Ithayam Poguthe–EPI 2

IP-518a11bb

அத்தியாயம் 2

உச்சிப் பிள்ளையாரைத் தரிசிப்பதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள் இருவரும். அவர்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தாள் பிரியவதனா. அவளுக்கு இன்னும் பல படிகள் கீழே அவளது மாமாவும், அத்தையும் வந்து கொண்டிருந்தார்கள்.

வேடிக்கைப் பார்த்தபடியே நண்பர்கள் இருவரும் பேசிச் சிரிப்பதைக் கேட்டுக் கொண்டே மெல்ல படியேறினாள் இவள்.

“மச்சி! மச்சி”

“என்னடா?”

“அந்த பச்சைத் தாவணி போட்டுருக்கற பொண்ண பாரேன்! தெய்வீக அழகா இல்ல!”

“இல்ல”

“போடாங்! அழக ரசிக்கவும் ஒரு கலைக்கண் வேணும்டா! உன்னைப் போல மாலைக்கண் உள்ளவன்கிட்ட போய் அபிப்ராயம் கேட்டேன் பாரு! என் புத்திய……”

“அடடா!! உன் புத்திய அடிக்க செருப்புக் குடுத்து உதவலாம்னு பார்த்தா, அதை கீழல கழட்டி வச்சிட்டு வந்துட்டேன்”

“வாய்ல நல்லா வந்துடும் பார்த்துக்க!”

“கோயிலுக்கு போறோமே, இப்பவாச்சும் உன் ஜொள்ளு மூட்டையை இறக்கி வச்சிட்டு வரக் கூடாதாடா, கடன்காரா”

“அதெல்லாம் பிறப்புலயே வந்தது மச்சி! இறக்கியும் வைக்க முடியாது, கழட்டியும் விட முடியாது”

“தமிழ்கிங்(அரசன்) கிட்ட சொன்னா, மொத்தமா கழட்டிடுவாரு உன்னோட எலும்பையெல்லாம்”

“டேய்! டேய்! அந்தாள இப்போ ஏன்டா இழுக்கற! நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா உனக்குப் புடிக்காதே! போடா!” என முகத்தைத் திருப்பிக் கொண்டான் எழில்.

“சரி சரி! உடனே டவுனாகிடாதே! அந்த பச்சையை ஏன் அழகுன்னு சொல்றன்னு கொஞ்சம் டீட்டேல் சொல்லு” எனக் கேட்டு நண்பனை மீண்டும் கலகலப்பாக்க முயன்றான் மலை.

நண்பர்கள் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்த பச்சை தாவணியை கவனிக்க ஆரம்பித்தாள் பிரியவதனா. இவர்களைத் தாண்டி மேலே விடுவிடுவென ஏறி விட்டிருந்தாள் அவள். அசைந்தாடும் பின்னழகு மட்டுமே தெரிந்தது இவளுக்கு.

“அவளுக்கு ரொம்ப நல்ல ரசனைடா! சிகப்பு பாவாடை சட்டைக்கு, பொருத்தமா அவ போட்டிருந்த பச்சை தாவணி அவளோட பிங்க் நிற ஸ்கின்னை தூக்கிக் காட்டுது! காதுல போட்டிருந்த குடை ஜிமிக்கி அவ நடக்கறப்போ ஜலக் புளக்னு ஆடி அசைஞ்சது பார்க்கவே கவிதை மச்சி! கழுத்துல போட்டிருந்த மயில் முகப்பு வச்ச சங்கிலி ‘மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்’னு பாட சொல்லுதுடா! மூக்குல சிகப்புக் கல் மூக்குத்தி, என்னமா டாலடிச்சுச்சு தெரியுமா?” என்றான் ரசனையாக.

“அடப்பாவி! ஒரு ரெண்டு செகண்ட்ல நம்மள க்ராஸ் பண்ணி போயிருப்பாளா அவ! அதுக்குள்ள இவளோ நோட்டிஸ் பண்ணிருக்கியா?”

“அதான் மச்சி என்னோட ஸ்பெஷல் ஸ்கில்”

“ஆமாம்டா ஆமா! கம்பஸ் இண்டேர்வியூல இத சொல்லு, உடனே வேலைப் போட்டுக் குடுத்துடுவானுங்க” என திருமலை சொல்ல, களுக்கென சிரித்து விட்டாள் சின்னவள்.

சட்டென நண்பர்கள் இருவரும் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். மலை முறைத்துப் பார்க்க, எழிலோ கடுப்பாய் பார்த்தான். சட்டெனத் தலையைக் குனிந்துக் கொண்டாள் இவள்.

“சிரிப்ப பாரு சிரிப்ப! தெண்ட கருமாந்திரம்” எனச் சத்தமாகவே முணுமுணுத்தான் மலை.

“அட ஏன்டா சின்னப் புள்ளய திட்டிட்டே இருக்க! வா நாம பச்சைத் தாவணிய நெருங்கிப் போகலாம்” எனச் சொல்லி நண்பனை இழுத்துக் கொண்டு வேகமாக மேலேறினான் எழிலரசன்.

திருமலையின் திட்டில் சட்டென கண் கலங்கி விட்டது பிரியவதனாவுக்கு. பொங்கி வரப் பார்த்த அழுகையை அடக்கிக் கொண்டவள், படியின் ஓர் ஓரமாய் அமர்ந்துக் கொண்டாள். தான் இங்கே வந்தது மாமாவைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை எனப் புரிந்தது பெண்ணுக்கு. அத்தையும் அவர் பெற்ற மகனும் வார்த்தைகளாலே அவளைக் கொன்றுப் போட்டார்கள். சனியன், தண்ட சோறு, பீடை, ஓடுகாலி பெற்ற மகள் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டாள் பிரியவதனா. மாமா மட்டும் கண்ணு என அழைத்துப் பேசுவார்.

“கண்ணு! நான் ப்ரைவெட் கம்பெனில சாதாரண குமாஸ்தா வேலைப் பார்க்கறேன்மா! அந்த அளவுக்குத்தான் உன் பாட்டி தாத்தாவுக்கு என்னைப் படிக்க வைக்க முடிஞ்சது! உங்கம்மாவ ப்ளஸ் ஓன்லயே படிப்ப நிறுத்தி அவங்க கூட காடு கழனில வேலைக்கு அழைச்சுக்கிட்டாங்க! அண்ணா படிக்கட்டும்னு உங்கம்மாவும் ஓடா உழைச்சு தேஞ்சா! அந்தப் பாசமும் நன்றியும் என் நெஞ்சு முட்ட இருக்கு கண்ணு! உன்னைப் பார்த்துக்க சொல்லி அவ கெஞ்சிக் கேக்கவும், ஏன் எதுக்குன்னு கூட கேக்காம இங்க கூட்டிட்டு வந்துட்டேன். நான் எடுக்கற சம்பளத்துல கட்டு செட்டா குடுத்தனம் பண்ணறா உங்கத்தை. இப்போ நீ வேற சுமையா வந்துட்டியேன்னு கோபம் அவளுக்கு. மத்தப்படி நல்லவதான் கண்ணு! அத்தை என்ன சொன்னாலும் பொறுத்துப் போய்டும்மா தங்கம்!”

சரியென தலையாட்டியிருந்தாள் பிரியவதனா. மாமா அருகில் இருந்த பள்ளியிலும் சேர்த்து விட்டிருக்க, படிப்பதோடு வீட்டு வேலைகளிலும் உதவியாய் இருந்தாள். வாய் இருப்பது சாப்பிட மட்டுமே, பேசுவதற்கு இல்லை என்பது போல இருந்து கொள்வாள். கொடுக்கும் உணவை வயிற்றுக்குப் பத்துகிறதோ இல்லையோ, எதுவுமே சொல்லாமல் உண்டு விடுவாள். மொத்தத்தில் அந்த வீட்டில் இருக்கும் மேசை நாற்காலி போல இவளும் வாயிருந்தும் இல்லாத ஜடமாய் வாழ கற்றுக் கொண்டு வருகிறாள்.

மனம் சற்று சமனப்பட்டதும் மீண்டும் படி ஏற ஆரம்பித்தாள் வதனா. அங்கே உச்சிப் பிள்ளையாரை பார்க்கப் போகும் முன், பெட்டிக் கடைகள் இருக்கும் திறந்த வெளி இடத்தில் பச்சை தாவணி ஓர் ஓரமாய் நின்று சோடா குடிக்க, அவளைப் பார்த்தபடி எழிலரசன் நின்றிருப்பதைக் கண்டாள் பிரியவதனா. என்னமோ அவனை ரொம்பவே பிடிக்கும் வதனாவுக்கு. முதன் முதலில் அந்த வீட்டில், அவள் பசிக்கு உணவிட்டவன் அல்லவா! அதன் பிறகும் கூட, வீட்டிற்கு வந்தால்,

“ஏய் குட்டி! நல்லாருக்கியா?” என ஒரு வார்த்தைக் கண்டிப்பாக கேட்பான்.

அவள் பதில் சொல்கிறாளா இல்லையா என நின்றெல்லாம் பார்க்காமல், நண்பனைத் தேடிப் போய் விடுவான். தன்னையும் மதித்துப் பேசுகிறானே என மனம் மகிழ்ந்து விடும் இந்தக் குட்டிக்கு.  

அவன் அருகே போய் நின்றவள், மலை அருகில் இருக்கிறானா என சுற்றி முற்றிப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“மாமா”

தூக்கி வாரிப் போட்டது எழிலுக்கு.

“எதே!!!! மாமாவா?”

“ஆமா! திருமலை மாமாவ மாமான்னு கூப்டனும்னு எங்க மாமா சொன்னாரு! மாமா சொன்னப்படி பார்த்தா, மலை மாமாவோட ப்ரேண்ட் நீங்களும் எனக்கு மாமாத்தானே”

“எத்தனை மாமாடா சாமி! சர்தான்! மலை மாமான்னா நானும் மாமந்தேன்! கூப்டு கூப்டு!”

“மாமா”

“என்ன?”

பேச்சு இவளிடம் இருந்தாலும் பார்வை பச்சை தாவணி மேலேயே இருந்தது.

“சோடா ஒன்னு வாங்கிக் குடுக்கறீங்களா?”

“நீயே போய் வாங்கிக்க போ” என்றவன் அவ்விடத்தை விட்டு நகரப் பிரியப்படவில்லை.

அவனது சட்டையின் கீழ் பாகத்தைப் பிடித்து மெல்ல இழுத்த வதனா,

“மாமா!” என அழுத்தமாகக் கூப்பிட்டாள்.

“ம்ப்ச்! என்ன?” என்றபடியே அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“சோடா வாங்க காசு இல்ல மாமா”

அவள் முகத்தில் சோர்வைக் கண்டவன்,

“சரி வா” என்றபடியே பெட்டிக் கடைக்குச் சென்றான்.

“ண்ணா! சோடா ஒன்னு!” என்றவன் இவளைத் திரும்பிப் பார்க்க, அவளது பார்வை லிம்காவின் மேல் இருந்தது.

“லிம்கா வேணுமா?”

“இல்ல, இல்ல! அது விலையா இருக்கும்”

“ஆமா, வைரம் வைடூரியம் விக்கற விலைதான். லூசு குட்டி!” எனத் திட்டியவன், சோடாவைத் தான் எடுத்துக் கொண்டு இவளுக்கு லிம்காவை வாங்கிக் கொடுத்தான்.

“நன்றி மாமா” எனப் பணிவாக சொன்னவள், பாட்டிலில் அடைக்கப் பட்டிருந்த பானத்தை ஆசையாகக் குடித்தாள்.

ஐநூறு ரூபாயை கொடுத்து மீதி சில்லரை வாங்கியவன், அதை அப்படியே அவள் கையில் திணித்தான்.

ஆவென வாய் பிளந்து இவள் பார்க்க,

“பொம்பள புள்ளைங்க கையில எப்பவும் ஆபத்து அவசரத்துக்கு கொஞ்சமாச்சும் காசு இருக்கனும். இதை அவசர செலவுக்கு வச்சிக்க” என்றவன், மீண்டும் சைட் அடிக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

கையில் இருந்த பணத்தையும், அவன் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது. செலவுக்கு வைத்துக் கொள் என இந்த பதினைந்து வருடங்களில் யாரும் அவளுக்குப் பணம் கொடுத்தது கிடையாது. அம்மா வீட்டில் இருந்த போது, பள்ளிக்கு உணவு எடுத்துப் போவாள். இங்கேயும் அதே போல உணவு எடுத்துப் போய் விடுவாள். அதனால் செலவுக்கு என பணம் ஏதும் கொடுப்பதில்லை பூர்ணிமா. மற்றவர்கள் ஐஸ்கிரீம், தின்பண்டங்கள் என வாங்கி சாப்பிடும் போது ஏக்கமாக இருந்தாலும், பணம் கேட்டு திட்டு வாங்கி விடக் கூடாது என உறுதியாய் இருந்தாள்.

இப்பொழுது எழில் கொடுத்தப் பணத்தை பொக்கிஷம் போல பொத்திப் பிடித்தவள் அவனை நிமிர்ந்துப் பார்த்து,

“ந..நன்றி மாமா” என்றாள் அழுகைக் குரலில்.

சைட்டில் கவனமாய் இருந்தவன்,

“ஓகே! ஓகே!” என்பதோடு நிறுத்திக் கொண்டான்.

அதற்குள் திருமலை சாமி தரிசனம் முடித்துக் கொண்டு கீழே இறங்க, இவளைப் பார்த்தால் திட்டுவான் என அறிந்திருந்தவள், விடுவிடுவென சாமியைத் தரிசிக்கக் கிளம்பினாள். நாக்கில் லிம்காவின் சுவை இனிக்க, கையில் பணம் சுகமாய் கணக்க, கண்ணில் மின்னலுடன், முகத்தில் பூரிப்புடன் தொப்பைப் புள்ளையாரைப் பார்க்கப் போனாள் பிரியவதனா. வாய்,

“அப்பனே அப்பனே

புள்ளையார் அப்பனே

போடவா தோப்புக்கரணம் போடவா” என சந்தோஷமாய் முணுமுணுத்தது.

மற்றொரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடைப் போட்டுக் கொண்டிருந்தவளுக்கு எப்பொழுதும் போல பார்வை அந்த அழகிய வீட்டின் மாங்காய் மரத்தில் நிலைத்தது. கொத்து கொத்தாய் மாங்காய் பழுத்துத் தொங்க, குருவிகள் அதை கொத்தித் தின்றுக் கொண்டிருந்தன. வதனாவுக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

‘காம்பவுண்டு மேல ஏறி ஒரே ஒரு மாங்க பறிச்சுப்போமா? குருவி, காக்காய்லாம் சாப்பிடுது, நான் ஒன்னு பறிச்சு சாப்டா தப்பா?’ என உசுப்பி விட்டது மனம்.

‘அடியே, குருவி காக்காய்கெல்லாம் அறிவு கொறைச்சல்! அதனால யார் வீட்டு மரமா இருந்தா எனக்கென்னன்னு கொத்தித் தின்னுது. உனக்கு ஆறு அறிவு இருக்குத்தானே! திருடி சாப்டறது தப்புன்னு தெரியாது?’ என மூளை தடா போட்டது.

மூளை, மனம் எனத் தடுமாறிக் கொண்டிருந்தவளின் நாக்கு ஜெய்த்து விட, எப்படி அதைப் பறிப்பது என சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“நான் ஒன்னும் திருடல! எழில் மாமா குடுத்த காசு இருக்கு. மரத்துக் கீழ இருபது ரூபா போட்டிடறேன்” என முணுமுணுத்துக் கொண்டாள் வதனா.

காம்பவுண்டு சுவர் அவள் வளர்த்திக்கு இருந்தது. பக்கத்தில் பெரிய கல் இருக்க, அதில் கால் வைத்து ஏறி சுவர் மேல் ஏறிவிட்டாள் வதனா. அதன் மேலே மெல்ல நடந்து மரத்தின் அருகே வந்தவளின் கண்ணுக்கு கீழே ஒரு மனிதர் தலைக் குப்புற விழுந்து கிடந்தது கண்ணில் பட்டது.

“ஐயய்யோ!” எனக் கத்தியவள், வீட்டின் பக்கம் ஒரே தாவாக குதித்தாள்.

பட்டென கீழே விழுந்தவளுக்கு கையில் சிராய்த்து விட்டிருந்தது. அதைக் கண்டுக் கொள்ளாமல் ஓடிப் போய் அவர் அருகே அமர்ந்தவள்,

“சார், சார்” என அவர் முதுகைத் தட்டினாள்.

அசைவே இல்லாமல் கிடந்தார் அவர். இவளுக்குப் பதட்டமாகிப் போக, பலம் கொண்டும் மட்டும் அவரைத் திருப்பி மல்லக்கப் போட்டாள். மூக்கில் கை வைத்துப் பார்க்க, மூச்சு இருந்தது.

“அப்பாடா!” எனப் பெருமூச்சு விட்டவள், வீட்டின் உள்ளே ஓடினாள்.

“யாராச்சும் இருக்கீங்களா?” என இவள் சத்தத்தில் ஒரு வயதானவர் ஓடி வந்தார்.

“யாருமா நீ? என்ன வேணும்?”

“தாத்தா! வெளிய ஒருத்தர் மாங்கா மரத்து கிட்ட மயங்கிக் கிடக்காரு”

அவள் சொன்னதைக் கேட்டு இவர் அடித்துப் பிடித்து வெளியே ஓடினார். இவளோ சாப்பாட்டு மேசையில் இருந்த தண்ணீர் கூஜாவைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தாள்.

“தமிழு! தமிழு” என அந்தப் பெரியவர் கீழே கிடந்தவரை எழுப்ப முயல, இவள் ஓடி வந்து அருகில் அமர்ந்தாள்.

கையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்து,

“சார், சார்” என சத்தமாய் அழைத்தாள்.

மெல்ல அவரிடம் அசைவு தெரிந்தது. கண்ணைத் திறந்தவர்,

“என்னாச்சு?” எனச் சின்னக் குரலில் கேட்டார்.

“ஏற்கனவே உடம்பு ஒரு மாதிரியா இருக்குன்னுதானே லீவ் போட்டு வீட்டுல இருந்த! இப்போ தோட்ட வேலைப் பார்க்கலன்னு யாரு அடிச்சா!” என சத்தம் போட்டார் அந்தப் பெரியவர்.

“நீங்க மயங்கிக் கிடந்தீங்க சார்!” என்றாள் வதனா.

“மயங்கிட்டேனே?” எனக் கேட்டவர் எழுந்து அமர முயல, ஒரு பக்கம் இவள் பிடித்துக் கொள்ள, இன்னொரு பக்கம் பெரியவர் பிடித்துக் கொண்டார்.

மெல்ல அவரை நடக்க வைத்து வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர வைத்தார்கள்.

“தாத்தா! சாருக்கு தண்ணி கொண்டு வந்து குடுங்க! அப்புறமா கொஞ்சம் டீ போட்டு தாங்க!” என்றவள்,

“சார்! கொஞ்சம் ஓகேவானதும் டாக்டர போய் பாருங்க! நான் கெளம்பறேன்” எனச் சொல்லிக் கிளம்ப முற்பட்டாள்.

“நில்லுமா! யார் நீ?” எனப் பரிவுடன் கேட்டார் தமிழரசன்.

“அது, அது..நெஜத்தை சொல்லனுமா சார்?”

“இதென்ன கேள்வி!”

“இல்ல! நெஜத்தை சொன்னா, இப்போ பாசமா பேசற நீங்க கோச்சிப்பீங்களோன்னு பயமா இருக்கு” என நெளிந்தாள் பெண்.

“கோச்சிக்கல! சொல்லுமா”

“வந்து..! உங்க தோட்டத்து மாங்கா பார்க்கவே நல்லா இருந்ததா! ஒன்னே ஒன்னு பறிச்சுட்டுப் போகலாம்னு சுவர் ஏறனேன்! திருட்டுலாம் இல்ல! தோ பாருங்க, ரூபா! மரத்துக் கீழ போட்டுடலாம்னு இருந்தேன்!” என ரூபாய் தாளை பள்ளி பேக்கில் இருந்து எடுத்துக் காட்டியவளை மென் புன்னகையுடன் பார்த்தார் தமிழ்.

“உன் பேரு என்ன?”

“பிரியவதனா”

“ஒன்னு சொல்லறேன் நல்லா கேட்டுக்க வதனா! இனிமே சுவர் ஏறி குதிக்கக் கூடாது! எந்த நேரம்னாலும் வாசல் வழியா வந்து, உனக்குத் தோட்டத்துல என்ன வேணுமோ அதை யாரையும் கேக்காம எடுத்துட்டுப் போகலாம். சரியா?”

முகம் மலர்ந்துப் போக, தலை தன்னாலேயே சரியென ஆடியது.

சமையல் வேலை செய்யும் ராசைய்யா இவர்கள் இருவருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் எடுத்து வந்தார்.

“டீ எடுத்துக்க பொண்ணு!” என்றவர்,

“நல்ல வேளை இந்தப் பொண்ணு நீ கீழ கிடந்தத பார்த்துட்டு ஓடி வந்தா! இல்லைனா என்னாகிருக்குமோ! பையனுக்கு போன் போட்டுருக்கேன்! வந்துட்டு இருக்கான்! உடனே ஹாஸ்பிட்டலுக்கு கெளம்பு!”

“பீ.பீ லோவாகிருக்கும்! அதான் மயக்கம் வந்திருக்கு! வேற ஒன்னும் இல்ல ராசைய்யா”

பிஸ்கட்டை டீயில் நனைத்து சாப்பிட்டுக் கொண்டே,

“அப்படிலாம் சும்மா விடக் கூடாது சார்! சின்னதா இருக்கறப்பவே என்ன ஏதுன்னு பார்த்துடனும்! பெருசா எதாச்சும் வந்துட்டா, அப்புறம் ஐயோன்னாலும் முடியாது, அம்மான்னாலும் விடியாது!” எனச் சொன்னவளின் குரலில் ஒலித்த சோகத்தைக் கண்டுக் கொண்டவருக்கு மனதை என்னவோ செய்தது.

“கண்டிப்பா போறேன்மா டாக்டர பார்க்க!”

வேக வேகமாக பிஸ்கட்டை சாப்பிட்டு டீ குடித்தவள்,

“நான் கெளம்பறேன் சார்! லேட்டான்னா அத்தை திட்டுவாங்க! பாய்! கண்டிப்பா டாக்டர பாருங்க” எனச் சொல்லியபடியே ஓடிப் போனாள்.

அவள் சற்று நேரமே இருந்தாலும் அவ்விடமே ஒளி பெற்றது போல தோன்றியது தமிழுக்கு. என்ன இருந்தாலும் பெண்ணென ஒருத்தி வீட்டில் இருந்தால் அந்த வீடே கலகலவென ஆகி விடுகிறது எனத் தோன்ற மெல்லிய புன்னகை முளைத்தது அவருக்கு.

மாங்காய் பறிக்க வந்தவள், மாசற்ற அன்பை பொழியப் போகும் உறவொன்றை சம்பாதித்திருப்பதை அறியாமல் அரக்கப் பறக்க வீட்டுக்கு ஓடிப் போயிருந்தாள்.

 

(இதயம் போகும்….)