இசை… இயற்கை மற்றும் இருவர்
அத்தியாயம் – 5
அதன்பிறகு…
“என்னாச்சு பாண்டியன்?” என்று, அவனின் பின்னடைவைக் கண்டு கேட்டாள்.
“நீ ஏன் பாண்டியன்-ன்னு கூப்பிடுற?”
“அதான உங்க பேரு!?”
“ஆமா!” என்று தயங்கி ஒத்துக் கொண்டாலும், “பட், எல்லாரும் சிவான்னுதான் கூப்பிடுவாங்க” என்ற ஒன்றை சொல்லிப் பார்த்தான்.
“ஓ!” என்ற ஒற்றைச் சொல்லில் முடித்துவிட்டாள்.
“எனக்குப் பாண்டியன்னு கூப்பிட்டா பிடிக்காது” என்று, தன் விருப்பத்திற்கானக் கோரிக்கையை வைத்துப் பார்த்தான்.
“இது எனக்குத் தெரியாதே! கல்யாணத்துக்கு முன்னாடிகூட… இந்த மாதிரிதான் நினைச்சிப்பேன். மத்தவங்ககிட்ட பேசிறப்பவும்… ‘பாண்டியன்’ பேர்தான் யூஸ் பண்ணியிருக்கேன்”
“இனிமே மாத்த முடியாதா?”
“அந்தப் பேர், உங்களுக்கு ஏன் பிடிக்காது?”
“தெரியலை! பட், பிடிக்காது”
“சரியான காரணம் சொல்லுங்க! மாத்திக்கிறேன்”
“இல்லைன்னா?”
“எனக்குப் பிடிச்சிருக்கு! இருக்கட்டுமே” என்று, தன் விருப்பத்திற்கானக் கோரிக்கையை வைத்துப் பார்த்தாள்.
யோசித்தான். பின், ‘சரி’ என்பது போல் தலையாட்டினான்.
“தேங்க்ஸ் பாண்டியன்” என்றவள், சந்தோஷமாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
கல்யாணக் களையுடன் இருக்கும் மனைவியை, களிப்புடன் கட்டிப் பிடித்துக் கொண்டான்.
அன்பின் ஆரம்பப் பாடத்தில் இருப்பவள், கணவன்… தன் விருப்பதை ஏற்றுக் கொண்டான் என்று ஆனந்தம் அடைந்தாள்.
அன்பின் அறிவியல் பேசுபவன், மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தாயிற்று என்று மகிழ்ச்சி அடைந்தான்.
ஆனால், ‘ஏற்றுக் கொள்ளவது’ ‘மதிப்பு கொடுப்பது’… இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு!!
அதன்பிறகு…
கட்டிக் கொண்டிருந்தவன் கண்களில், அந்த அறையின் பிரமாண்டக் கண்ணாடித் கதவுகளைத் தாண்டியிருந்த பால்கனி தெரிந்தது!
அணைத்திருந்த மனைவியைத் தள்ளி நிறுத்தி, “பாவை! என்கூட வா!” என்றான்.
“எங்கே?” என்று கேட்டவள், மீண்டும் அவன் அகம் இருக்கும் இடத்தில் முகம் வைத்துக் கொண்டாள்! அதுதான் ஆசை போல!!
“ப்ச்! உன்கிட்ட ஒன்னு காட்டணும் ஹனி! ப்ளீஸ் வா” என்று, மீண்டும் தள்ளி நிறுத்தினான்.
“எங்கே?” என்றாள் நிதானமாக!
“வா” என்று சொல்லி, அவள் கைகள் பிடித்து பால்கனிக்கு அழைத்துச் சென்றான். ஒரு போன்சாய் மரத்தின் முன் சென்று, அவளை நிற்க வைத்தான்.
“என்ன இது?” என்று கேட்டாள்.
“ஹனி லோகஸ்ட்”
“ஓ! அன்னைக்கு சொன்னீங்கள?!” என்றவள், அந்தப் பால்கனி முழுவதும் பார்வையைப் படரவிட்டாள்.
அறையை விட இருமடங்கு பெரிதாக இருந்தது பால்கனி! முழுவதும் வெவ்வேறு வடிவ தொட்டிகளில், விதவிதமான போன்சாய் மரங்கள். சில இடங்களில் மேற்கூரை இருந்தது! சில இடங்களில் இல்லை!!
மெல்லிய விளக்கு வெளிச்சத்தில்… ஆப்பிள்கள் தொங்குவதும், வண்ண வண்ண பூக்கள் இருப்பதும் தெரிந்தன.
“எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “வீட்டுக்குள்ள… இங்கே… இப்படி எல்லா இடத்திலேயும் ஏன் மரமா இருக்கு?” என்று கேள்வி கேட்டாள்.
“இந்த அட்மாஸ்பியர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மரத்தோட வாசனை… இலையோட நிறம்… காடு… இதெல்லாம் பிடிக்கும். இன் ஷார்ட் எனக்கு நேச்சர் பிடிக்கும்” என்று சொல்லும் போதே, பாவை சிரிக்க ஆரம்பித்தாள்.
“எதுக்கு சிரிக்கிற?”
“இந்த மாதிரி ரூம்குள்ள நாலைஞ்சி மரத்தை வளர்த்திட்டு… காடு பிடிக்கும்னு சொல்லறீங்கள! அதான் சிரிச்சேன்!!” என்றாள்.
அமைதியாக நின்றான்.
அந்தக் கணத்தில்… எங்கோ போய்க்கொண்டிருந்த மேகம், இங்கேயும் லேசாகத் தூறல் போட ஆரம்பித்தது.
அதை உணர்ந்தவன், “வா… அங்கே போய் நிற்கலாம்” என்று சொல்லி… மேற்கூரை இடப்பட்ட இடத்தை நோக்கி, அவளைக் கூட்டிச் சென்றான்.
அங்கே சென்றதும், “நேச்சர்-னா அதுல மழையும் உண்டுதான?” என்று ஒரு கேள்வி கேட்டாள்.
“ஆமா” என்றான். அதற்கும் சிரித்தாள்.
“இப்போ ஏன் சிரிக்கிற?”
“இயற்கை பிடிக்கும்னு சொன்னீங்க! ஆனா, நாலு தூறல் விழுறதுக்குள்ள… இப்படி வந்து நிக்கிறீங்க??” என்றாள் நக்கலாக!
மீண்டும் மீண்டும் அதையே சொல்லி… அவன் கைகளை பிடித்துக் கொண்டு… தோள்களில் தலை சாய்த்துச் சிரித்தாள்.
பொறுமை பறந்து, “அன்னைக்கு உன்னோடு வாய்ஸ் பத்தி அவ்வளவு கேர் எடுத்துக்கிட்ட! சரி, நனைஞ்சா த்ரோட் ப்ராப்ளம் வந்திடும்னு நானும் கேர் பண்ணேன் பார்த்தியா? நீ இதுவும் பேசுவ! இன்னமும் பேசுவ!!” என்று பொங்கினான்.
“எனக்காகவா பாண்டியன்? என்னை கேர் பண்றீங்களா பாண்டியன்?” என்றவள் குரலில, ஏக்கத்தின் வாசனை எக்கச்சக்கமாக இருந்தது.
“இந்த டயலாக்-லாம் வேண்டாம்” என்றவன், “நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு, மேற்கூரையை விட்டு வெளியே வந்தான்.
“வேண்டாம் பாண்டியன்… ப்ளீஸ்! நனைஞ்சிடுவேன்” என்று கெஞ்சி, திமிறிக் கொண்டு போக நினைத்தவளை… திடமாக இழுத்துப் பிடித்து, மீண்டும் தன் அருகில் நிறுத்தினான்.
மீண்டும் மீண்டும் இது நடந்தது! ஆனால் ஒன்று! அவன் இழுத்த இழுப்பிற்கு இசைந்து கொடுப்பது போல்தான், அவளின் அசைவுகள் இருந்தன!!
அட! ‘வேண்டாம் என்கிறாளா? வேண்டும் என்கிறாளா?’ என்று கேட்கும் அளவிற்கு, அவளின் ஆர்ப்பாட்டங்கள் இருந்தன!!
அவன் சிரித்தான்.
“பாண்டியன் ப்ளீஸ்” என்று, திரும்பத் திரும்ப பாவை கேட்டாள்.
மறுபடியும் சிரித்தான்!
“ஏன் சிரிக்கிறீங்க?”
“ஏய் ஹனி! தூறல் அப்பவே நின்னாச்சி. ஒழுங்கா நில்லு” என்றான், அவளை விட்டுவிட்டு!
பாவை நேராக நின்றாள். பின் வானத்தைப் பார்த்தாள். ‘ஆமாம்’ என்பது போல் ஓர் அசட்டுப் புன்னகை செய்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னைகைத்தனர்.
அதன் பிறகு… பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான். அப்படி நின்றிருந்தவன் மேல் சாய்ந்து கொண்டு, அவள் நின்றாள்.
“உங்களுக்கு ஏன் இயற்கை இவ்வளவு பிடிக்கும்-ன்னு சொல்லுங்க?” என்று கேட்டாள்.
அவள் தோளில் கை போட்டுக் கொண்டு, “நாம வாழறதுக்கு மூல காரணமே நேச்சர்தான். ஸோ, பிடிக்கும்!” என்றான்.
“வாழற வாழ்க்கையில, ஏதாவது பிரச்சனை வந்தா… மனசுக்கு ரிலாக்ஸ் தர்றது இசைதான்” என்றாள் சம்பந்தமில்லாமல்!
“நேச்சரும் ரிலாக்ஸ் தரும்! நம்மளைச் சுத்தி ப்ளாண்ட்ஸ் இருக்கும் போது… கார்டெனிங் பண்றப்போ… காட்டுக்குள்ளே இருக்கிறப்போ…பீல் குட் கெமிக்கல்ஸ் பிரைன்-ல ரிலீஸ் ஆகும். அது, நம்மளை டிப்ரெஸ்ஸன் ஆகாம வச்சிக்கும்… ரிலாக்ஸ் பீல் வரும்… இன்னும் நிறைய சொல்லலாம்”
தோளினை அணைத்துக் கொண்டிருந்தவன் கைவளைக்குள்… இரவின் குளிருக்கு இதமாக… நன்றாகத் தன்னைப் பொருத்திக் கொண்டாள்.
மேலும், “எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாது” என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.
“நேச்சர் ரொம்ப சிம்பிள் ஹனி! ஸோ, எல்லாரும் அதை கொண்டாடலாம்” என்றான் எளிதாக!
“இசை பிரமாண்டமானது! எல்லா கொண்டாடத்திலயும் ஏதாவது ஒரு வடிவத்தில இருக்கும்” என்றாள் எதிர்மறையாக!
“இப்படித்தான்-னு நேச்சருக்கு எந்த ரூல்ஸும் இல்லை”
“இப்படித்தான் இருக்கணும்னு இசைக்கு ஒரு வரையறை இருக்கு”
“ரூல்ஸ் இல்லாததால, யார் வேணும்னாலும் அதை ரசிக்கலாம்” என்றான் விருப்பமாக!
“வரையறையைக் கத்துக்கிட்டு, அதை யார் வேணும்னாலும் ரசிக்கிற மாதிரி கொடுக்கலாம்” என்றாள் விவாதமாக!
அமைதியாக நின்றான்.
“இயற்கைக்கு அழிவு, அனர்த்தங்கள் உண்டு… இசையில இது ரெண்டும் கிடையாது” என்று மீண்டும் தொடங்கினாள்.
“அனர்த்தங்கள்…??” என்று, அவள் சொன்னதற்காக அர்த்தம் கேட்டு நின்றான்.
“வெள்ளம்… பூகம்பம்… இப்படி நடந்து மக்களை அழிக்குது-ல! அதுதான்!!”
மீண்டும் அமைதியாக நின்றான்!
“என்ன பதிலே இல்லை?” என்று கூர்ந்து, அவன் முகத்தைப் பார்த்தாள்.
“ஹே ஹனி! நீ ஒன்னு சொன்னா… நான் ஒன்னு சொல்லணுமா? நமக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்களைப் பத்தி ஷேர் பண்ணிக்கிட்டோம்! அவ்வளவுதான்!!”
அவன் அணைப்பிலிருந்து விலகி, “பதில் சொல்ல முடியலைன்னதும், இப்படிப் பேசி சமாளிக்கிறீங்களா?” என்று, ஒற்றை விரலை ஆட்டிச் சொன்னாள்.
“பதில் சொல்ல முடியலையா? என்றவன், “கண்டிப்பா, ஒரு நாள் இதுக்குப் பதில் சொல்றேன்” என்றான் இறுமாப்புடன்!
அதற்கு மேல், பாண்டியன் எதுவும் பேசவில்லை.
“இசை கேட்கிறதனால வர்றது நேர்மறையான எண்ணம்….” என்று பாவை தொடங்கும் போதே,
“போதும்” என்றான்.
‘ஏன்?’ என்பது போல் பார்த்தாள்.
“இதுவரைக்கும் நீ பேசினதை வச்சி, நான் தெரிஞ்சிக்கிட்டது… உனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்குது. அதைப் புரிஞ்சிகிட்டு, அதுக்கு நான் மதிப்பு கொடுப்பேன்.
அன்ட்… நான் பேசினது வச்சி, எனக்கு நேச்சர் பிடிக்கும்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். உனக்கு நான் தர்ற சப்போர்ட்ட, எனக்கு நீ தரணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்” என்று விளக்கினான்.
விழியசைக்காமல், அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
“உள்ளே போகலாமா?” என்று கேட்டான்.
“போகலாம்! ஆனா, நானும் உங்களைப் புரிஞ்சி நடந்துப்பேன்”
“ம்ம் சரி” என்று சொல்லி, உள்ளே அழைத்துச் சென்றான்.
உள்ளே வந்தவுடன்… பாண்டியன் மெத்தையில் அமர்ந்து கொண்டான். பாவையோ… தான் கொண்டு வந்திருந்த பெட்டிகளில், எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“இந்த நேரத்தில என்ன தேடுற, பாவை?” என்று சலித்துக் கொண்டே கேட்டான்.
“ஒரு நிமிஷம்” என்றவள், ஒரு பத்து நிமிடம் கழித்து, அவனருகில் வந்து அமர்ந்து, “கண்ணை மூடுங்க” என்றாள்.
“எதுக்கு?”
“ப்ளீஸ்” என்று சொன்னதும், விழிகளை மூடிக் கொண்டான்.
தன் கைகளில் இருந்த சிறிய நகைப் பெட்டியை திறந்து… அதிலிருந்த மோதிரத்தை எடுத்து…அவனது வலது கை மோதிர விரலில் போட்டுவிடப் போனாள்.
சட்டென உணர்ந்து, பட்டென பாண்டியன் விழி திறக்கையில்… மோதிரம் விரலின் பாதி தூரத்திற்குச் சென்றிருந்தது.
“ஹே ஹனி! என்ன பண்ற?” என்று சொல்லும் போதே, அவன் விரலில் மோதிரத்தை அணிவித்திருந்தாள்.
பின்… அவன் கையைத் தூக்கி… அப்படியும் இப்படியும் பார்த்து…”நல்லா இருக்குதுல்ல” என்று கேட்டாள்.
“என்ன பாவை இது?”
“ரிங்! கிப்ட்!!”
“அது தெரியுது! பட், நான் இந்த மாதிரி கோல்ட் ஆர்னமெண்ட்ஸ் போட மாட்டேன்”
“ஏன்?”
“எனக்குப் பிடிக்காது பாவை” என்று சொன்னான்.
“என்ன பண்ணாலும் பிடிக்காதுன்னு சொல்றீங்க? எதுதான் உங்களுக்குப் பிடிக்கும்??” என்று அலுத்துக் கொண்டாள்.
“அப்படி இல்லை பாவை…” என்று விளக்க ஆரம்பிக்கும் போதே,
“எவ்ளோ ஆசை ஆசையா வாங்கினேன் தெரியுமா? என்று சொல்லி, விருப்பத்துடன் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
மேலும்… மெல்ல தலை நிமிர்த்தி, “எனக்காகப் போட்டுக்கோங்க” என்று கேட்டாள்.
“டு டிராமட்டிக்” என்று சொன்னாலும், “சரி போட்டுக்கிறேன்” என்று ஒத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ்” என்றவள், “என்னைக்கும் கழட்டவே கூடாது” என்று, அவன் அன்பிற்கு அதுதான் அளவுகோல் என்பது போல் ஒரு கட்டளை இட்டாள்.
“ஏன்? கழட்டினா என்ன?” என்றான் அசட்டையாக!
“உங்களுக்கு, என் மேல அன்பு இல்லை-ன்னு அர்த்தம்” என்று சொல்லி முடிக்கும் போதே,
“இங்க பாரு! போட்டுக்கோங்கன்னு சொன்ன, போட்டுக்கிட்டேன்! ஆனா, இந்த மாதிரி ரூல்ஸ் சொல்லாத. எனக்கு அப்படி எதுவும் கிடையாது” எனச் சொன்னான்.
“எனக்கு அப்படித்தான்” என்றாள் அடமாக!
“உன் மேல இருக்கிற அன்பை, இப்படி ஏதாவது ஒரு பொருளோடு சம்பந்தப் படுத்திப் பேசாத”
“நான் அப்படித்தான்” என்றாள் திடமாக!
“அப்போ, நான் கழட்டினா?”
“நான் போட்டுப்பேன்! எனக்கு, உங்க மேல இருக்கிற அன்பு எப்பவும் அப்படியே இருக்கும்” என்று சொல்லி, விலகி அமர்ந்து கொண்டாள்.
ஆனால், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை!
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பாவை” என்று அழைத்தான்.
இருமுறை அழைத்த பின்னும், அவள் பாராமல் இருந்தாள்.
“பாவை ப்ளீஸ்! முக்கியமா பேசணும்” என்று கெஞ்சும் குரலில் கேட்டதும், ‘என்ன?’ என்று திரும்பினாள்.
“இதுவரைக்கும் உன்கூட பேசினதை வச்சி சொல்றேன், நம்ம ரெண்டு பேருக்குள்ள டிஃரென்ஸ் ஆஃப் ஒப்பீனியன் நிறைய இருக்கு”
‘என்ன சொல்ல வருகிறான்?’ என்பது போல் பார்த்தாள்.
“ரெண்டு பேரோட எண்ணங்கள், விருப்பங்கள்… எல்லாம் வேற வேற மாதிரி இருக்கு”
“அதனால?!” என்றாள் பதற்றமாக!
“ஏன் இவ்ளோ டென்ஷன்…” என்கின்ற போதே, “முதல விஷயத்தை சொல்லுங்க” என்றாள்.
“அதனால, சம்டைம்ஸ் ஆர்க்யூமென்ட்ஸ் வரலாம்”
“சண்டையா?” என்றாள் பயத்துடன்!
“சண்டை கிடையாது. ஆர்க்யூமென்ட், அதுவும் ஹெல்த்தி ஆர்க்யூமென்ட்!”
“ம்கூம்… இல்லை! அப்படி… அதெல்லாம் வராது. வரக் கூடாது” என்று தொய்வான குரலில் சொன்னாள்.
“அப்படி வந்தா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ஈஸியா இருக்கும்” என்று தெளிவானக் குரலில் சொன்னான்.
‘சண்டை வந்தால், எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்?’ என்று, அவள் குழம்ப ஆரம்பித்தாள்.
அதன்பிறகு,
மீண்டும், “பாவை” என்று அழைத்தான்.
“ம்ம்”
“இன்னொன்னு சொல்லணும்”
“ஒருநாளைக்கு எத்தனை சொல்லுவீங்க??” என்று அலுத்துக் கொண்டாலும், “இப்போ என்ன?” என்று கேட்டாள்.
“பர்ஸ்ட் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி, எமோஷனல் இன்டிமேசி வரணும்! அதுக்கப்புறம்தான் பிஸிக்கல் இன்டிமேசி!! ஓகேவா?”
அவள் முகம் யோசனையாக இருந்தது.
அதைக் கண்டவன், “உனக்கு ஓகே இல்லையா?” என்று கேட்டான்.
“நான் அதை யோசிக்கலை பாண்டியன்”
“வேறென்ன?”
“நாம சண்டை போடக் கூடாது! நீங்க என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது” என்று, அதே இடத்தில் நின்றாள்.
“அது சண்டையில்ல பாவை! ஆரோக்கியமான விவாதம்!! அப்புறம், உன்னை எப்படிக் கஷ்டப்படுத்துவேன்?” என்று, அதே புள்ளியில் நின்றான்.
“தூங்கலாமா??” என்று கேட்டாள்.
“ம்ம்ம்” என்று சொன்னதும், மெத்தையின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
எழுந்து சென்று பகல் விளக்குகளை அணைத்து விட்டு, இரவு விளக்குகளைப் போட்டுவிட்டான். திரைசீலைகளையெல்லாம் மூடிவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.
சுவரை நோக்கி முகம் வைத்து படுத்திருப்பவளின் காதிற்குள் சென்று, “53712392” என்று சொன்னான்.
கண்களைக் கூடத் திறக்காமல், “இதுவரைக்கும் சொன்னதும் புரியலை! இப்போ சொல்றதும் புரியலை. மொத்தத்தில எல்லாம் வேஸ்ட்” என்றாள்.
நன்றாகச் சிரித்தவன், “புரியலைன்னா, புரிய வச்சிடுவேன். நான் இருக்கேன்-ல பாவை! பார்த்துப்பேன்” என்று நம்பிக்கை தந்தான்.
‘நீ மட்டும்தான் இருக்கிறாய்!’ என்று கத்த வேண்டும் போல இருந்தது, பாவைக்கு! ஆனால், அவன்தான் சொல்கிறானே ‘இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று!
புரிந்து கொண்ட பின்தான், தன் மனப் புழுக்கத்தைப் பற்றிச் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டாள்.
அதன்பிறகு,
மெல்ல திரும்பி… அவன் அருகில் சென்று… குப்புறப் படுத்திருந்தவன் முதுகில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள்.
அதன்பிறகு, விடியும் வரை… நிசப்தமான அறை! நிம்மதியான நித்திரை! இவை மட்டுமே!!