Ithayam Poguthe–EPI 10

IP-9165b61d

அத்தியாயம் 10

“மாமா”

படுத்திருந்தவரின் கை விரல்கள் மெல்ல அசைந்தது.

“ஏங்க! உங்க மருமக வந்திருக்கா! கண்ணத் தொறந்துப் பாருங்க” எனும் அழுகுரல் மெல்ல அவரை விழிப்படைய செய்தது.

கண்களை சிரமப்பட்டுத் திறந்தவரின் முன்னே நின்றிருந்தாள் பிரியவதனா. விசுவின் சோர்ந்த முகத்தில் மெலிதாய் ஒரு புன்னகைக் கீற்று.

“நல்லா இருக்கியாமா?”

“நான் நல்லா இருக்கேன் மாமா! நீங்க எப்படி இருக்கீங்க?” என முயன்று சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாள் இவள்.

“எனக்கு என்னமா குறை! உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுக்கனுமேன்றதுதான் என்னைக் கொன்னுக்கிட்டு இருந்துச்சு! இப்போ என் மருமக நல்லவன் ஒருத்தனக் கட்டிக்கிட்டு வெளி நாட்டுல வாழ்றான்னு நெனைக்கறப்போ அப்படி ஒரு நிம்மதியா இருக்கு”

“இப்படி ஹாஸ்பிட்டல்ல படுத்துக் கிடக்கறதுக்குப் பேருதான் நிம்மதியா மாமா?” எனக் கேட்டவளின் தொண்டை அடைத்துக் கொண்டது.

மெலிதாய் புன்னகைத்தார் விசு.

“வயசாகுதேம்மா! கண்டதும் உடம்புக்கு வரத்தான் செய்யும்” என்றவரின் முகம் சோர்வதைக் கண்ட வதனா,

“நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க மாமா! நானும் அத்தையும் வெளிய இருக்கோம்” எனச் சொல்லி அவரை வசதியாகப் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தாள்.

அவளோடு பின்னே வந்தார் பூர்ணிமா.

அந்த தனியார் மருத்துவமனை வார்டின் வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் தமிழ். இவர்களும் அவர் அருகே போய் அமர்ந்தனர்.

“வதனாம்மா! ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க! நான் போய் சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வரேன்! ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க வந்திட்ட! முகமே சோர்ந்து கிடக்கு உனக்கு” எனச் சொல்லி எழுந்துப் போனார் தமிழ்.

நடந்துப் போகும் அவரையேப் பார்த்திருந்தாள் வதனா.

“ரொம்ப நல்ல மனுஷன்ல! அவர் வீட்டுலதான் நீ ஸ்கூல் முடிஞ்சு சுத்திட்டு இருக்கன்னு தெரிஞ்சப்போ, நிம்மதியாத்தான் இருந்தது எனக்கு. தீபாவளி, பொங்கல்னு அவர் உனக்கு உடுப்பு எடுத்துக் குடுக்கறப்போ மக இல்லாத குறையைத் தீர்த்துக்கறாருன்னு நெனைப்பேன்! ஆனா ஜாதி, அந்தஸ்த்து, பணபலம் எல்லாத்தையும் தாண்டி உன்னையே மருமகளாக்கிப்பாருன்னு நான் நெனைச்சுக் கூடப் பார்த்தது இல்ல! நீ ஒரு வைரம்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு! கிட்ட இருந்து பார்த்த என் மகனுக்கு இந்த வைரம் வெறும் கண்ணாடிக் கல்லா தெரிஞ்சிருக்கு! அவனுக்குக் குடுத்து வச்சது அவ்வளவுதான்” எனப் பெருமூச்சு விட்டார் பூர்ணிமா.

விசுவநாதனுக்கு திடீரென மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனக் கேள்விப் பட்டதில் இருந்து திருச்சிக்குப் போக வேண்டும் என ஒரே பிடிவாதம் பிடித்தாள் பிரியவதனா.

“இப்போ என்னால லீவ் எடுக்க முடியாதுடி குட்டி! ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல மாட்டிட்டு இருக்கேன்! அதான் அப்பா இருக்காரே! அவரயும் திருவையும் போய் பார்த்துக்க சொல்றேன்! நாம வீக்கேண்ட்ல போய்ட்டு வரலாம்” என எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் எழில்.

“நீங்க வீக்கேண்ட்ல வாங்க மாமா! எனக்கு மட்டும் இப்போ டிக்கேட் போட்டுக் குடுங்க! எனக்கு பார்க்கனும் அவர” என்றவளுக்கு கண்களில் நீர் வழிந்தது.

“அழாதே! நீ அழுதா நான் சரின்னு சொல்லிடுவேன்! அப்புறம் ப்ளைட்ல நீதான் தனியா கஸ்டப்படனும் குட்டி! சொன்னா கேளு”

“போனும் மாமா! நமக்கு ஒரு துன்பத்துல உதவனவங்க கஸ்டப்படறப்போ நாம துணை நிக்கனும் மாமா! அவரு..எனக்கு வீட்டுல அடைக்கலம் மட்டும் குடுக்கல, பாதுகாப்பு குடுத்துருக்காரு! ஒரு வயசு பொண்ணுக்கு அது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா!!! ப்ளிஸ் மாமா! நான் பத்திரமா போய்ப்பேன்! அனுப்பி விடுங்க!”

“சரியான பிடிவாதம்டி உனக்கு! சரி, டிக்கேட் பார்க்கறேன்!” என அவன் சொல்லவும்தான் கெஞ்சுவதை விட்டாள் இவள்.

விசுவிடம் அவ்வளவு நெருக்கம் இல்லாவிட்டாலும், அவர் மனைவியின் கையால் வயிறார சாப்பிட்டிருக்கிறானே இவன்! அந்த நன்றி உணர்ச்சியால் அதற்கு மேல் மனைவி போவதைத் தடுக்கவில்லை எழில்.

வாந்தி வராமல் இருக்க, கிளம்பும் போதே டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்திருந்தான் எழில். அதோடு புளிப்பு மிட்டாய், கோடாலி மார்க் தைலம் என எல்லாம் பக்காவாகக் கொடுத்து விட்டிருந்தான். கணவனின் கரிசனத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு இப்பொழுது மெல்லியப் புன்னகை வந்தது.

“உங்க மாமாவுக்கு ரொம்ப உடல் உழைப்பு! பிள்ளைங்கள இனி நம்பி பிரயோஜனம் இல்லைன்னு வேலையே கதியா கிடக்காரு! இந்த மலை மும்பாய்ல வேலைப் பார்க்கறான் போல! என்ன நெனைச்சானோ தெரில, இப்போலாம் மாசா மாசம் கணிசமா உங்க மாமா அக்கவுண்டுக்கு பணம் போடறான்! இவருதான் அதைத் தொட்டுப் பார்க்கறது இல்ல! உன் விஷயத்துல அவன் மேல அவ்வளவு கோபம் இவருக்கு. இதெல்லாம் மனசுல போட்டு உளப்பிட்டே இருந்திருப்பாருன்னு நெனைக்கிறேன். இதுல நான் வேற தினம் பிள்ளைங்கள நெனைச்சி புலம்புவனா, மனுஷனுக்கு ஒன்னும் முடியல போல! வேலை இடத்துல திடீர்னு அட்டாக் வரவும் உங்க மாமா கம்பெனி இன்சுரன்ஸ் கவர் பண்ணிடும்னு இங்க கொண்டு வந்து சேர்த்துட்டாங்க! பைபாஸ் அது இதுன்னு பெருசா வராம ஆஞ்சியோவோட போச்சேன்னு ஒரு பக்கம் நிம்மதியா இருக்கு. இன்னொரு பக்கம் இப்படி முடியாம இருந்திருக்காரு, அது கூட தெரியாம என்ன பொழப்பு நடத்திருக்கேன்னு குத்த உணர்ச்சியா இருக்கு. இவர் நல்லபடி தேறி வீட்டுக்கு வந்திட்டா போதும்! இனி வேலைக்கும் போக வேண்டா ஒரு மண்ணும் பார்க்க வேண்டா! பெத்தக் கடமைக்கு இவங்க ரெண்டு பேரும் செய்யறத செய்யட்டும்! இல்லைன்னா இருக்கற சேமிப்ப வச்சி எங்க ரெண்டு பேர் வயித்த நாங்களே கழுவிப்போம்! எனக்கு உங்க மாமா உசுரோட இருந்தா போதும்டியம்மா” எனச் சொல்லிக் கண் கலங்கியவரை ஆறுதலாகக் கட்டிக் கொண்டாள் வதனா.

“மாமாவோட நல்ல மனசுக்கு, ரொம்ப காலம் உங்க கூட சந்தோஷமா இருப்பாரு அத்தை! நீங்கதான் தைரியமா இருந்து அவரப் பார்த்துக்கனும்!”

சரியெனத் தலையாட்டியவர்,

“சிங்கப்பூருல இருந்து நீ வந்துட்ட! இங்கிட்டு இருக்க சென்னைல இருந்து என் மகக்காரி இன்னும் வரல பாரேன்! இவனுக்கும் மேசேஜ் போட்டிருக்கேன்! வரான்னா இல்லையா தெரில போ” எனப் பிள்ளைகள் மேல் மனத்தாங்கல் இருந்தாலும் பெற்ற மனம் அடித்துக் கொண்டது.      

“கண்டிப்பா வருவாங்க அத்தை! நீங்க கவலைப் படாம இருங்க!”

தமிழ் உணவோடு வந்திருக்க, இரு பெண்களும் அங்கேயே அமர்ந்து அமைதியாக உண்டனர். பூர்ணிமா களைத்துப் போய் தெரிய,

“நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கத்தை! நான் மாமாவ பார்த்துக்கறேன்” எனச் சொல்லி தமிழோடு அவரை அனுப்பி வைத்தாள் வதனா.

அவர்கள் கிளம்பியதும் அறையின் உள்ளே வந்தவள், உறங்கும் தன் தாய் மாமனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தாய் மாமன் என்பவன் தாய்க்கும் மேலான உறவாமே!!! வதனாவை இவர் பாசமாய் கொஞ்சியது இல்லை, சீர் சினத்தி அள்ளிக் கொடுத்து முறை செய்தது இல்லை! ஆனால் பரிவாய் ஒரு பார்வைப் பார்ப்பார்! மாமா நான் இருக்கிறேன் உனக்கு என்பது போல அந்தப் பார்வை கனிவாய் இவளைத் தொட்டுச் செல்லும். ஆரம்பத்தில் மலையும், பூர்ணிமாவும் கொட்டிய கடுஞ் சொற்களைத் தாங்கி நிற்க அந்தப் பார்வையே பலமாய் இருந்தது இவளுக்கு.

தனது பதினைந்தாவது வயதில்தான் விசுவை முதன் முதலாகப் பார்த்தாள் பிரியவதனா. குழந்தைப் பிராயத்தில் இவர்களோடு இருந்தது எல்லாம் ஞாபகத்தில் இல்லை இவளுக்கு.

தான் அழைத்ததுமே வந்து விட்ட அண்ணனைப் பார்த்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி இவளது அம்மாவுக்கு. நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னையின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைக் கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் பிரியவதனா.

“அண்ணா! என்ன ஏதுன்னு கேக்காம எனக்கு நீ ஒரு உதவி செய்யனும்” என இவள் அம்மா சொல்ல,

“கண்டிப்பா செய்யறேன்மா!” என வாக்குக் கொடுத்தவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் இவள்.

பிரிந்து இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பைப் பார்த்தவளுக்கு மனது நெகிழ்ந்துதான் போனது.

“இவள நீ கூட்டிட்டுப் போய்டு! இனி இவளுக்கு அம்மா அப்பா எல்லாமே நீதான்! படிக்க வைப்பியோ, கல்யாணம் பண்ணி வைப்பியோ, கருமாதி பண்ணுவியோ! எதுனாலும் நீயே பார்த்துக்க! அம்மான்னு என்னைத் தேடி இனி யாரும் வர வேண்டா!”

இவளது அன்னையின் பேச்சில் அதிர்ந்துப் போய் வதனாவைப் பார்த்தார் விசு. உள்ளத்தில் பொங்கி வழிந்த துக்கத்தை முகத்தில் காட்டாமல், அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் வதனா.

“ஏன்டாம்மா…” எனக் கேட்க வந்தவரை கை நீட்டித் தடுத்த இவளது தாய்,

“என்ன ஏதுன்னு கேக்காத ப்ளிஸ்! நீ கூப்டுக்கலனா ஆதரவு இல்லாதவங்க தங்கற இல்லம் மாதிரி எதுலயாச்சும் சேர்த்து விட்டிருண்ணா! இனி வாழ போற நாட்களையாச்சும் நான் நிம்மதியா வாழனும்! ப்ளிஸ்ணா!” என்றார்.

தலை தன்னாலேயே சரியென ஆடியது விசுவுக்கு.

“வது! ரெடி பண்ணி வச்சிருக்கற உன் பேக்க எடுத்துட்டுக் கிளம்பு, போ! இனி இந்த மாமாதான் உனக்கு எல்லாம்” எனச் சொன்னவர் கலங்கியக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அதன் பிறகு அன்னை என்பவரை இவள் பார்க்கவே இல்லை. திருமணத்துக்கு விசு போனில் அழைத்தும் கூட அவர் வரவில்லை. விரக்தியாய் உதடுகள் வளைய, அம்மாவை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் பாராங்கல்லாய் அழுத்தும் வலி மீண்டும் வர கைக் கொண்டு நீவிக் கொண்டாள் பிரியவதனா.

இதையே அடிக்கடி நினைத்தால் மாமாவைப் போல தனக்கும் ஹார்ட் அட்டாக் வந்து விடுமோ எனப் பயந்து வந்தது இவளுக்கு. தனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் கணவனோடு பல காலம் ஆசையாய், ஆனந்தமாய் வாழ வேண்டும் எனும் ஆசை நெஞ்சு முட்ட இருக்க, பழைய கசடையெல்லாம் தூக்கி கடாசி விடுவதே தன் மன நிம்மதிக்கும், உடல் நலத்திற்கும் நல்லது என முடிவெடுத்தவள், மனதைத் திசைத் திருப்ப போனை கையில் எடுத்தாள்.

வாட்ஸாப்பைத் திறந்தவள்,

“மாமா” என எழிலுக்கு மேசேஜ் போட்டாள்.

அங்கிருந்து உடனே பதில் வந்தது. முகத்தில் டொமெட்டோ சாஸ் ஊற்றி வைத்திருக்கும் கோப எமோஜிகள் வரிசையாய் பறந்து வந்தன. எழிலரசன் கோபத்தில் இருக்கிறாராம்.

இவளுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னவாம்?” என அனுப்பி வைத்தாள்.

“அதான் புருஷன் ஒருத்தன் இருக்கான்ற அக்கறை இல்லாம கெளம்பிப் போய்ட்டல்ல! அப்புறம் என்ன மாமா, கோமா வேண்டிக் கிடக்கு?”

“கோபமா மாமா?”

“இல்ல! நல்ல குளுகுளுன்னு இருக்கேன்! அப்படியே ஓடிப் போய்டு! இங்க ஒருத்தன் எப்படி போனியோ, வாந்தி கீந்தி வந்துச்சோ, எப்படி சமாளிச்சியோன்னு ஒரே டென்ஷன்ல இருப்பான்னு கவலை இருந்துச்சா உனக்கு! ப்ளைட் இறங்கிட்டன்னு ஒரு மேஜேச் போடல!”

“இல்ல! மாமா சொல்லிக்கறேன்னு சொன்னாரு!”

“அவரையா நான் கல்யாணம் பண்ணேன்? உன்னைத்தானடி கட்டிக்கிட்டேன்!” என இன்னும் காட்டமாக வந்தது பதில்.

“சாரி மாமா”

“உன் சாரிய தூக்கி சாக்கடையில போடு”

“முடியாதே மாமா!”

“எதே!!! என்ன முடியாது?”

“சாரிய தூக்கி சாக்கடையில போட முடியாது! அப்புறம் வெறும் பாவாடை ப்ளவுஸோட நிக்கனும்! எல்லாரும் பார்ப்பாங்க! பப்பி ஷேமா இருக்கும்!”  

“ஏன்டி!!! போன்ல அடிக்க முடியாதுன்னு மொக்கை காமெடி பண்றியா??? நேர்ல வந்தேன், வெடக் வெடக்குன்னு டைப் பண்ற அந்த வெண்டைக்காய் விரல புடிச்சு கடிச்சு வச்சிடுவேன்”

“தைரியமான ஆளா இருந்தா, மீசை வச்ச ஆண் சிங்கமா இருந்தா, வேட்டி கட்டனா வீரனா இருந்தா, நேர்ல வாங்களேன் பார்க்கலாம்”

“அதாவது என்னை உசுப்பேத்தி இன்னொரு டிக்கேட் செலவ இழுத்து விடப் பார்க்கற! திரும்பி வரப்ப உனக்கு ஆயா வேலைப் பார்க்க ஆள் தேடற!!!! சிக்க மாட்டேன்டி! எப்படி போனியோ அப்படியே தனியா வா!”

“யோ, போயா போயா! பம்பரக்கட்டை மண்டையா!!!”

“எதே!!!!!!! என்னடி மரியாதை இப்படி தேயுது!!!!”

“பதினஞ்சு வயசு புள்ளைக்கு மாங்கா மரத்தடில வச்சி அல்வா குடுத்த ஆளுக்கெல்லாம் இந்த மரியாதை போதும்!”  

“வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்! அது வந்து..வீட்டுல அன்னைக்கு அந்த ஸ்வீட்தான்டி இருந்துச்சு!! அதுக்கெல்லாம் இப்படி அர்த்தம் எடுத்துப்பியா நீ????”

“தமிழ் நாட்டுல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு அல்வா குடுத்தான்னா, அதுக்கு இது மட்டும்தான் அர்த்தம் மாமோய்!!மைனர் பொண்ணுக்கு அல்வா குடுத்த மல்லு வேட்டி மைனர் ஒழிக! ஒழிக!!!

மேசேஜை நிறுத்தி விட்டு உடனே வாட்ஸாப் காலில் வந்தான் எழில். சிரிப்புடன் அதை சைலண்டில் போட்டவள், அழைப்பை ஏற்கவில்லை. இரண்டு முறை அழைத்துப் பார்த்தவன், மீண்டும் மேசேஜ் செய்தான்.

“பிரியவதனா, நேர்ல வந்தேன் பிரிச்சு மேஞ்சிருவேன்டி!!!!!!போன் போட்டா எடுக்க மாட்டியா?”

“மாட்டேன்!”

“கூட இருக்கற வரைக்கும் பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருந்துட்டு, கடல் கடந்து போனதும் யானை மாதிரி கும்முறியா என்னை? ஆத்தாடி ஆத்தா!!!! வாய பாரேன் என் பொண்டாட்டிக்கு!!!”

“நல்லா பாருங்களேன்!” என அனுப்பியவள், உதட்டை சுளித்து ஒரு செல்பி எடுத்து அதையும் அனுப்பி வைத்தாள்.

மீண்டும் அழைப்பு வந்தது அவனிடமிருந்து! எடுக்கவில்லை இவள்.

“அடியே யவனா!!!!! என்னடி இப்படிலாம் செய்ற!!!!! இவளோ க்ளோஸ் அப்ல லிப்ஸ் போட்டோலாம் அனுப்பனா, நான் வேலை வெட்டிப் பார்க்கறதா இல்லையாடி இப்போ!!!!!!” என மேசேஜ் வந்தது எழிலிடமிருந்து.

“வேலைய பார்ப்பீங்களோ, வெட்டியா நிப்பீங்களோ!!! அது உங்க ப்ராப்ளம்! இப்போ நான் வர்ட்டா!!!! பாய் மாமா” என அனுப்பியவள், சிரிக்கும் எமோஜிகளை அதனுடன் சேர்த்து அள்ளி அனுப்பி விட்டு புன்னகையுடன் விசுவின் புறம் திரும்பினாள்.

விழித்திருந்தவர் இவளைத்தான் பார்த்திருந்தார்.

“சந்தோஷமா இருக்கியா கண்ணு நீ?”

“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா! எழில் மாமா என்னைப் பூப்போல வச்சிப் பார்த்துக்கறாரு! என்னைப் பத்தி இனிமே உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டா மாமா!” என அவரின் கைப்பற்றி ஆறுதலாய் சொன்னாள் இவள்.

“அது போதும் கண்ணு எனக்கு” என்றவருக்கு கண்ணில் நீர் வழிந்தது.

அதை துடைத்து விட்டவள், ஆறுதலாய் அவர் கைப்பற்றியபடி வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தாள்.

மூன்று நாட்களில் விசுவை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்களோடே சுற்றிக் கொண்டிருந்தவள், அடிக்கடி தமிழையும் வந்துப் பார்த்துக் கொண்டாள். மருத்துவமனை வீடு என மிகவும் களைத்துப் போயிருந்தாள் வதனா. அவளுக்கிருந்த ஒரே ரிலேக்சேஷன் கணவனுக்கு மேசேஜ் போட்டு வம்பிழுப்பதுதான். மேசேஜ் வழியாய் வாயடித்தவளுக்கு, அவன் அழைத்தால் மட்டும் தயக்கமும் வெட்கமும் வந்து ஒட்டிக் கொள்ளும். ஆகவே அழைப்பை ஏற்காமல் புறக்கணித்து மேசேஜ் செய்வதை மட்டும் தொடந்தாள்.

அங்கிருந்த எழிலோ மனைவியின் புதிய பரிமாணத்தில் பித்துப் பிடித்துப் போயிருந்தான். அவளது கிண்டல், கேலி, கடலைப் போடும் பாங்கு என சொக்கிப் போயிருந்தான். பேசாமல், வீடியோ கால் வராமல் கொலையாய் கொன்றுக் கொண்டிருக்கும் மனைவியின் மேல் கொலைக் காண்டில் இருந்தான். வேலை வேறு வைத்து செய்ய, அவனால் சொன்னது போல அந்த வார இறுதியில் திருச்சிப் போகவும் முடியவில்லை.

விசு வீடு வந்திருக்க, அவரது மகளும் சென்னையில் இருந்து வந்திருக்க, மனைவியைத் திரும்பி வரும் படி மேசேஜ் போட்டுக் கொண்டே இருந்தான். தமிழுடன் இன்னும் சில நாட்கள் இருந்து விட்டு வருவதாக பதில் வர, மோகம், கோபம், தாபம் என திண்டாடிக் கொண்டிருந்தான் எழிலரசன். வீட்டில் தனித்து இருந்தவனுக்கு ‘ஏதோ மோகம், ஏதோ தாகம்’ பாடல்தான் துணையாக இருந்தது. இவன் ஒருவனாலேயே பாட்டு போட்ட யூடியூப் சேனல்காரன் லம்ப்பாக சம்பாதித்திருப்பான்.

தமிழிடம் செல்லம் கொஞ்சி, திருவுடனும் அவன் மனைவியுடனும் கதையடித்து, சின்னவனோடு ஓடிப் பிடித்து விளையாடி, மாமா அத்தையை அடிக்கடிப் போய்ப் பார்த்து என நாட்கள் பறந்தோட, ஒரு வழியாக சிங்கப்பூர் கிளம்பி வந்தாள் பிரியவதனா. இவளுக்காக லக்கேஜ் பேக்குடன் சாங்கி விமான நிலையத்தில் காத்திருந்தான் எழிலரசன்.

அவனைப் பார்த்ததும் தான் போனில் செய்த சேஷ்டைகள் நினைவு வர, வெட்கத்தில் தலைக் குனிந்துக் கொண்டாள் வதனா.

“ஹ்க்கும்” எனத் தொண்டையைக் கணைத்தான் கணவன்.

மென்னகையுடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் இவள்.

அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டவன்,

“ஒரு வழியா வந்து சேர்ந்தியா!!! ரொம்ப சந்தோஷம்! இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு ப்ளைட்! நீ என்ன செய்யற, இப்படியே டாக்சி புடிச்சு வீட்டுக்குப் போய் சேரு! நான் தனிமைல உக்கார்ந்திருந்த மாதிரி நீயும் வீட்டைக் காவல் காத்திட்டு உக்காந்திரு! நான் தாய்லண்ட்ல கிளையண்ட் மீட்டிங்லாம் முடிச்சிட்டு, அழகிய தாய்மகள்(தமிழ் மகள் போல தாய்லண்ட் பொண்ணுனால தாய்மகளாம்!! நோட் பண்ணிக்கோங்க டியர்ஸ்) கொடுக்கும் சாண்ட்விச் மசாஜ்லாம் போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு வரேன்! பழிக்கு பழி, ரத்தத்துக்கு ரத்தம்!!!! வர்ட்டா கண்ணு” என்றான்.

அவன் கையில் வைத்திருந்த லக்கேஜ் பேக்கை பார்த்தவளுக்கு முகம் அப்படியே விழுந்து விட்டது. அவன் இறுக்கிப் பிடித்தக் கரத்தை விடுவித்துக் கொண்டவள், அதைத் தேய்த்துக் கொண்டே,

“பத்திரமா போய்ட்டு வாங்க மாமா!” என உள்ளேப் போன குரலில் சொன்னாள்.

இது போல அடிக்கடி வெளி நாடுகளுக்கு வேலை விஷயமாகப் போக வேண்டி வரும் என சொல்லித்தான் வைத்திருந்தான். திருமணமாகி இதுதான் அவனது முதல் பயணம். ஆவலாய் கணவனைக் காண வந்தவள், அப்படியே அடங்கிப் போனாள்.

“வீட்டு சாவி உன் கிட்ட ஒரு செட் இருக்குல்ல?”

“ஹ்ம்ம்”

“பயமா இருந்தா, உங்கத்தை வீட்டுக்குப் போயிடு!”

“ஹ்ம்ம்”

“சிங்க்ல ஓன் வீக் தேய்க்காத பாத்திரம்லாம் கிடக்கு! வீட்ட நான் கூட்டவே இல்ல! துணிலாம் துவைக்காம கூடைல இருக்கு! எல்லாத்தையும் செஞ்சிடு” என்றவனை முறைத்துப் பார்த்தாள் வதனா.

“என்னடி முறைப்பு!!! என்ன முறைப்புங்கறேன்????? ப்ளைட்டுக்கு இன்னும் ஓன் ஹவர் இருக்கு! இப்பவே வீட்டுக்கு கிளம்பறியா இல்லை என் கூட காபி கீபி குடிக்க வரியா?” எனக் கேட்டவன், அவளைப் பதில் சொல்லக் கூட விடாமல் கைப் பிடித்து காபி ஷாப் பக்கம் அழைத்துப் போனான்.

அவள் அமைதியாக காபி பருக, இவன் உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தான். இன்னும் நேரம் இருக்க அவளை அழைத்துக் கொண்டு ஜீவல் என அழைக்கப்படும் இண்டோர் நீர்வீழ்ச்சி பார்க்கப் போனான். பச்சை பசேலென அழகாய், வண்ண மயமாய் இருந்த அவ்விடத்தை இவள் கைக் கோர்த்துக் கொண்டு அவன் ரசிக்க, எதுவுமே இவள் கருத்தைக் கவரவில்லை. பட்டும் படாமல் அவன் தோள் சாய்ந்துக் கொண்டவளை, நன்றாக தோளோடு அணைத்துக் கொண்டான் எழில்.

“டைமாச்சுடி! போர்டிங் கூப்புடப் போறாங்க! வா!”

வதனாவைக் கட்டிப் பிடித்து பாய் சொன்னவன், போர்டிங்குக்கு செல்லும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மீண்டும் ஒரு முறை இவள் பேக்ரவுண்டில் ஜென்சி ‘இதயம் போகுதே!!! எனையே பி…” ரிந்து என முடிப்பதற்குள் திரும்பிப் பார்த்து சிரித்த எழில், இவள் அருகே ஓடி வந்துக் கட்டிக் கொண்டான்.

புன்னகையுடன் அவளை விலக்கி தள்ளி நின்றவன், குனிந்து வணக்கம் சொல்வது போல கை வைத்து,

“சவாடிகாப்(தாய்லாந்து மொழியில் வணக்கம்)” என்றான்.

இவள் புரியாமல் பார்க்க, அவள் கைப் பிடித்து இழுத்துக் கொண்டு போர்ட்டிங் இடம் நோக்கி ஓடினான் எழிலரசன்.

“நாம கசமுசா பண்ண தாய்லண்ட் போறோம்!!!!!!!!”

(இதயம் போகும்….)

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! இந்தக் கதைல நான் எதையும் ஃபில்டர் பண்ணல! மைண்ட்ல வரத அப்படியே எழுதறேன்! எழில தூக்கியும் காட்டல, இறக்கியும் காட்டல! அவன அவனா இருக்க விட்டிருக்கேன்!  இதோட அடுத்த எபில சந்திக்கலாம்! லவ் யூ ஆல் டியர்ஸ்)