன்னே அவளை நிறுத்தினான். அவளுக்குப் பின்னே அவன் நின்று கொண்டு, சொல்லித் தர ஆரம்பித்தான்.

“சப்ஜெக்ட் ஷார்ப்பா வேணும்னா, பேக்ரௌன்ட்-அ இப்படி ப்ளர்டா… கிரிமியா வச்சிக்கலாம். அன்ட் ஷேடோவ் இல்லாம பார்த்துக்கணும். அன்ட்… ” என்று சொல்லிக் கொண்டே போன போது… பின்னே திரும்பி, அவனைப் பார்த்தாள்.

‘என்னைப் பார்க்காத! கேமராவைப் பாரு!!’ என்பது போல் சைகையால் சொன்னது மட்டுமில்லாமல், அவள் நாடியைப் பிடித்து முன்னே திருப்பினான்.

பின், மீண்டும் கத்துக் கொடுக்க ஆரம்பித்தான்.

கன்னத்துப் பருக்களை உரசிச் செல்லும், அவனது பேச்சின் மூச்சுக் காற்றும்… மூச்சுக் காற்றின் பேச்சும்… சொல்லிக் கொடுப்பதைக் கவனிக்க மறந்துவிட்டு, சொல்லிக் கொடுப்பவனைக் கவனிக்கத் தூண்டியது.

மீண்டும் திரும்பி, அவன் விழிகளைப் பார்த்தாள்.

“மிஸஸ் பாண்டியன்! கொஞ்சம் கவனிக்கிறீங்களா?” என்று கேட்டதும், ‘ச்சே! நான் ஏன் இப்படி?!’ என்று நினைத்து, முன்னே திரும்பி… கண்கள் சுருக்கி… மட்டியைக் கடித்துக் கொண்டு நின்றாள்.

அவளின் கவனச் சிதறலில் தெரிந்த காதலைக் கண்டவனுக்கு, கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடியது களிப்பு!

இருந்தும் கத்துக் கொடுப்பதைத் தொடர்ந்தான், அவள் கனவு முக்கியம் என்பதால்!!

பாண்டியன் வீடு

நளினி, மதி… இருவரும் தொழில் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சென்பகம் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

அக்கணம்… சிவா தன் அறையிலிருந்து வெளியே வந்து, “ம்மா! கொஞ்சம் வேலை இருக்கு! போயிட்டு வந்திடுறேன்” என்று சொன்னான்.

“அண்ணா, இன்னைக்கு ஏதோ ட்ரிப் போகணும்னு சொன்ன?” என்று நளினி கேட்டாள்.

“ஆமா! ஈவினிங்தான் பிளைட்”

“அப்போ வீட்ல இருக்கலாமே சிவா? ரெண்டு மூணு நாள் எப்படியும் ரெஸ்ட் எடுக்க முடியாது! இன்னைக்கும் எதுக்கு அலைஞ்சிகிட்டு?” என்று மதி கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைப்பா! முக்கியமான வேலை! போயே ஆகணும்” என்று சொன்னான்.

செண்பகத்திற்குப் புரிந்தது! இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் இருக்க முடியாது என்பதால், பாவையைப் பார்க்கச் செல்கிறான் என்று!!

உடனே, “முக்கியமான வேலைன்னு சொல்றான்-ல. போகட்டும் விடுங்க” என்று, அவர்கள் இருவரைப் பார்த்துச் சொன்னவர், “நீ போ கண்ணா” என, சிவாவைப் பார்த்துச் சொன்னார்.

உடனே அனைவரிடமும் சொல்லிவிட்டு, விரைவாகக் கிளம்பினான்.

அவன் சென்றதும், மூவரும் அவரவர் வேலையைத் தொடர்ந்தனர்.

“ப்பா! அண்ணனோட முகத்தில கொஞ்சம் சந்தோசம் வந்திருக்கு! பார்த்தீங்களா?” என்று நளினி கேட்டாள்.

“ம்ம்ம்! நானும் பார்த்தேன்-ம்மா” என்றார் மதி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த செண்பகம், ‘மனைவியுடன் சகஜமாகப் பேசுவதால் வந்த சந்தோஷம், இது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

“கொஞ்ச கொஞ்சமா அந்தப் பொண்ண மறந்திட்டு வர்றான்னு நினைக்கிறேன்” என்று நளினி சொன்னதும், “அது நல்லதுதான்” என்று மதி சொன்னார்.

‘இவர்கள் இப்படி யோசிக்கிறார்களா? உண்மை தெரியும் பொழுது, எப்படி உணர்வார்கள்? என்ன சொல்வார்கள்?’ என்று கேள்விகள் வந்து, கலக்கத்தைத் தந்தது செண்பகத்திற்கு!

மேலும், சிவாவின் விடயத்தைக் கணவனிடம் மறைக்கிறோமே என்ற கவலையும் வந்தது!!

தேன்பாவை வீடு

பாண்டியன் வருகையின் போது, பாவை சோகமாக இருந்தாள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!