ISSAI,IYARKAI & IRUVAR 6.2

ISSAI,IYARKAI & IRUVAR 6.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 6

சிவா வீடு

செண்பகம் வீட்டிற்குள் நுழையும் போது, மதியும் பிரவீனும் பேசிக் கொண்டிருந்தனர்.

“எப்போ வந்தீங்க மாப்பிள்ளை? நீங்க வருவீங்கன்னு தெரியாதே” என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் முன் வந்து நின்றார்.

“இப்போதான் அத்தை” என்றான் பிரவீன்.

“செண்பகம் மாப்பிள்ளைக்கு காஃபி” என்று மதி கூறியதும், “இதோ” என்று சொல்லி, செண்பகம் சமயலறைச் செல்லப் போனார்.

அக்கணத்தில் உள்ளே நுழைந்த சிவாவைப் பார்த்து, “வாடா” என்று சொன்ன பிரவீன், “ஹாய்” என்றான் பாவையைப் பார்த்து!

சிவாவின் மீது இருந்த கோபத்தில்… பிரவீனின் முகமனைக் கவனிக்காமல், வேகமாக அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்.

செண்பகம்… மதி… சிவா… மூன்று பேருக்கும் ஒரு மாதிரி போயிற்று. அதிலும், ‘வீட்டு மாப்பிள்ளையிடம், ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்??’ என்ற அதிருப்தியை, மதியழகன் முகத்தில் வெளிப்படுத்தினார்.

“என்னடா, அப்செட்டா இருக்காளா?” என்று இலகுவாகக் கேட்டு, அவள் நடந்து கொண்ட விதத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டான், பிரவீன்!

“இரு பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, சிவா அறைக்குள் சென்றான்.

சிவா அறையில்

பாண்டியன் உள்ளே நுழைந்ததும், “ஏன்…” என்று ஆரம்பிக்கப் போனவளிடம்…

“பிரவீன் உன்கிட்ட பேசினான்-ல?? நீ ஏன் பேசாம வந்த? கோபம் என்மேலதான! அவன்கிட்ட ஏன் அதைக் காமிக்கிற?”

பாவை முழித்தாள். பின், “சாரி… நான்… கவனிக்கலை” என்று சொல்லிக் கொண்டே, பாவை அறையைவிட்டு வெளியேறி இருந்தாள்.

ஆனால்… சிவா, அறையைவிட்டு வெளியே வரவில்லை.

சிவா அறையின் வெளியே…

“பிரவீன் அண்ணா” என்று அழைத்தபடியே அவன் அருகில் வந்தவள், “சாரி அண்ணா. நான்… நான்… ஏதோ ஒரு” என்று ‘என்ன சொல்லவென்று தெரியாமல்’ தடுமாறினாள்.

“போதும் பாவை” என்ற பிரவீன், “அவன் சொன்னானா, ‘சாரி கேளுன்னு'” என்று கேட்டான்.

“இல்லை நானாதான் கேட்கிறேன்” என்று சொல்லி, தலையைக் குனிந்து கொண்டாள்.

காஃபி கொண்டு வந்த செண்பகமும்… அமர்ந்திருந்த மதியும்… அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பாவை உட்காரு” என்று பிரவீன் சொன்னதும், அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

பின்… தயக்கத்துடன் நிமிர்ந்து, “இல்லைண்ணா… அது… சாரி” என்றாள் மீண்டும்.

“பாவை! ஏதோ அப்செட்-ல இருக்க! எனக்குப் புரியுது. ஸோ, எக்ஸ்பிளேன் பண்ண வேண்டாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்றான்.

கொஞ்சம் புன்னகை புரிந்தாள்.

சற்றுநேரம் பேசிவிட்டு… அவர்கள் கிளம்பியதும், மீண்டும் அறைக்குள் வந்தாள்.

மீண்டும் சிவாவின் அறை

பாவை உள்ளே நுழைந்ததும், “பிரவீன் போயிட்டானா?” என்று பாண்டியன் கேட்டான்.

“ம்ம்” என்றவள், “என்னை ஏன் கூப்பிட வரலை?” என்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தாள், பாவை!

“இப்போ நான்தான உன்னைக் கூட்டிட்டு வந்தேன்”

“நான் சொன்னவுடனே” என்ற வார்த்தையில் அழுத்தம் தந்தவள், “ஏன் கூப்பிட வரலை?” என்று கேட்டு, அவன் அருகில் வந்தமர்ந்தாள்.

“அப்பவே சொல்லிட்டேன் பாவை! எனக்கு டயர்டா இருந்தது. ஸோ, தூங்கிட்டேன்”

“நான் கால் பண்ணதும், நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, நீங்க வரலை” என்றாள் குறையாக!

“பாவை புரிஞ்சிக்கோ! உனக்காகத்தான் சீக்கிரம் வந்தேன்! ஆனா, நீ இப்படிச் சொல்ற?” என்று குறை பட்டுக் கொண்டான்.

“எனக்காகன்னு சொல்றீங்க? அப்போ உங்களுக்கு உடனே என்னை பார்க்கணும்னு தோணலையா??”

‘என்ன பதில் சொல்ல?’ என்றே தெரியவில்லை, பாண்டியனுக்கு! ஆதலால், அமைதியாக இருந்தான்.

“உங்களுக்கு என் மேல அக்கறையே இல்லை” என்றாள் மீண்டும்!

“அக்கறை இல்லையா? இதேதான அப்பவும் சொன்ன? எதை வச்சி அப்படிச் சொல்ற?”

“நீங்க லேட்டா கூப்பிட வந்தீங்க! என்னை வெயிட் பண்ண வச்சீங்க!! அதான்” என்று, அவள் பக்கத்தை மட்டும் நினைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வந்ததுக்கு போய், உன் மேல அக்கறை இல்லைன்னு சொல்லாத!!” என்றான் தடித்தக் குரலில்!

“நீங்க கூப்பிட வருவீங்கன்னு, நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். நீங்க வரலை! அதான் அக்கறை இல்லைன்னு சொல்றேன்” என்று… தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து, அவளும் தடித்தக் குரலில் பேசினாள்.

இதேநேரத்தில்… ‘காஃபி குடிக்கிறீங்களா?’ என்று கேட்க வந்த செண்பகத்தின் காதுகளில்… கதவு லேசாகத் திறந்திருந்தால், பாவையின் பேச்சு விழுந்தது. அப்படியே திரும்பிப் போய்விட்டார்.

இதை அறியாமல் உள்ளே பேச்சு தொடர்ந்தது…

“என்னை வருத்திக்கிட்டுத்தான்… உன்மேல இருக்கிற அக்கறையை நிரூபிக்கணும்னு அவசியமில்லை பாவை” என்று, தன் அன்பின் அறிவியலை அழுத்திச் சொன்னான்.

அமைதியாக இருந்தாள்.

“வேற ஏதாவது கேட்கணுமா? இல்லை பேசணுமா?” என்று அமைதியாகக் கேட்டான்.

‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவள், “சண்டை போடற மாதிரி இருக்கு” என்றாள்.

“இது சண்டையா? ‘வேற ஏதாவது கேட்கணும்னா கேளு-ன்னு’ சொல்றேன். அவ்ளோதான்”

“திருப்பித் திருப்பி அதே பதில்தான் சொல்வீங்க!! எதுக்கு கேட்டுக்கிட்டு?!”

“அதே கேள்வி கேட்டா, அதே பதில்தான் சொல்ல முடியும்”

மீண்டும் அமைதியாகிவிட்டாள்.

நன்றாக நெருங்கி அமர்ந்து, “ஹனி” என அன்பாக அழைத்து, அணைத்துக் கொண்டான், பாண்டியன்!

ஒரு சிறு பிரிவின் பின்னரான முதல் அணைப்பல்லவா?

அவளும் அவனைக் கட்டிக்கொண்டு, “ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றாள். ‘நானும்தான்’ என்று சொல்வது போல், அணைப்பில் ஓர் அழுத்தம் தந்தான்.

வார்த்தையாடல்கள் இல்லாத நேரங்கள்!

அதன்பிறகு, “நீங்க அன்னைக்கு சொன்ன மாதிரி, நமக்குள்ள சண்டை வந்திருச்சோ?” என்று கேட்டாள்.

“முதல நான் சண்டை-ன்னு சொல்லலை! ஹெல்த்தி ஆர்க்கியூமென்ட்ஸ்- ன்னு சொன்னேன்”

“ரெண்டும் ஒண்ணுதான்”

“கிடையாது!! சண்டை போட்டா புரிஞ்சிக்க முடியாது! ஹெல்த்தி ஆர்க்கியூமென்ட்ஸ் இருந்தா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்” என்றான் அழுத்தம் திருத்தமாக!

எதுவம் சொல்லாமல், அமைதியாக இருந்தாள்.

“பேசணும்னா பேசு பாவை” என்றான் மீண்டும் தன்மையான குரலில்!

“வேண்டாம்! பேசினா, சண்டைதான் வரும்! நீங்க, என்னை வெயிட் பண்ண வச்சது கஷ்டமாயிருக்கு!!” என்று சொல்லி, கொஞ்சம் அவனிடமிருந்து விலகினாள்.

அத்தனை சொன்ன பிறகும்… அவளின் வார்த்தை பிரோயகங்களில், அவனும் கொஞ்சம் விலகிக் கொண்டான்!

பின்… அவனிடமிருந்து முழுவதுமாக விலகி, எழுந்து கொண்டாள்.

“பேசிக்கிட்டு இருக்கும்போதே ஏன் போற?” என்று கேட்டான்.

“கச்சேரி வருதில்லையா?! பிராக்டிஸ் பண்ணனும்” என்று சொல்லி… ஜமுக்காலத்தை எடுத்துக் கொண்டு, பால்கனி சென்றுவிட்டாள்.

இனி போய் பேசினாலோ… எடுத்துச் சொன்னாலோ… அவளின் பயிற்சிக்கு இடையூறாக இருக்கும்! ஆதலால், ‘பிறகு பேசிக்கலாம்’ என்று நினைத்தான்!

இருந்தாலும், ‘இப்படி புரிந்து கொள்ள மறுக்கிறாளே?’ என்று சலிப்பு வந்ததில்… பெரு மூச்சி விட்டு எழுந்து, அறையின் வெளியே வந்தான்.

வரவேற்பறை சோஃபாவில் செண்பகம் அமர்ந்திருந்தார்.

மகனைப் பார்த்தார். அவனின் முகத்தில் ஒரு அசௌகாரியம் தெரிந்தது.

“ம்மா, வெளியிலே போயிட்டு வர்றேன்” என்றான் செயற்கையான புன்னைகையுடன், அந்த இயற்கை ரசிகன்!

‘சரி’ என்பது போல், தலையசைத்தார்.

சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்!

சற்று நேரத்தில்…

நளினி வந்திருந்தாள். செண்பகத்திடம் அவள் பேசும் குரல் கேட்டதும், பயிற்சி முடித்து பாவையும் வெளியே வந்தாள்.

‘ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் நைட்டுக்கு சமைக்கிறேன்’ என்று சொல்லி, செண்பகம் சென்றுவிட்டார்.

அதன்பின், ஒரு அரை மணி நேரத்திற்கு, நளினியிடம் பாவை பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு… பாவை எழுந்து, தன் அறைக்குள் சென்றாள். நளினி சமையலறை வந்து, அம்மாவுடன் நின்று கொண்டாள்.

“பேசி முடிச்சாச்சா?” என்று கேட்டார்.

“அவ பேசினா, நான் கேட்டுக்கிட்டு இருந்தேன்” என்றாள் எரிச்சலாக!

“ஏன்? என்னாச்சு?”

“ம்மா! அரை மணிநேரம் மியூசிக் மியூசிக்-ன்னு… அதைப் பத்தி மட்டும்தான் பேசிக்கிட்டு இருந்தா!!”

“ஓ!” என்றார் ஈடுபாடே இல்லாமல்!

“அண்ணனாகிட்டயும் இப்படித்தான் பேசுவாளா?”

“அது எதுக்கு உனக்கு?” என்றார் சட்டென்று!

“என்னம்மா, ஒரு மாதிரி இருக்கீங்க? என்னாச்சு?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை நளினி” என்று மனதின் கலக்கத்தை மறைத்தார்!

“இல்லை ஏதோ இருக்கு! சொல்லுங்க”

“சிவா அவளுக்காகத்தான் ரெஸ்ட்டே எடுக்காம, ட்ராவல் பண்ணி வந்திருக்கான். ஆனா, அதைப் புரிஞ்சிக்காம… ‘சிவாவுக்கு, அவ மேல அக்கறை இல்லைன்னு சொல்றா!’ ” என்றார் கவலையாக!

“என்னது? அக்கறை இல்லையா? எப்படி அவ அப்படிச் சொல்லலாம்?” என்று அண்ணனிற்காகப் பொங்கினாள்.

“அவ, இவ-ன்னு பேசாத நளினி” என்றார் கண்டனமாக!

“ப்ச் என்னை விட சின்னப் பொண்ணு-ம்மா” என்றவள், “நீங்க எதுவும் கேட்கலையோ?” என்று கேட்டாள்.

‘இல்லை’ என்று தலை அசைத்தார்.

“நான் வேணா கேட்கவா?”

“சும்மா இரு! அண்ணன் சமாளிச்சிப்பான்!!”

“சந்தோஷமா இருக்கத்தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கு! சமாளிக்கிறதுக்கு இல்லை” என்றாள் அண்ணனுக்காக!

‘மகள் சொல்வது சரிதானோ’ என்று எண்ணம் வந்தது, செண்பகத்திற்கு!

இருந்தாலும், “இப்போதான கல்யாணம் ஆகியிருக்கு, சரியாயிடும்! விடு நளினி” என்றவர் முகம் இன்னும் சரியாகாமல் இருந்தது!

“என்னம்மா நீங்க இன்னும் ஒருமாதிரி இருக்கீங்க? வேற ஏதும் இருக்கா?”

பிரவீனிடம், பாவை பேசாமல் போனதைப் பற்றிச் சொன்னார்.

“இதுக்கும் அண்ணா ஒண்ணும் சொல்லலையா?”

“சொல்லியிருப்பான்னு நினைக்கிறன்! அதான், வெளியே வந்து மாப்பிள்ளைகிட்ட சாரி கேட்டா”

“உடனே பிரவீன்… ‘எதுக்கு சாரியெல்லாம்-ன்னு!?’ சொல்லியிருப்பானே! எப்பவும் அவன் இப்படித்தான்!” என்று பட்டென்று சொல்லிவிட்டு, அம்மாவைப் பார்த்தாள்.

அவர் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.

“சாரி-ம்மா! சாரி!! சட்டுன்னு மரியாதையை இல்லாம பேசிட்டேன். சாரி”

இன்னும் கோபமாகத்தான் நின்றார்.

“ம்மா! தனியா இருக்கும் போது பேசுற மாதிரியே சில நேரம் வந்திருது. அதான் சாரி சொல்லிட்டேன்-ல! விடுங்க!” என்று சமாளித்தாள்!

கோபம் குறைந்தது. மீண்டும் இரவு உணவிற்கான வேலையில் இறங்கினார்.

“இன்னும் ஏன் ஒருமாதிரி இருக்கீங்க??”

“வெளியே போறப்போ சிவா முகம் ஒருமாதிரி இருந்தது! ரொம்ப மனசு கஷ்டமாயிருச்சி. அதான் அப்பாகிட்ட ஃபோன் பண்ணி சொன்னேன்”

“அப்பாகிட்ட ஏன் சொன்னீங்க? அண்ணா ஹேப்பியா இல்லைன்னா, அப்பா ரொம்பக் கஷ்டப்படுவாங்க” என்று வருத்தப்பட்டாள்.

“ஏன் இப்படி பண்றான்னு தெரியலை?” என்று தன்போக்கில் சொல்லிக் கொண்டே, சமையலைக் கவனிக்க ஆரம்பித்தார்!

“நான் சொல்லவா ஏன்-ன்னு?” என்று கேட்டு, அவர் முன்னே வந்து நின்றாள்.

‘சொல்லு’ என்பது போல் பார்த்தார்.

“நீங்களும் அண்ணனும் கொடுக்கிற இடம்! இது, மேரேஜ் சேரி செலக்ட் பண்றதுல ஆரம்பிச்சது”

“அதுக்கு, ‘அது அவ மொமெண்ட்-ன்னு’ அண்ணன் காரணம் சொல்லிட்டான்!”

“நாங்க மூணு பேரும் சொன்ன இடத்துக்கு வரமாட்டேன்னு சொன்னது??!”

“அதுக்கு அவ காரணம் சொல்லிட்டா! அது முடிஞ்சு போனது. அதைப் பத்தி இனிமே பேசாத!” என்றார் கண்டிப்பான குரலில்!!

“அதான்-ம்மா ஆரம்பம்-ன்னு சொல்றேன்”

புரியாமல் பார்த்தார்.

“நானும் பிரவீனும் சொன்னதைக் கேட்க வேண்டாம்! அட்லீஸ்ட் அண்ணா சொன்னைதையாவது கேட்டிருக்கலாமே!?

அமைதியாக இருந்தார்.

“பாண்டியன்-ன்னு பேர், ரிங்… இதையெல்லாம் அண்ணா ஏன் அக்செப்ட் பண்றான்?”

“அன்னைக்கு இதே இடத்தில வச்சிதான சொன்னான்! ‘விட்டுக்கொடுக்கிறது-ன்னு’!!”

“விட்டுக்கொடுக்கிறது?! அப்போ அண்ணனோட விருப்பம்!” என்றவள், “ஏன் அவ விட்டுக் கொடுக்க மாட்டாளா?” என்று கேட்டாள், அண்ணனின் மீதான அதீத அன்பில்!!

“போதும்! இது தேவையில்லாத பேச்சு! அவன், அவளுக்காக விட்டுக்கொடுக்கிறான். இதுல, நாம சொல்றதுக்கு ஒன்னும் இல்லை”

“அப்போ அக்கறை இல்லைன்னு சொன்னது?

“புரியாம சொல்லியிருப்பா! இப்போதான கல்யாணம் நடந்திருக்கு! அவனைப் புரிஞ்சிக்க, அவளுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். ஆனா, கண்டிப்பா புரிஞ்சிப்பா! நீ கிளம்பு!!” என்றார் முடிவாக!

“ரொம்ப சப்போர்ட் பண்றீங்க!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

என்னதான் மருமகளுக்காக மகளிடம் பேசினாலும், மகனின் அந்தப் புன்னகையை நினைத்து பார்த்தவருக்கு… ‘தான் பார்த்துக் கட்டி வைத்த பெண்ணுடன், மகன் சந்தோஷமாக இல்லையோ?’ என்ற எண்ணம், மனதின் ஓரத்தில் வந்தது, செண்பகத்திற்கு!!

அன்றைய இரவு சிவாவின் அறை!

செண்பகத்திற்குக் கொஞ்சம் உதவி செய்துவிட்டு… அறைக்குள் நுழைந்த பாவைக்கு, கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி… பால்கனிச் சுவற்றில் உட்கார்ந்திருக்கும் கணவன் தெரிந்தான்.

சைகையால் அழைத்தான். அவளும் சென்றாள். அருகில் நின்றாள். ஆனால், கொஞ்சம் ஓய்ந்து போன மனது… அவன் மீது சாய்ந்து கொள்ள கஞ்சத்தனம் செய்தது!!

“ஏதாவது பேசணுமா பாவை?” என்று கேட்டதும், ‘இல்லை’ என்று தலையசைத்தவள், “உங்க ட்ரிப் பத்திச் சொல்லுங்க” என்றாள்.

‘சரி’ என்று சொல்ல ஆரம்பித்தான்.

அவன் சென்ற இடங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாலும்… அவள் மனம் என்னவோ, அவனுக்காகக் காத்திருந்த நிமிடத்திற்கே சென்றது.

எதையோ எதிர்பார்த்து ஏமாற்றத்தை உணர்ந்து… ‘இவனுக்கும் தன் மீது அக்கறை இல்லையோ?’ என்ற குழப்பம், மனதின் ஓரத்தில் வந்தது, பாவைக்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!