Ithayam Poguthe–EPI 3

IP-4d45b696

அத்தியாயம் 3

 

அது ஏதோ ஒரு தெருவின் குறுக்கு சந்து. அழகாய் டிப்டாப்பாக உடுத்தியபடி அவள் வருகைக்காக காத்திருந்தான் எழிலரசன். சற்றுத் தொலைவில் இருந்த வீட்டில் இருந்து பாடல் கசிந்து வரும் ஓசை இனிமையாய் இவன் காதை நிறைத்தது.

“அவள் வருவாளா

என் உடைந்துப் போன நெஞ்சை

ஒட்ட வைக்க அவள் வருவாளா????”

“இவளாச்சும் துண்டு துண்டா கிடக்கும் என் மனச கோந்து போட்டு ஒட்டி கோபுரத்துல உக்காத்தி வைப்பாளா? இல்ல துண்டான இதயத்த தூளாக்கி தூசியா ஊதிட்டுப் போவாளா? விநாயகா, ப்ளிஸ் ஹெல்ப் கரோ! அவ மட்டும் எனக்கு ஓகே சொல்லிட்டா, உன்னைப் பார்க்க முட்டிப் போட்டு படி ஏறி வரேன்!” என வேண்டுதலை வைத்தவன், படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தான்.

மெல்லிய கொலுசொலி கேட்க, பதட்டத்தை மறைத்து சிரிப்பை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டான்.

“ஹாய்”

“ஹ்ம்ம், ஹாய்” என்றாள் அவள்.

பார்க்க அசப்பில் ஐஸ்வர்யா லக்ஸ்மி போல அம்சமாய் இருந்தாள் பெண். அவள் புன்னகை பூக்கும் போது, இவன் மனதில் ரோஜாக்கள் மலர்ந்தன.

“சாப்டீங்களா?”

“ஆச்சு! ரெண்டு ப்ளேட் இட்லி! நாலு மசால் வடை”

“என்னங்க இவ்ளோ கம்மியா சாப்டறீங்க! உடம்பு என்னத்துக்கு ஆகும்” எனக் கவலைப்பட்டான் எழில்.

“நான் டயட்ல இருக்கேன்! அளவு சாப்பாடுதான்”

“அச்சோ! உங்களுக்கு டயட்லாம் எதுக்குங்க!

‘இடை ஒரு கொடி

இதழ் ஒரு கனி

இன்பலோகமே உன் கண்கள்தானடி’னு கவிதை சொல்லக் கூடிய அளவுக்கு கச்சிதமா இருக்கீங்க!” என இவன் ஜொள்ளு விட,

“வாவ்! கவிதை சூப்பரா இருக்குங்க!” என மலர்ந்துப் போனாள் இவள்.

‘நல்ல வேளை பாட்டு வரிய கவிதைன்னு சொன்னத நம்பிட்டா! முகம் டாலடிக்குது! இன்னும் நாலு பிட்ட போட்டு யெஸ் சொல்லிட வச்சிடனும்’ என இவன் மூளை படு பயங்கரமாகத் திட்டம் தீட்டியது.

“இது அவசர கவிதைங்க! எனக்கு மட்டும் ஓகே சொல்லுங்க, ஆற அமர உங்க அழக வர்ணிச்சு அடுக்கடுக்கா கவிதை சொல்வேன்”

வெட்கப் புன்னகை படர்ந்தது அவள் முகத்தில்.

“நீங்க பார்க்க சுமாரா இருந்தாலும், உங்க பேச்சும், கவிதை சொல்லும் திறமையும் என்னை அப்படியே கவர்ந்திழுக்குது எழில்”

‘ஆகா! சிக்கிட்டாடா சிக்கிட்டா’ என வடிவேலு ஸ்டைலில் குதூகலித்தவன்,

“அப்போ அந்த மூனு வார்த்தையை உங்க தேனமுதூறும் இதழ் கொண்டு சொல்லிடுங்க ப்ளிஸ்! கமான், டால்க் மீ” என பரபரத்தான்.

“ஐ!!!”

“ஹ்ம்ம் ஐ!!!”

சிரிப்பு சத்தம்!!!!

“லவ்”

“ஆமா அப்படித்தான்! லவ், லவ்! அடுத்து….” என படபடத்தான் எழில்.

இன்னும் சத்தமாய் சிரிப்பொலி.

அச்சத்தத்தில் ஐஸ்வர்யா லக்ஸ்மி மெல்ல மறைய ஆரம்பித்தாள்.

“ஏங்க! நில்லுங்க! யூ சொல்லுங்க! ஏங்க, ஏங்க!!!!” என இவன் கதற, கலகலவென சிரிப்பொழி நாராசமாய் இவன் செவியை நிறைத்தது.

“அடச்சை!” எனப் போர்வையை விலக்கி எழுந்துக் கொண்டான் எழில்.

“கனவுல கூட எனக்கு ஒருத்தி ஐ லவ் யூ சொல்லறது இந்த பிரபஞ்சத்துக்கே பொறுக்கல!” எனச் சத்தமாய் முணுமுணுத்தவன், கண்களைத் தேய்த்துக் கொண்டான்.

மீண்டும் சிரிப்பொலி கேட்க,

“இவள!!!!!” எனக் கறுவியபடியே நடந்துப் போய் அறையின் ஜன்னலைத் திறந்தான் எழிலரசன்.

அங்கே மல்லிகைப் பந்தல் அருகே பூப்பறித்துக் கொண்டிருந்தாள் பிரியவதனா.

“அடிக் குட்டிக் கழுதை! சனிக்கிழமை கூட மனுஷனத் தூங்க விடாம என்ன கெக்கேபெக்கேன்னு இழிப்பு! வெளிய வந்தேன், களுக் புளுக்னு சிரிக்கற வாய்ல காரப் பொடிய கரைச்சு ஊத்திடுவேன்! கண்ட்ரி ஃரூட்!” எனச் சத்தம் போட்டான்.

“ஆமா! நீ கண்ட்ரி ஃப்ரூட், காலை மணி பத்தாகியும் இன்னும் படுக்கைய விட்டு எழுந்திரிக்காத துரை டவுன் ஃரூட்! உள்ள வந்தேன், பெல்ட்டு பஞ்சு பஞ்சா பிஞ்சிப் போகும்”

நிழலில் சற்றுத் தள்ளி ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்த தமிழரசன் கண்ணுக்குத் தெரியாமல் போக, அலப்பறையைக் கூட்டி இருந்தவனுக்கு அல்லு விட்டுப் போனது.

“ஐயோ ஹிட்லர்!” எனப் பதறியவன், அவசரமாக ஜன்னலை சாற்றி விட்டு குளிக்க ஓடினான்.

அவனது முக மாற்றத்தையும் ஓட்டத்தையும் பார்த்த வதனாவுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

கீழே விழுந்துக் கிடந்த தமிழரசனை இவள் காப்பாற்றி இரண்டு வருடங்கள் ஓடி இருந்தன. பள்ளி முடிந்து ஒரு எட்டு எழிலின் வீட்டுத் தோட்டத்தை சுற்றி விட்டுத்தான் போவாள் இவள். மல்லி, ரோஜா எனப் பறித்துக் கொண்டாலும், அதற்கு ஈடு செய்வது போல புற்களைப் பிடிங்கிப் போடுவாள், களை எடுப்பாள், தண்ணீர் ஊற்றுவாள். தோட்டம் இவள் கைப்பட்டு அழகாய் மாறி வருவதைக் கண்டு அவ்வளவு ஆனந்தம் தமிழரசனுக்கு. அவள் வரும் நேரம் இவர் வீட்டில் இல்லாவிட்டாலும், ராசைய்யாவிடம் அவளுக்கு உணவுக் கொடுக்க சொல்லிக் கட்டளையிட்டிருந்தார். அவரும் எதாவது ருசியாக இவளுக்கு செய்து கொடுத்து, பேசியபடியே தோட்டத்தில் அமர்ந்திருப்பார்.

எழிலின் வீட்டுத் தோட்டம்தான் வதனாவின் தனிமைக்குப் புகலிடமாக இருந்தது. அவள் அங்கே வர ஆரம்பித்த ஒரு வாரத்தில் சீக்கிரம் வீடு திரும்பி இருந்த எழிலரசன்,

“ஏய் ஒல்லிக்குட்டி! இங்க என்ன செய்யற?” என ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஏன் மாமா! நீங்க மட்டும் அர்னால்டு போல பல்க்கா இருக்கற மாதிரி என்னை ஒல்லிக்குட்டின்னு சொல்றீங்க!” எனச் சிரித்தாள் வதனா.

வேண்டாமென சொல்லியும் சாப்பிட வற்புறுத்திய ராசைய்யாவால் வீட்டின் உள்ளே சென்றிருந்தவள், கல்யாண போட்டோ ஒன்றில் தமிழரசனுடன் இவனும் நிற்கக் கண்டாள். சென்ற முறை பதட்டத்தில் இருந்ததால் கவனிக்காமல் விட்டிருக்க, இந்த முறை அதை ஊன்றிப் பார்த்தவளுக்கு மனம் கனிந்தது.

“எழில் மாமா வீடா!!!” என முணுமுணுத்தவள் அன்றிலிருந்து தோட்டத்தோடு வீட்டையும் சுத்தம் செய்து கவனித்துக் கொண்டாள்.

“வாயைப் பாரு! உன் மலை மாமா சொல்றது போல நீ ஒரு விஷ பாட்டில்தான்டி” எனச் சட்டென இவன் சொல்லிவிட, முகம் வாடி சுருங்கி விட்டது பெண்ணுக்கு.

சிரிப்புடன் அரட்டை அடித்தவள், சட்டென மங்கிப் போய் விட உறுத்தி விட்டது இவனுக்கு. தலைக் குனிந்தபடி, மல்லி செடியின் கீழே அமர்ந்து இவள் புல்லைப் பிடுங்க, இவன் வீட்டின் உள்ளே போய் விட்டான். சற்று நேரத்தில் வெளியே வந்தவன்,

“ஏ குட்டி!” என அழைத்தான்.

“ஹ்ம்ம்” எனத் திரும்பிப் பார்க்காமல் பதிலளித்தாள் வதனா.

“உனக்கு அல்வா புடிக்குமா?”

“புடிக்கும்”

“அப்போ வா! சாப்பிடலாம்” என அழைத்தான்.

“விஷ பாட்டில்லாம் அல்வா சாப்பிடாது! விஷம்தான் சாப்பிடும்! அது இருந்தா கொஞ்சம் குடுங்க” என்றவளின் குரலில் அவ்வளவு சோகம் அப்பிக் கிடந்தது.

அவள் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்த எழில்,

“மன்னிச்சுக்கோ குட்டி! என்னமோ பட்டுன்னு வாயில வந்துடுச்சு! ட்ரூலி, எக்ஸ்ட்ரீம்லி, டீப்லி சாரி! சாரி! சாரி” என்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“பரவால்ல! மத்தவங்க சொல்றப்போ ஒன்னும் தெரிய மாட்டுது மாமா! நீங்க எதாச்சும் சொல்லிட்டா மனசு வலிக்குது!” எனக் கம்மியக் குரலில் சொன்னாள்.

“அப்படி நான் மட்டும் என்ன ஸ்பெஷல்?”

“தெரியல மாமா! ப்ளிஸ், இனிமே என்னை விஷ பாட்டில் சொல்லாதீங்க! மலை மாமா என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்! நீங்க சொல்லாதீங்க”

“சரி, சரி இனி சொல்லல! டேம தொறக்காத! சீரியல்ல பொண்ணுங்க அழுதா கூட எனக்குத் தாங்காது! நேர்ல இப்படி அழுதா கையும் ஓடல, காலும் ஓடல! ப்ளிஸ் கண்ணைத் துடை”

கண்ணைத் துடைத்துக் கொண்டவள், அவனை நிமிர்ந்துப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள்.

“இது நல்ல புள்ளைக்கு அழகு! சரி வா! சாப்பிடலாம்” எனச் சொன்னவன், அல்வா தட்டை எடுத்து வந்து புல் தரையிலேயே அமர்ந்துக் கொண்டான்.

அவளும் அங்கிருந்த பைப்பில் கை கழுவி விட்டு அவனருகே வந்து அமர்ந்தாள்.

“ஸ்கூல்லாம் எப்படி போகுது?” என அவன் கேட்க, பேச ஆள் கிடைத்த சந்தோஷத்தில் நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாள் சின்னவள்.

அன்றிலிருந்து இவன் வரும் போது இவள் தோட்டத்தில் இருந்தால், நின்று இரண்டு வார்த்தைப் பேசி விட்டுப் போவான் எழிலரசன்.

பள்ளி விட்டு வந்து வீட்டினுள்ளேயே இவள் அடைந்துக் கிடக்க, பூர்ணிமாவுக்கும் கடுப்பாய்தான் இருக்கும். வதனாவின் வதனத்தைப் பார்க்க பார்க்க இவளது அம்மா ஓடிப் போன போது இவர்கள் வசித்த வீட்டின் அக்கம் பக்கத்தினர் எப்படியெல்லாம் இவர்களைக் கேவலப்படுத்தி இருந்தனர் என்பது எல்லாம் நினைவில் வந்து கொன்றுப் போடும் பூர்ணிமாவை. அந்த நாட்களில், இவரது சின்ன வயது மகளைக் கூட ‘இது யார இழுத்துட்டு ஓடப் போகுதோ!’ எனப் பேசியதைக் கேட்டுக் கூனிக் குறுகிப் போயிருக்கிறார். இரவெல்லாம் அழுது கரைபவரைக் கட்டிக் கொண்டு அம்மா எதற்கு அழுகிறார் எனத் தெரியாமலே அவனும் அழுவான் திருமலை. மனதின் மூலையில் முடங்கிப் போயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் வதனாவால் மேலெழும்பிப் பேயாட்டம் போட, சட்டென திட்டி விடுவார் அவளை.  

ஆரம்பத்தில் அடிக்கடி லேட்டாக வருகிறாளே, என்ன கதையோ எனப் பயந்தவருக்கு, எழில் வீட்டுக்குத்தான் போகிறாள் எனத் தெரிய அமைதியாகி விட்டார்.

‘கண்ணு முன்னாலயே நின்னுட்டு இருக்காம, கொஞ்ச நேரமாச்சும் என்னை நிம்மதியா இருக்க விட்டாப் போதும்டா சாமி!’ என மனதில் நினைத்துக் கொண்டவர், எழில் வீட்டுக்கு இவள் போவதற்கு தடை விதித்ததில்லை.

அங்கு போவதற்கு முன் இவருக்கும் ஒத்தாசையாக இருந்து விட்டு, இருட்டுவதற்குள் அவள் திரும்பி வந்து விட போய் தொலையட்டும் என விட்டு விட்டார். அதோடு பூப் பறித்து வந்து சாமிக்கும் அவள் அலங்காரம் செய்ய, லேசாய் நெஞ்சம் குளிர்ந்துதான் போனது பூர்ணிமாவுக்கு.

“ஏன்மா வதனா பரிட்சை வரப் போகுதே! டீயூசன் எதாச்சும் போறியா நீ?” எனக் கேட்டார் தமிழரசன்.

“நான் வீட்டுலயே படிச்சிப்பேன் அங்கிள்! டியூசன்லாம் எதுக்கு!”

“அதும் சரிதான்! நீ புத்திசாலி புள்ளம்மா! எனக்கும் வந்து வாச்சிருக்கானே! எவ்ளோ கொட்டி அழுதுருக்கேன் துரைக்கு! ஸ்பெஷல் கிளாஸ், டீயுசன்னு நான் கரைச்சப் பணத்துக்கு, நாலு மாடு வாங்கி விட்டிருந்தாலும் நல்லா பால் கறந்திருக்கும்”

“எழில் மாமா நல்லாத்தானே படிக்கறாங்க! கம்பஸ் இண்டெர்வியூல வேலைக் கூட கிடைச்சிருச்சுன்னு சொன்னாங்களே!”

எவ்வளவு மறைக்க முயன்றாலும் முகம் பூரித்துத்தான் போனது தமிழரசனுக்கு.

“அவங்க அண்ணா போல இல்ல இவன்! கொஞ்சம் மூளைக்காரன். என்ன, இடம் கொடுத்தாம்னு வை, தலை மேல ஏறி உக்காந்துப்பான். அதான் அப்பப்போ தட்டி வைக்கறது” எனச் சிரித்தார்.

அந்த நேரம் வெளி வாசலில் இருந்து,

“யோ தமிழரசா! வெளிய வாய்யா!” எனச் சத்தம் வந்தது.

“யாருடா இது, என் பேர ஏலம் போடறது!” என எழுந்து வாசலுக்குப் போனார் தமிழ்.

அவர் பின்னோடே போனாள் பிரியவதனா.

அங்கே கூட்டமாய் சிலர் நின்றிருந்தனர். அவர்கள் முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்.

“என்னங்க! என்ன விசயம்?” எனக் கேட்டார் இவர்.

“ஏன்யா! நீ புள்ள வளத்து வச்சிருக்கியா! இல்ல புள்ளப் பூச்சிய வளத்து வச்சிருக்கியா? பொட்டப் புள்ளைங்க மானம் மருவாதையோட காலேஜூக்கோ, வெளியத் தெருவோ போக முடியுதா?”

“என்னாச்சி?”

“உன் மவேன் காதல் கடுதாசி நீட்டிருக்கான்யா என் பொண்ணுக்கு! அவ பயந்துப் போய் காலேஜூக்கே போக மாட்டேன்னு நிக்கற!” எனச் சத்தம் போட்டார் ஒருத்தர்.

முகம் அமைதியாக இருந்தாலும், தமிழரசனுக்கு உடல் எஃகாய் விரைத்துப் போனது. அவர் அருகே நின்றிருந்த வதனாவுக்கோ, அடுத்து என்ன நடக்குமோ எனப் பீதியாகிப் போனது. சத்தம் கேட்டு வெளியே வந்த எழில், நடுநடுங்கிப் போனான்.

“உன் மகன் மாதிரி நாலு பேரு இருக்கப் போய்தான், பொம்பளப் புள்ளைய பெத்த நாங்க வயித்துல நெருப்பக் கட்டிட்டுச் சுத்திட்டு இருக்கோம்! எங்களுக்கும் புள்ளய படிக்க வெச்சு கலேக்டர், எஞ்சினியருனு ஆக்கனும்னு ஆசைதான்யா! எங்க ஆக்க விடறானுங்க உன் மகன போல தறுதலைங்க! இவனுங்களுக்கு பயந்தே பாதி படிப்புல கட்டிக் குடுக்க வேண்டியதா ஆகிடுது” என எகிறினார் இன்னொருவர்.

ஒரே களேபரமாகப் போய்விட, கையெடுத்துக் கும்பிட்டார் தமிழரசன்.

“நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கனும்! இனி இது மாதிரிலாம் என் மகன் நடந்துக்க மாட்டான்!” என்றவர், எழிலைத் திரும்பிப் பார்த்து,

“சொல்லு!” என ஒற்றை வார்த்தை மட்டும் உதிர்த்தார்.

“இனிமே உங்க பொண்ணுப் பின்னாடி வர மாட்டேன் சார்! என்னை மன்னிச்சிடுங்க!” எனதி திக்கித் திணறி இவன் பேச,

“இப்ப போறோம்! இனி இப்படி ஏடாகூடமா நடந்த நாங்க பேச மாட்டோம்! அருவாத்தான் பேசும்” என மிரட்டி விட்டே கலைந்துப் போனார்கள்.

அவர்கள் கிளம்பியதும் விடுவிடுவென உள்ளேப் போய் விட்டார் தமிழரசன். தூக்குத் தண்டனைக் குற்றவாளிப் போல கால்கள் கணக்க மெல்ல வீட்டின் உள்ளே நடந்துப் போனவனை கண்கள் கலங்கப் பார்த்தாள் பிரியவதனா. அவளது கால்கள் அப்படியே வேரோடிப் போனது போல அங்கேயே நின்று விட்டன.

சற்று நேரத்தில்,

“இனிமே இப்படிலாம் லவ் லெட்டர் குடுக்க மாட்டேன்பா” எனும் கதறல் வர, புள்ளி மான் போல குதித்து உள்ளே ஓடினாள் வதனா.

தமிழரசன் பெல்ட்டால் மகனை அடி விளாச, குறுக்கே போய் நின்றாள் இவள். ஓரடி இவள் மேலும் விழுந்து விட பட்டென அவளைத் தூரத் தள்ளி விட்டான் எழில்.

“அங்கிள்! விடுங்க அங்கிள்! வலிக்கும்! விடுங்க” என் மீண்டும் குறுக்கே வந்தாள் இவள்.

ஏற்கனவே அவள் மேல் அடி விழுந்ததில் அடிப்பதை நிறுத்தி விட்டிருந்தார் தமிழ். ஆனாலும் மகன் மேல் இருந்த கோபம் அடங்கவில்லை.

“தாயில்லாத பிள்ளைங்கன்னு எப்படிலாம் வளர்த்தேன்டா உங்க ரெண்டு பேரையும்! கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்து, வளர பசங்க நல்லா சாப்பிடனும்னு சமையலுக்கு ஆள் வச்சி, டியூசன் அனுப்பி, லேப்டாப், புக்குன்னு எதுக்கும் கணக்குப் பார்க்காம எவ்ளோ செஞ்சிருப்பேன். பெரியவன்தான் லவ் ஷோக்குல ஒழுங்கா படிக்காம கல்யாணம் கட்டிக்கிட்டுப் போய்ட்டான்னா, நீயும் அப்படியே இருக்கியேடா! உங்கம்மா உங்க ரெண்டு பேரையும் வச்சி எவ்ளோ கனவு கண்டா! என் பசங்க நல்லா படிப்பானுங்க, நல்ல உத்தியோகத்துக்குப் போவானுங்க, ஊரே மெச்ச வாழ்வானுங்கன்னு வாய் ஓயாமப் பேசுவாடா! இன்னிக்கு வீட்டு மானம் சந்தி சிரிச்சதப் பார்த்து, அவ ஆத்மா துடிதுடிக்கும்டா” என்றவர் நெஞ்சை நீவிக் கொள்ள, அவர் கைப் பிடித்து அமர வைத்தாள் வதனா.

“டென்ஷன் ஆகாதீங்க அங்கிள்” என்றவள் ஓடிப் போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் அவருக்கு.

என்ன காரியம் செய்தாலும் அவள் பார்வை, தலைக் குனிந்து நின்றிருந்த எழில் மேலேயே இருந்தது. தன் முன்னே அவனை அடித்ததில் எவ்வளவு அவமானமாய் உணர்ந்திருப்பான் எனப் புரிந்தது இவளுக்கு.

தண்ணீரைக் குடித்த தமிழ், தொண்டையை மெல்ல செறுமினார்.

“நீ இங்க இருந்து என் மானத்தக் கப்பலேத்தனது போதும்டா! சிங்கப்பூர்ல இருக்கற உன் சித்தப்பன் வீட்டுக்கு அனுப்பிடறேன் உன்ன! அவன் கண்காணிப்புலயாச்சும் உருப்படியா வரியான்னு பார்க்கலாம். நீ வேலைக்கும் போக வேணா ஒரு மசுரும் புடுங்க வேணா! சிங்கப்பூர்ல மேற்படிப்பு படி! உன் சித்தப்பன்ட சொல்லி பார்ட் டைம் வேலை வாங்கித் தர சொல்றேன்! உழைச்சுக் கஸ்டப்பட்டுப் படிச்சாத்தான்டா நான் படற லோல் புரியும் உனக்கு!”

“போக மாட்டேன்!” என இவன் முணுமுணுக்க,

“என்ன?” எனச் சத்தமாய் கேட்டார் தமிழ்.

“போறேன்பா!” என நிமிர்ந்துப் பார்த்துச் சொன்னவனின் கண்கள் கலங்கி நின்றன.

அதை பார்த்த வதனாவுக்கும் கண்ணில் பொல பொலவென அருவி இறங்கியது.   

அடுத்த இரண்டு மாதத்தில், திருச்சியை விட்டு, தகப்பனை விட்டு, உயிர் நண்பனை விட்டு சிங்கப்பூர் பயணப்பட ஆயத்தமானான் எழிலரசன்.

அவன் போகும் முன்பு முகத்தை ஒரு தடவைப் பார்த்து விடலாம் என வீட்டிற்கு வந்திருந்தாள் பிரியவதனா. அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“ஏ குட்டி! ஒழுங்கா படி! எங்க தோட்டத்தையே கட்டிட்டு அழுவாதே! அப்பப்போ எங்க வீட்டு ஹிட்லர வந்து பார்த்துக்க! ஹ்ம்ம்! ஹிட்லர்ட்ட இருந்து தப்பிச்சு அவர் தம்பி கெங்கிஸ் கான்கிட்ட போய் மாட்டப் போறேன்! எல்லாம் ஹெட் ரைட்டிங்!” என்றான்.

இவளுக்கு கண்கள் குளம் கட்டியது.

“உடம்ப பார்த்துக்கோங்க மாமா! நல்லா படிங்க! என்னை மறந்திடாதீங்க!”

“சரி, சரி! மலை வந்துட்டான்! ஏர்போர்ட் போகனும்! வரட்டா!” எனப் புன்னகையுடனே கையாட்டி விட்டு தமிழரசனோடும், திருமலையோடும் கிளம்பினான் எழிலரசன்.

பக்கத்து வீட்டில் இருந்து மெல்லக் கசிந்து வந்தப் பாடல், இவள் மனதைப் பிசைந்து கண்ணைக் குளமாக்கியது.

“இதயம் போகுதே

எனையே பிரிந்தே!!!!!!”

 

(இதயம் போகும்…)