Ithayam Poguthe–EPI 1

IP-8fabbc56

அத்தியாயம் 1

“ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு

எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு

என் நெஞ்சிலே குத்தாதே முள்ளு

காயா பழமா சொல்லு சொல்லு” என மெல்லியக் குரலில் பாடியபடியே பின்னால் வந்தவனை முறைத்துப் பார்த்தாள் அந்தப் பெண்.

இடுப்பில் கையை வைத்துக் கொண்டு,

“எத்தனை தடவை சொன்னாலும் உன் மரமண்டைக்கு ஏறவே ஏறாதாடா? எனக்கு உன்னைப் பிடிக்கல! பிடிக்கல! பிடிக்கல! இதுக்கு மேல டார்ச்சர் பண்ண வீட்டுல சொல்லி டங்குவார அத்து விட சொல்லிடுவேன்” என மிரட்டியவள், விடுவிடுவென நடந்து போய் விட்டாள்.

காதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் மனம் சுணங்கிப் போனது எழிலரசனுக்கு. கண்களை மூடி முகத்தை வலது கையால் துடைத்தவன், அப்படியே ஏமாற்றத்தையும் துக்கத்தையும் சேர்த்துத் துடைத்துப் போட்டான்.

நண்பர்களை நோக்கி நடைப் போட்டவன் முகத்தில் மீண்டும் புன்னகை மீண்டிருந்தது.

“அப்புறம் மச்சி! கிளி காதல ஏத்துக்கிச்சா?” எனக் கேட்டான் நண்பர்களில் ஒருவன்.

“யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்காடா”

“யோசிச்சுன்னு ஒரு வார்த்தை காதுல விழவே இல்லையே! மரமண்டை, டங்குவாருனுல காத்தோட காதுல வந்து விழுந்துச்சு” என இன்னொருத்தன் நக்கலுடன் சொல்ல,

“அது மரமண்டை இல்லடா என் டுபுக்கு!  வர மண்டே! ஐ மீன் நெக்ஸ்ட் திங்கக் கிழமை முடிவ சொல்றேன்னு சொன்னா” என்றான் இவன்.

“அப்போ டங்குவாரு?” எனக் கேட்டான் எழிலின் உயிர் நண்பன் திருமலை.

“ஐயோ ஐயோ! இதுக்குத்தான் ஒழுங்கா இங்கிலிஸ் கிளாஸ் அட்டேண்ட் பண்ணனும்னு சொல்றது. தங்க்(நாக்கு) வரல, அதாவது முடிவ சொல்ல நாக்கு வரலயாம். டங்குவாரு எங்கயோ இருக்கு, தங்க் வரல எங்கயோ இருக்கு! காதை ரெண்டையும் கடனுக்குக் குடுத்துட்டு என் உசுரப் போட்டு எடுக்கறானுங்க! அனெடுக்கேட்டட் பஃபலோஸ்” என அவர்களை திட்டியவன், பேக்கை எடுத்துக் கொண்டு பஸ் நிறுத்தத்தை நோக்கிக் கிளம்பினான் கோபமாக.

“விடுங்கடா! பாரு கோச்சிக்கிட்டான். எல்லாரும் கைல உள்ள காச எல்லாம் எடுங்கடா! எழிலோட பதினஞ்சாவது லவ் ஃபெயிலியர கொண்டாடனும்” என்றான் திருமலை.

“அதுக்கு நாங்க எதுக்குடா காசு குடுக்கனும்?” என்றார்கள் மற்ற மூவரும் கோரசாக.

“எதுக்கா? அடிக்கடி அவன் வாங்கி தர டீ, வடை, போண்டா, பஜ்ஜின்னு திங்கும் போது இந்த ஏன், எதுக்கு, எப்படிலாம் ஞாபகத்துக்கு வரல இல்ல! இப்போ சொந்தப் பணத்த வெளிய எடுக்கனும்னா வலிக்குதோ? குடுங்கடா!” என ஒரு மிரட்டல் போட்டான்.

சத்தம் போடாமல் மூவரும் நீட்டிய பணத்தை வாங்கிக் கொண்டு குடுகுடுவென எழிலின் பின்னால் ஓடினான் திருமலை.

“மச்சி! மச்சி! ஸ்டாப்”

“என்னடா? நீயும் அவனுங்க கூட சேர்ந்து என்னைக் கலாய்ச்சல்ல! இப்போ என்ன ஹேருக்கு மச்சி, குச்சின்னு என் பின்னால வர! அப்படியே ஓடிப் போய்டு! எனக்கு யாரும் வேணாடா! யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க”

“டேய் வெண்ட்ரு! நில்லுடாங்கறேன்!” என்றவன், எழிலின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

“என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டாடா! ஒரு தடவை இல்ல, மூனு தடவை அழுத்தி சொல்லிட்டா! மூனு மாசமா அவ பின்னால சுத்தி பாட்டு பாடனதுக்கு, தெரு முக்குல நின்னுப் பாடிருந்தா கூட சில்லறை விழுந்துருக்கும் மச்சி! மனசு வலிக்குதுடா! செத்துப் போயிடலாம் போல இருக்குடா மலை”

“எதே!!! அப்படி சாவறதா இருந்தா இந்நேரம் நீ பத்து பதினைஞ்சு தடவை செத்துருக்கனுமேடா!”

“என்னடா லந்தா? மாப்பி, இவ மேல வந்தது பப்பி லவ் இல்லடா! அதையும் தாண்டி புனிதமானதுடா”

“சர்தான்! இதே வசனத்தைத்தான் போன லவ் ஃபெயிலியருக்கும் சொன்ன!”

“உன்னை மாதிரி மாத்தி மாத்திப் பேச நான் என்ன மானங் கெட்டவன்னு நெனைச்சியா? மானஸ்தன்டா! அடுத்த லவ் ஃபெயிலியருக்கும் இதேதான் சொல்வேன்!”

“த்தூ!!!”

“துப்புடா நல்லா துப்பு! பத்தாயிரம் தடவை தோத்துப் போய்தான் தோமஸ் அல்வா எடிசன் பல்பு கண்டுப்புடிச்சாரு! நானும் எத்தனை தடவை தோத்தாலும் விடாம எனக்கானவள கண்டுப்புடிப்பேன்டா.”

“ஹ்ம்ம்! அல்வா, பல்பு! அட அட!!! உன்னைக் கலாய்க்க நீயே எடுத்து குடுக்கறடா மச்சி! ஆசையா நீ அல்வா குடுக்கப் பொண்ணு தேடற, அவளுங்களோ அசால்ட்டா உனக்கு பல்பு குடுத்துடுறாளுங்க! விடு மச்சி! அல்வாவா பல்பான்னு பார்த்துடலாம்”

“சீ போடா!”

“சரி, சரி! கோச்சிக்காதே! வா லவ் ஃப்பெயிலியர் மருந்து வாங்கித் தரேன்.”

“சரக்கா மச்சி?”

“செருப்பு! வந்து தொலைடா”

எழிலரசனும் திருமலையும் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். சிறு வயதில் ஒரே பள்ளியில் ஆரம்பித்த நட்பு இப்பொழுது காலேஜ் வரை தொடர்கிறது. ஒரே ஏரியாவில் வசித்தாலும் வேறு வேறு தெருவில் இருந்தது இவர்களின் வீடு. எழிலரசனுக்கு அம்மா இல்லை. அப்பாவும், அண்ணனும்தான். அவன் திருமணமாகி தனிக் குடித்தனம் இருந்தான். அண்ணன் தம்பி இருவருக்குமே அப்பா என்றால் பயம்தான். பெல்ட்டை எடுத்தால் ரத்தம் பார்க்காமல் வைக்க மாட்டார் அவர். அவ்வளவு கண்டிப்பு. அவர் முன் அப்படியே பம்முவான் இந்த எழிலரசன். நண்பர்கள், கலகலப்பு, சிரிப்பு, கும்மாளம் எல்லாம் வீட்டின் வெளியேதான்! யாரையும் வீட்டுக்கு அழைத்துப் போக மாட்டான். அது அவனது அப்பா தமிழரசனுக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அப்பாவுக்கு பயந்தே நன்றாகப் படிப்பான். இப்பொழுது திருச்சியின் புகழ் பெற்ற எஞ்சினியரிங் கல்லூரியில் இரண்டாவது வருடத்தில் இருந்தான்.

மூச்சு முட்டிப் போகும் போது அவன் இளைப்பாறும் ஒற்றை இடம் நண்பன் திருமலையின் வீடுதான். திருமலைக்கு அம்மா, அப்பா, அக்காவென அழகான குடும்பம். கடந்த வருடம்தான் அவன் அக்கா திருமணமாகி சென்னையில் குடியேறி இருந்தாள்.

நண்பனை அழைத்துக் கொண்டு ஹோட்டல் ஒன்றில் நுழைந்தான் திருமலை.

“அண்ணா, சிக்கன் பிரியாணி ரெண்டு ப்ளேட்” என ஆர்டர் கொடுத்த திருமலை, ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்து இரண்டு தம்ளரில் ஊற்றி வைத்தான்.

அதை எடுத்து மடக் மடக்கென எழில் குடிக்க,

“டேய் பரதேசி! தண்ணிய வயித்துல ரொப்பிடாதடா! பிரியாணிக்கு இடம் வேணும்ல” எனக் காய்ந்தான் மலை.

“அதெல்லாம் சாப்டுடுவேன் மச்சி!”

நண்பனை ஏறிட்டுப் பார்த்தான் திருமலை. ஒல்லியான உடல்வாகு, இவனைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாம் போல ஒரு நிறம், நெடு நெடு வளர்த்தி எனப் பார்க்கவே சுமாராகத்தான் இருப்பான். அவனோடு பழகிப் பார்த்தால் மட்டுமே அவனுடைய நல்ல குணமும், அன்பான மனமும் புரியும்.

“ஏன் மச்சி எந்தப் பொண்ணுக்கும் என்னைப் புடிக்க மாட்டுது?”

“வெளித் தோற்றத்தப் பார்த்து மயங்கற சாதாரண அற்ப பதர்கள லவ் பண்ணா ரிஜேக்ட்தான் பண்ணுவாளுங்க! உன் மனசப் புரிஞ்சு உன்னை கண்ணுக்குக் கண்ணா பார்த்துக்க அற்புதமா ஒருத்தி வருவா மச்சி! அவள கண்டுப்புடிக்கற வரைக்கும் உன் முயற்சில சற்றும் மனம் தளறாதடா!”

“என்னமோ அற்பம், அற்புதம்னு பீலா விடற! பார்ப்போம், பார்ப்போம்!” என்றவன், மேசையில் வைக்கப்பட்ட பிரியாணியைப் பிரித்து மேய்வதில் கவனமானான்.

சாப்பிட்டுக் கொண்டே,

“ண்ணா! சிக்கன் பிரியாணி ஒன்னு பார்சல்” எனக் குரல் கொடுத்தான் எழில்.

“டேய் குரங்கே! ரெண்டு பிரியாணிக்குத்தான் அவனுங்க கிட்ட பிச்சை எடுத்துட்டு வந்திருக்கேன்! இன்னொன்னு எதுக்குடா பார்சல் கேக்கற?”

“அம்மாவுக்கு இந்தக் கடை பிரியாணினா ரொம்பப் புடிக்கும்டா! எடுத்துட்டுப் போய் குடு! காசு நான் தரேன்”

தனக்குக் கூட தோன்றாத ஒன்று இவனுக்கு தோன்றி இருக்கிறதே எனப் புன்னகைத்தான் மலை. இல்லாதவர்களுக்குத்தான் உறவின் அருமைத் தெரியும் போல என நினைத்துக் கொண்டான்.   

தினமும் வராவிட்டாலும் வாரத்தில் மூன்று தினங்களாவது மலையின் வீட்டுக்கு வந்து விடுவான் எழில். தாயில்லாத பிள்ளை என திருமலையின் அம்மா பூர்ணிமாவும் அன்பாய் சமைத்துப் போடுவார். இவர்கள் வீட்டைப் போல மீன், மட்டன், முட்டை, கோழி என அமர்க்களப்படாவிட்டாலும் ருசியாய், மணமாய் இருக்கும் பூர்ணிமாவின் சமையலுக்கு இவன் அடிமை.

“நல்லாருக்குமா! என்ன ருசி!” எனப் பாராட்டியபடியே ருசித்து ரசித்து சாப்பிடுவான்.

வெறும் கையோடு வராமல் உயர்ந்த ரக ஆப்பிள், திராட்சைப் பழம் என வாங்கிக் கொண்டு வருபவனை கடிந்துக் கொள்வார் பூர்ணிமா.

“பொன் வைக்கற இடத்துல பூ வைக்கறேன்மா நானு! அம்மா கையால சாப்பிடக் குடுத்து வைக்கல எனக்கு. உங்க கையால சாப்பிடும் போது இப்படித்தான் எங்கம்மா சமையல் இருந்துருக்குமோன்னு நெனைப்பு வந்து, மனசும் வயிறும் நெறைஞ்சுப் போயிடுது! நான் வேலைக்கு போய்ட்டா உங்களுக்கு தங்க வளையலே வாங்கிப் போடுவேன்மா! ஏதோ இப்போ என்னால முடிஞ்சது இந்தப் பழங்கள்தான். அதையும் வேணாம்னு சொல்லாதீங்கம்மா!” என வாயடைக்க வைத்து விடுவான்.

திருமலையின் குடும்பத்தை விட எழிலின் குடும்பம் வசதியானவர்கள். அவனது தந்தை கவர்மெண்டில் பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார். சமையலுக்கு ஓர் ஆள் வைத்திருந்தார்கள். மற்றபடி துணி துவைப்பது, வீடு சுத்தம் செய்வது எல்லாம் ஆண் மக்கள் இருவரின் வேலை. இப்பொழுது எல்லாமே எழிலின் தலையில்தான். வீட்டைச் சுற்றித் தோட்டமும் இருந்தது, பூச்செடிகள் பழமரங்கள் என. இவனது அம்மா உயிருடன் இருக்கும் போது பராமரித்தது. அவர் இல்லாமல் போயிருந்தாலும், அதை உயிராய் பராமரித்து வருகிறார் தமிழரசன். மகன் இருவரையும் கூட தோட்ட வேலைகளில் பழக்கப்படுத்தி இருந்தார்.

“அப்பா வீட்டுக்கு வந்துட்டாராடா?” எனக் கேட்டான் எழில்.

“இன்னிக்கு இல்லைனா நாளைக்கு வந்துடறதா சொன்னாருடா! பேசும் போது மனுஷனுக்கு குரலே சரியில்ல”

திருமலையின் தந்தை விசுவநாதனுக்கு கூடப் பிறந்தது தங்கை ஒருத்தி மட்டுமே. மகளை, மகன் பார்த்துக் கொள்வான் என அவரை மட்டும் நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள் விசுவநாதனின் பெற்றோர். இவரும் தங்கை மேல் உயிரையே வைத்திருந்தார். பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவளுக்கு சீறும் சிறப்புமாய் இவரே மாப்பிள்ளைப் பார்த்துத் திருமணமும் முடித்து வைத்தார்.

திருமணமாகி குழந்தைப் பிறந்த மறு வருடமே விபத்து ஒன்றில் உயிர் விட்டிருந்தார் தங்கையின் கணவர். இடிந்துப் போனார்கள் வீட்டில் உள்ளவர்கள். பெற்றவர்களோடு கிராமத்தில் வசித்தத் தங்கை, அவர்களின் இறப்புக்குப் பிறகு திருச்சிக்கு அண்ணன் வீட்டோடு வந்து விட்டார். சிறு வயதுதானே பெண்ணுக்கு. பக்கத்து வீட்டில் வசித்த இளைஞனோடு அப்படி இப்படி காதலாகிப் போனது! அந்த வீட்டுக்காரர்கள் பெரிய பிரச்சனை செய்ய, இரவோடு இரவாக காதலனோடு வீட்டை விட்டு ஓடி இருந்தார் இவர். கையோடு தனது இரண்டு வயது குழந்தையையும் கூட்டிப் போய்விட்டார். தெருவே விசுவநாதனின் குடும்பத்தைக் காரித் துப்ப, ஒரே களேபரமாகிப் போனது.

அதன் பிறகே ஜாகையை இப்பொழுது இருக்கும் இடத்துக்கு மாற்றிக் கொண்டுப் போனார்கள் இவர்கள். போன மகராசி மகளையும் கூட்டிப் போனதில் பூர்ணிமாவுக்கு நிம்மதியாகிப் போனது. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்க, இன்னொரு சுமையை சுமக்க அவர் தயாரில்லை. அதோடு கணவன் தங்கை, தங்கை என உயிரை விட, எந்த மனைவிக்குத்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.  

பல வருடங்கள் கழித்து, அந்த தங்கை தன் அண்ணனைப் பார்க்க வேண்டும் என அழைத்திருக்க உடனே விசுவநாதன் கிளம்பிப் போயிருந்தார். தங்கை மேல் வருத்தம் இருந்தாலும், முட்டி நின்ற பாசம் அதை மீறி வருத்தத்தைக் கீழே உதைத்துத் தள்ளி இருந்தது.

இவர்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வர, மலைக்கு தன் தாயிடம் இருந்து தொலைப்பேசியில் அழைப்பு வந்தது.

“ம்மா”

“ஹ்ம்ம் சரி வரேன்”

“அழுகாதீங்க!”

“இப்போ கிளம்பிட்டேன்”

அழைப்பைத் துண்டித்ததும்,

“ஏன்டா அம்மா அழறாங்க?” எனப் பதறினான் எழில்.

“எங்கப்பா, வீட்டுக்கு ஒரு சனியன கூட்டிட்டு வந்திருக்காராம்”

“சனியனா?”

“ஆமாம்டா! நான் உடனே கிளம்பனும் மச்சி”

“வாடா, நானும் வரேன்” என்றவன், கையாட்டி ஆட்டோ ஒன்றை நிறுத்தினான்.

இருவரும் ஏறிக் கொண்டார்கள். திருமலை வாய் மூடி அமர்ந்திருக்க, முகவரியை எழிலே சொன்னான். வீட்டில் போய் இறங்கியதும் குடு குடுவென உள்ளே ஓடினான் மலை. எழில் ஆட்டோவைக் கட் பண்ணி விட்டு, பிரியாணி பொட்டலத்தோடு உள்ளே வந்தான்.

“என்ன நெனைச்சிட்டு இவள கூட்டிட்டு வந்திருக்கீங்க? இங்க என்ன கொட்டிக் கெடக்குதா? வயசுக்கு வந்த புள்ளைய வச்சிப் பார்க்கறது என்ன சுலபமா? படிக்க வச்சி, கட்டிக் குடுத்துன்னு எவ்ளோ கெடக்கு. அதும் ஓடுகாலி பெத்த மக! இவளும் எவன இழுத்துட்டு ஓடுவான்னு நான் நெதம் காவல் இருக்க முடியுமா? என்னால முடியாது! இந்த சனியன திருப்பி அவ அம்மாட்டயே அனுப்பிடுங்க” என அழுதபடியே கத்திக் கொண்டிருந்தார் பூர்ணிமா.

“அப்பா! நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்லப்பா! பாசம் இருக்கலாம், அதுக்குன்னு கண் மூடித்தனமா இருக்கக் கூடாது! அக்கா கல்யாணத்துக்கு வாங்கன கடனே கழுத்து வரைக்கும் நிக்கிது! அதுல இவ வேற சுமையா எதுக்குப்பா?” என எகிறினான் திருமலை.

சத்தமில்லாமல், நடப்பதைப் பார்த்தப்படி நின்றான் எழில். வீட்டின் ஒரு மூலையில் மிக ஒல்லியாய், மாநிறத்தில், பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமைதியாய் தரையில் அமர்ந்திருந்தாள். இவன் பார்ப்பதை உணர்ந்து அவளும் நிமிர்ந்து இவனைப் பார்த்தாள். அவளது பார்வை அவன் கையில் இருந்த பிரியாணி பொட்டலத்தில் நிலைத்தது. மெல்ல எழுந்து, தரைக்கே வலிக்குமோ என்பது போல நடந்து அவன் அருகே வந்தவள்,

“ரொம்ப பசிக்குது! குடேன்” என உணவுக்காக கை நீட்டினாள்.

சோர்ந்து ஒட்டிக் கிடந்த முகத்தில் கண்கள் மட்டும் பெரிதாகத் தெரிந்தன. அப்பெரிய கண்கள் எழிலிடம் யாசகம் கேட்டன. பூர்ணிமாவை அழ வைத்த சனியன் இவள் எனக் கோபமாக வந்திருந்தவனுக்கு, தன்னை அறியாமல் கைகள் உணவைக் கொடுக்க நீண்டிருந்தன.

 

(இதயம் போகும்…..)