ISSAI,IYARKAI & IRUVAR 4.2

ISSAI,IYARKAI & IRUVAR 4.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 4

சற்று நேரத்திற்குப் பின்…

பிரவீனின் கார்… அதன் பின்னே சிவாவின் மஹிந்திரா தார்… நின்று கொண்டிருக்க, அதற்கு அருகில் நால்வரும் நின்று ‘எங்கே செல்லலாம்?’ என்று பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏதாவது கேஃபே போகலாம்! அமெதிஸ்ட் கேஃபே! சூப்பர் லோகேஷன்!! பெஸ்ட் பிளேஸ் டு ஹேங் அவுட்” என்று நளினி, தன் விருப்பத்தைச் சொன்னாள்.

பிரவீன், சிவா… இருவரும் பாவையைப் பார்த்தனர்.

“நான் வெளியிலே சாப்பிடறதில்லை! சாப்பாடு நல்லா இல்லைன்னா, திரோட்-க்கு ஏதாவது பிரச்சனை வந்திடும். இன்னும் நாலு நாள் கழிச்சி ஒரு கச்சேரி இருக்கு. அதனால வேண்டாம்!” என்று சொல்லி, பாவை மறுத்தாள்.

“அந்த அட்மோஸ்பியர் எப்படி இருக்கும் தெரியுமா?  நீ போனதே இல்லையா?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.

அந்தக் கேள்வியில், பாவை அமைதியாகிவிட்டாள்.

“பாவைக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்! நம்ம வேற எங்கேயாவது போகலாம்” என்றான் பிரவீன், பாவைக்கு ஆதரவாக!

“வேற எங்க?” என்றாள் நளினி.

“மூவீ போகலாமா?”

“ம்ம்ம் ஓகே” என்ற நளினி, “அண்ணா உனக்கு?” என்று கேட்டாள்.

“எனக்கு எதுனாலும் ஓகே” என்றவன், பாவையைப் பார்த்தான்.

“முதல எனக்கு தியேட்டர் போய் பழக்கமே இல்லை. அதோட… ” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,

“இப்போ எங்ககூட வந்து பழகிக்கோ” என்றாள் நளினி.

“அவளை பேச விடு நளினி” என்ற பிரவீன், “சொல்லு பாவை” என்றான்.

“நிறைய கூட்டம். ரொம்ப நேரம் ஏசி-ல இருக்கனும். யாருக்காவது ஒருத்தருக்கு இன்பெக்ஷன் இருந்தா கூட, நமக்கும் வர்ற சான்ஸ் இருக்கு” என்றாள்.

ஏற்கனவே புடவை தேர்வில் நடந்த பாவையின் மறுப்பு… இப்பொழுது சொல்லும் காரணங்கள்… எல்லாம் சேர்ந்து கொண்டதில், நளினி இறுக்கமாக உணர்ந்தாள்.

அதைக் கண்ட சிவா, “போதும், நீங்க யாரும் சொல்ல வேண்டாம். நானே சொல்றேன்” என்றவன், “பக்கத்தில ஒரு பால்ஸ். சூப்பரா இருக்கும். அங்கே போகலாமா? ஜஸ்ட் டு அவர்ஸ் ட்ராவல். ஓகேவா?” என்றான்.

“ஆங்! ஆரம்பிச்சிட்டான்…” என்று பிரவீன் அலுத்துக் கொண்டான்.

“அங்க தண்ணீ எப்படி இருக்குமோ? நான் கண்டிப்பா வரலை” என்று அதை மறுப்பதற்கும் ஒரு காரணம் வைத்திருந்தாள், பாவை!

பாண்டியனுக்கே, கொஞ்சம் கோபம் வந்தது.

அந்த நேரத்தில், “அண்ணா” என்றழைத்த நளினி, “இப்போதான் நியாபகம் வந்தது. ஒரு மீட்டிங் இருக்கு. பெங்களூர் நியூ ப்ராஜெக்ட் ரிலேட்டடு. ஸோ, நான் கிளம்புறேன்” என்றாள்.

“சரி” என்றான், தங்கையைப் புரிந்து கொண்டு!

நளினி, பிரவீனைப் பார்த்தாள். கார் சாவியை அவளிடம் கொடுத்து… “போ! வர்றேன்” என்று பிரவீன் காரைக் காட்டினான்.

“பை பாவை. பை அண்ணா” என்று சொல்லி, நளினி நகர்ந்தாள்.

அவள் சென்றதும்,

பிரவீன், “ஒரு நிமிஷம்” என்று பாவையிடம் சொல்லி… சிவாவைத் தனியாக அழைத்து வந்தான்!

“என்ன-டா?”

“நளினி வீட்டுக்குத்தான் போவா! நான் பார்த்துக்கிறேன். பர்ஸ்ட் டைம். ஸோ, பாவையை டிஸ்அப்பாயின்ட்மென்ட் பண்ண வேண்டாம்! நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு பிரவீனும் கிளம்பினான்.

அவன் சென்றதும்,

பாண்டியன், பாவையின் அருகில் வந்தான்.

“நம்ம…” என்று ஆரம்பித்த பாவையிடம்… “முதல நான் ஒன்னு சொல்லிக்கிறேன் பாவை” என்றான் பாண்டியன்.

“சொல்லுங்க”

“மலையிலிருந்து வர்ற தண்ணி, நல்ல தண்ணீதான்! புரியுதா?” என்றான் இயற்கை ரசிகனாய் மாறி!

“ஓ!” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள்.

“இப்போ சொல்லு, எங்க போகலாம்?”

“தெரியலையே”

“நிறைய சாய்ஸ் கொடுத்தோமே! அதுலருந்து சூஸ் பண்ணியிருக்கலாம்-ல. ஏன் சூஸ் பண்ணலை?” என்றான் தயக்கத்துடன்!

“நான்தான் காரணம் சொல்லிட்டேன்-ல” என்றாள் தடுமாற்றமே இல்லாமல்!!

“சரி… சரி… ” என்றவன், “கார்-ல ஏறு! போய்க்கிட்டே பேசலாம்” என்றதும்… பாவை காரில் ஏறினாள். பாண்டியனும் ஏறிக் கொண்டான்.

போகும் போதே இருவரும் பேசி, ஓர் நெடுந்தூரப் பயணம் என்று முடிவுக்கு வந்திருந்தார்கள்.

மஹிந்திரா தார் கையில்…

மனங் கவர்ந்தவள் அருகில்…

கிழக்கு கடற்கரை சாலை…

காதல் ஒன்றே வேலை – இக்கணத்தில் பாண்டியன்!

வேறென்ன வேண்டும் பாண்டியனின் பாவைக்கு!

பயணத்தின் வேகம் கூட ஆங்காங்கே குறைந்தது. ஆனால், பாவையின் பேச்சின் வேகம் எந்தக் கணத்திலும் குறையவில்லை. வாய் ஓயாமல் பாவை பேசினாள், வாழப் போகிறவனுடன்!

வேறென்ன வேண்டும் பாவையின் பாண்டியனுக்கு!

ஒரு இரண்டு மணி நேரத்திற்குப் பின்…

வேணிம்மா வீடு

பாவையை… அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பு கொண்டு வந்து விட்டான், பாண்டியன்.

இறங்கப் போகும் போது, “வீட்டுக்கு வர்றீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை! இப்படியே கிளம்புறேன். பாட்டிகிட்ட சொல்லிடு” என்றான்.

தலையை ஆட்டி, இறங்கப் போனவளிடம்… “53712392” என்று சொன்னான், பாண்டியன்!

“திரும்பவுமா?” என்று சலித்துக் கொண்டே இறங்கினாள்.

இறங்கிய உடனே… உரிமையுள்ளவன் கைப்பிடியிலிருந்து, உரிமையில்லா இடத்தில கால் வைக்க கஷ்டமாக இருந்தது, பாவைக்கு!

உடனே, “எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று மென்குரலில் சொன்னாள்.

‘அப்பட்டமாகத் தெரிகின்றது’ என்பது போல், அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டான். பின், “53712392” என்று சொன்னான்.

“இது வேண்டாம்! நீங்களும் ‘பிடிச்சிருக்குன்னு’ சொல்லுங்க” என்றாள் அடமாக!

“பாவை! எனக்கு என்ன தோணுதோ… அதான் சொல்ல முடியும் ” என்றான் அலட்டாமல்!

“எனக்கு என்னன்னே தெரியாத ஒன்னை, இத்தனை தடவை சொல்றதே வேஸ்ட்” என்று அசால்ட்டாகச் சொல்லி, திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

பாவை சொல்லிய விதத்தில், அழகாகச் சிரித்துக் கொண்டே… கிளம்பினான், பாண்டியன்!

 அன்றைய மாலை, சிவா அறை பால்கனியில்!!

செண்பகமும் சிவாவும்… போன்சாய் மரங்களின் ஊடே பேசிக் கொண்டே, நடந்து கொண்டிருந்தனர்!

“நளினி ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டான்.

“ஆமா சிவா! ‘ஒரு நாள் வெளியே வந்தா என்னாகிடும்? அவ்வளவு காரணம் சொல்றா!’ -ன்னு ஒரே புலம்பல் “

சிரித்துக் கொண்டே நடந்தான்.

” ‘ஸ்டேஜ் டெக்கரேசன் நான்தான பண்றேன்! எந்தக் கலர் ட்ரெஸ் போட்டா நல்லா இருக்கும்னு எனக்குத்தான தெரியும். லைப் லாங் அந்த மொமெண்ட் சேவ் பண்ணி வைக்கப் போறாங்க. அது நல்லா அழகா இருக்க வேண்டாமா?’ அப்படி இப்படினு ஒரே புலம்பல்” என்று வேகமாக நடந்து கொண்டே சொன்னார்.

“சரிதான்!” என்றவன், “பட், அது பாவையோட மொமெண்ட்! ஸோ, அவளுக்கும் இப்படித்தான் இருக்கணும்னு ஆசை இருக்கும்-ல” என்றான்.

“நான் முதலே சொன்னேன் கண்ணா! ட்ரெஸ் கலர் எல்லாம் அவங்கவங்க இஷ்டம்னு… ரெண்டு பேரும் கேட்கலை” என்று ஆரம்பிக்கும் போதே,

“விடுங்கம்மா” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

“இப்படியே சிரிச்சிக்கிட்டே இரு” என்றவர், “நீ நடந்துக்கிட்டே இரு! ஏதாவது குடிக்க எடுத்திட்டு வர்றேன்” என்று அறைக்குள் சென்றார்.

நடந்து முடிந்ததும், ஹனி லோகஸ்ட் முன் சென்று நின்று கொண்டான்.

அவன்தான் நின்று கொண்டிருந்தான். ஆனால், திருமண நாள் ஓடி வந்துவிட்டது.

கல்யாண நாள்

திருமணம் ஏற்பாடுகள் எல்லாம் நளினிதான் பார்த்துக் கொண்டாள். சின்ன மண்டபம்தான்! கிரிதான் பார்த்துக் கொடுத்தது.

ஆனால், தன் அலங்கரிப்புகள் மூலமாக பிரமாண்டபமாய் மாற்றியிருந்தாள், அண்ணனிற்காக!!

மண்டபம் முழுதும் சீரான வரிசையில் அடுக்கப்பட்ட ஸ்டீல் நாற்காலிகள்! சிவப்பு நிற வட்டவடிமான குஷன், உட்காருவதற்கு!! மேலும், சாயும் இடத்தில வெள்ளை நிற ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்து வைக்கப்பட்டிருந்தது.

மேடையின் பின்னணிச் சூழலாக வெள்ளை நிற ரோஜாப்பூக்கள்!  சிகப்பு நிற ரோஜாப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காதலின் சின்னம்! அதன் ஓரத்தில் வெள்ளை எழுத்துக்களால் காலம் முழுவதும் கைகோர்த்து நடக்கப் போகிறவர்கள் பெயர்கள் மின்னியது!! 

மேடையின் நடுவில் அன்றைய நாளின் நாயகன், நாயகி! அந்த நாளுக்கே உரிய அலங்காரத்துடன்! தனித்து தெரிவதற்கென்று, பிரத்யேக விளக்கு ஒளியின் வெளிச்சத்தில்!!

கௌசியும் கிரியும்… பாவையின் திருமணம் இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்க்கவேயில்லை. கொஞ்சம் பொறாமை தெரிந்தது, அவர்களது பார்வையில்!

அவர்கள் இன்னும் பொறாமைப்படும் விதமாக, பாண்டியன் பாவையின் கழுத்தில் தாலி கட்டி முடித்ததும்… மேடையில் நின்று கொண்டிருந்த வேணிம்மா…

“ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே” என்று பாட ஆரம்பித்துவிட்டார்.

யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. கௌசியும் கிரியும் எரிச்சலின் உச்சத்தில் நின்றனர்.

“ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே

நம்ம ஜானகி மணமகள் ஆனாளே

வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்” என்று பாடினார்.

‘எத்தனை நாட்கள் கழித்துப் பாடுகிறார். அதுவும் தனக்காகப் பாடுகிறார். இதை விட வேற என்ன வேண்டும்?’ என்ற மனநிலையில்தான் பாவை இருந்தாள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவள் ஆனந்தமாக இருந்தாள்.

“சீதைக்கும் ராமனுக்கும்… ” என்று பாடி பாவையைப் பார்த்தார். அதற்கு மேல் முடியவில்லை. ஆதலால், நிறுத்திக் கொண்டார்.

அது, பாவையின் திருமணத்தை இன்னும் பிரமாண்டமாய் மாற்றியது.

அவ்வளவுதான்! திருமணம் முடிந்தது!!

பாவையின் அத்தை மகன் சங்கர்!? அன்றைய நிகழ்வுகளில் ஆடிப் போயிருந்தாலும்… மனதளவில் அப்படியே இருந்தான்!

சற்று நேரத்திற்கு… வழக்கங்கள்! வாழ்த்துகள்! வாழை இலை உணவுகள்! வந்திருந்தவர்கள் வீடு திரும்பல்! இவை மட்டுமே!!

எல்லாம் முடிந்ததும், “வேணிம்மா” என்று, தன் பாட்டி முன் வந்து நின்றாள், பாவை!

“உனக்கே உனக்குன்னு உரிமையா ஒரு வீடு. உனக்குப் பிடிச்ச மாதிரி வாழு” என்றார் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக!

மங்களகரமாக நின்று கொண்டிருந்தவள், மனதிலிருந்து சிரித்தாள்.

சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த பாண்டியனை அழைத்தார். அவன் வந்ததும், “சந்தோஷமா பார்த்துக்கோங்க” என்று சொன்னார்.

‘சரி’ என்று தலையாட்டினான்.

அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. தன் கடமை முடிந்துவிட்டது என்ற ஓர் திருப்தி! இனிமேல் சந்தோசமாக இருப்பாள் என்ற நிம்மதி!! நிறைவான மனநிலையுடன், பாவையைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பினார், வேணிம்மா!!

சிவா வீடு

சற்று நேரம்… பாண்டியன், நளினி, பிரவீன்… இவர்களிடம் பாவை பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு…  மாமனார் மாமியார் மற்றும் பிரவீனின் பெற்றோர்களுடன் பேசினாள்.

அதன்பிறகு, காலையில் திருமணத்திற்கு வர இயலாத உறவினர்கள் சிலர்… சிவாவின் நண்பர்கள் சிலர்… வந்திருந்தனர்.

அதன்பிறகு, அவர்களுடன் பொழுது கழிந்தது.

அதன்பிறகு, “நீ இரு. நான், இவங்களை அனுப்பிட்டு வர்றேன்” என்று பாவையிடம் சொல்லிவிட்டு, பாண்டியன் கிழே சென்றான்.

அவன் சென்றதும்… நளினி, பிரவீன் மற்றும் அவனது பெற்றோர் சாப்பிட்டுவிட்டு, தங்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

அதன்பிறகு, “எதுவும் வேணுமா பாவை?” என்று மருமகளிடம் கேட்டார், செண்பகம்!

“செண்பாம்மா… இந்தப் புடவையை மாத்திக்கணும்” என்று சொன்னதும், “வா என்கூட” என்று சிவாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“இதுதான் உங்க ரூம்!” என்று சொன்னவர், “ஒன்னே ஒன்னு பாவை” என்றார்.

“சொல்லுங்க செண்பாம்மா”

“சிவா இப்போ இருக்கிற மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும். சரியா?”

‘சரி’ எனத் தலையை ஆட்டினாள்.

“சரி! நீ சாரீ சேஞ் பண்ணிக்கோ” என்று சொல்லி அறையை விட்டு வெளியே சென்றார்.

சற்று நேரத்தில், பாவை குளித்து முடித்து வரும் பொழுது… பாண்டியன் அறைக்குள் இருந்தான்.

எப்பொழுதும் அலட்டிக் கொள்ளாத உடையில், தன்னை அசையவிடாமல் செய்துவிடும் கண்ணாளனை, கருவிழிகளால் கஞ்சத்தனம் இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தாள், மனைவி!

ஒப்பனைகள், தலை அலங்காரங்கள் எல்லாம் கலைந்து விட்டு… தங்க சரிகை வைத்த, அடர் சாம்பல் நிறப் பட்டுப்புடவை நேர்த்தியின்றி கட்டியிருந்தாள்! புதுத்தாலி… நெற்றிக் குங்குமம்… தளர்வான ஜடை பின்னல் என்று களையாக இருந்த தாரத்தை, தன் இருவிழிகளால், தரமாக ரசித்துக் கொண்டிருந்தான், கணவன்!!

அதன்பிறகு, இதுவரை இருந்த தூரத்தை விரட்டுகின்ற நெருக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்!

“ஹனி” என்றான் ஆசையாக!

“பாண்டியன்” என்றாள், அவனை விட ஆசையாக!!

‘என்னது பாண்டியனா?’ என்று அதிர்ச்சியடைந்து… அரையடி பின்னால் சென்றான், பாவையின் பாண்டியன்!!

அதன் பிறகு??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!