ISSAI,IYARKAI & IRUVAR 2.1

PhotoGrid_Plus_1603258679672-7796869d

ISSAI,IYARKAI & IRUVAR 2.1

நாகலாபுரம் அருவி

ஓய்வு முடிந்தவுடன், எழுந்தான்.  தன் பயணப் பையிலிருந்து புகைப்படக் கருவியை எடுத்துக் கொண்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

சூரியனின் கால்தடம் பதிக்காத இடங்களின் அழகை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.

அருவியின் அதிர்வு இல்லாத இடத்தில், தண்ணீருக்கு அடியில் கிடக்கும் பெரிய பெரிய கூழாங்கற்கள் மீது சூரியக் கதிர்கள் பட்டு, வெளியே திரும்பும் காட்சி!

பாறைகளுக்கு இடையே இருந்த பச்சை செடிகளின் மீது வெயில் பட்டு, தனித்தனியாக இலைகளின் நிழல் நீரின் மேல் விழும் காட்சி!

ஒரு பச்சைத் தாவரத்திற்கு இடையே கிடந்த காய்ந்த குச்சி ஒன்றில்… ஓணான் ஒன்று! குச்சியில் வாலைச் சுருட்டி நின்று… இரண்டு கால்களையும் ஊன்றிக் கொண்டு, முன்னங்கால்களை தூக்கி… தன் நாக்கை எதிரில் இருந்த செடியை நோக்கி நீட்டியது. நாக்கின் நுனியில் சுரந்த எச்சில் கொண்டு, இலையின் மேலிலிருந்த தன் இரையைப் பிடிக்கும் காட்சி!

இப்படி இன்னும் நிறைய காட்சிகள்!

உலகம் முழுவதும் சுற்றிப் புகைப்படம் எடுப்பது, இவனது வேலை.

‘நேஷனல் போட்டோகிராபர் விருது’, ‘சோனி வேர்ல்ட் போட்டோகிராபர் விருது’ என்று பல விருதுகள் வாங்கியுள்ளான். இந்தியாவில், அதுவும் குறிப்பாகத் தென் இந்தியாவில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியில், இவனது புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு புகழ் பெற்றவன்.

இந்த வயதில், இந்தப் புகழிற்குக் காரணம், இயற்கையின் மீதான இவனின் ஈடுபாடு.

இக்கணம்… நீரின் சலசலப்பைத் தாண்டி, செல்பேசியின் சத்தம் கேட்டது. ஒரு கையில் கேமராவைப் பிடித்துக் கொண்டு, எடுத்துக் பார்த்தான். ‘அம்மா’ என்று திரையில் தெரிந்தது.

ஆம்! அழைத்தவர், இவனது அம்மா! பெயர் செண்பகம்! குடும்பத் தலைவி!!

அழைப்பை ஏற்று, “சொல்லுங்க-ம்மா” என்றான்.

“எங்க கண்ணா இருக்க?” என்றார்.

நிறைய நேரங்களில், இவரின் அழைப்பு ‘கண்ணா’ என்றுதான் இருக்கும். சில நேரங்களில் மற்றவர்களைப் போல சிவா என்றும் அழைப்பார்.

“சித்தூர் பக்கத்தில” என்றான்.

“எப்போ வருவ?”

“எதுக்கு கேட்கிறீங்க?”

“இல்லை! ஒரு வரன் வந்திருக்கு. அதான்…” என்று இழுத்தார்.

“லஞ்சுக்கு வீட்டுக்கு வர்றேன்-ம்மா. அப்போ பேசிக்கலாம்” என்றதும், “சரி வச்சிறேன்” என்று சொன்ன பொழுது, “ம்மா” என்று அழைத்தான்.

“என்ன சிவா?” என்று கேட்டார்.

“பொண்ணு பேரென்ன?”

“தேன்பாவை” என்றார்.

“ம்ம் சரி-ம்மா” என்று அழைப்பைத் துண்டித்தான்.

அவ்வளவுதான்!

அதன்பின்னும், சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு, பாறைகளின் வழியே ஏறி வருகையில், மரத்தின் மீதிருந்த தேன் கூடு கண்ணில் பட்டது.

சட்டென, ‘தேன்பாவை’ என்ற பெயர் கருத்தில் வந்தது!

‘ஏன் சம்பந்தமில்லாமல் இப்படி?’ என்று மூளை கேட்டதும், ‘ஒன்றுமில்லை’ என்று மனம் சொன்னதைக் கேட்டு நடந்தவன், செம்மண் மணல் பரப்பை அடைந்தான். மெதுவாக நடந்து, தன் வாகனம் நிற்கும் இடத்திற்கு வந்தான்.

மஹிந்திரா தார்!

இவனது விருப்பமான வாகனம்! காடு மலை என்று சுற்றித் திரிபவனுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்ட வாகனம்!!

அடுத்த இரண்டு மணி நேரத்தில் வீட்டில் இருந்தான்.

சிவபாண்டியன் வீடு

அடுக்குமாடி குடியிருப்பு. ‘மஹிந்திரா தாரை’ பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, வீடு இருக்கும் தளத்திற்குச் சென்றான்.

‘அவன் வருவான்’ என்று தெரியும் என்பதால், வீட்டின் கதவு திறந்து இருந்தது.

“ம்மா” என்று சொல்லிக் கொண்டே, சிவா உள்ளே நுழைந்ததும், “வா கண்ணா” என்றார், வரவேற்பறையில் இருந்த செண்பகம்.

அடுத்த நொடியே, “சாப்பாடு எடுத்து வைகட்டுமா?” என்று கேட்டு, எழுந்தார்.

“எடுத்து வைங்க-ம்மா. குளிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்குள் புகுந்தான்.

மிகச் சிறிய அறைதான்!

செவ்வக வடிவத்தில் இருந்தது.

வண்ண வண்ண கூழாங்கற்கள் போடப்பட்டு, கண்ணாடியால் மூடப்பட்ட தரை! அதன் ஒரு மூலையில், தரையோடு தரையாக போடப்பட்டிருந்த வெள்ளை நிற மெத்தை.

அதற்கு நேர் எதிரே இருந்த சுவர் மேலே, அடர் சிவப்பு நிற பலகை வைத்து… சிறு சிறு கருப்பு நிற தொட்டிகள்!

ஒவ்வொன்றிலும் விதவிதமான போன்சாய் மரங்கள்!

மெத்தையின் அருகே ஒரு கடற்பச்சை நிற, ‘சைடு டேபிள்’! அதில், ஒரு விடிவிளக்கு மற்றும் அவனது புகைப்படம்!!

மற்றொரு ஓரத்தில்… அதே கடற்பச்சை நிறத்தில், பூந்தொட்டிகளுக்கு என்றே பிரத்யேக முக்கோண வடிவ அலமாரி! அதிலும் வகை வகையான செடிகள்.

ஒரு பக்க சுவர் முழுவதும், முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆன கதவுகள், நேர்த்தியான வெள்ளை நிறத்திலான திரைசீலைகளுடன்!

சுவரில் ஆங்காங்கே, இயற்கையைப் பற்றிய வாசகங்கள்.

‘AND INTO THE FOREST, I GO TO LOSE MY MIND AND FIND MY SOUL – JOHN MUIR’

‘I NEVER SAW A DISCONTENTED TREE – JOHN MUIR’

இது போன்ற வாசகங்கள், அவன் எடுத்த புகைப்படங்களின் மீது எழுதப்பட்டு, அடர் சிவப்பு நிறத்திலான சட்டம் செய்து மாட்டப்பட்டிருந்தது.

இவ்வளவு சிறிய அறை என்று நினைக்கும் போதே… குளித்துவிட்டு வந்தவன், சன்னலைத் திறந்தான். ஒரு பெரிய பால்கனி முழுவதும் விதவிதமான வண்ண, வடிவ தொட்டிகளில் போன்சாய் மரங்கள்.

தலையின் ஈரத்தைத் துடைத்துக் கொண்டே, பால்கனி முழுவதும் வலம் வந்து, அனைத்து மரங்களிடமும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

“கண்ணா, வந்து சாப்பிடு” என்று அறைக் கதவைத் திறந்து, செண்பகம் கூப்பிடுவது கேட்டதும்… “வர்றேன்மா” என்று கத்தினான்.

அதன்பின்னும், இரண்டு மூன்று முறை செண்பகம் அழுத்தி அழைத்த பின்னரே, சிவா வெளியே வந்தான்.

அவன் வெளியே வரும் பொழுது, இன்னும் இருவர் வரவேற்பறையில் இருந்தனர்.

அவர்களைப் பார்த்தவன், “அப்பா, என்ன இந்த நேரத்தில வீட்டுக்கு வந்திருக்கீங்க?” என்று புன்னகையுடன் கேட்டு, அவரின் அருகில் வந்து அமர்ந்தான்.

“சும்மாதான்” என்றார் அந்த மனிதர் அமைதியாக!

இவர், மதியழகன்! சிவாவின் தந்தை! திருமணம், பிறந்தநாள்… என்று அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கென்றே, பிரத்யேக திறந்தவெளி புல்வெளி அரங்கம் வைத்திருக்கிறார். சென்னையில் நான்கு இடங்களில் இது போன்ற ‘பார்ட்டி லான்ஸ்’ இவருக்குச் சொந்தமாக இருக்கிறது.

மிகவும் அமைதியான மனிதர். எதையும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். தன் பிள்ளைகளின் விருப்பங்கங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.

இதற்கிடையே, அவரின் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்து, ‘ஹாய்’ என்பது போல் சிவா கை அசைத்தான்.

அவளும், சிரித்துக் கொண்டே கை அசைத்தாள்.

“சிவா ஒரு அலைன்ஸ் வந்திருக்கு” என்று மதி மெல்ல சொன்னார்.

“அம்மா சொன்னாங்கப்பா” என்றான் மகன்.

“ஓ” என்றதுடன் நிறுத்திக் கொண்டார்.

அவ்வளவுதான் அவர்களின் உரையாடல்! அதன்பின் அமைதி தான்!!

“சரி நான் கிளம்புறேன்” என்று எழுந்தவர், அருகிலிருந்த பெண்ணைப் பார்த்தார்.

இவள், நளினி! சிவாவின் தங்கை!!

சிவாவிற்குத் தந்தையின் தொழிலில் துளியும் விருப்பம் இல்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக நளினி! 

தொழில் மீது அத்தனை ஈடுபாடு உண்டு! அப்பாவின் உழைப்பை, அடுத்த இடத்திற்குக் கொண்டும் செல்லும் முனைப்போடு இருக்கும் பெண். இப்பொழுதெல்லாம், நிறைய நேரங்கள் அப்பாவிற்கு ஓய்வு தந்துவிட்டு, தொழிலைக் கவனித்துக் கொள்கிறாள்..

தன்னைப் பார்த்த தந்தையிடம், “ப்பா, நீங்க கிளம்புங்க. நான் அண்ணாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன்” என்றாள் ஆசையாக!

அவர் யோசித்தார்.

“அப்பா, நீங்க பெங்களூர் லேண்ட் டாக்குமெண்ட்ஸ் டீடெயில்ஸ் மட்டும் பாருங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன்”

“ம்ம்ம்”

“ரெனோவேஷன் வொர்க், இந்த வீக்-ல முடிச்சிடலாம்”

‘ம்ம்’ என்று மகளிடம் தலையை ஆட்டி எழுந்தவர், “செண்பகம்! நான் கிளம்புறேன்” என்று சமயலறயில் இருக்கும் மனைவியிடம் சொல்லும் போதே, “சிவாப்பா ஒரு நிமிஷம்” என்று செண்பகம் சொன்னார்.

மீண்டும் அமர்ந்தவர், “நீ போய் சாப்பிடு சிவா” என்றதும், சிவாவும் அவனது தங்கையும் சாப்பாட்டு மேசைக்குச் சென்றனர்.

“ம்மா, அப்பா வெயிட் பண்ணறாங்க. என்ன பண்றீங்க?” என்று நளினி, நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு, கத்திக் கேட்டாள்.

“இதோ வந்துட்டேன்” என்று வெளியே வந்த செண்பகம், “வெயில் அதிகமா இருக்கு நளினி. அதான் மோர்” என்று மகளுக்குப் பதில் சொல்லி, கணவனின் கைகளில் மோரைக் கொடுத்தார்.

வாங்கிக் குடித்தவர், “செண்பகம், போட்டோவை அவன்கிட்ட காட்டு” என்றார் மெதுவாக.

“சரிங்க”

“ம்ம்” என்று யோசித்தவர், “என்ன சொல்றான்னு நீயே கேட்டுரு” என்று சொல்லி, முழுவதையும் குடித்து முடித்தார்.

“சரிங்க” 

“நான் கிளம்புறேன்-மா! ஈவினிங் வந்திடுவேன்” என்று சொல்லிவிட்டு, மதியழகன் கிளம்பிச் சென்றார்.

அவர் கிளம்பியதும்,

செண்பகம், “வேறேதும் வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே வந்து, மகன் அருகில் அமர்ந்தார்.

“வேண்டாம்” என்றவன், “நீ ஆபீஸ் போகலையா?” என்று தங்கையிடம் கேட்டுக் கொண்டே, சாப்பிட்டான்.

“ரெண்டு பேரும் உன்னைப் பார்க்கிறதுக்குத்தான் வந்தாங்க” என்ற செண்பகம், “இவ உன்கூட கொஞ்ச நேரம் பேசிட்டுதான் போவா” என்றார்.

“அதெல்லாம் விடுங்க-ம்மா! அண்ணாகிட்ட பொண்ணு போட்டோ காட்டினீங்களா?” என்று குதூகலமாகக் கேட்டாள்.

“இப்பத்தான வந்திருக்கான் நளினி. இனிமேதான் காட்டணும்” என்றார் செண்பகம்.

“ம்மா” என்று சலித்துக் கொண்டவள், “போங்க! போய் உடனே எடுத்திட்டு வாங்க” என்று உத்தரவு போல் சொன்னாள்.

இருந்தும், ‘எடுத்திட்டு வரவா?’ என்பது போல், செண்பகம் மகனைத்தான் பார்த்தார்.

‘எடுத்திட்டு வாங்க’ என்பது போல் மௌனமாகத் தலை ஆட்டினாலும், ‘தேன்பாவை, எப்படி இருப்பாள்?’ என்ற கேள்வி அவன் இதயத்திற்குள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது.

செண்பகம் எழுந்து, அவரது அறைக்குச் சென்றார்.

அவர் சென்றதும்…

“பிரவீன் எப்போ வருவான்?” என்று, இலகுவாகத் தன்னை மாற்றிக் கொள்ள, ஓர் கேள்வி கேட்டான்.

“ஈவினிங் ஆயிடும். அப்படித்தான் சொல்லிட்டு போனாங்க”

பிரவீன் நளினியின் கணவன். ‘ஃபேஷன் போட்டோகிராபராக’ இருக்கிறான். ஒரே துறை என்பதால், பிரவீனுக்கும் சிவாவிற்கு நல்ல பழக்கம் உண்டு. துறை சார்ந்த விடயங்கள் நிறைய பேசிக் கொள்வார்கள்.

பிரவீன், நளினி இருவரும் இதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு தளத்தில் இருக்கிறார்கள். இவர்களது திருமணம் நடந்து எட்டு மாத காலமாகிறது. அன்றிலிருந்தே, சிவாவிற்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர், அவனது பெற்றோர்கள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, செண்பகம் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து வந்து, சிவாவிடம் கொடுத்தார்.

மேலும் பெண்ணைப் பற்றிய விவரங்கள் சொல்ல ஆரம்பித்தார்.

“பொண்ணு பாட்டி, கிருஷ்ணவேணி! பெரிய கிளாசிக்கல் சிங்கர். அப்பாவும் நானும் கூட அவங்க கச்சேரி-க்கு ஒரு தடவை போயிருக்கோம்னு நினைக்கிறன். சரியா நியாபகம் இல்லை! நிறைய அவார்ட் வாங்கியிருக்காங்க. ரொம்ப பாப்புலர்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஏன்? என் அண்ணாவும் நிறைய அவார்ட் வாங்கியிருக்கான்” என்றாள் நளினி பெருமையாக.

அதைக் கேட்டதும், செண்பகமும் மகனை நினைத்துப் பெருமிதப் பட்டுக்கொண்டார். அதன் பிறகும் செண்பகம் பேசிக் கொண்டிருந்தனர்.  

புகைப்படத்தை வாங்கியவன் கவனம் முழுவதும், அதில் இருக்கும் காரிகை மீதே இருந்தது.

வீணை மீட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம். ஆரஞ்சு வர்ண பார்டர் வைத்து, கடற்பச்சை நிறத்திலான புடவை! மயில் வடிவத்திலாலான நகைகள்!

கானகங்கள் கவர்ந்திழுக்கும் ஒருவனைக் கானக்குயில் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது.

வீணையின் நரம்புகளை மீட்டிக் கொண்டிருந்தவளிடமிருந்து, தன் விருப்ப நரம்புகளை மீட்டுக் கொண்டு வந்தான்.

கொஞ்சம் கடினம்தான்! ஆனாலும், முயற்சி செய்து நிகழ்கணத்திற்கு வந்துவிட்டான்!!

அப்படி வந்தவுடன், “பொண்ணு என்ன பண்ணறாங்க?” என்று கேட்டான்.

“கிளாசிக்கல் சிங்கர்தான்” என்றாள் நளினி பதில் சொன்னாள்.

“ம்ம்ம்” என்றவன், “என்னோட வேலையைப் பத்தி சொல்லிடீங்களா?” என்ற கேள்வி அடுத்து!

“சொல்லியாச்சு! இதுவரைக்கும் அவங்க எதுவும் சொல்லலை”

சிவா… குறிப்பாக இந்தக் கேள்வியைக் கேட்க காரணம், நிறைய வரன்கள் ‘அப்பாவின் தொழிலை, ஏன் பார்க்கவில்லை?’ என்று இவனை மறுத்ததினால்!

“அதை விடுண்ணா! உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று அண்ணனின் மனதைக் கணித்து தங்கை கேட்டாள்.

“கொஞ்சம் அவனை யோசிக்க விடு” என்று செண்பகம் இடையில் வந்தார்.

“யோசிக்கெல்லாம் வேண்டாம்-மா!” என்றவன், “ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் வெளிப்படையாக.

இருவரும் அவனை வித்தியாசமாகப் பார்த்தனர்.

“அப்போ உடனே மேரேஜா??” என்றாள் நளினி அடிதடியான குரலில்.

“அவங்க வீட்ல ஜாதகம் பார்த்திட்டு சொல்றோம்னு சொல்லியிருக்காங்க” என்றார்.

“ஓ!” என்று தங்கை அடங்கிவிட்டாள்!

“இது வேறயா?” என்று அண்ணன் சலித்துக் கொண்டான்

“இங்க பாரு கண்ணா! நீ நம்பலைன்னா விடு, அதுக்காக எங்க நம்பிக்கையை எதுவும் சொல்லாத” என்று, செண்பகம் அழுத்தமாகச் சொன்னார்.

“ராங் பிலிஃப். நான் ஒன்னும் சொல்றதுக்கில்லை” என்று சொல்லிக் கொண்டே கை கழுவச் சென்றான்.

அவன் சென்றதும்,

“ஓகே-ம்மா, லேட்டாகிடுச்சி. நான் கிளம்புறேன்” என்று எழுந்தவள், “அண்ணா பை!” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, கார் கீயை எடுத்துக் கொண்டாள்.

“பார்த்துப் போ” என்ற செண்பகம், மகளை வழியனுப்ப, வாசல் வரைச் சென்றார்.

“ம்ம் பை” என்று வெளியே செல்லும் போதே, “பை நளினி” என்றான், சிவாவும் வெளியே வந்து!

“பை பை” என்று படபடவெனச் சொல்லிவிட்டு, மின்தூக்கியை நோக்கிச் சென்றாள்.

அவள் சென்றதும்,

அவசரமாக ஓடுகின்றவளைப் பார்த்தவனிடம்… “பெங்களூர்ல புதுசா ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறா. வேலை ஜாஸ்தி. உன்னை பார்க்கிறதுக்குத்தான் வந்திட்டு போறா” என்றார் செண்பகம்.

“ம்ம்” என்றான்.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், இப்படித்தான் மூவரும் பேசுவார்கள்… சண்டை போடுவார்கள்… சிரிப்பார்கள். சில நேரங்களில், இதில் பிரவீனும் சேர்ந்து கொள்வான்.

“நீ ரெஸ்ட் எடுக்கிறியா?” என்று செண்பகம் கேட்டார்.

“இல்லைம்மா” என்றவன், “பால்கனியில கொஞ்சம் மெயின்டெய்ன் பண்ணனும்” என்றான். மேலும், “நீங்க?” என்று கேட்டான்.

“வேலை இல்லை கண்ணா! போட்டோ பார்க்கிறேன்” என்றதும், சிவா சிரித்துக் கொண்டே, “சரி வாங்க” என்று தன் அறைக்குள் கூட்டிச் சென்றான்.

சிவா அறையின் பால்கனியில்

ஒரு நாற்காலியில் செண்பகம் அமர்ந்தது கொண்டு, ஐபேடில் மகன் எடுத்தப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவா… அங்கிருந்த போன்சாய் மரங்களைப் பராமரிக்க ஆரம்பித்திருந்தான். தன் ஷார்ட்ஸ் பாக்கெட் முழுவதும் சின்ன சின்ன பொருட்கள் வைத்திருந்தான். இடுக்கி, இலை வெட்டுவதற்கு என்று சிறிய கத்தரிக்கோல்கள், சின்ன கலவை கரண்டிகள்… மண் கரண்டிகள்… உள்ளங்கை அளவில் அரிவாள்… இப்படி நிறைய!

நிறைய நாட்கள் பயணங்களிலே கழிப்பவன், வீட்டிற்கு வருகின்ற வேளைகளில்… இப்படிப் பராமரிப்பு பணிகளில் இறங்கி விடுவான். அவன் வீட்டில் இல்லாத நாட்களில், இவற்றையெல்லாம் செண்பகம் பார்த்துக் கொள்வார்.

புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர், “இது என்ன கண்ணா? மரப்பட்டை கலர் கலரா இருக்கு” என்று கேட்டார்.

அருகில் வந்து பார்த்துவிட்டு, “ரெயின்போ யுக்லிப்பட்டஸ்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

“ஓ!” என்று மீண்டும் படங்களைப் பார்க்க ஆரம்பித்தார். “அப்புறம் கண்ணா! ஆப்பிள் போன்சாயில ரெண்டு ஆப்பிள் வந்திருக்கு. பார்த்தியா?” என்று ஆசையாகக் கேட்டார்.

“பார்த்தேன்-ம்மா. குளிச்சிட்டு வந்ததும் பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு போன்சாய் மரத்தின் நுனியை வெட்டிவிட்டான்.

“ம்மா, இது கொஞ்சம் வாடின மாதிரி தெரியுது” என்றான் செர்ரி ப்லோஸோம்[cherry blossom] போன்சாயைப் பார்த்து!

“அப்படியா?” என்றவர், “நீ சொன்ன மாதிரிதான மெயின்டெய்ன் பண்ணேன். மாய்ஸ்ச்சர் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன். லீப்ஸ்-ல மிஸ்டிங் பண்ணயிருக்கணுமோ? ரொம்ப சன் லைட் பட்டிருச்சோ?” என்று அவராகவே காரணங்கள் அடுக்கினார்.

இதுவும் செண்பகம்! புத்தக வழியே கிடைக்கின்ற அனுபவம் இல்லையென்றாலும், புத்திரன் வழியாக வந்த அனுபவம் நிறைய! தான் சென்ற இடங்களைப் பற்றி… அங்கு கற்றுக் கொண்ட விடயங்கள் பற்றி… ஒன்றுவிடாமல் அம்மாவிற்கு சொல்லிக் கொடுப்பான். அதிலும் காடுகள், மரங்களை பற்றி நிறைய!

“ரீபாட்[repot] வேணா பண்ணிப் பார்ப்போம்” என்றான்.

“ம்ம்” என்றவர், “சிவா இன்னொரு விஷயம்” என்றார்.

“ம்ம்” என்றான், வேலையில் கவனம் இருந்ததால்!

“அப்பா ரெண்டு லேண்ட் பத்தி சொன்னாங்க. ஒன்னு மதுரையில. இன்னொன்னு சிவகங்கையில”

“ம்ம்ம்”

“புரோக்கர் வாழியாத்தான் வந்தது. நான் விசாரிச்ச வரைக்கும் சிவகங்கை லேண்ட், நாம நினைக்கிற மாதிரி இருக்கும்”

“சரி-ம்மா! பார்க்கலாம்” என்றதோடு விட்டுவிட்டான்.

அடுத்த புகைப்படத்தைப் பார்த்தார். மேலே நீலவானம். ஆரஞ்சு நிற மண்அடுக்கு. கிழே வெள்ளை களிமண். அதில் ஒன்றிரண்டு காய்ந்த மரங்கள்.

அதைப் பார்த்ததும், “இது நல்லா இருக்கு கண்ணா” என்றார், அமர்ந்திருந்தே மகனிடம் காட்டி!

எக்கிப் பார்த்தவன், சிரித்துக் கொண்டான்.

இது, அம்மா-மகனுக்கான நேரம்! எப்பொழுதெல்லாம் வீட்டிற்கு வருகின்றானோ… அப்பொழுதெல்லாம் இப்படித்தான்… இந்த இடத்தில்தான் இவர்கள் இருவரின் நேரங்கள் கழியும்!!

மரங்கள் பற்றி… அவன் எடுத்தப் புகைப்படங்கள் பற்றி… அவன் பேசுவதைக் கேட்பது, செண்பகத்திற்கு மிகவும் பிடிக்கும்.

இவருக்கு மட்டுமல்ல! இந்த வீட்டில் உள்ள மற்ற இருவருக்கும்தான்!!

“கண்ணா, இது என்ன?” என்று கேட்டதும், அருகில் வந்து பார்த்தவன்… “ஹனி லோகஸ்ட்” என்றான். மேலும், “நார்த் அமெரிக்கா போகிறப்போ எடுத்தது” என்று சொல்லிவிட்டு, வேலையைப் பார்க்கச் சென்றான்.

“இதே பேமிலி” என்று யோசித்தவர், “பிளாக் லோகஸ்ட், நம்ம பால்கனியில் இருக்கோ??” என்று கேட்டார்.

“ஆமா-ம்மா” என்று சொன்னவனுக்கு, சட்டென வேலை தடைபட்டது.

‘ஹனி லோகஸ்ட்’ என்ற மரத்தின் பெயர் சொன்னவனுக்கு, சம்பந்தேமே இல்லாமல் ‘தேன்பாவை’ என்ற பெயர் நியாபகத்திற்கு வந்தது.

‘என்ன இது? ஏன் இப்படி சம்பந்தமில்லாமல்?’ என்று மூளை யோசித்ததும், இம்முறை ‘சம்பந்தம் இருக்கிறது’ மனம் சொன்னது.

தடதடக்கும் மனம் சொன்னது புரிந்ததும்… தலையில் தட்டிக் கொண்டு, தனிமையில் சிரித்துக் கொண்டான்.

அவன் மனம் சொன்னது… ‘தேன்’ என்ற தமிழ் சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘ஹனி’ என்பதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!