ISSAI,IYARKAI & IRUVAR 16.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 16


சிவபாண்டியன் வீடு

இரண்டு நாட்கள் கடந்து வந்த நாளின் இரவுப் பொழுது, நேரம் 11:30!

இந்த நேரத்தில், பாண்டியனும் பாவையும் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இப்படி முழிச்சிருக்காத பாவை”

“தூங்கினா, முழிக்க மாட்டேன். அப்புறம் உங்களுக்கு பர்த்டே விஷ் பண்ண முடியாது”

“சொன்னா கேட்க மாட்ட?!”

“கேட்கமாட்டேன்” என்றவள், “எங்கே இருந்து பேசறீங்க?” என்று கேட்டாள்.

“நம்ம ரூம் பால்கனி” என்றதும், “ஓ! போன்சாய் கூட நின்னு” என்றாள்.

“ஆமா! ஹனி லோகஸ்ட் பார்த்துக்கிட்டே, ஹனிகிட்ட பேசறேன்” என்றான்.

சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இடையில், சட்டென ஓர் அமைதி! காரணம், இதே இடத்தில் நிகழ்ந்த முந்தைய பேச்சுக்கள் நியாபகத்திற்கு வந்ததால்!!

சில நொடிகள் அமைதிக்குப் பின், “சரி! நாளைக்கு என்ன பிளான்-ன்னு சொல்லுங்க?” என்று கேட்டு, பேச்சின் போக்கை மாற்றினாள்.

“பிரவீனும் நளினியும் ஏதாவது பிளான் பண்ணியிருப்பாங்க” என்று வழக்கத்தைச் சொன்னவன், “ஆஃப்டர்நூன்-க்கு அப்புறம் அங்கே வர்றேன்! உனக்கு ஓகேவா?” என, அவளின் விருப்பம் பற்றியும் கேட்டான்.

“ம்ம்ம்” என சொல்லி ஏற்றுக் கொண்டவள், “நைட் டின்னர் இங்கே! சரியா??” என ஒரு சிறு எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

‘சரி’ என ஒத்துக் கொண்டதும், “ஸ்பெஷலா என்ன சமைக்க?” என்று கேட்டாள் ஆசையாக!

“சொன்னா கண்டிப்பா பண்ணுவியா?” என்றான் பீடிகையுடன்!

“என்ன இப்படிக் கேட்கிறீங்க? கண்டிப்பா செஞ்சு தருவேன்” என்றாள் அன்பாக!

“வழக்கமா குக் பண்றதையே பண்ணு” என்றான் எதார்த்தமாக! பின், பட், கொஞ்சமாவது டேஸ்ட்டா பண்ணு” என்றான் எடக்காக!

“உங்களுக்கு டின்னர் கிடையாது” என்றவள் குரலில் சிணுங்கல் பாதி, சீற்றம் மீதி இருந்தது!

“இது இன்னும் ஸ்பெஷல்” என்று சொல்லிச் சிரித்தான்.      

அவளும் சிரித்தாள்! அதுவும் ஐம்பது ரூபாய் பரிசுக்குத் தகுதியான நகைச்சுவைத் துணுக்குக்கு, ஐயாயிரம் ரூபாய் பரிசு தந்தது போல் சிரித்தாள்!

அது காதல்!!

சிரிப்பின் முடிவு நொடியில், “பர்த்டே-க்கு என்ன புது டிரஸ்?” என்றாள் சிறுபிள்ளையாய்!

“ஹே! அதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை” என்றவன், “நீ?” என்று கேட்டான்.

“ம்ம்ம்! நாளைக்குப் புது புடவை கட்டிக்கிட்டுக் கோவிலுக்குப் போகணும்”

“ஓ!” என்றவன், “என்ன கலர்?” என்று கேட்டான் பேச்சு போனபோக்கில்!

“ஏன்? நீங்களும் அதே கலர்-ல டிரஸ் போடப்போறீங்களா?”

“ப்ச்! சும்மாதான் கேட்டேன்”

“சரி! உங்களுக்குப் புரியிற மாதிரி சொல்லணுமா? இல்லை, எனக்குப் புரியற மாதிரி சொல்லணுமா?” என்றாள் புதிராய்!

“இது என்ன புதுசா இருக்கு!” என்று உதடுகள் அசைத்தவன், “எனக்குப் புரியிற மாதிரி-ன்னா?” என்று கேட்டான்.

“ஷாக்கிங் கிரீன்”

“உனக்குப் புரியிற மாதிரின்னா?”

“கிளிப்பச்சைக் கலர்” என்று சொன்னதும், “ஹே! பர்ஸ்ட் நாள் பேசினது! பஞ்சுமிட்டாய் கலர்!” என்று சொல்லி, சத்தமாகச் சிரித்தான்.

“அதேதான்! ஷாக்கிங் பிங்க்” என்று சொல்லி, சிரித்துக் கொண்டே, “இந்த கலர்-ல உங்ககிட்ட பேன்ட் ஷர்ட் இருக்காது! பிளான்ட்ஸ்தான் இருக்கும்” என்றாள்.

“அது சரி” என்று சொல்லி, இன்னும் சத்தமாகச் சிரித்தான்.

இதற்கிடையே… சிவாவை அழைக்க வந்த செண்பகம், மகனைப் பார்த்துக் கொண்டே நின்றார்.

முதலில்… எத்தனை நாட்களுக்குப் பின், இப்படிச் சிரிக்கிறான்? என்று தோன்றியது.

பின், ‘பாவையிடம் பேசப் போகிறேன்’ என்று சொன்னது நியாபகத்தில் வந்தது. இவர்கள் இரண்டு இப்படிப் பேசிச் சிரிப்பார்களா? என்று ஆச்சரியமாக இருந்தது.

அது ஆனந்த ஆச்சரியம்!

மேலும், மகனின் நம்பிக்கை வீண்போகவில்லை என்ற நிம்மதியும் வந்தது!

“சிவா” என்று அழைத்ததும், பால்கனியிலிருந்து திரும்பிப் பார்த்தான்.

கண்ணாடிக் கதவின் அருகே சென்பகம் நிற்பதைப் பார்த்தவன், “பாவை ஒரு நிமிஷம்” என்று அழைப்பை ‘ஹோல்டு’-ல் போட்டான்.

பின், “என்னம்மா?” எனக் கேட்டபடியே செண்பகத்தை நோக்கி வந்தான்.

மகனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்த்தவர் பூரித்துப் போனார். அது அகத்திலிருந்து வரும் மகிழ்ச்சி என்றும் புரிந்தது.

“இன்னும் பேசி முடிக்கலையா??” என்று கேட்டதும், “நீங்க சொல்லுங்க-ம்மா” என்றான்.

“மாப்பிளையும் நளினியும் இன்னும் கொஞ்ச நேரத்தில வர்றோம்ன்னு சொன்னாங்க. அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்”

“ஒரு பைவ் மினிட்ஸ்-ல வந்திடுறேன்” என்றதும், “சரி கண்ணா” என்று கிளம்பிச் சென்றார்.

அவர் சென்றதும், மீண்டும் அலைபேசியின் அழைப்பைத் தொடர்ந்தான்.

“சொல்லு” என்றதும், “யாரு வந்தாங்க?” என்று கேட்டுப் பார்த்தாள்.

“அம்மாதான்” என்றவன், “நளினியும் பிரவீனும் வர்றாங்கன்னு சொல்லிட்டுப் போறாங்க” என்றான்.

“விஷ் பண்ணவா?” என்று கேட்டவளுக்கு, “ம்ம்ம்” என்றான்.

இதுவரைக்கும் அவர்களை இருவரைப் பற்றியே இருந்த பேச்சுக்கள், இப்பொழுதான் குடும்பத்தினரைப் பற்றி ஆரம்பித்தது. ஆதலால், அவளிடம் ஓர் இறுக்கம் நிலவியது.

“என்னாச்சு, அமைதியாயிட்ட?” என்றான் சாதரணமாக!

“என்னைப் பத்தி ஏதாவது கேட்டாங்களா?” என்று தயக்கத்துடன் கேட்டவள், “இல்லை, கேட்பாங்களா?” என்று சிறிதளவு ஆர்வத்துடன் கேட்டாள்.

“அம்மாக்கு எல்லாம் தெரியும்” என்றான் மிதமான குரலில்!

“தெரியுமா?” என திகைப்புடன் கேட்டவள், “என்ன சொன்னாங்க?” என்று கேட்டுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்த்திருந்தாள்.

“முதலயே சொல்லியிருக்கலாமே-ன்னு சொன்னாங்க. அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க” என்று சொன்னதும், பாவைக்குள் ஏதோ ஒரு நிம்மதி பரவியது.

வெகுவாகக் குன்றிப் போன குரலில், “நல்லா இருக்காங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்” என்றதும், அதன்பிறகு இரண்டு மூன்று நிமிடங்கள் பொதுவாகப் பேசினார்கள்.

பின், “ஹனி! விஷ் பண்ணு. எல்லோரும் வந்துடுவாங்க!” என்றான்! மேலும், எதிர்பார்ப்புடன் நின்றான்!

அவளைப் பார்த்தபின் வரும் முதல் பிறந்தநாள் அல்லவா?! ஆதலால் எதிர்பார்ப்பு!!

அவள் வாழ்த்தை வாங்கிக் கொள்ள, அலைபேசி ஒலிப்பானின் அருகில் காதையும் கவனத்தையும் வைத்துக் கொண்டு நின்றான்.

“ஹேப்பி பர்த்டே” என்றாள் வெறுமென!

“ப்ச்!” என்று சலித்துக் கொண்டவன், “பேர் சொல்லி சொல்லு” என்றான்… தன் பெயரின் பின்பாதியை, தன் சரிபாதி உச்சரிக்க வேண்டுமென!

“சரி சரி சரி” என்றாள் சம்மதமாய்! பின், “ஹேப்பி பர்த்டே சிவா” எனச் சொல்லி, சதி செய்தாள்!

“அடி வாங்கப் போற ஹனி” என்றான் பொறுமை போனவனாய்! பின், “அப்படிச் சொல்லு” என்றான் சிறுபையனாய்!

“சரி சரி இப்போ கரெக்டா சொல்லிடுறேன்” என்றவள், “ஹேப்பி பர்த்டே சிவபாண்டியன்” என்றாள் குறும்புப் பெண்ணாய்!

“சோதிக்கிற” என்று சொல்லும் போதே, அவள் சிரிக்கும் சத்தம் கேட்டது.

உடனே… அவனும் சிரித்துக் கொண்டே, “விடு! நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

சிவா வீட்டின் வரவேற்பறை…

அறையிலிருந்து வெளியே வந்த கொஞ்ச நேரத்தில்… நளினி, பிரவீன், பிரவீனின் பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் வந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பித்தது!

அதன் பிறகு,

சற்று நேரத்திற்கு… கேக்! குளிர்பானங்கள்! கூச்சல்கள்! இவை மட்டுமே!!

அதன் பின், நண்பர்கள் கிளம்பியிருந்தனர்.

சிவாவிற்கு வாழ்த்து சொல்லி… உயர்ரக புகைப்படக் கருவியைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, பிரவீனின் பெற்றோர்கள் கிளம்பினார்கள்.

அனைவரும் சென்றதும், “ஹாப்பி பர்த்டே அண்ணா” என்று சொல்லி, சிவாவிடம் சிறு பெட்டியைத் தந்தாள்.

‘என்னது?’ என்று திறந்து பார்க்கையில், உள்ளே ஒரு சாவி இருந்தது!

“எங்களோட கிப்ட்!” என்று பிரவீனையும் சேர்த்துச் சொன்னவள், “பைக்! காடு மேடுன்னு சுத்துவேல? அதுக்கேத்த பைக்!” என்றாள்.

“தேங்க்ஸ்” என்றான் இருவரையும் பார்த்து!

“இப்பத்தான் உன் முகத்தில சந்தோஷம் வந்திருக்கு. இப்படியே இரு!” என்றாள், அவனின் மகிழ்ச்சியை விரும்புபவள்!

சிரித்துக் கொண்டான்.

“அண்ணா! நம்ம நாளைக்கு லஞ்சுக்கு வெளியே போகணும்” என்று சொல்லும் போதே, “உன்னோட ட்ரீட்- டா” என்றான் பிரவீன்.

இரு கை பெருவிரல்களையும் உயர்த்தி சரியென்றதும், நளினியும் பிரவீனும் விடைபெற்றுச் சென்றனர்.

மருமகன் சென்றதும்… மகனின் அருகே வந்த மதி, ஒரு கோப்பைத் தந்தார்.

“என்னப்பா?” என்றான்.

“செங்கோட்டை பக்கத்தில ஒரு லேன்ட். உனக்காக!” என்றார்.

சின்னதாய் புன்னகை மட்டும் செய்தான்.

“இதேமாதிரி எப்பவும் சந்தோஷமா இரு சிவா” என்றார், அவனின் மகிழ்ச்சியை விரும்புபவர்! பின், உறங்கச் சென்றார். 

அதன்பின், அம்மாவும் மகனும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

“என்ன சொல்றா?” என்றார் எடுத்தவுடனே!

“யாரும்மா??” என்றான் எதுவுமே தெரியாதவன் போல!

“உனக்கே தெரியும்!” என்றதும், “அப்படியா?” என்றான் விளையாட்டாய் சிரித்துக் கொண்டே!

“சிரிக்காத சிவா!” என்று சலிப்புடன் சொன்னவர், “அப்பா கேட்டாங்க” என்றார்.

“அப்பா என்ன கேட்டாங்க?” என்றான் விளையாட்டல்லாத குரலில்!

” ‘சிவா லைஃப் பத்தி என்ன முடிவெடுத்திருக்கான்-னு?’ கேட்கிறாரு” என்றவர், “நளினியும் கேட்டா” என்றார்.

“அவ என்ன கேட்டா?”

“அதேதான்!?” என்றவர், “ரெண்டு பேரும் நீ பாவையை மறந்திட்டு இருக்கிறதா நினைக்கிறாங்க” என்றார்.

“அப்படியா” என்றான் ஒருமாதிரி குரலில்!

“எப்படியும் உன்கிட்ட இதைப் பத்திப் பேசுவாங்க. அதான் கேட்கிறேன், பாவை என்ன சொல்றா-ன்னு!?” என்று தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றார்.

“இன்னும் எதுவும் சொல்லலை-ம்மா”

“நீ கேட்டியா?”

“இல்லை” என்றவன், “என்மேல நம்பிக்கை வந்து… என்னைப் புரிஞ்சிக்கிட்டு… அவளா சொன்னா நல்லா இருக்கும்-ன்னு நினைக்கிறேன். அதான் நான் கேட்கலை-ம்மா” என்றான்.

“ஓ!” என்றார் யோசனையுடன். பின் கொஞ்சம் தயங்கினார். அதன்பின், “என்னைப் பத்தி ஏதாவது கேட்பாளா?” என்று கேட்டார்.

சிரித்துக் கொண்டே, “நீங்க நல்லா இருக்கீங்களா-ன்னு கேட்டா!” என்றான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவர், பின் புன்னைகைத்துக் கொண்டார்.

அவர் புன்னகையைப் பார்த்தவன், “ம்மா! கிஃப்ட் எங்கே?” என்று கேட்டான், பிறந்தநாள் பையனாக மாறி!

சாப்பிட்டு மேசையில் இருந்த கேக்கில் கொஞ்சம் எடுத்து, மகனுக்கு ஊட்டிவிட்டு, “ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்” என்று வாழ்த்தினார், அவன் மகிழ்ச்சி எதுவென்று அறிந்து!

சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின் அவரும் உறங்கச் சென்றார்.

அம்மா சென்றபின், பிறந்தநாள் பரிசுகளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

சட்டென ஓர் ஆசை வந்தது! பாவை என்ன பரிசு தருவாளென்ற ஆசை, அது!

அதன்பின்தான்… ‘வீட்டின் தேவைக்கே அதிகம் செலவாயிற்று! பணம் அதிகமில்லை. வீணை வேறு வாங்க வேண்டும்’ என அவள் சொன்னது நியாபகத்திற்கு வந்தது.

எனவே, பரிசு தருவாளென்ற எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!