ISSAI,IYARKAI & IRUVAR 7.1

ISSAI,IYARKAI & IRUVAR 7.1

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 7

புத்தாண்டு புகைப்படக் கண்காட்சி வேலைகள்… பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் புதுவருட நாட்காட்டிகளுக்கான புகைப்படங்கள் தயார் செய்தல்… பாவையுடன் நேரங்கள் செலவிடுதல்… என்று, ஒரு வாரம் தனக்கென நேரம் ஒதுக்காமல் ஓடிக் கொண்டிருந்தான், பாண்டியன்.

அன்றும்… வேலை நிமித்தமாக… அதிகாலை மூன்று மணியளவிலே பாண்டிச்சேரி கிளம்பிச் சென்றுவிட்டு, மதியம் இரண்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான்.

செண்பகம் கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்தவன், சோஃபாவில் அமர்ந்திருந்த நளினியைப் பார்த்தான்.

“ஹே! நீ என்ன இந்த நேரத்தில இங்க இருக்க?”  என்று தங்கையைப் பார்த்துக் கேட்டான்.

நளினி பதில் ஏதும் சொல்லவில்லை.

“மாப்பிள்ளை கூட ஏதோ சண்டையாம்” என்று செண்பகம் பதில் சொன்னார்.

சிரித்துக் கொண்டே, “பாவை எங்கம்மா?” என்று கேட்டான்.

“சொல்ல மறந்திட்டேன் பாரு” என்றவர், “அவ யாரு…??” என்று யோசித்தவர், “ஆங்! கௌசல்யா, அவ கூட்டிட்டுப் போனா! ஏதோ, கச்சேரிக்குப் புடவை எடுக்கணும்னு” என்றார்.

“ஓ!” 

“சாப்பிட்டியா?” என்று கேட்டார்.

“ம்ம்” என்று சொல்லி, நளினியைப் பார்த்து… “இங்கதான இருப்ப?” என்று கேட்டான்.

“ஈவினிங் வரைக்கும்!” என்றாள்.

‘சரி’ என்பது போல் தலையசைத்துவிட்டு, அவனது அறைக்குள் சென்றான்.

சற்று நேரத்திற்குப் பின்…

செண்பகம் மகளுடன் பேசிக் கொண்டே, வீட்டு வேலைகள் செய்ய வந்தவரிடம்… சுத்தம் செய்ய வேண்டியவற்றைக் கூறிக் கொண்டிருந்தார்.

அக்கணம், மீண்டும் அழைப்பு மணியோசை!

நளினி சென்று கதவைத் திறந்ததும், பாவை உள்ளே நுழைந்தாள்.

“வந்திட்டியா?” என்று கேட்ட செண்பகம், “யார் கொண்டு வந்து விட்டுட்டு போனா?” என்று கேட்டார்.

“கலை அண்ணாவும் கௌசியும்”

“வீட்டுக்கு வர சொல்லியிருக்கலாமே பாவை. கூட்டிட்டுப் போகும் போதும் வரலை. இப்பவும் வரலை. நீ வீட்டுக்குக் கூப்பிட்டிருக்க வேண்டாமா?” என்று குறைபட்டுக் கொண்டார். 

‘என்னை கூடக் கூட்டிட்டுக் கொண்டு போனதே வேணிம்மாவின் வார்த்தைக்காக. நான் சொல்லி வருவார்களா?’ என நினைத்தவள், “அடுத்த தடவை கூப்பிடுறேன் செண்பாம்மா” என்றாள்.

“சரி! கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு” என்று சொன்னதும், அறைக்குள் சென்றாள்.

சிவாவின் அறை…

அறைக்குள் வந்தவள், பாண்டியனைத் தேடினாள். அவன் பால்கனியில் இருப்பது தெரிந்ததும், அங்கே சென்றாள்.

“பாண்டியன்” என்று அழைத்தாள், “வா ஹனி!” என்றான் போன்சாய்களுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவன்.

அதன் பின்… இன்று எடுத்த புடவையின் நிறம், பாடப் போகும் பாடல்… என்று பேச ஆரம்பித்தாள்.

“பாவை ஒரு ரெக்வஸ்ட்” என்று கேட்டான், அவளின் பேச்சின் இடையே!

“ம்ம் சொல்லுங்க”

“கன்டினியூஸா சிக்ஸ் செவன் டேய்ஸ் வொர்க்! நிறைய டென்ஷன்! கொஞ்ச ரிலாக்ஸ் ஆகணும்! அதான் இதைப் பார்த்திட்டு இருக்கேன். ஸோ… “

“நீங்க பாருங்க! நான் பேசிக்கிட்டு இருக்கேன்” என்றாள், அவன் சொன்ன வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாமல்… சொல்லாமல் விட்ட வார்த்தைகளையும் புரியாமல்!

“பாவை! ஐ மென்ட் திஸ் இஸ் மீ-டைம்” என்றான் சுருக்கமாக!

புரியாமல் பார்த்தாள்.

“எனக்கான நேரம்” என்றான் இன்னும் சுருக்கமாக!

“என்ன பிரிச்சு பேசறீங்க?”

“ஹே! நாட் லைக் தேட்!! கொஞ்சம் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுது! ஒரு ஒன் அவர் கொடு! ரிலாக்ஸ் ஆகிட்டு வந்து பேசுறேன்”

“நாம சேர்ந்து இருக்கிற நேரம் முக்கியம் இல்லையா?” என்று கேட்டாள், அவன் கொடுத்த விளக்கத்தை விட்டுவிட்டு!

“முக்கியம்தான்! பட், வீ டைம்(We Time) எவ்ளோ முக்கியமோ, அதே மாதிரி மீ டைமும்(Me Time) முக்கியம்” என்று, தன் அன்பின் அறிவியலைச் சொன்னான்.

சட்டென, அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

‘தன்னைப் புரிந்து கொள்கிறாள்’ என்ற தித்திப்பு அவன் முகத்தில் தெரிந்தது.

அடுத்து ஒரு மணிநேரம் கழித்து…

உள்ளே வந்தான், பாண்டியன்.

கண்கள் மூடி, ‘ராக்கிங் சேரில்’ அமர்ந்து அசைந்தாடிக் கொண்டிருந்தாள், பாவை.

“ஹனி” என்று சொல்லிக் கொண்டு, அவள் முன்னே வந்து நின்றான்.

கண்கள் திறக்காமலே இருந்தாள்.

“பாவை” என்று அழைத்து, அவள் அசைந்தாடுவதை நிறுத்தினான்!

கண் திறந்தவளிடம், ” இப்போ பேசு பாவை?” என்று கேட்டு நின்றான்.

“நீங்க பேசுன்னா பேசணும்… போதும்னா நிறுத்திடணுமா??!” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்லை பாவை!” என்றவன், “போதும்-ன்னு எப்போ சொன்னேன்?” என்று யோசனையாகக் கேட்டான்.

“முத நாள் பால்கனியில உட்கார்ந்து பேசுறப்போ… சொன்னீங்க!?!”

தன் நியாபக அலமாரியிலிருந்து, அன்றைய நிகழ்வுகளை எடுத்துப் பார்த்தான்!

உடனே, “பாவை” என்று அதிர்ச்சியாக அழைத்து, “அன்னைக்கு நான் சாதாரணமா ஸ்டார்ட் பண்ணேன்! பட், அந்த கான்வெர்சேஷன் போட்டி மாதிரி போனது. அது தப்பு! ஸோ, அப்படிச் சொன்னேன்!” என்றான்.

கவனமாகக் கணவனைப் பார்த்தாள்.

“உனக்கும் எனக்கும் பிடிச்ச ஒரு விஷயத்தை, அப்படிப் பேசக் கூடாது. அதனாலதான் ஸ்டாப் பண்ணேன்! ஓகேவா??”

‘சரி… சரியில்லை’ என்பது போன்று தலையை ஆட்டினாள்.

புரிந்து கொள்கிறாள் என்று நிம்மதி அடைவதற்குள், “இப்போ எதுக்கு என்னை அவாய்ட் பண்ணீங்க?” என்று கேட்டாள்.

“அவாய்ட் பண்ணலை பாவை! ரொட்டின் வொர்க் பண்ணிக்கிட்டே இருந்தா… லைஃப் போரிங்-கா இருக்கிற மாதிரி இருக்கும். அப்பப்போ, இந்த மாதிரி ‘மீ டைம்’ எடுத்து ரிலாக்ஸ் பண்ணிக்கணும்” என்று, தன் அன்பின் அறிவியலை விளக்கினான்.

‘கவனிக்கிறாளா? இல்லையா?’ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, அவளது உடல் மொழி இருந்தது.

“இப்போ பேசு! எவ்வளவு நேரம்னாலும் கேட்கிறேன்” என்றான் கரிசனமாக!

“எனக்கு இப்போ பேசத் தோணலை!” என்றாள் கண்கள் மூடிக்கொண்டு!

தன்னை… தன் நிலையை… தனதை… தாரத்திடம் நிரூபிக்க தினமும் திண்டாடுவது போல் உணர்ந்தவன், திரும்பவும் பால்கனியில் தஞ்சம் அடைந்து கொண்டான்.

வார்த்தையாடல்களற்ற நேரங்கள்!!

சற்று நேரம் கழித்து… உள்ளே வந்து, “பாவை” என்று அழைத்தான்.

உடனே கண் திறந்தவள், “சொல்லுங்க” என்றாள்.

“பாவை நெக்ஸ்ட் ஒரு ட்ரிப் போகணும்…” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னே, “என்ன இப்படிச் சொல்றீங்க? எனக்கு ரெண்டு நாள் கழிச்சு கச்சேரி இருக்கு!” என்று துள்ளி எழுந்தாள்.

“என்னை முழுசா சொல்ல விடு”

“சொல்லுங்க”

“கச்சேரி அன்னைக்கு காலையிலே வந்திடுவேன்! உன்னை நான்தான் கூட்டிட்டுப் போவேன். சரியா?” என்று சொன்னான்.

சற்று முன் நடந்ததை மறந்து, “ம்ம்ம்” என்றாள் சந்தோஷமாக!

அவள் சந்தோஷத்தைக் கண்டதும், “எங்கயாவது வெளியே போகலாமா?” என்று கேட்டான்.

“எங்கே?” என்றாள் சட்டென்று!

“எனக்கு ஒரு ஆசை! ஃபால்ஸ் போகணும்னு! அன்னைக்கு சொன்னேனே!! அங்கே இருக்கும் போதுதான், உன்னைப்பத்தி அம்மா சொன்னாங்க! எனக்கு, உன்னை அங்கே கூட்டிட்டுப் போகணும்னு ஆசை! பட், இன்னைக்கு லேட்டாயிடுச்சி”

இரண்டு முறைதான் ‘ஆசை’ என்ற சொல்லைச் சொன்னான். ஆனால், இதயம் முழுவதும் அதுதான் ஆசை என்றபடி இருந்தது, அவன் சொல்லிய விதம்!

“அதெல்லாம் வேண்டாம்! ரெண்டு நாள்ல கச்சேரி இருக்குது” என்றவள், “கோவிலுக்குப் போகலாமா?”என்று கேட்டாள்.

‘எப்படி மறுக்க?’ என்று தெரியாமல், “பாவை” என்று தயங்கியபடி அழைத்தான்.

“இதுவும் முடியாதா?” என்று திரும்பி நடக்கப் போனவளின், தோள்களைப் பிடித்து நிறுத்தினான். பின், “கூட்டிட்டுப் போறேன் ஹனி! ஆனா…” என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே…

“அவ்வளோதான்!! அதோட விடுங்க” என்று சொல்லி, புடவை தேர்ந்தெடுக்கப் போனாள்.

“பாவை, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்” என்று கேட்டு , அவள் பக்கத்தில் போய் நின்றான்.

“ம்ம் சொல்லுங்க! இது ரெண்டுல எதைக் கட்டிக்க-ன்னு சொல்லுங்க?” என்று இரு புடவைகளை, அவன் முன்னே நீட்டினான்.

“இதெல்லாம் உன் இஷ்டம் பாவை” என்று சொல்லியதும், சிரித்துக் கொண்டாள். பின், கடகடவென கிளம்ப ஆரம்பித்தாள்.

அவளின் மகிழ்ச்சியைப் பார்த்தவன், அதற்குமேல் பேசவில்லை. “நீ கிளம்பு! நான் நளினி கூட பேசிட்டு இருக்கேன்” என்று சொல்லி, வெளியே சென்றான்.

செண்பகத்தின் அறை

செண்பகமும் நளினியும் பேசிக் கொண்டிருந்தார்கள்!

உள்ளே வந்த சிவா… சற்று நேரம், அவர்கள் இருவருடனும் பேசினான்.

பின், “ம்மா! பாவை கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிருக்கா” என்று சொன்னான்.

“அண்ணா… நைட் டின்னர் ஏதாவது ரெஸ்ட்டாரென்ட்-ல பிளான் பண்ணு!” – நளினி!

“ஆமா கண்ணா! பாவைக்கும் நல்லா இருக்கும்” – செண்பகம்.

“இல்லை -ம்மா! கச்சேரி வருதில்லையா?? ஸோ, கண்டிப்பா வெளியிலே சாப்பிட மாட்டா!” என்றான் மனைவியைப் புரிந்து!

“அதுவும் சரிதான்” என்றார் மகனைப் புரிந்து!

அக்கணம், “பாண்டியன்” என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் வந்தாள், பாவை!

கரு நீல ஓரங்கள் கொண்ட, அரக்கு நிறத்திலான பட்டுப்புடவை! கரு விழிகளில் கண்மை, அதரங்களில் சாயங்கள் என்று மிதமான ஒப்பனைகள்!!

பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது, நளினியைத் தவிர மற்ற இருவரின் கண்களுக்கு!

அவள் வந்த பின்பும், ஒரு ஐந்து வினாடிகள் பேசினார்கள்.

சில நிமிடங்களுக்குப் பின், கணவன் மனைவி இருவரும் கிளம்பினார்கள்.

அவர்கள் அறையை விட்டுச் சென்றதும்,

“இந்த மாதிரி என்ஜாய்மெண்டெல்லாம் அண்ணா-க்கு கிடையாதா? சும்மா எப்போ பாரு, இங்கே வர மாட்டேன்… அங்கே வர மாட்டேன்னு சொல்றா? நீங்களும் சரின்னு சொல்றீங்க??” என்று நளினி கோபப்பட்டாள்.

அந்த கணத்தில்… நளினியின் பேச்சும் கோபமும் அதிகம் என்றே தோன்றியது, செண்பகத்திற்கு!

“இன்னைக்கும் சில்க் சாரீ கட்டியிருக்கா! அண்ணா ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பாருங்க! அவளோட சாரீ பாருங்க!! கொஞ்சம் கூட மேட்ச் ஆகவேயில்லை! அண்ணா ஏன் ஒண்ணுமே சொல்ல மாட்டிக்கான்??”

“அவனுக்கு வேணும்னா அவன் சொல்லிப்பான்! நீ எதுக்கு இதெல்லாம் சொல்ற?!” என்று கேள்வி கேட்டார்.

ஒரு நிமிடம் அம்மாவின் கேள்வியில், மகள் மௌனமாக இருந்தாள். பின், “வேலை இருக்கு!” என்று சொல்லி, கிளம்பிச் சென்றுவிட்டாள்.

மகளின் பேச்சில் ஒருவித மாறுபாடு தெரிந்தது. எதற்கு இது போன்ற பேச்சுக்கள்?? என்ற கேள்வி வந்தது, அவருக்கு!

பயணத்தின் போது…

மஹிந்திரா தார் மனக்களிப்புடன் கிளம்பியது, வீட்டிலிருந்து!

பாவை, ‘அஷ்டலெட்சுமி கோவிலுக்குப் போகலாம்’ என்றதால், பெசன்ட் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

கோவிலின் முக்கிய அம்சங்கள்… வேணிம்மாவுடன் வந்த நாட்கள்… சிறப்பு பூஜைகள்… அஷ்டலெட்சுமிகளைப் பற்றிய பாடல்கள்…. என்று பேசிக் கொண்டே வந்தாள்.

பாவையின் அசைவுகள் ஒவ்வொன்றும், அவள் உள்ளத்தின் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது!

சில நேரங்கள்… அவனிடம், ‘இது தெரியுமா?’ என்று கேட்பாள். ‘ஐடியா இல்லை’ என்று சொல்வான். அதன்பின், அவளே பேசத் துவங்குவாள்.

கணவனுடன் கோயிலுக்குப் போவதில்… திருவிழா கடையின் பலூனைப் போல் சந்தோஷத்தில் மனம் பறந்து கொண்டிருந்தது!!

சற்று நேரத்தில், கோவில் வந்தது!

“பாவை” என்று பாண்டியன் தயங்கி அழைத்ததும், “நீங்க, இன்னும் கொஞ்சம் முன்னாடி போய் லெஃப்ட் கட் பண்ணுங்க. பார்க்கிங் போட்டுட்டு…” என்று பாவை சொல்லும் போதே, “பாவை! ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு” என்றான் அழுத்தமாக!!

“சொல்லுங்க” என்றாள், இன்னும் ஆனந்தம் குறையாமல்!

“நான் கோவிலுக்குள்ள வர மாட்டேன். நீ போயிட்டு வா!” என்றான் அடங்கிய குரலில்!

“புரியலை”

ஸ்டியரிங்-ல் விரல் கொண்டு தட்டியவன், “எனக்கு இதுலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஸோ, நான் வெளியே வெயிட் பண்றேன். நீ போயிட்டு வா” என்றான் தன்மையாக.

“என்ன இப்படிச் சொல்றீங்க? அதெப்படி நம்பிக்கை இல்லாம…” என்று சொல்லும் போதே,

முதல் நாள், அவனின் பேச்சு நியாபகத்திற்கு வந்தது.  அன்று ‘இப்பவும் ஷாக்காகித்தான் நிக்கிறேன்-ன்னு’ சொன்னது இதற்காகத்தானா?? என்று தெரிந்ததும், பேச்சை நிறுத்திவிட்டாள்.

“பாவை” என்றான், அவள் கை விரல்கள் பிடித்து!

அமைதியாக இருந்தாள்.

“பாவை…” என்றவன் ஆரம்பிக்கும் போதே, “எனக்காக வாங்களேன்??!” என்று எக்கச்சக்க ஏக்கத்துடன் கேட்டாள்.

மௌனமாக இருந்தான்! அது, அவனது மறுப்பு என்று புரிந்தது! திருவிழா முடிந்த கோவில் தெரு போல் மனதில் ஒரு வெறுமை பரவியது, அந்தத் தேன்குரலாளுக்கு!!

“வீட்டுக்குப் போகலாம்” என்றாள் ஏக்கர் கணக்கில் ஏமாற்றத்துடன்!

“வேற எங்கயாவது போகலாமா?” என்று ஆசையாகக் கேட்டான்!

மௌனமாக இருந்தாள். அது அவளது மறுப்பு என்று புரிந்தது. அதற்குமேல் அவளைச் சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை.

மஹிந்திரா தார் மனத்தாங்கலுடன் திரும்பியது, வீட்டிற்கு!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!