ISSAI,IYARKAI & IRUVAR 18.1

ISSAI,IYARKAI & IRUVAR 18.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 18


வெகு நாட்கள் கழித்து இருவரையும் சேர்ந்து பார்த்ததில், செண்பகத்தின் முகத்தில் சந்தோஷம் வந்திருந்தது.

உள்ளே நுழைந்த பின்னும்… தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த மருமகளை, “வா பாவை” என்று, எந்த நெருடலும் இல்லாமல் அழைத்தார்.

“ம்மா” என்று சிவா ஆரம்பிக்கும் போதே, “முதல ரெண்டு பேரும் உட்காருங்க” என்று சோஃபாவைக் காட்டினார்.

‘என்னுடன் வா’ என்பது போல் சிவா தலையசைத்ததும், அவன் கூடவே சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள், பாவை.

அமர்ந்தபின்னும், நிரம்ப உணர்வுகள் கலந்த உடல்மொழியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அன்றைய தினத்தில் நடந்த நிகழ்வுகளின் நினைவுகளின் தாக்கம் வெளிப்பட்டது.

‘எல்லோர் முன்பும் எல்லாவற்றையும் எப்படிச் சொல்ல?’ என்ற தயக்கம் வந்திருந்தது. சொல்லிய பிறகு எப்படி எடுத்துக் கொள்வார்களோ?’ என்ற தவிப்பும் கூடச் சேர்ந்து கொண்டது.

இப்படி நிறைய!

அம்மாவும், மகனும்?

ஓரளவு எதிர்பார்த்திருப்பார்கள் போல. ஆதலால்… யாரையும் காயப்படுத்தாமல், இந்தத் தருணத்தைத் தாண்டி விடவேண்டும் என்ற முடிவில் இருந்தது போல் தெரிந்தார்கள்.

மதி மற்றும் நளினி… இருவரின் முகமும் ஒருவித உடன்பாடின்மையைக் காட்டிக் கொண்டிருந்தன.

பிரவீன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, “ஹாய் பாவை” என்று சிரித்தான்.

சிரிக்க வேண்டுமே என மெல்லச் சிரித்து வைத்தாள்.

“ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்று செண்பகம் கேட்டதும், “இல்லை-ம்மா. அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவன், “நீங்க உட்காருங்களேன்” என்றான்.

“ஏன் சிவா?” என்று கேட்டுக் கொண்டே உட்கார்ந்தார்.

“அவ ஏதோ பேசணும்னு சொல்றா!” என்றதும், “என்ன பேசணும்?” என்று கேள்வியாகக் கேட்டவர், “அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டேன் சிவா” என்றார்.

“இருங்க-ம்மா” என்றவன்… பாவையைப் பார்த்து, “ஏதோ சொல்லணும்னு சொன்னீயே, சொல்றியா?” என்று கேட்டதும், ‘சொல்கிறேன்’ என்பது போல் தலையாட்டினாள்.

இப்பொழுது அனைவரின் பார்வையும் பாவை மீது இருந்தது. மேலும், ‘என்ன பேசப் போகிறாள்?’ என்ற பொருளில் இருந்தது.

பாண்டியனைப் பார்த்தவாறே சொல்ல ஆரம்பித்தாள்.

“எப்பவும் எனக்கு கௌசி மேல ஒரு ஈர்ப்பு உண்டு. அது என்ன மாதிரி சொல்ல??” என்று யோசித்தவள், “எனக்கு கௌசி வாழ்க்கை ஒரு முழுமையான வாழ்க்கையா தோணும்” என்றாள்.

எல்லோரும் அமைதியாகக் கேட்டனர்.

பாண்டியன் மட்டும், “அவங்களைப் பத்தி இப்போ எதுக்கு பாவை?” என்று கேட்டான்.

“காரணம் இருக்கு. உங்களைப் புரிஞ்சிக்காம நடந்துகிட்டதுக்கு காரணம், கௌசி-க்கு கிடைக்கிற மாதிரி அன்பு, அக்கறை எனக்கும் கிடைக்கணும்னு நினைச்சது” என்றாள்.

காரில் வரும் பொழுது பேசியதையும், இதையும் இணைத்துப் பார்த்தான்.

தன்னைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்ட நிகழ்வுகளையெல்லாம், ஏதோ ஒருவிதத்தில் கௌசியுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாள் என்று புரிந்தது.

மீண்டும் அவளைப் பார்த்தான்.

“பர்ஸ்ட் நீங்க ஒரு ட்ரிப் போனீங்கள, அப்போ டிரைவர்…” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “பாவை” என்று அழைத்து, ‘போதும்’ என்பது போல், அவளது மணிக்கட்டில் தட்டினான்.

‘ஏன்?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவங்களோட கம்பேர் பண்ணிப் பார்த்திருக்க. அவ்வளவுதான?” என்று கேட்டான்.

“ஆமா” என்றவள், “அந்த ட்ரிப்…” என்று மீண்டும் சொல்ல வருகின்ற பொழுதே, “டீடெய்லா நாம பேசிக்கலாம். இப்போ இது போதும்” என்று உமியொத்த குரலில் உரியவளிடம் சொல்லிவிட்டு, உறவுகளைப் பார்த்தான்.

கணவனின் பேச்சில், அவள் உடல்மொழியில் இருந்த தயக்கம்-தவிப்பு இரண்டும் சற்று அடங்கியது.

“அவங்க மாமா பேமிலி பத்தி அம்மா சொல்யிருப்பாங்கள-ப்பா! அதனாலதான், அவளால முதல எதுவும் சரியா புரிஞ்சிக்க முடியலை.  வேற ஒண்ணுமில்லை” என்று நளினி-மதி இருவரையும் பார்த்துச் சொன்னான்.

உறவுகளுக்கிடையே உரையாடல் இல்லாததால், ஊசி விழும் ஓசை கேட்கும்படியான ஓர் அமைதி நிலவியது!

“ஸோ” என்று சொல்லி, நளினிதான் அமைதியைக் கலைத்தாள்.

அனைவரும் அவளைப் பார்த்தனர். பாவையும் பார்த்தாள்.

“ஸோ, நீதான் புரிஞ்சிக்காம நடந்திருக்க. கரெக்ட்டா?” என்று பாவையின் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆமா நளினி” என்றாள் கடுகளவும் யோசிக்காமல்.

“நீ புரிஞ்சிக்காம இருந்ததுக்கு, உன் பாட்டி வந்து என் அண்ணன் சட்டையைப் பிடிச்சி கேள்வி கேட்பாங்களா?” என்று கேட்டதும், ‘நடந்ததையே பேச வேண்டாம்’ என்று சிவா சொல்ல முற்படுகையில்,

“நளினி! புரிஞ்சிக்காம இருந்தது நான்! என்னைப் பத்தி பேசுங்க. வேணிம்மா பத்தி எதுவும் சொல்லாதீங்க” என்றாள் பாவை கொஞ்சம் கடுமையானக் குரலில்!

அந்தக் கடுமைக்குப் பதில் கொடுக்க நளினி எத்தனிக்கும் போதே, “இல்லாதவங்களைப் பத்தி பேச வேண்டாம் நளினி!” என்று சொல்லி, மதி மகளை நிதானப்படுத்தினார்.

“சரிப்பா” என்று நளினி மட்டுப்பட்டாள்.

“இப்படித் தனியா இருக்கிறது என்ன பழக்கம்?” என்று மதி பாவையைப் பார்த்துக் கேட்டார்.

“நல்லா கேளுங்க-ப்பா” என்று நளினி சொன்னதும், ‘ஏன் இப்படி?’ என்பது போல் சிவாவும் செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அப்போ அதுதான் சரின்னு தோணிச்சி. இப்போ அவங்க மேல…” என்று பாவை சொல்லும் போதே, “என்கிட்ட சொல்லிட்டுத்தான் இருந்தா-ப்பா” என்று சிவா முடித்துவிட்டான்.

மகனின் பேச்சை ஒத்துக் கொள்வது போல் தலையசைத்தாலும், “உங்க மாமா-க்கு தெரிஞ்சி, ஏதாவது கேட்டா?” என்று மீண்டும் பாவையைப் பார்த்துக் கேட்டார்.

“அவங்க யாரும் கேட்க மாட்டாங்க” என்று பாவை பதில் சொல்லி முடிக்கும் முன்னே, “நான்தான் சொன்னேன்-ல அவங்க பாட்டி குடும்பத்தைப் பத்தி” என்றார் செண்பகம்.

“அப்புறம் ஏன் சிவாகிட்ட கோபமா பேசினாரு?” என்று கேட்டதும், “அது அவரோட அம்மாகிட்ட கோபமா நடந்துக்கிட்டதுனால, சிவாகிட்ட அப்படிப் பேசினாரு” என்று செண்பகம் சமாளித்தார்.

இதற்கிடையே, ‘இதைத் தன்னிடம் சொல்லவேயில்லேயே?’ என்பது போல் பாவை, சிவாவைப் பார்த்தாள். ‘இதைப் பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று பார்வையாலே பதில் சொல்லி முடித்தான்.

“சரி! உனக்கு யாரும் கேட்க இல்லை. கேட்கமாட்டாங்க” என்று பாவையின் குறையைச் சொன்னவள், “ஆனா எங்க ரிலேட்டிவ்ஸ் யாருக்காவது தெரிஞ்சி, அண்ணா-கிட்ட கேட்டா? அவனுக்கு எப்படி இருக்கும்? அவனைத் பத்தி நீ யோசிக்கவே இல்லை-ல?” என்று பாவையின் முடிவைக் குற்றம் சொன்னாள்.

கணவர் கேட்பதே தேவையில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் செண்பகத்திற்கு, நளினி கேட்பத்தைப் பொறுக்க முடியவில்லை.

“அப்படிச் சொல்லாதீங்க நளினி. அவங்க மேல எனக்கு…” என்று பாவை ஆரம்பிக்கும் போதே, அவள் கைப் பிடித்துத் தடுத்தான் பாண்டியன்.

மெதுவாகத் திரும்பிக் கணவனைப் பார்த்ததும், “சொல்லணும்னு நினைச்சதை சொல்லியாச்சுல?” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்றதும், “அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு! ஏதாவது கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்” என்று முடித்துவிட்டான்.

“அண்ணா” என்று சலுகையுடன் அழைத்துக் கொண்டு… எழுந்து வரும்பொழுது, “என்ன வேணும் நளினி?” என்று கேட்டுக் கொண்டு, செண்பகம் மகளின் முன்னே வந்தார்.

அம்மாவின் கேள்வியில் கொஞ்சம் அதிர்ந்தாலும், “ம்மா! அவகிட்ட கேள்வி கேட்காம என்கிட்ட வந்து கேட்கிறீங்க?” என்று கேட்டு நின்றாள்.

“அவகிட்ட என்ன கேட்கணும்?” என்று கேட்டார் அசராமல்!

“இப்படித் தனியா இருந்தது தப்பில்லையான்னு கேட்க வேண்டாமா?” என்றாள் சிடுசிடுவென!

“உன் அண்ணங்கிட்ட சொல்லிட்டுத்தான இருந்திருக்கா! அப்புறமென்ன? உனக்கு எதுவும் கேட்கணும்னா உன் அண்ணனைக் கேளு!” என்று சிவாவைக் கை காண்பித்தார்.

“உனக்கெதும் கேட்கணும்னா என்கிட்ட கேளு” என்றான் சிவா, தங்கையைப் பார்த்து!

கேட்கமாட்டாள். அண்ணனை எதுவும் கேட்கமாட்டாள். ஆதலால், நளினி அமைதியாக இருந்தாள்.

“அவன்கிட்ட சொல்லாம ஏதும் செஞ்சிருந்தா, நானே கேட்டிருப்பேன். ஆனா, இப்போ அப்படி இல்லை. அதனால அவளைக் கேள்வி கேட்காத!” என்றார் செண்பகம் விடாமல்!

அந்த அறையில், மீண்டும் ஓர் அசப்தம் நிலவியது.

‘ஏன் அம்மா இப்படி?’ என்ற கேள்வியுடன் நளினி நின்றாள்.

மனைவி… தன் மகளைக் கேள்வி கேட்டுக் கொண்டு நிற்பதில் துளியும் உடன்பாடில்லாமல் இருந்தார், மதி.

இன்னும், ‘யாரையும் காயப்படுத்தாமல், இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும்’ என சிவா நினைத்துக் கொண்டிருந்தான்.

தன் முடிவால்தான் ‘இத்தனை களேபரமோ?’ என்று மனதிற்குள் கலவரப்பட்டுக் கொண்டிருந்தாள், பாவை.

‘அண்ணனின் வாழ்க்கையில், நளினியின் தலையீட்டிற்கு முடிவு கட்டிவிட வேண்டும்’ என்ற முடிவெடுத்திருந்தார், செண்பகம்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருப்பதே, அறை சத்தமில்லாமல் இருப்பதற்குக் காரணம்!

அசப்தத்தை அகற்றும் எண்ணத்துடன், “ஆரம்பத்திலேயிருந்தே உனக்கு அவளோட ஒத்துப் போகலை நளினி. அதான் உண்மை!” என்றார் செண்பகம்.

“எதை வச்சி சொல்றீங்க?”

“மேரேஜ் சாரீ எடுக்கிறப்போ நீ சொன்ன மாதிரி எடுக்கலைன்னு உனக்கு கோபம்?”

“ஸ்டேஜ்-ல நிக்கிறப்போ பெர்பெக்ட் பேரா(pair) தெரியணும்னு சொன்னேன்” என்றவள், “இதோ இப்பக்கூட பாருங்க. அவ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்குன்னு?” என்று பாவையைச் சுட்டிக் காட்டினாள்.

“அதுல உனக்கென்ன பிரச்சனை?” என்று சுள்ளென்று கேட்டவர், “அன்னைக்கு ‘ரெண்டு பேரும் ஒரே மாதிரி சாரீ எடுக்கலாம்ன்னு’ அவ கேட்டப்போ நீ ஒத்துக்கிட்டியா?” என்று கேட்டார்.

“ம்மா! நான் பார்க்கிற வேலைக்கு ஏத்த மாதிரிதான் ட்ரேஸ் போட முடியும்” என்று சொல்லும் போதே, “அதேதான் அவளுக்கும்” என்றார்.

நளினி புரியாமல் பார்த்தாள்.

“கோயிலுக்குப் போறா! கச்சேரி விஷயமா ஆளுங்க பார்க்கப் போவா… இல்லை, அவங்க பார்க்க வருவாங்க. இப்படி இருந்தாதான் சரியா இருக்கும்-ன்னு நினைக்கிறா” என்று விளக்கினார்.

“சரி! அண்ணன் கூட வெளியே போகிறப்பவாது, அவனுக்கு மேச்சா டிரஸ் பண்ணலாமே?”

“சிவா” என்று மகனை அழைத்து, “அவளோட ட்ரெஸ்ஸிங்-ல உனக்கு ஏதும் ப்ராபளம் இருக்கா?” என்று கேட்டார்.

‘இல்லை’ என்பது போல தலையசைத்ததும், “போதும்மா! கூடப் போறவனுக்கே பிரச்சனை இல்லை. நீ ஏன்-ம்மா பிரச்சனை பண்ணற?” என்றார் கடுமையாக!

செண்பகத்தின் பேச்சில் இருந்த கடுமையை அனைவரும் உணர்ந்தனர். அதில் சிவா மட்டும், “ம்மா போதும் விடுங்க” என்று சொல்லிப் பார்த்தான்.

“உனக்கு சில விஷயம் தெரியாது சிவா. அதுனால நீ பேசாம இரு” என்று சொல்லி, அவனைப் பேசவிடாமல் செய்தார்.

மேலும், “பாவை உன்னை எப்படிக் கூப்பிட்டா இவளுக்கென்ன? அதையும் பெரிய கம்பளைண்ட் மாதிரி வந்து சொன்னாள?” என்று மகனிடம் கேட்டார்.

“அப்படிக் கூப்பிடறது என் அண்ணனுக்குப் பிடிக்காது. அதான் சொன்னேன்!?” என்று நளினி பதில் சொன்னாள்.

“நீ கூடத்தான் மாப்பிளையை ‘நீ, வா, போ -ன்னு’ சொல்றது எனக்குப் பிடிக்காது. சொல்லிப் பார்த்தேன்?!! நீ கேட்டியா?”

“ம்மா! அது அன்புல… ஒரு உரிமையா கூப்பிடறது” என்றாள்.

“அதே உரிமை, அதே அன்பு… அவளுக்கு சிவா மேல இருக்காதா?” என்று ஒரு கேள்வி கேட்டதற்கு, நளினியிடம் பதிலேதும் இல்லை.

அமைதியாக நிற்கும் மகளைப் பார்த்து, “நான் உன்கிட்ட ஒண்ணே ஒன்னு சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“அன்னைக்கே மாப்பிள்ளை கூட சண்டை போட்டு, இங்கே வந்து உட்கார்ந்திருந்தியே நியாபகம் இருக்கா?”

நளினி யோசிக்க ஆரம்பித்தாள்.

“சிவா கூட… வெளியிலருந்து வந்து, ‘இவ ஏன் இங்கே இருக்கான்னு?’ கேட்டதுக்கு, ‘மாப்பிள்ளை கூட சண்டை’-ன்னு நான் சொன்னேனே?” என்று, அவள் யோசிக்க வசதியாகக் குறிப்புக் கொடுத்தார்.

நியாபகம் வந்திருந்தது, நளினிக்கு! ஆனால், ‘இது எதற்கு இப்போ?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ சிவா உன்கிட்ட அதைப் பத்தி ஏதாவது கேட்டானா?”

‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“மாப்பிள்ளை உங்ககிட்ட வந்து எதாவது கேட்டானா?” என்று பிரவீனைப் பார்த்துக் கேட்டார்.

“இல்லை அத்தை” என்ற பிரவீன், எழுந்து நளினி அருகில் வந்து நின்றான்.

“இப்போ ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க?” என்றாள் நளினி, இன்னும் புரியாமல்.

“அவன் எப்படி நம்ம பெர்சனல் விஷயத்தில தலையிடமா இருக்கானோ, அதேமாதிரி நீயும் இரு-ன்னு சொல்றாங்க” என்று மனைவிக்குப் புரிய வைத்தான்.

நளினியின் முகம் ஒருமாதிரி ஆனதும், மதியும் எழுந்து வந்து நளினி அருகில் நின்றுகொண்டார்.

மேலும், “ஏன் செண்பா…” என்று ஆரம்பிக்கும் பொழுதே, “புரிஞ்சிக்காம இருந்தாங்க. இப்போ புரிஞ்சிக்கிட்டாங்க. அவ்வளவுதான்” என்று தணிந்த குரலில் சொன்னார்.

“இல்லை செண்பா… ரெண்டு பேரும் சந்தோஷமா?” என்று தயக்கத்தோடு கேட்கையில், “இருக்கிறாங்க. நான் பார்த்திட்டேன். நீங்களும் பார்ப்பீங்க” என்றார் தடுமாற்றமே இல்லாத குரலில்!

எல்லா கேள்விகளுக்கும் செண்பகத்திடம் பதில் இருந்தது! ஆனால், கேட்பதற்குத்தான் கேள்விகள் இல்லை!!

அதனால்தான் என்னவோ, “நீங்க எப்பவும் அவளுக்குத்தான சப்போர்ட் பண்ணுவீங்க??” என்றாள் நளினி கரகரத்த குரலில்!

“இவ்வளவு பேசினதுக்கப்புறமும் இதை நீ சொல்லாம இருந்தாதான் ஆச்சரியம்” என்றவர், “அவங்க ரெண்டு பெருகும் டின்னர் ரெடி பண்ணனும்” என்று சொல்லி, சமயலறைச் சென்றார்.

“பிரவீன் நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று கண்கள் கலங்க சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது… சிவா, “ஒரு நிமிஷம்” என்று பாவையிடம் சொல்லிவிட்டு, நளினி முன்னே சென்று நின்றான்!

அண்ணனைப் பார்த்தும், “நான் பேசினதில ஏதாவது தப்பு இருக்கா-ண்ணா?” என்று கேட்கும் போதே, கண்ணீர் வழிந்துவிட்டது.

“நான் ஒண்ணே ஒன்னு கேட்கிறேன். நீயே முடிவு பண்ணிக்கோ” என்றான் கண்ணீரைத் துடைத்து விட்டபடியே!

‘என்ன?’ என்பது போல் அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ… அவ வளர்ந்த சூழ்நிலையால, புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டதை மட்டுமே பேசற! ஏன் நான் பண்ண தப்ப பத்தி எதுவும் சொல்ல மாட்டிக்க?”

“நீ என்ன-ண்ணா தப்பு பண்ண?”

“அன்னைக்கு அவளை வெளியே போ-ன்னு சொன்னது. அது எவ்வளவு பெரிய தப்பு??  நீ ஏன் அதைப் பத்தி எதுவுமே பேசலை?”

“ஆனா அவளும்…” என்று சொல்லும் போதே, “அதேதான்! ரெண்டு பேரும் புரிஞ்சிக்காம நிறைய பேசிருக்கோம். அதுனால ஒருத்தரை மட்டும் சொல்லக் கூடாது” என்றான்.

“சரி-ண்ணா சொல்லலை” என்றவள், “ஆனா, அவகூட ஃபிரீயா மூவ் பண்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றும் கேட்டுக் கொண்டாள்.

சிவா எதுவும் சொல்லவில்லை.

புரிந்து கொள்வதற்கு, பாவைக்கு ஒரு கால அவகாசம் தேவை பட்டதுபோல்… நளினிக்கும் தேவைப்படும் என்று தோன்றியது.

மேலும், இதில் கொஞ்சம் உரிமைப் போராட்டம் இருப்பது போலவும் உணர்ந்தான். ஆதலால், எதுவும் பேசவில்லை.

“அப்புறம் இந்த அம்மா ரொம்பத் திட்றாங்க. இப்போ இல்லை. முதல இருந்தே! என்னென்னு கேளுண்ணா?” என்று அம்மாவைப் பற்றி அண்ணனிடம் முறையிட்டாள்.

சிரிக்க மட்டும் செய்தான்.

இதற்கிடையே பாவை தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த பிரவீன், “போதும், வா! நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லி நளினியை அழைத்துச் சென்றான்.

அவர்கள் சென்றதும்… “சாப்பிடுங்க” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, மதியும் அறைக்குச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு,

சற்று நேரத்திற்கு… செண்பகம் பரிமாறினார்! இருவரும் உண்டனர்! மூவரும் பேசிக் கொண்டனர்! இவை மட்டுமே, அந்த அறையில்!!

அதன் பின், இருவரும் அவர்களது அறைக்குள் வந்தனர்.

இனிமேல் தனித் தனியாக இருக்கப் போவதில்லை என்ற ஒன்றே இருவருக்கும் கனியாக இனிக்கச் செய்தது.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!