ISSAI,IYARKAI & IRUVAR 8.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 8

பாவையும் வேணிம்மாவும்…

மேடை, அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகும் தருணத்தில்…

“அவர் உன்கிட்ட என்ன பேசினாரு?” என்று குனிந்து பாவையிடம் கேட்டார், வேணிம்மா!

” ‘அபங் பாடுவியா-ன்னு?’ கேட்டாங்க”

“ஓ! வேற என்ன சொன்னாரு?”

“ட்ரடிஷன் மட்டுமில்லாம, பியூசனும் சேர்ந்து ட்ரை பண்ணனும்-ன்னு சொன்னாங்க”

“ம்ம்” என்றவர், “அது பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு, மேடையைப் பார்க்க ஆரம்பித்தார்.

“வேணிம்மா” என்று பாவை மெதுவாக அழைத்தாள்.

“என்னம்மா?”

“பாண்டியன் எங்கே?”

“சொல்ல மறந்துட்டேன் பாரு! ‘முக்கியமான வேலை இருக்கு. அதனால கிளம்புறேன். ஆனா, பாவையைக் கூப்பிட வந்திருவேன்’-ன்னு என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனான்”

“ஓ!” என்றதோடு முடித்துக் கொண்டாள்.

இதே நேரத்தில் கிரியும் கௌசியும்

வந்ததில் இருந்து பேசாமல் இருக்கும் மகளைப் பார்த்து, “என்ன கௌசி ஒரு மாதிரி இருக்க?” என்று கிரி கேட்டார்.

“ப்பா… ‘அபங் பாடுவியா? அப்படிப் பாடணும்… இப்படிப் பாடணும்’ ன்னு… அவகிட்ட மட்டும்தான் சொன்னாங்க. என்கிட்ட ஒண்ணும் சொல்லலை” என்றவள் முகம் கடுப்பைக் காட்டியது!

“நீ முகத்தை இப்படி வச்சிக்காத! பாட்டி பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றார் கிரி.

கஷ்டப்பட்டு முகத்தை மாற்றிக் கொண்டாள், கௌசி.

“எல்லாம் அப்பா பார்த்துப்பேன். பேசாம இரு” என்று, அவளின் தோளில் தட்டிக் கொடுத்தார்.

‘இசை உலகில்… தன் மகளை விட, ஒரு அடிகூட பாவை முன்னே சென்றுவிடக் கூடாது’ என்ற மோசமான எண்ணம், கிரிக்கு எப்போது உண்டு! இப்போதும் இன்னும் அதிகமாகியது!!

இங்கே இன்னொன்று! கச்சேரிக்கு வந்திருந்த சங்கரின் பார்வை, அடிக்கடி பாவையைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தது!

அதன் பின்,

சற்று நேரத்திற்கு… இசை! இசைக் கருவிகள்! இசைக் கலைஞர்கள்! இவை மட்டுமே!!

கச்சேரி முடிந்தபின்…

சபாவிலிருந்து வெளிவரும் பார்வையாளர்கள், அவர்களுக்காகக் காத்திருக்கும் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் ஒரு வரிசையாக நின்று கொண்டிருந்தன!

சாலையின் போக்குவரத்தில் நெரிசலில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும், வாகனங்களின் விளக்கு ஒளிகள் கண்களைத் தாக்கியது!

மேலும், ஒலிபான்களின் ஒலிகள் கச்சேரி கேட்டு முடித்து வருபவர்களின் காதுகளை நிறைத்தது!

பெரிய சாலைதான், இருந்தும் இன்று கொஞ்சம் நெருக்கடி நிறைந்து தெரிந்தது!!

அந்தச் சாலையின் ஓரத்தில்… சாபாவின் வெளியே வேணிம்மா-வுடன் பாவை நின்று கொண்டிருந்தாள்.

கொஞ்சம் தள்ளி, கலையும் கௌசியும் பேசிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். வேணிம்மாவைக் கூட்டிச் செல்ல வேண்டி, இவர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள்.

கிரிக்குத் தெரிந்தவர்கள் சிலர், கௌசியைப் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேணிம்மா, திரும்பி பாவையைப் பார்த்தார். அவள் முகம் வாடித் தெரிந்தது.

பாவையின் கையைப் பிடித்து… ஒரு அழுத்தம் கொடுத்து, “தேன்குரலாள் இந்த தேன்பாவை!!” என்றார்.

என்றுமே பாவையின் வாட்டம் போக்கும் வேணிம்மாவின் இந்த வார்த்தைகள், இன்று அவள் வாட்டத்தைப் போக்கவில்லை!!

‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசித்தவருக்கு, அன்றைய அலைபேசி பேச்சு நியாபகத்திற்கு வந்தது.

அக்கணத்தில்… சாலையின் மறுபுறத்தில் இருந்து வாகனப் போக்குவரத்து நெரிசலில் ஊடே வாகாக ஓடி வந்து, சிவா மூச்சி வாங்கிக் கொண்டு நின்றான்.

மேலும், “சாரி பாட்டி! கொஞ்சம் லேட்டாகிடுச்சி” என்றான்.

“பரவால்ல சிவா” என்றவர், “வீட்டுக்குப் போய் குளிச்சிட்டுப் பூஜை பண்ணியிருக்கணும்” என்றார் பாவையைப் பார்த்து!

“ம்ம்” மட்டுமே பாவையிடம்!!

“சரி பாட்டி! நாங்க கிளம்புறோம்” என்ற சிவா, “நீங்க எப்படி போவீங்க?” என்று கேட்டான்.

“கலை இருக்கான்” என்றதும், இருவரும் வேணிம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

இருவரையும் பார்க்கையில் ஏதோ நெருடலாக இருந்தது, வேணிம்மாவிற்கு!  

அந்த நிமிடம், “பாட்டி வாங்க” என கௌசி கூப்பிட்டதும், அவர் கிளம்பினார்.

பாவையும் பாண்டியனும்…

சாலையைக் கடந்து மஹிந்திரா தார் அருகே வந்ததும்…

“லாங் டிரைவ் போணும்னு சொன்னியே! போகலாமா ஹனி?” என்று கேட்டான் நியாபகமாக!

“வீட்டுக்கே போகலாம்” என்றாள் மனம்மாறி!

‘இப்போ என்னாச்சு?’ என்று தெரியாமல், வண்டிக்குள் ஏறி அமர்ந்தான்.

அவளும் ஏறிக்கொண்டாள்.

கார் கிளம்பியது!

நெரிசலைத் தாண்டி வந்தபின்… சாலையின் இடது ஓரத்தில் மெதுவாகக் காரை செலுத்தியபடி பாவையைப் பார்த்தான், பாண்டியன்!

இத்தனை நேரங்கள் கடந்ததால் ஒப்பணைகள் குறைந்த முகம்! மொட்டுக்களாக இருந்த மல்லிகை, இப்போது மலர்ந்திருந்தது! எதிர் வரும் வாகனங்களின் விளக்கொளியால் பட்டுப்புடவை பளபளப்பு!

அவளைப் பார்ப்பதற்கே ரசனையாக இருந்தது, அந்த இயற்கை ரசிகனுக்கு! இல்லை, இக்கணம் இல்லாள் ரசிகன்!!

சட்டென, பாவையின் கரம் பிடித்தான். பாண்டியனைத் திரும்பிப் பார்த்தாள்.

“53712392” என்று சொல்லி, பிடித்திருந்த அவள் கரத்தை… அவன் முகம் நோக்கி கொண்டு போகையில்… “ப்ச்” என்று எரிச்சலுடன் சொல்லி, கையை உருவிக்கொண்டாள்.

உடனே, “சாரி சாரி பாவை” என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

அதுதானே சிவபாண்டியன்!!

சற்று நேரம் சாலையில் மட்டுமே கவனம், இருவருக்கும்!

பின், “ஏதோ பேசணும்னு சொன்னியே? என்ன ஹனி?” என்று கேட்டான்.

“மறந்திருச்சு” என்றாள் கோபமாக!

“இப்போ என்ன கோபம்?”

“அப்படி எதுவும் இல்லை!”

“நீ பாடறப்போ நான் இல்லைன்னு கோபமா இருக்கியா? நான் எங்க போயிருந்தேனா…” என்றவன் காரணம் சொல்லும் போதே, “நான் கேட்டேன்னா??!” என்றாள்

உடனே, காரை அந்தச் சாலையின் ஓரத்தில் நிறுத்தினான்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“கச்சேரி நடக்கிறப்போ, என்னால அங்கே இருக்க முடியலை. ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு. சாரி” என்றான்.

அமைதியாக இருந்தாள்.

“நீ கோபமா இருக்கிற மாதிரி தெரியுது! ஸோ, வீட்டுக்குப் போய் ஏதும் பேசினாலும், கொஞ்சம் அமைதியா பேசணும்! எதுனாலும் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும் இருக்கணும். சரியா?” என்றான்.

“ஒருநேரம் ‘பேசுன்னு’ சொல்வீங்க! ஒருநேரம் ‘போதும்னு’ சொல்வீங்க! இப்போ அமைதியா பேசணும்னு சொல்றீங்க! இன்னும் வேறெதாவது இருக்கா?” என்று கேட்டாள்.

அப்படி ஒரு கோபம் வந்தது, அவனுக்கு. அதன் விளைவாக, “உன்கிட்ட போய்…” என்று ஆரம்பித்தவன், “ச்சே” என்றளவு மட்டும் கோபப்பட்டு… காரைக் கிளப்பினான்.

சிவா வீடு

வீட்டின் கதவு திறந்துதான் இருந்தது.

அன்று போல்தான்! படாரென்று உள்ளே நுழைந்தவள், கோபமாகத் தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மதி, நளினி மற்றும் செண்பகம் வரவேற்பறையில் இருந்தனர். தந்தையும் மகளும் பெங்களூரில் இருந்து திரும்பியிருந்தனர்.

மெதுவாக, சிவா உள்ளே வந்தான்.

“சிவா அவளுக்கு என்னாச்சு?” என்று பதற்றமாகக் கேட்டார், செண்பகம்.

“தெரியலை” என்று சொல்லி, சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

“உள்ளே போய் பாரு” என்று படபடத்தார்.

“போய் பார்த்து…” என்றான் விரக்தியாக!

“என்ன கண்ணா இப்படிப் பேசுற?”

“என்னால முடியலைம்மா” என்று சொல்லி, செண்பகத்தின் நம்பிக்கையைப் பொய்யாக்கினான்… பாவையின் பாண்டியன்!

கதவைத் திறந்து கொண்டு, “எனக்கும்தான் முடியலை” என்று சொல்லிக் கொண்டு வந்து நின்றாள், பாண்டியனின் பாவை!!

இதே நேரத்தில், சென்னை நகர சாலையில்

காரில் போய்க் கொண்டிருக்கும் வேணிம்மாவிற்கு, பாவையைப் பற்றிய எண்ணங்கள்தான்.

அவள் சந்தோஷமாக இல்லையோ? அன்று, எதற்கு ‘கஷ்டமாயிருக்கு’ எனச் சொன்னாள்? அங்கே நன்றாகக் பார்த்துக் கொள்ளவில்லையோ? – இப்படி நிறைய கேள்விகள்!

அவளின் வாடிய முகமே கண்முன் வந்துவந்து போனது.

உடனே, “கலை ” என்று அழைத்தார்.

“என்ன பாட்டி?”

“பாவை வீட்டுக்குக் காரைத் திருப்பு” என்றார்.

“இவ்வளவு நேரம் அங்கே உட்கார்ந்திருக்கீங்க! இன்னும் அலைய வேண்டாம் பாட்டி” என்று மறுத்தாள் கௌசி!

“கலை! பாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியுமா? முடியாதா?” என்று, பதற்றம் மற்றும் கோபம் கலந்த குரலில் கேட்டார்.

“போறேன்… கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லி, காரை பாவை வீட்டை நோக்கி ஓட்டினான், கலை.

இதே நேரத்தில் சிவா வீட்டில்…

“என்ன வேணும் உனக்கு?” என்று எழுந்து கேட்டுக் கொண்டே, பாவை முன் வந்து நின்றான் பாண்டியன்!

சிவபாண்டியனின் அந்தக் கேள்வியில், ‘என்னதான் வேணும் தேன்பாவை?’ என்ற எரிச்சல் மண்டிக்கிடந்தது!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!