Ithayam – 4

Ithayam – 4

அத்தியாயம் –  5

குற்றாலம் வந்ததில் இருந்து அவள் மனம் நிலையில்லாமல் தவித்தது. அவனை நேரில் காண முடியாத வருத்தம் மேலோங்கிட வேறு வழியில்லாமல் அவர்கள் அதிகம் சந்தித்து பேசிய செங்கொன்றை மரத்தை நோக்கி செல்ல துவங்கினாள்.

அவள் அறியாமல் அவளை பின் தொடர்ந்த சக்தியின் மனதிற்குள் அபூர்வாவின் செயல் வியப்பையும் குழப்பத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்தது.

ஒரு மலையின் அடிவாரமான இடத்தில் அழகாக அமைந்திருந்தது. அந்த ஒரு மரத்தின் நிழலில் ஒரு ஊரே ஓய்வெடுக்கலாம். அந்த அளவிற்கு பழமையான இடம் என்றாலும் அவனுக்கும் அவளுக்கும் அதிகம் பிடித்த இடம். 

வெயில் காலம் என்பதால் பூக்கள் பூத்து குலுங்கியது. அடர் சிவப்பும் இல்லாமல் அடர் மஞ்சளும் இல்லாமல் இரண்டும் கலந்த பூக்கள் பூத்திருந்தது. எங்கோ அருவி கொட்டும் சத்தம் தெளிவாக கேட்டது. 

சில்லென்ற சாரலின் ஈரம் காற்றுடன் கலந்து வந்து அவளின் முகத்தில் மோதிச் சென்றது. அந்த இடத்திற்கு வந்ததும் தாயின் மடி சேர்ந்த கன்று போல அவளின் மனதிற்குள் ஒரு பரவசம் ஓடி மறைந்தது.

மெல்ல சருகளில் கால்வைத்து  மரத்தை நெருங்கிய அபூர்வா மரத்தில் எதையோ தேடினாள். அங்கிருந்த மரத்தின் பின்னோடு மறைந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.

அவள் தேடிய சின்னம் கிடைத்துவிட அவளின் உதட்டில் அழகாக புன்னகை அரும்பியது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சக்தி, ‘அக்காவுக்கு இவ்வளவு அழகாக சிரிக்க கூட தெரியுமா’ என்ற சந்தேகம் கூட வந்தது.

அப்போது அங்கே யாரோ வரும் காலடி ஓசை கேட்டதும் திடுக்கிட்ட அபூர்வா அங்கிருந்து செல்ல அவள் அதுவரை எதை பார்த்து கொண்டிருந்தாள் என்ற எண்ணத்துடன் மரத்தின் அருகே சென்றான் சக்தி.

அந்த மரத்தில் பட்டைகளை நீ அந்த இடத்தில் இதயத்தை செதுக்கி இருந்த இடத்தில் ‘ஆதித்யாவின் அபூர்வா’ என்று எழுதபட்டு அதன் கீழே செங்கொன்றை மரத்தின் பூவை அழகாக செதுக்கி வைத்திருந்தனர். அதைக் கண்ட சக்திக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

அப்போது அங்கே கேட்ட காலடி சத்தத்தில் சுதாரித்து திரும்பி, “இங்கே என்ன பண்ற” என்று உறுமினான் ஆதி.

கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வந்தவனுக்கு அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட நண்பனிடம் சொல்லிவிட்டு ஆதி மட்டும் அந்த இடத்திற்கு வந்தான்.

அவனும் அவளும் அதிகம் சந்தித்த இடம் அதுவே. அவள் தான் தன்னைவிட்டு பிரிந்துவிட்டால் அவளின் நினைவுகளோடு சிலநிமிடம் அந்த இடத்திற்கு வந்தான்.

அங்கே சக்தி மரத்தில் எதையோ தேடுவதைக் கண்டு கோபத்தில் கத்தியவனை கண்டு பயப்படாமல் நின்றான் சக்தி. தன்னை நோக்கி வந்த புதியவனைக் கண்டு சிந்தனையுடன் புருவம் சுருக்கி சிந்தித்தபடி நின்றான்.

அதற்குள் அவனை நெருங்கிவிட்ட ஆதி, “இந்த இடத்திற்கு நீ எப்படி வந்த? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற” என்று கேள்விகளை அடுக்கியவனை கண்டவுடன் சக்தியின் மனதில் ஒருவிதமான பரவசம் ஓடி மறைந்தது.

சக்திக்கு தமக்கையை பற்றி சொல்ல மனம் வரவில்லை. என்னதான் இருந்தாலும் அவளுக்குள் சில காயங்கள் இருப்பதை அங்கே வந்த பிறகு உணர்ந்தவன், ‘இவனிடம் என் அக்காவைப் பற்றி சொல்லணுமா’ என்ற எண்ணத்துடன் நிமிர்ந்து புதியவனை பார்வையால் அளந்தான்.

“என்ன பார்வை பதில் சொல்லு” என்று ஆதி மீண்டும் குரலை உயர்த்திட தன்னை சுதாரித்தான் சக்தி.

“இல்ல ஸார் இந்தப்பக்கம் வந்தபோது இந்த மரத்தைப் பார்த்தேன். ரொம்ப ரம்மியமாக இருந்தது. அதன் கொஞ்சநேரம் இங்கே உட்கார்ந்து இருக்கலாம்னு வந்தேன்” என்று உண்மை பாதியும் பொய் பாதியும் சொல்லி அவனை சமாளித்தான்.

அவன் பதட்டமே இல்லாமல் பேசுவதைக் கண்டு, “ஓ.. உனக்கு இந்த மரத்தை ரொம்ப பிடிக்குமோ”என்று இடதுபுருவம் உயர்த்தி அவனை பார்த்தான் ஆதி. 

அந்த கம்பீரம் சக்தியின் மனதை கவர்ந்தது. இள வயதில் சில ஆண்களை பார்க்கும் போது பசங்களுக்கு வரும் குட்டி கனவு. சிலருக்கு பைக் பிடிக்கும். சிலருக்கு சிலரின் செயல்கள் பிடிக்கும். சிலர் ஹீரோ மீது பைத்தியமாக இருப்பார்கள். அந்த மாதிரி சக்திக்கும் ஆதியை முதல் பார்வையில் பிடித்துப் போனது.

“எங்க ஸ்கூலில் நிறைய இருக்கு..” என்றவனின் பேச்சில் இருந்த ஏதோவொன்று ஆதியை அவன் வசம் ஈர்த்தது.

“ஸ்கூல்தான் படிக்கிறாயா?” என்ற கேள்வியுடன் அங்கிருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்த ஆதி சக்தியை இன்னொரு கல்லில் அமர சொல்லி சைகை செய்தான். அவனின் ஒவ்வொரு செயலும் சக்தியின் மனதில் ஹீரோ என்ற இடத்திற்கு சென்றான் ஆதி.

அவனின் ஆளுமையும், கம்பீரமும் கண்டு, ‘பியூச்சரில் நம்மளும் இவரை மாதிரி இருக்கணும்’என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று கேட்டால் அது அவனுக்கே தெரியாது.

“இல்ல சார் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஊரை சுத்த வந்துட்டேன். வீட்டுக்கு போன அம்மா திட்டுவாங்க” என்று கூறியவனை கண்டு பல நாளுக்கு பிறகு இயல்பாக வாய்விட்டு சிரித்தான்.

சக்தி அவனை கேள்வியாக நோக்கிட, “பொண்ணுங்க கொஞ்சநேரம் காணலைன்னு அம்மாங்க தேடுனா அதில் ஒரு நியாயம் இருக்கு. உன்னை எதுக்கு தேடணும்” என்று கிண்டலோடு கேட்டான்

அவனின் கேள்வியில் சக்திக்கு சிரிப்பு வர, “பொண்ணுங்களுக்கு இப்போ அதிக சுதந்திரம் கொடுக்கறாங்க. ஆன பசங்களுக்கு மட்டும் தான் கண்டிசன் அதிகம்” என்று புலம்பியபடி அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்தான்.

“ம்ம் நீ சொல்வதும் ஒரு வழியில் உண்மைன்னு சொல்லலாம்” என்று அவனும் கருத்தை ஒப்புகொண்டான்.

சக்தி அமைதியாக இருக்க, “எத்தனாவது படிக்கிற” என்று கேட்டான் ஆதி.

“இந்த வருஷம் பிளஸ் டூ” என்றான் சக்தி.

“அப்போ ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் இல்ல” என்று ஆதி கேள்வியுடன் புருவம் உயர்த்தினான். 

“இல்ல இன்னும் பத்து நாள் கழிச்சுதான் ஸ்டார்ட் பண்றாங்க” என்றான் புன்னகையுடன்.

“ஓ.. இந்த இடம் உனக்கு எப்படி தெரியும்?” என்றதும் உண்மையை சொல்ல மனம் இல்லாமல், “இங்க பாட்டி தாத்தா வீட்டுக்கு வந்தோம். அதன் ஊரை சுத்தி பார்க்கலாம்னு வந்த இடத்தில் இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சுது” அங்கு வந்த காரணத்தை கூறினான்.

ஆதிக்கு தன் எதிரே இருந்த சக்தியைப் பார்க்கும் போது, ‘அபூர்வா அடிக்கடி சொல்வாளே. தனக்கு ஒரு தம்பி இருக்கிறான்னு. அவனும் இப்படித்தான் இருப்பானோ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அப்போது தான் அவன் மரத்தின் அருகே நின்றது ஞாபகம் வரவே“நான் இங்கே வரும்போது மரத்தில் எதை பார்த்துட்டு இருந்த” என்று ஆதி சரியாக தொடங்கிய இடத்தில் வந்து நிற்க, “ஆதித்யாவின் அபூர்வா என்று எழுதி இருந்தது. அதைதான் பார்த்துட்டு இருந்தேன்.” என்ற சக்தி மறந்தும், ‘அது தன்னுடைய அக்கா பெயர்’ என்று சொல்லவில்லை.

அவன் சொன்னதும் எழுந்து சென்று செதுக்கிய பெயரை மெல்ல வருடியபடி, “இந்த ஆதித்யாவின் அபூர்வா அவள் மட்டும் தான்.” என்றவன் ஏதோ நினைவில் புன்னகைக்க அதிர்ச்சியில் சட்டென்று எழுந்து நின்றுவிட்டான் சக்தி.

“நீங்கதான் ஆதியா” என்று கேட்டதும் மரத்தின் மீது சாய்ந்து ஒரு காலை கீழே ஊன்றி மற்றொரு காலை மரத்தின் மீது வைத்து கைகட்டி நின்று, “நான் தான் ஆதி” என்றவனின் கம்பீரமான தோற்றம் கண்டு அசந்துவிட்டான் சக்தி.

அவனுக்கு ரோஹித் மட்டும் தான்  ஹீரோ. அவரை மாதிரி கம்பீரமாக வேறு யாரையும் அவன் இதுவரை கண்டதில்லை. அப்படி இருக்க ஆதியின் இந்த கம்பீரம் அவனின் மனத்தைக் கவரவே, “அபூர்வா யாரு” என்றான் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவலில்.

“என்னோட காதலி” என்று புன்னகைத்த ஆதி தன்னையும் அறியாமல் சக்தியிடம் பேச தொடங்கினான். 

“இது நாங்க காதலிக்கும் போது செதுக்கியது. இந்த இடத்திற்கு அவ்வளவாக யாரும் வரவே மாட்டாங்க. எனக்கு இந்த மரம் ரொம்ப பிடிக்கும். அதனால் இங்கே அதிகம் சிந்திப்போம். அப்போ அவளின் நினைவாக நான் செதுக்கியது..” என்ற ஆதியின் விழிகளில் தெரிந்த காதலைக் கண்டு வாயடைத்துப் போனான். 

அவன் சொன்னதை எல்லாம் கேட்டதும் சக்திக்கு அபூர்வாவின் தவிப்பு புரிந்துவிட, “அபூர்வா எப்படி இருப்பாங்க” அவன் சொல்லும் அபூர்வா தன் அக்கா என்றாலும் அது உண்மையா என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றே கேட்டான்.

“ஒரு நிமிஷம்” என்று சொல்லி பின்னாடி பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன போட்டோவை எடுத்து சக்தியிடம் கொடுத்தான். அதில் இருந்த அபூர்வாவை கண்டு சக்தி வியந்தான். நீல நிற சுடிதாரில் நெற்றியில் போட்டு வைக்காமல் முஸ்லீம் பொண்ணு போல கழுதை சுற்றி போட்டு இருந்தாள்.

அவளின் பளிங்கு முகமும், இதழ்களில் விரிந்த சிரிப்பும் கண்டு, ‘இப்போ எல்லாம் இவ எப்படி சிரிப்பதே இல்ல’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“ரொம்ப அழகாக இருக்காங்க” என்று சக்தி அவனிடம் போட்டோவை கொடுத்துவிட்டு, “நீங்க இந்த ஊரா”என்று கேட்டான்.

“ம்ம் சொந்த ஊர் இதுதான். இப்போ சென்னையில் இருக்கேன்” என்று கூறவே, “ஓ” என்றான் சக்தி. 

ஒருவரின் முதல் சந்திப்பு இப்படியும் நிகழுமா என்ற சந்தேகம் சக்திக்கு வந்தது என்றால், யாரென்றே தெரியாத ஒருவனிடம் தன் மனதைப் பகிரும் எண்ணம் எனக்கு எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியில் இறங்கினான் ஆதி. அவர்கள் இருவரையும் சந்திக்க வைத்திருப்பது காலம்தானோ என்னவோ?

“நான் உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்று கேட்டான் சக்தி தயக்கத்துடன். ஆதிக்கு சக்தி யாரென்று தெரியாததால் சரியென்று சொல்ல இருவரும் இணைந்து நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டனர். 

அப்போது ஆதிக்கும் அந்த போட்டோ வேண்டும் என்று தோன்றிட, “நான் மொபைலை வீட்டில் வெச்சிட்டு வந்துட்டேன் சக்தி. நான் என்னோட நம்பர் சொல்றேன். என் வாட்ஸ் ஆப்புக்கு இந்த போட்டோவை சென்ட் பண்ணு” என்றதும் சக்தி உற்சாகத்துடன் சரியென்றான்.

ஆதி தன் நம்பரை கொடுக்க, “நான் போட்டோ அனுப்பிட்டேன்” என்று சொன்னவன் அவனிடமிருந்து விடைபெற்று கிளம்பும் போது, “என் நம்பரை செவ் பண்ணி வெச்சுக்கோங்க. நான் போன் பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஆதிக்கு அவனின் செயல்கள் வியப்பைக் கொடுத்தபோது, “சரி சக்தி. பியூச்சரில் என்ன படிக்கணும்னு நினைக்கிற” என்று ஆதி ஆர்வமாக கேட்க, “சிவில் இஞ்சினியரிங்” என்றான்.

“நானும் சிவில் இஞ்சினியரிங் தான் படிச்சேன். இப்போ சென்னையில் வேலையில் இருக்கேன். நீ சென்னை வந்தால் எங்க வீட்டுக்கு வா” என்று சொல்லி தன்னுடைய முகவரியை அவனிடம் கொடுத்தான் ஆதி.

“கண்டிப்பா வருவேன்” என்று குறும்புடன் கண்சிமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றான் சக்தி. அவன் சென்றபிறகு கொஞ்சநேரம் அங்கே இருந்துவிட்டு கிளம்பினான் ஆதி.

சக்தி வீடு திரும்ப அங்கே எல்லோரும் அவனை தேடி காணவில்லை என்ற கோபத்தில் திட்டித் தீர்த்தனர். 

அபூர்வாவிற்கு அவனை பார்க்கவே பாவமாக இருக்க, “ஏன்டா வெளியே போகும்போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல” என்றாள் அபூர்வா.

“நீ என்னிடம் சொல்லிட்டு போகல இல்ல” என்பதோடு அவளின் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைக்க அவளோ விக்கித்து நின்றாள்

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

பாட்டி தாத்தாவிற்கு சாமி கும்பிட்டுவிட்டு ஏதோ நினைவில் பின்னாடி தோட்டத்தில் மெல்ல நடைபயின்ற அபூர்வாவை கண்டவுடன் அவளின் தோழி ஒருத்தி ஓடிவந்தாள்.

“ஹே அபூர்வா நீ எப்போ ஊரில் இருந்து வந்த” என்ற கேள்வியுடன் பின் கேட்டின் வாசல் வழியாக தோட்டத்திற்குள் நுழைந்தாள் ஆர்த்தி.

அவளைக் கண்டு புன்னகைத்தவளோ, “இரண்டு நாள் ஆச்சு” என்றாள் சாதாரணமாக. அதன்பிறகு தோழிகள் இருவரும் சற்றுநேரம் பள்ளி படிப்பை பேசி கொண்டிருந்தனர்.

“இன்னைக்கு பிரவீன் கல்யாணம். ஆதி கூட வந்திருந்தாரு. நான் பார்த்து பேசிட்டுதான் வந்தேன்” என்றதும் அபூர்வா வெடுக்கென்று நிமிர்ந்த அபூர்வாவிற்கு அவனை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 

ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் அவளுக்கு தடையாக அமைந்துவிட மெளனமாக இருந்தாள். ஆர்த்திக்கு நடந்த விஷயம் தெரியும் என்பதால், “எல்லாமே சீக்கிரம் மாறும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். 

ஆதி குற்றாலம் வந்தும் பார்க்க முடியவில்லையே என்ற கவலையில் தன்னறைக்கு சென்ற அபூர்வா அழுதபடியே உறங்கிப் போனாள்.

அதெல்லாம் கண்டும் காணாதது போல கவனித்த சக்திக்கு புரிந்து போனது தன்னுடைய அக்கா ஆதியை காதலிக்கும் விஷயம். இருவரின் இடையே ஏதோவொரு தகராறு இருப்பதால் தான் இவள் இப்படி இருக்கிறாள் என்று விஷயத்தை யூகித்தான். 

அவர்களின் இடையே என்ன பிரச்சனை என்பது தெரியும் வரையில் தான் வாயைத் திறக்க கூடாது என்ற முடிவிற்கு வந்த சக்தி தன் படிப்பின் பக்கம் கவனத்தை திருப்பிவிட்டான்.  மறுவாரமே சக்திக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் அபூர்வாவின் குடும்பம் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!