Ithayam Poguthe–EPI 15

IP-6aba0b95

அத்தியாயம் 15

“அறிவு கெட்டவனே! நீயெல்லாம் என் மகன்னு வெளிய தெருவ சொல்லிடாதடா! படிச்சுப் படிச்சு சொன்னேன், புள்ளய நல்லா பார்த்துக்கடான்னு! எனக்குத்தான் லவ்வு அதிகம், எல்லாம் நான் பார்த்துப்பேன்னு வீர வசனம் பேசிட்டு, இப்படி கொண்டு வந்து ஹாஸ்ப்பிட்டல்ல படுக்க வச்சிருக்கியே!!! பெல்ட்ட உருவி விளாசி விடனும் போல வருதுடா! நீயே ஒரு கொழந்தைக்கு அப்பனாகப் போறியேன்னு அடக்கிட்டு இருக்கேன்” எனக் காய்ந்தார் தமிழரசன்.

எப்பொழுதும் தந்தை ஏசும் போது விறைப்பாய், கடுப்பாய் நிற்பவன், இந்த முறை அவரை நெருங்கி வந்துக் கட்டிக் கொண்டான்.

“என்னை மன்னிச்சுடுங்கப்பா! தப்பெல்லாம் என் மேலத்தான்! நாலு அடி அடிச்சிருங்கப்பா! அப்போவாவது எனக்குப் புத்தி வரட்டும்” என கண்ணீர் உகுத்தவனை அணைத்துக் கொண்டார் தமிழ்.

இவ்வளவு வருடங்கள் தள்ளியே இருந்தவன், இப்பொழுது கட்டிக் கொண்டு அழவும் இவருக்கு உள்ளே உருகி விட்டது. ஏற்கனவே ஒரு வாரம் பட்டினி கிடந்தவன் போல முகம் சோர்ந்துப் போய், கண்கள் சிவப்பேறி, தலை கலைந்து பரதேசி போல் இருந்தவனை இவரால் அதற்கு மேலும் கடிந்துக் கொள்ள முடியவில்லை.

பிரியவதனாவை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டதில் இருந்து இவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. கிடைத்த ப்ளைட்டைப் பிடித்து சிங்கப்பூருக்கு வந்து விட்டார். என்ன நடந்தது என இவர் கேட்க, எல்லாவற்றையும் சொல்லி விட்டான் எழில். இப்படி ரியாக்ட் செய்வான் என்றுதான் மருமகள் இது வரை தனது காதலைப் பற்றி சொல்லியிருக்கவில்லையோ! தாம்தான் நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பி விட்டோமோ என இவருக்குமே மன வருத்தம்தான். தவறு தன் மேலேயும் இருக்க, மகனை மட்டும் நொந்து என்ன செய்வது என அமைதியாகி விட்டார் தமிழ்.

நால்வரும் மருத்துவமனை அறையின் வெளியே நின்றுதான் பேசிக் கொண்டிருந்தனர். கண் கலங்கி நின்ற தன் பெறாத மகனின் கைப்பற்றி தட்டிக் கொடுத்த அன்பழகி,

“நடந்தது நடந்துப் போச்சு! அதான் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் எந்த ஆபத்தும் இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்ல! இன்னும் ஏன் இவன போட்டு வாட்டறீங்க பெரிய மாமா” என தமிழரசனைக் கடிந்துக் கொண்டார்.

“நீ அவனுக்கு பரிஞ்சுக்கிட்டு வராதே! புள்ள முகத்தப் பார்க்க முடியல! வெளிறிப் போய் படுத்து கிடக்கு! எல்லாம் இவனால! நம்ப பரம்பரையிலேயே இல்லாத பழக்கம்லாம் பழகி வச்சிருக்கான்! என்னைக்காச்சும் நானோ எங்கண்ணாவோ கட்டுன மனைவிய இப்படிலாம் சத்தம் போட்டிருப்பமா! இவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!” என மீண்டும் ஆரம்பித்து வைத்தார் கலையரசன்.

“ஷப்பா! நீங்களும் உங்க பரம்பரையும்” எனத் தலையில் அடித்துக் கொண்டார் அன்பழகி.

அவர்களின் ரகளையில் தமிழுக்கும், எழிலுக்கும் லேசாகப் புன்னகைக் கூட மலர்ந்தது. பிரியவதனாவின் அறையில் இருந்து டாக்டர் வெளியே வர, அலர்ட்டானார்கள் நால்வரும்.

அவளுக்கு ரத்தப் போக்கு ஏற்பட்ட பொழுது சில நிமிடங்கள் அதிர்ந்து, செயலிழந்து போயிருந்தவன், உடனடியாகத் தன்னை ஒரு நிலைப்படுத்தி இவர்கள் பார்க்கும் மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து வந்துவிட்டான்.

உடனேயே அவளை அட்மிட் செய்து ரத்தப் போக்குக்கு என்ன காரணம் எனக் கண்டுப் பிடித்து அதற்கான சிகிச்சையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சட்டென எந்த அறிகுறியும் காட்டாத ப்ளெசெண்ட்டல் அப்ரப்ஷன்(placental abruption) எனும் காம்ப்ளிகேஷன்தான் வதனாவுக்கு ஏற்பட்டிருந்தது. தாய்க்கும் சேய்க்கும் பாலமாய் இருக்கும் ப்ளசெண்ட்டா அதாவது நஞ்சுக்கொடி, கர்ப்பப்பையில் இருந்து பிரிந்து விடுவதைதான் நஞ்சுக்கொடி தகர்வு எனச் சொல்கிறோம். உயர் ரத்த அழுத்தம், புகைப்பிடிப்பது, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அதிர்ச்சி எனப் பல காரணங்களால் இது ஏற்படுகிறது எனச் சொன்னாலும் இதுதான் சரியான காரணம் என இன்னும் கண்டுப் பிடிக்கப்படவில்லை. இந்த தகர்வு ஏற்படுவதால் குழந்தைக்கு செல்லும் உணவு, ஆக்சிஜன் போன்றவை தடைப்பட்டு அது இறக்கக் கூடிய ஆபத்து கூட இருக்கிறது. சிலருக்கு ஸ்கேனில் கூட இந்த சுகவீனம் இருப்பது கண்டுப் பிடிக்க முடியாதாம்.   

பிரியவதனாவுக்கு இது மைல்ட்டாக மட்டும் ஏற்பட்டு இருப்பதால், குழந்தைப் பிறக்கும் வரை படுக்கையில் படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும், நடமாட்டத்தைக் குறுக்கிக் கொள்ள வேண்டும், மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்த டாக்டர், சில நாட்கள் கண்காணிப்பில் இருக்கட்டும் என அட்மிட் செய்து விட்டார்.(கர்ப்பக் காலத்தில் ஸ்போட்டிங், ப்ளீடிங் போன்றவை இருந்தால் சாதாரண ஒன்றுதான் என எண்ணாமல் கண்டிப்பாய் டாக்டரை பாருங்கள் டியர்ஸ்)

“ப்ளீடிங் டோட்டலா ஸ்டாப் ஆகிடுச்சு! இனி கவலை இல்லை. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்! இன்னும் ரெண்டு நாளுல வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய்டலாம். இப்போ போய் பாருங்க” எனச் சொல்லி விட்டு சென்றார் டாக்டர். விசிட்டிங் நேரமாதலால் நால்வரும் உள்ளே நுழைந்தார்கள்.

தமிழரசனைப் பார்த்ததும் இவளுக்கு முகம் மலர்ந்து விட்டது. கையை நீட்டி,

“மாமா” என அழைத்தவள் வந்திருந்த மற்ற இருவரையும் பார்வையால் வரவேற்றாள்.

அவர்களோடு உள்ளே வந்த கணவனைத் திரும்பியும் பார்க்கவில்லை இவள்.

குடுகுடுவென ஓடி வந்து மருமகளின் கையைப் பற்றிக் கொண்டார் தமிழ்.

“என்னடாம்மா! இப்போ ஓகேவா இருக்கியா?” எனக் கேட்டவரின் குரல் தளுதளுத்தது.

“நானும், தம்பியும் நல்லா இருக்கோம் மாமா! டாக்டர்தான் பயப்பட ஒன்னுமில்லன்னு சொல்லிட்டார்ல! நீங்க கவலைப்படாதீங்க” எனச் சொல்லி அவர் கையை அழுத்திக் கொடுத்தாள்.

முகம் ரத்தப் பசையின்றி வெளுத்துக் கிடக்க, வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பது போல ஒரு கையை அரணாய் வைத்துக் கொண்டு தளர்ந்து போய் கிடந்தவளைப் பார்க்கப் பார்க்க இவருக்கு தாளவில்லை.

“வதனாம்மா” எனக் கலங்கி விட்டார் தமிழ்.

“பெரிய மாமா! வெளிய மகன திட்டுனீங்க! இப்போ இவள பயங்காட்டறீங்க! இப்படியே செஞ்சீங்கனா ஹாஸ்பிட்டல் பக்கம் கூட்டிட்டு வர மாட்டேன் உங்கள” எனத் திட்டினார் அன்பழகி.

கணவன் திட்டு வாங்கி இருக்கிறான் என அன்பழகி பேசியதில் தெரிந்துக் கொண்டவள், ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தாள். அவனோ இவளையே கண்ணெடுக்காமல் பார்வையால் வருடியபடி தள்ளி நின்றிருந்தான்.    

முதல் நாள் இரவே சிகிச்சை முடித்து இவளை அறைக்கு மாற்றி இருந்தார்கள். இவள் மயக்கத்திலும், ஆழ்ந்த உறக்கத்திலும் இருந்தாலும், கணவன் நெற்றி வருடியது, கைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தது, கண் திறக்கும் நேரமெல்லாம் மன்னிப்பை யாசித்தது எல்லாவற்றையும் உணர்ந்தே இருந்தாள். ஆனாலும் மனதில் ஏதோ வெறுமை. அமைதியாகவே இருந்துக் கொண்டாள் பெண்.

மற்ற மூவரும் அவளிடம் நலம் விசாரித்து முடித்து, இலகுவாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் அவளுக்கான உணவு வந்தது. காலை உணவை இவன்தான் ஊட்டி விட்டிருந்தான். அவளாலேயே சாப்பிட்டுக் கொள்ள முடியும்தான். ஆனாலும் கண்ணில் யாசிப்புடன் உணவை எடுத்துக் கொண்டு அருகே வந்தவனை ஊதாசினப்படுத்தாமல் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள். அவள் வாயைத் துடைத்து தண்ணீர் புகட்டி என அவன் செய்த எந்த பணிவிடையையும் இவள் மறுக்கவில்லை.

இப்பொழுது மற்றவர்கள் இருந்தாலும் இவன் நெருங்கி வர,

“அத்தை! எனக்கு ஊட்டுறீங்களா?” என அன்பழகியைக் கேட்டாள் வதனா.

அவளுக்கு மாமானார்களின் முன்னே அவன் கையால் வாங்கி உண்ண வெட்கமாய் இருந்தது. அதனால்தான் மறுத்தாள். அதற்கு எழிலின் முகம் அப்படியே வாடிப் போய் விட்டது. அமர்ந்தபடியே சாப்பிடுவதற்கான அட்ஜஸ்டபிள் டேபிளை அவள் வளர்த்திக்கு செட் செய்து விட்டு நகர்ந்து விட்டான் இவன். அன்பழகி ஏதேதோ பேசியபடி அவளுக்கு உணவூட்டினார். வருகையாளர் நேரம் முடிய, மற்ற மூவரும் மறுநாள் வருவதாக சொல்லிக் கிளம்பிப் போனார்கள்.

அவர்கள் வெளியேறியதும் இவள் கட்டிலில் இருந்து இறங்க முயல, பதைத்துப் போய் ஓடி வந்தான் எழில்.

“என்ன, என்ன?”

“பாத்ரூம்”

மனைவியை அப்படியே குழந்தை போல கையில் அள்ளிக் கொண்டவன், அறையின் உள்ளேயே இருந்த கழிவறைக்கு தூக்கிச் சென்றான். அவளை உள்ளே விட்டு, கதவைச் சாற்றி வெளியே காத்திருந்தான். உள்ளே தண்ணீர் சத்தம் கேட்ட சில நிமிடங்களில், கதவைத் திறந்தவன் மீண்டும் அவளைக் கையில் ஏந்திக் கொண்டான். படுக்கையில் அலுங்காமல் குலுங்காமல் விட்டவன்,

“தூங்குடா குட்டி” என்றான்.

ஒன்றும் பேசாமல் கண்ணை மூடிக் கொண்டாள். சற்று நேரத்தில் அவனது கரங்கள் அவள் வயிற்றில் பதிவதும், வருடுவதும் தெரிந்தாலும் கண்ணைத் திறக்கவில்லை. எழிலின் குண்டன், தகப்பனின் தொடுகைக்கு உதைத்து விளையாட, இவள் எங்கே தூங்குவது! இவன் வருடலில் விளையாடி களைத்து அவன் அமைதியாகி விட, இவளும் கண்ணசந்தாள்.

நர்ஸ் மறுபடியும் செக் அப் செய்ய வரும் போதுதான் விழித்தாள் பிரியவதனா. அவர் போனதும், இரவு உணவு வந்தது. முன்பே அவள் தன்னை விடுத்து அன்பழகியை கூப்பிட்டிருக்க, தயக்கத்துடன் முகம் பார்த்தான் இவன். உணவைத் தொடாமல் அவள் அமைதியாக கண் மூடிக் கொள்ள,

“சாப்பிடும்மா” எனச் சின்னக் குரலில் சொன்னான்.

அவள் இன்னும் அழுத்தமாகக் கண்ணை மூடிக் கொள்ள அருகில் வந்தவன்,

“நான் ஊட்டவா?” எனக் கேட்டான்.

பதில் சொல்லவில்லை அவள். இவன் கரண்டியில் கஞ்சியை அள்ளி அவள் வாயருகே கொண்டு போக, கண் விழித்துப் பார்த்தவள் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள். மிக அமைதியாகப் போனது அந்த உணவு நேரம். சாப்பிட்டு முடித்தவள், அவனையே இமை தட்டாமல் பார்த்திருந்தாள்.

“என்னம்மா?” என இவன் கேட்க, பதில் ஏதும் சொல்லவில்லை பெண்.

இந்த அறைக்கு வந்ததில் இருந்து அவன் வெளியே போய் இவள் பார்க்கவே இல்லை. உணவு உண்டானா எனக் கூடத் தெரியவில்லை. இவளுக்கு ஏற்பட்ட இந்த சுகவீனம் தன்னால்தான் என இடிந்துப் போய் அமர்ந்திருந்தவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது வதனாவுக்கு. கண் மண் தெரியாத ஆத்திரத்தில் இவள் மனதைக் காயப்படுத்தி இருந்தானே தவிர, உடலளவில் எந்த தீங்கும் இவளுக்கு விளைவிக்கவில்லையே. கணக்கெடுப்பின்படி நூறு கர்ப்பிணிகளில் ஒருவருக்கு ஏற்படும் இந்த சுகவீனம் தனக்கு ஏற்பட்டிருந்ததில் அவன் தவறு எங்கிருக்கிறது என ஒரு பக்க மனம் அவனுக்காக வாதாடியது.

“எதாச்சும் வேணுமா வதனா?”

“சாப்டீங்களா?”

என்னவோ உலகத்தையே அவன் காலடியில் கொண்டு வந்து போட்டது போல அந்த ஒற்றை வார்த்தையில் அகமகிழ்ந்து போனான் எழிலரசன்.

“இன்னும் இல்ல”

“எப்பல இருந்து?”

“தெரில”

“போய் சாப்பிட்டு வாங்க”

“சித்தி கொண்டு வந்திருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்டறேன்”

“இப்போ சாப்டுங்க”

சரியெனத் தலையாட்டியவன், கை கழுவி விட்டு வந்தான். அன்பழகி கொண்டு வந்திருந்த உணவை தட்டிலிட்டவன்,

“கொஞ்சமா வீட்டு சாப்பாடு சாப்படறியா யவனா? சாப்பாடு ரிஸ்ட்ரிக்‌ஷன் ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொன்னாரே” எனச் சாதாரணமாகப் பேச்சுக் கொடுக்க, இவள் அதற்கு மேல் வாயைத் திறக்கவில்லை.

கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது மௌன விரதம் இருக்கும் மனைவி, ஏதோ ஒரு அத்தியாவசிய தேவைக்காக சில வார்த்தைகள் பேசினால், உடனே சண்டை தீர்ந்து விட்டது எனக் குதூகலித்துப் போய் எதுவுமே நடக்காதது போல் பேச முயலும் சராசரி கணவனைப் போலத்தான் இவனும் இருந்தான். கணவனிடம் ஆக வேண்டிய காரியம் ஆனதும், மறுபடியும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சண்டையைத் தொடரும் சராசரி மனைவியாய் இவள் இருந்தாள்.

அவள் கண் மூடி படுக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொள்ள, இவன் அமைதியாய் சாப்பிட்டு முடித்தான். அதன் பிறகு அங்கே ‘இது மௌனமான நேரம்’ எனப் பாடும் அளவுக்கு அமைதியோ அமைதி. சற்று நேரத்தில் அவள் உறங்கிப் போக, அவள் கைப்பற்றியபடி நாற்காலியில் அமர்ந்து உடம்பை வளைத்து தலையை மட்டும் கட்டிலில் வைத்துப் படுத்துக் கொண்டான் இவன். அறையில் சோபா பெட் ஒன்று இருந்தாலும், மனைவியைக் கொஞ்டம் கூட தள்ளி இருக்க மனம் விழையவில்லை இவனுக்கு.

நடு நடுவே அவள் கழிவறை போக எழும் போது, எழுந்து உதவினான், நர்ஸ் வரும் போது இவனும் எழுந்துக் கொண்டான். இருவருக்கும் தூங்கியும் தூங்காமலும் போனது அவ்விரவு. அப்படியே பேசியும் பேசாமலும் அங்கிருந்த நாட்களைக் கடத்திவிட்டு வீட்டுக்குப் போனார்கள் இவர்கள் இருவரும். இவர்களோடேயே வந்து தங்கிக் கொண்டார் தமிழரசன். இவன் மனைவியின் நிலையை விளக்கி வீட்டில் இருந்து வேலை செய்வதாகச் சொல்ல முதலில் அனுமதி கிடைக்கவில்லை. வேலையை விட்டு விடப் போவதாக தமிழிடம் இவன் சொல்ல,

“நமக்கில்லாத பணமாடா! பொண்டாட்டி புள்ளதான் முக்கியம். மொதல்ல அவங்கள பாரு! அப்புறம் வேற வேலைத் தேடிக்கோ!” என இவனுக்கு ஆதரவு கொடுத்தார் அவர்.

தாங்கள் கேட்டது கிடைக்காமல் போக சிலர் மேனேஜ்மெண்டை மிரட்டிப் பார்க்க ராஜினாமா கடிதம் கொடுத்து, ‘நீ கேடினா நான் உனக்கு டாடிடா’ என அவர்கள் சீட்டைக் கிழித்து அனுப்பி விடும் சம்பவங்களை நாம் பார்த்திருக்க, இவனது நல்ல காலம் இவனை இழந்து விட விரும்பாமல் வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனத்தார் ஒத்துக் கொண்டார்கள்.

அப்பாவும் மகனும் பாத்ரூம் தவிர வேறு எங்கும் நடக்காதபடி இவளை கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். செக் அப் போகும் போது கூட வீல் சேரில் அமர்த்தியே அழைத்துப் போனார்கள். அன்பழகி தினமும் வேலை முடிந்து வந்து பார்த்துக் கொள்வார். ஆண்கள் பகலில் சமைத்து வைக்க, இரவு உணவை அன்பழகி செய்து கொடுப்பார்.

கணவன் மனைவிக்குள் திருமணம் முடிந்த போது இருந்தது போல பேச்சு வார்த்தை தேவைக்கென மட்டும் இருந்தது. எதாவது பேசி இப்பொழுது இருக்கும் சுமூகமான உறவை கெடுத்துக் கொள்வோமோ எனப் பயந்தே இவன் வாய் மூடி நின்றான். இவளோ பேச ஆரம்பித்தால் மாமனாரின் முன்னால் ரசபாசம் ஆகி விடுமோ என அஞ்சி அமைதியாக இருந்தாள்.

இரண்டு வாரங்கள் இவர்களோடு தங்கி இருந்த தமிழ், வேலைக்கு அதற்கு மேல் லீவ் போட முடியாது எனக் கிளம்பிப் போனார். போகும் முன் மகனிடம் மனைவியை கவனமாய் பார்த்துக் கொள்ளும்படி பல நூறு முறையாவது சொல்லி இருப்பார். எப்பொழுதும் கவுண்ட்டர் கொடுப்பவன், இம்முறை அமைதியாக தலையாட்டிக் கேட்டுக் கொண்டான்.

மகன் அறியாமல் மருமகளிடம்,

“தப்பு தவறு செய்யாதவங்கன்னு இந்த உலகத்துல யாரும் இல்லைடா மருமகளே! புருஷன் பொண்டாட்டின்னு வந்துட்டா முடிஞ்ச அளவுக்கு எதா இருந்தாலும் பேசி தீர்த்து, மன்னிச்சு மறந்து அடுத்த சண்டைக்கு ரெடியாகிறனும். புரியுதா நான் என்ன சொல்ல வரேன்னு?” எனக் கேட்டார்.

இவள் புரிகிறது எனத் தலையாட்ட,

“சந்தோஷமா இருடாம்மா!” என இவள் தலையைத் தடவிக் கொடுத்து விட்டுப் போனார்.

அவர் கிளம்பியதும், வீடு இன்னும் பேரமைதியாகிப் போனது. இவன் எதாவது பேசிப் பார்த்தாலும் பதில் ஒன்றிரண்டு வார்த்தைகளில்தான் வந்தது. மீதி நேரம் எல்லாம் மௌனம்தான் அவள் மொழியாகிப் போனது. அந்த மௌனம் பேரிரைச்சலாய் இவன் காதைத் தாக்கி கவனத்தை சிதைத்தது.

‘பேசாமடந்தையே

விழி பேசும் சித்திரமே’ எனப் பாடாத குறையாக சுற்றிக் கொண்டிருந்தான் எழிலரசன்.

பல நாட்கள் யோசனையாய் படுத்திருந்தவள், அன்றைய மாலைப் பொழுதில் அவளுக்கு டீ போட்டு கொண்டு வந்தவனைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள். இவனுக்கு ஆகாயமே கை சேர்ந்து விட்டது போல அப்படி ஓர் ஆசுவாசம்.

“மன்னிச்சிடியாடா என்னை?” எனக் கேட்டவனின் குரலில் ஒரு துள்ளல்.

“உங்கள மன்னிக்க நான் யாரு?”

“எதே!!!”

மனைவியின் பதிலில் கலவரமானான் இவன்.

“அதாவது உங்கள மன்னிக்க நான் யாருன்னு கேட்டேன்?”

“பூக்குட்டி! இப்படிலாம் டெரரா பேசி பீதிய கெளப்பாதே”

“இனி இந்த பூக்குட்டி, பூனைக்குட்டிலாம் தேவையில்ல! புள்ள பொறந்து உடம்பு தேறுற வரைக்கும் இங்க இருப்பேன்! அதுக்கு அப்புறம் பையனைத் தூக்கிட்டு என் புருஷன் வீட்டுக்குப் போயிடுவேன்”

“இதான்டி உன் புருஷன் வீடு”

“இது யாரோ ஒரு சீனனோட வீடு! என் புருஷன் வீடு திருச்சில இருக்கு! இனிமே அங்கதான் நான் லிவிங்ஸ்டன். என் புருஷனப் பெத்த அப்பா இருக்காரு! அவர் நிழல்ல நாங்க இருந்துப்போம்! நீங்க வேணா எனக்கு”

“புருஷன் வீடு வேணும், புருஷன் அப்பா வேணும், புருஷன் குடுத்தப் புள்ள வேணும், அந்த அப்பாவி புருஷன் மட்டும் வேணாமா? இதெல்லாம் எந்த ஊரு நியாயம்?” என கோபமாய் கேட்க நினைத்தவன், மனைவியின் உடல் நிலை கருதி சோகமாய் கேட்டான்.

“மனசளவுல உங்கள நான் டைவர்ஸ் பண்ணிட்டேன்! டைவர்ஸானா சொத்து பத்துன்னு கோர்ட்ல கேஸ் போட்டு பிரிச்சுக் குடுப்பாங்கல்ல, அது போல நெனைச்சிக்கோங்க! எனக்கான ஷேரா உங்கப்பா, உங்க வீடு, உங்க புள்ள மட்டும் போதும்! மத்தது எல்லாம் நீங்களே வச்சிக்கலாம்”

“கேடிடி நீ! என் கிட்ட இருந்து மொத்தத்தையும் புடிங்கிட்டு என்னை தெருக் கோடில விடப் போறன்றத எவ்ளோ நேக்கா சொல்ற! எல்லாத்தையும் நீயே வச்சிக்கோ! இப்போ நான் சம்பாதிக்கறது, இனி சம்பாதிக்க போறது எல்லாத்தையும் உனக்கே தரேன்! ஆனா உன் புருஷனோட பொண்டாட்டிய மட்டும் என் கிட்ட குடுத்துடு! ப்ளிஸ்! அவள இனி கண்ணு கலங்காம நான் வச்சிப் பார்த்துக்கறேன்! ப்ளிஸ்! ப்ளிஸ்! ப்ளிஸ்”

 

(இதயம் போகும்…)

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி! இந்த எபி ரொம்ப நேரம் எடுத்துருச்சு. இன்னிக்கு எழில் சைட் கதைய சொல்ல வேண்டியது. இந்த medical condition பத்தி விழுந்து2 படிச்சதுல டைம் ஓடிருச்சு. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு இன்ஃபோ சொல்லிருக்கேன். தவறு இருந்தா மன்னிக்கவும்.  நாளைக்கு போடலாம் எபியன்னு நெனைச்சேன். யவனாவுக்காக காத்திருப்பீங்கன்னுதான் இன்னிக்கே போட்டுட்டேன். இனி அடுத்த எபில சந்திக்கலாம்! லவ் யூ ஆல் டியர்ஸ்)