ISSAI,IYARKAI & IRUVAR 18.2

ISSAI,IYARKAI & IRUVAR 18.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 18


உள்ளே நுழைந்ததும், “கிரி மாமா உங்ககிட்ட எப்போ கோபப்பட்டாங்க?” என்று கேட்டு நின்றாள்.

எதிர்பார்த்ததுதான் என்பதால், ” நீ, உங்க பாட்டி ரெண்டு பேரும் ஃபோன் எடுக்கலைனதும், எனக்கு வேற வழி தெரியலை. அதான் அவருக்கு ஃபோன் பண்ணேன்!” என்றான், கதவைத் தாழிட்டுவிட்டுத் திரும்பியபடி!

“எனக்கு, உங்கமேல கோபம்! வேணிம்மா, வீட்டுக்கு வந்ததிலிருந்து படுத்தே இருந்தாங்க!” என்று, இருவரின் செயல்களுக்குக் காரணம் சொன்னாள்.

“ஓ!” என்றவன், “உங்க பாட்டி இறந்ததைக் கேட்க வந்தப்பவும் கோபப்பட்டாரு” என்றான் அறையின் விளக்குகளைப் போட்டுவிட்டபடி!

“அன்னைக்கு நீங்க வந்தீங்களா?” என்றாள் அதிர்ச்சியாக!

“ம்ம்ம்”

“நீங்க என்னை பார்த்திருக்கலாமே பாண்டியன்!??” என்றாள், அன்று ஆறுதல் கூற ஆருமில்லா தனிமையை அனுபவித்தவள்.

“பார்க்கணும்னு நினைச்சேன். பட், அவர் விடலை. அவரை மீறி ஏதும் பண்ணியிருந்தா, அது நல்லாயிருக்காது. அதான் அப்படியே திரும்பியாச்சு”

அவன் சொல்வது சரியென்று தோன்றியது. ஆதலால், அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

இக்கணம், விளக்கொளியின் வெளிச்சத்தில் அறையைச் சுற்றிப் பார்த்தாள்.

எதுவுமே தோன்றவில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர!

அது?!

அன்று… தனியாக நின்று கொண்டு, அவன் அலைபேசிக்கு அழைத்து அலைப்புற்றதுதான்! உடனே, அலைக்கழிந்தது போல் முகம் களைப்பாகத் தெரிந்தது!!

அவளது அகம்-முகம் இரண்டையும் வாசிக்கத் தெரிந்தவன், “பால்கனி போய் பேசலாமா?” என்று கேட்டான்.

‘சரி’ எனச் சம்மதித்ததும், கண்ணாடிக் கதவினைத் திறந்து வெளியே வந்தனர்.

பால்கனி வந்ததும், மனம் போன போக்கில் போன்சாய்களின் ஊடே நடக்க ஆரம்பித்தாள்.

அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமென நினைத்து, மேற்கூரை வேயப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டான்.

ஓர் ஐந்து நிமிடத்திற்குப் பின், அவனருகே வந்தாள். கொஞ்சம் ஆசுவாசமாகத் தெரிந்தாள்.

அங்கிருந்த ‘பீன் பேக்கில்’ வந்து அமர்ந்தாள். அவன் கீழே அமர்ந்திருந்தான்.

அவன் முன்னே… குட்டி குட்டித் தொட்டிகள், கொஞ்சமாகக் குமிக்கப்பட்டிருந்த கோ-கோ பிட், கூடை நிறைய பல நிறங்களில் பளிங்குக் கற்கள் இருந்தன.

சுற்றிலும் காரிருள்! கவிழ்ந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட தாங்கியில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கு மட்டுமே வெளிச்சத்திற்கு!!

தொட்டிகளில் கோ-கோ பிட்டைக் நிரப்பிக் கொண்டே, “ஒண்ணு கேட்கலாமா?” என்று பாண்டியன் கேட்டதும், “ம்ம்ம்” என்றாள், சிறு சிறு பளிங்குக் கற்களில் விளையாடிக் கொண்டே! 

“ஏதோ ட்ரிப்… டிரைவர்-ன்னு ஆரம்பிச்சியே… அது என்ன?” என்று கேட்டான்.

“அதுவா??” என்று, அவள் அகத்தில்… அவன் வாசிக்காதப் பக்கத்தைப் படித்துக் காண்பிக்க ஆரம்பித்தாள்.

அவனும் பார்க்கின்ற வேலையே விட்டுவிட்டு கேட்க ஆரம்பித்தான்.

“ஃபர்ஸ்ட் டைம் நீங்க ட்ரிப் போகிறப்போ, எனக்கு கச்சேரி ப்ராக்டிஸ் இருந்தது தெரியுமா?” என்று கேட்டாள்.

“ம்ம், நீ என்னை கூட்டிட்டுப் போக முடியுமான்னு கேட்ட! என்னால முடியாது. அதான் டிரைவர் அரேஞ் பண்ணறேன்னு சொன்னேன்”

“ஆங்” என்று ஆமோதித்தவள், “வேணிம்மா வீட்ல இருக்கிற வரைக்கும்… எங்கே போறதுக்குமே டிரைவர்தான் என்னைக் கூட்டிட்டுப் போவாங்க” என்று அன்றைய நிலையைச் சொன்னாள்.

‘இதிலென்ன இருக்கிறது?’ என்பது போல கைகளை விரித்தான்.

“ஆனா கௌசியை… கிரி மாமா, கலை அண்ணா, ரதி அப்பா, சங்கர்… இப்படி யாராவது ஒருத்தர் கூட்டிட்டுப் போவாங்க.

அதைப் பார்த்தே வளர்ந்ததால… என்னையும் எல்லா இடத்துக்கும், உரிமையா இருக்கிற ஒருத்தர் கூட்டிட்டுப் போகணும்னு ஒரு ஆசை உண்டு” என்று சொல்லி, ‘அது நீதான் என்பது போல’ அவனைப் பார்த்தாள்.

மேலும், “அதான்… நீங்க ட்ரிப் போகணும்னு சொன்னதுக்கப்புறமும் ‘கச்சேரி ப்ராக்டிஸ்-க்கு கூட்டிட்டுப் போக மாட்டிங்களா-ன்னு?’ கேட்டேன். உங்க சைடு-ல இருந்து யோசிக்க முடியலை” என்றாள் ஓர் மென்சிரிப்போடு

அந்த மென்சிரிப்பில் பங்கெடுத்துக் கொண்டே, “அதனாலத்தான்… நான் கூப்பிட வர லேட்டானதும், அக்கறை இல்லைன்னு சொன்னீயா?” என்று கேட்டான்!

“அது…” என யோசித்தவள், “யாருமே கௌசிய எதுக்குமே வெயிட் பண்ண விடமாட்டாங்க. அவமேல அவ்வளவு அக்கறை எடுத்துப்பாங்க. அதே மாதிரியே அக்கறை எடுத்துகிற ஒருத்தராவது எனக்கும் வேணும்னு நினைச்சேன்” என்றாள்.

“ஓ! அதான் நான் லேட்டா கூப்பிட வந்ததும் அக்கறை இல்லைன்னு சொன்னதா?” என்று, அவளைப் புரிந்து கொண்டு கேட்டான்.

“அப்போ புரிஞ்சிக்க முடியலை” என்றவள், “இப்போ செல்ஃப் கேர் பத்தி புரிஞ்சிடுச்சி. எனக்குத் தலைவலிக்கிறப்போ… நான் ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கிற மாதிரி, உங்களுக்கு டயர்டா இருந்தா நீங்க ரெஸ்ட் எடுக்கணும்னு நினைப்பீங்க?” என்று கேட்டாள்.

அவளை மெச்சுவது போல் புருவச் சிரிப்பு சிரித்தான்.

இருவருக்குமிடையே நிலவிய அமைதியில், ‘அடுத்த புரிதலின்மை எப்பொழுது வந்தது?’ என யோசித்தாள்.

“என்ன யோசிக்கிற?” என்று கேட்கும் போதே, “ஆங்! அடுத்து நான் உங்ககிட்ட பேச வந்தப்போ, ‘கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்து பேசறேன்-ன்னு’ நீங்க சொன்னது” என்றாள் நியாபகம் வந்தவளாய்.

‘ஓ! இன்னும் இருக்கா?!’ என்ற உடல்மொழியுடன் கேட்க ஆரம்பித்தான்.

“வேணிம்மா வீட்ல யாரும் என்கூட பேசமாட்டாங்க. நானா போய் பேசினாலும் பேசமாட்டாங்க. கச்சேரி சம்பந்தமான விஷயம்-னா மட்டும் கௌசி வந்து பேசுவா”

“ஓ! அவங்களை மாதிரியே நானும் அவாய்ட் பண்றேன்-னு நினைச்சியோ?” என்று கேட்டதும், அவன் கூற்றிற்கு உடன்படுவது போல் தலையை உருட்டினாள்.

பின், “இப்போ இல்லை பாண்டியன்! அப்போ” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவள், “மீ டைம் பத்தி இன்னைக்கு காலையிலதான புரிய வச்சீங்க” என்றாள்.

“ஓ! அது காலையிலதான் நடந்ததா?” என்றான் கண்களால் சிரித்து… கன்னத்தைத் தடவிக்கொண்டே!

சிரித்துக் கொண்டாள்… விளையாட்டாய் சிறு சிறு தொட்டிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தபடியே!

“அதேமாதிரிதான் நீங்க கோவிலுக்குள்ள வரலைன்னு சொன்னதும். கௌசி என்ன கேட்டாலும் முடியாதுன்னு சொல்ல மாட்டாங்க. நான் கேட்டு நீங்க முடியாதுன்னு சொன்னதும், என்மேல அன்பே இல்லையோன்னு நினைச்சேன்”

“அதெப்படி?” என்று கேட்கத் தொடங்கையில், “அன்னைக்கு என்னோட மனநிலையைச் சொன்னேன். இப்போ தெளிவாயிட்டேன். நானே எத்தனை தடவை முடியாதுன்னு சொல்லயிருக்கேன்?” என்றாள் கண்சிமிட்டலுடன்!

“புரிஞ்சா சரி!” என்றான் அவள் தலையில் லேசாகத் தட்டியபடி!!

மீண்டும் பளிங்குக் கற்களை உள்ளங்கையில் வைத்து விளையாண்டு கொண்டிருந்தவளிடம், “அன்னைக்கு என் மேல கோபம் இருக்குன்னு சொன்னீயே. அது போயிடுச்சா?” என்று கேட்டான்.

“என்ன கோபம்?” என்று புரியாமல் கேட்டதும், “நான் வெளியே போ-ன்னு சொன்னதுக்கு” என்று மட்டும் சொன்னான்.

“ஓ!” என்று இழுத்தவள், “வீட்டுக்குத் திருப்பிப் போனப்போ கிரி மாமா எப்படிப் பேசினாங்க தெரியுமா? வேணிம்மா-தான் யாரும் எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

அன்னைக்கு ராத்திரியெல்லாம் எப்படி அழுதேன் தெரியுமா?” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டாள்.

‘அழுதுவிடுவாளோ?’ என்ற பயம் அவன் விழிகளில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவன் பயத்தைப் படித்தவள், “இன்னைக்கு இல்லை பாண்டியன். அன்னைக்கு” என்று புன்சிரிப்புடன் சொன்னாள்.

மனம் நிரம்பிய நிம்மதியுடன், “அழுதா… துடைச்சு விடலாம்னு பார்த்தேன்” என்றான் வேடிக்கையாக!

” ‘என் மேல நம்பிக்கை இருந்தா அழமாட்ட-ன்னு’ நீங்கதான சொன்னீங்க?!” என்றாள் விளையாட்டாய்!

“அது சரி” என்று நகைத்துக் கொண்டான்.

சற்று நேரம், இருவரும் சேர்ந்து தொட்டிகளுக்குள் ‘கோ-கோ பிட்’ நிரப்பினார்கள்.

அந்த நொடிகளில், “உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” என்றதும், ‘சொல்’ என்பது போல் அவள் முகத்தைப் பார்த்தான்.

“அது… கிரி மாமாகிட்ட, தனியா பாடுறதைப் பத்திப் பேசறதுக்கு, சங்கர் ஹெல்ப் பண்ணாங்க!” என்று, சங்கர் பற்றிய விடயங்களைச் சொல்லிவிட வேண்டுமென நினைத்தாள்.

“ஓ!”

“சங்கருக்கு, என்னை ரொம்பப் பிடிக்கும். என்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சாங்க” என்று, சங்கரின் மனதைப் பற்றிச் சொன்னாள். 

“ஓ!”

“என்கிட்ட கேட்கவும் செஞ்சாங்க. எனக்குப் பிடிக்கலை. அதனால முடியாதுன்னு சொல்லிட்டேன்” என… தன் மனதைப் பற்றிச் சொன்னாள்.   

“ஓ!”

“அன்னைக்கே சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா, அன்னைக்கு இருந்த சூழ்நிலையில சொல்ல முடியலை” என்று சொல்லிவிட்டு, அவன் முகத்தைப் பார்த்தாள். 

“புரிஞ்சிக்க முடியுது பாவை” என்று மட்டும் சொன்னான், பாவையின் பாண்டியன்!

இதுதான் சிவபாண்டியன் என்று தெரியும் என்பதால், பாவைக்கு வியப்பொன்றும் இல்லை!

இருந்தும், மணந்து கொண்டவனிடம் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று உணரும் போது… கொஞ்சம் மமதை வந்தது, பாண்டியனின் பாவைக்கு!!

கையிலிருக்கும் கோ-கோ பிட்டை தட்டிவிட்டபடியே, “அப்புறம் கச்சேரி அன்னைக்கு நடந்தது பத்திச் சொல்லணும்” என்றாள்.

“ம்ம் சொல்லு” என்றான்.

“எப்பவுமே கௌசி பாடறப்போ… மீனாம்மா, சங்கர், கலை அண்ணா, கிரி மாமா… அத்தை இப்படி எல்லோரும் முத வரிசையிலே உட்கார்ந்திருப்பாங்க.

எனக்கு வேணிம்மா மட்டும்தான். வேணிம்மா பொறுத்தவரைக்கும் பாடறப்போ குருதான். பாட்டி கிடையாது.

அதான், எனக்காகவும் ஒருத்தர்… நான் பாடறப்போ முத வரிசைல உட்காரணும்னு ஆசைப்பட்டேன்.

அன்னைக்கு மேடை ஏறினதும், உங்களைத் தேடினேன். நீங்க இல்லைன்னு தெரிஞ்சதும், ரொம்பக் கஷ்டமா போயிடுச்சி” என்றாள் சாதாரணக் குரலில்.

“ம்ம்ம்” என்றான், கவனம் முழுவதும் செய்யும் வேலையில் இருந்தபடியே!

சட்டென… பீன் பேக்கிலிருந்து எழுந்து…  இருவருக்கும் இடையே இருந்த தொட்டிகளை நகர்த்திவிட்டு… அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, “பாண்டியன்கிட்ட எனக்கொரு ரெக்வஸ்ட்” என்றாள் கண்கள் கலங்க!

சற்றும் எதிர்பாராத அவளின் செயலால், “திடிர்னு என்னாச்சு ஹனி?” என்றான் கதிகலங்கிப் போய்!

“இப்போ வேணிம்மா இல்லை. இந்தக் கச்சேரிக்கு மட்டும்…” என்று விழி நீர் வடிய சொன்னதும், “நான் ஃபர்ஸ்ட் ரோ-ல இருப்பேன் பாவை” என்றான், விரல்களால் துடைத்துக் கொண்டே!

அவ்வளவுதான்!

தாக்குப் பிடிக்க முடியாமல்… கடந்து வந்த பாதையின் கனம் தாங்காமல்… தவிக்க ஆரம்பித்தாள். இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு, ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.

தாங்கிக் கொள்ள முடியாமல்… அவளின் கண்ணீர் துளிகளின் கனம் தாளாமல் தவிக்க ஆரம்பித்தான். மேலும்… வலுக்கட்டாயமாக அவள் கைகளைப் பிரித்து, நேராக அமரச் செய்தான்.

இருந்தும் அழுகை நின்றபாடில்லை.

“நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்த. அப்புறம் ஏன் இப்படி?” என்றான் கரகரத்த குரலில், அவளைத் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தபடியே.

“வேணிம்மா அம்மா-அப்பா யாராவது இருந்திருக்கலாம்-ன்னு தோணுது” என்றாள், கேவல்களுக்கு ஊடே!

“நான் இருக்கேன்-ல!” என்றான், அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி, லேசாகக் கண்ணீர் துளிர்த்தபடி!!

“நீங்க மட்டும்தான் இருக்கீங்க?” என… என்றோ சொல்ல நினைத்ததை, இன்று சொல்லி முடித்தாள்.

“அப்படிச் சொல்லக் கூடாது! உனக்காக அம்மா பார்த்துப் பார்த்து செய்றாங்கள? அதனால அப்படிச் சொல்லக்கூடாது” என்று சொல்லி, அவள் கன்னங்களின் வடியும் கண்ணீரைத் துடைத்தான்.

அழுது கொண்டே ஆமோதித்தபடி தலையாட்டினாள்.

அதன் பிறகு,

சற்று நேரத்திற்கு… கண்ணீர் வழியும் கண்கள்! கன்னம் துடைக்கும் விரல்கள்! கவலை மறக்கும் அணைப்புகள்! கனிவான தலைகோதல்கள்! கவனம் மாற்றும் பேச்சுக்கள்! இப்படி நிறைய, இருவரும் கண்ணயரும் வரை!!

அதன்பின் வந்த இரண்டு நாட்களும், ‘கண்ணின் பாவை, இந்தப் பாவை’ என்பது போலத்தான் அவளைப் பார்த்துக் கொண்டான்.

இரண்டு நாட்களுக்குப் பின் வந்த மாலை வேளையில்…

ஓர் அரங்கம்! இசைப் பிரியர்கள் நிரம்பி வழிந்த அரங்கம்!!

ஓர் மேடை! அரையடி அகலத்திற்கு கருஞ்சிவப்பு நிற கரை வைக்கப்பட்ட கத்தரிப்பூ நிறப் பட்டுப்புடவையில் மேடையின் நடுவே தேன்பாவை!!

முதல் வரிசையில் அமர்ந்திருந்த பாண்டியனும், செண்பகமும் ‘என்ன பாடல் பாடப் போகிறாள்?’ என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!