Ithayam Poguthe–EPI 11

IP-631cf67e

அத்தியாயம் 11

“எழுந்திருடி தூங்கு மூஞ்சி! ப்ரேக்பஸ்ட் போலாம்”

“ஹ்ம்ம்ம்” எனச் சொல்லி கண்ணை மீண்டும் மூடிக் கொண்டவளைப் பிடித்து உட்கார வைத்தான் எழிலரசன்.

“குட்டி! ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டு, நான் அப்படியே கிளம்பறேன்! நீ திரும்ப வந்து தூங்கிக்க! ப்ளிஸ், எழுந்து வா”

“வரேன்! குளிக்க மாட்டேன், தூக்கம் போய்டும்! பல்லு மட்டும் தேய்ச்சிட்டு வரேன்” என எழுந்து போனவளை புன்னகையுடன் பார்த்தான் இவன்.

மேசேஜில் பேசியது போல நேரிலும் கொஞ்சமாய் தயக்கம் விட்டு இவன் என் கணவன் எனும் உரிமையில் பேச ஆரம்பித்திருந்த மனைவியை இன்னும் இன்னும் பிடிக்க ஆரம்பித்திருந்தது எழிலுக்கு. சரிங்க மாமா, சொல்லுங்க மாமா என்பது போய் இவனிடம் நீட்டி முழக்க ஆரம்பித்திருந்த மனைவி மனதை அள்ளிக் கொண்டாள். தாய் போனதில் இருந்து தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வரவை வேண்டி ஏங்கி நின்றவனுக்கு, இவள் எது செய்தாலும் பிடித்துத் தொலைத்தது. முன்பெல்லாம் பாவமாய் இருக்கும் அவளைப் பார்க்க, அதனால் பரிவாய் பார்த்துக் கொண்டான். இப்பொழுதோ இவளைப் பார்த்தாலே மயக்கம் வர ஒரு மார்க்கமாய் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

எப்பொழுதும் சிங்கப்பூரிலும் சரி, திருச்சியில் இருந்த போதும் சரி காலையிலேயே இவனுக்கு முன்னமே எழுந்து விடுவாள் வதனா. காபி கலந்து தருவதில் இருந்து உணவு செய்து பரிமாறுவது வரை எல்லாம் பக்காவாக இருக்கும். அவன் சொல்வதை அப்படியே அச்சுப் பிசகாமல் கடைப் பிடித்தவள், இப்பொழுது தனது பிடித்தமின்மையை, பிடித்தங்களை அவனுக்கு உணர்த்த ஆரம்பித்திருந்தாள்.

எனக்கு சாம்பாரில் வெண்டைக்காய் போட்டால் பிடிக்காது என உரிமையாய் சொல்லவோ, சிகப்பை விட பச்சை வர்ண சுடிதார்தான் பிடித்திருக்கிறது என அடம் பிடித்து வாங்கவோ, மாதவிடாயின் போது ஒவ்வொரு நாளும் தலைக்குக் குளிப்பதால் நெஞ்சில் சளிக் கோர்த்துக் கொண்டு மூச்சு விட கூட சிரமமாய் இருக்கிறது என மறுத்துப் பேசவோ முடியாமல் வளர்ந்தவளுக்கு கணவனிடமும் சட்டென தனது விருப்பு வெறுப்புகளை வெளிக் காட்ட முடியவில்லைதான்.

ஆனால் இவளுக்கு கணவனாய் வாய்க்கப் பெற்றவன், உணவு வாங்கிக் கொடுப்பதில் இருந்து, வீடு பார்ப்பது வரை இவளது பிடித்தங்களை அறிந்துக் கொள்ள முனைந்தது, இவளுக்காக மெனக்கெடுவது, அதட்டி உருட்டும் போதும் அதில் அக்கறை காண்பிப்பது என இருக்க, இவளுள்ளும் மெல்ல மெல்ல ஏதோ ஓர் உணர்வு மடைத் திறந்துக் கொண்டது. அதன் விளைவுதான் இத்தனை வருடமாகத் தூங்கிப் பார்க்காத காலைத் தூக்கத்துக்கு கெஞ்சுவது, அவன் பேசுவதற்கு சரி சரியெனப் போகாமல் வெட்டிப் பேசுவது, அடம் பிடிப்பது எனப் பக்கா மனைவியாய் மாறத் துவங்கி இருந்தாள். எழில் இதற்கெல்லாம் முகம் கொடுக்காமல் இருந்திருந்தால், இவள் மீண்டும் தனது கூட்டில் சுருண்டிருப்பாள். அவன்தான் இப்படியெல்லாம் தன்னிடம் உரிமையாய் ஒருத்தி நடந்துக் கொள்வதற்கு காத்துக் கிடந்தவனாயிற்றே!    

தாய்லந்து நாட்டின் தலை நகரமான பேங்காக்கில் இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் தங்கி இருந்தார்கள் இவர்கள் இருவரும். கிளையண்ட் மீட்டிங்குக்காக வந்திருந்தவனுக்கு தங்குமிடம், ப்ளைட், சாப்பாட்டு செலவு எல்லாம் நிறுவனம் பார்த்துக் கொண்டது. கூடவே எக்ஸ்ட்ரா லக்கேஜாக அழைத்து வந்திருந்த மனைவிக்கு ஆக வேண்டிய செலவு இவனை சார்ந்தது. மூன்று நாட்கள் மீட்டிங் இருக்க, எக்ஸ்ட்ரா இரண்டு நாட்கள் மனைவியோடு ஊர் சுற்றிப் பார்க்க விடுமுறை எடுத்திருந்தான் எழில். அந்த எக்ஸ்ட்ரா நாட்களுக்கு சொந்த செலவில் ரூம் எக்ஸ்டெண்ட் செய்திருந்தான்.

ஹாஸ்பிட்டல் அலைச்சல், திருச்சியில் ஷாப்பிங், மாமானாருடன் வெளியே தெருவே போய் வருவது என மிக சோர்ந்து போய்தான் சிங்கப்பூர் வந்திருந்தாள். அப்படி வந்தவளைதான் இழுத்துக் கொண்டு தாய்லாண்ட் வந்திருந்தான் இவன்.

முதலில் அவன் இழுத்துக் கொண்டு ஓடியதில் அதிர்ச்சியானவளுக்கு அவன் சொன்ன வார்த்தைகள் அப்படி ஒரு நகைப்பைக் கொடுத்தது. கணவன் தன்னைத் தனியே விட்டுச் செல்லவில்லை எனும் எண்ணமும் பரவசமும் விமானப் பயணத்தில் தனக்கு வாந்தி வரும் என்பதைக் கூட மறக்கடித்திருந்தது.

கடந்துப் போன இரண்டு நாட்களும் எழில் மிக மிக பிசியாக இருந்தான். காலையில் மனைவியோடு ஹோட்டலில் இருக்கும் பஃபே முறை ப்ரெக்பஸ்ட் இடத்தில் காலை உணவு. பின் அரக்கப் பறக்க மீட்டிங் இடத்துக்கு ஓட்டம் என் பரபரப்பாகப் போனது அவனுக்கு. காலையில் மிக நன்றாக சாப்பிட்டு விடும் இவள், மீண்டும் சற்று நேரம் உறக்கம், பின் குளியல் என நேரத்தைக் கடத்துவாள். மாலையில் தானாகவே டீ கலந்துக் கொள்வாள். இவன் வாங்கி வைத்திருக்கும் ஸ்நாக்ஸில் இருந்து ரொட்டி, பழங்கள் எனச் சாப்பிடுவாள். பின்பு தொலைக்காட்சி பார்ப்பாள் அல்லது லாப்டாப்பில் மூழ்கி கிடப்பாள். தனியாக வெளியேப் போக வேண்டாமென இவன் எச்சரித்திருக்க, ரொம்பவே பசித்தால், ரூம் சர்வீஸில் ஆர்டர் செய்து சாப்பிடுவாள். பின் மீண்டும் ஒரு தூக்கம் எனப் பொழுதை ஓட்டுவாள். எழில் வர இரவு எட்டுக்கும் மேல் ஆகிவிடும். களைத்துப் போய் வந்தாலும், குளித்து விட்டு இவளை அழைத்துக் கொண்டு வெளியே போவான்.

தாய்லண்ட் என்றாலே கிளுகிளுப்பு என நமக்கெல்லாம் புத்தியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அழகான இயற்கை வளங்கள் நிறைந்திருக்கும் அந்த நாட்டில் புத்தர் கோயில்களும் நமது இந்து கோயில்களும் நிறைந்துக் கிடக்கின்றன. இந்த நாடு உணவுக்கும், ஷாப்பிங்குக்கும் பெயர் பெற்ற நாடு! பேங்காக் போன்ற நகரங்கள் கண்ணைக் கவரும் விதமாக, தனித்துவமாக ஒளிர்ந்து நிற்கும். விதவிதமான மக்கள், கலவையான உணவின் மணம், நகரத்தை ஒட்டி அழகாய் ஓடும் சாவ் ப்ரயா நதி என மனதைக் கொள்ளைக் கொண்டு விடும் இந்த தாய்லாந்து நாடு.

இரவு உணவுக்காக நைட் மார்க்கேட் என அழைக்கப்படும் இரவுச் சந்தைக்கு அழைத்துப் போவான் எழிலரசன். தாய்லாந்து உணவுகள் சிங்கப்பூர், மலேசியாவிலும் கிடைக்க இவனுக்கு சாப்பிட்டுப் பழக்கம் இருந்தது. திறந்த வெளியாய் இருக்கும் அவ்விடங்களில் மேசை நாற்காலிகள் போடப் பட்டிருக்க, சுற்றி சுற்றி ஸ்டால் போல பல கடைகள் இருக்கும் நைட் மார்க்கேட்டில். நமக்கு எது பிடிக்கிறதே அதை தேர்ந்தெடுத்து வாங்கி, கடந்து போகும் மக்களை ரசித்தப்படியே சாப்பிடலாம் அங்கே.

இவள் இன்னும் இது போன்ற உணவுகளை பழகி இருக்கவில்லை. ஆகவே மனைவிக்கும் சேர்த்து இவனே உணவு வாங்கி வந்து கொடுப்பான்.

“இது பேரு ‘தோம் யாம் சூப்’! கொஞ்சம் புளிப்பாவும் காரமாவும் இருக்கும் இந்த சூப். இதுக்குள்ள இறால், கணவாய்னு சீஃபூட் போட்டிருப்பாங்க. கடல் உணவுப் பிடிக்காதவங்க கோழில வேணும்னு கேட்டாலும் செஞ்சுக் கொடுப்பாங்க. நான் சீ ஃபூட்தான் வாங்கிருக்கேன். சாதத்துல இதை ஊத்திக்கிட்டு சாப்பிடனும்! கூடவே முட்டை வருவல் சேர்த்து சாப்பிட்டா ருசி பிச்சிக்கும்!” எனச் சொல்லி புது வகை உணவை வாங்கிக் கொடுப்பான்.

அது உறைப்பாய் இருக்க, நாக்கை குளிர்ச்சிப் படுத்த டிசர்ட்டான ‘ஏபிசி’ என அழைக்கப்படும் அரைத்த ஐஸ்கட்டியில் பால், இனிப்பு, பழங்கள் சேர்த்து வரும் கலவை பானத்தை வாங்கிக் கொடுப்பான். உறைப்பும், குளிர்ச்சியுமாக ரசித்து சாப்பிடுவாள் வதனா.

“இங்க வந்ததுல இருந்து சாப்பிட்டுட்டே இருக்கேன்! கொஞ்சம் கூட வாயக் கட்டறது இல்ல” எனக் கவலைப்படுவாள் இவள்.

“டயட் பண்ணறதுக்கான நேரத்தை நமக்கு கடவுள் ஏற்கனவே ஒதுக்கி வச்சிருக்காருடி!”

“எப்போ அது?”

“மண்டையைப் போட்டு குழில படுத்துருக்கும் போது”

முறைக்க முயன்றாலும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும் இவளுக்கு. சாப்பிட்டு முடித்து, துணிமணிகள், அக்செசொரிஸ், மேக்கப், காலணிகள் என விற்கும் தெருவோர கடைகளை ஒரு சுற்று சுற்றுவார்கள்.

“இந்த சீக்குவேன்ஸ் வச்ச பேக் நல்லா இருக்கு பாரு! வாங்கிக்கோ!” எனச் சொல்லி வாங்கிக் கொடுப்பான் எழில்.

“எப்போ பாரு அதென்ன சுடிதார் இல்லைன்னா சேலை! இந்த மாதிரி பாவாடை கட்டிக்கோ உனக்கு அழகா இருக்கும்” என முட்டிக்கு கொஞ்சம் கீழாக மடிப்பு மடிப்பாய் இருக்கும் ப்ளீட்டட் ஸ்கேர்ட் வாங்கிக் கொடுப்பான்.

“மாமா, இவளோ செலவு பண்ண வேண்டாம்” எனத் தடுப்பாள் இவள்.

“நான் செலவு செய்யறதுக்குன்னு யார் இருக்கா சொல்லு! நல்லா சம்பாரிக்கறேன், இன்வெஸ்ட் செய்யறேன், சேர்த்து வைக்கறேன், ஊருக்கு வரப்போ எல்லாருக்கும் பரிசு வாங்கிட்டு வரேன்! எங்க அம்மா இருந்திருந்தா, அவங்களுக்குன்னு நகை நட்டு வாங்கிக் குடுத்திருப்பேன்! அழகான சேலைகள் வாங்கிக் குடுத்திருப்பேன். அவங்கள ஊர் ஊரா சுத்திப் பார்க்க கூட்டிப் போயிருப்பேன். அதுக்கு எனக்கு குடுத்து வைக்கல. சித்திக்கு வாங்கிக் குடுத்துருக்கேன்தான். வீட்டுல தங்கறதுக்கு இப்படி எனக்கு செலவு பண்ணிக் கணக்குத் தீர்க்கறியான்னு அவங்க கேக்கவும் அதையும் விட்டுட்டேன்! நீயாச்சும் நான் வாங்கிக் குடுக்கறத தடுக்காம எடுத்துக்கடி குட்டி! ப்ளீஸ்” எனக் கேட்கும் போது இவளுக்கு வாயடைத்துப் போகும்.

அதற்கு மேல் அவனைத் தடுக்க மாட்டாள் இவள். இவளும் அவனிடமே பணம் வாங்கி அவனுக்கும் எதாவது வாங்கிக் கொடுப்பாள். அந்த நேரங்களில் எழிலின் முகம் அப்படி ஒரு மலர்ச்சியைக் காட்டும்.

கைக் கோர்த்துக் கொண்டு, கால் வலிக்க இருவரும் அந்த தெருவையே ஒரு சுற்று நடப்பார்கள். சாப்பிட்டதெல்லாம் கரைந்துக் கூடப் போய்விடும்! ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் பட்டர் கோர்ன், ஹோட்டாக் இப்படி எதாவது வாங்கிக் கொறித்துக் கொண்டே வந்து சேர்வார்கள். அறைக்குள் வந்து குளித்துப் படுக்கும் போது, சட்டென சூழ்நிலை மாறிப் போய்விடும். அழகுப் பதுமையாய் நடமாடும் மனைவியைக் கண்களாலே தொடர்வான் இவன். அவளோ வெட்கம் பிடுங்கித் தின்ன, கட்டிலில் அமராமல் சோபாவில் போய் அமர்ந்துக் கொள்வாள்.

“குட்டி”

“ஹ்ம்ம்”

“திடீர்னு ரொம்ப சூடா இல்ல”

“ஆமா”

“ஏசிய ஏத்தி வைக்கவா?”

“சரி”

“டீ.வி பார்க்கலாமா?”

“ஹ்ம்ம்”

“என் பக்கம் வந்து உட்காரு! கட்டில் எதிரத்தானே டீ.வி இருக்கு”

“வரேன்” என்பவள் அவன் அருகே வந்து படபடப்புடன் அமர்ந்துக் கொள்வாள்.   

எதாவது ஒரு சேனலைப் போட்டுவிட்டு, மனைவியின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு டீ.வி பார்ப்பான் எழில். எதாவது செய்வான் என இவள் எதிர்ப்பார்ப்பாய் அமர்ந்திருக்க, அரை மணி நேரத்தில் தொலைக்காட்சியை அணைத்து விட்டு, மனைவியை இறுக்க அணைத்தப்படி தூங்கிப் போவான். கசமுசா பண்ண தாய்லண்ட் போறோம்னு சொல்லிட்டு கப்புசிப்புன்னு தூங்கறானே எனக் குழம்பிப் போனாள் இவள். இப்படித்தான் கடந்த மூன்று தினங்களும் போனது.

மீட்டிங் முடித்து, வேலையெல்லாம் ஓரங்கட்டி வைத்தவன், நான்காவது நாள் காலை மனைவியை கிச்சு கிச்சு மூட்டி எழுப்பினான்.

“ஏந்திரி யவனா ஏந்திரி!” என அவன் பண்ணிய அலும்பில் எழுந்து அமர்ந்தவளை, இறுக்கிக் கட்டிக் கொண்டாள் கணவன். கலைந்துக் கிடந்த அவள் முடியில் வாசம் பிடித்தவன்,

“இன்னிக்கு நாம தாய்லண்ட நல்லா சுத்திப் பார்க்கப் போறோம்! நாளைல இருந்து அதுக்கெல்லாம் நேரம் கிடைக்குமா தெரியல” எனச் சொல்லி அவளை தூக்கிப் போய் குளியலறையில் விட்டு விட்டு வந்தான்.

“அஞ்சு நிமிஷத்துல குளிச்சிட்டு வர நீ” என மிரட்டியவனின் முகத்தில் தெரிந்த குதூகலத்தில் இவளுக்கும் புன்னகை அரும்பியது.

பாதி குளியளில் இருக்க, கதவைத் தட்டினான் இவன்.

“என்ன மாமா?”

“அன்னைக்கு வாங்குன பாவாடையும் ப்ளவுசும் போட்டுக்க! இந்தா எடுத்து வந்திருக்கேன்”

கதவை லேசாகத் திறந்து கையை மட்டும் இவள் வெளியே நீட்ட, அவளது ஈரக்கையைத் தடவிக் கொடுத்தான் இவன்.

“சொரண்டாம துணியைக் குடுங்க மாமா!”

“எதே! சொரண்டறனா!!!!! போடி!! ரோமான்ஸ்னா கிலோ என்ன விலைன்னு கேப்ப போல” என நொடித்துக் கொண்டே இவன் துணியை அவள் கையில் வைக்க, படக்கென கையை உள்ளே இழுத்துக் கொண்டவள், கதவை சாற்றி விட்டாள்.

ஏற்கவனவே அணிவதற்கு பாத்ரூம் உள்ளே கொண்டு வந்திருந்த சுடிதாரை ஒதுக்கி வைத்தவள், கணவன் கொடுத்ததை அணிந்து வெளியே வந்தாள். பிங்கும் பச்சையும் கலந்த ப்ளீட்டட் ஸ்கெர்ட் மற்றும் வெள்ளை ப்ளவுசில் அழகியாய் மிளிர்ந்தாள் பிரியவதனா.

அவளை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தவன்,

“ஜோரா இருக்கடி என் பொண்டாட்டி” எனப் புகழ்ந்து தள்ளினான் எழில்.

முகம் செம்மையுற,

“தேங்க்ஸ் மாமா” என்றவள், அழகாய் முகம் திருத்தி, தலை வாரி, காலணியை அணிந்துக் கொண்டு கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

இருவரும் ஹோட்டல் வளாகத்திலேயே உணவு உட்கொண்டார்கள். அதன் பிறகு டாக்சி எடுத்து ‘வாட் போ(Wat Pho)’ என அழைக்கப்படும் சயனித்திருக்கும் புத்தர் சிலை இருக்கும் கோயிலுக்குப் போனார்கள். டிக்கேட் வாங்கிக் கொண்டு அவர்கள் கொடுத்த இலவசத் தண்ணீர் பாட்டிலையும் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.

“நம்ம நாட்டுல கோயில்களுக்குப் போறது போலவே இங்கேயும் சில விதிமுறைகள் இருக்காம் குட்டி! பொண்ணுங்க முட்டிக்கு கீழ இருக்கற மாதிரி பாவாடையோ, பேண்ட்டோ அணிஞ்சிருக்கனும். தோள் தெரியற மாதிரி சட்டைப் போடக் கூடாது! ஆம்பளைங்க நீளமான பேண்ட் போட்டு, அரைக்கை இல்லன்னா முழுக்கை சட்டைப் போட்டு வரனும்! எந்த மதமா இருந்தாலும், கோயில்னு வரப்போ அதற்கான மரியாதையக் குடுக்கனும்ல” எனச் சொல்லியபடி வந்தான் எழில்.

நூற்று ஐம்பத்துரொரு அடியில் மிகப் பிரமாண்டமாய் தங்க வர்ணத்தில் ஜொலித்தப்படி அழகாய் சயனித்திருந்த புத்தரைக் காண இருவருக்குமே உடம்பு சிலிர்த்துப் போனது! கை கூப்பி மனமுறுகி நின்றனர் இருவரும். அவரை வணங்கி விட்டு வர, ஓரிடத்தில் நூற்று எட்டு சட்டிகள் இருக்க, அதில் அனைவரும் நூற்றி எட்டு நாணயங்களைப் போட்டப்படி போவதைப் பார்த்தார்கள் இருவரும். இவன் எதற்கு இது என ஒருத்தரைப் பிடித்துக் கேட்க, அப்படி செய்வதால் நாம் எண்ணியது ஈடேறுமெனவும், அதிர்ஸ்டத்தையும் நீண்ட ஆயுளையும் தருமென்பதும் ஐதீகமென அவர் சொன்னார். உடனே அங்கே விற்கப்பட்ட நூற்றி எட்டு நாணயங்களை வாங்கியவன், மனைவியிடம் கொடுத்து,

“உனக்கு என்ன வேண்டுனும்னு தோணுதோ, வேண்டிக்கிட்டு காய்ன்னா போட்டுட்டு வா!” என நீட்டினான்.

“உங்களுக்கு எந்த வேண்டுதலும் இல்லையா?”

“முன்ன இருந்தது! இப்போத்தான் என் லைப்ல நீ வந்துட்டியே! இதுக்கும் மேல எனக்கு வேற என்ன வேணும்!” என்றவனை மையலாய் பார்த்தாள் பிரியவதனா.

“பார்வைலாம் பலமா இருக்கு! கோயில்டி இது! அபச்சாரம், அபச்சாரம்” எனப் புன்னகைத்தான் இவன்.

முக மலர்ச்சியுடன்,

“எல்லோரும் நல்லா இருக்கனும்! நானும் எழில் மாமாவும் ஆத்மார்த்தமா, அந்நியோன்யமா, அன்போட வாழனும்!” என முனுமுனுவென வேண்டிக் கொண்டே பயபக்தியாய் நாணயத்தை வரிசையாய் போட்டு விட்டு வந்தாள் இவள்.

அதன் பிறகு ‘அம்பாவா ஃப்ளோட் மார்க்கேட்(amphawa float market)’ என அழைக்கப்படும் படகு சவாரிக்கு அழைத்துப் போனான் எழில். பணம் செலுத்தி ஒரு படகில் ஏறி அமர்ந்துக் கொண்டார்கள் இருவரும். பலத்தரப்பட்ட கடைகள் நிறைந்த ஆற்றின் நடுவே பயணித்தது படகு. இவளுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாய் இருந்தது. அங்கிருந்த கடைகளில் படகை நிறுத்தச் சொல்லி, வாட்டிய மீன், இறால், கணவாய் என வாங்கித் தந்தான் எழில். படகின் தள்ளாட்டம் தாலாட்டுவது போல இருக்க, காற்று முகத்தில் மோத, ரசித்து ருசித்து உணவைப் புசித்தார்கள் இருவரும்.

அந்தி சாய ஆரம்பித்திருக்க, படகில் இருந்து வெளியேறி இன்னொரு ரோட்டோரக் கடையில் இரவு உணவாக பரோட்டா தேநீர் என சாப்பிட்டு விட்டு கொஞ்சம் பழங்களும் வாங்கி விட்டு நடையைக் கட்டினார்கள். ஹோட்டலுக்கு போகும் வழியில், ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ் வெளியே அழகாய் அமர்ந்திருந்த பிள்ளையாரைக் காண அழைத்துப் போனான் எழில். வெட்ட வெளியில் அம்சமாய் அமர்ந்திருந்தார் அவர். தாய்லாண்ட் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களும் அவருக்கு ஊதுபத்தி காட்டி வணங்கினார்கள். இவர்கள் இருவரும் கூட வணங்கிக் கொண்டார்கள். எழில் கைக் கூப்பி பயபக்தியாய் எதுவோ வேண்டுவதைப் பார்த்தவள், அவன் கேட்டதை நிறைவேற்றிக் கொடு என இவளும் வேண்டிக் கொண்டாள்.

அதன் பிறகு ஹோட்டலுக்குத் திரும்பினார்கள் இருவரும். அவளை ஹோட்டல் லாபியில் அமர்த்தியவன்,

“நான் முதல்ல ரூமுக்குப் போறேன்! இன்னும் பத்து நிமிசத்துல மேசேஜ் போடுவேன்! அப்போ நீ மேல வா” எனச் சொன்னான்.

“ஏன் மாமா?”

“சர்ப்ரைஸ்!” எனச் சொல்லியபடி விடுவிடுவென நடந்து விட்டான்.

மனம் படபடவென அடிக்க, இவள் நிமிடங்கள் யுகங்களாக கடக்க அவனது மேசேஜூக்காகக் காத்திருந்தாள். பதினைந்து நிமிடங்கள் கழித்து,

“கம்” என மேசேஜ் வந்தது.

இவள் அறைக்கு வர, அதன் வெளியேவே நின்றிருந்தான் இவன். குளித்து முடித்து தலை முடியில் நீர் சொட்ட நின்றவனைப் பார்த்து புன்னகைத்தாள் பெண்.

“இப்போ உன் கண்ண கட்டப் போறேன்! கைப்பிடிச்சு பாத்ரூம்ல கொண்டு விடுவேன்! குளிச்சிட்டு அங்க இருக்கற துணிய போட்டுட்டு வா” எனச் சொல்லியவன் அவளது பெட்டியில் இருந்து எடுத்திருந்த துப்பட்டா ஒன்றை வைத்து கண்ணைக் கட்டினான்.

“என்ன மாமா இது?” என இவள் சிணுங்க,

“சர்ப்ரைஸ்” என மட்டும்தான் பதில் வந்தது.

தடுமாறியவளை கைப்பற்றி பாத்ரூமில் விட்டவன்,

“மெதுவா குளிச்சுட்டு வா யவனா” என்றான்.

இது நாள் முதல் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் மட்டுமே அவன் வாயில் வரும் யவனாவைக் கவனித்திருந்தவள், வெட்கப் புன்னகையுடன் குளித்து முடித்து அவன் எடுத்து வைத்திருந்த நைட்டியை அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள். இருட்டாய் இருந்த அறையில், மெலிதான மெழுகுவர்த்தியின் வெளிச்சம். இவள் வெளிச்சம் தெரிந்த இடம் நோக்கி வர, பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் எழிலரசன்.

“மாமா” என நாணமாய் இவள் அழைக்க,

“ஏம்மா!!” என்றவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

கட்டிலை நெருங்கியவன் மெல்ல அவளை இறக்கி விட்டான். ரோஜா இதழ்களால் ஹார்ட் வரைந்து அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டில் வா வாவென அழைத்தது இவளை. மெல்லிய ஒளியில் இவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் கண்கள் காதலினாலும் அது தந்த காமத்தினாலும் ஒளிர்ந்தது. மத்தளம் கொட்டும் இதயத்தை அடக்க முடியாமல், வலது கைக் கொண்டு நெஞ்சத்தை அழுத்திக் கொண்டாள் வஞ்சியவள். அவள் செய்கையில் புன்னகை மிளிர, அவள் அருகே அமர்ந்துக் கொண்டான் எழில்.

“யவனா”

“ஹ்ம்ம்”

அவளது கையை எடுத்து தனது கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன்,

“என்னை நிமிர்ந்துப் பாரேன்” என்றான்.

இதழ் துடிக்க, கண்களில் காதல் வழிய அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் பிரியவதனா.

அவளது நாணப் பார்வையில், இவனுக்குள் காதல் எரிமலை வெடித்து சிதறியது. ரோஜாவின் மேல் அவளை சாய்த்தவன், அவள் அருகில் இவனும் சாய்ந்துக் கொண்டான்.

“உன்னில் என்னை ஊற்றிக் கொள்ள, என்னில் உன்னை ஏற்றிக் கொள்ள சம்மதமா யவனா?” எனக் கேட்டவனின் விரல்கள் அவள் முகத்தில் அளைந்து விளையாடியது.

சட்டென நகர்ந்து அவன் நெஞ்சில் சரண் புகுந்துக் கொண்டாள் பெண்.

“சொல்லுமா!” என்றவன் அவள் தலையை மென்மையைய் தடவிக் கொடுத்தான்.

“ஹ்ம்ம்” என மிக சம்மதமாய் மெல்லிய சத்தம் அவளிடம்.

அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தவன், பெண்ணவளின் வெட்கப் பார்வையில் மூழ்கிப் போனான்.

“என் யவனா! மூனு நாளா உன்னைக் கிட்டவே வச்சிக்கிட்டு தள்ளி வைக்க என்ன பாடு பட்டேன்”

“ஏன் தள்ளி வைக்கனும்?” எனச் சன்னமாக இவள் கேட்க,

“ஆரம்பிச்சா எங்க நிறுத்த முடியாதோன்ற பயம்தான்டி! என்னை நம்பி வேலையக் குடுத்து அனுப்பிருக்கானுங்களே!” என்றவனின் உதடுகள் மென்மையாய் பெண்ணவளின் உதட்டைப் பற்றிக் கொண்டன.

பற்றிக் கொண்ட உதடுகள் ஒற்றிக் கொண்டன, ஒருவரை ஒருவர் வெற்றிக் கொண்டன! தன் பிரியமான வதனாவின் வதனம் எங்கும் ஈர முத்த ஊர்வலம் நடத்திய எழிலின் அரசனிடம் மண்டியிட்டது யவனாவின் இளமை. காமன் சபைக்குப் புதியவர்களான இளஞ்சோடிகள் இவர்கள் முட்டி மோதி, தட்டுத் தடுமாறி, ஒருத்தரை ஒருத்தர் அறிய முயன்றார்கள். அங்கே முனகல் சத்தம் மட்டும் கேட்கவில்லை, சிரிப்பு சத்தமும் கேட்டது, சிணுங்கல் சத்தமும் கேட்டது! அவன் கெஞ்ச, இவள் மிஞ்சவென காதல் போர் நடந்தது. வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பது போல இவள் கெஞ்ச அவன் மிஞ்சவென போர் முறை மாறிப் போன அதிசயமும் நிகழ்ந்தது. கூடலின் முடிவில் இவன் வதனாவின் அரசனாக, இவள் எழிலின் பிரியமானாள்!!!!!

“தேகங்கள் பரிமாற

நம் உள்ளங்கள் இடம் மாறும்

பேரின்ப பூஜைகளே

உன் பெண்மைக்கு பரிகாரம்

மழை இல்லாமலும்

தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது

லட்சம் பூ மலரும்”   

காதல் செய்து களைத்துக் கிடந்தவனின் முகம் வருடி,

“பிள்ளையார் கிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க மாமா?” என இவள் கேட்க,

“நைட்டு பெர்மர்மன்ஸ பார்த்து என் பொண்டாட்டி மெரண்டுப் போய் கத்தி ஊரைக் கூட்டிடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்” எனச் சிரிப்புடன் சொன்னான் இவன்.

“போங்க மாமா” எனச் சிணுங்கினாள் இவள்.

புன்னகையுடன் அவள் முகம் பார்த்து,

“நாங்க ஒன்னு சேர நல்ல நேரம் பார்க்கல, நேரம் குறிக்கல! அம்மான்னு ஒருத்தங்க எங்க லைப்ல இருந்திருந்தா இதெல்லாம் பார்த்திருப்பாங்க! எங்களுக்கு அதெல்லாம் குடுத்து வைக்கல! அதனால அம்மாவா இருந்து நாங்க குடும்ப வாழ்க்கைல அடியெடுத்து வைக்க ஆசீர்வாதம் பண்ணுப்பா பிள்ளையாரப்பான்னு வேண்டிக்கிட்டேன்” என்றவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் இவள்.

அவ்விறுக்கம் மீண்டும் இருவரையும் நெருக்கமாக்கியது. அதன் பிறகு அங்கிருந்த வரை இருவரும் சாப்பிடக் கூட ரூமில் இருந்து வெளியே வரவில்லை. தாய்லாந்து தாயாய் இருவரையும் தாங்கிக் கொண்டது.

 

(இதயம் போகும்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. இனி அடுத்த எபில சந்திக்கும் வரை லவ் யூ ஆல் டியர்ஸ்)