ISSAI,IYARKAI & IRUVAR 5.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 5

அடுத்த நாள் காலை

பாவை, பாண்டியன், மதியழகன் மூவரும் பேசியபடியே சப்பிட்டுக் கொண்டிருந்தனர். கச்சேரி பற்றி மதியழகன் பாவையிடம் கேட்டார். அப்பாவும் மகனும் பேசும் நிமிடங்களில், பாவையையும் சேர்த்துக் கொண்டனர்.

இடையிடேயே செண்பகம் வந்து ‘என்ன வேண்டும்?’ என்று பாவையிடம் கேட்டுப் பரிமாறி விட்டுச் சென்றார்.

பாவை… ஒவ்வொருவரின் அன்பையும், அக்கறையையும் அனுபவித்தாள்.

தானே பரிமாறிக் கொண்டது… பேசிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டது… என்றில்லாமல், தன்னுடன் பேசுபவர்கள்… தன்னைக் கவனிப்பவர்கள் என்று மிகுந்த சந்தோசத்துடன் இருந்தாள்.

“நான் கிளம்புறேன்” என்று இருவரிடமும் விடைபெற்ற மதி… சமயலறைச் சென்று, தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்து… வீட்டின் கதவைத் திறந்தார்.

வெளியே நளினியும் பிரவீனும் நின்றிருந்தனர்.

“வாங்க மாப்பிள்ளை” என்று மரியாதையுடன் வரவேற்றதும், பிரவீன் உள்ளே வந்தான்.

“குட் மார்னிங்-ப்பா” என்று சொல்லிக் கொண்டே, நளினியும் உள்ளே வந்தாள்.

அவளுக்கு லேசாகத் தலையசைத்தவர், “சாப்பிட்டுப் போங்க மாப்பிள்ளை” என்றார்.

“அத்தைதான் கூப்பிட்டாங்க” என்று பிரவீன் சொன்னதும், “சரி மாப்பிள்ளை” என்று சொல்லி, மதி கிளம்பினார்.

சற்று நேரத்திற்குப் பின்…

பாண்டியன் பாவையுடன்… நளினியும் பிரவீனும் சேர்ந்து கொண்டனர். மருமகன் வந்திருப்பது தெரிந்ததும்…  செண்பகம் வந்து, வேண்டியதைக் கவனித்துவிட்டு சென்றார்.

பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது, 

“பாண்டியன்” என்று அழைத்தாள், பாவை!

‘அய்யோ’ என்ற அதிர்ச்சியில்… அழைத்தவளைத் தவிர மற்றவர்கள் இருந்தார்கள்!

பாண்டியன்… கூப்பிட்டவளைப் பார்த்தானோ? இல்லையோ?! ஆனால், கூடப் பிறந்தவளைப் பார்த்தான்!

இந்த நொடியில், “பாண்டியன்” என்று மீண்டும் அழைத்து, “அது வேணும்” என்று கை காட்டினாள்.

அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்துவிட்டு, குனிந்து உண்ண ஆரம்பித்தான். பாண்டியனைப் பார்த்து, பிரவீன் சிரித்துக் கொண்டான்.

“அண்ணா-க்கு பாண்டியன்-ன்னு கூப்பிட்டா பிடிக்காது” என்று, நளினி அதிருப்தி தெரிவித்தாள்.

“ம்ம் தெரியும்” என்றாள் பாவை!

“பிடிக்காதுன்னு தெரிஞ்சே ஏன் கூப்பிடுற?” – நளினி.

“எனக்கு பிடிக்கும்-ல? அதான்!” – பாவை.

அதற்கு மேல் ‘என்ன கேட்கவென்று?’ தெரியாததால், நளினி அமைதியாக இருந்தாள்.

“இப்படி சொல்லத் தெரியாம, எத்தனை தடவை அவன்கிட்ட கொட்டு வாங்கியிருக்கிற?” என்று, நளினியிடம் பிரவீன் சொல்லிச் சிரித்தான்.

கணவன் சிரிப்பதைக் கண்டு… நளினி, அண்ணனை முறைத்தாள். ‘இவன் ஏன் இப்படி?’ என்ற அர்த்தங்களுடன், சிவா பிரவீனை முறைத்தான்.

பாவைக்கு, பெரிதாக எதுவும் புரியவில்லை!

“நளினி, பர்ஸ்ட் சாப்பிடு” என்று சொல்லி, சிவா நளினிக்குப் பரிமாறினான். 

விரலில் தெரிந்த மோதிரத்தைப் பார்த்தவள், அவன் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டு… “இது என்ன அண்ணா?” என்று கேட்டாள்.

“அது என்னோட கிப்ட்!” என்று பாவை பதில் சொன்னாள்.

“ஓ!” என்று சொல்லிவிட்டு, நளினி உண்ண ஆரம்பித்தாள்.

“வெட்டிங் அன்னைக்கு… நீ அவ்வளவு சொல்லியும், ஒரு சின்ன செயின் கூட போடா மாட்டேன்-ன்னு சொன்னான்! இப்போ பாரு” என்று பிரவீன் மீண்டும் நளினியிடம் சிவாவை மாட்டிவிட்டான்!

அவ்வளவுதான் நளினி! “ம்மா” என்று கத்திக் கொண்டே சமயலறைச் சென்றாள்.

“ஐயோ” என்று எழுந்த பாண்டியன், “இரு வந்து பேசிக்கிறேன்” என்று பிரவீனைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றான்.

செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்த பாவையிடம், “நீ சாப்பிடு!” என்றான் பிரவீன்!

“நளினி கோபமா போறாங்க! ரெண்டு பேரும் சண்டை போடுவாங்களோ?” என்று பயந்து போய் கேட்டாள்.

“அடிக்கடி சண்டை போடுவாங்க! ஆனா, கொஞ்ச நேரத்தில சமாதானம் ஆகிடுவாங்க! இதெல்லாம் எனக்குப் பழகிடுச்சி” என்றான்.

“ஓ!”

“அவங்க சண்டை போடலனாலும், நாம ஏதாவது பேசி சண்டை வர வச்சிடனும்! சரியா?” என்று தன் விளையாட்டிற்கு, அவளையும் கூட்டுச் சேர்த்தான்.

சிரித்துக் கொண்டாள்.

இருவரு சாப்பிட்டுக் கொண்டே, பேசினார்கள்…

“பாவை! நாளைக்கு பிரீ-யா?”

“ஏன் அண்ணா கேட்கிறீங்க?”

“அம்மா சொன்னாங்க! உனக்கும் சிவாவுக்கும் விருந்து வைக்கணும்-ன்னு”

“அவங்ககிட்ட கேட்கணுமே??” என்றாள்.

“உனக்கு ஓகேவான்னு சொல்லு! அவன் ஒன்னும் சொல்ல மாட்டான். எதுவும் சொன்னாலும், நம்ம இழுத்திட்டுப் போயிடலாம்”

சிரித்தாள்.

“உனக்கு என்னென்ன பிடிக்கும்னு சொல்லு? எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க. உனக்குப் பிடிச்சதை சமைக்கச் சொல்றேன்”

முதல் முறை அல்லவா? இப்படி ஒருவர், அவளது விருப்பமான உணவுகள் பற்றிக் கேட்பது! பதில் சொல்ல முடியாத அளவிற்குச் சந்தோசமாக இருந்தாள்!!

இன்னும் இன்னும் பேசி… இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக வந்த பாண்டியன், மனம்விட்டு மனைவி சிரிப்பதை பார்த்தான். அவனும் மகிழ்ந்தான்.

மேலும், அருகில் சிரித்துக் கொண்டிருக்கும் பிரவீனைப் பார்த்தான். ‘நீ இப்படி சிரிக்க கூடாதே’ என்று நினைத்தவன், மீண்டும் சமயறைக்குள் சென்றான்!

சமயலறையில்…

“ம்மா”

“என்ன கண்ணா?”

“நீங்க ரெண்டு பேரும் சமைக்கிறது நல்லா இருக்காதுன்னு, இந்த வீட்டு மாப்பிள்ளை சொல்றான்” என்று ஒரே நேரத்தில் இருவரிடமும் பிரவீனை மாட்டிவிட்டான்.

கேட்டவுடனே, “ஏன்?? ஏன் மாப்பிள்ளை அப்படிச் சொல்றாரு?” என்று பதற்றமாகச் சொல்லிக் கொண்டே, செண்பகம் சாப்பாட்டு மேசைக்கு விரைந்தார்.

“அதெப்படி பிரவீன் அப்படிச் சொல்லாம்?” என்று கேட்டுக் கொண்டே, நளினியும் விரைந்தாள்.

சாப்பாடு மேசையில்…

பிரவீனின், ஒருபுறம் நளினி… ஒருபுறம் செண்பகம் அமர்ந்து கொண்டிருந்தனர்.

“சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன நல்லா இல்லைன்னு?” – இது மாமியார்!

“அது எப்படி நான் சமைக்கிறதை நல்லா இல்லைன்னு சொல்லலாம்?” – இது மனைவி!!

திரும்பத் திரும்ப இதேதான்! மாற்றி மாற்றி ஒரே வார்த்தை பிரயோகங்கள்!!

“அப்படியெல்லாம் நான் சொல்லலை” என்று ஆரம்பித்து, நிறைய பேசி… அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துவிட்டுத்தான் வேலைக்குச் சென்றான், பிரவீன்!

அதன் பிறகு… “பை அண்ணா! பை பாவை” என்று சிரித்துக் கொண்டே சொல்லி, நளினியும் கிளம்பினாள்.

ஆனால், ‘அண்ணனின் விருப்பங்களுக்கு… பாவை மதிப்பு கொடுக்கவில்லையோ?’ என்ற ஒரு எண்ணம் மனதின் ஓரத்தில் அரிக்க ஆரம்பித்திருந்தது, நளினிக்கு!

அதன் பிறகு… செண்பகம், தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

அந்த வீட்டில்… முதல் நாள் இப்படித்தான் ஆரம்பித்தது, பாவைக்கு!

அதற்கு அடுத்து வந்த நாட்கள்… உறவினர்களின் உபசரிப்புகள்! உற்றார்களுடன் ஊர்சுற்றல்! புதுதம்பதிகளின் பிரத்தியேக பொழுதுகள்! இவை மட்டுமே!!

பத்து நாட்கள் இதே போல்தான் சென்றன!

அதன் பிறகான ஒரு நாளில்

மாலை நேர காஃபியைக் குடித்தபடியே, செண்பகத்திடம் பேசிவிட்டு அவர்களது அறைக்குள் நுழைந்தாள், பாவை! பயணப் பொதிக்குள், உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், பாண்டியன்.

“என்ன பேக் பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே, அறையின் கதவைத் தாழிட்டாள்.

குரல் கேட்ட பின்புதான், அவள் உள்ளே வந்ததை உணர்ந்தவன்… “வா பாவை! உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றவன், உடைகளை எடுப்பதில் மும்முரமாக இருந்தான்!

“என்ன சொல்லணும்?” என்று கேட்டு, அவனது அருகில் வந்து நின்றாள்.

“எனக்கு ஒரு ட்ரிப் இருக்கு ஹனி! அதுக்குத்தான் ரெடி ஆகிறேன்” என்று சொல்லி… கப்போர்டு-லிருந்து ஜாக்கெட்டை எடுத்து, பயணப் பைக்குள் வைத்தான்.

“என்ன திடிர்னு?”

“மேரேஜ் முடிஞ்சி டென் டேய்ஸ் ஆயிடுச்சில பாவை! வேலை பார்க்க வேண்டாமா?” என்று சிரித்தான்.

“எப்போ கிளம்புறீங்க?” என்றவள் குரலில், முதல் பிரிவை நினைத்து வருத்தம் இருந்தது. 

“நாளைக்கு கிளம்புறேன். ஒரு பைவ் டேய்ஸ் கழிச்சி ரிட்டன். ஓகேவா??” என்று கேட்டு, கை உறைகளை எடுத்து வைத்தான்.

“ம்ம்ம்” என்றாள் மனமே இல்லாமல்!

ஓரளவு எடுத்து வைத்ததால், “நீயும் வர்றியா?” என்று கேட்டு, ‘ராக்கிங் சேரி-ல்’ அமர்ந்தான். மேலும், சைகையால் அவளையும் வந்து அமரச் சொன்னான்.

“ட்ரிப்-க்கு வரலை!” என்று மறுத்தவள், “எனக்கு ஒரு முக்கியமான கச்சேரி இருக்கு” என்று சொல்லிவிட்டு, அவன் மடியில் வந்து அமர்ந்தாள்.

வாகாக வாழ்க்கைத் துணைவியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, “எப்போ?” என்று கேட்டபடியே… நாற்காலியில் அசைந்தாடினான்.

“ஒரு பத்து நாள் கழிச்சி” என்றாள், நன்றாக அவன் மார்பில் சரிந்து, கால்களை மடித்து அமர்ந்து கொண்டே!

“அப்போ வரலாமே! டிக்கெட் அரேஞ் பண்ணவா?” என்றான் ஆர்வமாக!

“முழுசா கேளுங்க” என்றாள் அதட்டலாக!

“சரி சொல்லு” என்றான், அவனும் அதட்டலாக!!

“ப்ராக்டிஸ் பண்ணனும்! இது ரொம்ப முக்கியமான கச்சேரி.  எப்பவும் நானும் கௌசியும் பாடுவோம். இது வேற ஒருத்தர் கூட சேர்ந்து பாடப் போறோம். அவர் பெரிய லெஜென்ட்.

தர்பார் பெஸ்டிவல் தெரியுமா? அதே மாதிரி சென்னையில அரேஞ் பண்றாங்க. இதுவரைக்கும் சின்ன சின்ன சபா-லதான் பாடிக்கிட்டு இருந்தோம். இது, எங்க ரெண்டு பேருக்குமே நல்ல சான்ஸ். மிஸ் பண்ணக் கூடாது!”

“சூப்பர் ஹனி! நல்லா ப்ராக்டிஸ் பண்ணு! நல்லா பாடு. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்துச் சொல்லி, வல்லினமாக அணைத்துக் கொண்டான்.

“கௌசியும் நானும்-னா, வேணிம்மா வீட்லதான் ப்ராக்டிஸ் இருக்கும். இப்போ வேற இடத்துக்கு போகணும்” என்றவள் குரல் அவனிடம் ஏதோ எதிர்பார்த்தது!  

“வேற இடம்னா?”

“கிளாசிக்கல் வோக்கலிஸ்ட்-கிட்ட ப்ராக்டிஸ் எடுக்கணும். அதனால, அவங்க ஸ்டூடியோ-க்கு போகணும்”

“ஓ!”

“நான் நினைச்சேன், நீங்க ப்ராக்டிஸ்-க்கு என்னை கூட்டிட்டுப் போவீங்கன்னு” என்று எதிர்பார்த்ததைச் சொன்னாள்.

“ட்ரிப் இல்லைன்னா, கண்டிப்பா கூட்டிட்டுப் போயிருப்பேன் பாவை”

“இப்போ முடியாதா?”

“அதெப்படி பாசிபிள்??” என்றவன், “இந்த பைவ் டேய்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! அதுக்கப்புறம் வந்து கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

“ப்ராக்டிஸ் நாலு நாள்தான்” என்றாள் எரிச்சலாக!

“அதனாலென்ன? நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டுப் போறேன்”

“நீங்க இங்கே இருக்க முடியாதா பாண்டியன்?” என்றாள் ஏக்கமாக!

“அதெப்படி இருக்க முடியும்?”

“நாலு நாளைக்கு அப்புறம் போகலாமே?”

“பாவை! வின்டர் போட்டோஸ் எடுக்கணும். இந்தியால, நவம்பர் டு பிப்ரவரி வின்டர் சீசன். இந்த நாலு நாள் மட்டுமில்ல! பிப்ரவரி வரைக்கும் எனக்கு பிரீகொய்ன்டா ட்ராவல் இருக்கும்.

அப்பத்தான், நெக்ஸ்ட் மார்ச் என்டு-ல நடக்கப் போற நேச்சர் போட்டோகிராபி எக்சிபிட்-க்கு போட்டோஸ் அனுப்ப முடியும்”

“ஓ!”

“நீ, இங்கிருந்து போகப் போறியா? இல்லை, உங்க பாட்டி வீட்டிலருந்து போகப் போறியா?” என்று பேசுபொருளை மாற்றினான்.

“இங்கிருந்துதான்”

“சரி! உன்னை கூட்டிட்டுப் போகிறதுக்கு, டிரைவர் அரேஞ் பண்றேன்”

“ம்ம்”

“வேற எதுவும் வேணும்னா கேளு பாவை? நான் போனதுக்கப்புறம் ஏதும் தேவைன்னா, அம்மாகிட்ட கேளு! சரியா?”

“ம்ம்ம்”

“துணைக்கு யாராவது வேணும்னா, அம்மாவைக் கூட்டிட்டுப் போ”

“அதெல்லாம் வேண்டாம்” என்றவள், “நீங்க வர முடியுமா?” என்று கேட்டாள்.

“நான் இவ்வளவு சொல்றேன் திருப்பியும் அதையே கேட்கிற?” என்று பொறுமை இல்லாத குரலில் கேட்டவன், “ப்ராக்டிஸ் போகாம, என்கூட நீ வருவியா?!” என்று கேட்டான்.

“கண்டிப்பா வர மாட்டேன்”

“அப்படிதான் நானும்!”

“ப்ச்” என்றாள் சலிப்பாக!

“அன்னைக்கு என்னமோ சொன்ன?? நானும் உங்களைப் புரிஞ்சி நடந்துப்பேன்-னு. இப்போ என்னாச்சு?”

“எதுக்கு நாளைக்கு கிளம்பிக்கிட்டு? இன்னைக்கே வேணாலும் கிளம்புங்க” என்று சட்டமாகச் சொல்லி, எழப் போனவள… எக்கிப் பிடித்து, மீண்டும் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“நல்லா கோபம் வருது உனக்கு”

“உங்களுக்கும்தான்”

“நீ என்னை கோபப்படுத்திற”

“அதேதான் நீங்களும் செய்றீங்க” என்று சொன்னதும், சிரித்துக் கொண்டான்.

அதன்பிறகு…

சற்று நேரத்திற்கு… அக்கறை பேச்சுக்கள்! அந்நியோன்ய அளவளாவல்கள்! அசட்டுச் சிரிப்புகள்! ஆத்மார்த்த அணைப்புகள்!  இவை மட்டுமே!!

அதற்கு அடுத்த நாள்

அதிகாலையிலே சிவா கிளம்பிச் சென்றுவிட்டான்.

செண்பகம்தான், பாவைக்குத் துணையாக இருந்தார்.

காலையில் யோகா மற்றும் நடைப் பயிற்சி செய்து வந்ததும் தேனீர் தயார் செய்து தந்தார். குளித்து முடித்து வந்ததும், காலை உணவு பரிமாறினார்.

கிளம்பியதும், ஒரு பெரிய பிளாஸ்க் நிறைய வெண்ணீர், சாப்பிடுவதற்கு எண்ணெய் அதிகமில்லாத உணவு வகைகள்… என்று பாவையின் பாட்டுப் பயிற்சிக்குத் தேவையான எல்லாம் எடுத்துத் தந்து, அவளை வழியனுப்பி வைத்தார்.

இங்கே வழியனுப்புதல் என்பது வாசலில் நின்று அல்ல! கீழே சென்று, கார் ஓட்டுனரிடம் விவரம் சொல்லி… அவளை அனுப்புவது!!

செண்பகம் அவ்வளவு கவனித்திருந்தாலும்… அத்தனைத் தெளிவாகப் பாண்டியன் சொல்லிச் சென்றிருந்தாலும்… ‘கணவன், தன் விருப்பத்தை நிறைவேற்றவில்லை’ என்ற ஒரு ஏமாற்றம் மனதின் ஓரத்தில் அரிக்க ஆரம்பித்தது , பாவைக்கு!

பாவையின்… அந்த ஏமாற்றம், பாண்டியன் அன்பை அளவுகோல் கொண்டு அளந்து பார்க்க ஆரம்பித்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!