ISSAI,IYARKAI & IRUVAR 17.1

ISSAI,IYARKAI & IRUVAR 17.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 17


“அது… அது…” என்று தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்தாள், பாவை!

அதைக் கண்டவன், “நீ மாறப்போறது இல்லை! எப்பவும்…” என்று கேலி செய்யத் தொடங்கும் போதே… “ப்ளீஸ்! வேறெதுவும் சொல்லிடாதீங்க! இது ரொம்ப முக்கியமான விஷயம்” என்று மடமடவென பேசினாள்.

“சரி சொல்லு”

‘எப்படிச் சொல்ல?’ என்று யோசித்துக் கொண்டே, அறையைச் சுற்றிப் பார்த்த போது, அவன் கொண்டு வந்த பை கண்களில் தென்பட்டது.

“அது என்ன பேக்?” என்றாள், சம்மதத்தைச் சொல்ல சம்மந்தமில்லாமல் கேள்வி எழுப்பி!

“ஒரு ஃபங்க்ஷன் இருக்கு! ஸோ, ஃபார்மல் டிரஸ் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றான் சுருக்கமாக!

“என்ன ஃபங்க்ஷன்?” என்றாள், விரிவான பதிலை எதிர்நோக்கி!

“நீயும் வரப்போற! அப்போ தெரிஞ்சிக்கோ” என்றான், அதைவிட சுருக்கமாக!

‘அய்யோ’ என்றிருந்தது பாண்டியனின் பாவைக்கு!

அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றதும், “வந்து பேசிக்கலாம் பாவை! கிளம்பு. லேட்டாகுது” என்று எழுந்து விட்டான்.

“இப்பவேவா?” என்றாள், எழுந்தவனை நிமிர்ந்து பார்த்து!

“ஆமா!” எனச் சொன்னதும்… வேறுவழியில்லாமல் ‘சரி’ என்பது போல் தலையசைத்து, பாவையும் எழுந்து கொண்டாள்.

“நீ கிளம்பு! ஒரு கால் பண்ணிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு, கதவைத் திறந்து முற்றத்திற்குச் சென்றான்.

அந்திமாலை வெயிலில் நின்றுகொண்டு… அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பவனை, சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன்பிறகு,

ஓர் ஐந்து நிமிடத்திற்கு…  ஆடை தேர்வு! முகம் கழுவுதல்! அலங்காரம் செய்தல்! இவை மட்டுமே, பாவைக்கு!!

அதன்பின்… அறையிலிருந்து வெளியே வரும் போது… பாண்டியன் அலைபேசி பேச்சை முடித்துவிட்டு, உள்ளே வந்திருந்தான்.

அவனைப் பார்த்துக் கொண்டே… புடவையை சரி செய்தபடியே… மீண்டும் ‘எப்படிப் பேச்சைத் தொடரலாம்?’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை கிடைத்தது.

உடனே, ‘எப்படி இருக்கிறேன்? என்று சொல்’ என்பது போல் அவன் முன்னே சென்று நின்றாள்.

ஒரு நொடி, ‘என்ன?’ என்பது போல் அவளைப் பார்த்தான். பின், “ஓ! கிளம்பியாச்சா? குட்” என்று பாராட்டிச் சொல்லி, தன்னுடைய உடையை எடுக்கச் சென்றான்.

‘கிளம்பியாச்சா-வா?’ என அலுத்துக் கொண்டவள்… மீண்டும் கணவன் முன்னால் சென்று நின்று கொண்டு, “நான் எப்படி இருக்கேன்-ன்னு சொல்லுங்க?” என்றாள் ஆர்வமாக!

“ம்ம்ம்! லுக்கிங் ஹாட்” என்றான் ஆர்வக் கோளாறாய்!

‘ஆங்’ என்று லேசாக வாய் திறந்து நின்றவளிடம், “ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு, நகர்ந்து சென்றான்.

‘இவனுக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் பேசுகிறான்?’ என நினைத்தாலும், மீண்டும் அவன் எதிரே சென்று நின்றாள்.

‘இப்போ என்ன?’ என்பது போல் தாடையெலும்பைத் தேய்த்துக் கொண்டு நின்றான்.

“நல்லா இருக்கேனா? இல்லையா-ன்னு கேட்டேன்!” என்று கேட்டாள், ‘உன் ஆர்வத்தில் கோளாறு உள்ளது’ என்பது போல!

“ஓ!” என்று ஓகார ஒலியசைவில் ஆரம்பித்து, “அப்படி சாய்ஸ் கொடுத்திடு. இல்லைன்னா நான் சான்ஸ் எடுக்கிறேன் பார்த்தியா?” என்று, விவகார விழியசைவில் முடித்தான்.  

‘இவன் இப்படியெல்லாம் பேசமாட்டனே? இன்று ஏன் இப்படி?’ என்று குனிந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, சிரிப்புதான் வந்தது. ஆனால்… கடினப்பட்டு, அதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

மேலும்… இவ்வளவு நேரம் அவளின் செயல்களைக் கவனித்தவனுக்கு, அவள் மனமாற்றத்தைக் கணிக்க முடிந்தது. மேலும், கணித்தவனின் காதல் மனம் எக்கச்சக்க இறக்கைகள் கட்டிப் பறக்கத் தொடங்கியிருந்தது.

இந்தக் கணத்தில்… பாவை நிமிர்ந்து பார்த்ததும், “என்ன விஷயம்?” என்றான் ஏற்ற-இறக்கம் இல்லாத குரலில்!

‘இரக்கமே இல்லையா?’ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இப்போ என்ன? நீ எப்படி இருக்கன்னு சொல்லணும்! அவ்வளவுதான?” என்று கேட்டான் ஆறுதலான குரலில்!

அவன் சொல்லும்போதே, தன் எண்ணத்தை சொல்லிவிட வாய்ப்பு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன், ‘ஆமா! ஆமா!’ என தலையாட்டினாள்.

“2952” என்று எண்ணத்தை எண்களால் சொல்லிவிட்டு… சிரித்தபடியே அவளைக் கடந்து சென்றான்!

‘ஐயோ திரும்பவும் நம்பரா?’ என்ற நொந்து போன தோற்றத்துடன், மீண்டும் அவன் முன்னே வந்து நின்றாள்.

“என்ன ஹனி?” என்று கேட்டான்.

‘சத்தியமா எனக்குப் புரியலை!’ என்பது போன்ற முக பாவனையுடன், “இந்த நம்பருக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் பாவமான குரலில்!

“ஹே ஹனி! உன்னை கியூட்-ன்னு சொன்னேன்” என்றான் குதூகலமாய்! [ 29-cu – copper 52-te-tellurium]

“இதுவும் அதே பீரியாடிக் டேபிள்?” என்றாள் குதறும் பார்வையுடன்!

‘ம்ம்’ என்று தலையாட்டினான் பதறாமல்!

“ஏன்? புரியிற மாதிரி பேசற ஐடியா-வே இல்லையா?” என்றாள், அவனைச் சாடும் குரலில்!

“முதல புரியிற மாதிரிதான சொன்னேன். நீதான்…” என்று… அவளைச் சீண்டும் குரலில், தன் ‘ஆர்வக் கோளாறு’ பற்றிச் சொல்லும் போதே, “அதை விடுங்க” என்று சீறினாள்.

“ஓகே ஓகே” என்று அவன் சம்மதித்ததும், “எப்பவும் மூளையால மட்டும்தான் யோசிப்பீங்களோ?” என்றாள், குற்றம் சாட்டும் குரலில்!

“உனக்கு மனசே கிடையாதான்னு இன்டேரெக்ட்டா கேட்கிற!?” என்று கேட்டு, அவள் கூற்றையே மாற்றினான்.

“ச்சே ச்சே அப்படியில்லை” என்று, அவசரமாக மறுப்பு தெரிவித்தாள்.

“அப்படித்தான்” என்றான் அடாவடியாக!

“சரி, அப்டித்தான்! பதில் சொல்லுங்க” என்றதும், “மூளை யோசிக்கிறதை மனசு ஒத்துக்கப் போய்தான், பேச்சு மாறாம இருக்க முடியாது!” என்றான்.

“இதுக்குப் பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம்” என்று உள்நாக்கிற்குள் பேசியவளிடம், “சத்தமா பேசு” என்றான் உரத்தக் குரலில்!

‘எனக்கென்ன பயமா?’ என்பது போல, “அப்போ மனசால யோசிக்கவே மாட்டிங்களா?” என்றாள் தெம்பாக!

“யோசிப்பேனே?”

“அப்படியா?” என்று வியப்படைந்தவள், “எங்கே இப்போ உங்க மனசு என்ன யோசிக்குது-ன்னு சொல்லுங்க? என்று கேட்டு, அவனை வம்பிற்கு இழுத்தாள்.

வம்பிழுத்தவளின் தோள்களை வாகாகப் பற்றி… வசமாகக் குனிந்து… அவள் கன்னத்தில்… ஒரு காதல் முத்தம் வைத்தான், பாவையின் பாண்டியன்!

முத்தத்தின் முடிவில், ’எதற்கிந்த முத்தம்?’ என்ற அர்த்தங்களுடன் அவனைப் பார்த்தாள்.

“நீதான கேட்ட?! மனசு இப்போ என்ன யோசிக்குதுன்னு”

‘அதற்கென்ன?’ என்பது போல் ஓர் பார்வை! ‘ஆமாம்’ என்பது போல் ஓர் தலையசைப்பு! மொத்தத்தில் முரண்பாடாய் பாண்டியனின் பாவை!!

“இதைத்தான் யோசிச்சது” என்றான், முத்தம் வைத்தக் கன்னத்தை மெத்தனமாகச் சுட்டிக்காட்டி!

கன்னத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே, “என்ன யோசிக்குதுன்னு சொல்லத்தான சொன்னேன். எதுக்கு செஞ்சி காட்டினீங்க?” என்றாள்.

‘ஓ! அவ்வளவு விவரமா நீ?’ என நினைத்தாலும், “சாரி கொஸ்டின சரியா கவனிக்கலை” என்று மன்னிப்புக் கேட்டான்.

‘பரவால்ல’ என்பது போன்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

“பட், மனசு இப்போ இன்னொன்னு யோசிக்குதே ஹனி” என்று தவிப்புடன் சொன்னான்.

‘இன்னொன்னா?’ என்பது போல் யோசித்தாள். பின்… மற்றொரு கன்னத்தைக் காட்டி, ‘இன்னொரு முத்தமா?’ என்பது போல் அசமந்தமாய் கேட்டாள்.

“உனக்கு வேணும்னா சொல்லு?” என்றான் தாறுமாறான தாராளத்துடன்!

‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்து, “நீங்க உங்க மனசு என்ன யோசிக்குதுன்னு சொல்லுங்க?!” என்று, அவன் தாராளத்திற்குத் தடை போட்டாள்.

“அது…” என்று ஆரம்பித்தவன், “ஹனி ஏன் கிஸ் பண்றதேயில்லை-ன்னு யோசிக்குது??” என்று கேட்டு, மீண்டும் அவளைத் தடுமாறி… தத்தளிக்க வைத்தான்.

“அதுக்கு” என்றாள் காற்றாகிப் போன குரலில், முத்தம் வாங்கித்தானே வரலாறு இருக்கிறது, கொடுத்து வழக்கமில்லை என்ற தயகத்தில்!

‘கன்னத்து முத்தமொன்று தா’ என்று காதலுடன் கேட்டுக் கொண்டு நின்றான், பாவையின் பாண்டியன்!

ஓரிரு நொடிகள் காக்க வைத்துவிட்டு, “இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு? பேசறதெல்லாம் இப்படியே பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் கறாராக!

“உனக்கு என்னாச்சுன்னு சொல்லு? சும்மா முன்னாடி வந்து நின்னுகிட்டு… ஒண்ணுமே சொல்லாம! கிளம்பவும் விடாம!” என்று சொல்லிவிட்டு, கிளம்பச் சென்றான்.

அவன் அப்படிச் சொன்னதும், ஒரு முடிவோடு… மீண்டும் அவன் முன்னே வந்து நின்றாள்.

பொறுமை போனவனாய், “பாவை” என்று சொல்லும் போதே, “எனக்கு என்னாச்சுன்னு கேட்டீங்கள? சொல்றேன்” என்றாள்.

‘சொல்லு’ என்பது போல் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான்.

“5 3 7 1 2 3 9 2” என்று எண்களுக்குள் இடைவெளி விட்டு… இதயத்தின் எண்ணத்தை வெளிப்படுத்தினாள். பின், “போங்க! போய் உங்க ஃபங்ஷனுக்கு கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு, நகர்ந்து சென்றாள்.

இப்பொழுது அவன் முறை! அதாவது குறுக்கே வந்து நிற்பது!!

தன் முன்னே வந்து நிற்பவனிடம், “அதான் சொல்லிட்டேன்-ல அப்புறம் என்ன?” என்றாள்.

“ஒரு கேள்வி கேட்கணும்” என்றதும், “கேட்டுக்கோங்க” என்றாள் அசட்டையான உடல்மொழியுடன்!

“இது என்ன நம்பர் ஹனி?” என்று ஒரு அட்டகாசமான கேள்வி கேட்டான்.

‘ஆங்! என்ன நம்பரா?’ என்பது போல் ஓர் அதிர்ச்சி! பின், “லவ் சொல்றதுக்கு நீங்க சொல்லுவீங்களே? அதான்” என்றாள், அந்த அதிர்ச்சி மாறாத குரலில்!

“ஓ!” என்று அவன் சொன்னதும், “உங்களுக்கே மறந்துடுச்சா?” என்று கேட்டுச் சிரித்தாள்.

“சே ச்சே! அதெப்படி மறக்கும்!?” என்றவன், “நீ சொன்னது, அந்த நம்பர் இல்லை. அதான் கேட்டேன்” என்றான் சாவகாசமானக் குரலில்!

சட்டென சிரிப்பை நிறுத்தி, “ஐயோ தப்பா?” என்று கேட்டாள், சிறப்பாய் சொல்ல நினைத்து… தவறாய் முடிந்த செயலை நினைத்து!

“ம்ம்ம் தப்புதான்” என்றான் பொறுமையாக!

“என்ன சொல்றீங்க பாண்டியன்? நான் நல்லா மனப்பாடம் பண்ணி வச்சிருந்தேனே??! அதெப்படித் தப்பா போகும்??”

“நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எனக்குத் தெரியாதா? நீ சொன்னது தப்பு ஹனி”

‘தப்பா?’ என்று தனக்குள் கேட்டவள், உடனே அலைபேசியை எடுத்துப் பார்க்கப் போனாள்.

ஆனால், பாண்டியன் அதற்கு விடவில்லை. அவள் கைப்பிடித்து தடுத்து நிறுத்தி, “ஹலோ! என்ன பண்ணப் போற?” என்று கேட்டான்.

“ஃபோன்-ல பார்த்து… சரியா…” என்று, அவள் சொல்லும் போதே, “சொல்லப் போறது ஐ லவ் யூ! இதைப் பார்த்து வேற சொல்லுவியா?” என்றான் நக்கலாக!

‘நீயென் ஜீவஸ்வரம் என்று சொல்வதற்குள் என் ஜீவனுக்கே ஜுரம் வந்துவிடும்’ என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு இதெல்லாம்? நீ எப்படிச் சொல்லணும்னு நினைச்சியோ அப்படியே சொல்லு” என்று நம்பிக்கையூட்டினான்.

“இல்லை! கொஞ்ச ஸ்பெஷலா சொல்லலாமேன்னு?” என்று இழுத்தவளிடம், “தேவையில்லாத வேலை” என்று, அவள் பேச்சை இடைமறித்தான்.

இருவரும் அமைதியாக இருந்தனர்.

பின், “பாண்டியன்” என்று ஆசையாக அழைத்து… ஆதரவாக அவன் புஜத்தைப் பிடித்து… அவளுக்குத் தோதாக அவனைக் குனியச் செய்து… அழுத்தமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள், பாண்டியனின் பாவை!

மேலும்… அதே நிலையில் அசையாமல் நின்று, “ஐ லவ் யூ! ஐ லவ் யூ!  ஐ லவ் யூ!” என்று ஆற-அமர, தன் மனமாற்றத்தைச் சொல்லிமுடித்தாள்.

பின்னர்… கொஞ்சமும் அவன் பேச இடம் கொடுக்காமல், “நீங்க கேட்ட மாதிரி கிஸ் பண்ணிட்டேன்! மூணு தடவை ஐ லவ் யூ சொல்லிட்டேன்! போதுமா?” என்று கேட்டாள்.

‘போதும்’ என்பது போல் ஓர் சிரிப்பு! பின், “பட், கௌன்ட் தப்பே ஹனி” என்று ஒரு சீண்டல்!

“தப்பா” என யோசித்தவள், “மூணு தானே” என்று தனக்குள் சொல்லிப் பார்த்தவள்… கண்களை சுருக்கி அவனைப் பார்த்துக் கொண்டே, “நாலு தடவையா?” என்று கேட்டாள்.

‘ஆமா’ என்பது போல் தலையாட்டினான். பின்… ” தேன்பாவை” என்று தீஞ்சுவையாக அழைத்து, தீராத காதலுடன் அணைத்துக் கொண்டான்.

“அப்போ, அந்த நம்பர் சரிதான்?” என்று கேட்டாள், அணைப்பிலிருந்து அகல முயற்சித்துக் கொண்டே!

‘ஆமாம்’ என்ற அர்த்தங்களோடு அவன் சிரிக்கத் தொடங்கினான். மேலும், அகலாதே என்ற அர்த்தங்களுடன் அணைத்துக் கொண்டான்.

“உங்களை….” என்று கோபத்துடன் சொல்லி… “பொய்… பொய்” என்று அணைத்திருந்தவனை அடிக்கத் தொடங்கினாள்.

கொஞ்ச நேரமாகவே அவளின் செயல்கள் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவன், இதையும் ரசித்தான்.

பின், “ஹனி! இப்படி உன்கூட பேசிக்கிட்டு இருக்கிறது நல்லாத்தான் இருக்கு! பட், நிஜமா லேட்டாகுது” என்று சொன்னதும், விலகி நின்று கொண்டாள்.

“வந்து பேசலாம்” என்று சொல்லிவிட்டு… உடை மாற்றச் சென்றதும், அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள்.

‘இத்தனை நாட்கள் எப்படி இங்கே இருந்தோம்?’ என்று தோன்றியது. ‘இனிமேல் ஒரு நொடி கூட தனியாக இங்கே இருக்க முடியாது’ என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது.

சற்று நேரம் அப்படியே நின்றவள், உடை மாற்றிக் கொண்டு வந்தவன் முன்பு சென்று நின்றாள்.

சட்டைப் பொத்தான்களைச் சரியாகப் போட்டுக் கொண்டிருந்தவன் கரங்களை விலக்கி, “பாண்டியன்” என்று சொல்லி கட்டிப்பிடுத்துக் கொண்டாள்.

“என்னாச்சு ஹனி?” என்றான் கனிவோடு!

“என்னை இன்னைக்கே உங்ககூட கூட்டிட்டுப் போங்க. எனக்கு இங்க தனியா இருக்க பிடிக்கலை” என்றாள், கவலையிலும் காதலிலும் தோய்ந்தெடுத்தக் குரலில்!

கன்னத்து முத்தமும்… களிப்புடன் சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’-களும் வெளிப்படுத்திய காதலை விட, இப்படிக் கட்டிக் கொண்டு கவலையுடன் கேட்கையில் வெளிப்பட்ட காதல் ஆதீதம் என்று தோன்றியது, பாண்டியனுக்கு!

உணர்ச்சிவசப்பட்டு அமைதியாக இருந்தான்.

“என்ன யோசிக்கிறீங்க? கூட்டிட்டுப் போக மாட்டிங்களா?” என்று கேட்டாள், அவன் அமைதியைப் பார்த்து!

“என்ன பேசற நீ?” என்று கண்டித்தவன், “அம்மா-க்கு மட்டும்தான் தெரியும்! அப்பா-பிரவீன்-நளினிகிட்ட சொல்லணும். பங்க்ஷன் முடிஞ்சி வீட்டுக்குப் போனதும்… எல்லார்கிட்டையும் பேசிட்டு, உன்னை கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

“அவங்க என்ன சொல்லுவாங்க??” என்றாள் ஓர் பரிதவிப்புடன்!

“ஸீ! அவங்ககிட்ட சொல்லணும்னுதான் சொன்னேன். பெர்மிசன் கேட்கணும்னு சொல்லலை” என்றான்.

“அப்போ நான் போய் ‘வீடு காலி பண்றேன்னு’ ஓனர்-கிட்ட சொல்லிட்டு வரவா?” என்று கேட்டாள், அடுத்த நொடியே அவனுடன் சென்று விடவேண்டும் என்பதுபோல்!

அவன் யோசித்தான்.

“என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்டதும், “சரி! போய் சொல்லிட்டு வா” என்று சம்மதம் சொன்னான்.

கடகடவென ஓடிவிட்டாள்.

அவள் சென்ற உடனே, தன் அம்மாவை அலைபேசியில் அழைத்தான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!