ithayamnanaikiratehy-26

IN_profile pic-b23b3d2e

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 26

விஷ்வா, இதயா இருவரின் எண்ணமும் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

“ஒரு நாளும் இதயா அப்படி இருக்க மாட்டா. அப்படி ஒரு வாழ்க்கை இதயாவுக்கு வேண்டாம். இப்படி ஒரு எண்ணம் கொண்ட விஷ்வாவை இதயாவுக்கு பிடிக்காது. இந்த பேச்சுக்கெல்லாம் இதயா அடங்கி போக மாட்டா” இதயா சவால் விடும் விதமாகவே கூறினாள்.

“பிடிக்கலைன்னா, வீட்டை விட்டு வெளிய போ இதயா” விஷ்வா அவள் சவாலுக்கு பதிலளித்தான்.

‘நான் சொல்வதை இவள் கேட்கவில்லையே. நான் சொல்வதை இவன் கேட்கவில்லையே.’ என்ற ஏமாற்றத்தில் வந்த கோபத்தில் தான் இருவரும் அவர்கள் வார்த்தைகளை சிதற விட்டார்கள்.

ஆனால், வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையை திசை மாற்ற ஆரம்பித்தது. அவர்களுக்கு இடையில் விழுந்த விரிசல் எதிர் பக்கமாக நகர ஆரம்பித்தது.

இதயா அவன் முன் சோர்வாக நின்றாள். “வெளிய போன்னு சொன்னா என்ன அர்த்தம் விஷ்வா?” அவள் நிராதரவாக கேட்டாள்.

“எனக்கு தமிழ் தெரியாதா? இல்லை உனக்கு தெரியாதா? வெளிய போன்னு சொன்னா வீட்டை விட்டு போன்னு அர்த்தம்” விஷ்வா அழுத்தமாக கூறினான்.

“வீட்டை விட்டா? வாழ்க்கையை விட்டா?” இதயாவின்  கண்கள் கண்ணீரை உகுக்க தயாரானாலும், வீராப்பாக கண்ணீரை உள்ளிழுத்து கொண்டது.

“உன் இஷ்டம்” விஷ்வா தெனாவட்டாக பதில் கூற, “ஆக, நீ சொன்னதை நான் கேட்கலைன்னா, உன் விருப்பப்படி நடக்கலைனா என்னை வீட்டை விட்டு வெளிய போக சொல்லுவ? உன் வாழ்க்கையிலிருந்தும் வெளிய போக சொல்லுவ?” இதயா குற்றம் சாட்டும் குரலில் கேட்டாள்.

“ஏய், நீ ரொம்ப யோக்கியம் மாதிரி பேசாத. என்னை விட்டுட்டு போறேன்னு சொன்னது நீ. போறவ ஒரேடியா போய்டுன்னு சொல்றேன். அவ்வளவு தான். நீ படிக்கறதுக்கு ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ… ரெண்டு வருஷம், மூணு வருஷம் தனியா இருக்க தெரிஞ்ச எனக்கு ஆயுசுக்கும் தனியா இருக்க தெரியும். அதுவும் இன்னைலருந்தே இருக்க தெரியும்” விஷ்வா கூற, இதயா அத்தோடு பேச்சை முடித்து கொண்டாள்.

அன்றிரவு இதயா, சுயஅலசலில் இருந்தாள்.

மறுநாள், காலையில்…

“நான் அம்மா வீட்டுக்கு போறேன் அத்தை” இதயா கூற, செல்வநாயகியின் புருவங்கள் சுருங்கியது.

“எப்ப வருவ?” அவர் கேட்க, “ரெண்டு மூணு நாளில் அத்தை” இதயா சமாளித்தாள். இல்லை, அந்த எண்ணத்தில் தான் கிளம்பினாள் என்றும் கூறலாம்.

இதயா, அஜயோடு அவள் வீட்டுக்கு கிளம்பினாள். விஷ்வா தடுப்பான் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் அவள் மனதில் இருக்க, அவள் செவிகள் அவன் சொல்லுக்காக ஏங்கியது. அவள் பார்வை அவன் பார்வைக்காக ஏங்கியது.

‘நான் போன்னு சொல்லிட்டா, இப்படி தான் காலங்காத்தால கிளம்புவாளா? திமிர் பிடிச்சவ’ மனதிற்குள் அவன் தன் மனைவியை அர்ச்சித்து கொண்டிருந்தான்.

‘ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை நான் போய் தான் ஆகணுமான்னு கேட்குறாளா பாரு?’ அவன் அவளை பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தான்.

‘விஷ்வா, நான் போக வேண்டாமுன்னு சொல்ல மாட்டானா?’ என்ற ஏக்கத்தோடு, வெளியே சென்றவள் மீண்டும் அறைக்குள் வந்து எதையோ எடுப்பவள் போல் பாவனை செய்து அவன் முன் விசுக் விசுக் என்று நடந்தாள்.

‘அம்மா வீட்டுக்கு போற ஜோரு எப்படி கெத்தா நடக்குறா? எப்ப போகலாமுன்னு காத்திட்டு இருந்திருக்கா. இது தான் சாக்குன்னு கிளம்பிட்டா’ அவன் படுத்துக்க கொண்டு போர்வையை போர்த்தி கொண்டான்.

விஷ்வாவின் செய்கையில் இதயாவின் கோபம் பன்மடங்கு ஏறி வீட்டை விட்டு கிளம்பி அவள் வீட்டை நோக்கி பயணித்தாள்.

அவர்கள் விரிசலை இருவரும் ஒற்றுமையாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டனர்.

விஷ்வாவின் வீட்டில்

“எதுவும் பிரச்சனையா விஷ்வா?” செல்வநாயகி, வரதராஜன் இருவரும் குடைய “அதெல்லாம் இல்லை. சின்ன விஷயம் தான். அவளா போனாள். அவளா வருவா” விஷ்வா அதற்கு மேல் பேசவில்லை.

இதயாவின் வீட்டில்…

“என்ன மாப்பிளை இல்லாம அஜயை கூட்டிட்டு தனியா வந்திருக்க?” பதட்டத்தோடு இதயாவை வாசலிலே நிறுத்தி வைத்து கேட்டார் ஈஸ்வரி.

“அம்மா, நான் உள்ளே வரவா வேண்டாமா?” சுள்ளென்று வந்தது இதயாவின் கேள்வி.

ஈஸ்வரி நகர்ந்து வழிவிட்டார். இதயா அவள் அறைக்குள் முடங்கி கொண்டாள்.

“என்னங்க எதுவும் பெரிய பிரச்சனையா இருக்குமோ?” ஈஸ்வரி பதட்டப்பட, “பெருசா எதுவும் இருக்காது. மாப்பிள்ளை நல்ல குணம். சின்னதா ஏதாவது பிரச்சனையா இருக்கும். சரியாகிரும், கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்” என்று நிதானமாக பேசினார் நடராஜன்.

‘அப்பா சொல்ற மாதிரி சின்ன பிரச்சனையா? இல்லை பெரிய பிரச்சனையா?’ இதயாவின் மனம் குழப்பி கொண்டது.

இரண்டு நாட்கள் கடந்தது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

‘அவ தானே போனா, அவளா வருவா’ விஷ்வா உறுதியாக இருந்தான்.

‘அவன் தானே போகச் சொன்னான். அவளா வருவா.’ இதயாவும் உறுதியாக இருந்தாள்.

அந்த வாரம் நகர்ந்து, வார இறுதியை எட்டியது.

வெள்ளிக்கிழமை மாலைவேளை…

 ‘நான் போக மாட்டேன். நான், இல்லாமல் இருந்தாதான் அவளுக்கு என் அருமை தெரியும். அப்பத்தான், என்னை விட்டுட்டு போக மாட்டா.’ விஷ்வாவின் மூளை மனதோடு போராட தொடங்கியது.

‘நானா போனால், இனி விஷ்வா என்னை மதிப்பானா? நான் போகமாட்டேன்’ இதயாவின் தன்மானம் சிலிர்த்து கொண்டது.

‘எனக்கும் ஆசைகள் உண்டு. எனக்கும் கனவுகள் உண்டு . காதல் என்ற பெயரில் நான் இவன் காலில் விழவேண்டுமா? என் காதல் விஷ்வாவுக்காக உண்டு. ஆனால், என் காதல் சுயமரியாதையோடு நிமிர்ந்து மட்டும் தான் நிற்கும்’ இதயாவின் மூளையும், அவள் மனதோடு போட்டி போட்டு கொண்டது.

சனிக்கிழமை மாலைவேளை.

‘இதயா வரமாட்டாளா?’ அவன் அறிவு சற்று சோர்வடைந்து சண்டையிடுவதை நிறுத்தி கொண்டது. அவன் மனமோ, ‘இதயா… இதயா… இதயா…’ என்று துடிக்க ஆரம்பித்தது.

‘விஷ்வா அவனா வர மாட்டானோ?  நான் கூப்பிடவா’ அவள் மனம் அறிவை விட வேகமாக சிந்திக்க ஆரம்பித்தது.

அவள் அலைபேசி எடுக்க, அவர்கள் வீட்டின் கதவை திறக்கும் ஓசை கேட்க, இதயா ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள்.

‘விஷ்வா… விஷ்வா… விஷ்வா…’ அவள் மனம் துள்ளாட்டம் போட ஆரம்பித்தது.

கீழே குனிந்து தன் உடையைப் பார்த்தாள்.

‘ஐயோ, விஷ்வாவுக்கு இந்த டிரஸ் பிடிக்காதே. இப்ப மாத்திடுறேன்.’ அவள் உடையை மாற்ற ஆரம்பித்தாள்.

“அப்பா…” அஜய் பறந்து கொண்டு தந்தையிடம் ஒட்டி கொண்டான்.

“வாங்க மாப்பிளை” வரவேற்பு அவனுக்கு பலமாக இருந்தது. அவன் கண்கள், இதயாவை தேடியது.

இதயா எதுவும் கூறாததால், அவள் பெற்றோர் என்ன பிரச்சனை என்று அறிந்து கொள்ளும் ஆவலில் விஷ்வாவிடம் பேச்சு கொடுத்தனர். விஷ்வா அத்தனை எளிதில் பிடி கொடுக்கவில்லை.

இதயா, கண்ணாடியில் தன் முகத்தை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து கொண்டாள்.

விஷ்வா வந்து சில நிமிடங்களே நகர்ந்து இருந்தன.

“இதயாவுக்கு நீங்க வந்தது தெரியுமான்னு தெரியலை மாப்பிள்ளை. இதோ சொல்றேன்” என்று நடராஜன் கூற, ‘இவ்வளவு நேரம் என்ன பண்ணுறா?’ என்று ஈஸ்வரி தன் மகளை மனதிற்குள் திட்டி கொண்டிருந்தார்.

அதே நேரம், ‘விஷ்வா…’ அவள் மனம் ஆசையோடு, கதவை திறக்க எத்தனிக்க… அவன் கண்களும் அவளை தேடத்தான் செய்தது.

ஆனால் வார்த்தைகள்!

 “நான் இதயாவை பார்க்கவரலை. அஜய்யை தான் பார்க்க வந்தேன்” மெட்டுவிடாமல் வேகமாக அவன் வார்த்தைகள் வந்து விழ, இதயாவின் கைகள் கதவை திறக்காமல்  அதை பிடித்தபடியே அப்படியே நின்று விட்டது.

அவள் கண்கள், அவள் உடையை ஏமாற்றத்தோடு தழுவி கொண்டது.  தன் காதலை, தன் ஆசையை எண்ணி வெட்கங்கொண்டு அவள் மனம் கதறியது.

‘என் விஷ்வா, எனக்காக வரலையா? என்னை விட அஜய் விஷ்வாவுக்கு முக்கியமா?’ அவள் மனம் அவனுக்கான அன்பை தனக்குளே புதைத்து கொள்ள ஆரம்பித்தது.

கதவில் சாய்ந்தபடியே, முகத்தை மடியில் பொதித்து கொண்டு விம்மினாள்  இதயா.

‘நான் அழும் சத்தம் வெளியே கேட்டு விட கூடாதே. என் நிலை அவன் அறிய கூடாது’ அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளை எச்சரித்தது.

அவள் கதவை திறக்கவேயில்லை. அவள் மனக்கதவும் அவன் சொல்லில் மூட ஆரம்பித்தது.

அறைக்கு வெளியே, அவன் கண்கள் மூடியிருந்த கதவை ஏக்கத்தோடு தழுவியது இதயாவை எதிர்பார்த்து!

 ‘நானே தேடி வந்திருக்கேன், வெளிய வந்தா குறைஞ்சி போய்டுவாளா?’ அவன் மனமும் ஏமாற்றத்தில் துடிக்க ஆரம்பித்தது. அவன் மனக்கதவும் ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும் மெல்ல மெல்ல  மூட ஆரம்பித்தது.

வாரங்கள் மாதங்களாகின. அவனும் வந்தான் அஜய்யை தேடி. அஜய் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டான். அஜயின் சில நாட்கள் தாயோடும், சில நாட்கள் தந்தையோடும் நகர ஆரம்பித்தன.

இதயா, விஷ்வாவின் பேச்சும், அவர்கள் பேசும் விதமும் முற்றிலும் மாறி இருந்தது. அவர்கள் பேசிய ஒரு சில வார்த்தைகளும் அஜய்க்காக மட்டுமே இருந்தன.

இப்படி நகர்ந்து கொண்டிருந்த  அவர்கள் நாளில், அந்த சம்பவம் நடந்தது.

 

“ஹெல்லோ…” என்ற குரலில் இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பினர்.

“எக்ஸ்ரே சரியாக இல்லை. மீண்டும் ஒரு முறை எடுக்க வேண்டும்” என்று செவிலியர் ஆங்கிலத்தில் கூற, இருவரும் ஒரு சேர எழ, “ஒன்லி பேஷண்ட்” என்று அவள் கூற விஷ்வா மட்டும் சென்றான்.

அவர்களுக்கான காத்திருப்பு அறையில் தனித்து விடப்பட்ட இதயா, தன் கையில் விஷ்வா கொடுத்த பொருளை பார்த்து புன்னகைத்து கொண்டாள்.

 

குட்டி ரோஜா பூ. அதில் ரேடியம் வெளிச்சத்தில் ஒரு பக்கம், ‘இதயா’ என்று பிரகாசித்தது. மற்றோரு பக்கம் ‘விஷ்வா’ என்று பிரகாசித்தது.

இரு கைகளை மூடி கொண்டு இருளை ஏற்படுத்தி கொண்டு, அந்த ரேடியம் வெளிச்சத்தில் அவர்கள் பெயர் மின்னுவதை பார்த்து இதயாவின்  இதயம் கனிந்தது.

‘இத மாதிரியே எங்க வாழ்க்கையிலும் வெளிச்சம் காத்திருக்கு’ அவள் மனம் உறுதியாக நம்பியது.

‘நான் கொடுத்த பரிசை பத்திரமா வச்சிருக்கான் விஷ்வா. அவன் என்னை வேண்டாமுன்னு ஒரு நாளும் நினைக்கலை. எங்கள் அன்பும், காதலும் மாறவே இல்லை.’  அவள் கண்களில் ஆனந்த கண்ணீர். அந்த கண்ணீர் அவள் இதயத்தை தொட்டது.

அவள் இதயம் நனைந்தது! 

‘நான் அவன் மேல் கொண்ட அக்கறையும், அவன் என் மேல் கொண்ட அக்கறையும் கிஞ்சித்தும் குறையவில்லை. அப்புறம் நாங்க ஏன் பிரிஞ்சி இருக்கனும்?’ அவள் மனம் நியாயம் பேசியது.

‘விஷ்வா ஏன் விவாகரத்து கேட்டான்? அவன் எதனால் கேட்டிருந்தாலும், நான் அதை மன்னிக்க வேண்டும். மறக்க வேண்டும்’ தனக்கு தானே சிந்தித்து கொண்டாள்.

“இதயா…” அழைத்து கொண்டே உள்ளே நுழைந்தான் விஷ்வா.

“டாக்டர் வர இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும் போல” கூறிக்கொண்டே அமர்ந்தான் விஷ்வா.

“ஹ்ம்ம்…” இதயா கூற, ‘என்ன?’ அவன் புருவம் உயர்த்தினான்.

அவள் அவன் கொடுத்த ரேடியம் குட்டி ரோஜாப்பூவை நீட்டினாள். அவன் புன்னகையோடு அவன் சட்டைப் பையை நீட்ட, “நம்ம அறுபதாம் கல்யாணத்தப்பவும் நீ இதை பத்திரமா வைக்கணும்” அவள் மிரட்ட, மறுப்பாக தலை அசைத்தான் அவன்.

“நம்ம எண்பதாம் கல்யாணத்தப்பவும் பத்திரமா வச்சிருப்பேன்” அவன் கண்சிமிட்ட, “அத்தை சொல்ற மாதிரி நாம பிரிஞ்சதுக்கு ஈகோவா காரணம்?” என்று மாமியார் மேல் மனத்தாங்கலோடு கேட்டாள் இதயா.

“அது மட்டும் காரணம் இல்லை இதயா. நாம பொறுமையா பேசியிருக்கலாம். அதுக்கு அப்புறம் கொஞ்சம் ஈகோவையும் விட்டிருக்கலாம். நமக்கு அப்ப வயசு கம்மி இதயா. அது தான்…” என்று அவன் சமாதானம் போல் கூறினான்.

“எல்லாம் சரி விஷ்வா, நீ ஏன் விஷ்வா டைவோர்ஸ் கேட்ட? என்னால் அதை தான் தாங்கிக்கவே முடியலை தெரியுமா?” என்று இதயா உரிமையோடு கேட்டாள்.

“நான் டைவர்ஸ் கேட்கவே இல்லை இதயா” அவன் அவள் விழிகள் பார்த்து கூற, “விஷ்… விஷ்… விஷ்வா…” வார்த்தைகள் வராமல் துடித்தாள் இதயா.

அவள் உலகம் தட்டாமாலை சுற்றியது. அவள் இமைகள் படபடக்க, அவள் தள்ளாட, “இதயா, ஆர் யு ஓகே?” அவன் கேட்க, அவள் நாக்கு வறண்டு இருந்தது.

விஷ்வா செய்ததில் பெரிய தவறாக நினைத்து அவள் ஒதுங்கி வந்த தவறே இன்று இல்லை என்று அவன் கூறுகையில் இதயா நிலைகுலைந்து போனாள்.

“விஷ்வா… அன்னைக்கு அவங்க… அது தான் நான்…” அவள் தடுமாறுகையில், “எனக்கு தெரியும் இதயா” அவன் ஒரு கையால் கஷ்டப்பட்டு தண்ணீரை திறந்து அவளுக்கு கொடுத்தான்.

“நானும், உன்னை முதலில் தாப்பா தான் நினைச்சிருந்தேன்” அவன் நிதானமாக பேச ஆரம்பித்தான்.

“மூணு வருஷத்துக்கு முன்னாடி நரேனை சந்திச்சப்ப தான் எனக்கு எல்லா உண்மையும் தெரியும்.” அவன் கூற, “அன்னைக்கு நரேன் வீட்டில் இருந்தான்.” இதயா பிரமை பிடித்தவள் போல் பேசினாள்.

அன்று அவள் பட்ட வேதனை கண்முன்னே வந்து போனது.

மருத்துவர் உள்ளே நுழைய, இருவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

அவர் அங்கிருந்து டிஸ்பிலே ஸ்க்ரினில் எக்ஸ்ரேவை பார்த்துவிட்டு, “மைல்டு போன் கிராக்” என்று கூற, இதயா பதறிவிட்டாள்.

அவள் பல கேள்விகளை தொடுக்க, “ஈஸி… ஈஸி… ஹி வில் பீ ஓகே இன் எ வீக்” என்று கூறி புன்னகைத்தார்.

மருத்துவர் விஷ்வாவை பார்த்து, “யு ஆர் லக்கி டு ஹவ் ஸச் எ லவ்வபில் வொய்ஃப்” என்று கூற, “எஸ்… யூ ஆர் ரைட்” என்று பெரிதாக புன்னகைத்தான் விஷ்வா.

இதயாவின் முழு கவனம் கடந்த காலத்தை விடுத்து நிகழ் காலத்திற்கு திரும்பியிருந்தது. இதயாவின் எண்ணம் விஷ்வாவின் உடல் நிலையை சுற்றி வர ஆர்மபித்தது.

“இதயா, ஒன்னும் பிரச்சனை இல்லை. எல்லாம் சரியாகிரும். நீ எப்படி தான் தியாவை தனியா வளர்த்தியோ?” அவன் கேட்க, “அவ விஷயத்தில் நான் தைரியம் தான்” அவள் முகத்தை சுருக்கி கொண்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

பேசியபடியே இருவரும் வீட்டை அடைந்தனர்.

அவர்களிடமும் சாவி இருக்க, கதவை திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர். அப்பொழுது குழந்தைகள் செய்து கொண்டிருந்த செயலிலும், பேச்சிலும் இதயா துடிதுடித்து போனாள்.

அவள் பரிதவிப்போடு விஷ்வாவை பார்க்க, அவன் இடது கையால் தன்னவளை தன் மேல் சாய்த்து ஆறுதலாக அவள் தோளை தட்டி கொடுத்தான்.

இதயம் நனையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!