Ithayam Poguthe–EPI 19(Epilogue)

IP-3251782d

அத்தியாயம் 19(எபிலாக்)

 

(லிங்க் ஒரு வாரத்துல எடுத்திருவேன்! உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட படிக்க ஆரம்பிக்க சொல்லிடுங்க டியர்ஸ்)

பாதி படிகளில் களைத்துப் போய் அமர்ந்து விட்டான் எழிலரசன். கையிலிருந்த ஐந்து மாத மகன் இன்பரசனை(தோழி விஜி ரமேஷ் ஒரு பேர் லிஸ்ட்டே குடுத்துருந்தாங்க கமேண்ட்ல! இந்த பேர் பிடிக்கவும் நான் எடுத்துக்கிட்டேன். நன்றி தோழி) தொடையில் படுக்க வைத்துக் கொண்டவன்,

“ஏன்டா குண்டா! பார்க்கத்தான் அப்படியே உங்கம்மாவ உரிச்சு வச்சிருக்கனா, அவ மாதிரியே எல்லாத்துலயும் இருந்தா நான் எப்படிடா சமாளிக்கறது???” எனச் சொல்லி, கக்கி வைத்திருந்தவனின் வாயை மென்மையாகத் துடைத்து விட்டான்.

மகனின் மொட்டை மண்டையில் இருந்த சந்தனம் தன் வெள்ளை வேட்டியில் பட்டு கறையாவதைக் கூட பொருட்படுத்தாமல், மகனின் நெஞ்சை லேசாக நீவி விட்டான். அவர்கள் வாழ்க்கைக்கு இன்பத்தைச் சேர்த்திருந்தவனுக்கு இன்பரசன் என இவன்தான் தேடித் தேடிப் பெயர் சூட்டினான். அவனருகே அசந்து போய் வந்தமர்ந்தாள் பிரியவதனா. எலுமிச்சை தோலை முகர்ந்துக் கொண்டே கணவனின் தோள் சாய்ந்தவள்,

“பிள்ளை சுமந்தப்ப கூட இந்த வாந்தி பிரச்சனை இல்லை எனக்கு! கார்ல மலை ஏறுனாத்தான் படுத்தும்னு நெனைச்சா படி ஏறுனா கூட படுத்துதே!” எனச் சொன்னவள் சோர்ந்து போய் தெரிந்தாள்.

கை நீட்டி அவள் முதுகைத் தடவிக் கொடுத்தவன்,

“இன்னும் கொஞ்சம் தூரம்தான்டி! திரும்பி வரப்போ ட்ரேன்ல இல்லனா ரோப் கார்ல வந்திடலாம்” எனச் சமாதானப்படுத்தினான்.

புன்னகையுடன் கணவனின் மொட்டை மண்டையைத் தடவிக் கொடுத்தவள்,

“வாந்தி வந்தா, தன்னோட துணையோட முடிய மோந்துப் பார்த்தா நின்னுடுமாம்! இப்படி மொட்டைப் பயலாகிட்டியே மாமா! நான் மோந்துப் பார்க்க முடிக்கு எங்க போவேன்” எனக் கிண்டலடித்தாள்.

“கைய எடுடி, கூசுது!” என நெளிந்தவனைப் பரிவாகப் பார்த்தாள் பிரியவதனா.

‘இவன் என் கணவன்!’ என மனம் விம்மித் தணிந்தது.

“ஐ லவ் யூ மாமா”

“அடி வாங்கப் போற நீ! பழனி மலை கோயில் படிக்கட்டுல உக்காந்துகிட்டு லவ்வு, ஜவ்வுன்னு! அபச்சாரம், அபச்சாரம்!” என இவன் கன்னத்தில் போட்டுக் கொள்ள, அப்படி ஒரு சிரிப்பு இவளுக்கு.

அவர்களைப் பார்த்தபடியே படி ஏறி வந்த தமிழரசனுக்கு முகம் மலர்ந்து விட்டது. அழகிய ஓவியமாய் அவர்கள் சிரித்தபடி அமர்ந்திருந்த காட்சி ப்ரேம் போட்ட புகைப்படமாய் அவர் மனதில் போய் மாட்டிக் கொண்டது.

இவர்களின் மேலிருந்த படியில் இருந்து,

“டேய் எழிலு! வெயில் ஏறுதுடா! இன்னும் லேட்டான ரொம்ப களைச்சிடும்! ஏறி வாங்க எல்லாம்” எனக் குரல் கொடுத்தான் திருவரசன். அவனருகே அவனது குண்டனும் மனைவியும் நின்றிருந்தார்கள்.

இன்பரசன் பிறந்து ஐந்து மாதங்களாகி இருந்தன. சிசேரியன் செய்திருந்தவள் உடல் தேறட்டும் என சிங்கப்பூரிலே இந்த ஐந்து மாதங்களும் இருந்தார்கள். கணவன், கலை, அன்பழகி என எல்லோரின் கவனிப்பிலும் நன்றாக உடல் தேறி இருந்தாள் பிரியவதனா. சின்னவனுக்கும் பாஸ்போர்ட், மற்ற டாக்குமேண்ட்கள் எல்லாம் எடுத்து இப்பொழுதுதான் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். பிரியவதனாவுக்கு கர்ப்பக் காலத்தில் சிக்கல் வந்த போதே பழனி முருகனுக்கு வேண்டுதல் வைத்திருந்தான் எழிலரசன். குழந்தைக்கும் தனக்கும் மொட்டைப் போட்டு, அவனை சுமந்தபடி படி ஏறி வருவதாக வேண்டி இருந்தான். திருச்சிக்கு வந்து, சற்று ஓய்வெடுத்து விட்டு மறுநாளே குடும்பத்துடன் பழனிக்குக் கிளம்பி வந்திருந்தார்கள்.

“நானும் பையனும் படி ஏறி வரதாதான் வேண்டுதல். உன்னை ரோப் கார்லதானே அப்பா கூட வர சொன்னேன்! பிடிவாதம்டி உனக்கு! இப்போ பாரு, எவ்ளோ கஷ்டப்படற” எனக் கடிந்தபடி மகனைத் தோளில் போட்டுக் கொண்டவன், அவள் எழ கை கொடுத்தான்.

“எந்த வேண்டுதல் செஞ்சாலும் குடும்பமா செய்யனும் மாமா! உங்க ரெண்டு பேர விட்டுட்டு நான் மட்டும் எப்படி சொகுசா வருவேன்! முடியாது!” எனச் சொல்லியவள், கீழே இறங்கி தமிழிடம் சென்று அவருக்குக் குடிக்கக் தண்ணீர் கொடுத்தாள். அவரும் ரோப் காரில் வராமல் இவர்களோடுதான் வருவேன் எனப் பிடிவாதமாக வந்து கொண்டிருந்தார்.

எல்லா விஷயத்திலும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் குடும்பத்தைப் பெருமையுடன் பார்த்தவன்,

“டேய் குண்டா! ரெடியா?” எனக் கேட்டான்.

மகன் அவனது பாஷையில் ஏதோதோ சொல்ல, அதை ரசித்துப் பார்த்தவன்,

“இப்பவே என்னப் பேச்சு பேசறடா நீ! இதுல மட்டும் என்னை கொண்டு பிறந்திருக்க நீ!” எனச் சிலாகித்துக் கொண்டான்.

மகனின் பேச்சில் உற்சாகம் ஊற,

“கந்தனுக்கு!!” எனக் கத்த ஆரம்பித்தான் எழில்.

மேலே தன் தகப்பனுடன் நின்றுக் கொண்டிருந்த பெரிய குண்டன்,

“அரோகரா” என பதில் கொடுத்தான்.

“முருகனுக்கு” என இவன் கூவ, கூட இவர்களோடு படி ஏறிக் கொண்டிருந்த மற்ற பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டார்கள்.

“வேலனுக்கு”

“அரோகரா!!”

“குமரனுக்கு”

“அரோகரா” எனக் கூவியபடியே வேக வேகமாய் படி ஏறினார்கள் எல்லோரும்.

வாய் விட்டு மனம் மலர்ந்து கந்தனை அழைத்தால், களைப்பு எல்லாம் காத தூரம் ஓடி விடுமல்லவா!!!

அன்றைய தினம் பார்த்து அப்படி ஒரு கூட்டம் பழனி மலையில்.

“பழனியிலே இருக்கும்

கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம்” எனப் பாடல் முழங்கிக் கொண்டிருக்க, குட்டி குண்டன் கத்தி அழுது தீர்த்தான்.

கசகசவென மக்கள் கூட்டம், பேரிரைச்சல் என சின்னவனுக்குத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வியர்த்துப் போய், முகம் சிவக்கக் கத்தினான். சட்டையை எல்லாம் கழட்டி விட்டு, வெறும் பேம்பர்ஸ், ஜட்டியோடு அவனை மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டார்கள். கூட்டம் இடித்துத் தள்ள, மகனை பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான் எழில். பெண்களையும் அழகரசனையும் நடுவே விட்டு, தமிழும் திருவும் முன்னேயும் பின்னேயும் நின்று அழைத்து வந்தார்கள்.

முருகனின் திருமுகம் கண்ட நொடி, களைப்பு, கசகசப்பு எல்லாம் மறந்து, மறைந்துப் போனது இவர்களுக்கு. ஒரு கரத்தில் மனைவியைப் பிடித்துக் கொண்ட எழில், இன்னொரு கரத்தால் மகனைத் தோளில் போட்டுப் பிடித்துக் கொண்டு, மனமுருக முருகனின் முன்னே,

“நன்றிப்பா நன்றி!!!” என கண்ணீர் மல்க நின்றான்.

வேறு வார்த்தைகள் வரவில்லை அவன் வாயில்! வதனாவுமே கண்ணீர் மல்க அவனருகே நின்றிருந்தாள்.

ஒரு வழியாக நகர்ந்து, நகர்ந்து முருகனைத் தரிசித்து விட்டு வருவதற்குள் எல்லோருமே ஒரு வழியாகிப் போயிருந்தனர். வீல் வீலெனக் கத்திக் கொண்டிருந்த மகனைக் கணவனிடம் இருந்து வாங்கிக் கொண்டாள் இவள்.

அவனைச் சமாதானப்படுத்தி தூணுக்கு மறைவாய் அமர்ந்து இவள் பசியாற்ற, அவளை மறைத்தப்படி அமர்ந்துக் கொண்டாள் அருணா. ஆண்கள் இருவரும் பிரசாதம் வாங்கப் போக, பெண்கள் இருவருக்கும் துணையாக பெரிய குண்டனுடன் ஓர் ஓரமாய் நின்றுக் கொண்டான் எழில்.

“சித்தப்பூ”

“என்னடா?”

“தூக்கு என்னை”

“டேய்! நீ என்ன குழந்தையாடா தூக்கி வச்சிக்க! சித்தப்பூக்கு இடுப்பு அப்பளப்பூ(அப்பளம்) மாதிரி நொருங்கிடும்டா”

பெரியவன் சிணுங்க, புன்னகையுடன் அவனைத் தூக்கிக் கொண்டான் இவன்.

“நீ தம்பிய மட்டும்தான் தூக்கற! இப்போலாம் என்னைக் கண்டுக்கறதே இல்ல! நான் கோவாவா(கோபமா) இருக்கேன்”

“நீ கோவாவா இருந்தாலும், கோயம்புத்தூரா இருந்தாலும் நீதான்டா என் மொத மகன். எங்க வீட்டுப் பெரிய குண்டன்” எனக் கொஞ்சினான் அழகரசனை.

“அப்டினா எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் குடு” எனப் பஞ்சு மிட்டாய் விற்பவரை கை காட்டினான் இவன்.

“அப்படியே அப்பனே மாதிரியே விஷம்! விஷம்! பேசியே கையில உள்ள பேலன்ஸ புடிங்கிறது!” எனப் புன்னகையுடன் சொன்னபடியே அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தான் எழில்.

தமிழும் திருவும் பஞ்சாமிர்தம் மற்றும் வேறு பிரசாதங்களும் வாங்கிக் கொண்டு வர, எல்லோருமே பேசிக் கொண்டு பகிர்ந்து உண்டார்கள். தமிழ் இன்னும் சற்று நேரம் அங்கிருக்கப் பிரியப்பட, திருவின் குடும்பம் அவரோடு நின்றுக் கொண்டார்கள். மகனைக் குளிக்க வைத்து, படுக்க வைக்க வேண்டுமென எழிலும் வதனாவும் மலை இறங்க ரோப் காரில் அமர்ந்தார்கள். அவர்கள் மூவர் மட்டும் அதிலிருக்க,

“மாமா” என அழைத்தாள் இவள்.

“ஏம்மா?” என்றான் இவன்.

மகன் அவன் தோளில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

“நான் ரெடி”

“எதுக்கு?”

“அதுக்கு”

“அதுக்குனா எதுக்கு?”

“கடவுளே முருகா!”

“ரோப் கார்ல தொங்கிட்டு அவர கூப்புடறதுக்கு பதில், சந்நிதானத்துல கூப்டிருந்தா புண்ணியமாச்சும் கிடைச்சிருக்கும்டி”

“சரியான குழாய்(டியூப்) ஒளி(லைட்)ய கட்டிக்கிட்டு நான் படற பாடு!!!”

“பாருடா குண்டா உங்கம்மா செந்தமிழ்ல திட்ட ஆரம்பிச்சிட்டா” என மகனிடம் பஞ்சாயத்தைக் கொண்டுப் போனான் இவன்.

குண்டா எனும் ஒலி கேட்டு லேசாய் முண்டியவன், மீண்டும் உறங்கிப் போனான்.

“அது சரி! தூங்கறதுல கூட அப்படியே உங்கம்மா மாதிரி கும்பகர்ணன்தாண்டா நீ”

“கூமுட்டையா இருக்கறதுக்கு கும்பகர்ணனா இருக்கலாம்” என முணுமுணுத்தாள் இவள்.

“எதே!!!! கூமுட்டை??? மீ????”

“ஆமா! யூ!!!”

“ரைட்டு! என் கூட சண்டைப் போடத்தான் ரெடினு சொன்னியா நீ!!! எங்கடா கொஞ்ச நாளா எல்லாம் ஸ்மூத்தா போகுதேனு நெனைச்சேன்!”

“ஆமா! சண்டைப் போட ரெடியாகிட்டேன்! கட்டில் சண்டை போட!”

“ஏய்!!! என்னடி சொல்ற!!! நெஜமாவா!?” எனப் பரபரத்தான் இவன்.

“யெஸ் மிஸ்டர் எழில்! உங்களுக்குப் போடப்பட்ட தடா சட்டம், இந்த மாதத்தோடு அகற்றப்பட்டு விட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

குதூகலத்தில் வேகமாய் இவன் மனைவியை நெருங்க, ரோப் கார் லேசாக ஆடியது.

“அவ்வா! அவ்வா! ஏன்டி எப்போ பாரு இந்த மாதிரி நல்ல விஷயத்த ஒன்னு பஸ்ல வச்சி சொல்லற, இல்ல பப்ளிக்ல வச்சி சொல்லற! இப்போ உசுர் அந்தரத்துல ஊஞ்சலாடிட்டு இருக்கர ரோப் கார்ல வச்சி சொல்லற! சத்தியமா என்னால முடியலடி” என இவன் புலம்ப, வதனாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“வச்சி செஞ்சிட்டு சிரிப்ப பாரு!” என மலர்ந்திருந்த மனைவியின் உதட்டை ஆசையாக வருடினான் எழிலசரன்.

அறைக்கு வந்து மகனை குளிக்க வைத்து, தானும் குளித்து பால் கொடுத்து இவள் படுக்க வைக்க, குளித்து விட்டு வந்த எழில் ரூம் சர்வீசில் உணவு வரவழைத்தான். இருவரும் உண்டுவிட்டு களைப்பில் கட்டிப் பிடித்துத் தூங்கி விட்டார்கள்.

அன்றைய மாலையே அங்கிருந்து திருச்சிக்கு கிளம்பி விட்டார்கள் எழிலும் அவன் குடும்பத்தினரும். அன்றிரவு தன் குழந்தைகளையும் அவர்கள் குடும்பத்தையும் அமர வைத்து சுற்றிப் போட்டார் தமிழரசன். அவர்களை குழந்தைக் குட்டிகளுடன் பார்க்க மனது நிறைந்துப் போனது அவருக்கு. திருவும் அவன் குடும்பமும் அங்கேயே அன்றிரவு தங்கிக் கொள்ள, சிரிப்பும் கும்மாளமும் வீட்டை நிறைத்தது. இன்பரசன் தமிழின் நெஞ்சில் படுத்திருக்க, அவனைக் கொஞ்சியபடியே தாத்தாவின் அருகே அமர்ந்திருந்தான் அழகரசன்.

குழந்தையைப் பார்க்க வந்த வதனாவின் மாமாவையும் அத்தையையும் இன்முகமாகவே உபசரித்தார்கள் இவர்கள். விசுவநாதன் ஆசையாகப் பேரனை வாங்கிக் கொஞ்சினார். இவள் தலையைத் தடவிக் கொடுத்து,

“சந்தோசமா இருக்கு பிரியாம்மா! பையன் அப்படியே என் தங்கச்சி மாதிரி இருக்கான்! உன்னை மாதிரி ஒரு பாசக்காரிய தள்ளி வச்சு, சொர்க்கத்த இழந்துட்டா உங்கம்மா! இந்த சொர்க்கம் இவங்கள மாதிரி நல்லவங்க கை சேரனும்னுதான் எழுதி வச்சிருக்கு போல! மாமாவுக்கு இப்போ எவ்ளோ நிம்மதியா இருக்குத் தெரியுமா” என்றவர் தன் சம்பாத்தியத்துக்குத் தக்க சின்னவனுக்கு குட்டியாய் ஒரு தங்கச் சங்கிலி போட்டு விட்டார்.    

பூர்ணிமாவும் குழந்தையைக் கொஞ்சி விட்டு, இன்முகத்துடனே இவர்களிடம் விடைப் பெற்றுச் சென்றார். திருமலையைப் பற்றியோ மற்ற கசப்பான சம்பவங்களைப் பற்றியோ பேசிக் கொள்ளவில்லை யாரும்.

அவர்கள் கிளம்பியதும், வீட்டில் இருந்தவர்களும் உறங்கப் போனார்கள். சின்னவனுக்கு பசியாற்றி, உறங்க வைத்தவளைப் பின்னிருந்து கட்டிக் கொண்டான் எழில்.

“யவனா!”

“ஹ்ம்ம்!!”

“தொட வரவோ தொந்தரவோ

உனதுள்ளமே சம்மதமோ!!

இடை ஓர் அழகோ

சிறு நூல் அளவோ ஆஹா அள்ளிடவோ” எனப் பாடியபடியே தாபமாய் அவள் இடைப் பற்றினான் பல மாதமாய் காய்ந்துப் போயிருந்த எழிலரசன்.

இவளோ புன்னகையுடன்,

“தொட விடவோ தொடர்ந்திடவோ

உனதுள்ளமே சம்மதமோ

இடையோ இதழோ இதுவோ அதுவோ

கேட்டால் நான் தரவோ” என இசைந்து கொடுக்கப் பற்றிக் கொண்டது மோகத்தீ!!!

எதே!! தீப்பொறி திருமுகம் இருக்கும் வீட்டில் எனக்குத் தெரியாமல் இன்னொரு தீயா எனக் கொதித்துப் போன சின்னவன், வீலென கத்தி தீயை அணைக்க முனைந்தான். கணவனை ஒரே தள்ளாகத் தள்ளி விட்டு மகனிடம் ஓடிய பிரியவதனா, அவனைத் தோளில் போட்டுக் கொண்டு சமாதானம் செய்ய, அவனோ அழுகையை நிறுத்தவேயில்லை.

“டேய் குண்டா! கரேக்டா டைமிங் பாத்து அலாரத்த ஆன் பண்ணிட்டியேடா! இன்பான்னு பேரு வச்ச எனக்கு இன்பத்தப் புடுங்கிட்டியேடா! அவ்வ்வ்வ்வ்!” என புலம்பிய எழில், எழுந்து மனைவிக்கு உதவ வந்தான்.

இருவரும் மாற்றி மாற்றி அவனைச் சமாதானப்படுத்தி தூங்க வைப்பதற்குள் இவர்களுக்குத் தூக்கம் வந்து விட்டது! அதற்கு மேல் எங்கே தொட விட்டுத் தொந்தரவு செய்ய! குப்புறப்படுத்து குறட்டை விடத்தான் முடிந்தது இருவருக்கும். விடியலில் சிணுங்கிய மகனைத் தூக்கி மனைவியிடம் இவன் கொடுக்க, மகனுக்குப் பசியாற்றிய வதனா, அவன் தூங்கியதும், யவனாவாய் மாறி முதற் குழந்தையின் பசியையும் ஆற்றினாள். காதலாய் சங்கமித்தவர்கள், ஒருத்தரை ஒருத்தர் அணைத்தபடி சுகமாய் பல நூறு கதைகள் பேசினார்கள்.

“மைனர் பொண்ணுக்கு அல்வா குடுத்த மனுஷன்லாம் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கக் கூடாது”

“அடிக் கழுத! மேஜர் பையன் கூட அல்வா சாப்பிட்ட மைனர் பொண்ணுலாம் ரொம்ப நல்லவ மாதிரி பில்டப் குடுக்கக் கூடாது” என இன்னொரு சண்டையை ஆரம்பித்து அவர்கள் சங்கமத்துக்கு அடிப் போட குண்டன் விழித்து விட்டேன் நான் எனச் சிணுங்க ஆரம்பித்தான். ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் புன்னகைத்தவாறே வேலையைப் பார்க்கப் போனார்கள் இருவரும்.

அவன் தேடி அலைந்த காதலை, அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல் அள்ளித் தருவாள் பிரியவதனா! இவள் தேடி அலைந்த அன்பை தோண்டத் தோண்ட ஊறும் ஊற்று நீர் போல வாரிக் கொடுப்பான் எழிலரசன். காதலும் அதனூடே ஒட்டிப் பயணிக்கும் காமமும், அன்பும் அதனூடே ஒன்றிப் பயணிக்கும் அரவணைப்பும், பாசமும் அதனூடே பல்கி பெருகும் பரிவும் சேர நீடுழி வாழ்வார்கள் இவர்கள் என வாழ்த்தி விடை பெறுவோம்.

 

(முற்றும்)

(ஹாய் டியர்ஸ்! ஒரு வழியா கதைய முடிச்சுட்டேன்! என் ஹிஸ்டரிலேயே ஆன்கோயிங் கதைல இதுதான் நான் சீக்கிரமா முடிச்ச கதையா இருக்கும்னு நெனைக்கறேன்!! ஹஹஹ! ரொம்ப ரிலேக்‌ஸா எழுதனேன் இந்த கதைய! உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு நம்பறேன்! பிடிச்சிருந்தா ரிவ்யூ போட்டுட்டு போனிங்கனா, அடியேன் மகிழ்வேன்!  இதோட மெல்ல அடுத்தக் கதைல சந்திக்கலாம் டியர்ஸ். இந்த கதைக்கு லைக் கமேண்ட் போட்ட அன்புள்ளங்களுக்கும், சைலண்ட் ரீடருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். வில் மிஸ் யூ ஆல்! அடுத்த கதையில் சந்திக்கும் வரை லவ் யூ ஆல்)