ISSAI,IYARKAI & IRUVAR 4.1

ISSAI,IYARKAI & IRUVAR 4.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 4

அன்றைய மாலை நேரத்தில்…

இன்னும் பதினைந்து நாளில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

சிவாவும், அவனது அம்மாவும்… அவன் அறையின் பால்கனியில் நடந்தபடியே, பேசிக் கொண்டிருந்தனர்.

“சிம்பிளா நடத்திறதுக்கு ஒத்துக்கிட்டாங்களா-ம்மா?” என்று கேட்டான்.

“எதுவும் சொல்லலை சிவா! பாவை மாமா உடனே சம்மதிச்சிட்டார்” என்றார் நிம்மதியாக!

“ம்ம்ம்” என்றானே தவிர, அதைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை.

 பாவையோட பாட்டி சொன்னாங்க… அம்மா அப்பா இல்லாத பொண்ணு, நல்லா பார்த்துகோங்க-ன்னு” என்றார்.

“ம்ம்ம்”

“அவளோட அம்மா அப்பா பத்தி, உன்கிட்ட பேசினாளா?”

“இல்லை-ம்மா! அதைப் பத்தி எதுவுமே பேசலை”

“ஆறு மாசமா இருக்கும் போதே, இறந்திட்டாங்களாம்”

“ஓ!”

“நீ, நல்லா பார்த்துக்கணும் கண்ணா”

சிரிக்க மட்டும் செய்தான்.

“ரெண்டு நாள் கழிச்சி மேரேஜ் பர்சேஸ்சுக்கு போகலாமா?”

“நான் வீட்லதான் இருப்பேன். போகலாம்” என்றான்.

“ட்ரெஸ் மண்டபம் டெக்ரேஷன் எல்லாம் நளினி பார்த்துக்கிறேன் சொல்லிட்டா”

“ம்ம்ம்! என்கிட்டயும் சொன்னா”

அதன்பின்னும், அம்மாவும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் மாலை

வேணிம்மா வீடு

மீனாட்சி, கிரியின் மனைவி… இருவரும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். கிரியும், கிருஷ்ணாம்மாவும்… பாவையின் திருமண விடயமாக வெளியே சென்றிருந்தனர்.

இருட்டத் தொடங்கியிருந்ததால், வீடு முழுவதும் விளக்குகள் போடப்பட்டிருந்தன. பூஜையறையிலிருந்து மெல்லிய ஒலியில் பக்திப் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

கலையும் கௌசியும்… அவர்களது அறையில் இருந்தனர்.

பாவை, அவளது அறையில் இருந்தாள். யோசித்துக் கொண்டிருந்தாள். இந்தக் கணத்தில், அவளின் யோசனை ஒன்றுதான்! அது சங்கர்!!

‘அவனால் திருமணத்தில் ஏதேனும் பிரச்சனை வருமோ?’ என்ற பயம், ஒரு பக்கம்! ‘இதைப் பற்றி பாண்டியனிடம் சொல்ல வேண்டுமோ!?” என்ற தெளிவின்மை மறுபக்கம்!!

சங்கர், தன் விருப்பத்தைத் தன்னிடம் வெளிப்படுத்திய நாளிலிருந்து இன்றுவரை, இதுபற்றி அவனிடம் பேசினதே இல்லை. ஆனால், இன்று பேச வேண்டும் என்று தோன்றியது. ‘இனிமேல் இப்படிப் பேசிக்கொண்டு சுற்றாதே’ என்று சொல்ல வேண்டும் தோன்றியது.

உடனே எழுந்தாள். நேராகச் சங்கரின் அறைக்குச் சென்று, கதவைத் தட்டினாள்.

கதவைத் திறந்தவன், “தேனு” என்றான் ஆச்சிரியத்துடன்!

அவள் அமைதியாக நிற்பது கண்டு, “உள்ளே வா தேனு” என்றான்.

“இல்லை, இங்க நின்னே சொல்லிடுறேன்” என்று வாசலிலே நின்றாள்.

“இல்லை தேனு…” என்று அவன் சொன்னாலும்,

‘இங்கு நின்றுதான் பேசப் போகிறேன்’ என்பது போல் அழுத்தமாக நின்றாள்.

அதைப் புரிந்தவன், “சரி சொல்லு” என்றான்.

“ஒரே ஒரு உதவி…” என்று சொல்லி முடிக்கும் முன்னே,

“என்னன்னு மட்டும் சொல்லு தேனு? உனக்காக கண்டிப்பா செய்றேன்” என்று பரபரப்பாய் சொல்லி முடித்தான்.

அவனின் பரபரப்பைப் பார்த்தவளுக்கு, ‘இப்படி இருக்கிறானே’ என நினைத்து… உள்ளுக்குள் படபடப்பைத் தந்தது.

இருந்தும், “இனிமே வீட்டில யார்கிட்டயும் ‘என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு’ சொல்லாதீங்க. இதுவரைக்கும் எப்படியோ, ஆனா இப்போ… எனக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அதனால, இந்த மாதிரி பேசாதீங்க” என்றாள்.

அமைதியாக நின்றான்.

“இதுக்கு முன்னாடி எனக்கு யாரையும் பிடிச்சிருந்தது இல்லை. இப்போ பாண்டியனைப் பிடிச்சிருக்கு. நீங்க, இப்படி எல்லார் முன்னாடியும் சொல்லிக்கிட்டு இருந்தா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நல்லாவும் இல்லை”

அமைதியக நின்றான்.

“நான் இதை உங்ககிட்ட சொன்னதே இல்லை. வேணிம்மாவை வச்சிதான் சொல்ல சொன்னேன். ஆனா, இப்போ சொல்றேன்… ” என்றவள், “எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே கிடையாது. அதனால, நீங்களும் அப்படி நினைக்காதீங்க”

அமைதியாக நின்றான்.

“அப்புறம்… எல்லார் மாதிரியும் பாவை-ன்னு கூப்பிடுங்க. ‘தேனு’ வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, ‘சொல்ல வந்ததைச் சொல்லியாயிற்று’ என்று நினைத்துத் திரும்பினாள்.

உடனே, “தேனு” என்று அழைத்தான். அவள் அவ்வளவு சொல்லியும், அவன் அப்படியே இருந்தான்.

கண்களை சுருக்கிக் கொண்டு, ‘ச்சே’ என்றவள், ‘இவனிடம் சொல்லிப் பிரயோசனம் இல்லை’ என நினைத்து வேக வேகமாக, தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

போகின்றவளைப் பார்த்துக் கொண்டே நின்றான், சங்கர்.

சற்று நேரத்திற்குப் பின்…

வேணிம்மா அறையில்

சாப்பிட்டு முடித்துவிட்டு, பாவையும் வேணிம்மாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“வேணிம்மா” என்று கூப்பிட்டு, சங்கரிடம் பேசிய விடயத்தைச் சொன்னாள்.

“அவன் என்ன சொன்னான்?”

“அப்படியேதான் பேசுறாங்க” என்றாள் அலுத்துப் போய்!

“விடும்மா”

“இல்லை வேணிம்மா! நம்மகிட்ட பேசுற மாதிரி, அவங்க முன்னாடியும் பேசிட்டா?” என்று, கொஞ்சம் பயத்தில் கேட்டாள்.

“அப்படியெல்லாம் பேச மாட்டான். நீ கவலைப்படாத” என்று வேணிம்மா சொன்னாலும், பாவையின் முகம் தெளிவில்லாமல் இருந்தது.

அதைக் கண்டவர், “இதெல்லாம் நினைக்காத பாவை. நீ சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது” என்று சிரித்தார்.

“நான் வேணா, அவங்ககிட்ட இதைப் பத்தி சொல்லிடவா?”

“இப்போ வேண்டாம் பாவை!”

“சொல்லாம இருந்தா தப்போன்னு தோணுது”

“நான் சொல்லவே வேண்டாம்னு சொல்லலை. நல்லபடியா கல்யாணம் முடியட்டும். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கோங்க. அதுக்கப்புறம் சொல்லு!” என்று யோசனை சொன்னார்.

“ம்ம்ம்”

“உனக்கு உரிமையான இடத்தில வாழப் போற! அதை மட்டும் நினைச்சி, நீ சந்தோஷமா இருக்கனும் பாவை” என்றார்.

இருவருக்குமே… அந்த ‘உரிமை’ என்ற வார்த்தையில், புன்னகை வந்தது.

மேலும் சற்று நேரம் பொதுவாகப் பேசிவிட்டு, உறங்கச் சென்றனர். 

அதற்கு அடுத்த நாள், மதிய நேரம்…

மதிய உணவை முடித்துவிட்டு, வேணிம்மா உறங்கி கொண்டிருந்தார். பாவை, ‘பஞ்சரத்தன கானாம்ருதம்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.

இதே நேரத்தில், வீட்டின் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் ஓய்வில் இருந்தனர். கௌசி மற்றும் கிரி தவிர!

அப்பாவும் மகளும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“சொல்லும்மா” என்றார் பேச்சின் தொடர்ச்சியாக!

“ப்பா, எல்லாம் பாவை கல்யாணம் பத்திதான்”

“அதைப் பத்தி என்ன? நானே, எப்படா அவ கல்யாணம் முடிஞ்சி போவா… சங்கருக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்”

“அதெல்லாம் சரிதான்-ப்பா” என்று சொன்னாலும், வேறு ஏதோ இருப்பது போல், அவள் முகத் தோற்றம் சொல்லியது.

“வேற என்ன கௌசி?”

“ப்பா, இது வரைக்கும் அவ இங்கதான் இருந்தா! அதனால பாட்டு பிராக்டிஸ் பண்றது… கச்சேரி தேதி…! இப்படி எல்லாம் நாமளே முடிவு பண்ணோம். இப்போ இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னா, என்ன பண்ணறது? அவ ஹஸ்பண்ட் இதுல தலையிடுவானா?”

கிரி, இப்படியெல்லாம் யோசிக்கவேயில்லை! மகள் சொன்னதற்குப் பின்தான், யோசித்துப் பார்க்க ஆரம்பித்தார்!!

“நான்… அவளுக்கு ஏத்த மாதிரி, கச்சேரி டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது இருக்குமோ? என்று கேள்வியாகக் கேட்டவள், “அப்படியெல்லாம் என்னால அட்ஜஸ்ட் முடியாது” என்று பதிலும் சொல்லிக் கொண்டாள்.

கிரி, இப்படியும் யோசிக்கவில்லை! ஆனால், தன் மகள்… யாருக்காகவும் எதற்காகவும் மாறக் கூடாது என்று உறுதியாக இருந்தார்.

“அப்புறம் இன்னொன்னு! இப்ப வரைக்கும், கச்சேரி வருமானம் பத்தி பாவை கேட்டதே இல்லை. இனிமே கேட்டா? அவ கேட்கலானாலும்… அவ ஹஸ்பண்ட் கேட்கச் சொன்னானா?”

இதை, கிரி யோசித்திருந்தார்!

இதுவரை இந்த வீட்டின் வருமானங்கள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்பட்டதே இல்லை. முதலில்… குடும்பத்தின் கணிசமான வருமானம் வந்தது, கிருஷ்ணாம்மா-வின் கச்சேரிகள் மூலமாகத்தான்.

அதன்பின்… இப்பொழுது, இசைக் கருவிகள் விற்கும் கடை மூலம் வருவதாகட்டும்… பாவை-கௌசி கச்சேரிகளிலிருந்து வருகின்ற வருமானமாகட்டும் சொற்பமே!

இருவரும் யோசித்தனர்.

சற்று நேரத்திற்குப் பின்…

வேணிம்மா அறைக்குச் சென்று, “பாவை… உன்கூட பேசணும். வா” என்று கௌசி அழைத்துவிட்டுச் சென்றாள்.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பாவை வரவேற்பறைக்கு வந்து அமர்ந்து, “என்ன கௌசி?” என்று கேட்டாள்.

“சில விஷயம் பேசிக்கலாம்னு நினைச்சேன்”

“சொல்லு”

“இனிமேலும் சேர்ந்துதான பாடப் போறோம்?”

“ம்ம்ம், அது வேணிம்மா ஆசை! அது மாறாது!!”

“நானும் மாத்தணும்னு நினைக்கலை”

“அப்புறம் என்ன?”

“இங்க பாரு! கல்யாணம் முடிஞ்சி… நீ இன்னொரு வீட்டுக்குப் போனாலும், ப்ராக்டிஸ்-க்கு ஒழுங்கா வந்திடனும். ‘இன்னைக்கு என்னால அங்கே வரமுடியாது. நீ இங்கே வா’-ன்னு சொல்லக் கூடாது. அப்படிக் கூப்பிட்டாலும், நான் எங்கயும் வர மாட்டேன்” என்றாள் கறாராக!

பயிற்சிகள் எடுப்பதிலோ… அதை இங்கு வந்து எடுப்பதிலோ… தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பாண்டியன் என்ன நினைப்பானோ? என்ற கேள்வி, பாவைக்கு வந்தது!

“அப்புறம், கச்சேரி தேதி மாத்தணும்…. இந்த நாள்-ல கச்சேரி தோதுப்படாது. அப்படியெல்லாம் எதுவும் சொல்லக் கூடாது”

இதைப் பற்றியும் பாண்டியனிடம் கேட்க வேண்டும் என்று பாவை நினைத்துக் கொண்டாள்.

“இன்னொன்னு! இதுக்கப்புறமும், என்ன பாட்டு… புடவை எல்லாம் நான்தான் முடிவு பண்ணுவேன்”

இருவரும் சேர்ந்து கச்சேரி செய்வதால், ஒரே மாதிரி புடவை கட்டுவது வழக்கம்! அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், எப்பொழுதும் கௌசியின் விருப்பப்படிதான் புடவை தேர்வுகள் இருக்கும். பாட்டும், அது போலத்தான்.

‘எப்பொழுதுதான் தனக்குப் பிடித்த பாடல், உடை’ என்று கச்சேரி செய்யப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு பாவைக்கு வந்தது!

அப்படி நடந்தால்… நினைத்துப் பார்க்கவே, மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நினைக்க மட்டுமே முடியும்.

ஆட்சேபிக்கலாம்! முடியாது என்றில்லை! வேணிம்மாவிற்காக அமைதியாக இருந்தாள்!!

பாவை யோசனையில் இருப்பதைக் கண்டு, “புரிஞ்சதா?” என்று கௌசி கேட்டாள்.

“ம்ம்ம்”

கௌசி… கிரி… இருவருமே கச்சேரி வருமானம் பற்றி ‘இவள் கேட்பாளோ?’ என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பாவை அதுபற்றி ஏதும் கேட்கவில்லை. எழுந்து, அவளது அறைக்குக் கிளம்பிவிட்டாள்.

அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

வேணிம்மா அறைக்கு வந்த பாவை… கௌசி பேசிய விடயங்கள் நினைத்து, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. உடனே, பாண்டியனை செல்பேசியில் அழைத்தாள்.

“சொல்லு ஹனி” என்றான் எடுத்தவுடன்!

“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். நமக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறமும்… நான் பாடலாமா? கௌசிகூட ப்ராக்டிஸ் இருக்கும். இங்க வர வேண்டியது இருக்கும். உங்களுக்கு அதெல்லாம் ஓகேவா?” என்று படபடவன கேட்டாள்.

“பாடப்போறது நீதானா?”

“ம்ம்”

“ப்ராக்டிஸ் பண்ணப் போறதும் நீதான?”

“ம்ம்ம்”

“அப்போ, நீதான் முடிவு எடுக்கணும்”

அவன் சொல்ல வருவது புரிந்ததும், “தேங்க்ஸ்” என்றவள், “சரி வச்சிடுறேன்” என்றாள்.

“ஹே ஹனி! அவ்வளவுதானா?!” என்றான் போதாமல்!

“ஆமா, அவ்வளவுதான்! வேணிம்மா தூங்கிறாங்க!!”

“53712392” என்றான் காதலுடன்!

“இது என்னன்னே எனக்குத் தெரியலை? இதை வேற சொல்லிக்கிட்டே இருக்கீங்க!”

“கண்டிபிடிக்கிறேன்னு சொன்னியே” என்றான் கேலியாக!

“சரி, சரி கண்டுபிடிக்கிறேன்! இப்போ பை” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து…

கல்யாணப் புடவை எடுப்பதற்கென்று… புடவைக் கடைக்கு வந்திருந்தனர். சிவா வீட்டிலிருந்து… பிரவீன், நளினி, செண்பகம், சிவா வந்திருந்தனர். ஒரு அரை மணி நேரத்திற்குப் பிறகுதான்… பாவையும் வேணிம்மாவும் கடைக்குள் நுழைந்தனர்.

நுழையும் போதே, “இன்னைக்கும் இவ சில்க் சாரீதானா?” என்று நளினி, சலித்துக் கொண்டாள்.

உடனே, “நளினி, மரியாதையா பேசு” என்றார் செண்பகம்!

“ம்மா! அவ என்னைவிட சின்ன பொண்ணுதான்” என்று சொல்லும் போதே, பாவை, வேணிம்மா இருவரும் அருகில் வந்துவிட்டனர்.

கிருஷ்ணம்மாவைக் கண்ட கடை சிப்பந்திகள் மற்றும் மேலாளர்கள், அவரை மரியாதையுடன் உபசரித்தனர். பின், அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.

செண்பகத்திடம் நலம் விசாரித்து, கிருஷ்ணாம்மா பேச ஆரம்பித்தார்.

நளினி சொன்னது போல், இன்றும் பட்டுப் புடவை கட்டி வந்த பாவை… பாண்டியனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

ஒளிர் சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை! தங்கச் சரிகைகள் கொண்டு, பெரிய பெரிய கட்டங்கள் போடப்பட்டிருந்தன! கட்டங்களுக்குள், அதே தங்க சரிகையிலான மாங்காய் வடிவங்கள்!!

இறுக்கமாகப் பின்னலிட்டு, பிச்சிப் பூ வைத்திருந்தாள்.

வருங்கால மனைவியை வஞ்சனையின்றி ரசித்தான், பாண்டியன். இனி சற்று நேரத்திற்கு இயற்கை ரசிகன், இல்லாள் ரசிகனாக!

சற்று நேரத்தில்...

பிரவீனும், சிவாவும் பேசிக் கொண்டிருந்தனர். ‘எதுவென்றாலும், உன் கணவனிடம் கேட்டுக்கொள்’ எனச் சொல்லிவிட்டு, வேணிம்மா ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டார்.

செண்பகம், நளினி, பாவை மூன்று பேரும் சேர்ந்து புடவை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர்.

பாவையின் தேர்வுகள் எல்லாம், பளிச்சென்ற நிறத்தில் இருந்தன. ‘சிவாவின் ரசனைகள் இப்படி இருக்காதே!’ என்று உள்ளுக்குள் செண்பகம் நினைத்துக் கொண்டே இருந்தார். இருந்தும், வெளிப்படையாக பாவையிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

ஆனால் நளினியோ, “பாவை… அண்ணனுக்கு இந்த மாதிரி கலர்ஸ் பிடிக்காது. ஸோ, கொஞ்சம் லைட் கலரா எடுக்கிறியா?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.

“எனக்கு இந்த மாதிரி கட்டிதான் பழக்கம்”

“ஓகே பாவை! பட், பங்ஷன்-க்கு கட்டிக்கிறதுக்கு கொஞ்சம் லைட் கலரா எடுக்கலாமே? அண்ணா கூட நிக்கிறப்போ… அவன் லைட் கலர் ட்ரெஸ்த்தான் ப்ரீபெர் பண்ணுவான். ஸோ, நீயும்…” என்று கேட்டுப் பார்த்தாள்.

“ஒரு நிமிஷம்” என்ற பாவை, பாண்டியனைப் பார்த்தாள்.

‘என்ன?’ என்று கையசைத்துக் கேட்டான்.

“ஒரு நிமிஷம் வர முடியுமா?”

“உனக்குப் பிடிச்சதே எடுத்துக்கோ பாவை. அவன்கிட்ட ஏன் சொல்லிக்கிட்டு?” என்று செண்பகம் சொன்னதற்கு… “இருக்கட்டும் செண்பாம்மா! நான் அவங்ககிட்டயே கேட்டுக்கிறேன்” என்று சொல்லிவிட்டாள்.

‘ செண்பாம்மாவ? இவள் ஏன் இப்படி அழைக்கிறாள்?’ என்று செண்பகமும், நளினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அந்த நேரத்தில்… பாண்டியன் வந்து, “என்ன சொல்லு?” என்றான்.

“நான் எனக்குப் பிடிச்ச கலர்-ல எடுத்துக்கலாமா?” என்று கேட்டாள்.

“ம்ம்” என்றான் அதற்கு!

“இல்லைண்ணா! உனக்கு டார்க் கலர் பிடிக்காதுல்ல?” என்று நளினி கேட்டாள்.

“ம்ம்ம்” என்றான் அதற்கும்!!

இருவரும் அவனைப் பார்த்தனர்.

“ஸீ! இதுல எதுவும் நான் போட்டுக்கப் போறதில்லை. ஸோ, அவளுக்குப் பிடிச்சதே எடுக்கட்டும்” என்று பொதுவாகச் சொன்னவன், “உனக்குப் பிடிச்ச கலர்-ல, நீ எடுத்துக்கோ” என்று தங்கையைப் பார்த்துச் சொன்னான்.

இன்னும் இருவரும் அவனையே பார்த்திருந்தனர். செண்பகம்தான், “நீ போ சிவா” என்று சொல்லி, மகனை அனுப்பிவிட்டு, “அவங்கவங்களுக்குப் பிடிச்ச கலர்-ல எடுத்துக்கோங்க” என்று முடித்துவிட்டார்.

அதற்குமேல் யாரும் ஏதும் பேசவில்லை.

தனக்கு எடுத்து முடிந்ததும்… “நளினி, நாம் ரெண்டு பெரும் ஒரே மாதிரி சாரீ எடுப்போமா?” என்று பாவை கேட்டாள்.                                    

கொஞ்சம் யோசித்த நளினி, “இல்லை பாவை! எனக்கு இந்த மாதிரி ஃகெவி சாரீஸ் கட்டிப் பழக்கமில்லை” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

பாவையின் மனதில் ஓர் ஏமாற்றம். அதைக் கண்ட செண்பகம், “அவ ஆஃபீஸ் வேலையா, அங்கே இங்கேன்னு அலையிற பொண்ணு. அதான், இந்த மாதிரி சாரீ வேண்டாம்னு சொல்றா” என்று பாவைக்கு எடுத்துச் சொன்னார்.

“ம்ம்” என்றாலும், பாவையின் முகம் அதே ஏமாற்றத்தோடுதான் இருந்தது.

“வேணும்னா, நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி எடுத்துக்கலாமா?” என்றதும்,

“சரி செண்பாம்மா” என்று முகம் மலர்ந்தாள்.

இதே நேரத்தில்…

பிரவீனும்… சிவாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“நம்ம நாலு பேரும் சேர்ந்து, எங்கயாவது வெளியே போகலாமா?” என்று கேட்டான் சிவா!

“எனக்கு ஓகேதான்” என்ற பிரவீன், “பாவை வர்றதுக்கு, அவ பாட்டிகிட்ட பெர்மிஷன் வாங்கணும்” என்றான்.

“அதான்-டா யோசிக்கிறேன்”

“போய் கேட்டுப்பாரு” என்று பிரவீன் சொல்லும் போதே, நளினி அனைத்து ஆடைகளுக்குப் பணம் செலுத்திவிட்டு… “பிரவீன்” என்று அழைத்தாள்.

அவள் அழைப்பை கேட்டதும்… பிரவீன், சிவா இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

சற்று நேரத்திற்குப் பின், கடையின் வெளியே…

கிருஷ்ணாம்மாவின் கார் வந்து நின்று கொண்டிருந்தது.

அவர், செண்பகத்திடம் பேசிக் கொண்டிருந்தனர். பாவை, தன் பாட்டியின் அருகில் இருந்தாள். சிவாவும் அங்குதான் நின்றான்.

பிரவீனும் நளினியும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தனர்.

அக்கணம், “பாட்டி” என்று சிவா அழைத்தான்.

“ம்ம்” என்று திரும்பினார்.

“ஆங்! பாவையை வெளியே கூட்டிட்டுப் போகலாமா?” என்று கேட்டான்.

‘அனுமதிப்பாரா?’ என்ற யோசனையுடனே சிவா நின்று கொண்டிருந்தான்.

அவர் பதில் சொல்லும் முன்பே, “நளினியும் பிரவீனும் கூட வர்றாங்க” என்றான்.

“அதுக்கென்ன! தாராளமா போயிட்டு வாங்க” என்றார் சந்தோஷமாக!

“எங்கே போறோம்?” என்று பாவை உற்சாகமாகக் கேட்டாள்.

“சொல்றேன்” என்றவன், “அம்மா, நீங்க வீட்டுக்குப் போக வேற கார் அரேஞ் பண்றேன்” என்றான்.

“எதுக்கு வேற கார்? நான், அவங்களை வீட்ல விட்டுடறேன்” என்றார் கிருஷ்ணாம்மா!

சிவா, தன் அம்மாவைப் பார்த்தான். ‘சரி’ என்பது போல் அவரது முகம் சொல்லியது.

பெரியவர்கள் கிளம்பத் தயரானார்கள்.

முதலில் செண்பகம் காரில் ஏறி அமர்ந்தார். கிருஷ்ணாம்மா காரில் ஏறப் போகும் முன், “ஆங், சிவா! பத்திரமா பார்த்துக்கோ!! திரும்ப வீட்ல கொண்டு வந்து விட்டுடு” என்று உரிமையாகச் சொல்லிவிட்டு, ஏறினார்.

காரின் உள்ளிருந்து இதைக் கேட்ட செண்பகத்திற்கு, கிருஷ்ணவேணியின் அழைப்பில் உடன்பாடில்லை. மருமகளுக்கும் மருமகனுக்கும் மரியாதையை தர வேண்டும் என்று நினைத்த மனம், மகனுக்கும் மரியாதையை எதிர் பார்த்தது!

ஆனால், செண்பகம் இதையும் வெளிப்படுத்தவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!